Social Icons

Pages

Friday, March 30, 2012

அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற!

முடியொன்றிமூவுலகங்களிலும் ஆண்டுஉன்


அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த

படியில்குணத்துப் பரதநம்பிக்குஅன்று

அடிநிலை  ஈந்தானைப்பாடிப்பற

அயோத்தியர்கோமானைப்பாடிப்பற


காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு


ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்

நேராஅவன் தம்பிக்கே நீளரசீந்த

ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற








ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்திய வேந்தனைப் பாடிப்பற என்கிறார் பெரியாழ்வார்.




எப்போது நம்மால் பறக்கமுடியும்?



மனம் இலேசானால்..



மனம் எப்போ லேசாகும்?



அழுத்தங்கள் அகலும்போதுதான்..



அழுத்தங்கள் எனும் பாரங்கள் எப்போது நமக்குள் வரும்?



கவலையும் கோபமும் சூழும்போது வரும்.



கவலை நம்மைத் தின்று விடுமாம். அதனால் தான் பாரதி என்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் என்கிறார்.



நம்மைக் கவலையும் கோபமும் ஆட்கொள்ளாமலிருக்க இறைவனை சரணடைய வேண்டுமாம்.



சரி, அந்த இறைவனுக்கே கோபம் வந்தால்..?
இறைவனுக்கு நம்மைப்போல காரணமேயின்றி கண்டதற்கும் கோபம் வந்துவிடுமா என்ன?


கருணையே உருவான கடவுளுக்கும் கோபம் வருமளவு நடந்து கொள்வதும் முறையா?

இந்தக் கோபம் சக்கரவர்த்தித் திருமகனை சிலநேரங்களில ஆட்கொண்டதாய் ராமாயணக் காவியத்தில் காண்கிறோம்.

அண்ணலை அந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யாரார் எனப் பார்ப்போமா?



ராமனுக்கு இளவரசுப் பட்டாபிஷேகம் செய்வதாய் தீர்மானிக்கப்பட்டு விட்டது ...ஊரே உற்சாகத்தில் மிதக்கிறது.அரச சபையில் அனைவர் முகத்திலும் குதூகலம் நிரம்பிவழிகிறது. ராமனும் சீதையும் பட்டாபிஷேகத்திற்குரிய விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள்.



இதற்கிடையில் மந்திரையின் பேச்சில் புத்தி தடுமாறி கைகேயி தசரதனிடம் ராமன் 14 வருடங்கள் வனவாசம் போகவேண்டும் என்றும் தனது

மகன் பரதன் முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்றும்( வரம்) கேட்டு அதனை பெற்றும் விடுகிறாள்.



இதைக் கேள்விப்பட்ட ராமன் சற்றும் கோபமடையவில்லையாம்.

தந்தை சொல்லைக் காப்பாற்றுவதைவிட சாம்ராஜ்யம் பெரிதல்ல என நினைத்தானாம். ராமனின் முகத்தில் கோபத்திற்கு மாறாக மகிழ்ச்சிதான் தெரிந்ததாம்...'அவ்வாசகம் உணரக்கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா' என்கிறார் கம்பர்.



எம்பெருமான் ஜிதக்ரோத: அதாவது கோபத்தைவென்றவன் ஆகிறார்.

சீற்றமில்லாதானைப்படிப்பற, சீதைமணாளனை பாடிப்பற! என்பது பெரியாழ்வார் வாக்கு.

கோபத்தை வென்ற தாசரதிக்கு எப்போது கோபம் வந்தது?




பிராட்டியை ராவணன் அபகரித்துப் போனதும் காணாமல் துடிக்கிறான் ராமன். மரத்தை, நதியை எல்லாம் கேட்கிறான். ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை திகைத்தனை போலும் செய்கை என்று பின்னர் கிஷ்கிந்தா காண்டத்தில் கம்பர் கூறியதுபோல என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறான்.



கோபம் அதிகரிக்கிறது.

சக்கர்வர்த்தி திருமகனின் கோபத்தை ஒரு சர்க்கம் முழுவதும் ராமக்ரோத: என்று அரண்யகாண்டம் 64வது சர்கத்தில் வால்மீகி விவரிக்கிறார்.



ஒருகட்டத்தில் ராமன் "என்பிரியபிராட்டியை யார் கவர்ந்து சென்றார்? என்னிடம் திரும்ப ஒப்படைக்காவிட்டால் என்னுடைய பாணங்களால் மூவுலகங்களையும் அழித்துவிடுவேன்" என்று கோபத்துடன் சூளுரைக்கிறார்.



பிராட்டியின் பிரிவினால் மிகவும் கோபமாயிருக்கும் அண்ணனை இளையவர்(கோபத்திற்குப்பெயர்போனவர்)::0 அவரை சமாதானம் செய்கிறார்.

யாரோ ஒருவன் செய்த தவறுக்காக உலகத்திற்கு தண்டனை கொடுக்கலாகாது. கவர்ந்து சென்றவனைக் கண்டுபிடித்து அவனுக்கு

தண்டனை கொடுப்போம்.. ஆகவே நாம் தேடுதல் வேட்டையை செய்வோம்' என்றபின் சக்கரவர்த்தி திருமகனுக்குக் கோபம் தணிந்தது.

.



அடுத்து வனவாசத்தில் காகாசுரன் சீதையின் உடலைத்தீண்ட அதனின்றும் பெருகிய ரத்தம் கண்டு கட்டுக்கடங்காத கோபம் உண்டாயிற்றுராமனுக்கு.

காலசர்ப்பதைப் போல மூச்சு விட்டான் ராமன் என்கிறார் வால்மீகி.

ஒரு புல்லை எடுத்து பிரம்மாஸ்த்ர மந்திரத்தை அந்தக் காக்கையின் மேல் ஏவினான். அந்த அளவு கோபமுண்டாகிவிட்டது.



பிறகு காகாசுரன் அடைக்கலமாகி காலில் விழுந்ததும் அவனுக்கு கோபம் தணிந்து உயிர்பிச்சை அளித்தான். சரணம் என்றவரை தள்ளியதில்லை தசரத மைந்தன்.



அதேபோல இலங்கைசெல்ல கடல் அரசன் வழிவிடாதபோது கோபம் வந்தது.

'லட்சுமணா என் தனுசைக்கொண்டுவா.. கொல்லும் பாம்புகள் போன்ற குரூரமான பாணங்களையும் எடுத்துவா.. இந்தக் கடலை முற்றிலும் வற்றச் செய்துவிடுகிறேன். வானர வீரரகள் நடந்தே லங்கை செல்லட்டும் .."என்றதும் கடலரசன் அஞ்சி சரணம் எனப் பணிந்தான். அவனுடைய சரணாகதியை அண்ணலும் ஏற்றுக்கொண்டார்.




ராவணனுடன் போர் செய்கையில் அனுமனை தன் பாணங்களால் காயப்படுத்துகிறான் ராவணன். அதைக்கண்ட ராமனுக்குக் கோபம் வந்தது.




உடனே ராவணனின் ஆயுதங்களை அழித்து அவனை நிராயுதபாணியாக்கி ,'இன்று போய்நாளை வா' என்கிறான் .



இப்படித் தான் அடியார்க்கு தீங்கிழைத்தால் பெருமாளுக்குக் கோபம் மிகுந்து வருமென்பதற்கு பிரஹலாதன் பெரும் சாட்சி.


'அங்கண் ஞாலம் அஞ்ச 'என்றும் 'முளைத்த சீற்றம் விண்கடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்த அஞ்ச' என்று ஆழ்வார் அருளிச்செய்ததில் இதனை உணரலாம்.



தன் உயிரான இனிய சீதையைக் கவர்ந்ததும், தனக்காக் போராடிய வானர வீரர்களைக் கொன்று குவித்ததும் போன்ற தகாத செயலை செய்ததால் ராவணன் மீது ராமனுக்குக் கோபம் வந்தது. அதுவே ராவணனின் முடிவிற்கும் காரணமானது..



இதைத்தான் ஆண்டாளும், 'சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்ற மனதுக்கினியானை' என்று திருப்பாவையில் சொல்கிறாள்.



இறைவனுக்கு நம்மீது கோபம் ஏற்படாத வகையில் நாம் நடந்துகொள்வோம் அப்படியே அறியாது தவறு செய்தாலும் அண்ணலின் பாதங்களை சரணமெனப்பிடித்துவிடுவோம்!

********************************************************************************



மேலும் படிக்க... "அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற!"

Thursday, March 22, 2012

தண்ணீர்!தண்ணீர்!








எந்த பத்திரிகை ஆனாலும் எந்த ஊடகங்கள் ஆனாலும் அறிவுசார் விவாதங்கள் ஆனாலும் உலக நாடுகளின் தலைவர்கள் ஆனாலும் விவாதிக்கப்படும் முக்கியமான பொருளாக புவி வெப்பமயமாதல் இடம் பெற்றுவிட்டது.
ஓசோன் படலம் பற்றி ஒன்றுமே அறியாத அந்த நாளைய மன்னர்கள் ராஜ்யபரிபாலனத்தில் தினமும் கேட்கும் கேள்வி மாதம் மும்மாரிபெய்கிறதா என்பதுதான்.
இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால் மாதம் மும்மாரியில் ஒரு மாரி குறைந்தாலும் ஆபத்துதான் என்பது.ஆக எப்போதோ மாதம் மும்மாரி பொழிந்தது. வானத்தில் புகைமூட்டம் இல்லை வாகன நச்சுப்புகை வளி மண்டலத்தை நிரப்பவில்லை மும்மாரி பொழிந்தது.குளிர்சாதன இயந்திரங்களின் கொடிய நச்சு வாயு வெளியேறவில்லை மனிதன் அமைதியாக வாழ்ந்தான் ஓசோனில் ஓட்டைவிழவில்ல, பூமி வெப்பம் அடையவில்லை ஆகவே மழை பொழிந்தது அன்று.
மாதம் மும்மாரி பொழிய வளிமண்டலம் சுத்தமாக அல்ல,பரிசுத்தமாக இருக்கவேண்டும். ஆனால் இப்போதோ கரியமில வாயு-மீத்தேன் நைட்ரஜன் ஆக்சைடு சல்பா ஹெக்சா புளோரைடு ஹைட்ரோ ஃப்ளோரைடுகார்பன், பெர்புளோரா கார்பன்கள் ஆகிய தீயநச்சுவாயுக்கள் பூமியிலிருந்து வளிமண்டலத்தை நோக்கி ஏவப்பட்டுள்ளது.
முன்னே வனங்கள் செழிப்பாக பசுமையாக இருந்தன மும்மாரி பொழிந்தன. இன்று விஞ்ஞான வளர்ச்சி என்னும் வரங்களே நமக்கு சாபங்களாகிவிட்டன.
இமயத்தில் பனிப்பாறைகள் உருகிக்கொண்டு இருக்கின்றன.பனிக்கரடி இனம் பூ்ண்டோடு அழிந்துபோய்விடும் அபாயம், அரிய தாவரங்கள் அழியும் துயரம்,. மனி்தனுக்கு குடிநீர் கிடைக்காமல்போகும் அவலம் ஏற்படும்.
மரங்களை பாதுகாத்து மரங்களை அதிகம் நட்டு இருப்பிடத்தை பசுமைக்காடாக மாற்றினால் கரியமில வாயு எனும் அரக்கன் ஒழிவான் ஓசோன் காப்பற்றப்படும். புவி வெப்பமய்மாகாது மாதம் ஒரு மாரியாவது பெய்யும்.தண்ணீர்கஷ்டம் தீரும்.


வரப்பு உயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர மணி உயரும். மணி உயர குடி உயரும்.
குடி உயர கோல் உயரும். கோல் உயர கோன் உயர்வான்.

ஔவை  வாக்கு மெய்ப்படவேண்டும்!
.
இந்த உலகில் 75% தண்ணீர்.இருக்கிறது.

இதில் 97% சமுத்திரம்.(உப்புத் தண்ணீர்.)
3% மட்டுமே குடிப்பதற்கு உபயோகப் படுத்தலாம்.

ஏறத்தாழ 75% நல்ல தண்ணீர் போலார் பகுதிகளில் ஐஸ் கட்டியாக உரைந்து கிடக்கிறது.

ஒரு மனிதனால் உணவு இல்லாமல் ஒரு மாதத்திற்கு மேல் உயிர் வாழ முடியும் ஆனால், தண்ணீர் இல்லாமல் ஏறத்தாழ ஒரு வாரம் தான் வாழ முடியும்.

ஒரு கேலன் தண்ணீர் என்பது 3.785 லிட்டர்கள் ஆகும்

பற்களை துலக்க தினமும் ஒரு மனிதன் 2 கேலன் தண்ணீர் செலவிடுகிறான்.

கழிவறையில் flush செய்ய 2-7 கேலன் தண்ணீர் உபயோகப்படுத்த படுகிறது.

குளிப்பதற்கு மட்டும் 25-50 கேலன் தண்ணீர் உபயோகப்படுத்த படுகிறது.

..

மனிதனால் உப்பு நீரை குடிக்க முடியாது.

நம் உடலானது 66% தண்ணீர்.

நம் இரத்தத்தில் 82% தண்ணீர் உள்ளது.
நல்ல தண்ணீரை நம்பி வாழும் விலங்கினங்கள் மற்ற விலங்குகளை விட 5 மடங்கு அதிகமாக மறைந்து வருகிறது.

இந்தியா என்ற நமது தேசத்தின் பெயர், இன்டஸ் என்ற நதியின் பெயரில் இருந்து உருவானது.

நமது தட்பவெப்பநிலையை தண்ணீரே தீர்மானிக்கிறது.
இந்த உலகில் பெரும்பாலான மக்கள் குடிக்கும் நீருக்காக 3 மணி நேரம் நடக்க வேண்டி உள்ளது.

இந்த உலகில் கால் வாசி மக்கள் பாதுகாபற்ற குடிநீரே குடித்து வாழ்கின்றனர்.

இன்றைய நிலை நீடித்தால் 2025 ஆம் ஆண்டில் உலகில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாய நிலை உருவாகும்.

உலகில் தினமும் 3900 குழந்தைகள் அசுத்த நீரை குடிப்பதாலும், சுகாதரமற்ற முறைகளாலும் இறக்க நேரிடுகின்றனர்.
கவிதை தாகத்தில் எழும் கவிதையோடு பதிவை முடித்துவிடுகிறேன்.
நீ தாய்
தவிக்கும்போதெல்லாம்
தாகம் தீர்ப்பதில்!
நீ மரம்
நெஞ்சுக்கு நிழலாக
இருப்பதில்!
நீ மொழி
அனைவரிடமும்
உலா வருவதில்!
நீ நடிகை
எல்லா பாத்திரங்களுக்கும்
ஏற்றதாய் வடிவெடுப்பதில்!
நீ மரம்
பலவகைகளில்
பயன்படுவதில்!
நீ தெய்வம்
மழையாகப்
பொழிகையில்!
நீ விளக்கு
வாழ்வின் ஒளியாக
இருப்பதில்!
நீ உயர்ந்தவள்
உலகில் பெரும்பகுதி
உன்னுடையதாயிருப்பதில்!
நீதான் நான்
என்னுள்ளே
கலந்து இருப்பதில்!

--







--




--


மேலும் படிக்க... "தண்ணீர்!தண்ணீர்!"

Tuesday, March 20, 2012

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?


சர்வதேச குருவிகள் தினமாக மார்ச் 20 ஐ பறவை, விலங்கின ஆர்வலர்கள் 2010 முதல் கொண்டாடி வருகின்றனர்.

சிட்டுகுருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா  உன்னைவிட்டுப்பிரியவே செல்போனைக்கட்டி அழுகிறோம் நாங்கள் என்று   இனி பாடவேண்டியதுதான்.

  சிட்டுக்குருவிகளை இன்று நகரங்களில் பார்க்க முடியவில்லை. குருவிகளின் உயிரை பறிக்கும்கோடரிகள் எவை தெரியுமா "மொபைல் போன் டவர்'களில் இருந்து வரும் ரேடியோ அலைகள் தான் என்கிறார் மதுரையில் பறவைஇனங்களை ஆய்வு செய்து வரும் டாக்டர் பத்ரி நாராயணன்.  அதுபற்றி நமக்கென்ன கவலை என்பதுபோல  கணந்தோறும் காதில் செல்போனை வைத்துக்கொண்டு நாம் அலைகிறோம்.


 காக்கா காக்காகண்ணுக்கு மைகொண்டுவா
குருவி குருவி  கொண்டைக்குப்பூ கொண்டுவா
கொக்கே கொக்கே குழந்தைக்கு தேன் கொண்டுவா
கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டுவா....


இப்படியெல்லாம் பாட்டுப்பாடி பறவைகளை அழைத்த காலமெல்லாம் கனவாகிப்போய்விடும் அபாயச்சூழ்நிலையில்  இருக்கிறோம்.

 நாம் பெரும்பாலும அழகானவற்றை ஏற்றுக்கொண்டு மிகவும் உபயோகமானவற்றை  கைவிட்டுவிடுகிறோம் என்னும் பிரெஞ்சுபழமொழிக்குஏற்ப வாசலில் இருக்கும்  பச்சைமரங்களை வெட்டிவிட்டு  வரவேற்பறையில் ப்ளாஸ்டிக் செடிகளை கொண்டு வைக்கிறோம் மரத்தைவளர்க்கத்   தெரியாத மனங்களுக்கு  பிளாஸ்டிக்  தாவரங்களில்   படிந்த   தூசியை துடைக்கத் தெரிந்திருக்கிறது.

 நாம் வளர்த்த  மரங்களின் எண்ணிக்கையைவிட  நாம்    தொலைத்த மரங்களின் எண்ணிக்கை அதிகம்.

