Social Icons

Pages

Sunday, March 30, 2008

தாக்கம்(சிறுகதை)

இரண்டுவருஷமாய் நான் இந்தியாவிற்குப்போகவே இல்லை. அதற்குமுன்புவரை வருடம்
ஒருமுறைதவறாமல் போவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருமுறையும் இருபதுநாளுக்குமேல் லீவ் எடுத்துக்கொண்டு வீட்டில் அப்பா அம்மா அண்ணா மன்னி தம்பிதங்கை அண்ணாவின் குழந்தை ப்ரியாக்குட்டியுடன் பொழுதினைக்கழித்துவருவேன்.மலைக்கோட்டை, சமயபுரம்,
கல்லணை,முக்கொம்பு,வயலூர் என்று பெரிய திட்டங்களோடுதான்
துபாயைவிட்டுப்புறப்படுவேன் ஆனால் அங்கெல்லாம் போக நேரம் கிடைக்காத அளவுக்கு
வீடு என்னைக் கட்டிப் போட்டுவிடும்.


இந்தவருடமும் ஊருக்குப்போகவேண்டாமென்றுதான் இருந்தேன் ஆனால் போனவாரம் போனில்
ப்ரியாகுட்டி,"சித்தப்பா எப்போ வரே?' என்று கேட்டதும் மனது கேட்கவில்லை.
புறப்பட்டுவிட்டேன்!


காவிரிப்பாலத்தில் டாக்சியில் வரும்போதே காலைநேரத்து இளம்குளிரோடு
வீசியகாற்றில் உடலிற்குப் புதுத்தெம்பு வந்துவிட்டது.


மாம்பழச்சாலையைக் கடந்து ஊருக்குள் டாக்சிநுழையும்போது எதிரே விண்ணைமுட்டும்
ராஜகோபுரம் 'வா வா' என அழைப்பதுபோல இருக்கிறது.


தெற்குவாசலில் டாக்சியை நிறுத்தசொல்லி மன்னிக்குப் பிடிக்குமே என்று ஜாதிமல்லி
பத்துமுழமும், கோபுரத்துஅடியில் கூறுகட்டி
விற்றுக்கொண்டிருந்தவளிடம் அம்மாவுக்காக கொய்யாபழமும் வாங்கிக்கொள்கிறேன்.


டாக்சியின் எஃப் எம் 'தோழா தோழா தோள் கொடு தோழா 'என்றது. போனமுறை ஊர்வந்தபோது
தீப்தா என்னிடம் பேசும்போது
பாடியபாடல்! என் இனிய சிநேகிதியான அவளுக்கும் குடும்பச் சுமை அதிகம்,அதுவும்
அவள் அப்பாவின் மறைவிற்குப்பிறகு, உள்ளூரில் ஒரு
சீட்டுக்கம்பெனியில் பணிபுரிகிறாளாம், மாதம் முவாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக


சித்திரை வீதிவழியே டாக்சிபோகும்போது இரண்டுவருடங்களில் கொஞ்சமும் மாறாத என்
ஊரைப்பெருமையுடன்பார்த்துக்கொள்கிறேன்.
. தேரடியில் ரங்கப்ரசாத் மற்றும் பாபு, சுதர்சனுடன் கிரிக்கெட் விளையாடியதை
மனம் அசைபோட்டது.


?யாரு பரத்வாஜனா? ஏண்டாப்பா, ரண்டுவருஷம் கழிச்சி வரபோல்ருக்கு?"
taaஎதிர்வீட்டுதிண்ணையிலிருந்து மூக்குக்கண்ணாடியை எடுத்து மறுபடி அணிந்தபடியே
கிச்சாமாமா குரல்கொடுத்தார்.


"ஹைய்யா சித்தப்பா வந்தாச்சு:!" ஓடிவந்தது ப்ரியாகுட்டி. அட! ப்ரியாக்குட்டி
எப்படி வளர்ந்துட்டது!


