Social Icons

Pages

Sunday, July 14, 2013

வெள்ளை வண்ண விடமுமுண்டாங் கொலோ.!

கம்பராமாயண வகுப்பு இப்போதுதான் ஆரம்பித்தமாதிரி இருக்கிறது அதற்குள்   14வாரங்கள் ஓடிவிட்டன!

பாரதநாட்டின்  மிகச்சிறந்த  காவியமாக  இராமாயணம்  போற்றப்படுகிறது. காலங்கள் பல கடந்தும் அது இன்னமும்  வாழ்கிறது .

ராமாயணத்திற்கு  என்ன ஒரு சிறப்பென்றால் ராமானுஜர் , திருமலை நம்பிகளிடம் 18தடவை  ராமாயணம் கேட்டாராம்! அத்தனை  தடவைகேட்க அத்தனை விஷயம் அதில்  இருக்கிறதென்றாராம்  எதிராஜர் என்னும் பெரும்புதூர் மாமுனியான  ராமானுஜர்.

வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வால்மீகி என்பான்
தீங்கவி செவிகளாரத்  தேவரும் பருகச்செய்தான்


என்கிறான் கம்பன்.

ஒரு ஸ்லோகத்திற்கு நான்கு பாதங்கள்-அதாவது அடிகள்.

24000  ஸ்லோகங்கள்!  அவர் வகுத்திருந்த பாதங்களில் எதனையும் வாங்க-அதாவது-  எடுக்க  இயலாதபடி  தேவர்களும்  செவி மகிழக் கேட்கும்படியாக இருக்கிறதாம்!

கம்பன் அமுதத்தில்  பல துளிகளை  ரசிக்கும் பேறு பெற்றுள்ள நிலையில்
நேற்றைய வகுப்பில்  கம்பனின் ஒரு பாடல்  கண்ணையும் மனத்தையும் விட்டு  இன்னமும் நீங்காமல்  இருப்பதை  கொஞ்சம் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேனே!




அதாவது  இராமன்   (இன்னும் திருமணம்  நடக்கவில்லை)  சீதையைப்பார்த்த நினைவில் தவிக்கிறானாம்.


கம்பன் , ராமன் நினைப்பதை   இப்படி  எழுதுகிறான் பாருங்கள்.


கொள்ளை கொள்ளக்  கொதித்தெழு பாற்கடல்
பள்ள வெள்ள மெனப்பட ருந்நிலா
உள்ள வுள்ள வுயிரைத்துருவிட
வெள்ளை வண்ண விடமுமுண்டாங் கொலோ.


கொள்ளை கொள்ள  அதாவது  உலகமுழுவதையும் கவர்ந்து இழுத்து தன் வசமாக்குவதற்கு
கொதித்தெழு பாற்கடல்.. பொங்கி எழுகின்ற பால்கடல்

பள்ள  வெள்ளமென  ஆழமாகிய நீர் வெள்ளம் போல்படரும்
படரும்...உலகெங்கும் பரவி உள்ள
நிலா..சந்திரகாந்தமானது
உள்ள உள்ள..நான் அந்த மங்கையை.நினைப்பதே பயனாகப்பிழைத்துள்ள
உயிரைத்துருவிட.... உயிரைத்துளைப்பதனால்
வெள்ளை வண்ண விடமுமுண்டு கொலோ..வெள்ளைநிறத்தில் விஷமும் இருக்கிறதோ(என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது)

விஷம் என்பதுகரிய நிறம். ஆனால் நிலாஎன்கிற வெள்ளை நிறம் விஷமாகக்கானப்படுகிறதாம். காதலியில்லாமல் தனிமையில் இருக்கும் தனக்கு மரண வேதனை தருகிற நிலவினைப்பழித்துக்கூறுகிறானாம் ராமன்!

பாடல் அருமையாக இருக்கிறதுதானே! கம்பராமாயணப்பாற்கடலில் இது ஒரு துளிதான்!








 

10 comments:

  1. ரசனையுடன் கூடிய ஒரு துளியை ரசித்தேன்... நன்றி...

    ReplyDelete
  2. பாடல் பொருள் அள்ளிக்கொண்டு போகிறது... ரசித்தேன்.

    ReplyDelete
  3. வெள்ளை வண்ண விடமும் இங்கே தேனாய் ருசிக்கிறதே... பருகத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஆஹா என்ன கற்பனை! கம்பன் கம்பன்தான்.

    ReplyDelete
  5. பாற்கடலில் முழுவதும் மூழ்கித் திளைக்க விரும்பினாலும் அன்றாட வாழ்க்கை நேரத்தைச் சாப்பிடுறதால முடியல. அதனால அப்பப்ப இந்த மாதிரி கிடைக்கற தேன் துளிகள்தான் கோடை மழையா ரசிச்சு ருசிக்கறோம். அருமைக்கா.!

