Social Icons

Pages

Friday, March 30, 2012

அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற!

முடியொன்றிமூவுலகங்களிலும் ஆண்டுஉன்


அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த

படியில்குணத்துப் பரதநம்பிக்குஅன்று

அடிநிலை  ஈந்தானைப்பாடிப்பற

அயோத்தியர்கோமானைப்பாடிப்பற


காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு


ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்

நேராஅவன் தம்பிக்கே நீளரசீந்த

ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற








ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்திய வேந்தனைப் பாடிப்பற என்கிறார் பெரியாழ்வார்.




எப்போது நம்மால் பறக்கமுடியும்?



மனம் இலேசானால்..



மனம் எப்போ லேசாகும்?



அழுத்தங்கள் அகலும்போதுதான்..



அழுத்தங்கள் எனும் பாரங்கள் எப்போது நமக்குள் வரும்?



கவலையும் கோபமும் சூழும்போது வரும்.



கவலை நம்மைத் தின்று விடுமாம். அதனால் தான் பாரதி என்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் என்கிறார்.



நம்மைக் கவலையும் கோபமும் ஆட்கொள்ளாமலிருக்க இறைவனை சரணடைய வேண்டுமாம்.



சரி, அந்த இறைவனுக்கே கோபம் வந்தால்..?
இறைவனுக்கு நம்மைப்போல காரணமேயின்றி கண்டதற்கும் கோபம் வந்துவிடுமா என்ன?


கருணையே உருவான கடவுளுக்கும் கோபம் வருமளவு நடந்து கொள்வதும் முறையா?

இந்தக் கோபம் சக்கரவர்த்தித் திருமகனை சிலநேரங்களில ஆட்கொண்டதாய் ராமாயணக் காவியத்தில் காண்கிறோம்.

அண்ணலை அந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யாரார் எனப் பார்ப்போமா?



ராமனுக்கு இளவரசுப் பட்டாபிஷேகம் செய்வதாய் தீர்மானிக்கப்பட்டு விட்டது ...ஊரே உற்சாகத்தில் மிதக்கிறது.அரச சபையில் அனைவர் முகத்திலும் குதூகலம் நிரம்பிவழிகிறது. ராமனும் சீதையும் பட்டாபிஷேகத்திற்குரிய விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள்.



இதற்கிடையில் மந்திரையின் பேச்சில் புத்தி தடுமாறி கைகேயி தசரதனிடம் ராமன் 14 வருடங்கள் வனவாசம் போகவேண்டும் என்றும் தனது

மகன் பரதன் முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்றும்( வரம்) கேட்டு அதனை பெற்றும் விடுகிறாள்.



இதைக் கேள்விப்பட்ட ராமன் சற்றும் கோபமடையவில்லையாம்.

தந்தை சொல்லைக் காப்பாற்றுவதைவிட சாம்ராஜ்யம் பெரிதல்ல என நினைத்தானாம். ராமனின் முகத்தில் கோபத்திற்கு மாறாக மகிழ்ச்சிதான் தெரிந்ததாம்...'அவ்வாசகம் உணரக்கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா' என்கிறார் கம்பர்.



எம்பெருமான் ஜிதக்ரோத: அதாவது கோபத்தைவென்றவன் ஆகிறார்.

சீற்றமில்லாதானைப்படிப்பற, சீதைமணாளனை பாடிப்பற! என்பது பெரியாழ்வார் வாக்கு.

கோபத்தை வென்ற தாசரதிக்கு எப்போது கோபம் வந்தது?




பிராட்டியை ராவணன் அபகரித்துப் போனதும் காணாமல் துடிக்கிறான் ராமன். மரத்தை, நதியை எல்லாம் கேட்கிறான். ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை திகைத்தனை போலும் செய்கை என்று பின்னர் கிஷ்கிந்தா காண்டத்தில் கம்பர் கூறியதுபோல என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறான்.



கோபம் அதிகரிக்கிறது.