டாக்சியை அனுப்பிவிட்டு நிமிர்கிறேன்.


வீட்டுவாசல்கதவை அடைத்துக்கொண்டு உறவுப்பட்டாளம்!


பார்வையாலேயே பாசத்தைப்பொழிந்தார் அப்பா. பள்ளிக்கூடத்தில் ஆசிரியராய்
பணிபுரிந்தபோது அதிகம் பேசிய களைப்போ என்னவோ ஓய்வுபெற்றதிலிருந்து அப்பா
யாருடனுமே அதிகம் பேசுவதில்லை.


"அதில்லைடா பரத் உங்கப்பாக்கு குடும்பச்சுமையை உன்மேல ஏத்திட்டோ மேன்னு
மனசுக்குள்ள குறுகுறுப்பு உங்கண்ணாக்கும் சுமாரான சம்பளம்தான். சேமிப்பும்
அதிகமில்லை..குடும்பம் ஓடணும்னுதான் படிச்சதுமே நீ துபாய் போய் பணம்
அனுப்பிண்டு இருக்கே..பாவம் ...நாங்கள்ளாம் வாய்விட்டு சொல்லிடுவோம்...
உங்கப்பா மனசுக்குள் வச்சிண்டு குமைவார். அதான் மௌனசாமியாராய் ஆயிட்டார்"
என்று
போனதடவையே அம்மா சொன்னாள்.


"ரண்டுவருஷமாச்சே கண்ணா எப்டிப்பா இருக்க? என்னவோ இந்தக்குடும்பம் முன்னேறவும்
, வீட்டுக்கடனை அடைக்கவும் உன்னை
அவ்வளோ தூரத்துக்கு அனுப்பிட்டோ மேன்னு பலசமயம் வருத்தமா இருக்குப்பா"


அம்மா இப்போதும் பார்த்ததும் கண்பனித்தாள்.


"வாங்கோ! போனவருஷம் வருவேள்னு ரொம்ப எதிர்பார்த்தோம்"என்றாள் மன்னி. கல்யாணமாகி
ஆறுவருடங்களாகியும் மாறாத புன்னகைமுகம்.


" அதான் லீவே கிடைக்கலை வரமுடியலைன்னு போன்ல சொல்வானே விஜி? இப்போ லீவ்
கிடைச்சிருக்கு ஓடிவந்துட்டான் என் தம்பி!
வாடா பரத்...எப்படீ இருக்கே? அம்மா! அவனுக்கு ஃபில்டர்காஃபி புதுப்பால்ல
புதுசா போட்டுக்கொடு" அண்ணா ராஜு தோளைத்தட்டி வரவேற்றான்.


"பரத் அண்ணா! நான் இந்தவருஷம் ப்ளஸ்டூக்கு ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணி
படிக்கறேன்'


'நானும்:தான்"


இரட்டைசகோதர உறவுகள் சேர்ந்துகுரல் கொடுத்தன.


"இந்தவருஷமும் நீ வரலேன்னா நாங்க கடனை உடனைவாங்கி டிக்கட்போட்டுண்டு
துபாய்வந்துருப்போம்,தெரியுமா அப்படி
ஏங்கிட்டோ ம்டா பரத்! போன்ல எத்தனை பேசினாலும் நேர்ல பாக்றாப்ல ஆகுமா சொல்லு?"


"வந்ததும்வராததுமா அவனை ஆயிரம் கேள்வி கேக்காதங்களேண்டிம்மா.. பரத்! ஊஞ்சல்ல
உக்காருப்பா... டீ சித்ரா! fan போடேன் சித்த..
குழந்தை வெளிநாட்ல ஏசிகீசின்னு சௌகர்யமா இருப்பான் இங்க வந்த சித்த நாழில
கறுத்துப்போயிட்டான்பாரு.." அத்தை-அப்பாவின் மூத்த சகோதரி- வாஞ்சையுடன் என்
தலையைக் கோதிவிட்டாள்.