சாலைகள் அமைக்க  ரயில்பாலங்கள்கட்ட குடிநீர் குழாய் அமைக்க குடியிருப்புகள் தொழிற்சாலைகள்   கட்ட   என்று  மரங்களை  வெட்டிசாய்த்துவிட்டோம்  அதனால் பறவைகளின் வீடுகளை அழித்துவிட்டோம் . வசிக்க இடமினறி அவைகள் காணாமல்போய்க்கொண்டிருக்கின்றன .


ஒருபறவை  பறந்து கொண்டிருக்கும்போது மிதந்துகொண்டிருந்தது கூடவே வானமும் , பறவையைச்சுட்டார்கள் விழுந்ததோ   துண்டுவானம் எனும் கவிதையைப்  படிக்கிறபோது  நம் மனமும்  சிதறி விழுகிறது.

பறவைகள் நம் சுற்றுச்சுழலின்நண்பர்கள் .செல்போன்களை நாம் அதிகம்   பயன்படுத்தத்  தொடங்கியதும் அதன் அலைவரிசைத்தாக்கம்  பொறுக்கமுடியாமல் சிட்டுக்குருவிகளின் இனம்அழிந்துவருகிறது .

ஒரு சிட்டுக்குருவியின் அழிவுக்கும் பிரபஞ்சத்தின் அழிவுக்கும் தொடர்பிருக்கிறது என்று பறவைஇயல் நிபுணர் சலீம் அலி எழுதுகிறார்.


மாதா பிதா குரு தெய்வம் என்னும் வரிசையில் இயற்கையும் இருந்திருக்கலாமோ அப்படி இருந்திருந்தால் இயற்கையை பூஜை செய்தாவது காப்பாற்றவேண்டிய +மதிக்கவேண்டிய சிந்தனை மனிதனுக்கு வந்திருக்குமோ?


பறவைகள் இந்த  உலகினை அ ழகுபடுத்துகின்றன ஆனால்சூழல் பற்றிய அக்கறையே இல்லாமல்  பறவைகளே இல்லாமல் போகிற உலகத்தை நாம் உருவாக்கிவருகிறோம் என்பது எவ்வளவு வருத்தமானது?

பறவைகளுக்கும் உணர்வு உண்டு.கோபதாபம்  காதல் அன்பு அச்சம்  உண்டு.

 ஏதாவது ஒருகாகம் நம்தலையை தட்டிவிட்டுப்போனாலே நாம் பதறிவிடுவோம் ஆனால் சாதுவான பறவை தன் இயல்பை மீறி தன் சகாக்களோடு  மனிதர்களைத் தாக்கத் தொடங்கினால்  எப்படி இருக்கும்?


அப்படி ஒரு திகிலான கதைதான் The Birds !



  சிலவருடம் முன்பு  வெளிவந்தது.


Alfred Hitchcok    இயக்கத்தில். இந்தப்படத்தின் ஒவ்வொரு நிமிடமும்   நம்மை  உறைய வைக்கும் இந்தப்படம் கோல்டன் க்ளோப் விருதுபெற்றது.
அதிகம் தொழில் நுட்ப வசதிகள் அதிகம்  இல்லாத காலத்தில் mattprinting உத்தியுடன்  தயாரிக்கப்பட்ட பறவைக்காட்சிகள் இப்போது பார்க்கும்போது ஆச்சரியம் அளிக்கின்றன படம் முழுக்க விதம்விதமான பறவைகளின் சத்தமே பின்னணி இசையாகப்பயன்படுத்தி இருந்தது.

துவக்கத்தில்  வீட்டுக்குள் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் வருவதும் தீவிபத்து நடக்கையில் நகரத்தின் மேலிருந்து இறங்கி பறவைகள் தாக்கும் காட்சியும் சிலிர்க்கவைப்பவை. பறவைகள்   பற்றிய இந்தக் கதையில் மெலிதான காதல் மனித உறவுகள் குறித்த காட்சிகளும் திகிலோடு  இணைந்துவருகின்றன.

கதாநாயகனும் கதாநாயகியும் இருக்கும் இடத்திற்கே பறவைகள் வந்து  தாக்குதல்களை செய்கின்றன ஜன்னல் கதவுகளின் கண்ணாடியைக்கொத்திகொத்தி  கதவு உடையும்நிலைக்குவருகிறது....இன்னும் சிலநொடிகளில் கதவின் கண்ணாடி  உடைந்து நூற்றுக்கணக்கான் பறவைகள்   வீட்டிற்குள் வரநேரிடலாம் அந்த சுழலில் என்ன நடந்தது ?ஒருமுறை அந்தப்படம்   கிடைத்தால் வாங்கிப்பாருங்கள்...(இணையத்திலும் இருக்கலாம்)



எதற்கு இந்தப்படம்பற்றி   இப்போது  என்றால் பறவைகளுக்கும்உணர்ச்சி உண்டு என்பதை அறிந்துகொள்ளத்தான்.

மரங்கள் அடர்ந்த காட்டில்  குறுக்கும்நெடுக்குமாய் ஒழுங்கற்று நீண்டிருக்கும்  கூரியமுட்களின் இடையே  உடலைக்கொண்டுநுழைத்து வெளியேறி இரைதேடிப்   பசியாறிவரும்  பறவைகள் நமக்கு வாழ்க்கையின் வடிவத்தையும் வாழ்தலின் அர்த்தத்தையும் சொல்லுகிறது அல்லவா?



சிட்டுக்குருவிகளின் சுதந்திரத்தில் மனதைப் பறிகொடுத்த   பாரதி ,’விட்டுவிடுதலையாகி நிற்கவேண்டும் இந்தச்சிட்டுக்குருவிகளைப்போல’ என்றானே!


தோல்வியில் துவளும்போது ஃபீனிக்ஸ்பறவையைபோல சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவேன் என்கிறான் மனிதன். உதாரணங்களுக்கெல்லாம் இயற்கை வேண்டி இருக்கிறது பறவைகள் மரங்கள் என  எடுத்துக்கொள்வோம் ஆனால் ஓசோன் மண்டலத்தில் துவாரத்தையும் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடையும் தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சத்தையும் வறட்சியின் உக்கிரத்தையும் கண்டுகொள்ளமாட்டோம்.  பூமி வெப்ப மயமாவதை தடுக்க மரங்கள் வளர்க்கவேண்டும் அதனை பாதுகாக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை என்றைக்கு வளர்த்துக்கொள்ளப்போகிறோம்?

நம்மைச்சுற்றிலும் பறவைகள் இருகின்றன அழகழகான நிறங்களோடு உருவங்களோடு அவை நம்மை வசீகரிக்கின்றன ! கவிதைகள் எழுதுவதற்கு கவிஞனுக்குப்பறவைகளே ஆதாரம் !எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்க அவன் பறவைகளை நோக்குகிறான். ஒரு பறவையின் பறத்தலை ரசிக்கத்தெரியாதவன் கவிஞனாக முடியாது.

ஆனால்  பறவைகளுக்கான  சுதந்திரத்தை நாம் எப்போதும்  மதிப்பதில்லை அவைகளை ஒரு பொருட்டாகக் கருதுவதுமில்லை.

விழாக்கால  இரவுகளில் நெருப்புகள் வெடித்துச்சிதறும் பேரதிர்வுகள் நமக்குக்கோலாகலம்!  ஆனால் பறவைகளுக்கு  திசைதெரியாமல் இருளினுள்   அவைபீதியுற்று கதறியபடி பறப்பதை நாம் பார்த்ததில்லை.


காகத்தின் கரைதல்விருந்தினர்வருவதற்கான அறிவிப்பு  என்கிறோம்.
நாராய் நாராய்  செங்கால் நாராய் பழம்படுபனையின் பழக்கூர்வாய் செங்கால் நாராய் என்றார்  ஒருபுலவர்.

பறவைகளைப்பார்த்தால் சிலருக்குபாட்டுவரும் .சிலருக்கு வயிற்றுப்பாட்டுக்கு ஆனதென்று தோன்றி  குறிவைத்து அடித்து வீழ்த்ததோன்றும்.

அன்பைக்கிளைகளாய் விரித்து மரம் சுமந்திருந்த பறவைகளை அதன் மொழிகளை கூவலை  மரங்களை வெட்டி சாய்ப்பதின் மூலம் பெரிதும் இழக்கிறோம். இரட்டிப்பு இழப்பு.

சாலைகள் இரயில்வேபாலங்கள் கட்டவும் தொலைபேசி குடிநீர்குழாய் அமைக்கவும் குடியிருப்பு்கள், தொழிற்சாலைகட்டவும்  மரங்களைவெட்டுகிறோம் .மரங்கள்போனால் பறவைகள் காணாமல்போகும். பாதிப்பறவை இனம் பூண்டோடு அழிந்துவிட்டது


தூக்கணாங்குருவி முதல் கட்டிட நிபுணர் !ஆகாயதோட்டி காக்கை !பல்லவி சரணம் பாடும் வானம்பாடி.!
கொக்கின் ஒற்றைக்கால்தவம்  எல்லாம்  இனி வரும் சந்ததியினருக்குப்பாடபுத்தகத்தில் மட்டும்  பார்க்க என்றாகிவிடுமா?

 ஆலாப்பறவை வேகமாய் பறக்குமாம் ‘ஏன் ஆலாய்ப்பறக்கறே?’ என்பார்களே இதனால்தான்! ஆல்பட்ரோஸ்  பறவை சிறகைவிரித்துவிட்டல்; ஏறத்தாழ ஐந்துவருடங்கள் பறக்குமாம் !புறாக்கள்  தூதுபோயிருக்கின்றன.

ஒற்றுமைக்கு காகம்! இனிமையாகப்பாடுபவர்களை குயில் என்கிறோம் !மழையை தோகை விரித்து அறிவிக்கும்மயில்! கழுகுப்பார்வை என்கிறோம்.
கொய்யாமரத்தில் எப்போது  பழுக்கும் எனத்தெரிந்த அணில்.  கல்யாணமுருங்கை   எப்போது பூபூக்கும் என அறியும் கிளிகள்.
தும்பிகளுக்கு மழைவருவது தெரியு!ம் களிமண்ணை பிரபஞ்சமாக்கி பச்சைப்புழுவைப்பறக்கவைக்கும் மந்திரம் குளவிக்குதெரியும்.
நமக்கு என்ன தெரியும்?


சிட்டுக்குருவிக்கு சின்ன கவிதையாவது எழுதி சமர்ப்பிக்கிறேன் இன்றைக்கு.

சிறகில் அடிபட்ட
சிட்டுக்குருவி ஒன்று
வீட்டு வாசலில் வீழவும்
சட்டென அதை எடுத்து
சேலைத்தலைப்பினைதூளியாக்கி
குருவியை படுக்கவைத்து
அருமையாய் வருடி கொடுத்து
மருந்திட்டுக்காத்துவந்தேன்
இரண்டுநாட்களுக்குள் குருவி
இல்லத்து மனிதர்களின்
உள்ளத்தில் ஒட்டிக்கொண்டது
சிறகுகள் சீரானதும் மனைச்
சிறைவைப்பது சரி இல்லையென
மனதைக்கல்லாக்கிக்கொண்டு
கையிலேந்தியபடி வான்நோக்கி
பறக்கவிடுகிறேன்
உற்சாகமாக உயரப்பறந்தகுருவி
திரும்பிவந்தாலும்
அறிந்துகொள்ளமுடியாத
ஊர்க்குருவியானது!


மேலும் படிக்க... "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?"

Monday, March 19, 2012

ஆண்டொன்று போனால்...!!

வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் கனவுகள் அல்லது பிரமைகள் என்கிறது ஜென் புத்தமதம். அப்படியானால் நமது பிறப்பு என்பதும் கனவா அல்லது பிரமையா? பிறந்து இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதால் கனவாய் இருக்க சாத்தியமில்லைஆயினும் கனவுகளில் நாம் பயணம் செய்வதை மறுக்கமுடியாது. எல்லாவற்றிர்க்குமே கனவு ஆதாரம் அது சில நேரங்களில் மெய்ப்படுகிறது.

பிரமை என்பது கொஞ்சம் ஒத்துக்கொள்ளகூடியதாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் பலகணங்களை பிரமிப்போடுதான்கழித்துக்கொண்டிருப்பதாகப்படுகிறோம்.
புனரபி ஜனனம், புனரபி மரணம்
மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு. இந்த பஜகோவிந்த வரிகள் மனித வாழ்வை மட்டும் சொல்லவில்லை இந்த வரிகள் மிக ஆழமான அர்த்தம்கொண்டது.

பார்டிக்கள் இயற்பியல்,
காஸ்மாலஜி என்ப்படும் பிரஞ்சத்தின் தோற்றம், போன்றவைகள் எல்லாமே இதற்குள் அடங்கும்.
விஞ்ஞானிஐன்ஸ்டினின் பிரபல சமன்பாடு ( E = MC2) அணுவை பிளந்து சக்தியாக மாற்றி அணுசக்தியயை மனிதன் உபயோகிக்க வழி வகுத்தது. அணுகருவுக்குள் இருக்கும் துகள்கள் சக்தியாகவும், சக்தி மீண்டும் துகள்களாகவும் மாறிக்கொண்டுஇருக்கின்றன. இதுவே சிவசக்தி. சிவம் சக்தியாகவும், சக்தி சிவமாகவும்
மாறிக்கொண்டே இருக்கிறது. சிவதாண்டவத்தின் பின்னனி இதுவே.
குவாண்டம் மெக்கனிக்ஸ் விஞ்ஞானி நியல்ஸ்போர் 'இந்த மாதிரி தனிப்பட்ட துகள்கள் என்பதெல்லாம் ஒருவித கற்பனைதான். அவைகளை நாம் அறிந்து கொள்வதெல்லாம் மறைமுகமாகத்தான்.’ என்கிறார்.
.
'நம் எதிரே காணும் பொருள் தனிப்பட்ட ஒன்றல்ல. பிரபஞ்சத்தின்,
ஒரு பெரிய உண்மையின், நாம் உணரும்+ காணும் அத்தனையும் சேர்ந்த ஒரு மகா உண்மையின் வெளிப்பாடு' என்பது அரவிந்தர் வரிகள்.

என்ன திடீரென கனவு பிரமை, பிறப்பு மரணம் என்று பேச ஆரம்பித்துவிட்டேன் என்று பார்க்கிறீர்களா?:) காரணம்
கடைசியில் தெரிந்துவிடும்!


ஒப்பற்ற கவிதை ஒரு கவிஞனின் படைப்புத்திறனால்மட்டும் பிறப்பதில்லை உலகம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே பிறக்கிறது என்று சொல்வார்கள்.

எம் எஸ் அவர்களின் குறை ஒன்றும் இல்லை என்கிற பாடலைக்கேட்கும்போது பாடல்வரிகளின் எளிமை பாடியவரின் அசாத்திய திறமை இதெல்லாம் நாம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே கிடைத்ததாக தோன்றுகிறது.குறை ஒன்றும் இல்லை என்ற நினைப்பே நி்றைதானே!






அதுபோல நான் செய்த அதிர்ஷ்டம் எனக்குக்கிடைத்த நல்லபெற்றோர்கள். இங்கிவரை யான்பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்று தினமும் நினைத்துக்கொள்வதுபோன்ற அருமையான அப்பா அம்மா.
குழந்தை கண்ணனை இடுப்பில்வைத்துக்கொண்டு சந்திரனைப்பார்த்து தாய் சொல்லும் பாவனையில் பெரியாழ்வார் பாடிய பாடல் ஒன்று உண்டு.
எல்லா பக்கமும் ஒளி சூழ அதன் ஜோதி எங்கும் பரந்துஎன்ன செய்தாலும் அதெல்லாம் என் மகன் கண்ணன் முக ஒளிக்கு நேராகுமோ என்பதான பொருள்கொண்ட பாடல் . அதாவது முழுநிலவைப்போலமுகம் என்போம் அல்லவா? என்ன பிசாத்துமுழுநிலா நீ என் மகன் கண்ணன் ஜோதி முகம் முன்னாடி நீ ஒண்ணுமில்ல‘ என்கிறாராம் பெரியாழ்வார் பொங்கும் தாய்மைப்பரிவில்.

