Social Icons

Pages

Wednesday, March 11, 2009

பச்சைக்கலரு ச்சிங்குசாங்!








'அன்புள்ள கடக ராசி நேயர்களே! இன்று உங்களுக்கு உகந்த நிறம் பச்சை மற்றும் மஞ்சள்.."

காலைநேரப் பரபரப்பில் கையில் கத்தியுடனேயே(அட காய் கட்பண்ணிட்டு இருந்தேங்க:)) ஹாலிற்கு ஓடிவந்து ராசிபலன் கேட்பது வழக்கம். ஏனென்றால் ஒருநாளைக்காவது ஜோதிடம் பலிக்கிறதா என்று பார்க்கத்தான்! இன்று உங்களூக்கு நற்செய்தி என்பார்கள், தபாலில் கதை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்தி திரும்பி வரும்!! என்ன இன்னிக்கும் தக்காளிரசமா என்று
ரங்கமணி முணுமுணுப்பார்! அப்பாக்கு இருமல் நாலுமல் எட்டுமல்னு அதிகமாச்சுக்கான்னு தம்பி போன் செய்வான்.

இப்படித் தொலைக்காட்சியில் ஜோதிடப்பலன் கூறும்போது கடைசியாகச் சொல்லி முடிக்கிறார்கள், அன்றைய தினத்திற்கு, நமக்கு ஏற்ற நிறங்களைப் பற்றி.

உகந்த நிறமென்பது அவரவர் மனதை பொறுத்தது அல்லவா? குயிலுக்கு நிறமுண்டு, அதன் குரலுக்கு நிறமுண்டா எனக் கவிஞர்கள் கேட்பார்கள்.

'மனிதரில் இத்தனை நிறங்களா?' என்று எழுத்தாளர்கள் கேட்பார்கள்..

மனிதர்க்கு மட்டும் மனசுக்கும் நிறமுண்டாம். அந்த நிறத்திற்கும் குணம் உள்ளதாக எனது டாக்டர்தோழன் சொல்கிறான்..

தனக்கு வேண்டிய உணவு, உடை, வீடு எல்லாவற்றிலும் தான் விரும்பும் நிறங்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ள மனிதரை, அவர் விரும்பும் வர்ணங்களை வைத்து அவர் குணத்தைக் கூறிவிடலாம் என்ற ஸ்நேகிதன் தொடர்ந்தான்.

பச்சை நிறம்:-இதை விரும்புபவர்கள் அறிவாளிகள்; பல விஷயங்கள் தெரிந்தவர்கள்; எதிலும் நிலையான கொள்கை உடையவர்களாக இருப்பார்கள். மிகுந்த கருணையுள்ள இவர்கள், மாறுதலையும் எதிர்பாராத விஷயங்களையும் விரும்பமாட்டார்கள்.

வயலட்:-இந்த நிறம் விரும்புகிறவர்கள், தீர்க்கதரிசனம் மற்றும் உள்ளுணர்வு மிக்கவர். ஆன்மீகத்தில் ஆர்வமுடையவர். அமானுஷ்ய சக்தியும், மனோவசீகரமும் காணப்படும் எல்லா உயிரிடத்திலும் அன்பு கொண்டிருப்பவர்.

சிவப்பு:-சுறுசுறுப்பானவர்கள்; பரந்தமனப்பான்மை கொண்டவர்கள். நல்ல பண்புகள் கொண்டவர்கள். தனக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை எப்படியும் அடைந்து வெற்றியுடன் வாழ்வார்கள்.

மஞ்சள்:-இந்த நிறம் விரும்புகிறவர்கள் எப்போதும் பிரகாசமாகவும், மற்றவர்களுடன் கலந்து பழகும் தன்மையுடனும் விளங்குவார்கள். இவரிடமிருந்து மற்றவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் எப்போதும் கிடைக்கும். இவர் வாயாடியாக இருந்தாலும் இவருடைய பேச்சு எல்லோராலும் விரும்பி வரவேற்கப்படும். வாழ்க்கையின் எல்லா அம்சத்திலும் மிகுந்த ரசனை கொண்டிருப்பார்கள்.