. :அம்மா சூடாய் வெண்பொங்கலும் கத்திரிக்காய் சுட்ட கொத்சும் தட்டில் வைத்து
என்னிடம் நீட்டினாள்.தங்கநிறத்தில் வறுபட்டமுந்திரிகளும், பொம்மைமுயலின்
கண்களைப்போல முழித்துக்கொண்டிருந்த மிளகும் நாக்கில் நீர் ஊறவைத்தது.


புழக்கடைப்பக்கம் போய் கிணற்றடியில் கைகால் அலம்பிக்கொண்டுவந்து தட்டை
அம்மாவிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.


"காஃபி முதல்ல தரக்கூடாதோ?" அண்ணா கத்தினான்.


"பசியா இருக்குமோன்னு முதல்ல டிபனைத் தந்தேன்..முடிச்சதும் காஃபி கலந்துட்டா
போச்சு"


"பொங்கலோட வடையும் பண்ணி இருக்கலாம்னு இப்போ தோண்றது
..சாப்பாட்டுக்குப்பண்ணிடலாம்மா...மச்சினருக்கு தயிர்வடைன்னா ரொம்பவே
பிடிக்குமே?" மன்னி உருகினாள்.


"நேத்தே திரட்டிப்பால் கிளறிவச்சிட்ட்டேன் குழந்தைக்கு தட்ல ஓரமா போடேன்
பத்மா,சொல்லணுமாக்கும்? "அத்தை அதட்டினாள் அம்மாவை அன்பாக.


வாங்கிவந்த சாமான்களை அனைவரிடமும் கொடுத்தபோது கண்களில் மகிழ்ச்சிதவழ நன்றி
தெரிவித்தனர்.


"எதுக்குடா இப்படி சிரமம் எடுத்துக்கறே?"அண்ணன் அன்பாய்கடிந்துகொண்டான்.


ஊரும் மாறவில்லை என்வீட்டுமனிதர்களும்மாறவில்லை என்னும்போது எனக்குப்பெருமையாக
இருக்கிறது.


"கொள்ளிடம்போய்குளிச்சிட்டுவந்துடறேன்" என்றபோது அப்பா தன் சைக்கிள்சாவியை
என்னிடம் தந்தார். நடந்துபோகக்கூடாதாம்!


படித்துறையில் தீப்தா துணி துவைத்துக்கொண்டிருந்தவள், என்னைக்ண்டதும்,"பரத்
எப்போ வந்தே? "என்று வியப்பாய் கேட்டாள்.


சிறிதுநேரம் நாஞ்சில்நாடனையும் ஜெயகாந்தனையும் அலசினோம்.


"சுஜாதா போயிட்டாரேடா பரத் நம்பவேமுடியல"


"ஆமா நம்மூர்க்காரர் வேற...மனசுக்கு ரொம்பக்கஷ்டமா இருக்கு.."


"என்னவோபோ..சொல்லிக்காம வர ஒரேவிருந்தாளி மரணம்தான்...
அதுபோக்கட்டும்..நாளைக்கு ஆடும்பல்லக்குடாபரத்...வாசல்பூரா
கோலம் வழக்கம்போலப்போடப்போறேன்..நீவந்து பார்த்து கருத்து சொல்லணும் என்ன?"


"இந்த கம்ப்யூட்டர் யுகத்துலயும் சின்னக் குழந்தைமாதிரி கோலம்போடறதும்
கொள்ளிடக்குளியலுமாய் அது இதுன்னு இருக்கியா தீப்தா?"


"மனசுக்கு சந்தோஷமான விஷயங்களை எதுக்கு மாத்திக்கணும் அல்லதுமறக்கணும் , அதுவே
மத்த துக்கங்களை மறக்க ஒருகருவியா இருக்கறப்போ?"


நான் சிரித்தபடி வேறுபக்கம் நகர்ந்தேன்


ஆயிற்று ஊருக்குபோகிற நாள் வந்தாயிற்று.