சக்கர்வர்த்தி திருமகனின் கோபத்தை ஒரு சர்க்கம் முழுவதும் ராமக்ரோத: என்று அரண்யகாண்டம் 64வது சர்கத்தில் வால்மீகி விவரிக்கிறார்.



ஒருகட்டத்தில் ராமன் "என்பிரியபிராட்டியை யார் கவர்ந்து சென்றார்? என்னிடம் திரும்ப ஒப்படைக்காவிட்டால் என்னுடைய பாணங்களால் மூவுலகங்களையும் அழித்துவிடுவேன்" என்று கோபத்துடன் சூளுரைக்கிறார்.



பிராட்டியின் பிரிவினால் மிகவும் கோபமாயிருக்கும் அண்ணனை இளையவர்(கோபத்திற்குப்பெயர்போனவர்)::0 அவரை சமாதானம் செய்கிறார்.

யாரோ ஒருவன் செய்த தவறுக்காக உலகத்திற்கு தண்டனை கொடுக்கலாகாது. கவர்ந்து சென்றவனைக் கண்டுபிடித்து அவனுக்கு

தண்டனை கொடுப்போம்.. ஆகவே நாம் தேடுதல் வேட்டையை செய்வோம்' என்றபின் சக்கரவர்த்தி திருமகனுக்குக் கோபம் தணிந்தது.

.



அடுத்து வனவாசத்தில் காகாசுரன் சீதையின் உடலைத்தீண்ட அதனின்றும் பெருகிய ரத்தம் கண்டு கட்டுக்கடங்காத கோபம் உண்டாயிற்றுராமனுக்கு.

காலசர்ப்பதைப் போல மூச்சு விட்டான் ராமன் என்கிறார் வால்மீகி.

ஒரு புல்லை எடுத்து பிரம்மாஸ்த்ர மந்திரத்தை அந்தக் காக்கையின் மேல் ஏவினான். அந்த அளவு கோபமுண்டாகிவிட்டது.



பிறகு காகாசுரன் அடைக்கலமாகி காலில் விழுந்ததும் அவனுக்கு கோபம் தணிந்து உயிர்பிச்சை அளித்தான். சரணம் என்றவரை தள்ளியதில்லை தசரத மைந்தன்.



அதேபோல இலங்கைசெல்ல கடல் அரசன் வழிவிடாதபோது கோபம் வந்தது.

'லட்சுமணா என் தனுசைக்கொண்டுவா.. கொல்லும் பாம்புகள் போன்ற குரூரமான பாணங்களையும் எடுத்துவா.. இந்தக் கடலை முற்றிலும் வற்றச் செய்துவிடுகிறேன். வானர வீரரகள் நடந்தே லங்கை செல்லட்டும் .."என்றதும் கடலரசன் அஞ்சி சரணம் எனப் பணிந்தான். அவனுடைய சரணாகதியை அண்ணலும் ஏற்றுக்கொண்டார்.




ராவணனுடன் போர் செய்கையில் அனுமனை தன் பாணங்களால் காயப்படுத்துகிறான் ராவணன். அதைக்கண்ட ராமனுக்குக் கோபம் வந்தது.




உடனே ராவணனின் ஆயுதங்களை அழித்து அவனை நிராயுதபாணியாக்கி ,'இன்று போய்நாளை வா' என்கிறான் .



இப்படித் தான் அடியார்க்கு தீங்கிழைத்தால் பெருமாளுக்குக் கோபம் மிகுந்து வருமென்பதற்கு பிரஹலாதன் பெரும் சாட்சி.


'அங்கண் ஞாலம் அஞ்ச 'என்றும் 'முளைத்த சீற்றம் விண்கடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்த அஞ்ச' என்று ஆழ்வார் அருளிச்செய்ததில் இதனை உணரலாம்.



தன் உயிரான இனிய சீதையைக் கவர்ந்ததும், தனக்காக் போராடிய வானர வீரர்களைக் கொன்று குவித்ததும் போன்ற தகாத செயலை செய்ததால் ராவணன் மீது ராமனுக்குக் கோபம் வந்தது. அதுவே ராவணனின் முடிவிற்கும் காரணமானது..



