Social Icons

Pages

Tuesday, March 20, 2012

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?


சர்வதேச குருவிகள் தினமாக மார்ச் 20 ஐ பறவை, விலங்கின ஆர்வலர்கள் 2010 முதல் கொண்டாடி வருகின்றனர்.

சிட்டுகுருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா  உன்னைவிட்டுப்பிரியவே செல்போனைக்கட்டி அழுகிறோம் நாங்கள் என்று   இனி பாடவேண்டியதுதான்.

  சிட்டுக்குருவிகளை இன்று நகரங்களில் பார்க்க முடியவில்லை. குருவிகளின் உயிரை பறிக்கும்கோடரிகள் எவை தெரியுமா "மொபைல் போன் டவர்'களில் இருந்து வரும் ரேடியோ அலைகள் தான் என்கிறார் மதுரையில் பறவைஇனங்களை ஆய்வு செய்து வரும் டாக்டர் பத்ரி நாராயணன்.  அதுபற்றி நமக்கென்ன கவலை என்பதுபோல  கணந்தோறும் காதில் செல்போனை வைத்துக்கொண்டு நாம் அலைகிறோம்.


 காக்கா காக்காகண்ணுக்கு மைகொண்டுவா
குருவி குருவி  கொண்டைக்குப்பூ கொண்டுவா
கொக்கே கொக்கே குழந்தைக்கு தேன் கொண்டுவா
கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டுவா....


இப்படியெல்லாம் பாட்டுப்பாடி பறவைகளை அழைத்த காலமெல்லாம் கனவாகிப்போய்விடும் அபாயச்சூழ்நிலையில்  இருக்கிறோம்.

 நாம் பெரும்பாலும அழகானவற்றை ஏற்றுக்கொண்டு மிகவும் உபயோகமானவற்றை  கைவிட்டுவிடுகிறோம் என்னும் பிரெஞ்சுபழமொழிக்குஏற்ப வாசலில் இருக்கும்  பச்சைமரங்களை வெட்டிவிட்டு  வரவேற்பறையில் ப்ளாஸ்டிக் செடிகளை கொண்டு வைக்கிறோம் மரத்தைவளர்க்கத்   தெரியாத மனங்களுக்கு  பிளாஸ்டிக்  தாவரங்களில்   படிந்த   தூசியை துடைக்கத் தெரிந்திருக்கிறது.

 நாம் வளர்த்த  மரங்களின் எண்ணிக்கையைவிட  நாம்    தொலைத்த மரங்களின் எண்ணிக்கை அதிகம்.

சாலைகள் அமைக்க  ரயில்பாலங்கள்கட்ட குடிநீர் குழாய் அமைக்க குடியிருப்புகள் தொழிற்சாலைகள்   கட்ட   என்று  மரங்களை  வெட்டிசாய்த்துவிட்டோம்  அதனால் பறவைகளின் வீடுகளை அழித்துவிட்டோம் . வசிக்க இடமினறி அவைகள் காணாமல்போய்க்கொண்டிருக்கின்றன .


ஒருபறவை  பறந்து கொண்டிருக்கும்போது மிதந்துகொண்டிருந்தது கூடவே வானமும் , பறவையைச்சுட்டார்கள் விழுந்ததோ   துண்டுவானம் எனும் கவிதையைப்  படிக்கிறபோது  நம் மனமும்  சிதறி விழுகிறது.

பறவைகள் நம் சுற்றுச்சுழலின்நண்பர்கள் .செல்போன்களை நாம் அதிகம்   பயன்படுத்தத்  தொடங்கியதும் அதன் அலைவரிசைத்தாக்கம்  பொறுக்கமுடியாமல் சிட்டுக்குருவிகளின் இனம்அழிந்துவருகிறது .

ஒரு சிட்டுக்குருவியின் அழிவுக்கும் பிரபஞ்சத்தின் அழிவுக்கும் தொடர்பிருக்கிறது என்று பறவைஇயல் நிபுணர் சலீம் அலி எழுதுகிறார்.


மாதா பிதா குரு தெய்வம் என்னும் வரிசையில் இயற்கையும் இருந்திருக்கலாமோ அப்படி இருந்திருந்தால் இயற்கையை பூஜை செய்தாவது காப்பாற்றவேண்டிய +மதிக்கவேண்டிய சிந்தனை மனிதனுக்கு வந்திருக்குமோ?


