Social Icons

Pages

Wednesday, April 01, 2009

ஒபாமாவிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு!


ஒபாமாவிடமிருந்து நேற்றுஎனக்கு போனில் அழைப்பு வந்தது

ஏப்ரல்முதல்தேதி என்பதால்

ஏதோநான் ஏமாத்தறதா யாரும்நினைக்க வேண்டாம்

நிஜமாத்தான்.

2வருஷம்முன்பு அமெரிக்காபோனபோது வாஷிங்டன்ல செர்ரிப்ளாசம் பூக்களைப்பார்த்து வந்து பூலோகம் பற்றி அப்போது குழுவிலும் அதையே ஆங்கிலத்தில் FLOWERS OF THE WORLD என்றும் எழுதி வாஷிங்டன்போஸ்ட் என்ற ஆங்கில நாளிதழுக்கும் அனுப்பி இருந்தேன் .
.
அதை தற்செயலாய் இப்போதுதான் படிக்க நேர்ந்து கட்டுரையின் மெல்லிய நகைச்சுவையை தான் மிகவும் ரசித்ததாய் சொன்னார் ஒபாமா.

என் எழுத்து ஒபாமாவிற்கும் பிடித்திருக்கிறது என்பதில் எனக்குஎதிர்பாராத மகிழ்ச்சியாக இருக்கிறது!

வழக்கமாய் டெலிபோனில் அதிகம்பேசி எதிர்முனைக்காரர்களை பேசவே விடாத நான் நேற்று இந்தஆனந்த அதிர்ச்சியில் மௌனமாகிவிட்டேன், அது ஒபாமாவின் சிறப்பு அழைப்பு என்றபோதிலும்.

என்ன நம்பமாட்டீங்களாக்கும் போன்ல பேசினதை ரெகார்ட் செய்துவச்சிருக்கலாம். ஆனா திடீர்னு அமெரிக்காவிலிருந்து அவங்க என்னை அழைப்பார் என்று எதிர்பார்க்கவில்லையே நான்!

என்னவோ எல்லாம் கனவுபோல 2நிமிஷத்தில் நடந்துமுடிந்துவிட்டது.

விவரமாக இதோ ஒபாமாவிற்கு நான் மின்மடல் அனுப்பிக்கொண்டிருக்கின்றேன். ஆகவே பிறகு மேலும் விவரம் சொல்கிறேன்.

அதற்குமுன்பாக இந்தப்பின்குறிப்புகளைமட்டும் பார்த்துவிட்டுப்போகவும்!

பிகு1...ஒபாமா என்பதில் ஒ,பக்கதுல சின்ன புள்ளி வைத்துப்படிக்கவும் என் கணிணி சில நேரங்களில் புள்ளிராணியாக இருப்பதில்லை!!

அதாவது ஒ.பாமா(ஒரத்தநாடுபாமா), என் தூரத்து உறவினர்! இப்போது
அமெரிக்காவில் தன் மகள் பிரசவத்துக்காக வாஷிங்டன் சென்று உள்ளார்.

பிகு2....வாஷிங்டன்போஸ்ட்க்கு நான் அப்போதேசெர்ரி ப்ளாசம் கட்டுரையைஅனுப்பினேன். அது உண்மை. ஆனால் அவர்களுக்கு அதைப்பிரசுரம் செய்யக்கொடுத்து வைக்கவில்லை!!முத்தமிழ் குழுமத்துலதான் படிச்சாங்களாம்:):)

பின்குறிப்பு3... அந்த செர்ரிப்ளாசக்கட்டுரை இங்கே மறுபடி அளித்துள்ளேன் அப்போ படிக்காதவங்க இப்போபடிச்சிக்கலாம்!

****************************************************************************************************

மலர்களே !மலர்களே!

செர்ரி ப்ளாஸங்கள் பூத்துவிட்டன! ஆமாம்,

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசியில் வருடா வருடம் ஸ்ப்ரிங்சீசனில்செர்ரிப்ளாசம் மலர்கள்சொல்லிவைத்த மாதிரி பூக்கின்றன.
மாதக்கணக்கில் கடும்பனியில் அதிகம் இலைகளை இழந்து மொட்டைமரமாய் விண்நோக்கி தியானித்தமரங்கள் எல்லாம் மார்ச் கடைசிவாரத்தில் மக்களால் கவனிக்கப் படுகின்றன.. சின்ன சின்ன வெள்ளைப்பூக்கள் கொத்து கொத்தாய் மரம்முழுவதும் காணப்படுகிறது. வெட்கப்படும் புதுமணப் பெண்போல வெள்ளைபூக்களில்
மிக இலேசான செம்மை. சில இடங்களில் மட்டும் முழுவதும் ரோஸ்நிறத்திலானபூக்கள்.