எந்நேரமும் விரல்பிடித்துக்கொண்டே விளையாடிய ப்ரியாகுட்டி..


பார்வையால் வருடும் அப்பா..


வாய்க்கு ருசியாய் சமைத்துப்போடும் அம்மாவும் அதனை வயிறாரப் பரிமாறியமன்னியும்
..


பாடங்களில் சந்தேகம்கேட்டு என்னைப்பெரிய ஆசிரியர் போல மதிக்கும் என்
உடன்பிறப்புகள்..


'துபாய்ல உப்புபுளிகிடைக்குமா ?நல்ல ஹோட்டல் இருக்கா? உடம்புக்கு ஏதாவதுன்னா
யாருடா பக்கத்துல இருக்கா உனக்கு?'
அத்தையின் அன்பான அக்கறையான கேள்விகள்.


'பரத்! அம்மா அப்பாவைப்பத்தி கவலையேபடாதே ...நானும்மன்னியும் நன்னா
பாத்துக்றோம் என்ன? "
அண்ணாவின் அனுசரணையான பேச்சு..


சிநேகிதம் என்கிற எல்லைக்கோடிற்குள்லேயே எப்போதும் இருந்துகொண்டுபழகும்
அன்புதோழி தீப்தா...


எல்லாரையும் விட்டு ஊருக்குபுறப்படவேண்டுமே என்றிருக்கிறது.


அப்பாமட்டும் எவ்வளவு தடுத்தும் சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட ஸ்ரீரங்கம்
ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.


ரயில் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது அப்பா என்னிடம்,


"பரத்! உன்கிட்ட வந்ததுலேந்து கேட்க நினச்சேன் , இப்போ கேட்டுட்றேன்.. உன் தலைல
குடும்பச்சுமைய ஏத்திட்டோம்ன்னு எங்கபேர்ல கோபமா? அதனல்தானே நீ இத்தனை நாளாய்
ஊர்பக்கமே வரலயா?" என்றார்.


'ஐயோ அப்பா! இந்தப்பேச்சுக்கு உங்கள் மௌனமே பரவாயில்லை' என்று கத்தவேண்டும்
போலிருந்தது.


என்னையே பார்த்துகொண்டிருந்த அப்பாவின் விரல்களை பிடித்துக்கொள்கிறேன்.


"அ அ ..அ.ப்.பா! " வார்த்தைகள் உடைந்து வந்தன .


இருபத்தி ஏழுவயதில் இருபதுவயதை முழுங்கிவிட்டு, சிறுவனாய் கதற
ஆரம்பிக்கிறேன்.


"அப்பா ஒவ்வொரு தடவை ஊருக்கு வந்துவிட்டுப்போகிற போதெல்லாம் உங்க எல்லாருடைய
பாசத்தையும் பரிவையும் அனுபவிச்சிட்டு
திரும்பி துபாய் போனதும் பலநாட்களுக்கு என்னால் இதிலிருந்து
மீளமுடிவதில்லை.. எதையுமே ருசிகண்டால்தானே அவஸ்தை?
என்னால் ஆசையை அடக்கமுடியும்போல இருக்கு... ஆனா அவஸ்தையை தாங்க
முடியலப்பா..அதான் இத்தனை நாளா வரல...இப்போ மறுபடி துபாய்போனதும் இந்த அவஸ்தை
தொடரபோகிறதுப்பா.." நான் முடிக்கவும் உடனே


"ப..ர..த்!" அப்பாவின் குரலில் மேலும் கரைந்துவிடவும் இருந்த நிலையில், நல்ல
வேளையாய் ரயில் வந்துவிட்டது
மேலும் படிக்க... "தாக்கம்(சிறுகதை)"

Saturday, March 29, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.(தொடர்)

அத்தியாயம் 4



"யாரது சாரங்கனா?"

மாடிப்படியில் இறங்க இருந்தவனை எதிர்ப்ளாட்டின் வாசல்கதவைத்திறந்தபடி வெளியே வந்த பத்ரியின் குரல் திரும்ப வைத்தது.