நீலம்:-மிகுந்த கலைநுணுக்கம் மற்றும் ஓவியத்திறன் பெற்றிருப்பார். கற்பனை சக்தி நிறைந்து தனது எண்ணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்கும் மனது கொண்டவர். தான் காணும் கனவுகளுக்கு உயிர் கொடுத்து அதனை சாதிக்கும் திறன் பெற்றவர்.

பிரவுன்:-இந்த நிறம் விரும்புகிறவர், வாழ்க்கையில் நிலையான, பாதுகாப்பான சூழ்நிலையை தனக்காக உருவாக்குவதுடன், தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகுந்த நன்றியும் விசுவாசமும் காட்டுவார். தன் மீது தனது துணைவி அல்லது துணைவன் காட்டும் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் மிகவும் ஏங்குவார். நினைத்ததை நினத்தபடி பேசிவிடுவார்.

சாம்பல்:-இந்த நிறம் பிடித்தவர்கள் சுயமரியாதை சிந்தனை உள்ளவர்கள். தற்சார்பு மிக்கவர். தன்னைத்தானே குற்றம் சாட்டிக்கொள்ளவும் தயங்க மாட்டார். எந்த ஒரு குழுவிலும் முழுமையாக இடம் பெறவோ ஈடுபடவோ மாட்டார்கள். மற்றவர்களூடன் உறவையோ நட்பையோ ஏற்படுத்திக் கொள்ள மிகவும் பயப்படுவார்கள்.

கறுப்பு:-இந்த நிறம் விரும்புகிறவ்ர்களிடம் பிடிவாதம் நிறைந்திருக்கும். ஆனால் மனதில் சூட்சமமும் எதிலும் ஒரு கவர்ச்சியும் இருக்கும். மனமுதிர்ச்சி, வாழ்வினை நன்கு புரிந்து கொள்ளும் தன்மை, அதே நேரத்தில் மற்றவர்களை ஊக்குவித்து அவர்களை சரியான பாதையில் செலுத்தி அவர்கள் ஆற்றலை வெளிப்பட உதவும் பண்பு கொண்டவர்கள்.

இப்படி விளக்கிய டாக்டர் மேலும் சொன்னது..

அன்றன்றுக்குரிய கிரகத்தின் வண்ணத்தில் ஆடை அணிவது அந்த கிரகத்தின் முழுப்பலனைப் பெற சாத்தியமாகுமாம்.


பொதுவாக ஞாயிறு சூரியனின் நாள். சூரியனுக்குரியது சிவப்பு ஆகவே அன்று சிவப்பு உடை அணிவது நல்லது, இதுபோல திங்கள் சந்திரனுக்காய் வெண்மை, செவ்வாய் ஆரஞ்சு, புதன் பச்சை, வியாழன்மஞ்சள் வெள்ளி சுக்கிரனது நாள் ஆகவே வெண்மை, சனிக்கிழமை நீலம் அல்லது கறுப்பு. நாளுக்கேற்ற உடை அணிவதால் மன சஞ்சலங்கள் குறைகிறது. (நிச்சயமாக இது மூடநம்பிக்கை இல்லை என்பது டாக்டரின் வாதம். எனக்கு நம்பிக்கை இல்லை என்பது வேறவிஷயம்:)))

நம்மைச் சுற்றி உள்ள ஒளியே ஏழு வண்ணங்களின் சேர்க்கைதான். அந்த ஒளி நம்மை ஊடுருவதுடன், நம் கண்களின் வழியே மூளைக்கும் சென்று செயலாற்றுகிறது. அந்தப் புறஒளியின் ஆதாரமே சூரியனும் சந்திரனும் என்பதால்தான் இவை இரண்டையுமே இறைவனின் கண்களாக உருவகப்படுத்துகின்றனர். இதுதவிர ஒவ்வொரு மனிதனையும் சுற்றி இயல்பாகவே ஒரு ஒளிவட்டம் உள்ளது.( தம்பிராகவ் குறும்பாசிரிக்கிறார், இதைப்படிச்சிட்டுன்னு நினைக்கிறேன்:)))

தெய்வீகத்தன்மை வாய்ந்த மனிதர்களைச் சுற்றி இயல்பாகவே இது இருக்கும்.