இதைத்தான் ஆண்டாளும், 'சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்ற மனதுக்கினியானை' என்று திருப்பாவையில் சொல்கிறாள்.



இறைவனுக்கு நம்மீது கோபம் ஏற்படாத வகையில் நாம் நடந்துகொள்வோம் அப்படியே அறியாது தவறு செய்தாலும் அண்ணலின் பாதங்களை சரணமெனப்பிடித்துவிடுவோம்!

********************************************************************************



13 comments:

  1. அறிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி .

    ReplyDelete
  2. மிகவும் அருமை.

    ReplyDelete
  3. அருமையான கவிதைக்கா. சக்கரவர்த்தித் திருமகனைப் பணிந்து வணங்குவோம்.

    ReplyDelete
  4. ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஆஹா அருமையான தொகுதியாக வந்தது சீதாராமனின் தர்ம நெறியை, கருணையைப் பற்றிய விளக்கத்தோடு...

    தவறு செய்பவரைக் கண்டு பொங்கினாலும் தவறு செய்தவரே சரணாகதி ஆகும் போது கருணை மழை பொழியும் பெம்மான் அவன்...

    "ஞானம் தழைத்து, உன் சொரூபத்தை அறிகின்ற
    நல்லோர் இடத்தினில் போய், நடுவினில் இருந்து, உவந்து,
    அடிமையும் பூண்டு, அவர் நவிற்றும் உபதேசம் உட்கொண்டு,
    ஈனம்தனைத் தள்ளி எனது, நான் எனும் மானம்
    இல்லாமலே துரத்தி, இந்திரிய வாயில்களை இறுகப் புதைத்து,
    நெஞ்சு இருள் அற, விளக்கு ஏற்றியே-
    வான் அந்தம் ஆன விழி அன்னமே! உன்னை என்
    அகத் தாமரை போதிலே வைத்து, வேறே கவலை அற்று
    மேல் உற்ற பர வசம் ஆகி, அழியாது ஓர்
    ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண்?
    ஆதி கடவூரின் வாழ்வே?
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
    அருள் வாமி! அபிராமியே"

    'அகத் தாமரை போதிலே வைத்து, வேறே கவலை அகற்று' என்கிறார் அபிராமப் பட்டரும்..

    மனமென்னும் வாகனத்திலே இறைவனை இருத்தினால் பிரபஞ்சமே அங்கே ஒளிருமல்லவா...
    இருப்பது பரமானந்தம் என்றால் அங்கே வேறென்ன இருக்க முடியும்... இதை அழகாக ஒரே வரியில் கூறி இருக்கிறீர்கள்...

    ////நம்மைக் கவலையும் கோபமும் ஆட்கொள்ளாமலிருக்க இறைவனை சரணடைய வேண்டுமாம்////

    சத்தியமான வார்த்தைகள்...

    ////ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை திகைத்தனை போலும் செய்கை///

    கம்பனின் இந்த வரியில் தான் பிரபஞ்ச தத்துவமே அடங்கி இருக்கிறது... வேதாந்தம் முழுவதும் அடங்கி இருக்கிறது...

    பரமனின் ஆவியாகிறாள் அன்னை அவள்.
    அவள் எப்படிப் பட்டவள் தீமையை நீக்கி நன்மையை மட்டுமே ஏற்கும் அன்னத்தைப் போன்றவள்..
    அமிழ்தின் பிறந்த அமுதமான தேவி...

    எதிர்த்து நின்ற கும்பகர்ணனைக் கூட அவனின் விருப்பத்திற்கு இணங்கவே விடைபெறச் செய்தான் அந்தப் பரந்தாமன்.

    தஞ்சமென்று வந்தவர்களை எல்லாம் தடுத்தாண்டு கொள்வதும்... தவற்றை உணர்ந்தவர்களை மன்னித்துக் காப்பதும் அவனின் குணம் என்பதை..