நிலைப்படியின் ப்ளாஸ்டிக் மாவிலைத்தோரணத்திற்குக் கீழே கைவைத்த வெள்ளைபனியனுடன் லேசான முன் வழுக்கையுடன் பூர்ணம் விசுவநாதனின் ஜாடையில் பத்ரி நின்றுகொண்டிருந்தார். பேசுவதும் அவரைப்போலவே இருக்கும்.

அண்மையில்தான் அஞ்சல் அலுவலகப்பணியின்றும் ஓய்வு பெற்றவர். ஒரேமகள் திருமணமாகி பம்பாயில் இருக்கிறாள். திருமதி பத்ரி அமைதியாய் இருப்பவர்.

பத்ரியின் வீட்டில் எம் எஸ்சின் பாடல்களோ அல்லது ஜி என் பியின் சாகித்யஸ்வரங்களோ ஒலிக்காத நாளில்லை.சங்கீதம் தெரிந்தவராம் முதல் சந்திப்பிலேயே சொல்லி இருக்கிறார். இப்போது உளளேயிருந்து 'குறை ஒன்றுமில்லை' என்றார் எம் எஸ் தன் தேன்குரலில்.
.

"நல்லாருக்கீங்களா பத்ரிசார்?" சாரங்கன்கேட்டதும் அவர் சிரித்தார்.," எம் எஸ் பாட்டுகேட்கும்போதே தெரியணுமே உனக்கு? ஆமா ஆபீஸ் போகலயா இன்னிக்கு?'

"இல்லை சார்.." என்று ஆரம்பித்து காரணம் விவரித்தவன்,"சார்! ராதிகா எங்கவீட்டுசாவி உங்கக்கிட்ட கொடுத்தாளா?" என்று கேட்டான்
.
பத்ரி சிரிப்பை பதிலாக்கினார். "அ அதுல வந்து.." தயங்கினார்.

"ஏன் சார்சிரிக்கறீங்க? தயங்கறீங்க?'

"சாரங்கா! உன் பொறுமையும் பெரியவங்களை மதிக்கிற பண்பும் எனக்கு ரொம்பப்பிடிக்கும். இதுல கால்பங்கு உன் மனைவிக்கு இருக்கலாம்"

"ராதிகா வெளிப்படையா பேசிடுவா... மனசுல வச்சிக்கத்தெரியாது எதையும் பாவம்"

"பேச்சு பத்தி சொல்லவில்லை.. அது பிறவிகுணமாய் இருக்கலாம்..ஆனா விருப்பங்களை தேர்வு செய்யலாமில்லையா? இந்த ஃப்ளாட்ல இருக்கிற பெண்கள் எவ்வளவோ விதத்தில பொழுதை நல்லா கழிக்கறாங்க...பாட்டு பஜனை தையல்வகுப்பு ஓவியப்பயிற்சி கம்ப்யூட்டர் வகுப்புன்னு எல்லாமே இங்க ஆளுக்கொருவர் பொறுப்பேத்து நடத்தறாங்க..அதில் ஒன்றிலும் ராதிகா கலந்துக்கிறதில்லை மாறாய்
நடத்தறபெண்களை கிண்டல் செய்கிறாளாம். 'ஏ'ப்ளாக் விஜி வருத்தப்பட்டுக்கிட்டா அன்னிக்கு என் வீடுவந்தப்போ..."