நம் ஒவ்வொருவரின் உடலின் வெளியே 'ப்ரபை' எனச் சொல்லப்படும் 'AURA' ஒளிவட்டம் இருந்தாலும், தெய்வீகமான மனிதர்களைப்போல அதற்கு அவ்வளவு சக்தி இல்லாததால் நாம் அதைக் காண முடிவதில்லை. அந்த ஒளிவட்டத்தை ரஷ்யாவைச் சேர்ந்த நிபுணர்கள், 'kryllionphotography' என்ற வித்தியாசமான ஒரு காமிரா மூலம் படம் பிடித்துள்ளனர். நமது 'பிரபை'யின் நிறம், நமது சக்தி, அதில் ஏற்படும் நோய் போன்றவற்றால் மாறிவிடும் தன்மை வாய்ந்தது. ஒருவருக்கு உடலில் நோய் வருமுன்பாக அவரது 'AURA' நிறம் மாறி நோய் வருவதை உணர்த்திவிடும்.

கலர் தெரபி என்னும் நிற வைத்தியத்தில் விதவிதமான நிறங்களில் உள்ள காய்கறிகள், கனிகள், இலைகள் ஆகியவற்றைப் பச்சையாகவோ சமைத்தோ உண்ணுவதால் கொடிய நோய்களூம் தடுக்கப்படுகின்றன.

ஞாயிறு தக்காளி ஜூஸ், திங்கள் ஆப்பிள் அல்லது முள்ளங்கி, செவ்வாய் ஆரஞ்சு அல்லது கேரட், புதன் மூலிகைச்சாறு, வியாழன் எலுமிச்சைப்பழச்சாறு, வெள்ளி கொய்யா அல்லது வாழைப்பழம், சனிக்கிழமை கறுப்பு திராட்சைசாறு என தினமும் இப்படி அந்தந்த நாளின் நிறத்தோடு ஒத்துப்போகும் பழச்சாறு அருந்துவது உடலிற்கு நல்லது. டாக்டரின் உரை இத்துடன் முடிகிறது!!

ஆக... நிறங்கள் ஏதோஒரு விதத்தில் நம்மை கிறங்க வைக்கின்றன.


வானவில் வர்ணங்கள் பார்க்கும் போதே பரவசம்தான்.. வர்ணங்கள் வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக இருக்கவேண்டும்

இளைஞர்கள் கூட அதனால்தான் அழகான பெண்களைப் பார்த்து, 'கலர்' என்கிறார்களோ?


(ஹோலிதினம் என்பதால் இந்தப்பதிவை இடத்தோன்றியது வேறஒண்ணுமில்ல:):)

19 comments:

  1. நான் பச்சையான்னு யார கேட்க்கலாம்.

    ReplyDelete
  2. எனக்குப் புடிச்ச நிறம் கருப்பு, அடுத்து ஆரஞ்சு:)! சொல்லப் பட்ட பலன் சரிதானான்னு மற்றவங்கதான் சொல்லணும்:)!

    ReplyDelete
  3. ஆகா..ஆகா...ம்ம் நிறைய தகவல்கள் ;)

    ReplyDelete
  4. அக்கா நீங்க கடகமா!!?? ;))

    ReplyDelete
  5. நட்புடன் ஜமால் said...
    நான் பச்சையான்னு யார கேட்க்கலாம்.

    12:47 PM
    >>.யார:)

    ReplyDelete
  6. ராமலக்ஷ்மி said...
    எனக்குப் புடிச்ச நிறம் கருப்பு, அடுத்து ஆரஞ்சு:)! சொல்லப் பட்ட பலன் சரிதானான்னு மற்றவங்கதான் சொல்லணும்:)!

