Social Icons

Pages

Wednesday, March 25, 2009

இலக்கியக்காதல்!

அடிக்கடி தேடுகிறேன்
உன் கண்களை
பாதுகாப்பாய்
சில வினாடிகள்
பதுங்கிக்கொள்ள


என்னும் கனிமொழியின் புதுக்கவிதையில் காதல்உணர்வு மயிலிறகாய் மனசை வருடிப்போகிறதென்றால் மரபுக்கவிதையில் வரும் பெரிய திருமொழியில் காதலனைப்பிரிந்த காதலியின் நிலையில் அந்த உணர்வு இன்னொருவிதமாக இருக்கிறது!(சீதை-ராமன்)


சென்றுவார்சிலை வளைத்திலங்கையை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
முன்றில்பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து
அன்றிலின் குரலடருமென்னையே..


வார்=நீண்ட
சிலை=வில்
வில்லியார்=வில்லை உடைய ராமன்
முன்றில்=இல்முன்(முற்றம்)
பெண்ணை=பனை
முளரி=தாமரை
கூட்டகத்து=கூட்டினுள்ளே உள்ள
அடரும்=துன்புறுத்தும்



குளிர்ந்த சந்திரனின் கதிரொளி வாட்டும் வாட்டமும் அலைக்கின்ற கடலின் நிலைகண்டு யானேபடும் கவலையும் கண்ட முற்றத்துப்பனையின் மேலுள்ள கூடு ஒன்றில்,என் செவியில் நெருப்பை வாரிக்கொட்டுவதுபோல கூப்பிட்டு காதல்நோயில் வாடும் என்னை வதைக்கிறது என்கிறாள் தலைவி இப்பாட்டில்.

என் வேதனைக்கு ஏது காரணம்! எதிரிகள் இருக்குமிடம் சென்று தனது நீண்ட வில்லை வளைத்து இலங்கையை வென்றவனான வில்லையுடைய ராமனின் வீரமே காரணமோ(அறியேன்) முற்றத்து முளைத்து நின்ற பனைமரத்தின் மேலே தாமரை மலர்களாலும் தண்டுகளாலும் கட்டப்பட்ட கூட்டினுள்ளே இருக்கும் அன்றிற் பறவையின் குரல் என்னைத்துன்புறுத்துகின்றது.

வென்ற வில்லியார்......வெற்றியைக் கொண்ட வில்லை உடையவன்

முன்றில்மேல்பெண்ணை....வீட்டுமுற்றமருகே உள்ள பனைமரம் ஆகையால் குரலைக்கேட்டுத்தான் ஆகவேண்டும்

முளரிக்கூட்டகத்தன்றின் குரல்...... தாமரப்பூவாலும் , தண்டு,தாதுக்களாலும் கட்டிய பாதுகாப்பான கூடு எனவே அதற்குள் கைவிட்டு கூவாமல் இருக்க பறவையின் வாயினை அடைக்கவும் இயலாத நிலமை.


அடரும் என்னையே... காதல்நோயானது என்னையே அடர்ந்து துன்புறுத்தும் மற்றவர்களை அல்ல.
*************************************************************************************




இலக்கியத்தில் ஓர் ஆடவனின் காதல் நோயினை வெள்ளிவீதியார் சொல்வதைப்பாருங்கள்!

செம்புலப்பெயர்நீர்போல அன்புடைய நெஞ்சம்தான் கலந்தனவை என்கிற புகழ்பெற்ற காதல்கற்கண்டுப்பாடல் இடம்பெற்றுள்ள குறுந்தொகையில் காதலின் வலியை வெள்ளிவீதியார் அழுத்தமாகவும் நுண்மையாகவும் கூறுகிறார்.ஆற்றல்மிக்க கவிஞர் இவர்.

பொதுவாகவே கவிஞர்கள் வண்ணங்கள் தொலைத்த வானவில்லை சுமக்கும் தங்கள் ஆகாயத்தின் துயரத்தை தங்களின் அன்புதோற்றுப்போய்விடுமோ என்னும் ஆற்றாமையின் பரிதவிப்பை கவிதைகள் வழி கிடைக்கும் இளைப்பாறல்களில் தணித்துக்கொள்ள தங்கள் படைப்புகளை அளிப்பார்கள் என்பார்கள்.



சங்ககாலத்திலும் அக இலக்கியங்கள் அதிகம் வந்துள்ளன. எப்போது வாசித்தாலும் நம்மைச்சுற்றி வளைத்துக்கொள்ளும் உயிர்ப்பினைக்கொண்டவைகள் அந்தப்பாடல்கள்

வார்த்தைத்துளைகளை வடிவாகக்கொண்ட தமிழ்ப்புல்லாங்குழல்கள் இவைகள்!குழலை ஊதிடவரும் இதழ்நோக்கி இசையை அளிக்க எந்நாளும் காத்திருக்கும் புல்லாங்குழல்கள்!