பறவைகள் இந்த  உலகினை அ ழகுபடுத்துகின்றன ஆனால்சூழல் பற்றிய அக்கறையே இல்லாமல்  பறவைகளே இல்லாமல் போகிற உலகத்தை நாம் உருவாக்கிவருகிறோம் என்பது எவ்வளவு வருத்தமானது?

பறவைகளுக்கும் உணர்வு உண்டு.கோபதாபம்  காதல் அன்பு அச்சம்  உண்டு.

 ஏதாவது ஒருகாகம் நம்தலையை தட்டிவிட்டுப்போனாலே நாம் பதறிவிடுவோம் ஆனால் சாதுவான பறவை தன் இயல்பை மீறி தன் சகாக்களோடு  மனிதர்களைத் தாக்கத் தொடங்கினால்  எப்படி இருக்கும்?


அப்படி ஒரு திகிலான கதைதான் The Birds !



  சிலவருடம் முன்பு  வெளிவந்தது.


Alfred Hitchcok    இயக்கத்தில். இந்தப்படத்தின் ஒவ்வொரு நிமிடமும்   நம்மை  உறைய வைக்கும் இந்தப்படம் கோல்டன் க்ளோப் விருதுபெற்றது.
அதிகம் தொழில் நுட்ப வசதிகள் அதிகம்  இல்லாத காலத்தில் mattprinting உத்தியுடன்  தயாரிக்கப்பட்ட பறவைக்காட்சிகள் இப்போது பார்க்கும்போது ஆச்சரியம் அளிக்கின்றன படம் முழுக்க விதம்விதமான பறவைகளின் சத்தமே பின்னணி இசையாகப்பயன்படுத்தி இருந்தது.

துவக்கத்தில்  வீட்டுக்குள் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் வருவதும் தீவிபத்து நடக்கையில் நகரத்தின் மேலிருந்து இறங்கி பறவைகள் தாக்கும் காட்சியும் சிலிர்க்கவைப்பவை. பறவைகள்   பற்றிய இந்தக் கதையில் மெலிதான காதல் மனித உறவுகள் குறித்த காட்சிகளும் திகிலோடு  இணைந்துவருகின்றன.

கதாநாயகனும் கதாநாயகியும் இருக்கும் இடத்திற்கே பறவைகள் வந்து  தாக்குதல்களை செய்கின்றன ஜன்னல் கதவுகளின் கண்ணாடியைக்கொத்திகொத்தி  கதவு உடையும்நிலைக்குவருகிறது....இன்னும் சிலநொடிகளில் கதவின் கண்ணாடி  உடைந்து நூற்றுக்கணக்கான் பறவைகள்   வீட்டிற்குள் வரநேரிடலாம் அந்த சுழலில் என்ன நடந்தது ?ஒருமுறை அந்தப்படம்   கிடைத்தால் வாங்கிப்பாருங்கள்...(இணையத்திலும் இருக்கலாம்)



எதற்கு இந்தப்படம்பற்றி   இப்போது  என்றால் பறவைகளுக்கும்உணர்ச்சி உண்டு என்பதை அறிந்துகொள்ளத்தான்.

மரங்கள் அடர்ந்த காட்டில்  குறுக்கும்நெடுக்குமாய் ஒழுங்கற்று நீண்டிருக்கும்  கூரியமுட்களின் இடையே  உடலைக்கொண்டுநுழைத்து வெளியேறி இரைதேடிப்   பசியாறிவரும்  பறவைகள் நமக்கு வாழ்க்கையின் வடிவத்தையும் வாழ்தலின் அர்த்தத்தையும் சொல்லுகிறது அல்லவா?



சிட்டுக்குருவிகளின் சுதந்திரத்தில் மனதைப் பறிகொடுத்த   பாரதி ,’விட்டுவிடுதலையாகி நிற்கவேண்டும் இந்தச்சிட்டுக்குருவிகளைப்போல’ என்றானே!


தோல்வியில் துவளும்போது ஃபீனிக்ஸ்பறவையைபோல சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவேன் என்கிறான் மனிதன். உதாரணங்களுக்கெல்லாம் இயற்கை வேண்டி இருக்கிறது பறவைகள் மரங்கள் என  எடுத்துக்கொள்வோம் ஆனால் ஓசோன் மண்டலத்தில் துவாரத்தையும் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடையும் தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சத்தையும் வறட்சியின் உக்கிரத்தையும் கண்டுகொள்ளமாட்டோம்.  பூமி வெப்ப மயமாவதை தடுக்க மரங்கள் வளர்க்கவேண்டும் அதனை பாதுகாக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை என்றைக்கு வளர்த்துக்கொள்ளப்போகிறோம்?