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து
சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யினும்
என் மகன் முகம் நேரொவ்வாய்

அப்படித்தான் நான் பிறந்த சில வருஷங்களுக்கு வீட்டில் தலையில்வைத்துக்கொண்டு கொண்டாடினார்கள்.இத்தனைக்கும் ஒன்றும் ராயல் ஃபாமிலி இல்லை..கூட்டுக்குடும்பம் கொண்ட நடுத்தர வர்க்கம்தான்..மாணிக்கம் கட்டி வைரம் இடைக்கட்டி ஆனிப்பொன்னால் செய்த தொட்டிலை ஓலைக்குடிசையில் இருந்துகொண்டு அண்ணலுக்கு பெரியாழ்வார் மானசீகமாய் அளித்தமாதிரி எங்கள் இல்லத்திலும்மகிழ்ச்சியை வானுயர அளித்தனர்..அப்புறம் உடன்பிறப்புகள் வந்ததும் பாசமும் அன்பும் பகிர்ந்துபோனது! ஆனாலும் இன்றைக்கும் பிறந்தவீட்டுக்கு விருந்தாளிபோல அவ்வப்போது போனாலும் அந்தப்பாசமும் அன்பும் சற்றும் குறைவில்லை. குறை ஒன்றும் இல்லை
உறவும் நட்பும் என்று வளர்ந்த நாட்களில் கிடைத்ததில் குறை ஒன்றும் இல்லை
பள்ளி ஆசிரியரிடமிருந்து வாழ்க்கைப்பாடமும் கற்கமுடிந்தது
தமிழை நேசிக்க வைத்த ஆதார வேர் பள்ளிக்கூடத்தில்தான் ஆரம்பமானது.
உதடுபடாமல் பேசாதே
உச்சரிப்புக்கொலை செய்யாதே
எதுவானாலும் மொழி அழகு
அதை மாற்றுங்கால் வரும் பிசகு
என்று இசைக்கவிரமணன் எழுதியதுபோல தமிழின் அழகை ரசிக்க இளம்வயதிலேயே முடிந்தது.
தமிழுக்கும் மதுவென்று பேர் என்றாரே பாரதிதாசன் !மதுமயக்கம் இன்னமும் தீரவில்லை!! தமிழ் கற்றால் குறை ஒன்றும் இல்லை.
புகுந்தவீடு கணவர் குடும்பம் குழந்தைகள் இங்கும் குறை ஒன்றும் இல்லை. கவலைகள் இல்லாமலே வளர்ந்தாயா அப்படியே இருக்கிறாயா என்றால் அது முழுக்க உண்மை இல்லை வருத்தங்கள் வார்த்தைகளால் காயங்கள் சோகங்கள் அவமானங்கள் சோர்வுகள் இல்லாமல்  வாழ்க்கை இல்லை. ஆனால் என்னைக்கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச்சரணடைந்தேன் என்று பாரதி சொன்னதுபோலகவலைகளை மனதில்போட்டு உழன்றுகொள்வதில்லை.
எண்ணும் திறன் உள்ளவரை எண்ணுவோம், நமக்கு வசமாகி உள்ள கலைகளையும் காரியங்களையும் செய்வோம், நமக்கு முடிகிறவரையில் பிறருடன் நமது இன்பங்களையும் நாம் பிறருடைய துயரங்களையும் பகிர்ந்துகொள்வோம்’ மனதை மாத்திரம்புதிதாக வைத்துக்கொள்வோம் கர்மத்தொடர்பை ஆன்மா என்று எண்ணி விடக்கூடாது என்று அமரர் மகாகவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் சொல்வார்.
அதாவது நாம் செய்த செயல்களையும் அவற்றின்  விளைவுகளையும் தொகுத்துவைத்துக்கொண்டு அதுவே  நாம் என்று எண்ணிக்கொள்ளக்கூடாது.இப்படி வாழ்கிற வாழ்க்கைதான் வாழ்வாங்குவாழ்தல் என்கிறார் .
 அப்படி ஒரு வாழ்க்கை சித்தியானால் அது அமரவாழ்வு என்கிறார் பாரதி அதிமானிடவாழ்வென்றார் அரவிந்தர் அருள்வாழ்வென்றார் வள்ளலார்.

 விளங்கிக் கொள்ளமுடியாமல்  திணறுகிறோம் நாம்!
(இன்று (19.3.)புதிதாய்ப்பிறந்தேன் ஆகவே இப்படி ஒரு பதிவு எழுததோன்றியது)



--





மேலும் படிக்க... "ஆண்டொன்று போனால்...!!"

Wednesday, March 14, 2012

கனவில் எழுதும் கடிதங்கள்!








கடித விருந்தாளியை
எதிர்பார்த்து
கதவைத் திறந்தே
வைத்திருக்கும்
தபால்பெட்டியின்
வீட்டிற்கு
முன்னெல்லாம்
கார்டுசித்தப்பாக்களும்
கவர் பெரியப்பாக்களும்
வாழ்த்து அட்டை வசீகரிகளும்
வந்தவண்ணம் இருப்பார்கள்!

சிலமணி நேரங்களாவது
உடல் பொங்கப்பூரித்திருப்பார்
தபால்பெட்டிக்காரர்.

விலைவாசி அதிகமோ
விருப்பம்தான் இல்லையோ
விருந்தாளிகள் வருகை
அத்திப்பூ போலஆகிப்போனது.

பறந்து சென்ற புறா ஒன்று
‘என் நிலமைக்கு நீயும் வந்துவிட்டாயா?’
என்பதுபோல்
பெட்டி அருகே எட்டிப்பார்த்தபடி
பறந்துபோயிற்று.

கால ஆட்சி மாற்றத்தில்
செல்போன் செங்கோலாக
கம்ப்யூட்டர் க்ரீடமாகிவிட்டன!


சிம்மாசன மின்சாரம்
பம்மாத்து  செய்துவிட்டால்
கடிதப்பலகைமீது தான்
காலமே வந்து உட்காரப்போகிறது.
பார்க்கலாம் அதற்குள்
நானும் எழுதிவிடுகிறேன்
 சில கடிதங்களை ,
கனவிலாவது!

மேலும் படிக்க... "கனவில் எழுதும் கடிதங்கள்!"

Thursday, March 08, 2012

உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?







மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்கு!



மார்ச் 8 –ம் நாள் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாள் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.



இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.



ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதைக் குறிப்பிடத்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.. பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியின் போது பெண்கள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத் தன்மை வேண்டி போராடினார்கள்



ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள, உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க, அரசமாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது! அரசமாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் "கைது செய்வோம்" என்று மிரட்டிய அரசனின் மெய்காப்பளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கி கொன்றனர்.



இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்துபோனான். "கோரிக்கைகளைக் கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன்", என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்திருந்தவர்களைச் சமாதானப்படுத்தினான். இயலாது போகவும் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!



தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட.. ஆளும்வர்க்கம் அசைந்துகொடுக்கத் துவங்கியது.



இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்ட நாள் கோரிக்கையான வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.



பிரான்சில், புருஸ்ஸியனில் (Prussian King) இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்! அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.


இத்தனை அல்லல் பட்டு கிடைத்த இந்த நாளின் பெருமையை சில மகளிரே உணர்ந்திருக்கவில்லை முழுமையாக.

ஆமாம்! "மங்கையராய்ப்பிறப்பதற்கே மாதவம் செய்திடவேண்டுமம்மா" என்றார் கவிஞர் ஒருவர். அப்படிப்பட்ட உயர்நிலையை தக்கவைத்துக்கொண்டிருக்க தவறிக்கொண்டிருக்கிறோம். நமது இளைய தலைமுறைகளுக்குச் சரியான வழிகாட்டியாக முந்தைய தலைமுறைபெண்களில் சிலர் இருப்பதில்லை. அதற்கு உதாரணம் அழகிப்போட்டி.





இதில் பங்குபெற எனக்குத்தெரிந்த ஒரு மத்தியதரக்குடும்பத்துப்பெண்மணி தன் மகளை மேடைக்குப் போட்டித் தேர்வுக்கு அனுப்பி இருந்தார். பள்ளியில் நடந்த அழகுப்போட்டியில் அழகுராணியாக அவள் மூடிசூடிக்கொண்டதைப் பெருமை வழியக்கூறி இனிப்புகளை அனைவருக்கும் விநியோகித்தார். அழகுப்போட்டியில் கலந்துகொண்ட அந்த ஒன்பதுவயதுக்குழந்தை அழகான குட்டிப்பெண் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லைதான். ஆனால் படிப்பிலும் சுட்டியான அந்தக்குழந்தை எப்போதும் வகுப்பில் முதல் ராங்க். எம் ஐ டி யில் ஏரோநாடிக்ஸ், தொடர்ந்து மாஸ்டர் டிகிரி என முடித்துவிட்டு விண்வெளி ஆராய்ச்சிக்குச் செல்லவேண்டும் என்பது அவளின் லட்சியம். இப்படி படிப்பை நோக்கிய லட்சியப்பாதையில் செல்லும் குழந்தைகளை அழகிப்போட்டி திசை திருப்பிவிடுகிறது.




கொலை, வன்முறை, குண்டுவெடிப்பு, ஆள்கடத்தல், குழந்தைகளின் பாலியல் வன்முறை கொடுமைகள், உள்நாட்டு அரசியல் லஞ்சங்கள், அதில் சிக்கிக்கொண்ட பெரியதலைகள், தீவிரவாத தாக்குதல்கள், அந்நிய நாடுகளுடன் கருத்து வேற்றுமைகள் என்கின்ற பலவிதமான சோர்வுகளுக்கு நடுவே இந்தியாவுக்கு உலக அழகியாக இந்தியப்பெண் ஒருவர் முடிசூடிக்கொள்வது சற்று ஆசுவாசத்தைத் தருகின்றது.



விளையாட்டுத்துறை, வணிகத்துறை என்று இந்தியா பின்தங்கி இருந்தாலும் அழகுத்துறையில் இந்தியா முதலிடம் பெற்றது பெருமையாகிவிட்டது!



வணிக நிறுவங்களும் தங்களது பிஸினஸ் முன்னேற்றத்திற்கு அசுர விளம்பரம் செய்து பெண் என்னும் பிரமாதமான சரக்கினை அது அள்ள அள்ளக்குறையாத தங்கச்சுரங்கம் என்ற எண்ணத்தில் அழகிப்போட்டிகளை நடத்த ஆரம்பித்தனர்.



வணிக நிறுவனங்களின் வியாபாரத்திற்குத் தங்களை விட்டில் பூச்சியாக பலி கொடுப்பதைப் போட்டியில் பங்கு கொள்ளும் அழகிகள் அறிய நியாயமில்லை.



"பெண் என்றால் அழகு; ஆண் என்றால் வீரம்" என்னும் நீண்டகாலப்பாகுபாடு எத்தனையோ காலமாகியும் காப்பாற்றப்பட்டு வருவதால், இதன் உச்சக்கட்ட மோசடியாக நடப்பது அழகிப்போட்டி என்றாகிறது.



தங்களைப் பிறருக்காக அழகுப்படுத்திக்கொள்வதில் பலப்பல பெண்கள் தங்கள் நேரத்தை, சிந்தனையைச் செலவழிக்க நேரிடுகிறது. தங்கள் ஆற்றல், பண்பு, சிந்தனை என்று எதையும் வளர்த்துக்கொள்ளாமல் அழகுப்பதுமைகளாகவும் அலங்காரப்பொருட்களுமாகவே இருந்துவிடுகிறார்கள். போட்டிகளில் பங்கு பெறும் இளம் பெண்கள் ஒரு கனவுலகில் வாழ்கிறார்கள்!



இன்றைய நம் தமிழ்ச்சமுதாயத்தில் அழகுப்போட்டிக்கான சிந்தனை அவளை விபரீதமான இடத்தில் கொண்டு நிறுத்துகிறது.



மனதைச் சலனப்படுத்தி மாய உலகில் அவளைச் சஞ்சரிக்கவைக்கிற அழகுப்போட்டிகள் நமக்குத்தேவைதானா?

இதனைப் பெற்றோர் உணரவேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

விளையும் பயிருக்கு வேலியாய் பெற்றோர் இருக்க வேண்டும். அதுவும் பெண் எனும் இளம்பயிரைத் தாய் எனும் வேலி பேணிக்காக்க வேண்டும்.



"குடும்பம் என்பது ஜனநாயக பண்புகளை வளர்க்கும் தொட்டிலாக இல்லை" என்று ஐ நா வின் அறிக்கையே கூறுகிறது.



போன தலைமுறைப் பெண்களைவிடவும் இந்தத் தலைமுறைப் பெண்களின் சிந்தனை வேகம் கூடி இருக்கிறது.



ஆகவே இந்தியா போன்ற ஏழைநாட்டிற்கு அவசியமில்லாத அழகுப்போட்டியில் தன் மகளை கலந்துகொள்ள வைப்பதைவிட, ஆற்றலை வளர்த்துக்கொள்ள சிந்தனையை சீராக செலுத்திக்கொள்ள பயிற்சி அளிக்க வேண்டும்.



மனிதநேயம், தன்னலமற்ற பாசம் பகிர்ந்துகொள்வது, பரஸ்பரம் விட்டுக்கொடுப்பது, பண்பு கலாசாரம் ஆகியவற்றை மதிப்பது போன்றவைகளை சிறுவயதிலேயே குழந்தைகளூக்குப் பாலோடுபுகட்டும்போது சாதகமான சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மாற்றங்களை இளைய தலைமுறையினரால் கொண்டுவர இயலும்.



இத்தகைய உன்னத நிலைக்கு நம் குழந்தைகளைக் கொண்டு செல்ல நாம் பாடுபடுவோம். இவற்றுக்கு எதிரான அழகுப்போட்டி போன்ற சக்திகளைப் பலவீனப்படுத்துவோம்!








அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!



பாரதியின் வரிகளை பாரெங்கும் முழக்குவோம்!


(நன்றி இன்று என் இந்தக்கட்டுரையை வெளியிட்ட இந்நேரம்.காமிற்கு)











--







மேலும் படிக்க... "உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?"

Sunday, March 04, 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!(தொ.ப)

பள்ளிக்கூடம் என்கிற வார்த்தையே எத்தனை அழகானது!
 எழிலான  ஒரு தமிழ்ச் சொல் பள்ளி என்று சொல்லலாம். கல்விக்கூடம் என்று சொல்லாமல் பள்ளிக்கூடம் என்று ஏன் சொல்கிறோம்? பள்ளி என்றால் நேரடிப்பொருள் இடம் என்பதாகும். பள்ளத்தில் இருப்பது பள்ளி.முன்காலத்தில் குருகுலவாசம் என்று மரத்தடியில் கல்விகற்க மாணவர்கள் கூடுவார்கள். ஆசிரியர்  மேட்டில் அமர்ந்திருக்க கீழே பள்ளமான பகுதியில் மாணவர்கள் அமர்ந்திருப்பார்கள்.


பள்ளிக் கூடம் = ஆறு போல் பல படிப்புகள் வந்து ஒன்றாகத் தேங்கும் பள்ளம் , பள்ளி! .பாடசாலை என்கிறார்கள் இலங்கையில். அழகான பொருள் கொண்ட சொல்தான் இதுவும்.



திருப்பள்ளி எழுச்சி இறைவனுக்கு சொல்கிறோம். இறைவன் இருக்குமிடம்  சிறந்தது அல்லவா அதனால் திருப்பள்ளி.   ’அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே* என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில் அதென்ன பள்ளிக்கட்டில்?

!

* பள்ளி = பள்ளிவாசல் என்பது சமய வழிபாட்டு இடம்!

* பள்ளி = படுக்கை என்றும் பொருள்.சங்ககாலப்பாடல்களில் இதற்கு உதாரணம் உள்ளது.  பள்ளியறை என்பது படுக்கை அறை!

* பள்ளி = மடைப்பள்ளி என்பது சமையல் அறை! இன்னமும் வைணவர் வீடுகளில் சமையல் அறையை திருமடப்பள்ளி என்பார்கள் அது திரிந்துஇன்று  திருமாப்படி ஆகிவிட்டது !


வேளாண்மை நிலங்கள், வரப்பில் இருந்து பள்ளமாய்த் தான் இருக்கும்! அங்கே உழுபவன் = பள்ளன்/ பள்ளத்தி! அங்கே பாடும் பாட்டு = பள்ளுப் பாட்டு!மனதின் ஆழத்திலிருந்து வரும் பாட்டு பள்ளுப்பாட்டு! (முக்கூடற் பள்ளு) அதான் பாரதி  ஆடுவோமே பாட்டு பாடுவோமே என்று சொல்லவில்லை.ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்றான் போலும்!

பள்ளிவாசல் என்பது இறைவனின் கருணை வந்து தேங்கும் பள்ளம்! பிரார்த்தனைத் தலம்!

 பள்ளி அறை = உறங்கும் அறை, மற்ற பகுதிகளை விடச் சற்று தாழ்வாத் தான் இருக்கும்! மேட்டில் உறங்காமல், சற்றே பள்ளமான இடத்திலேயே உறங்குவார்கள்! மேட்டில் உருண்டு விழுந்தால் அடி பலம்:) பள்ளமே கள்ளத்துக்குச் சரி என்று பதிவர் கேஆர் எஸ் தன் வலைப்பூவில்  கூறியதை அப்படியே இங்கே காப்பியடிக்கிறேன்:)


 மடைப் பள்ளி  என்னும் சமைக்கும் இடமும் அப்படியே! பல பேருக்குச் சமைக்கும் இடம், சற்றே பள்ளமாக இருக்கும்! பெரும் பாத்திரங்களை இறக்கிச் சமைப்பார்கள்!


அரசனின் அரியணை உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், அது ஆடாமல் என்றுமே நிலையா நிக்கணும்! அதன் பொருட்டு, அதன் கால்கள் அங்கேயே சற்றே பள்ளத்தில் ஆழ்ந்திருக்கும்!

அப்படித் தான் இறக்கிக் கட்டுவார்கள்! அப்படியான அரியணைக் கட்டில் = பள்ளிக் கட்டில்!

இறைவன் கொலுவிருக்கும் இடமான பள்ளிக் கட்டில் = அரியணை! அந்த அரியணையைத்தான் ஆண்டாள் பள்ளிக்கட்டில் என்கிறாள் தன் பாசுரத்தில்.

 பள்ளிக்கட்டு (டில்) சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை-ன்னு பாட்டும் நினைவுக்கு வரணுமே!

எதற்கு இப்படி பள்ளிக்கு  இன்று இவ்வளவு முக்கியத்துவம் என்றால் பதிவர் கணேஷ் அவர்கள்  என்னை தொடர்பதிவாக  எழுத அழைத்துள்ளார். மீண்டும் பள்ளிக்கூடம் போக சொல்கிறார்! ரொம்ப பின்னாடி நான் போகணும் இதுக்கு! தம்பி உடையாள் படைக்க அஞ்சலாமா?:) அதனால்  நினைவுக்கு வருவதை இங்கே படைக்கிறேன்!!கொஞ்சம் பெரிய படையல் பொறுமையா படிங்க  ..உங்களை மாட்டிவிட்ட புண்ணியம் கணேஷுக்கே!!!