    1:37 PM
    >>>>ராமலஷ்மி கருப்புதான் பிடிச்சகலரா ! வெரிகுட்! பிடிவாதக்காரங்களா தெரில்லையே உங்களப்பாத்தா!அப்போ மத்தபலன் சரிதான்!எனககு நீலம் பிடிக்கும்! நீலஜான்னு பேர் வைக்கலாம் அப்படிப்பிடிக்கும் லைட்ப்ளூ நேவிப்ளூ இங்க்ப்ளூ எல்லாமே பிடிக்கும்!

    ReplyDelete
  7. கோபிநாத் said...
    ஆகா..ஆகா...ம்ம் நிறைய தகவல்கள் ;)

    3:11 PM
    <<,கோபிக்கு எந்தகலர் இஷ்டமோ!

    ReplyDelete
  8. கோபிநாத் said...
    ஆகா..ஆகா...ம்ம் நிறைய தகவல்கள் ;)

    3:11 PM
    <<,கோபிக்கு எந்தகலர் இஷ்டமோ!

    ReplyDelete
  9. கோபிநாத் said...
    அக்கா நீங்க கடகமா!!?? ;))

    3:12 PM
    <<<<<<<<<<<<<<<>>>>>
    எப்டி கோபி இப்டி!!!!

    ReplyDelete
  10. ஆமாம்-க்கா, காலைல காய் நறுக்கிய பிறகு வாசலில் உள்ள தென்னை மரத்தை பழுது பார்க்க என்ன நிறம் வேண்டும்?, எத்தனை தேங்காய்கள் பறிக்கப்பட்டன?...இதை எல்லாம் தம்பி ராகவ் கேட்கச் சொன்னான்?. :-)

    ReplyDelete
  11. மதுரையம்பதி said...
    ஆமாம்-க்கா, காலைல காய் நறுக்கிய பிறகு வாசலில் உள்ள தென்னை மரத்தை பழுது பார்க்க என்ன நிறம் வேண்டும்?, எத்தனை தேங்காய்கள் பறிக்கப்பட்டன?...இதை எல்லாம் தம்பி ராகவ் கேட்கச் சொன்னான்?. :-)

    8:05 PM>>>
    மௌலி!!!காலைல இந்தப்பக்கம்

    ராகவ்கூட உலாவா!!

    தேங்காய்பறிக்கல..
    காய்ந்தமட்டைகள்மட்டும்தேர்ந்தவல்லுனர்கள்கொண்டுநீக்கப்பட்டன!

    தென்னைமரம்லைட்ப்ரவுன்கலர்
    தேங்காஇளம்பச்சை
    உடைச்சாஉள்ளவெள்ளை
    தென்னம்பூமஞ்சள்!
    மரத்தைப்பார்த்தநான் அணிந்த உடையோ சிவப்பு!

    தென்னைபார்ப்பதோமேலநீலவானம்!

    முடியலப்பாஇதுக்குமேல:):):)

    ReplyDelete
  12. ஜஸ்ட் அட்டெண்டென்ஸ்

    :)

    ReplyDelete
  13. எம்.எம்.அப்துல்லா said...
    ஜஸ்ட் அட்டெண்டென்ஸ்

    :)

    9:40 PM
    >>>>ஏன் ப்ரதர்,பிசிஹைக்யா!
    வழக்கமா கருத்து சொல்வீங்களே
    எதிர்பார்க்கிறேன்
    வாங்கமறுபடி

    ReplyDelete
  14. தோழிக்கு, நான் மறுபடி எழுத ஆரம்பித்துள்ளேன். என் வலைப்பூ பக்கம் ஒரு விசிட் அடிங்க அப்பப்ப. எனக்குப் பசுமை ரொம்பப் புடிக்கும்.

    ReplyDelete
  15. sooryakumar said...
    தோழிக்கு, நான் மறுபடி எழுத ஆரம்பித்துள்ளேன். என் வலைப்பூ பக்கம் ஒரு விசிட் அடிங்க அப்பப்ப. எனக்குப் பசுமை ரொம்பப் புடிக்கும்.