இந்த வருடம் செர்ரிப்ளாசம் திருவிழா மார்ச் 31முதல் ஏப்ரல் 15வரை நடக்க இருக்கிறது பாரேட் எனப்படும் அணிவகுப்பு நிகழ்ச்சி ஏப்ரல் 14 நடக்க இருக்கிறது. 10லிருந்து 15நாட்கள்தான் இந்த மலர்க்காட்சி.அதற்குப்பிறகு மலர்கள் அனைத்தும் கொட்டி மரம் முழுவதும் இலைகள் வந்துவிடுகின்றன.

அதிசயமாய் சூரியன் வெளியே வந்த அந்த ஒரு நாளில் நாங்களும் மலர்களைக்காணப் புறப்பட்டோம். நாங்கள் இருந்த இடத்திலிருந்து (வியன்னா)
வரை(ஒருமணி நேரப்பயணம்) வரை ரயிலில் சென்று அங்கிருந்து பொடி நடையாக நான்குமைல்(அமெரிக்காவில் கிலோமீட்டர் கணக்கே இல்லை!) நடந்தபடியே செர்ரிப்ளாசங்களை சென்ற இடமெல்லாம் பரவலாய்க்கண்டுமகிழ்ந்தோம். இலைகளேஇல்லாமல் மரம் முழுவதும் பூக்கள்தான்.அருகருகே அடர்த்தியாய் பார்ப்பதற்கேரம்மியமாய் இருக்கிறது.

ஜார்ஜ் வாஷிங்டன் நினைவுக்கட்டிடம் வழியாக எங்கள் நடைப்பயணம் தொடங்கியது.

போகும் வழியிலெயே நிறைய மரங்கள் பூக்களைப்போர்த்திக்கொண்டு இருக்கின்றன.

வாஷிங்டன் நினவுக்கட்டிடம் கான்கிரீட்டில் செய்த பெரியபென்சிலை சீவி
நிமிர்த்தி வைத்தமாதிரி இருக்கிறது

. அதற்கு ஒருபுறம் எதிரில் காபிடல்ஹில். மறுபுறம் ஆப்ரஹாம் லிங்கன்நினவுக்கட்டிடம் .இடதுபக்கம்
தாமஸ்ஜெஃப்ர்சன் நினைவுக்கட்டிடம். வலதுபக்கம் பொடாமக் ஆற்றின் வளைந்தநீரோட்டம்.( டைடல் பேசின்)

இந்த ஆற்றினைச்சுற்றிலும் செர்ரிப்ளாசமரங்கள்பூத்துக்
குலுங்குகின்றன .ஆற்றில் ஒருவகை வாத்துக்கள் மௌனமாய் மிதந்து செல்கின்றன.

கழுத்துப்பகுதி மயில்பச்சையிலும் உடல் வெளிர்நீலத்திலும் முகம்
கருப்புமாக அவைகள் வண்ண வாத்துக்களாய் தெரிந்தன.

ஜெஃப்ர்சன் கட்டிடத்தின் விளிம்பத் தொட்டுச் செல்வதுபோல் ஆறு வளைந்துஓடுகிறது. மோட்டார்படகுகளிலும் தானியங்கி படகுகளிலும் தனியாகவும் ஜோடியாகவும் பலர் ஆற்றினில் சென்று பூக்களை அருகில்போய் பார்க்கலாம்
.
ஆற்றின் ஒருபக்கத்து பாலத்தின்மீது நின்று வேடிக்கைபார்த்தபோது
தலைக்குமேல் மூன்று நான்கு ஹெலீகாப்டர்கள் பறந்துபோயின. ஏதும் மருத்துவ அவசரம் என்றால் இப்படி ஹெலிகாப்டர்கள் உதவப் போகுமென உடன்வந்த உறவினர்சொன்னார்.

