"யாரும்மா நீங்க? இந்த சூர்யா ·ப்ளாட்டுல யாரைப்பாக்கணும்?"
தூக்கக்கலக்கத்தில் காம்பவுண்ட் கதவைத் திறந்தபடி வேலய்யா கேட்டான்.
ஆட்டோக்காரருக்கு அவர் மீட்டருக்கு மேல் கேட்ட பணத்தை பர்சிலிருந்து எடுத்துக்கொடுத்துவிட்டு வந்த சுமித்ரா,"என் தம்பி
சாரங்கனைப்பாக்க வந்தேன்ப்பா....சூர்யா ·ப்ளாட்ஸ் நாலாவது ப்ளாக்குல வீடுன்னு அட்ரஸ்ல படிச்ச ஞாபகம். அங்க போகணும்.கொஞ்சம் வழி காட்டறியா? நான் ஊருக்குப்புதுசு" என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்
"சாரங்கன் ஐயா வீடுங்களா? அந்த தம்பி முகத்துல பொழுது விடியறத்துக்கு முன்னே இப்படி முழிச்சா எனக்கு இன்ன்னிப்பொழுது
நல்லாவேபோகும் சந்தேகமே இல்ல...அவரு அக்காவாம்மா நீங்க? அதான் மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க... முகத்துல இப்படி ஒரு
சாந்தக்களை எல்லாருக்கும் வராதும்மா... என் பேரு வேலய்யா...வாட்ச்மேன் நான் தான் இங்க... நீங்க வாங்கம்மா... தம்பி வீட்டுக்கு நான் கொண்டு சேக்கறேன்"
சி ப்ளாக்கின் அந்த நான்காவது மாடிக்குப்போகும் வழியில் வேலய்யா பேசிக்கொண்டே வந்தான்.
"ராத்திரிபூரா எதிரே புதுசா கட்டி முடிச்சிவந்திருக்கிற அணைக்கும் இல்லத்துல கோகுலாஷ்டமி நிகழ்ச்சி நடந்திச்சி..எல்லாரும்தாமதமாதான் இங்க வந்து படுத்தோம். அதான் நானும் நீங்க ஆட்டோல வர்ரது தெரியாம கண்அசந்து தூங்கிட்டேன். பிரசாதம்னு வந்தவங்களுக்கெல்லாம் வயிறு நிறைய சாப்பாடு போட்டுட்டாங்களா நல்லா சாப்பிட்டு படுத்ததுதான் தெரியும்...என் வேலையே ராத்திரி கண்முழிச்சி இங்க காவல் காக்கணும். ஆனா பாருங்க நேத்து அடிச்சப்போட்டாப்டி தூங்கி இருக்கேன்...·ப்ளாட்டை கவனிக்கற லட்சணம் இதுதானான்னு யாரும் கேட்டா இன்னிக்கு நான் வாயத்திறக்க முடியாது.. என்னவோ போங்க...மனுஷங்களுக்கு எப்போ என் நேருதுன்னு யாருக்குத்தெரியுது ? ஆங்..சாரங்கன் தம்பி வீடு வந்தாச்சி..இதாம்மா அவரு ·ப்ளாட்டு..பெல் அடிங்க. கதவ தொறப்பாங்க.."
சுமித்ரா காலிங்பெல்லில் விரல்வைத்து அழுத்தினாள். உள்ளே குருவி மூன்றுமுறை கத்தி ஓய்ந்தது.
"யாரும் திறக்கக்காணோமேப்பா? ஊருக்கு கீருக்கு போயிட்டாங்களா?' என்றாள் சுமித்ரா குழப்பமாய்.
"கதவைத்தட்டிப்பாருங்கம்மா...எல்லாம் இருப்பாங்க...தம்பிய ராத்திரி பூரா எதிர்கட்டிடத்துல நான் பாத்தேனே? "
"அப்படியா?' என்ற சுமித்ரா கதவைத் தட்டினாள். தட்டும்போது கதவு தானாய் உள் நோக்கி நகர்ந்தது.
"அட! கதவு திறந்தே இருக்குதா? எழுந்திட்டாங்களா காலைல நாலுமணிக்கே? ஆச்சரியமா இருக்கே ?" வேலய்யன் வியப்புடன் உள்பக்கம்பார்த்து இருட்டினூட்டே குரலால் கூவியபடி துழாவினான்.
"தம்பீ உங்க அக்கா வந்திருக்காங்க.."
உள்ளிருந்துபதில் இல்லை.
சுமித்ரா சற்று முகம் அரண்டவளாய் ."என்ன ஆச்சி? ராதிகாவும் இல்லையா வீட்ல? " என்றாள்.
வேலைய்யா கையிலிருந்த டார்ச் லைட்டினால் ஹாலுக்குள் ஒளிவட்டமிட்டு சுவரில் தெரிந்த சுவிட்சை விரலால் தட்டினான்.
வேகமாக ஹாலுக்குள் வந்த சுமித்ரா சுற்றும் முற்றும்பார்த்தவள்,"அந்த ஓரமா குப்புறக் கவிழ்ந்து கிடப்பது யாரு?" என்று வீறிட்டபடி அங்கே ஓடினாள்.
அடுத்தகணம்,"ஐயோ' என்று அலறினாள்.
தொடரும்---
Tweet | ||||
என்ன நடக்குது...ஒரே மயமாக இருக்கு...கலக்குறிங்க..;))
ReplyDelete