            *************************************************

சர்ச்பார்க் கான்வெண்டிற்கு வாயில் சாக்லேட்டை சுவைத்தபடியே ஆங்கிலத்தில் அம்மாவிடம் ‘பை மம்மி’ என்றும், ‘இட்ஸ் கெட்டிங் லேட்,, கோ ஃபாஸ்ட்’ என்று கார் ட்ரைவரிடம்  சொல்லியபடிகறுப்பு நிற  காரில் போனதாகவும் ரீல் விட ஆசைதான் ஆனால் பொய் சொன்னா போஜனம் கிடைக்காதாமே..  சாப்பிடாம எப்படி உயிர்வாழறது இன்னும் எழுதி எல்லாரையும் எப்படிப்படுத்தறதாம் அதனால நிஜத்தையே சொல்லிடறேன்:)
    
அப்போல்லாம் இந்த எலிகேஜி பூனை கேஜில்லாம் கிடையாது நேரா ஒண்ணாம்கிளாஸ்தான் நான் பள்ளிக்குப்போக  மூணுவயசிலிருந்து ஒற்றைக்காலில் நின்னதால் அம்மா என் அப்பாக்குத்தெரியாம 2வயசு ஜாஸ்திபோட்டு ஒண்ணாங்கிளாசில் சேர்த்துட்டாங்க ஆள்வேற அப்படித்தான் பம்ளிமாஸ் மாதிரி இருப்பேனா யாருக்கும்  சந்தேகமே வரலையாம்.ஆனா இந்த வயசுக்கூடுதலாய் போட்டதுக்கு அம்மா இன்னிவரைக்கும் அப்பாகிட்ட அர்ச்சனைவாங்கிட்டு இருக்காங்க:)( என்னவோ நான் பெரிய கலெக்டர் வேலை பாக்கறமாதிரி  கரண்டி உத்தியோகம்தான் கல்யாணம் ஆன நாள் முதலாய்!!!)

வீட்ல அப்பாவின் பெற்றோர்கள்  கல்யாணமாகாத தங்கைகள் அதாவது என் அத்தைகள் என்று கூட்டுக்குடும்பம் குடும்பத்தின் முதல் பேத்தி நான் தான் ஆகவே அளவுக்கு மீறீய செல்லம் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். தினமும் பள்ளிக்கூடம் போய்விட்டுவரும்போது சிலேட்டை வழியில் தொலைத்துவிடுவேன் கேட்டால் காற்றில் பறந்துவிட்டது என்பேனாம்!  இரண்டாம் வகுப்புவரை இரண்டு டஜன் சிலேட்டுகளை தொலைத்துவிட்டேனாம்!! சிலேட்டையாவது தொலைத்தால் சரி ஒருநாள்  இரண்டாம் வகுப்பு பரிட்சை எழுதிவிட்டுவருகிறபோதே நானே தொலைந்துவிட்டேனாம். அன்று.வீட்டில் ஒரே கலவரமாகிவிட்டது  ஏகப்பட்ட தெய்வங்களுக்கு மஞ்சள்துணிமுடிப்புகள் பிரார்த்தனைகள் அழுகை கண்ணீர் கதறல்.

கடைசியில் என்னை சாத்தாரவீதி முனையில் ஒரு மனிதன்  கையில் கண்டுபிடித்தார்களாம் அவன் சொன்னது,”இந்தப்பொண்ணு காலாற இப்படியே நட்ந்துவந்திச்சி.... கைல பள்ளிக்கூட பை ஒண்ணூமில்ல ஆனா பள்ளிக்கூடத்திலிருந்துவரேன்னு சொல்லிச்சி...எங்கேவீடுன்னா சொல்லத்தெரியல,’தாகமாயிருக்கு கூல்ட்ரிங்  வாங்கிகொடுன்னிச்சி அப்றோம் கடலைமிட்டாய் லேகா உருண்டை கொடுக்காப்புளின்னு செலவு ஏழுரூபாய்க்குமேல(இன்னிக்கு 700ரூ) வச்சிடிச்சி...பணத்தைகொடுத்திட்டு புள்ளையைக்கூட்டிப்போங்க’ என்றானாம் . அவன்  கடத்திப்போக வந்தவனோ அல்லது வழிதெரியாமல் போனவளை காப்பாற்ற வந்தவனோ பதட்டத்தில் அவன் கேட்ட  பணத்தைகொடுத்துவிட்டு மீட்டுவந்தாராம்.

அதற்குப்பிறகு நாலாம்வகுப்புவரை அத்தைகளில் ஒருவர் அரைகிலோமீட்டர் அருகிலிருந்த பள்ளிவரைகொண்டுவிடுவது திரும்ப அழைத்துவருவது என்று பொறுப்பேற்றனர்.
சின்ன அத்தை பாதிதூரம் மூச்சிறைக்க தூக்கிக்கொண்டே வந்துவிடுவார்! அவ்வளவு பிரியமும் பாசமும்!

பள்ளிக்கூட ஆண்டுவிழாவிற்காக   எனக்கு நடனம் கற்றுக்கொடுத்தார்கள். அப்போ பிடித்தது நடன ஆசை.யாராவது வீட்டிற்குவந்தால் அவர்கள்  ஆ என்பதற்குமுன்பாக  ஆட  ஆரம்பித்துவிடுவேன். நிறுத்தவே மாட்டேன். பாதிபேர் இதற்குபயந்துகொண்டே அதிகம் வீட்டிற்குவராமல்போய்விட்டார்கள்.:)

அப்பா எழுத்தாளராயிருந்ததால்(இருப்பதால்) வீட்டில் மாடி ரூமில்வெள்ளைதாள்கள் நிறைய இருக்கும். ஒருநாள் அதில் ஒன்றை எடுத்து ஒரு ஜோக் எழுதும்போது அம்மா வந்துவிட்டாள்” மொட்டை மாடில் உக்காந்து வடாத்தைப்பார்த்துண்டு பாடம்படின்னா  என்ன எழுதறே பேப்பர்ல?” என்றாள்/

ஜோக்கும்மா

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... படிச்சிக்கிழி போதும். ஏற்கனவே ஸ்கூல்போனா ட்ராமா டான்ஸுன்னு பொழுதைதள்ளிட்டுவரே இதுல ஜோக்கு கதைன்னு ஆரம்பிச்சிடாதே உருப்படியா படிக்கணும் என்ன?


ஆனால் அப்பா பார்த்து புகழ்ந்துதள்ளிவிட்டு அதை விகடனுக்கு எப்படி அனுப்புவதென சொல்லி அதை அனுப்பி ஜோக்கும் வெளிவந்து விட்டது.ஆஹா அன்று பள்ளிக்கு எல்லாருக்கும் பாரிஸ் சாக்லேட் தந்தேன். என்னவோ  ஞானபீட பரிசு  வாங்கினகினமாதிரி பள்ளியே என்னை அன்று கொண்டாடியது.

கூடப்படிச்சபொண்ணு(பேர்மீனா)கணக்கு நோட்டை வாங்கி காப்பி அடிச்சி ஹோம் ஒர்க் பண்ணிட்டுத் தர்ரதா வீட்டுக்குக் கொண்டுவந்தேன்.வரவழியிலயே வழக்கம்போலஅதை எங்கயோ தொலச்சிட்டேன் ..அவகிட்ட நடந்ததை சொன்னேன். 'தொலைசிட்டியா நீ ?இருஇரு எங்க பெரியப்பாகிட்ட உன்னைமாட்டிக்கொடுக்கறேன்'னு பயமுறுத்தினா மீனா.



அவள்பெரியப்பா போலீஸ்காரர்.மல்லிகைப்பூ அக்ரஹாரத்தை ஒட்டிய போலீஸ் குவார்ட்டஸ் வாசலில் , காக்கி உடை அவரைவிட விறைப்பாய் தெரிய கொடுவாள்மீசையோடு பாத்தாலெ நடுங்கறமாதிரி இருப்பார். ஐயோ போலீஸ் பெரியப்பா என்னை விலங்குமாட்டி ஜெயில்ல போட்டுடுவாரா?



வீட்டிற்கும் தொலைத்த கதை சொல்லவில்லை.'உனக்கு ஒண்ணூம் இழுங்கா வச்சிக்கத் துப்பு இல்லை' என் அர்ச்சனை விழுமெனும் பயம்!



அம்மாமண்டபம்போகும்வழியில் ஒருசின்ன பிள்ளையார்கோயில்வரும்..


அங்கேபோனேன்.."பிள்ளையாரப்பா!மீனாவோட கணக்குநோட்டு

தொலைஞ்சிபோச்சு ..அதுக்கு அவ போலீஸ்பெரியப்பாகிட்ட சொல்லி என்னை ஜெயில்லபோடபோறா போல இருக்கே?.அந்த பெரியப்பா உயிரோட இருந்தா தானே என்னை ஜெயில்ல போடுவாரு அவரைஉயிர் போகச் செய்துடு..அவரை சாகடிச்சிடு' னு கண்ண மூடி வேண்டிட்டு நிமிர்ந்தா......... எதிரே மீனா ! பக்கத்துல போலீஸ்காரபெரியப்பா!

அய்யோ!
தலைதெறிக்கஓட இருந்தவளை பெரியப்பா லபக் ன்னு பிடிச்சார் ."எங்கஓடறே?"


"வ வந்து..." (இப்போதும் அன்னிக்கு என் கண்முழி நெட்டுப்போனதையும் கைகால் நடுங்கியதையும் மறக்கமுடியவில்லை)



"கணக்கு நோட்டைதொலைச்சிடியாமே நீ ?சொல்லிச்சு எங்கவீட்டு பாப்பா..."



""ஆஅ ஆமாஅ. தெ தெ தெரியாஆஆம...".(பிள்ளையாரேஇப்பொகூட லேட் இல்ல ..இங்க இவருதலைக்கு

மேல தொங்கிட்டு இருக்கறபெரிய வெங்கலமணீயை டமால்னு தள்ளிவிட்டு அவர் மண்டைய உடச்சிடு.. )



கண்ணமூடினவளின் காதுல தேனா ஒருகுரல்!



'கவனமா இருக்கணும்ம்மா.இனிமே தொலைக்காதே என்ன? போனாப்போவுது நீயும் சின்னபுள்ளதானே?மீனாகூட பழைபடி பேசுபழகு..அவளும் பேசுவா"



எனக்குபோன உயிர் திரும்பி வந்தது!




ஐந்தாவது வகுப்பிலிருந்து எங்கள் கிழக்குரங்காபள்ளிக்கூடத்தைவிட்டு ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலில் 6த்ஸ்டாண்டர்ட் சேர்ந்தபோது அருகில் இருந்த பாய்ஸ் ஹைஸ்கூலைக்கடந்துதான் செல்லவேண்டும். அந்தப்பக்கமே பாக்காமல் நேராபோகணம் தெரிஞ்சுதா என்று வீட்டில் அதட்டி அனுப்பிவைப்பார்கள். கொஞ்சமாய் ஓரக்கண்ணால் பாய்ஸ் கேர்ல்ஸை பாக்கறாங்களான்னு பார்த்துக்கொண்டே போயிடுவோம் நாங்க நாலைஞ்சிபேர்!
 
குடுகுடுராமசந்திர ஐயர் என்று ஒரு வாத்தியார் இருந்தார் அவர் குடுகுடுவென வேகமாக நடப்பார் என்பதால் பாய்ஸ் ஹைஸ்கூலில் அந்தப்பட்டபெயர் அவருக்கு .அவர் இரண்டுபள்ளிகளுக்கும் காம்ப்வுன்ட் குறுக்கே இருக்கும் சின்ன தடுப்புகதவுவழியே வந்து பாடம் எடுப்பார். என்னவோ அவரைப்பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துவிடும் ஒழுங்காய் பாடம் கவனிக்கும் மற்ற மாணவிகளையும் சிரிக்கவைத்துவிடுவேன்.

ஏழு எட்டாம் வகுப்புகளில்
பள்ளியில் NCCயில் சேர்ந்துவிட்டேன்  ஞாயிறுகளில் சிற்றஞ்சிறுகாலை காக்கி உடுப்போடு பள்ளிக்குப்போய்விடுவேன்  பின்ன ரங்கபவன்லேந்து சூடா இட்லி வடை சாம்பார் கிடைக்குமே!

 அம்மா,’என்சிசில சேர்ந்தா நாளைக்குகல்யாணம் ஆகுமா இவளுக்கு?  எதுக்கு ஆண்பிள்ளையாட்டம் பாண்ட் சர்ட் போட்டுண்டு போறா வேண்டாம்னு சொல்லுங்கோ” என அப்பாவிடம் சொல்லிச்சொல்லி  இரண்டேவருஷத்தில் அதிலிருந்து நான்விலகும்படி ஆகிவிட்டது அதற்குள் ஜே1 சர்டிஃபிகேட் வாங்கிவிட்டேன்! எல்லையில் நின்று ராணுவச்சேவை செய்ய நினைத்தவளை வீட்டில் அரிசிசேவை செய்ய வைத்த  பாவம்(புண்ணீயம்?:) என் தாயையே சேரும்!!

எழுத்தாளர் ஜெயகாந்தன்  சிறுமியாய்  இருக்கறப்போ வீடுவந்தார் அவரையும் விடவில்லை"   மாமா தெற்குவாசல்போய் கூல்ட்ரிங்க் வாங்கித்தாங்க" என்றேன் . கருப்பாயிருந்தாலும் ஹாண்ட்சம்மாய் இருப்பார். எப்போ பார்த்தாலும் சிகரெட் கையில் இருக்கும். ‘ஏன்மாமா சிகரெட் பிடிக்கறீங்க?”
‘பிடிச்சதை பிடிக்கறேன்மா’ என்பார் சிரித்தபடி எனக்கு ஒன்றும் புரியாது.
‘ஏம்மா உனக்கு கூந்தல் சுருட்டையா அழகா இருக்கே தவிர  நீளம் போதலையே  அதுக்கு ஒரு தைலம் வாங்கித்தரேன்” என்று தெற்குவாசல் கடையில் ஒரு கூந்தல் வளர் தைலம் வாங்கிக்கொடுத்தார்.
அடுத்த ஏழெட்டுமாதத்தில் திருச்சி தேவர் ஹாலில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தவர் மறுபடி ஸ்ரீரங்கம் வீடுவந்தார் அப்போ கேட்டார்’ என்னம்மா  வளர்ந்திச்சா?’ நானும், “ ம்ம் வளந்திச்சி மாமா  அந்த கூந்தல் தைலக்கம்பெனி வியாபாரம் நாந்தான்  நிறைய வாங்கறேன் ஆனா என்  தலைமுடி அப்படியே இருக்கு” என்றேன் சிரித்துவிட்டு .

அப்பாவிடம்,’இதுமகாவால்’என்றார்.

அப்பாவோடு பல எழுத்தாளர்கூட்டங்களுக்குப்போயிருக்கிறேன் கவனமெல்லாம்  கேசரி வெண்பொங்கல் பஜ்ஜி வாசனையில்தான் இருக்கும் மேடை சொற்பொழிவை கவனிக்காமல் விட்டதற்கு இப்போது வருந்துகிறேன்! குயிலன் என்றொரு மகாகவிஞர் வருவார் வீட்டுக்கு அவரிடம்  ‘ஏன்மாமா இவ்ளோ கருப்பா இருக்கீங்க” என்று கேட்டுவிட்டேன் அவரும் .”அதான்மா நான் குயிலன்” என்றார். அவர் போனதும் அப்பா அம்மாவிடம் எனக்கு கிடைத்தது லட்சார்ச்சனை! பின்னாளில் அவர் கவிதைகளை  வாசித்தபோது கண்பனித்தது அவரிடம் பழைய நிகழ்வை சொல்லி மன்னிப்பு கேட்டேன்  “ என்னம்மா நீ? குழந்தை மனசாய் இருப்பதுதான் இயல்பு அதுக்கு எதையும் மறைக்கத்தெரியாது  வயசானாலும் நீ குழந்தைமையை இழக்காதே’ என்றார் பெருந்தன்மையாக.

ப்ளஸ்டூ வரை பள்ளியில் படிப்பைவிட மற்ற கலை நிகழ்ச்சிகளில் நான் பிரசித்தம். மதிய இடைவேளையில் சாப்பிட்டதும் சகமாணவிகள் என்னிடம் ஏதும் கதை கேட்பார்கள் இட்டுக்கட்டி அளந்துவிடுவேன் அதை ரசித்து மகிழ்வார்கள்.அப்பாவின் தொடர்கதை அப்போது  ராணி யில்வந்துகொண்டிருந்தது.சில ஆசிரியைகள் தொடரின் அடுத்தபாகம் என்ன விறுவிறுப்பா இருக்கு என்று கேட்பார்கள்.’தெரியாது டீச்சர்’ என்றாலும் உள்ளூறப் பெருமை தாங்காது.

துணி நீயப்பா என்று  பழம் நீயப்பா பாடல்பாணியில் பாட்டு எழுதி  மாம்பழம் முருகன் வினாயகர் சம்பவத்தை  அப்படியே நவீனமாய் மாற்றி  பள்ளி பிரிவு உபசார நாளுக்கு ஸ்கிரிப்ட் தயாரித்தேன்.  அதை பிறகு திருச்சிவிவித்பாரதியில் விரும்பிக்கேட்டு ஒலிபரப்புமளவுக்கு  பிரபலமானது.

ஆக  எனக்கு இப்போ ஏதாவதுகொஞ்சம் சுமாரா எழுதவருகிறதென்றால் அதற்கு வித்திட்டது என் பள்ளிக்கூட நாட்கள்தான். பசுமை நிறைந்த நினைவுகள் மட்டும் மிச்சமிருக்கஅன்று என்னை  ஆதரித்த ஆசிரியர்களும் தோழிகளும்  பழகிய அனைவரும்  இன்று எங்கங்கோ சிதறி இருக்கிறார்கள்.....  என்றாவது மீண்டும் கண்டால் அவர்களுக்கு சொல்ல என்றே நல்லகதை ஒன்றையும் வைத்திருக்கிறேன்!