நம்மைச்சுற்றிலும் பறவைகள் இருகின்றன அழகழகான நிறங்களோடு உருவங்களோடு அவை நம்மை வசீகரிக்கின்றன ! கவிதைகள் எழுதுவதற்கு கவிஞனுக்குப்பறவைகளே ஆதாரம் !எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்க அவன் பறவைகளை நோக்குகிறான். ஒரு பறவையின் பறத்தலை ரசிக்கத்தெரியாதவன் கவிஞனாக முடியாது.

ஆனால்  பறவைகளுக்கான  சுதந்திரத்தை நாம் எப்போதும்  மதிப்பதில்லை அவைகளை ஒரு பொருட்டாகக் கருதுவதுமில்லை.

விழாக்கால  இரவுகளில் நெருப்புகள் வெடித்துச்சிதறும் பேரதிர்வுகள் நமக்குக்கோலாகலம்!  ஆனால் பறவைகளுக்கு  திசைதெரியாமல் இருளினுள்   அவைபீதியுற்று கதறியபடி பறப்பதை நாம் பார்த்ததில்லை.


காகத்தின் கரைதல்விருந்தினர்வருவதற்கான அறிவிப்பு  என்கிறோம்.
நாராய் நாராய்  செங்கால் நாராய் பழம்படுபனையின் பழக்கூர்வாய் செங்கால் நாராய் என்றார்  ஒருபுலவர்.

பறவைகளைப்பார்த்தால் சிலருக்குபாட்டுவரும் .சிலருக்கு வயிற்றுப்பாட்டுக்கு ஆனதென்று தோன்றி  குறிவைத்து அடித்து வீழ்த்ததோன்றும்.

அன்பைக்கிளைகளாய் விரித்து மரம் சுமந்திருந்த பறவைகளை அதன் மொழிகளை கூவலை  மரங்களை வெட்டி சாய்ப்பதின் மூலம் பெரிதும் இழக்கிறோம். இரட்டிப்பு இழப்பு.

சாலைகள் இரயில்வேபாலங்கள் கட்டவும் தொலைபேசி குடிநீர்குழாய் அமைக்கவும் குடியிருப்பு்கள், தொழிற்சாலைகட்டவும்  மரங்களைவெட்டுகிறோம் .மரங்கள்போனால் பறவைகள் காணாமல்போகும். பாதிப்பறவை இனம் பூண்டோடு அழிந்துவிட்டது


தூக்கணாங்குருவி முதல் கட்டிட நிபுணர் !ஆகாயதோட்டி காக்கை !பல்லவி சரணம் பாடும் வானம்பாடி.!
கொக்கின் ஒற்றைக்கால்தவம்  எல்லாம்  இனி வரும் சந்ததியினருக்குப்பாடபுத்தகத்தில் மட்டும்  பார்க்க என்றாகிவிடுமா?

 ஆலாப்பறவை வேகமாய் பறக்குமாம் ‘ஏன் ஆலாய்ப்பறக்கறே?’ என்பார்களே இதனால்தான்! ஆல்பட்ரோஸ்  பறவை சிறகைவிரித்துவிட்டல்; ஏறத்தாழ ஐந்துவருடங்கள் பறக்குமாம் !புறாக்கள்  தூதுபோயிருக்கின்றன.

ஒற்றுமைக்கு காகம்! இனிமையாகப்பாடுபவர்களை குயில் என்கிறோம் !மழையை தோகை விரித்து அறிவிக்கும்மயில்! கழுகுப்பார்வை என்கிறோம்.
கொய்யாமரத்தில் எப்போது  பழுக்கும் எனத்தெரிந்த அணில்.  கல்யாணமுருங்கை   எப்போது பூபூக்கும் என அறியும் கிளிகள்.
தும்பிகளுக்கு மழைவருவது தெரியு!ம் களிமண்ணை பிரபஞ்சமாக்கி பச்சைப்புழுவைப்பறக்கவைக்கும் மந்திரம் குளவிக்குதெரியும்.
நமக்கு என்ன தெரியும்?


சிட்டுக்குருவிக்கு சின்ன கவிதையாவது எழுதி சமர்ப்பிக்கிறேன் இன்றைக்கு.