இப்போது பாடலைப்பாருங்கள்..




ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந்நோய்; நோன்று கொளற்கரிதே.



என்னும் இந்த குறுந்தொகைப்பாடலில், சூரியன் சுட்டெரிக்கும் பாறையின் உச்சியில் வெண்ணை உருண்டை ஒன்றுவைக்கட்டு இருக்கிறதாம், அதைக் கை இல்லாத ஊமை பாதுகாக்கிறானாம். சூரியக்கதிர்களின் வெப்பம் ஏற ஏற வெண்ணை உணங்கல் (உலர்ந்து)உருகத்தொடங்குகிறதாம்.

அவனோ ஊமை இப்படி வெண்ணை உருக்குகிறதே வேறுஇடம்கொண்டு வையுங்கள் என்று சொல்ல இயலாது .
கையும் இல்லை, எடுத்து அவனாகவே மாற்றிவைக்கவும் முடியாது.

தவிக்கும் அந்த ஊமையைப்போல , பாறைவெண்ணை உருகிப்பரந்துவருவதுபோல எனக்குள்ளே பரவும் காதல்நோயினைத் தாங்குவதென்பது தவிப்பாக இருக்கிறது என்கிறானாம் காதல்வயப்பட்ட ஒருவன், தன் தோழனிடம்.

எப்படி இருக்கிறது இலக்கியக்காதல்பாடல்கள் பார்த்தீர்களா!

12 comments:

  1. யப்பாடி! இலக்கிய காதலை (செய்யுளை) புரிஞ்சுகறது மஹா கஷ்டம் போல இருக்கே! நான் கெமிஸ்ட்ரி படிச்ச போது கூட இப்படி மலைச்சு போகலை.

    ரொம்ப அழகா எழுதிருக்கீங்க. ஊமை/முடவன் வெண்ணை உருக தான் உருகுவதோ, இல்லாட்டி அன்றில் பறவை ஒலி கூட நெருப்பை அள்ளி கொட்டினாற்போல் உள்ளதென்றால் ஒரே ஒரு பொது விஷயம் இருக்கிறது.

    இலக்கியமாகட்டும் இக்காலமாகட்டும் காதல் வயப்பட்டால், மனம் இளகி உருகி, மென்மையாகிவிடுகிறது. அந்த மனம் tender or vulnerable ஆக இருக்கிறபடியால், குழல் யாழ் இசை முதல், மெல்லிய குழந்தையின் சிரிப்பு வரை (அப்போ மற்ற ஒலியெல்லாம் சேர்த்தியே கிடையாது) எல்லாமே வலிக்கும் ன்னு சொல்வாங்க.

    தன் காதலன்/காதலி முகம் தவிர மிச்சம் எல்லாம் கசக்கும்
    காதலன் காதலி பேச்சு தவிர மிச்சம் எல்லாம் சலிக்கும்....

    .....என்று கேள்வி :P

    ReplyDelete
  2. Shakthiprabha said...
    யப்பாடி! இலக்கிய காதலை (செய்யுளை) புரிஞ்சுகறது மஹா கஷ்டம் போல இருக்கே! நான் கெமிஸ்ட்ரி படிச்ச போது கூட இப்படி மலைச்சு போகலை. >>>>


    ஷக்தி!! வா வா! நலமா!
    செய்யுள் கஷ்டமாவா இருக்கு! அடடா அடுத்த வாட்டி ஈசியா தரேன்:)

    \\ரொம்ப அழகா எழுதிருக்கீங்க. ஊமை/முடவன் வெண்ணை உருக தான் உருகுவதோ, இல்லாட்டி அன்றில் பறவை ஒலி கூட நெருப்பை அள்ளி கொட்டினாற்போல் உள்ளதென்றால் ஒரே ஒரு பொது விஷயம் இருக்கிறது.

    இலக்கியமாகட்டும் இக்காலமாகட்டும் காதல் வயப்பட்டால், மனம் இளகி உருகி, மென்மையாகிவிடுகிறது. அந்த மனம் tender or vulnerable ஆக இருக்கிறபடியால், குழல் யாழ் இசை முதல், மெல்லிய குழந்தையின் சிரிப்பு வரை (அப்போ மற்ற ஒலியெல்லாம் சேர்த்தியே கிடையாது) எல்லாமே வலிக்கும் ன்னு சொல்வாங்க.