    8:37 AM

    <><<<<<<>.்ம் கண்டிப்பா விசிட் அடிக்றேன் சூர்யா
    நலம்தானே!

    ReplyDelete
  16. ஷைலஜா மேடம்.. நேக்கு புடிச்ச கலரு கருப்பு.. அப்டி பாத்தா, நீங்க சொன்ன ஜோசியம் ஓரளவுக்கு எ விசயத்துல கரெக்ட் தான் போல..

    இப்போ தான் எனக்கு கருப்பு புடிக்கும்னு சொல்லி ஒரு ப்லாக்'a போஸ்ட் பண்ணினேன்.. அதுக்குள்ள பலன் சொல்லியாச்சு..

    ReplyDelete
  17. \\பச்சை நிறம்:-இதை விரும்புபவர்கள் அறிவாளிகள்; பல விஷயங்கள் தெரிந்தவர்கள்; எதிலும் நிலையான கொள்கை உடையவர்களாக இருப்பார்கள். மிகுந்த கருணையுள்ள இவர்கள், மாறுதலையும் எதிர்பாராத விஷயங்களையும் விரும்பமாட்டார்கள்
    ##

    மஞ்சள்:-இந்த நிறம் விரும்புகிறவர்கள் எப்போதும் பிரகாசமாகவும், மற்றவர்களுடன் கலந்து பழகும் தன்மையுடனும் விளங்குவார்கள். இவரிடமிருந்து மற்றவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் எப்போதும் கிடைக்கும். இவர் வாயாடியாக இருந்தாலும் இவருடைய பேச்சு எல்லோராலும் விரும்பி வரவேற்கப்படும். வாழ்க்கையின் எல்லா அம்சத்திலும் மிகுந்த ரசனை கொண்டிருப்பார்கள். \\


    அருமையான அரசியல் பதிவு இந்த சூடான தேர்தல் நேரத்திலே:-))

    ReplyDelete
  18. சுரேஷ் குமார் said...
    ஷைலஜா மேடம்.. நேக்கு புடிச்ச கலரு கருப்பு.. அப்டி பாத்தா, நீங்க சொன்ன ஜோசியம் ஓரளவுக்கு எ விசயத்துல கரெக்ட் தான் போல..

    இப்போ தான் எனக்கு கருப்பு புடிக்கும்னு சொல்லி ஒரு ப்லாக்'a போஸ்ட் பண்ணினேன்.. அதுக்குள்ள பலன் சொல்லியாச்சு..

    3:14 PM
    >>>>>>சரியா இருக்குதா சுரேஷ்:)
    நானும் யாரோ சொல்லி அதை இங்க இட்டேன் நன்றி கருத்துக்கு

    ReplyDelete
  19. அபி அப்பா said...
    \\பச்சை நிறம்:-இதை விரும்புபவர்கள் அறிவாளிகள்; பல விஷயங்கள் தெரிந்தவர்கள்; எதிலும் நிலையான கொள்கை உடையவர்களாக இருப்பார்கள். மிகுந்த கருணையுள்ள இவர்கள், மாறுதலையும் எதிர்பாராத விஷயங்களையும் விரும்பமாட்டார்கள்
    ##

    மஞ்சள்:-இந்த நிறம் விரும்புகிறவர்கள் எப்போதும் பிரகாசமாகவும், மற்றவர்களுடன் கலந்து பழகும் தன்மையுடனும் விளங்குவார்கள். இவரிடமிருந்து மற்றவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் எப்போதும் கிடைக்கும். இவர் வாயாடியாக இருந்தாலும் இவருடைய பேச்சு எல்லோராலும் விரும்பி வரவேற்கப்படும். வாழ்க்கையின் எல்லா அம்சத்திலும் மிகுந்த ரசனை கொண்டிருப்பார்கள். \\


    அருமையான அரசியல் பதிவு இந்த சூடான தேர்தல் நேரத்திலே:-))

    9:43 PM
    ........>>>>>>>>>>>>>>>>>>>>>>

    அட அப்படியா அபிஅப்பா:)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.