Social Icons

Pages

Monday, March 30, 2009

காலணியைத்தேடி ஓடினேன்






அன்று டில்லி தலைமை அலுவலகத்திலிருந்து அதன் மேலதிகாரி, ராதிகா பணிபுரியும் அலுவலகத்திற்கு போன் செய்தார்.

அண்மையில் அமெரிக்கா விசிட் முடித்து வந்திருக்கும் தனது மனைவி பெங்களூர் கிளை ஆபீசை நோட்டமிட வருவதாயும் இரண்டுநாட்கள் ஹோட்டலில் தங்கிச் செல்லப்போவதாயும், அதில் ஒருநாள் அவர்கள் குடும்பத்துக் குலதெய்வம் குடிகொண்டுள்ள ஒரு மலைக் கோயிலுக்கு அவரது மனைவிய,அழைத்துபோகவேண்டுமென்றும்,உத்தரவிட்டார்.

அந்த அதிகாரிக்கு ஆபீசில் ஹிட்லர் என்ற பெயர். பேச்சிலேயே சிம்மகர்ஜனைதானாம்டில்லி அலுவலகத்தை வெயில் காலத்திலும் நடுநடுங்க வைப்பவர் என்று அங்கு பணிபுரிபவர்கள் வம்பு டாட் காமில் பெங்களூர்பிராணிகளுக்கு எச்சரித்து வைத்திருந்தனர். அதிகாரி தான் அப்படி என்றால் அதிகாரிணி எப்படி என ரஹசியமாய் துப்பு துலக்கியதில் அம்மணியும் பெண்சிங்கமெனத் தெரிய வந்தது.ராதிகாவை ஆபிசில் பலர் பரிதாபமாய்ப் அதிகாரிணி பேரு வசுதாரிணியாம் ...90வயதும் 50கிலோ எடையும்.. ஸாரி, 50வயதும் 90கிலோ எடையுமாய் முழியாலெயே எல்லாரையும் அதட்டுவார்கள், நடை உடை எல்லாம் மிடுக்கு அதிகம். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்ப்பவர்.அப்படீ இப்படி என வம்பு டாட்காமில் தினசரி தகவல் வந்தவண்ணமாயிருந்தது ராதிகாவிற்கு. தன்னால் முடியாது என்று மறுக்கவும் இயலாத நிலமை. அந்த அலுவலகத்தில் தனது பதவிஉயர்வுக்கான தேர்வு எழுதி ரிசல்ட்டுக்குக் காத்திருந்தாள். இந்த நேரத்தில் ஏதும் மறுப்பு கூறினால் அதிகாரி தனது கோபத்தை ப்ரமோஷன் ·பைலில் காட்டிவிடுவாரோ என்ற அசட்டு பயம் வேறு.


ராதிகா மஞ்சள்துணியில் ஒருரூபாயை முடிந்துவைத்து விட்டு ஏழுமலையானுக்கு வேண்டிக்கொண்டாள் கூடவே துணைக்கு என்னையும் அழைத்தாள்.

அந்த நவம்பர்மாதக் குளிரில் காலை 8 மணிக்குக் காரில் எங்கள் பயணம் துவங்கியது.

வசுதாரிணி கொஞ்சம் 'பணமாபாசமா' வரலஷ்மியை நினைவுபடுத்தினாள். அதே கம்பீரம் ! குரலில் நடையில் டிட்டோ. ஆயிரம் ரூபாய்க்கு மேலிருக்கும் போலிருந்த அந்த குதிகால் செருப்பு, நடக்கும்போது டக் டக் என ஒலித்து பயமுறுத்தியது.

என்னை ராதிகா அறிமுகப்படுத்தியதும்,' ஓ, எழுத்தாளரா நீ? ஹ்ம்ம்? நாம் போகப்போகும் இந்தக் கோயில் பற்றி பத்திரிகையில் எழுதி இருக்கிறாயா இல்லையென்றால் போய்வந்ததும் உடனே எழுது..இதுபோல அதிகம் தெரியாத ஆனால் சக்திவாய்ந்த கோயில்களைப் பற்றி யாரும் பார்த்துவந்து எழுதுவதில்லை. ஏதாவது உப்பு பெறாத விஷயங்களை எழுத எல்லாரும் ரெடி" என்று நறுக் என்று சொன்னாள் வசுதாரிணி.