சிறகில் அடிபட்ட
சிட்டுக்குருவி ஒன்று
வீட்டு வாசலில் வீழவும்
சட்டென அதை எடுத்து
சேலைத்தலைப்பினைதூளியாக்கி
குருவியை படுக்கவைத்து
அருமையாய் வருடி கொடுத்து
மருந்திட்டுக்காத்துவந்தேன்
இரண்டுநாட்களுக்குள் குருவி
இல்லத்து மனிதர்களின்
உள்ளத்தில் ஒட்டிக்கொண்டது
சிறகுகள் சீரானதும் மனைச்
சிறைவைப்பது சரி இல்லையென
மனதைக்கல்லாக்கிக்கொண்டு
கையிலேந்தியபடி வான்நோக்கி
பறக்கவிடுகிறேன்
உற்சாகமாக உயரப்பறந்தகுருவி
திரும்பிவந்தாலும்
அறிந்துகொள்ளமுடியாத
ஊர்க்குருவியானது!


25 comments:

  1. நாம் வளர்த்த மரங்களின் எண்ணிக்கையைவிட நாம் தொலைத்த மரங்களின் எண்ணிக்கை அதிகம்

    சிறகுகள் சீரானதும் மனைச்
    சிறைவைப்பது சரி இல்லையென
    மனதைக்கல்லாக்கிக்கொண்டு
    கையிலேந்தியபடி வான்நோக்கி
    பறக்கவிடுகிறேன்

    பதிவும் கவிதையும் ஜோர்.

    ReplyDelete
  2. ஆலாப்பறவை வேகமாய் பறக்குமாம் ‘ஏன் ஆலாய்ப்பறக்கறே?’ என்பார்களே இதனால்தான்! ஆல்பட்ரோஸ் பறவை சிறகைவிரித்துவிட்டல்; ஏறத்தாழ ஐந்துவருடங்கள் பறக்குமாம் !புறாக்கள் தூதுபோயிருக்கின்றன.

    அபூர்வமான தகவல்கள். பதிவு படித்ததும் கிராம நாட்களும் புறாக்களும், குருவிகளும் சிறகடித்துப் பறந்ததைப் பார்த்த நினைவுகளில் மனசு.

    ReplyDelete
  3. பகிர்வும் கவிதையும் அருமை.

    ReplyDelete
  4. மிகவும் அருமை..

    வீட்டுக்குள்ளே வந்து சுதந்திரமா கண்ணாடி முன்னாடி நின்னு மேக்கப் சரியாயிருக்கான்னு அப்படியும் இப்படியும் தலையை ஆட்டிப் பார்த்துட்டு விர்ர்ர்ன்னு பறந்து போகும் குருவிகள் இப்போ எங்கே போச்சுன்னு தெரியலை.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு ஷைலஜா. கவிதையும் மிக அருமை.

    ReplyDelete
  6. "சிட்டுக் குருவி முத்தங்கோடுத்து..
    சேர்ந்திடக் கண்டேனே.."

    பாட்டுல கேட்டாத்தான் உண்டு..
    இப்பலாம் நேரடியா பாக்க முடியறதில்லையே !

    "கவலையின்றித் திரியும் இந்தக் குருவியைப் பாருங்கள்"ன்னு ஒரு விளம்பரம் தூர்தர்ஷனில் வரும்.. -- இப்ப குருவியே இல்லைங்கறதுதான் நம்மக் கவலையே..

    ReplyDelete
  7. நல்ல கருத்துக்கள்.. தெளிவா சொன்னீங்க..
    ரெண்டு தடவை படிச்சேன்..

    மனுஷனுக்கு கெடுதல் செஞ்சாத்தான் பாவம்னு இல்லை..
    பறவைகளுக் கூட.. ஏன் எந்த உயிரினத்திற்கும் கெடுதல் செய்வது மகாபாவம்..

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி
    தமிழ் பத்தில் இணைத்துவிட்டேன்..

    சிட்டுக்குருவி பற்றிய அழகிய கட்டுரை.
    சிறு சேமிப்புக்கு மிகச் சிறந்த உதாரணமாக
    நாம் சொல்லும் இந்தப் பறவை...

    அளவில் சிறிதெனினும் நம் வாழ்வுக்காய்
    எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிக் கொடுக்கிறது..

    சிட்டுக்குருவியைப் பாதுகாப்போம்..