இது தொடர்பதிவு  ஆகவே நான் இதைத்தொடர நாலுபேரை அழைக்கிறேன் அவர்களும் பள்ளி நினைவுகளை அசைபோடும்படி அன்போட கேட்டுக்கறேன்.

1மாதவன்

2ஷக்திப்ரபா

3மகேந்திரன்

4புதுமாப்பிள்ளை தக்குடு!



மேலும் படிக்க... "மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!(தொ.ப)"

Thursday, March 01, 2012

எண்பதைக் கடந்த எளியவர்!

நகைச்சுவை உணர்வு கொண்டிருப்பவர்களை சற்று புத்திசாலிகள் என்பார்கள். நகைச்சுவையாகவே எழுதுபவர்கள்  கண்டிப்பாக அதிபுத்திசாலிகள் என்றால் அது மிகை இல்லை.
நாலுபேரை சிரிக்க வைப்பது சாமான்ய செயல் இல்லை. அழ அழ பெரிய கவிதை எழுதுவது எளிது சிரிக்க சிரிக்க  சின்ன கட்டுரைகூட எழுதுவது கடினம். நன்றாக வாய்விட்டுச்சிரித்தால் உடல் எடை கணிசமாய் குறையுமாம்! இதை அமெரிக்க மருத்துவர்கள் சொல்கிறார்கள். மகிழ்ச்சியாக பேசிக்கொண்டே சாப்பிட்டால் சாப்பாட்டில் சக்கரையின் அளவுகூட அதிகமாய் கூடாதாம்! சிரிப்பே சிறந்த மருந்து என்று சும்மாவா சொன்னார்கள்?!

யாமறிந்த  நகைச்சுவைகளிலே தமிழரின் நகைச்சுவைபோல் எங்கும் காணேன் என்று  தைரியமாக சொல்லலாம்!

நகைச்சுவையில் நம் தமிழ்மக்களை  மிஞ்சமுடியாதுதான்.. பழைய எழுத்தாளர் நாடோடியிலிருந்து பலர் நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்கள். ஏன் தி ஜா  கூட தன் சிறுகதைகளில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை வர்ணிக்கும்போதே சிரிப்பு வந்துவிடும். ராஜேந்திரகுமார் ஙே என்று முழிக்க வைத்தே சிரிக்கவைப்பார். பல பிரபல எழுத்தாளர்கள் நகைச்சுவையை முயன்றிருக்கிறார்கள்.
சுஜாதா மட்டும் என்ன அவரது பல சிறுகதைகளை ஊன்றிப்படித்தால் நைசாக சிரிக்கும்படி சில வாக்கியங்கள் இருக்கும். அதை அவரிடமே நாங்கள்  குடும்ப நண்பர்கள் என்பதால் உரிமையுடன் சந்திக்கும் போது கூறி அவரிடம் வெட்கப்புன்னகை வரவழைத்துவிடுவோம்! அதிலும் என் உடன்பிறப்புகள் இருக்கிறார்களே அவர்கள் மூவரும் அவரிடம்,”அதென்ன சார் ஸ்ரீரங்கத்தில் அந்த லேடீஸ் சைக்கிளில் போகும் அந்த '.......' மாமா யார் ஸார், அதற்கு அந்தரங்கக்காரணம் இருக்கிறது என்று வேற எழுதி இருக்கீங்க?’ என்று கேட்டு தர்ம சங்கடத்தில் ஆழ்த்த அவரென்னிடம்”என்னம்மா  உன் தம்பிகள் இப்படி வாலாய் இருக்கிறாங்க?” என்று சிரித்தபடி கேட்பார்.

(நான் கேக்கமுடியாது ஆதான் அவங்கள அனுப்பினேன் என்றால் நீ பெரியவாலா இருக்கியேன்னு சொல்லிடுவார்!:0

சோவின் சடையரில் மெலிதான நகைச்சுவையை பெரிதும் ரசிக்க முடியும். பாக்கியம் ராமஸ்வாமியின் சீதாப்பாட்டி அப்புசாமியை  தேவனின் துப்பறியும் சாம்புவை  யாரால் மறக்கமுடியும்?க்ரேசிமோகன் ஜிகே  என்று பலர் நாடக உலகிலும் திரை உலகிலும் !

சித்ராலயா கோபுவின்  திரை வசனங்களைப்பற்றி  சொன்னால் சூரியனுக்கு ஒளிவிளம்பரம் கொடுக்கிறமாதிரி இருக்கும்!
ஜேஎஸ் ராகவன் என்னும் நகைச்சுவை எழுத்தாளர் வாழைப்பழத்தில் ஊசியாய் நகைச்சுவையை எழுத்திதள்ளுவார் அனாயாசமாக!

இணைய உலகில் காமெடி மன்னர்களாய்   அம்மாஞ்சி, திரு.அப்பாதுரை,தக்குடுபோல பலர் இருக்கிறார்கள்.

பெயரில் கடுகு அகஸ்தியன் என்றெல்லாம் வைத்துக்கொண்டு
எழுத்தால் உயர்ந்த மனிதரானவர் இவர். சமீபத்தில்  எண்பதுவயதைக்கடந்துள்ள திரு பிஎஸ் ரங்கநாதன் அவர்களின் நகைச்சுவை கதைகளைப்படித்திருக்கிறீர்களா? ஒருமுறை ரயிலில் நான் அவருடைய   சிறுகதையை தீபாவளிமலரில் படித்தபடி  சிரித்துக்கொண்டே  இருக்கவும் அருகில் அமர்ந்திருந்த பலர் என்னை  லூசுப்பெண்ணோ என பார்த்தது நிஜம்!

இந்த நகைச்சுவை ஜாம்பவான்களை எல்லாம் ஒரே மேடையில் பார்த்தால் எப்படி இருக்கும்?

கடுகுசாரின் எண்பதாம் பிறந்த நாள் வைபவத்தில் பார்த்துவிட்டேன்!  கடுகு சார்  மிக எளிமையாகப்பழகுகிறார்! உன்னதங்கள் அனைத்துமே ஆர்ப்பாட்டமில்லாதவை தான்.

 ((மேடையில் துக்ளக் சத்யா அவர்கள்,ராணி மைந்தன்சித்ராலயா கோபு ஜே எஸ் ராகவன் பாகியம் ராமஸ்வாமி(ஜராசு) காத்தாடிராமமூர்த்தி கல்கி ஆசிரியராயிருந்த ராஜேந்திரன்)

கீழே எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை இயக்குநர் சிவி ராஜேந்திரன்சுரேஷ்பாலாவின் குடும்பம் இன்னும் சில சின்ன பெரியதிரை நடிகர்கள் இயக்குநர்கள்  வந்திருந்த அந்த நிகழ்ச்சி  கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் அமைந்தது.

சித்ராலயா கோபு அவர்கள் இயக்குநர் ஸ்ரீதருடன் தான் பணிபுரிந்த நினைவுகளை அசைபோட்டார். எழுத்திலும் வயதிலும் முதிர்ந்த எழுத்தாளர்களின் அனுபவங்களை மேடையில் கேட்பது நமக்கு புது அனுபவமாக இருந்தது.




க்ரேசிமோகன் கடைசிநேரத்தில் வெளியூர்போக நேர்ந்ததால் வரவில்லை அவர் எழுதி அனுப்பிய வெண்பா வாழ்த்துக்கவிதைகளை ராணிமைந்தன்  வாசித்தார். க்ரேசியின்  வெண்பாக்கள் பல நான் வாசித்ததுண்டு நீங்களும் கண்டிப்பாக  வாசிங்க அற்புதமாய் இருக்கும்!
செவிக்கும் வயிற்றுக்கும் சிறந்த உணவு அளித்து புறப்படும்போது நல்ல  அழகானபிரயாணப் பை ஒன்றில் நான்கு புத்தகங்கள்(நானூறு ரூபாய்க்குமேல்  இருக்கலாம்)
 போட்டு கொடுத்தார்கள்.

க்ளிக்ரவி எனும் பிரபல புகைப்படக்காரர் நல்ல எழுத்தாளரும் கூட. அவரது கைவண்ணம் இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பிரசித்தம்.



மேடையில்  நகைச்சுவை  நடிகர் நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று ஆண்கள்தான் அமர்ந்திருந்தனர். ’பெண்கள் யாரும் அந்தத்துறையில் பிரபலமாகலைபோல்ருக்கு  ஒரு எழுத்தாளர்கூட இல்லையே?” என்றார் ஒரு பெண்மணி -என்அருகில் அமர்ந்திருந்தவர்.

‘சில காமெடிப்பதிவுகள் வலையிலும் இன்னும்சில கட்டுரைகள் பத்திரிகைகளிலும்    என்று ஷைலஜா என்பவருடையது வந்திருக்கு ...நகைச்சுவை அவங்களுக்குப்பிடிக்கும் அதனால்  ஓரளவு வரும் இன் ஃபாக்ட் அவங்க பத்துவயசில் எழுதின முதல் படைப்பே ஒரு ஜோக்தான்..’ என்று சொல்ல நினைத்தேன் வேண்டாம் அதுவே ஜோக்காகிடும் என்று நினைத்து யாகாவாராயினும்  என்று வள்ளுவர் எதைக்காக்க சொன்னாரோ அதைக் கஷ்டப்பட்டு காத்துவிட்டேன்!!:)


கடைசியாய்இந்த இடுகையில் ஒருத்தருக்கு  நன்றி சொல்லணும் அவருக்குப்பிடிக்காதுன்னாலும்!!ஆமாம்  நன்றி  மின்னல்வரிகள் வலைப்பூவின் அதிபர்  கணேஷுக்கு..அவர்தான்  இந்த நிகழ்ச்சிக்கு நான் வர ஏற்பாடு செய்து என்னை  அந்த இடத்திற்கும் அழைத்துச்சென்ற அன்புச்சகோதரர்.. இருவரும் ஹாலில்  நுழைந்தபோதே சபை நிறைந்துவிட்டது!!!(காரணம்  தெரிஞ்சிருக்குமே?:)))
மேலும் படிக்க... "எண்பதைக் கடந்த எளியவர்!"

Tuesday, February 21, 2012

மலர்போல ,மலர்போல மனம் வேண்டும் தாயே!

பிப்ரவரி 21.


ஸ்ரீஅரவிந்த அன்னையின் பிறந்த நாள் இன்று.






அன்னையின் அருள் அவரை ஒருமுறை நினைத்தவருக்கு எளிதாகக்கைகூடும்.








புதுச்சேரியில் அரவிந்த ஆஸ்ரமத்தில் மகாசமாதிஅருகே நாம் கண்மூடி அமைதியாய்நிற்கும்போதுஅரூபமாக அன்னையும் அரவிந்தரும் ஆசிவழங்குவதை ஆத்மார்த்தமாக உணரமுடியும். அந்த சமாதியில் விரல்தொட்டு வணங்கும்போது உடலில் தெய்வீகமின்அலை ஏற்படுவதை அனுபவித்து மெய்சிலிர்க்க இயலும்!



மலர்களை வைத்து அன்னையை நாம் வழிபடுவது மலர்போன்ற மென்மையான மனமும் மலர்போன்ற மலர்ந்த மனத்தையும் நமக்கு உண்டாக்கிவிடும்!

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வது வெற்றிகளை விட தோல்விகளே மனமாற்றத்திற்கான குறுக்கு வழியாக மாறும் என்பதாகும்.இப்படிச் சொல்வதனால் தோல்வியே வெற்றிக்குத்தானாக அழைத்துக் கொண்டுபோகும் என்பதல்ல. தோல்வி தந்த பாடத்தைச் சரியாகக்கற்றுக் கொண்டால், அந்தப் படிப்பினையே வெற்றிக்கான ஆதாரமாக, படியாக
இருப்பதென்னவோ உண்மை.







மாற்றத்திற்கான விதை நமக்குள்ளேயே தான் இருக்கிறது.விதை முளைப்பதற்குஉதவியாக நம்முடைய அணுகுமுறை, மன நிலை பொருந்தி வருகிறதா என்பதே கேள்வி.இறைக்கருணை இல்லாவிடில் எதுவும் சாத்தியமில்லை நாம்தான் அறியாமை இருளில் மூழ்கிக்கிடக்கிறோமே அதனால்தான்வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய் என்று கடவுளிடம் கேட்டுக்கொள்கிறோம்.

அசதோ மா சத் கமய



தமஸோ மா ஜ்யோதிர் கமய



ம்ருத்யோர் மா அம்ருதம் கமய



ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:










பராசக்தியின் அம்சமான அரவிந்த அன்னையின் அமுதமொழிகள் சில...



 என்னை நினைத்தவர்களுடன் நான் எப்போதும் இருக்கிறேன்.



பயம் என்பதே எப்போதும் கூடாது,. அச்சமற்றவனுக்கே வெற்றி.



எப்போதும் நான் உனக்கு உறுதுணையாய் இருந்து உன்னை ரட்சிப்பேன். ஒருபோதும்பயப்படக்கூடாது தூங்கும்போது கூட என்னை ஸ்மரிக்கும் சக்தி உனக்கு இருக்கவேண்டும் ஆபத்து ஏற்படின் என்னை அழைக்கும் சக்தி உனக்கு இருக்கவேண்டும்



இறைசக்தியைப்பற்றி மட்டுமே நினை அது உன்னுடன் இருக்கும்}



அன்னை கூறிய சில கதைகள்...........


ஒரு கிராமத்துப்பண்ணை வீட்டில் தாத்தா காலத்து பழைய கடிகாரம் ஒன்று இருந்தது.

அது 150 ஆண்டுகள் இடைவிடாமல்ஓடி சரியான நேரத்தைக்காட்டிவந்தது.

ஒவ்வொருநாள் காலையும் அந்த வீட்டில் இருந்த விவசாயி காலை எழுந்ததும் முதலில் அந்தகடிகாரம் அருகில் சென்று அது சரியாக ஓடுகிறதா என்றுபார்ப்பார்.

ஒருநாள்காலை அவர் இப்படி நின்றுபார்த்தபோது திடீரென கடிகாரம் பேசத்தொடங்கியது.


 150 ஆண்டுகளாக நானும் வேலை செய்துவருகிறேன் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன் எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது எனக்கு ஓய்வு வேண்டாமா : என்று கேட்டது.


;உன்னுடைய புகார் சரி இல்லை என் அருமை கடிகாரமே என்று ஆரம்பித்த விவசாயிதொடர்ந்தார்,

உன்னுடைய ஒவ்வொரு டிக்கிலும் ஒருவினாடி ஓய்வு இருப்பதை நீ மறந்துவிட்டாயே: !


கடிகாரம் ஒருநிமிடம் யோசித்தது பிறகு மறுபடி தன்பணியைத்தொடர்ந்தது.
இந்தக்கதை கூறும் நீதி என்ன

ஓர் ஒழுங்குமுறையிலான வேலையில் களைப்பும் ஓய்வும் சரியானபடி ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்து அமைக்கப்பட்டால் அந்த ஒழுங்குமுறையே அதிகபளுவையும் அதனால் உண்டாகும் வலியையும் நீக்கிவிடும் என்பதுதான்!

**********************************


பெர்ஷியாவில் தேன் விற்கும் பெண்மணி ஒருத்தி வாழ்ந்துவந்தாள்.
அவள் எப்போதும் மலர்ந்த முகத்தையும் இனிய சுபாவத்தையும் கொண்டிருந்தாள்.

அவளுடைய கடைக்கு வாடிக்கையாளர்கள் கூட்டமாக வந்து தேன் வாங்குவது வழக்கமாகிவிட்டது.

இதைப்பார்த்து என்ரிச்சலைடைந்த ஒருமனிதன் அதே வியாபாரத்தை தானும் செய்ய நினைக்கிறான்

கடை வைத்து வரிசையாக தேன்குடங்களைக்கொண்டுவந்து அடுக்கினான் அங்கே வந்தவர்களை எல்லாம் அவன் அலட்சியமாக நடத்தினான் .

ஒருவர் இதைகவனித்துக்கூறினாராம், கடுமையான இவன்முகம் விஷத்தைவிற்கிறமாதிரி இருக்கிறதே!

சிரித்தபடியே இருந்த அந்த தேன்விற்கும்பெண்மணி இயற்கையாகவே முகமலர்ச்சியுடன் இருந்தாள் .அவள் வாடிக்கையாளர்களுக்கு தேனைமட்டும் விற்கும்பெண்ணாகத்தெரியவில்லை அதற்கும் மேலானவளாக உலகின் அதிகமுகமலர்ச்சி உள்ளபெண்ணாகத்தெரிந்தாள்.

நாம் இந்த உலகில் விற்கவோ வாங்கவோ மட்டும் வரவில்லை, ஒருவரோடு ஒருவர் தோழமையுடன் இருக்கவேண்டும்.

அந்த தேன் விற்கும்பெண்போல இயற்கையான முகமலர்ச்சியைக்கொண்டிருக்கவேண்டும் .அந்த மலர்ச்சியே தோழமையை அதிகப்படுத்தும்!

**********************************************************************

ஸ்ரீ அரவிந்த அன்னையின் அருள் தோழமைகளுக்கு என்றும் கிடைத்திட இந்நாளில் அன்னையிடம் வேண்டிக்கொள்கிறேன்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ
ஓம் ஆனந்த மயி சைதன்யமயி சத்யமயி பரமே!









--














--







மேலும் படிக்க... "மலர்போல ,மலர்போல மனம் வேண்டும் தாயே!"

Monday, February 20, 2012

பித்தா !பிறைசூடி!

ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு



நன்மையொடு தீமையிலை நாடுவது ஒன்று இல்லை


சீலம் இலை தவம் இல்லை விரதமொடு ஆச் சிரமச்


செயல் இல்லை தியானம் இல்லை சித்தமலம் இல்லை


கோலம் இலை புலன் இல்லை கரணம் இல்லை;

குணம் இல்லை குறி இல்லை குலமும் இல்லை


பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் மருவிப்

பாடலினொடு ஆடல் இவை பயின்றிடினும் பயில்வர்

என்கிறார் சிவஞான சித்தியார். ஞான நிஷ்டை  உடையவர்கள் மானிட உடல் பெற்றிருந்தும் அந்த சரீரத்துடன் தொடர்பின்றி அருள்வசப்பட்டிருப்பார். அவர் செய்யும் செய்கைகள் உலகினர்க்கு பாலகர் பித்தர் முதலானவர் செய்யும் செய்கைகள் போலத்தோன்றும்..அபிராமிபட்டரின் நிலைமை இப்படித்தான் ஆகி இருந்தது.

ஆனால் இறைவனே பித்தனாமே  எப்படி அது?




பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது பழமொழி.அன்னை தன் குழந்தைமீது அன்பு மிகுதியால் பித்தாகிறாள் அண்ணலும் நம் மீது கொண்ட அன்பினால் பித்தன் ஆகிறான். உயிர்கள் மீது கொண்ட கருணை மிகுதி அவனை பித்தன் என்ற பேரைக்கொடுக்கிறது. தாய் தன் குழந்தை செய்யும் தவறுகளை எல்லாம் மன்னித்துவிடுகிறாள். தாயினும் சாலப்பரியும் இறைவன் பெரும் பித்தன் தான்.

அவருக்குத்தான் எத்தனை துன்பங்கள்!

  செருப்படிக்கடிகள் செம்மாந்திருந்தும்
தொல்புகழ் விசயன் வில்லடி பொறுத்தும்
அருந்தமிழ் வழுதி பிரம்படிக் குவந்தும்,
எளியரின் எளியர் ஆயினர்
அளியர் போலும் அன்பர் தமக்கே!

என்கிறது திருவாரூர் நான்மணிமாலைப்பாடல்.
இப்படி எளிமையாய் அன்பர்களை ஆட்கொள்ளும் இவரை பித்தன் என்பதில் என்ன தவறு?

"முன்னமவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்; பின்னையவனுடைய வாரூர் கோட்டாள்; பெயர்த்துமவனுக்கே பிச்சியானாள்" என்றபடி பித்தனிடம் பிச்சியாகும் நிலைதான் உண்மை பக்தனுக்கு!


திருவாசகத்துப்பாடலில்  பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறை பெரும்பித்தனே   என்கிறார் மாணிக்க வாசகர்!

சிவபெருமான முதலில் முதியவர் வடிவத்தில் தம்மை ஆட்கொள்ள வந்தது தெரியாமல் சுந்தரமூர்த்தி நாயனார் அண்ணலை பித்தன் என்கிறார்கோபமாக  பிரான் அதனை பொருட்படுத்தாமல் வலிந்து ஆட்கொண்டதும் அவருடைய அருட்பெரும் பித்தை அறிந்துகொண்டவர் அவரைப்போற்றிப்புகழ்ந்து

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா


எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை

வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்

அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே ’

என்று கண்பனிக்கிறார்!






மேலும் படிக்க... "பித்தா !பிறைசூடி!"

Tuesday, February 14, 2012

எங்கிருந்தோ வந்தான்.....(சிறுகதை காதலர்தினத்திற்கு)

பாதித்தூக்கத்தில் மனைவியை எழுப்பினான் சாரங். அந்தக்கணம் அவனது மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. ஆப்த நண்பன் ஆதித்யாவிடம் சொல்லலாம் என்றால் அவன் ஊரில் இல்லை

சுமதியை விட்டால் இப்போது அவனுக்கு வேறுயாருமில்லை.சுமதிக்கு கண்டிப்பாய் சந்தோஷமாக இருக்குமென்று நம்பினான். பல நாட்களாக அவளும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறாள். ' எத்தனை நாளைக்கு இப்படி குறும்படம் வெறும்படம்னு எடுத்துட்டே இருப்பீங்க என்னதான் இதுல நீங்க அவார்ட் வாங்கினாலும் ஒரு பிசி ஸ்ரீராம் மாதிரி ஒரு பாலுமகேந்திரா மாதிரி சினிமாக்கு காமெராமேனாப்
போயி பேர்வாங்கணும்..அதான் என் ஆசை '

'சுமதி..உன் ஆசை நிறைவேறப்போகுது! ' என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே திக்குமுக்காடினான் சாரங்..

அவன் எதிர்பாராத வகையில் சற்றுமுன் அந்த பிரபல இயக்குநர் அவனுக்கு'செல் 'லில் சொல்லிய

வார்த்தைகள் இன்னமும் அவன் காதில் ஒலிக்கின்றன

'சாரங்! என்னோட புதுப்படத்துக்கு நீங்கதான் காமெரா மேன்!. நீரஜ் ஹீரோ. !ஹீரோயினாக ஒரு புதுமுகம், பேரு ஸ்படிகா, பம்பாய் இறக்குமதி. அடுத்தவாரம் பூஜை . மற்றவை மெயில்ல மானேஜர் அனுப்புவார்..ஓக்கே ? '

'த்..த.. தாங்க்யூ டைரக்டர் சார்! '

அவ்வளவுதான், இயக்குநர் அதிகம் பேசமாட்டார் ஆனால் அவரது படம் பலரால் பேசப்பட்டுவருகின்றன

அவரது இயக்கத்தில் பணிபுரிய எனக்கு ஒரு வாய்ப்பா ?

சாரங்கால் இன்னமும் நம்பமுடியவில்லை.

சுமதி சட்டென எழுந்து உட்கார்ந்தவள், ' என்னங்க...என் கசின் ரம்யாவோட குழந்தை ராகுலை நாம தத்து எடுக்கலாம்னு நான் சொன்னதை இப்போவாவது ஏத்துக்கிட்டாங்களா ? பதினெட்டு வருஷமா நான் தவிச்ச தவிப்பு போதுங்க...வயசு நாப்பது எனக்கும் ,உங்களுக்கு நாப்பத்திமூணும் ஆகுது....இனிமே குழந்தைபாக்கியமெல்லாம் கண்டிப்பா எனக்குக் கிடைக்கபோறதில்ல..கடவுள்மனசு கல்லுன்னு நல்லா தெரிஞ்சிபோச்சு. அதனால காதும் காதும் வச்ச மாதிரி வீட்டோட வச்சி தத்து எடுத்துக்கிடலாம்....சரிதானே ? ' என்று ஆவலும் அதட்டலுமாய் கேட்டாள்

அவரவர் கவலை அவரவர்க்கு.

பெருமூச்சு விட்டான் சாரங்

குழந்தை இல்லாதது சமூகத்தில் பெரியகுற்றமா என்ன ? திரும்பத் திரும்ப என்மனைவி என்குழந்தை’ என்றே
சுயநல வாழ்க்கைதான் வழவேண்டுமா ? மனசை உற்சாகப்படுத்திக்கொள்ள மாற்றுவழிகள் எவ்வளவோ இல்லையா என்ன ?

இல்லாததற்கு ஏங்குவதே இயல்பாகித்தான் போகுமோ ?

சாரங்கின் முகம் போனபோக்கைப்பார்த்து 'விஷயம் அது இல்லையா ? ' ஏமாற்றமாய் சுமதி கேட்டாள்

'சரி அது உன் விருப்பம் ஆனால் நான் சொல்லவந்தது.... ' என்று ஆரம்பித்தான். ஆனாலும் அவளை எழுப்பும்போது இருந்த வேகம் இப்போது இல்லையெனினும் நிதானமாய் சொல்லிமுடித்தான்

'இதுவும் நல்ல விஷயம்தாங்க...உடனே ஊருக்கு உங்கப்பாக்கு போன் போட்டு சொல்லுங்களேன் '

'வேணாம் '

'இன்னமும் உங்கப்பா பேர்ல வருத்தமாக்கும் ? அன்னிக்கு உங்க காதலை பலிகொடுக்கவைத்து என்னை உங்கதலையில கட்டினது மகாபாவம் தாங்க.. '

'ஹலோ ? அம்மாதாயே! பதினெட்டுவருஷம் முன்பு நடந்த கதையை நீ இப்போ கிளறாதே.நான் உன்கிட்ட உண்மை சொல்லிட நினைத்து சொன்னேனே தவிர இழந்த காதலையே நினைச்சி மருகிப்போகலை..கடந்துபோறமேகம் மாதிரி
வாழ்க்கையில் அதுவும் ஒண்ணுனு என்னை நானே தேத்திட்டேன். அந்தப்பொண்ணும் வேற யாரையோ கட்டிக்கப் போவதாய் எனக்கு கல்யாணப்பத்திரிகையும் அனுப்பிட்டா.. சரிசரி இப்போ நான் திரைப் படத்துக்கு காமெரா மேனா நிச்சயமாகி இருக்கிற விஷயத்தை நீயாரிடமும் சொல்லகூடாது, படத்தின் பூஜைமுடியட்டும்,அதுவரை
கப்சிப்புனு இருக்கணும் இந்த சினி ஃபீல்டுல கடைசிவரைக்கும் எதுவுமே நிச்சயமில்லை '

'ஆமாம் .நான் யார்ட்டயும் சொல்லமாட்டேங்க.. நாளைக்குக் கோயிலுக்கு போயிட்டு கடவுளுக்கு மட்டும் மெளனமா என் நன்றியை சொல்லிட்டு வரேன்.. '

'கொஞ்சமுன்னாடிதான் கடவுள் மனசு கல்லுன்னு திட்டினபோல இருக்கே ? '

' அதனால் என்ன, உங்கமேல இப்போ கருணை காட்டி இருக்காரே ? '

சுமதி தன் வயதைமீறி சின்னப்பெண்போலதுள்ளிக் குதித்தாள்

மறுநாள் விவரமான மின்னஞ்சல் கண்டு அதன்படி சாரங் இயக்குநரின் இருப்பிடத்திற்குச் சென்றான்

'வாங்க சாரங்... ' வரவேற்றார் இயக்குநர். இதமான அன்பான அவரது வரவேற்பில் குளிர்ந்தான் சாரங்.

'வணக்கம் ...ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு... ' என்றான் சாரங்.

உதவி இயக்குநர் ஒருவர் சாரங்கின் அருகில் நின்றவர் அவன் காதோரம் ' சாரங்! உங்களோட லேடஸ்ட் குறும்படம் 'உனதுவிழியில் எனதுபார்வை ' பார்த்து டைரக்டர் அசந்துபோட்யிட்டார். 'என்னடா காமெரால பேசறான்..ஓவியம்மாதிரி காட்சிகளை அள்ளிட்டுவந்திருக்கான்! எப்படி இவனைப்பத்தி நீங்க யாருமே என்கிட்ட சொல்லலே ? 'னு சத்தம்போட்டார்...சாரங்..நீங்க இந்தபடத்துக்குள் நுழைவதின் மூலம் எங்கயோ போகப்போறீங்க அது நிச்சயம் ' என்றார் கிசுகிசுப்பான உற்சாகமான குரலில் .

சாரங் புன்னகையுடன் தலை அசைத்தான். எல்லாம் கனவுமாதிரி இருந்தது.

வாழ்க்கையில் நல்ல சந்தர்ப்பங்கள் எல்லாம் மழைமாதிரி எதிர்பாராத தருணங்களில் தான் வருமோ ?

அந்த ஐந்துநட்சத்திர ஹோட்டலில் மேல்தளத்தின் பிரத்தியேக ஹாலில் பேச்சு வார்த்தைகள் நடந்துமுடிந்ததும் டைரக்டர் அனைவரிடமும் சில புகைப்படங்களைக் காட்டினார்

'இதான் நம்ம படத்து ஹீரோயின் ...பம்பாய்ல வளர்ந்த பொண்ணு. ஆனாதமிழ் பேசுது..நல்ல முகவெட்டு .பாருங்க அந்த நாள் சரோஜாதேவிமாதிரி எக்ஸ்ப்ரஸிவ் ஐய்ஸ்! எடுப்பானமூக்கு..மும்பாய்மாடலிங்பண்ணுது,...பதினேழுவயசுதான். பழையசாவித்திரிமாதிரி துறுதுறுன்னு இருக்கு..புது அமலாபால் மாதிரி இளமை வழியுது! கண்டிப்பா இந்தபொண்ணு தமிழ் நாட்டை ஒருகலக்கு கலக்கப்போகுது! '

எல்லாரும் ஆர்வமாய் அந்தப்புகைபடங்களை கையில் வாங்கிப் பார்த்துவிட்டு தலை அசைத்து ஆமோதித்தனர்

சாரங் இயக்குநரின் முகத்தையே பார்த்து பிரமிப்புடன் அமர்ந்திருந்தான்

அடேயப்பா, போட்டோவைப்பார்த்து எதிர்காலத்தைச் சொல்லும் அளவுக்கு அனுபவம் வாய்ந்த டைரக்டரின் கீழ் பணிபுரிவது எனக்கும் பெருமைதான்.

'என்ன சார்ங்..நீங்கதான் போட்டோவை முக்கியமாபாக்கணும்... உங்க காமிரா கண்ணுல தான் குத்தம் குறையெல்லாம் கரெக்டா தெரியும்.. ' என்றார்

இயக்குநர் சிரித்தபடி அதற்குள் அவருக்கு மொபைலில் யாரோ அழைக்க காரிடாரில் ஓரமாய் நடந்துசென்று பேச
ஆரம்பித்துவிட்டார்

சாரங் நிதானமாய் அந்த போட்டோக்களில் ஒன்றை கையில் எடுத்தான்.

அடுத்தகணம் விழி குத்திட நின்றான்

. 'வசுதா ? '

மனசு கூவியது .

நல்லவேளை யாரும் அவனது முகமாற்றத்தை கவனிக்கவில்லை

'ஸ்படிகா ! புதுமுகம்! . சொந்தப்பேரே நல்லாஇருக்குன்னு டைரக்டர் அதையே ஒக்கேபண்ணிட்டார் '

உதவி இயக்குநர் திலக் சொன்னார்

சாரங் நெற்றிவியர்வையைத்துடைத்துக்கொண்டான்.

'சாருக்கு ஏசிலகூட வியர்க்குது டைரக்டர்கிட்ட முதல் அனுபவம் அதான்னு நினைக்கிறேன் டோண்ட் ஒர்ரி மிஸ்டர்சாரங். ரொம்ப ஃப்ரீயா இருக்கலாம்.
செட்டுக்கு வந்துட்டா மனுஷர் பம்பரமா சுத்துவார்.நல்ல கலைஞர்களை என்கரேஜ் செய்வார் நம்ம டைரக்டர் ' 'அதனால்தான் உயரத்திலிருந்து அவர் இறங்காமல் இருக்கிறார்.. கர்வமோ,தலைகனமோ இல்லாத அற்புத மனிதர் நம்மடைரக்டர் '

'அடுத்தவர்களை மதிக்கத்தெரிந்தவர் '

ஆளாளுக்குப் புகழ்ந்தார்கள்,பிறகு அனைவரும் டின்னர்மேஜை நோக்கிவிரைந்தார்கள்

சாரங் ஸ்படிகாவின் போட்டோவைப் பார்த்ததுமே அது வசுதாவின் வாரிசு என்பதை உணர்ந்துகொண்டுவிட்டான்.

அந்தப் பெரியவிழிகளும் கூரிய நாசியும் கதுப்புக் கன்னங்களும் குறும்புப்புன்னகையும் வசுதாவிற்கே உரிய சிறப்பு அம்சங்கள்.

எத்தனைமுயன்றும் சாரங்கிற்குத்தனது பழைய நினைவுகளை நோக்கி மனம் திரும்பிப்போவதைத் தடுக்க இயலாமல் தவித்தான்

பழையவிஷயங்கள் எல்லாவற்றையும் மனம் மறந்துவிடுவதில்ைலை. மறக்கச்சொல்லி மனதிற்கு ஆணை பிறப்பித்தாலும் அது பல நேரங்களில் எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும். இப்போது அந்த நிலைக்குத் தள்ளப்பட்டான் சாரங்.

வசுதா!

அவளைப்பார்த்து பேசும்வரை சாரங்கனுக்கு(அப்போது சாரங்கன் என்றமுழுபெயரில் தான் அழைக்கப்பட்டான். பிறகு குறும்படங்களுக்கு பணிபுரியபோனபோது சாரங் என்றானது) பெண் என்றாலே அலர்ஜி. அம்மாவைத்தவிர அதிகம் வேறு
பெண்களூடன் பேசிபழக்கமில்லாதவனாய் அதை விரும்பாதவனாயும் இருந்தான்.

பெண்ணுடன் நட்பு கொள்வதற்கு அழகுமட்டும் போதாது வேறு ஏதோ ஒரு ஈர்ப்பும் தேவை என்பதை உணரவைத்தவள் வசுதா.

கரூர் அருகே அமராவதி நதி பாயும் அந்த கிராமத்தின் பசுமைக்காட்சிகளை

தனது காமிராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தான்

சாரங்கன்.. கல்லூரி நாளிலிருந்தே புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவன். அப்போதெல்லாம் வாரவிடுமுறைகளில் தோளில் காமிராவை மாட்டிக் கொண்டு ஊர் ஊராக புறப்பட்டுப் போய்விடுவான் சென்னையில் ஒரு

கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு மாதத்தில் ஒரிரு முறைமட்டுமே அப்படிப்போகமுடிந்தது. நண்பன் ஆதித்யா உறவினர்

வீட்டுக் கல்யாணத்திற்கு கரூர் போய்வந்தவன் அருகிலிருந்த ஒருகிராமத்தின் பெயரைச் சொல்லி சாரங்கனிடம் அதை அவசியம் அவன் போய்ப்பார்த்து அங்குஉள்ள இயற்கை காட்சிகளை ரசித்து புகைப்படங்கள் எடுக்கலாமென்று சொல்லி இருந்தான்.