காரில் பின் இருக்கையில் நானும் அந்த பெண்சிங்கமும் அமர, முன் இருக்கையில் ஓட்டுனர் அருகே ராதிகா அமர்ந்து கொண்டாள்.

வசுதாரிணி என்னிடம்," அந்தக்கோயில் போயி பலவருஷம் ஆச்சு. ரொம்ப சக்திவாய்ந்த தெய்வம். அது சின்ன ஊர்.பட்டிக்காடுதான்.. இப்போ எப்படி இருக்கோ?" எனவும் ஓட்டுநர் நாக்கில் சனி விளையாட ஆரம்பித்தது.

"சக்தி வாய்ந்த தெய்வம் எல்லா இடத்திலும் இருக்குதும்மா...திருப்பதி சபரிமல மதுர சீரங்கம் பளனி ..." உற்சாகமாய் ஆரம்பித்தவர் சொல்லிமுடிப்பதற்குள்.."யார் இல்லைன்னாங்க இப்போ? இது எங்க குடும்பத்து குல தெய்வம் வடக்கே போயி ஆறுவருஷம் கழிச்சி இப்போதான் வர சந்தர்ப்பம் கிடைச்சி வரேன். எங்ககோயில் பத்தி நீ எதுவும் சரிவரத் தெரியாம பேசவேணாம். கீப் கொய்ட்" என்று (அ)சிங்கம் சீறியது.


வழியில் பெங்களுரின் பிரபலமான ட்ரா·பிக்ஜாமில் கார் சில நிமிடங்கள் மாட்டிக்கொண்டு அங்கங்கே நின்றபோது கர்னாடகா கவர்மெண்டைத் தாக்கினாள். சகஜமான சாலைக்குழிகளில், தார் சிராய்ப்புகளில் கார் விழுந்து எழுந்தபோது, "நான்சென்ஸ்... அமெரிக்கால ரோடெல்லாம் எப்படி இருக்கு தெரியுமா? கார்ல தினம் ஆயிரம் மைல் போனாலும் அலுப்பேதெரியாது இங்க கேவலம் இந்த சின்ன தொலைவு போயிட்டுவரதுக்குள்ள இடுப்பும் முதுகும் உடையும் போல் இருக்கு..இங்க யாருக்கும் பொறுப்பே கிடையாது அவனவன் காசை வாங்கி முழுங்கறான். யூஸ்லெஸ் பீபிள்"முணுமுணுத்தவள் சட்டென வந்த தும்மலை அடக்க கைகுட்டையைத்தேடினாள் தனது கைப்பைக்குள். அங்கு அதைக் காணவில்லை.உடனே செல்போனிலிருந்து தலைநகருக்குத் தீப்பொறி பறந்தது.

தனது வேலைக்காரியை அழைத்து ஹிந்தியில் பத்து நிமிடம் திட்டித்தீர்த்தாள்.கடைசி வாக்கியமாய் ஹிந்தியில் வசுதாரிணி வாரிவழங்கியதாவது... 'ஊருக்குப் புறப்படும்முன்பாக கவனமாய் எனது கைப்பையில் ஒருகர்சீப் வைக்கும் பொறுப்பில்லாத உனக்கு சீட்டு கிழிக்கறேன் இரு நான் வந்ததும்?' (ஜூனூன் பாதிப்பு!)

மணி பத்து.

மலைவளைவுகளைக்கடந்து கோயில் வாசலில் கார் வந்து நின்றது.
காரை நாலைந்து சிறுவர்கள் சூழ்ந்து கொண்டுவேடிக்கை பார்த்தனர். பக்கத்துப்பெட்டிக்கடையில்பெரிய கல்லின்மீது ரொட்டிமாவினை அடிஅடியென அடித்துக்கொண்டிருந்தார் ஒருவர்! ரொட்டிஒலி!?