    பகவானின் அமிழ்தினினும் இனியக் கருணையை அழகாய் சொல்லி யுள்ளீர்கள்...
    பகிர்வுக்கு நன்றிகள் சகொதரியாரே!

    ReplyDelete
  7. வணக்கம்! ராமநவமி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ரகுராமனைப் பற்றிய
    அழகிய பதிவு சகோதரி...

    ReplyDelete
  9. /////இப்படித் தான் அடியார்க்கு தீங்கிழைத்தால் பெருமாளுக்குக் கோபம் மிகுந்து வருமென்பதற்கு பிரஹலாதன் பெரும் சாட்சி.////

    பகவானை அடையவே அவதாரம் எடுத்த ஆண்டாளும் இதை நன்கு உணர்ந்தே வைத்துதான் தன்னை ஸ்ரீ விஷ்ணு சித்தனின் மகள் என்றுக் கூறிப் பெருமிதம் கொள்கிறார் என்பர்...

    பரமபாகவதரின் சம்பந்தம் பெற்றவள் என்பதில் தான் அவள் மற்றற்ற மகிழ்ச்சி கொள்கிறாள்; அதோடு அந்த பாகவத சம்பந்தம் தான் தன்னை எளிதில் பகவானிடம் கொண்டும் சேர்க்கும் என்றே தீர்க்கமாக நம்பியும் இருக்கிறாள் அன்னையவள் என்பதுவும் தங்களின் இந்தக் கருத்தை மேலும் உறுதிப் படுத்துகிறது...

    பகவானின் கல்யாணக் குணங்களைப் பற்றிய தங்களின் ஆய்வில் சிறந்த முடிபாக தனது தேவியின் அவதாரம் என்றால் கூட இரண்டாம் இடம் தான்.. பக்தர்களான பாகவதர்களுக்கே முன்னுரிமை என்பதையும் எடுத்துக் கொள்ள முடிகிறது... அவதார நோக்கமும் அதுவாக இருக்குமோ? தாங்கள் அதைப் பற்றி நிறைய எழுதணும்...

    நல்லப் பதிவு... மீண்டும் இந்தக் கருத்தை பகிர்ந்துக் கொள்ள வந்தேன்... நான் மட்டும் நிறைய எழுதி விடுகிறேன்... அப்படி எழுதும் காலத்தே பரமாத்மாவினை முழுமையாக சிந்திக்கும் காலம் கூடுகிறது... இதுவும் ஒருவித சுயநலமே... யாவரும் பொறுப்பீர்களாக... நன்றி, நன்றி.. நன்றி...

    ReplyDelete
  10. அருமை.
    நன்றி.

    ReplyDelete
  11. கருத்துகூறீய அனைவர்க்கும் நன்றி..
    ஜீ ஆலாசியம் அவர்களுக்கு சிறப்பு நன்றி மற்றவர் இடுகையில் இப்படி ஆழ்ந்து வாசித்து அதற்கு விரிவானபின்னூட்டம் இடுகிற பழக்கம் எனக்கு இன்னும் வரவில்லை என்ற வருத்தம் உண்டு தாங்கள் எழுதுவதை மிகவும் ரசிக்கிறேன் மதிக்கிறேன் தொடருங்கள் சகோதரரே மிக்க நன்றி இதற்கு

    ReplyDelete
  12. //
    இறைவனுக்கு நம்மீது கோபம் ஏற்படாத வகையில் நாம் நடந்துகொள்வோம் அப்படியே அறியாது தவறு செய்தாலும் அண்ணலின் பாதங்களை சரணமெனப்பிடித்துவிடுவோம்!// ;)))))

    Very wonderful post. Enjoyed.
    Thanks for sharing.

    ReplyDelete
  13. இதையெல்லாம் படிக்காமலா பாரதி ரௌத்திரம் பழகு என்று சொல்லியிருப்பான்.?வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.