    தன் காதலன்/காதலி முகம் தவிர மிச்சம் எல்லாம் கசக்கும்
    காதலன் காதலி பேச்சு தவிர மிச்சம் எல்லாம் சலிக்கும்....

    .....என்று கேள்வி :P|||


    >>>>>ஆமாமாம்..கேள்விதான்(ன்னு சொல்லிடலாம்:):)நன்றி ஷக்தி வருகைக்கும் கருத்துக்கும் அதும் முதல்ல வந்திருக்கே ஸ்பெஷல் நன்றி ஷக்தி உனக்கு.

    10:48 AM

    ReplyDelete
  3. காதலே ஒரு இலக்கியம் தான்

    (சில மீறல்களோடு)

    ReplyDelete
  4. அடிக்கடி தேடுகிறேன்
    உன் கண்களை
    பாதுகாப்பாய்
    சில வினாடிகள்
    பதுங்கிக்கொள்ள\\

    துவக்கமே துவம்சம்

    ReplyDelete
  5. \\அடரும் என்னையே... காதல்நோயானது என்னையே அடர்ந்து துன்புறுத்தும் மற்றவர்களை அல்ல.\\

    இது அழகு.

    ReplyDelete
  6. \\பாறைவெண்ணை உருகிப்பரந்துவருவதுபோல எனக்குள்ளே பரவும் காதல்நோயினைத் தாங்குவதென்பது தவிப்பாக இருக்கிறது \\

    உணர்ந்ததுண்டு (இன்னும்)

    அருமையான இலக்கணம்(இலக்கியம்)

    ReplyDelete
  7. ம்ம், ரொம்ப ஹெவி டாபிக்.

    தலைவன் தேரில் வரும்போது வண்டினங்கள் தம் மயக்கத்திலிருந்து எழாமல் இருக்க அதன் மணியின் நாவை கட்டிவிட்டு வருவான்னு ஒரு செய்யுள் உண்டே, அது எதுல இருக்கு? (ஏதாவது புரியுதா?)

    ReplyDelete
  8. நட்புடன் ஜமால் said...
    காதலே ஒரு இலக்கியம் தான்

    (சில மீறல்களோடு)

    11:34 AM
    <<>>>>>

    ஆமாம் சரியா சொன்னீங்க ஜமால்

    ReplyDelete
  9. நட்புடன் ஜமால் said...
    அடிக்கடி தேடுகிறேன்
    உன் கண்களை
    பாதுகாப்பாய்
    சில வினாடிகள்
    பதுங்கிக்கொள்ள\\

    துவக்கமே துவம்சம்

    11:36 AM
    >>>>>

    ஆஹா .......ஊட்டமான பின்னூட்டம்!

    ReplyDelete
  10. நட்புடன் ஜமால் said...
    \\அடரும் என்னையே... காதல்நோயானது என்னையே அடர்ந்து துன்புறுத்தும் மற்றவர்களை அல்ல.\\

    இது அழகு.

    11:37 AM
    >>>>>>>>>>>>>>>>

    நன்றி ஜமால்..கவிதை எழுதியவர் யாரும் இப்போ இல்லை இதையெல்லாம் கண்டுமகிழ.

    ReplyDelete
  11. நட்புடன் ஜமால் said...
    \\பாறைவெண்ணை உருகிப்பரந்துவருவதுபோல எனக்குள்ளே பரவும் காதல்நோயினைத் தாங்குவதென்பது தவிப்பாக இருக்கிறது \\

    உணர்ந்ததுண்டு (இன்னும்)

    அருமையான இலக்கணம்(இலக்கியம்)

    11:39 AM
    >>>>>>>>>>>>>>

    இலக்கணமான இலக்கியம் அருமைதான் புரிந்துவிட்டால் இலக்கியம் ஒரு அமுதம்
    நன்றி கருத்துக்க்கு

    ReplyDelete
  12. ambi said...
    ம்ம், ரொம்ப ஹெவி டாபிக்.>>>>

    மைபாவைவிடவா ஹெவி அம்பி:) ச்சும்மா கிட்டிங்:)

    \\தலைவன் தேரில் வரும்போது வண்டினங்கள் தம் மயக்கத்திலிருந்து எழாமல் இருக்க அதன் மணியின் நாவை கட்டிவிட்டு வருவான்னு ஒரு செய்யுள் உண்டே, அது எதுல இருக்கு? (ஏதாவது புரியுதா?)\\

    சுத்தம்!
    என்ன சொல்றீங்கன்னே புரில்ல:)

    2:38 PM

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.