சிறு ஊர் என்பதால் இரண்டு மொபைல் பெட்டிக்கடைகள் ,மரத்தடி நிழலில் ஒரு மர பெஞ்சைபோட்டு அதன்மீது பூதேங்காய்பழம் கற்பூரம் என்று அடுக்கிய மூங்கில் தட்டுகள் கொண்ட கடை போல ஒன்று தவிர வேறு எதுவும் இல்லை.வசுதாரிணி காரைவிட்டுக் கீழே இறங்கும்போது," செருப்பை கார்லேயே விடலாமா?" எனக்கேட்டவள் உடனேயே,"வேணாம் இந்த ட்ரைவரையெல்லாம் நம்பவே முடியாது.. இவங்க காரை எடுத்துட்டு ஒரு ரவுண்ட் டீ குடிக்கப்போறேன்னுபோவாங்க. நாம் திரும்பிவரப்போ காணாமபோயிடுவாங்க...மதிய வெய்யில்ல ஒரு நிமிஷம் என்னால செருப்பு இல்லாம இருக்கமுடியாது, அதனால ட்ரைவரை நம்புவதைவிட கோயில்வாசல்லேயே விட்டுப்போகலாம்" என்று தீர்மானமாய் சொன்னாள்.

ராதிகா நாக்கில் இப்போது சனி உட்கார்ந்துகொள்ள அவள், "மேடம்.. கற்பூரக்கடையில விட்டுடலாமே? கோயில் வாசல்ல யாருமே செருப்பை விட்டமாதிரி தெரியலையே?அங்கே செருப்புபாத்துக்க ஆளும் இல்லை.. பேசாம கடைலயே விடலாம் மேடம்?" என்று சொல்லவும் , "ஓஹோ அப்படீங்கறியா, அதுவும் சரிதான்...'"என்று ஆச்சரியப்படத்தகும் வகையில் உடனேயே ஆமோதித்தாள் வசுதாரிணி.

எங்களது இருநூற்றித்தொண்ணூற்றி ஒன்பது ரூபாய் தொண்ணூறு பைசா (நாங்கள்'பேட்டா'வில் தான் வாங்கினதென்று கண்டுபிடித்தவர்களுக்கு தொடர்ந்து இங்கும் மைபா பரிசு உண்டு :)))செருப்புகளை, ஆயிரங்களை அனாயாசமாய் முழுங்கிய வசுதாரிணியின் அழகிய பாதுகைக்குப் பக்கத்தில் வைத்தோம்.

'நோட்கொள்ளப்பா சொல்ப' (பாத்துக்கப்பா கொஞ்சம்)'என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினோம்.


கோயிலில் அதிகக் கூட்டம் இல்லை என்பதைவிட ஈ காக்கா இல்லை எனலாம். ஆனால் அப்படி வசுதாரிணியிடம் சொல்லி யார் மாட்டிக்கொள்வது? ஆகவே,'புராதனக்கோயில் இதை ரசிக்க கலை உள்ளம் வேண்டும்' என உளறிவைத்தேன். சிரித்தது சிங்கம்!

உள்ளே கோயிலில் சந்நிதிகளில் வசுதாரிணி மெய்மறந்து சேவித்துக் கொண்டிருக்கையில் ராதிகா கை கடிகாரத்தை பார்த்தாள் மணி 11.30.உடனே என்னிடம்,' ரொம்ப நேரமாச்சே, நாம கோயில் உள்ள வந்து.? கடைல விட்ட செருப்பெல்லாம் பத்திரமா இருக்குமா ஷைலஜா?" என்று காதோரமாய் கவலைப்பட்டாள்.


'என்ன இப்போ உனக்கு? மேடம் செருப்பு பத்திரமா இருக்கான்னு பாக்ணும் அதானே?'நான் அபயமென கை காட்டிவிட்டு வசுதாரிணியுடன் அவளை ஓரங்கட்டிவிட்டு நைசாக வெளியே வந்தேன்.