சில நேரங்களில் ஜனாதிபதி புஷ் அவர்களும் சிறப்பு ஹெலிகாப்டரில்
செல்வார் என்றார். மேலே அப்படி நான் ஒரு ஹெலிகாப்டரை
அண்ணாந்துபார்த்தபோது ஜனாதிபதி கை அசைத்து," ஹலோஷைலஜா!
நலம்தானா?' என்று கேட்பது போல இருந்தது.!(ஓவர்?):)


நிறைய டூரிஸ்டுகள் செர்ரிப்ளாசம் பார்க்க வருகை தருகின்றனர்.

இந்த புகழ் பெற்ற மரங்களை 1912ல் ஜப்பான் ஜனாதிபதியின் மனைவி,
அமெரிக்காவிற்கு அன்பளிப்பாய் தந்தவைகளாம்.

மக்கள் இதனைப்பார்க்க வந்துகொண்டே இருக்கின்றார்கள்..
ஜெஃப்ர்சன் நினைவுக்கட்டிடத்திற்கு எதிரே பெரிய வளாகத்தில் செர்ரிப்ளாசசிறப்பு நிகழ்ச்சிகள் தினமும் நடக்கின்றன. இம்முறை இந்திய நாட்டியநிகழ்ச்சிகளும் இடம் பெற இருக்கின்றன.

செர்ரிப்ளாசம் சிறப்பு உணவுகள் என்று ஹோடல்களும், சிறப்பு விற்பனை என பலகடைகளும் இதைக் கொண்டாடுகின்றன.

மிகக்குறைந்த நாட்கள் தான் தங்கள் வாழ்க்கை என்றாலும் மற்றவர்களை
மகிழ்விக்க மலர்ந்து சிரித்துக் கொண்டே இருக்கின்றன செர்ரிப்பூக்கள்!
***************************************************************************­

16 comments:

 1. ஆஹா டைட்டில் டெரரா இருக்கே !!!

  ஏப்ரல் எபெக்ட்டான்னு கொஞ்சம் யோசனையோடத்தான் படிச்சேன் :)

  //மிகக்குறைந்த நாட்கள் தான் தங்கள் வாழ்க்கை என்றாலும் மற்றவர்களை
  மகிழ்விக்க மலர்ந்து சிரித்துக் கொண்டே இருக்கின்றன செர்ரிப்பூக்கள்!//

  நாட்கள் குறைவில் மறைவு

  ஆனாலும்

  மலர்ந்து சிரிக்கின்றன

  மனிதர்களை போல் எதிர்பார்ப்புக்கள் & பயங்களின்றி...

  ReplyDelete
 2. \\ஒரத்தநாடுபாமா\\

  கி கி கி

  ReplyDelete
 3. \\மிகக்குறைந்த நாட்கள் தான் தங்கள் வாழ்க்கை என்றாலும் மற்றவர்களை
  மகிழ்விக்க மலர்ந்து சிரித்துக் கொண்டே இருக்கின்றன செர்ரிப்பூக்கள்!\\

  அருமை

  (அவர்களுக்கு அதைப்பிரசுரம் செய்யக்கொடுத்து வைக்கவில்லை!-உண்மை)

  ReplyDelete
 4. ஓ இந்தியாவில் முட்டாள்கள் தினம் விடிந்துவிட்டதா? ஓ. பாமா வைப் போடாமல் வேறு ஏதாவது பெயர் போட்டிருந்தால் சில நேரம் ஏமாந்திருக்கலாம். :):) ஆனாலும் செர்ரி மலர்கள் பற்றிய கட்டுரை நன்றாக இருக்கிறது. மரங்கள் போர்த்திய போர்வையாக அந்த மலர்களின் அழகு கொள்ளை கொள்ளும். மலர்கள் என்றாலே அழகானவை தானே.??

  அன்புடன்
  சுவாதி

  ReplyDelete
 5. அது சரி... :)

  //மிகக்குறைந்த நாட்கள் தான் தங்கள் வாழ்க்கை என்றாலும் மற்றவர்களை
  மகிழ்விக்க மலர்ந்து சிரித்துக் கொண்டே இருக்கின்றன செர்ரிப்பூக்கள்!//

  கடைசி வரி 'நச்'.

  ReplyDelete
 6. எனக்கு அப்பவே மைல்டா ஒரு டவுட் வந்தது :))

  ReplyDelete
 7. ஒ.பாமா9:16 AM

  என்னை இப்படி ஒரு தீவிரவாதி ரேஞ்சுக்கு பேசப்பட வைத்துவிட்டாயேடி தோழி:( ! இரு இரு வாஷ்ங்டனில் இருந்து வந்து வச்சுக்கிறேன்:)!