    ReplyDelete
  6. கம்பன் கவியமுதத்தில் ஒரு துளியாயினும் சுவை சொல்ல வார்த்தைகளுண்டோ!. அருமையிலும் அருமையான பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  7. கம்ப ராமாயண வகுப்புக்கு வாழ்த்துக்கள்-க்கா!
    யாரு வகுப்பு எடுக்குறாங்க? நீங்களா? தகவல் சொல்லுங்க!

    நீங்க குடுத்த பாட்டும் தமிழெழில் வாய்ந்தது;

    //உள்ள உள்ள உயிரைத் துருவிட// - சொற்கட்டு அப்படியே தேங்காய் துருவுற மாதிரியே இல்ல?
    தேங்காயைத் துருவலாம்; உயிரைத் துருவினா வலிக்காதா?

    இதுல இன்னோரு நுட்பம் ஒளிஞ்சிருக்கு;
    துருவுதல் = எப்பமே உள்ளிருந்து, கொஞ்சம் கொஞ்சமா வெளியே!

    தேங்காய் துருவும் போது பாத்து இருக்கோம்-ல்ல? Core துருவிய பின், side களும் அடிபடும்; துருவப்படும்!
    அது போல, இராகவன் மனம் என்னும் உள் துருவி, கொஞ்சம் கொஞ்சமா வெளி உடம்பும் அல்லல்படுது!

    "உள்ள உள்ள உயிரும் வாங்கிட" -ன்னு கம்பன் போட்டிருக்கலாமே!
    "உள்ள உள்ள உயிரும் துருவிட" என்பதில் வித்தியாசம் இருக்கு தானே!
    ----

    //பள்ள வெள்ளம் எனப் படருந் நிலா//

    துன்பம் வந்தா... ஒன்னு ஓரிடத்தில் ஒண்டி இருக்கலாம்; இல்ல, அந்த இடத்தை விட்டே ஓடிப் போயீறலாம்!
    ஆனா எப்படிப் போனாலும், வந்து தொல்லை குடுக்குதாம் நிலா!
    பள்ளம் - வெள்ளம் = பள்ளம் -ன்னு தேங்கிக் கிடந்தாலும் துன்பம்; வெள்ளம் -ன்னு ஓடிக் கிடந்தாலும் துன்பம்!

    அதான் பள்ள-வெள்ளம் எனப் படரும் நிலா!
    அதை "வெள்ளை விஷம்" -ன்னு திட்டுவதில் தப்பே இல்லீயே?:)

    //கொள்ளை கொள்ளக் கொதித்தெழு பாற்கடல்//

    (சின்ன) திருட்டுக்கு = ஓசை படாம போகணும்
    (பெரிய) கொள்ளைக்கு = ஆர்ப்பாட்டமாத் தான் போகணும்

    அதான் கொள்ளை-கொதித்தெழு ன்னு சொற்கட்டு! கம்பன் ஒவ்வொரு சொல்லையும் ரசிக்காம போடவே மாட்டான்:)

    ReplyDelete
  8. கம்பனின் அமுதை ருசித்த அனைவர்க்கும் நன்றி சிறப்பு நன்றி அருமைத்தம்பி ரவிக்கு... பள்ள வெள்ளத்தை கொள்ளை கொள்ளக்கொதித்தெழு பாற்கடலை அருமையாய் விளக்கியதற்கு!

    ReplyDelete
  9. //
    Delete







    kannabiran, RAVI SHANKAR (KRS)4:18 PM

    கம்ப ராமாயண வகுப்புக்கு வாழ்த்துக்கள்-க்கா!
    யாரு வகுப்பு எடுக்குறாங்க? நீங்களா? தகவல் சொல்லுங்க!

    /////

    அடட்டா நானெல்லாம் வகுப்பு எடுக்கறதா என்ன ரவி ஜோக் அடிக்கறீங்க? திரு ஹரிக்ருஷ்ணன் திரு ஜடாயு போன்றவர்கள் வழி நடத்த நாங்கள் சேர்ந்து கம்பனை அங்கே காண்கிறோம் புலவர் இராமமூர்த்தி திருபெஞ்சமின் லெபோ போல சில இலக்கியப்பெருந்தகைகளும் அவ்வப்போது வருகை தருவார்கள். கருத்துக்களை கூறுவார்கள்.

    ReplyDelete
  10. கம்பராமாயணப்பாற்கடலில் வெள்ளை வண்ண விடமுமுண்டு கொலோ

    ரசிக்கவைத்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.