ஆ! இதென்ன மாயம்?பத்துமணிக்குக் கற்பூரம் காட்டிவிற்ற கடைகள், ரொட்டி ஒலியிட்ட கடை எல்லாம் காலியாகி விட்டிருந்தன. மரத்தடியிலும் பெஞ்சைக்காணோம். இலைமேய்ந்த நாலைந்து ஆட்டுக்குட்டிகள்,வாலைக்குழைத்துவந்த நாய் தவிர வேறு மனித நடமாட்டமே இல்லை.நல்லவேளை, செருப்புகள் விட்ட இடத்திலேயே கிடப்பதை தூரத்திலிருந்து பார்த்து பெருமூச்சுவிட்டேன். ஆனால் நடந்து அருகில் போனதும் கொதிக்கும் வெய்யிலில் காலை உதறாமல் கையைத்தான் உதறினேன் .காரணம் அங்கே.....காணாமல் போயிருந்தது சிங்கத்தின் செருப்பு. பொருளின் விலைமதிப்பு தெரிந்த திருடன் அதைமட்டும் சுட்டுக்கொண்டு போக எங்களது பாதரட்சைகள் பரிதாபமாய் வெய்யிலில் கிடந்தன.


'சொன்னேனே கோயில் வாசல்ல செருப்பை விடலாம்னு கேட்டியா ராதிகா. உன்னால எனது, ஆயிரத்து டாஷ் டாஷ் மதிப்புள்ள செருப்பு தொலைந்து நான் வெறும்காலுடன் நடந்து வந்து காரில் ஏறவேண்டி இருந்தது? ஆகவே உன் மேலதிகாரியும் எனது பிரிய பர்த்தாவுமானவரிடம், பொறுப்பற்ற உனக்கான ப்ரமோஷனை கேன்சல் செய்யச் சொல்லப்போகிறேன் ஆமாம்?'வசுதாரிணி கற்பனையில் மிரட்டினாள் ராதிகாவிடம்.

ஐயோ!

தேடினேன் தேடினேன் அந்த ஊர் வாய்க்கால் கரைவரைப் போய்த்தேடினேன்.

எங்கும் தேடி செருப்பைக் காணா மனமும் வாடினேன்.

அப்போதுதான் என்னை துக்கம் விசாரித்தார் கார் ட்ரைவர்.

என்னாச்சும்மா



நேரமின்மைகாரணமாய், கண்டேன் சீதை பாணியில் செய்தியை சுருக்கினேன்.

"தொலைந்தது அம்மாவின் செருப்புமட்டும்"

'பேசாம கார்ல விட்டுப் போயிருக்கலாமில்ல?' பார்வையிலேயே அதட்டினார்


"12மணிக்கு கோயில் நடை சாத்திடுவாங்க ...அந்தம்மா வந்துடுவாங்க. வந்தால் செருப்பு இல்லேன்னா கூச்சல் போடுவாங்கப்பா.."எனது படபடப்பான பேச்சில் ட்ரைவர் கரைந்துபோய்,'கார்ல ஏறுங்கம்மா. எதும் செருப்புகடை தேடிப்போயி அதேபோல செருப்பு வாங்கிடலாம்.' என்று காரைக்கிளப்பினான்.

அரை நிமிஷம் கவனத்தைக்கவர்ந்த அந்த செருப்பின் அனாடமியை நினைவு வைத்து அதே மாதிரி வாங்கிவிடத் தீர்மானித்தேன்.

ஆனால் அந்த சிற்றூரில் அலைந்ததுதான் மிச்சம். கடைவீதியே இல்லை. இருந்த நாலு கடைகளும் பிளாஸ்டிக்குடம், இரும்புசாமான்கள், வாடிப்போன கத்திரிக்காய் எனபரத்தி வைத்திருந்தனர்.ஒரு செருப்புக்கடை கூட எனது கண்ணில் படவில்லை. விசாரித்ததில் என்னை வினோதமாய் பார்த்தார் ஒரு உள்ளூர்வாசி. பிறகு கன்னடத்தில் "செருப்புக்கெல்லாம் டவுனுக்குத்தான் போகணும்" என்றார்.

பேரைக் கேட்டறிந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்த அந்த டவுனுக்குப் புறப்பட்டோம். அன்று வாரவிடுமுறை தினம். போற்றுதற்குரிய ஞாயிறு! சுத்தம்.!எல்லா கடைகளுக்கும் வாயில் பூட்டு.