தோப்பு ஒன்றில் ராணுவவரிசையாய் நின்றிருந்த தென்னைமரங்களை எல்லாம் ரசித்துப்பார்த்தபடி வந்தவன் சட்டென பாதிவளர்ச்சியிலேயே ஊஞ்சல்போல இறங்கி வளைந்து மறுபடி மேலே சென்று கொண்டிருந்த ஒருமரத்தின் கீழ் வளைவின் மீது அமர்ந்தபடி ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அதிர்ந்தான்.

தன்னந்தனியாய் யாருமில்லாத இடத்தில் அழகான இளம்பெண் மும்முரமாய் புத்தகம் படிப்பது வினோதமாய் இருந்தது. அந்த வளைந்தமரத்தை புகைப்படம் எடுக்க விரும்பியவன் அதன் மீது அவள் அமர்ந்திருக்கவும் தயக்கமாய் அவளையே ஏறிட்டான்.

மஞ்சளில் அரக்குபூக்கள் போட்ட பாவாடையும் அரக்கு தாவணியும் மஞ்சள் ஜாக்கெட்டும் அணிந்திருந்த அவள் அந்த அந்திவானச் சிவப்பின் கீழ் தேவதையாய்த் தெரிந்தாள்

சாரங்கன் வந்ததையே அறியாதவளாய் புத்தகத்தில் மூழ்கி இருந்தாள் அவன்

நினைத்திருந்தால் அவளுடைய அழகை அவள் அறியாமலேயே தனது காமெராவில் கவர்ந்திருக்கமுடியும். ஆனால் அது அவனது சுபாவம் அல்ல

கல்லூரியிலேயே சகமாணவிகளால் மிகவும் மதிக்கப்பட்டவன் சாரங்கன் படிப்பு உண்டு தனது காமெரா உண்டு என்றுதானிருப்பானே தவிர எந்தக் குறும்பும் செய்யாதவன்..முக்கியமாய் இளம் பெண்களை சீண்டி விளையாடுவதை விரும்பாதவன் நண்பர்கள் அவனை ரிஷி என்பார்கள் செல்லமாக

காமெராவுடன் அவளைக்கடந்து நடந்தவனை. 'ஹலோ ? ' என்று ஒரு குயில் அழைத்தது.

அழகான பெண்களுக்கெல்லாம் குரலும் அழகாய்த்தான் இருக்குமோ ?

திரும்பினான் சாரங்கன்.

'ஊருக்கு புதுசா ? ' கேட்டாள் குறும்புச் சிரிப்புடன்.

தலை ஆட்டினான்

'காமெரா வச்சிட்டு சுத்தறீங்க.இயற்கை அழகை படம்பிடிக்க வந்தீங்களா ? '

'ஆ ஆமாம்.. இந்த கிராமம்பத்தி சென்னைல என் ஃப்ரண்ட் சொன்னார்

அழகான இயற்கைக்காட்சிகள் இருக்கிறதாமே, அதான் படம் பிடிக்க வந்தேன் '

'

'அதென்ன எல்லா புகைப்படக்காரர்களுமே அழகைத்தான் படம்பிடிப்பீர்களா ? '

வம்புக்கு இழுப்பதுபோல அவள் தன்னைக் கேட்பதாய் சாரங்கன் நினைத்தான் .

'அழகு ஒரு நிறைவு அது, மனசுக்கு சந்தோஷம் தருவதால் அழகை ரசிக்கிறோம் ' என்றான்

'சந்தோஷம் தான் எதற்குமே எல்லையா ?சந்தோஷம் என்றால் நிறைவுன்னா பிறகு தேடல் தொடருமா ? தேடல் இல்லைன்னா புதுமைகளை சாதிக்கத்தான்முடியுமா ? '

சாரங்கனுக்கு அந்தப்பெண்ணின் பேச்சு வித்தியாசமாய்பட்டது.அவள் தொடர்ந்தாள்

'தோல்வியிலும் சோகத்திலும் தாக்கம் ஏற்பட்டு சிந்திக்கமுடிகிற அளவுக்கு மகிழ்ச்சியில் அது சாத்தியமா சொல்லுங்க ? '

நீங்க சொல்வது உண்மைதான்..இப்படி ஒரு கோணத்துல நான் சிந்திக்கவே இல்லை. '

'தப்பா நினைக்காதீங்க... என் சுபாவம் எதையும் வெளிப்படையா சொல்லிடுவேன்... '

'பரவாயில்லை '

'.ஆனாலும் போலித்ததனமாய்ப் பேச எனக்குபிடிக்கறதில்ல...ஆமா உங்க பேர் என்ன ? '

'சாரங்கன் '

'ப்ருந்தாவன சாரங்கா ராகம் நினைவுக்கு வருகிறது! என் பெயர் வசுதா.இந்த சின்ன கிராமத்துல ஒரு பள்ளிக்கூட வாத்தியாரின் ஏகபுத்திரி. ’

'வசுதா! பேரும் அழகாய்த்தான் இருக்கு! ' மனசுக்குள் சொல்லிகொண்டவன், 'அதென்ன புத்தகம் கையில் ? பாடபுஸ்தகமா ? ' என்றுகேட்டான்

' பாடம்படிக்கத்தான் தோப்புக்குவரணுமா ? நான் பிஏ இலக்கியம் போனவருஷம் கரூர்காலேஜில் படிச்சிமுடிச்சிட்டேன்..இது கதை புத்தகம். '

'வாசிப்பதில் உங்களுக்கு விருப்பம் அதிகமோ ? '

'வாசிப்பது சுவாசிப்பதுபோலத்தான்.ரொம்பப் பிடிக்கும் '

'எனக்கு போட்டோகிராஃபி போல உங்களுக்கு ரீடிங் ஹாபி போல இருக்கு ? '

'ஆமாம் அவரவர்களுக்கென்று ஏதோ சிலவிஷயங்கள் பிரத்தியேகமாய்ப் பிடித்துப்போய் விடுகிறது இல்லையா ? அப்படிபிடித்த விஷயங்களை தனிமையில் அசை போடுவது எனக்குப் பிடிக்கும் ஆனால் தனிமையே நிரந்தரமென்று ஒதுங்கி நின்று போய்விடக்கூடாது என்பார் என் அப்பா.மனசை நதிபோல ஓடவிட்டுட்டே இருக்கணும் என்பார்.அதை தேக்கி நிறுத்திக் குளமா மாற்றிட்டா பாசி படியும் நாற்றமடிக்க ஆரம்பிக்கும் ஓடிக் கொண்டிருக்கும் வரையில் நதிக்கு இருக்கும் சிறப்பு தனித்துத் தேங்கும் போது நீங்கிவிடுகிறது என்பார்.அதனால் அப்பப்போ இப்படி தோப்பு ,தனிமை, புத்தகம்... ' சிரித்தாள் இயல்பாக.

'இலக்கியமாணவி என்பதை நிரூபிக்கிறீங்க நல்லாப் பேசறீங்க வசுதா..நான் அதிகம் புக் படிக்கற தில்ல பாரதி கவிதைகள்மட்டும் ஓரளவுமனப்பாடம். இப்போ நீங்க வாசிக்கிறது என்ன புத்தகம்னு நான் தெரிஞ்சிக்கலாமா ? '

'பிரிவோம் சந்திப்போம் சுஜாதாவின் நாவல்....பத்தாவது தடவையா விரும்பி ரசிச்சிப் படிக்கறேன் ..பிடிச்ச பாடலை டேப்பில திரும்பத் திரும்ப போட்டுக் கேட்கிற மாதிரிதான் இதுவும்..மனக்குதிரையை கடிவாளம் போட்டு ஓரிடத்தில் நிறுத்திவைக்கிற அக்கறை வாசிப்பிற்கும் தியானத்திற்கும் உண்டுன்னு சொல்வாங்க”

' இந்த நொண்டிக்குதிரைக்கு கதை பற்றி எதுவும் அதிகம்   தெரியாது   ஸாரி”

சாரங்கன் சிறுவயதில் போலியோ பாதிப்பில் சூம்பிப் போன தனது வலது காலைக் காட்டியபடி இப்படிச் சொல்லவும் கண்களில் கோபம் பொங்க அவனைப் பார்த்தாள் வசுதா.

' தயங்கித் தயங்கி நீங்க பேசும்போதே நான் நினச்சேன்..எதை நினச்சி நீங்க ஒதுங்கிப்போகக்கூடாதுன்னு நானே வலிய அழைச்சிப் பேசினேனோ அதையே நினைச்சிக் குமைந்து போறீங்க...இருளைக்கூட ' குறைந்த ஒளி 'அப்படின்னு பாரதி சொல்கிறார். இருட்டைக் கண்டு மிரண்டு போகிறவங்க கண்டிப்பா கோழைங்கதான்..உடல் ஊனம் வெளியே தெரியுது

எத்தனைபேர் மன ஊனத்தோடு இருக்காங்க அவங்களோடப் பழகி அடிபடுகிறவரை நம்மால் எதையும் உணரமுடிவதில்லை .சாரங்கன், உங்களைமாதிரி நம்மைபத்தி என்ன நினப்பாங்களோன்னு மத்தவங்களை கவனிக்கறது உடல்
ஊனமுள்ளவங்க கிட்ட இருக்கிற கெட்டபழக்கம். எதையுமே.கற்பனை செய்து கவலைப்படுவதைவிட வெளிப்படையாபேசி நேருக்குநேர் சண்டைபோடறதுல தப்பு இல்லே என்பதுஎன் அபிப்பிராயம். அதனால நொண்டிக்குதிரையா இருக்கலாம் தப்பில்ல நம்பினவங்களுக்கு மண்குதிரையாகத்தான் இருக்ககூடாது...தெரியுமில்லையா பழமொழி, 'மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கின மாதிரி ' அப்படீன்னு ? '

'தாங்க்ஸ் வசுதா!வாழ்க்கை சொல்லித்தரும் வலியை மனிதன் புரிஞ்சிட்டா எந்தவலியையும் பொறுத்துக்கமுடியும்னு நான்
கேள்விப்பட்டிருக்கேன்.வலியிலிருந்து பிறப்பதுதான் வலிமை. ஆனாலும் சமூகத்தின் அனுதாபப் பார்வையினாலே நாங்கள் சில நேரங்களில் பரிகாசமாய் காயப்படுவதை தவிர்க்கவும் முடிவதில்லையே ? அதனால்தான் ஒரு தாழ்வுமனப்பான்மை ஏற்படுகிறது. அவர்களாய் எங்கள் ஊனம் தெரிந்து பேசுமுன்பாய் நாங்களாக இப்படி முந்திக் கொள்கிறோம் '

'இங்கதான் தப்பு. முதல்ல நாம் நம்மை நேசிக்கப் பழகணும்.நம்மை நாமே வெறுத்தால் அது மத்தவங்களுக்கு சாதகமாய் போய்விடும். ..ஸாரி..அதிகமாய்ப்பேசறேன்னு நினைக்கிறேன்..விட்டீங்கன்னா அருவிமாதிரி பொழிவேன்!
சொற்பொழிவே செய்துடுவேன்... ' சிரித்தபடி அவன் அருகில் வந்து நின்றுகொண்டாள்.பிறகு, ' சரி, .எங்கள்கிராமத்துக்கு
விருந்தாளியாய் வந்திருக்கிற உங்களை எங்க வீட்டுக்குக் கூட்டிப்போனால் என் அப்பா ரொம்ப சந்தோஷப்படுவார். புகைபடக்கலைஞர் என்றால் இன்னமும்
மகிழ்ச்சி அடைவார். உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா என்கூட வீட்டுக்கு வரலாமே ? '

சாரங்கன் , 'எனக்கும் இப்படி ஒரு புத்திசாலிப்பெண்னைப் பெற்ற தகப்பனாரைப்பார்க்கணும்தான் ' என்றான்.அவனுக்கே வியப்பாயிருந்தது தனது பேச்சில் தெரிந்தமாற்றம்.

அது வீடாஅல்லது நூலகமா என்று வியக்கும் அளவிற்கு வீட்டில் புத்தகங்கள்அழகாய்

அடுக்கப்பட்டு அந்த சிறு வீட்டின் எல்லா அலமாரிகளிலும் நிறைந்திருந்தன.

நிகண்டு,அபிதான சிந்தாமணி, தேவாரம் திருவாசகம் பைபிள் குர்ரான்

பெளத்தமத சாரங்கள் தாகூர் டால்ஸ்டாய் ஷேக்ஸ்பியர் கம்பன் ரூஸ்வெல்ட் ரஸ்கின்

வால்டேர் பாரதி என்று புத்தகவரிசைகள்.

உன் நண்பர்களைச் சொல்லு உன்னைபற்றி சொல்கிறேன் என்பது போல படிக்கும் புத்தகங்களை வைத்தும் அவர்களைப்பற்றிக் கணிக்கலாமென சாரங்கன் தான் கேள்விப்பட்டதை நினைத்துக் கொண்டான்.

வசுதாவின் அப்பா தன் மகள் அறிமுகம் செய்ததும் சாரங்கனை அன்போடு வரவேற்று, ' என் பெண் எல்லாருடனும் வலியபோய் பேசிவிடமாட்டாள் அவளே
உங்களிடம் பேசி வீடுவரை அழைத்து வந்திருக்கிறாள் என்றால் கண்டிப்பாய் சாரங்கன் வித்தியாசமான ஒரு இளைஞராயிருக்கவேண்டும். ':என்றார்

சாரங்கன் பணிவும் வெட்கமுமாய் புன்னகைத்தான்

அந்தச் சிறுவீட்டில் டிவீ யைத்தவிர வேறு டெலிபோன்,.ஃப்ரிட்ஜ் இன்னபிற நவீன சாதனங்கள் எதுவுமே இன்றி எளிமையாய் காட்சி அளித்தது.

வசுதா உள்ளே சென்று காபியோடு கைமுறுக்கும் தேங்காய்பர்பியும் கொண்டுவந்து வைத்தாள்

'சாப்பிடுங்க தம்பி..அடிக்கடி வாங்க நம்மூருக்கு..நம்ம வீட்ல தங்கிக்குங்க ..அருகில் பல இடங்கள் பார்ப்பதற்கு இருக்கு நான் கூட்டிப்போகிறேன் வாங்க,.ஒண்ணும் கூச்சப்படவேண்டாம் '

அன்பில் அவனை ஆட்கொண்டார் வசுதாவின் அப்பா பரசு.ஐம்பது வயதிருக்கும். மெலிந்த தேகம்.வெள்ளைக் கதர்வேஷ்டி கதர் சட்டையில் எளிமையாய்த் தெரிந்தார். பேச்சிலும் செய்கையிலும் நிதானம் நிழலாய்ப்
பரவி இருந்தது.



உன்னதங்கள் எல்லாமே அமைதியானவை தானோ ?

சாரங்கன் அடுத்த சில நாட்களில் மறுபடி அந்த கிராமத்திற்குவந்தான்.

பரசுவும் வசுதாவும் அவனை கிராமத்தின் வித்தியாசமான பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவன் எடுத்த சில புகைப் படங்களை பத்திரிகையில் போட்டிக்கு அனுப்பினான்

ஒரு பழுத்த கிழவி ஒலை முடைந்துகொண்டிருந்த காட்சியை அவன் படம் பிடித்து

'சருகு முடையும் ஓலை 'என்ற தலைப்பில் அனுப்பி இருந்தான் அதற்கு முதல்பரிசு

கிடைத்ததில் பரசுவும் வசுதாவும் மிகவும் மகிழ்ந்துபோயினர்.

மெல்லமெல்ல சாரங்கனின் வருகை அதிகரித்தது எந்தக்கணத்திலும் அவன்

வசுதாவிடம் எல்லைமீறாமல் கண்ணியமாகவே நடந்து

கொண்டதை பரசுவும் கவனித்தார். அன்று அவனிடம் தன் விருப்பத்தை கேட்டுவிட்டார்.

சாரங்கன் திகைப்புடன், ' என்னைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டுதான் இப்படிக்கேட்கிறீர்களா சார் ? ' என்றான்.சாரங்கனுக்கு அவனது கால் ஊனம் பற்றிய கவலை நிறையவே உண்டு.

' என் நம்பிக்கைக்கு பாத்திரமான நபராக நீங்கள் இருக்கிறீர்கள்

சாரங்கன். உங்களைவிட என் பெண்ணுக்குப் பொருத்தமான துணைவர் யாரும் கிடைக்கமுடியாது. பழகின சில நாட்களிலேயே ஒரு சிலரால் தான் மனசை அடையமுடியும்.மனசு ஒரு கோட்டை.அதற்கு நம்பிக்கையின்மை,சந்தேகம் இன்னபிற தடைகளாய் பலகதவுகள் இருக்கும்.அதையெல்லாம் தகர்த்து நீங்கள் என்மனசின் உள்ளே வந்திருக்கீங்க...தடைகள் விலகினால்தான் மகிழ்ச்சி புகுந்துகொள்கிறது மகிழ்ச்சி மனதுக்கு உறுதியைக் கொடுக்கிறது.மனதில் உறுதி வேண்டும் என்று பாரதி கேட்டது இதற்குத்தான்.மனதில் உறுதி வந்துவிட்டால் வாக்கினிலே இனிமை வரும் ' நினைவு நல்லதாகும் நெருங்கிய பொருள் கைவசப்படும் '

பரசு பேசப்பேச வசுதா மெளனமாய் அவனையே பார்த்தாள் இப்போது அவளது பார்வையில் இனந்தெரியாத நாணம் கவிழ்ந்திருந்ததை சாரங்கன் கவனித்தான்.

அந்தமெளனம் ஆயிரமாயிரம் வார்த்தைகளை அவனுக்குக் கண்வழியே அஞ்சல் செய்தது.