    ReplyDelete
  9. அட, ஸாதிகா சிட்டுக் குருவி பற்றி எழுதினதைப் படிச்சுட்டு வந்தா இங்கயும் சிட்டுக்குருவி! செல்போன் என்ற நவீன விஞ்ஞான வசதிக்கு நாம் கொடுத்த கொடுமையான விலை சிட்டுக் குருவிகளின் அழிவு. காக்கை குருவி எங்கள் ஜாதின்னு சொன்ன மீசைக்காரன் இப்ப இருந்தா பொங்கியிருப்பார். ஹிட்ச்காக்கின் படம் எனக்கும் ரொம்பப் பிடிச்சதுக்கா. குருவிகள் பற்றிய அக்கறையான இந்தப் பதிவு மனதை நெகிழ்த்தியது.

    ReplyDelete
  10. சிட்டுகுருவி கவிதை மிக அருமை.

    சிட்டுக்குருவி பற்றிய நல்ல விழிப்புணர்வு பதிவு.

    ReplyDelete
  11. "இனி வரும் சந்ததியினருக்குப் பாடபுத்தகத்தில் மட்டும் பார்க்க என்றாகிவிடுமா?" நியாயமான கவலை

    ReplyDelete
  12. வணக்கம்! ” சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு “ – என்று பாடிய காலம் போய், சிட்டுக் குருவியைத் தேடும் காலம் வந்து விட்டது வருத்தமான விஷயம்தான். இன்று ( மார்ச் – 20 ) சர்வதேச குருவிகள் தினம் என்று ஞாபகப் படுத்திய உங்கள் கட்டுரைக்கு நன்றி!

    ReplyDelete
  13. விஞ்ஞான வளர்ச்சியினால் இன்று சிட்டுக்குருவி... நாளை...

    ReplyDelete
  14. ஆனால் பறவைகளுக்கான சுதந்திரத்தை நாம் எப்போதும் மதிப்பதில்லை அவைகளை ஒரு பொருட்டாகக் கருதுவதுமில்லை.//
    இது தான் உண்மையே மனிதர்களையே மதிப்பதில்லை பறவைகளை பற்றி எங்கு சிந்திக்கப் போகிறார்கள் .

    ReplyDelete
  15. கருத்து தெரிவித்த அனைவருக்கும் மனம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  16. கவிதை அருமை. காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா....ஒவ்வொரு ப்ளாக்கிலும் ஒவ்வொன்றைப் படிக்கும்போதுதான் முன்பு கேட்ட இவை எல்லாம் நினைவுக்கு வருகின்றன. அவசியமான நல்ல பதிவு.

    ReplyDelete
  17. //மாதா பிதா குரு தெய்வம் என்னும் வரிசையில் இயற்கையும் இருந்திருக்கலாமோ அப்படி இருந்திருந்தால் இயற்கையை பூஜை செய்தாவது காப்பாற்றவேண்டிய +மதிக்கவேண்டிய சிந்தனை மனிதனுக்கு வந்திருக்குமோ?// நல்ல சிந்தனை....

    மனிதனுக்கு இச்சிந்தனை வராததே சோகம்...

    ReplyDelete
  18. சிட்டுக்குருவிகளின் சுதந்திரத்தில் மனதைப் பறிகொடுத்த பாரதி ,’விட்டுவிடுதலையாகி நிற்கவேண்டும் இந்தச்சிட்டுக்குருவிகளைப்போல’ என்றானே!

    பச்சைக்கிளியின் அருமையான ஆக்கம் சிட்டுக்குருவியாய் சிறகடித்து மனதில் பறக்கிறது.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  19. http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_4505.html

    சிங்காரச் சிட்டுக்குருவி

    ReplyDelete
  20. சிட்டுக் குருவியைப் பற்றி பலரும் அழகழகாகவே எழுதியுள்ளார்கள்.

    அதிலும் ஒரு கிளிமூலம் இதில் குருவியைப்பற்றி பலவிஷயங்கள் அறிந்து கொண்டதில், மகிழ்ச்சியே!

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  22. சிட்டுக்குருவி பதிவுக்கு கருத்து கூறீய அனைவர்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  23. அழைப்பிதழ்:

    உங்களது வலைப்பூவை இன்றைய வலைச்சரத்தில் தொடுத்திருக்கிறேன்.

    தாழம்பூ - இயற்கைச் சரம்

    http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_05.html

    வருகை தந்து தாழம்பூவின் மணத்தை நுகர அழைக்கிறேன்....

    நட்புடன்

    வெங்கட்.

    ReplyDelete
  24. பெங்களூரில் இதுவரை ஒரு சிட்டுக்குருவி பார்த்ததில்லை.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.