அலைந்து திரிந்ததில் பேட்டா என்று ஆங்கிலத்தில் பெரிய போர்டு மாட்டிக்கொண்ட சின்னக் கடையைப் பார்த்து 'பேக்கு பேக்கு' (வேணும்வேணும்...) என்று கஸ்தூரி கன்னடத்தில் கூவினேன்.கடைக்குள் நுழையுமுன் தலை குனிந்தேன் (வெட்கத்தால் அல்ல.. கடையின்நிலைவாசல் உயரம் ஐந்தடி இரண்டு அங்குலம்தான். நானோ உயர்ந்த ஜாதி! (அஞ்சடி ஆறங்குலமாக்கும்)

பழையநாள் வீட்டை அப்படியே வைத்து நிலைவாசல்மட்டும் மாற்றாமல் அதையே கடையாய் கன்வர்ட் பண்ணி இருப்பார்கள் போலும்! வீட்டின் உள்ளிருந்து பிசிபேளாபாத்தின் மசாலா வாசனை பசியின் வேதனையைத்தூண்ட ஆரம்பித்தது.கடைக்குள் அல்லது அந்த வீட்டின் கூடத்தில்,வவழவென்ற ப்ளாஸ்டிக் ஷீட்டில் உறை அணிந்தமேஜை, கருப்புபோன் ,சம்பங்கிமாலையணிந்த ராகவேந்திரசுவாமியின் படம், ஊதுபத்தி கல்லாபெட்டி. (கற்ற பெட்டி என்று எதுவும் உண்டோ?'நானிருவது நிமகாகி' (நான் இருப்பது உங்களுக்காக) என்று டேப்பில் ராஜ்குமார் வரவேற்றார்.

தமிழ்க்களை முகத்திலேயே சொட்டியதோ என்னவோ என்னைக்கண்டதும்," வாங்கம்மா வாங்க.!" என்று வரவேற்றார் கடை உரிமையாளர் தமிழில்.

ஹிளித்தபடி காலணி அணிவரிசைகளை நோட்டமிட்டேன்மொத்தமாய் முப்பது ஜோடி செருப்புகள்தான் அங்கிருந்தன. இதென்ன கடையா அல்லது குடி இருக்கும் வீட்டில் செருப்புகளைக் கழற்றிவைக்கும் அலமாரியா?

"என்னங்க இவ்வளவுதானா செருப்புகள்? விலை அதிகமான குதிகால் உயர்ந்த செருப்பு இல்லயா?"சந்தேகமாய் நான் கேட்க கடைக்காரர், "இந்தசின்ன டவுனில் பெண்கள் அதெல்லாம் போடமாட்டாங்கம்மா.. வியாபாரமாகாது..' என்றார் வருத்தமுடன்.

வேறு கடை தேடி இனி வேறு இடம் போய்வருவதற்குள் கோயில் வாசலில் சிங்கம் வந்து நின்று கர்ஜிக்குமே?

ட்ரைவர் பரிதாபமாய் '"மணி ஆச்சும்மா" என்றான்.

ஆமாம் மணி 11.50ஊப்ஸ்!12 மணிக்கு கோயில் நடை சாத்திவிட்டால் உள்ளே யாரும் தங்கவும் மாட்டார்கள்.ஆனது ஆகட்டும் என்று காரில் அடித்துபிடித்து கோயில் வாசலுக்கு வந்து சேர்ந்தால் நினைத்தபடி சிங்கம் சிடுசிடுப்பாய் நின்றிருந்தது.


"எங்கே கோயிலை முழுவதும் சுத்திப்பாக்காம நடுல கழண்டுகிட்டே? " வசுதாரிணி அதட்டலாகவே கேட்டாள்..

நான் உண்மையைச் சொல்லி ராதிகா சார்பில் மன்னிப்பு கேட்டுவைத்தேன், வேறுவழி?
ராதிகா முகம் போன போக்கைச் சொல்லவே வேண்டாம்...

"ஓஹோ? என் செருப்பு மட்டும் தொலைந்துபோச்சாக்கும்?" வசுதாரிணியின் எகத்தாளக் கேள்வியில் ராதிகா வழக்கம்போல் ஏகமாய் பயந்துபோனாள். கொஞ்சமாய் நானும்.