சாரங்கன் புன்னகையுடன் தலை அசைத்தான்

சென்னை சென்றதும் பெற்றோரிடம் சொல்ல அவர்களின் சம்மதம் கிடைத்துவிட்டதாயும் விரைவில் நிச்சயதாம்பூலம் செய்யவருவதாயும் கடிதம் போட்டுவிட்டான்

வசுதா அப்போதுதான் அவனுக்கு முதன்முதலாக ஒரு கடிதம் எழுதினாள்.தன்

காதலைக் கொட்டி கவிதையாய் எழுதி அனுப்பினாள்

சாரங்கனும் அவளது நேசத்திற்கு நன்றிகூறி பதில்போட்டான்.இடையில் அலுவலக விஷயமாய் சென்னையிலிருந்து அவன் டில்லிக்கு மூன்று மாதங்கள்
போகவேண்டிவந்தது. அப்போதெல்லாம் அவனால் கிராமத்திற்கு வர இயலாமல் போனது. அந்த நாட்களில் வசுதாதான் மிகவும் அவஸ்தைபட்டாள். பெண்ணின் காதல் இப்படித்தான். காதலில் வீழ்ந்துவிட்டால் காணும்பொருளில் எல்லாம்  காதலன் முகம் தேடும்.

நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது...  இதுதான் காதல் என்பதா?


பரசு தன் மகள் சினிமாப்பாட்டை அதிசியமாய் முணுமுணுப்பதை ரசித்தார்.

நல்ல சிநேகிதத்தை காதலாய் மாற்றி அதற்கு உரமிட்டவர் பரசு

.

அன்று பெரியாழ்வார் மகளுக்கு அரங்கனைப் பற்றிச் சொல்லி அவள் மனசில் ஆழ்ந்த காதலை ஏற்படுத்தியமாதிரியான உணர்வில் இன்று திளைத்துபோனார்..

.கடிதங்கள் காதல் பாலங்களாயின.

அன்று பரசுவின் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது.

பிரித்துப் படித்தார்.

சாரங்கனின் அப்பாவிடமிருந்து வந்த அந்தக் கடிதம் அப்படி ஒரு அணுகுண்டைத் தூக்கிப் போடுமென இருவருமே எதிர்பார்க்கவில்லை

அதிகம் பாதிக்கபட்டவராய் பரசு தான் புலம்பினார். 'அம்மாடி வசுதா. தாயில்லாப்பெண்ணா வளர்த்த உன் மனசுல ஆசைத்தீயை கொழுந்துவிட்டு எரியவச்ச பாவிம்மா நான்.கடைசில இப்படி ஆகும்னு நான் நினைக்கவேஇல்லையே அம்மா ? யாருக்கோ ஜாயிண்ட் கையெழுத்துபோட்டு இருந்த சொற்ப சொத்து பணமெல்லாம் இழந்து ஜெயிலுக்குப் போகவேண்டி இருந்த நிலைமையில் உதவினவரின் மகளுக்கு சாரங்கனைக் கல்யாணம் செய்யபோவதாயும் நடந்தவைகளுக்கு மன்னிப்பு

கேட்டும் கடிதம் எழுதி இருக்காரேம்மா மனுஷர் ? வெறும் வார்த்தைகளில் வாழ்க்கையைத் தீர்மானித்துவிட்டார் .

சாரங்கன் எதுவுமே எழுதவில்லை, அவன் சாது. அவனால் அப்பாவின் பேச்சைத் தட்ட

முடிந்திருக்காது... ' என்று கதறினார்.

தனக்குக் கொடுப்பினை இல்லையென்பதைத் தெரியப்படுத்தி சாரங்கனின் அப்பாவிற்கு பதில் கடிதமும் எழுதிபோட்டார்.

அடுத்த சில நாட்களில் வசுதாவிடமிருந்து அவளது திருமண அழைப்பிதழ்

சாரங்கனுக்கு வந்துசேர்ந்தது.அதில் சின்னதாய் ஒரு கடித இணைப்பில், ' இது இன்ஃப்ர்மேஷன் தான் இன்விடேஷன் அல்ல ' என்று ஆங்கிலத்தில் ஒரே வரியில்

கைப்பட எழுதி இருந்தது அதில் வசுதாவின் கோபம் சாரங்கனுக்குப் புரிந்தது

,அதன் நியாயமும் புரியவே அவன் வேறுவழியின்றி அமைதியாகிப் போனான்.


***************************************************************************


'சார்ங்..டின்னர் சாப்பிடப் போகலயா கமான்.. ? ' இயக்குநர் உரத்த குரலில்

கேட்கவும் சாரங் வசுதவின் நினைவுகளிலிருந்து மீண்டான்.

அவர் தனது மொபைல் போனை ஷர்ட் பாகெட்டில் வைத்தபடி சாரங்கனின் தோள் தொட்டு மேஜை அருகே அழைத்துக் கொண்டு போனார்.

சாப்பிடும்போது அவர், 'சாரங்..நீங்க ஸ்படிகாவை கொஞ்சம் ஸ்னாப்ஸ் எடுக்கணும்...நாளைக்கு விஜயாகார்டனில் பூஜை முடிச்சதும் ஷூட்டிங் ஆரம்பிக்கப் போறேன்..எந்தப்பத்திரிகை மீடியாவையும் நான் பூஜைக்குஅழைக்கப்போகிறதில்லை..போன தடவையே என்படத்தில் நடிச்ச புதுமுகம்கிட்ட நிருபர்கள் ஏதோ கேள்விகேட்டு குடைஞ்சிட்டாங்க,அதனால

இந்தமுறை நான் யாரையும் புதுமுகத்தை போட்டோ எடுக்கவோ பேட்டி எடுக்கவோ அனுமதிக்கப் போவதில்லை..நீங்க எடுக்கபோகும் போட்டோக்களை மட்டும் அவங்களுக்கு அனுப்பிடலாம் டிஜிடல்காமெரால பத்து ஸ்னாப்ஸ் தட்டி கம்ப்யூட்டர்ல லோட் பண்ணி அதை அப்படியே பத்திரிகைக்காரங்களுக்கு அனுப்பிடலாம்.காலைல ஹோட்டல் பத்மால ஸ்படிகாவைபோய்ப்பார்த்து போட்டோஸ் எடுதுமுடிச்சிடுங்க ..மானேஜர் நீங்க வருவதுபத்தி அவங்களுக்கு தெரிவிச்சிடுவாங்க ஓகே ? ஆல் த பெஸ்ட் சாரங்! ' என்று படபடவெனப்பேசிவிட்டு கைகுலுக்கி விடை பெற்று நகர்ந்தார்.

சாரங்கிற்கு பழம் நழுவிப்பாலில் விழுந்தமாதிரி இருந்தது .நாளை

ஸ்படிகாவைபார்த்ததும் சொல்லிவிடவேண்டும், ' இது பருந்துகள் இருக்கும் கூட்டம் இங்கே கிளிகள் எல்லாம் இரையாகும் ' என்று ' வசுதாவின் பெண் என்பதால் அவளும் கெட்டிக்காரியாகத்தான் இருப்பாள் புரிந்துகொள்வாள்.

மறுநாள் சாரங் சரியான நேரத்திற்கு அங்கு சென்றுகதவைத் தட்டினான்,திறக்கப்பட்ட கதவிற்குப்பின்னே நிலா ஒன்று நின்றுகொண்டு 'ஹாய் நான் ஸ்படிகா..டைரக்டர் நேத்திக்கே சொல்லி இருந்தார்..படத்தின் காமெராமேன் ஷாரங் என்பவர் இன்னிக்குவருவார்ன்னு...ஆக்ட்சுவலி ஐயாம்
வெயிடிங் ஃபார் யூ சார்! வாங்க.. ' என்று வரவேற்றாள். பழகும் பண்பில் அழகுகூடும் என்றால் என்றால் அது இந்தப் பெண்ணிற்குப் பொருந்துமென சாரங் நினைத்துக் கொண்டான்.

வசுதாவைபோலவே ஹிப்போக்ரசி இல்லாத பேச்சு!

பதினெட்டுவருட முன்பு சந்தித்த கிராமத்துப் பெண் வசுதா இன்று மாடர்ன் உடையில் அதே சிரிப்பும் வெளிப்படையான பேச்சுமாய் தன் எதிரே நிற்பது போலத் தோன்றியது

எப்படிக்கேட்பது இவளிடம் உன் அம்மா பெயர்வசுதாதானே என்று ?

அவன் தயங்கும்போதே , ஸ்படிகா, ' சார்..அம்மா இங்கே பக்கத்துல கடைக்கு ஏதோ தமிழ்ப்புத்தகம் வாங்கப் போயிருக்காங்க,ஷி ஈஸ் ஃபாண்ட் ஆஃப் புக்ஸ்!
பம்பாய்ல அதிகம் தமிழ் புக்ஸ் கிடைக்காதா அதான் சென்னை வந்ததும் அள்ளிட்டுவரக் கிளம்பிட்டாங்க.. திரும்பி வரும் நேரம்தான்... இருந்து பார்த்து பேசிட்டுப் போங்க சார் ப்ளீஸ் ? ' என்று அவன் சந்தேகத்தை உறுதிபடுத்தினாள்.

வசுதா அடுத்த சில நிமிஷங்களில் உள்ளே நுழையும்போது, சாரங் அந்த ஹோட்டல் அறையை ஒட்டிய பால்கனியில் நின்று ஸ்படிகாவை அங்கே நிறுத்திவைத்து புகைப்படம் எடுக்கக் கோணம் பார்த்துக் கொண்டிருந்தான்.

வசுதா வந்துவிட்டாள்.

'ஹாய்ம்மா!..காமெரா மேன் வந்து ஏழெட்டு ஸ்னாப்ஸ் எடுதுட்டார்மா..இன்னும் ரண்டு எடுக்கணுமாம் பால்கனில... ' என்று குழந்தை போலக் குதித்தபடி கூவினாள் ஸ்படிகா.

'சரி..முடிச்சதும் நீ ஜிம்முக்குப் போகணும் மறந்துடாதே ஸ்படிகா.. ' வசுதாவின் குரல் பால்கனியில் நின்ற சாரங்கின் செவியைத்தழுவியது.

'சார்.! ஆங்கிள் சரியா இருக்கா?.ரெடியா ? ' ஸ்படிகா கேட்டபடி அருகில் வந்தாள்

சாரங் சொன்ன கோணத்தில் நின்றாள்

'ஆச்சும்மா ' என்று சாரங் சொன்னதும், 'தாங்க்ஸ் சார்..நான் ஜிம்முக்குப் போகணும் அம்மாவும் 'புக் 'கடைலிருந்து வந்துட்டாங்க நீங்க அவங்ககிட்ட பேசுங்க...பைபை ' என்று கை அசைத்து விடை பெற்று வெளியேறினாள்.

சாரங்கிற்கு மனதோடு கால்களும் தயங்கின.

அதற்குள் வசுதாவே பால்கனிக்கு வந்தவள்,சாரங்கைப்பார்த்ததும் ஒருக்கணம்நெற்றியைத்தேய்த்தபடி  யோசித்தாள்

நாற்பதை நெருங்கும் வயதிலும் இளமையை அதிகம் இழக்காத அவளூடைய முகத்தை நேருக்கு நேர் பார்க்கவே கூசினான் சாரங்.

வசுதா சட்டென அவனது வலது காலைக் குனிந்துபார்த்தவள் உடனே, ' 'ஓ நீங்கதான் டைரக்டர் சொன்ன காமெரா மேன் ஷாரங்கா ? என்றாள் வெறுப்பான குரலில்.

'ஆமாம் வசுதா..உன் பெண் போட்டோவை நேத்திக்குத் தான் பாத்தேன் உடனேவே அது உன் பெண்தான்னு புரிஞ்சது.

உடனேயே எனக்கு மனசு துடிச்சது.வசுதா, நீ கெட்டிக்காரி, புத்திசாலி .ஆனாலும் இந்தக் கனவுத் தொழிற்சாலையில் உன் பெண் காலடி வைக்க நீ எப்படி சம்மதித்தாய் ? இங்கே இளமை ரசிக்கமட்டும்தான் ஆராதிக்க அல்ல என்று
உனக்குத் தெரியாதா ? ஆண்களின் ஆளூமையில் இருக்கிற உலகத்தில் எந்த தைரியத்தில் உன் குழந்தையை நடிக்க
அனுமதிக்கிறாய் ? வேண்டாம் வசுதா ..ஸ்படிகாவை அழைத்துக் கொண்டு திரும்பப்போய்விடு.... '

சாரங் உணர்ச்சிவசப்பட இப்படிச் சொன்னதும் முகம் சிவக்க அவனைப்பார்த்தாள் வசுதா .

'எங்கே போவது ? காதல் கனவை நனவாக்காமல் அப்பா சொல்கேட்டு கோழையாய் காதலியை மறந்தவன் பின்னாடியா அல்லது அவனைப் பழி வாங்க அவசர அவசரமாய் அந்தக் காதலி கல்யாணம் செய்து கொண்டு அவனிடம்
வெளிப்படையாய் பேசுவதாய் எல்லா உண்மயையும் சொன்னதில் சந்தேகம் கொண்டு ஆறுமாதக் கைக்குழந்தையுடன் பெண்டாட்டியை நடுராத்திரில பம்பாய் ரயிலடில விட்டு ஓடிப்போன புருஷனைத் தேடிப் போவதா ? தாயில்லாப்பெண்ணாய் வளர்த்தவளின் வாழ்க்கை தன்னால் இப்படிப் பாழாகிவிட்டதே என்று மாரடைப்பில் கண்மூடிப் போன அப்பாவின் பின்னாடியே தற்கொலை செய்து கொண்டுதான் போவதா ? ஆண்களுக்கு காதல் ஒரு ஆட்டொகிராஃப் புத்தகம்..அப்பப்போ புரட்டிப்பார்க்கலாம்..மனைவிகிட்டே மனம்விட்டு அதை
பகிர்ந்துக்கலாம்...தோளில் ஒரு பைமாட்டிட்டு பழைய காதலியைத் தேடிபோய் பார்த்துவிட்டுகூட வரலாம். ஆனா காதலனின் ஸ்பரிசம்கூடப்படாத பெண்கள் உண்மை சொன்னால் அதை எல்லா ஆண்களாலும் ஜீரணிக்கமுடிவதில்லை...பதினெட்டுவருஷம் பம்பாயில் தன்னந்தனியா கைகுழந்தையை வச்சிட்டு என் இளமையையும் பாதுகாத்துட்டு மானத்தோடுதான் வாழ்ந்தேன். சகலமும் தெரிஞ்சவளாகப் பெண் இன்னிக்கு இருக்கணும்..விவரம் தெரியாதவளாய் இருந்தால் உலகம் ஏமாற்றும் .மனதில் உரத்துடன் உடலில்பலத்துடன் வாழ்க்கையை ஏத்துட்டு, சிலநல்ல உள்ளங்கள் செய்த உதவியினால் மானத்தோடு மகளையும் வாழவச்சிட்டு இருக்கேன். என் மகள் என்னைப்போல் தான் இருப்பாள். எல்லா இடத்திலும் நன்மைகளும் இருக்கு தீமைகளும் இருக்கு. பகுத்தறிந்து நல்லபாதையில் செல்ல மனம் என்கிற கடிவாளமும் இருக்கு..உங்கள் அட்வைஸ் எனக்குத் தேவை இல்லை..நீங்கள் போகலாம் 'என்றாள் உஷ்ணமானகுரலில்.

'வசுதா ? ' கண்ணோடு வாய் கெஞ்சியது சாரங்கிற்கு. தொடர்ந்து ஏதோ பேச வந்தவனைப் பார்த்து 'பட் ' என்று இரு கை சேர்த்து குவித்தாள் வசுதா.பிறகு வாசல்கதவு நோக்கி கை காட்டினாள்.

சாரங் மெளனமாய் நடந்தான். சற்றுமுன் வசுதா பேசிய வார்த்தைகள் சாட்டையடியாய் நெஞ்சில் வந்து விழுந்தன.

வசுதாவின் வாழ்வில் தான் மண்குதிரையாய் இத்தனை நாளும் இருந்திருக்கிறோம் எனும் நினைப்பே அவன் நெஞ்சைப் பிழிந்தது.

இனியாகிலும் அவளது நாவிலிருந்து சவுக்கடி பெற்றாகிலும் வண்டிக் குதிரையாய் வசுதாவின் வாழ்க்கைப் பயணத்தில்
முன்னேற்றிச் செல்ல மனம் தீர்மானித்தது.

ஹோட்டலைவிட்டு வெளியே வரும்போது சாரங்கின் வாய், தான் படித்த பாரதி பாடலை முணுமுணுத்தது.

'பெண்டுகளைத் தாய் போற் பிரியமுற ஆதரித்து

நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்

பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்

எங்கிருந்தோ வந்தான்.... '

****









--
மேலும் படிக்க... "எங்கிருந்தோ வந்தான்.....(சிறுகதை காதலர்தினத்திற்கு)"

Monday, February 13, 2012

காதல் நதிகள்!

காதல்நதிகள் பெண்கள்!

இடியொடு மின்னல்

பின்னர்வரும் மழையின்

சின்னத்தூறலிலும்

சிலிர்த்துப்போகிறோம்.



விழிமணிகள் விரித்து

விந்தைமனவெளியினில்

பார்த்திட்டகோலங்களை

பத்திரமாய் காக்கின்றோம்





ஐந்துவிரல்களை

அழுத்திப்பிடித்த கரங்கள்

கண்டங்கள் அனைத்தையும்

கொண்டுசேர்த்தகடல்கள்

அந்ததொடுதலில் அன்று

மெல்லச்சரிந்ததில்

குன்றுமணலாய்

எங்கள் தாபஏரிகள்



பல்கிபெருகி

வளைந்து நெளிந்து

பாய்ந்து ஓடி

இன்று

அடங்கிக்கிடக்கும்

காதல்நதிகள்!

மேலும் படிக்க... "காதல் நதிகள்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.