  ReplyDelete
 8. இப்போ எல்லா படங்களும் இணையத்தில் காணக் கிடைக்கிறதுதான். ஆனாலும் நாம போகிற நேரத்தில் நினைவுகளை காமிராவில் பதிந்திடல் நல்லாயிருக்குமே. குறிப்பா அந்த வாத்துக்கள்:)! சரி நீங்க விவரித்த விதமே நேரில பார்த்தா மாதிரிதான் இருக்கு, ஹிஹி.

  ReplyDelete
 9. ஆஹா :)
  ஏப்ரல் 1 ஸ்பெஷலா? அசத்துறீங்க அக்கா :)

  அக்கா, நீங்களிருக்கும் பெங்களூரில் கூட ஏப்ரல் மாதங்களில் இது போல அழகிய பூக்களெல்லாம் சாலைகள் தோறும் உதிர்ந்துகிடக்குமே..! நடப்பவர் தலைகளை, உடல்களை நோகாவண்ணம் விழுந்து தொட்டு ஆசிர்வதிக்குமே..!
  அது பற்றியும் எழுதுங்கள் அக்கா !

  ReplyDelete
 10. வருகைதந்து கருத்து சொன்ன ஆயில்யன் ஜீ ரிஷான் சுவாதி ராமல்ஷ்மி ஜமால் கவிநயா ஒ பாமா:) எல்லார்க்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 11. /அதாவது ஒ.பாமா(ஒரத்தநாடுபாமா), என் தூரத்து உறவினர்! இப்போது
  அமெரிக்காவில் தன் மகள் பிரசவத்துக்காக வாஷிங்டன் சென்று உள்ளார்.

  மிகக்குறைந்த நாட்கள் தான் தங்கள் வாழ்க்கை என்றாலும் மற்றவர்களை
  மகிழ்விக்க மலர்ந்து சிரித்துக் கொண்டே இருக்கின்றன செர்ரிப்பூக்கள்!/

  அருமை

  ReplyDelete
 12. ]]]திகழ்மிளிர் said...
  /அதாவது ஒ.பாமா(ஒரத்தநாடுபாமா), என் தூரத்து உறவினர்! இப்போது
  அமெரிக்காவில் தன் மகள் பிரசவத்துக்காக வாஷிங்டன் சென்று உள்ளார்.

  மிகக்குறைந்த நாட்கள் தான் தங்கள் வாழ்க்கை என்றாலும் மற்றவர்களை
  மகிழ்விக்க மலர்ந்து சிரித்துக் கொண்டே இருக்கின்றன செர்ரிப்பூக்கள்!/

  அருமை
  \\\  மிக்க நன்றி திகழ்மிளிர்

  ReplyDelete
 13. ஒ.ரத்தநாடு பாமா ரொம்ப நல்லவங்க! திவாலாகும் வங்கிக்கெல்லாம் ஃப்ரீயா நோட்டு கொடுப்பாங்க! நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க-க்கா! இப்படி ஒரு சொந்த பந்தம் கிடைக்க! :))

  ReplyDelete
 14. \\kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  ஒ.ரத்தநாடு பாமா ரொம்ப நல்லவங்க! திவாலாகும் வங்கிக்கெல்லாம் ஃப்ரீயா நோட்டு கொடுப்பாங்க! நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க-க்கா! இப்படி ஒரு சொந்த பந்தம் கிடைக்க! :))

  10:05 AM
  \\\


  ஐய்யே போங்கப்பா:):) நானே வாலுன்னா என்னைவிட பெரிய வாலா(ளா:) இருக்கீங்க:)

  ReplyDelete
 15. வாழ்த்துகள் அக்கா.

  வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை தலைப்பை மட்டுமே படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன். மற்ற பின்னூட்டங்களையும் படிக்கவில்லை.

  ReplyDelete
 16. குமரன் (Kumaran) said...
  வாழ்த்துகள் அக்கா.

  வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை தலைப்பை மட்டுமே படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன். மற்ற பின்னூட்டங்களையும் படிக்கவில்லை.

  1:09 AM

  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..

  ச்சமத்து குமரன்...இப்படித்தான் இருக்கணும்.:)..நன்றி அருமைத்தம்பியே!!!!

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.