"ஸாரி மேடம் என்னால்தான் உங்களுக்கு இப்படி ஆனது..நா..நா.. நான் நல்லது நினச்சி அப்படிச் சொன்னது இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல..பாவம் ஷைலஜாவும் இத்தனை நேரம் அலைந்துதிரிந்து வந்திருக்கா..என்னை மன்னிச்சிடுங்க மேடம்" எனக் கண்கலங்கினாள்.காலில் விழ அவள் ஆயத்தமானபோது சட்டென...வசுதாரிணி ஒருக்கணம் மௌனமாய் எங்கோ பார்த்தாள்.


பிறகு."கோயிலுக்கு வந்த இடத்தில் செருப்பு தொலைந்தால் அது நல்ல சகுனம்தான்ன்னு சொல்வாங்க...பரவால்ல, அமெரிக்காவில் கல்யாணமாகி போயிருக்கிற என் பெண் சீக்கிரமா நல்ல செய்தி கொடுக்கப் போறான்னு என் குலதெய்வம் இதன் மூலமா சேதி சொல்லுது.. ஓ! தாங்க் காட்!"என்று குதூகலக்குரலில் கூறிவிட்டு கோயில்பக்கம் திரும்பி மெய்மறந்து கைகூப்பினாள்.


"தாங்க்காட்!"

நாங்களும் சொல்லிக்கொண்டோம்.


எதற்கென்று உங்களுக்குத் தெரியாதா என்ன?


(மீள்பதிவு)
நன்றி...மஞ்சுளாரமேஷின் 2009 ஏப்ரல்மாதசிநேகிதி(மாத இதழ்)

10 comments:

  1. \\. ஏதாவது உப்பு பெறாத விஷயங்களை எழுத எல்லாரும் ரெடி\\

    ஹா ஹா ஹா


    ஆமா! ஆட்டோ எங்கே

    இவ்வளவு பெருச படிக்க

    ReplyDelete
  2. //'ஊருக்குப் புறப்படும்முன்பாக கவனமாய் எனது கைப்பையில் ஒருகர்சீப் வைக்கும் பொறுப்பில்லாத உனக்கு சீட்டு கிழிக்கறேன் இரு நான் வந்ததும்?' (ஜூனூன் பாதிப்பு!) /

    ஹைய்ய்ய் ஜூனூன்!!!!




    இருக்கு நல்லா :)))))))

    ReplyDelete
  3. ##எதற்கென்று உங்களுக்குத் தெரியாதா என்ன?
    ##

    எனக்கு தெரியாது! ஏன்னா நான் ஒரு பச்ச மண்ணு:-)))

    கதை நல்லா வந்திருக்கு. காமடியை புகுத்தாமல இயல்பா சொன்ன விதம் நல்லா இருக்கு. சூப்பர்!

    ReplyDelete
  4. ஹாஸ்யம் இயல்பாய் வருகிறது. பாராட்டுக்கள் :)

    ReplyDelete
  5. நான் போட நினைத்த பின்னூட்டத்தை சக்திபிரபா போட்டாங்க :)

    ReplyDelete
  6. \\நாங்கள்'பேட்டா'வில் தான் வாங்கினதென்று கண்டுபிடித்தவர்களுக்கு தொடர்ந்து இங்கும் மைபா பரிசு உண்டு :)))\\

    ஆட்டைக்கு நான் வரலை.

    ReplyDelete
  7. நட்சத்திர வாரத்தில் மின்னிய படைப்பு இப்போது பலரும் படித்திடும் வண்ணம் சிநேகிதியிலும்! பாராட்டுக்கள்!

    உங்க பிறந்த நாள் பதிவு போலவே இதிலும் நகைச்சுவை இயல்பாய் உள்ளது.

    ReplyDelete
  8. //ராமலக்ஷ்மி said...

    நட்சத்திர வாரத்தில் மின்னிய படைப்பு இப்போது பலரும் படித்திடும் வண்ணம் சிநேகிதியிலும்! பாராட்டுக்கள்!

    உங்க பிறந்த நாள் பதிவு போலவே இதிலும் நகைச்சுவை இயல்பாய் உள்ளது.//

    இதையே உரைக்கிறேன்!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்!!! உங்கள் பதிவு பிரசுரமானதற்கு!!

    ReplyDelete
  10. ஆகா..வாழ்த்துக்கள் அக்கா ;)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.