"ராதிகாவுக்கு எங்காவது வெளில போய் வேலை செய்ய ஆர்வமாம் சார்"

"இப்போவே தினமும் நீ ஆபீஸ் போனதும் கதவைப்பூட்டிட்டு வெளிலதான் போயிடறா,,மாலை நீவரும்போது கரெக்டா வந்துடறா..ஒருநாள்
நான் இதைக்கேட்டபோது ஷட்அப் ன்னு திட்டிட்டு போயிட்டாப்பா..ரொம்ப துணிச்சலானபொண்ணுதான்"

"ராதிகா ஒரு சுதந்திரப்பறவை. அவள் விஷயத்தில் நான் தலையிடவே மாட்டேன் சார். பொதுவா பெண்களை நான் மிகவும் மதிப்பவன்
ராதிகா சார்புல உஙகட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்"

"அதில்ல சாரங்கா.. அதிர்ந்துவராத புருஷனும் முதிர்ந்து வராத சாதமும் உபயோகமில்லைன்னு பழமொழி சொல்வாங்க.. சரி அதிருக்கட்டும் நம் ஃப்ளாட்டுக்கு எதிரே பெரிய காலிமைதானம் இருந்ததே அதுல வேகமா ஒருகட்டிடம் வருதே, நீ பார்த்தியா?"

ஆமாம் சார் என்ன கட்டிடம் அது?

"அங்க ஒரு அனாதை இல்லம் வரப்போகுதாம...உரிமையாளர் .. அடிக்கடி கட்டிடப்பணியை பார்வையிட இங்க வராங்களாம்.. நல்லமாதிரியா இருக்காங்கன்னு ஃப்ளாட்ல எல்லாருமே சொல்றாங்க... கட்டிடத்திறப்புவிழா அன்னிக்கு நம்ம ஃப்ளாட்
பெண்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தந்திருக்காங்களாம்.."

"ஓ அப்படியா? நல்ல சேவை செய்யறாங்க!:"

சாரங்கன் இப்படி சொல்லும்பொது செருப்புசத்தம் படிகளில் கேட்டது.

ராதிகா!

"நான்சென்ஸ் ,,பவர் இல்ல லிஃப்ட் வேலை செய்யாதாம்...பேட்டரி சரிசெய்துவைக்கவேணாமோ என்ன ஃப்ளாட் இது? வாடகைமட்டும் பதினைஞ்சாயிரம் ரூபா வங்கிட்றாங்க..ஹ்ம்ம்....ஆமா நீங்க என்ன திடீர்னு வந்திருக்கீங்க?" என்று கடுகடுத்தவள்.
சாரங்கனைப் பார்த்துக் கேட்டாள் வியப்புடன்.

கதவைத்திறந்த அவளிடம் சுருக்கமாய் சொல்லிவிட்டு பத்ரியிடம் திரும்பிப்பார்த்து,"வரேன் சார் ..நன்றி, இவ்வளவு நேரம் பேசி எனக்கு கம்பெனி தந்ததற்கு"என்றான்.

"சிலருக்கு வாசல்கதவைதிறந்துவச்சிட்டு யார் எங்கபோறாங்கன்னு பாக்றதே வேலை?" என்று ராதிகா பார்வையிலும் வார்த்தையிலும் அனலைக்கக்கவும், பத்ரி உள்ளே
நழுவினார்.

"பெரியவங்ககிட்ட மரியாதையாப்பேசணும்மா ராதிகா" சொல்லியபடியே

பாத்ரூம்போய் வந்தவன்,"ராதிகா! பாத்ரூம்ல சிகரெட் துண்டுபார்த்தேன்"என்றான்.

"ஆ அ அதுவா? "

"குழாய்ரிப்பேர்காரர் வந்தாரா என்ன?"

"ஆ அ ஆமாம் ...அவந்தான் யூஸ்லெஸ்ஃபெலோ ..அங்ககுடிச்சிட்டு போட்டிருப்பான்.."

"பர்வால்ல... நான் சாக்கடைல தள்ளிவிட்டுட்டேன்.. ஆமா ராதிகா!!ஏதோ இன்டர்வியூன்னு சொன்னியே இப்போ அதுவிஷய்மாவா வெளில போயிருந்தாய்? மாலையிலதான்னு சொன்ன நினைவு எனக்கு. ஆம் ஐ ராங்?"

"நான் ரிலையன்ஸ் ஃப்ரெஷ்போய் காய்பழம்வாங்க வெளிலபோனேன்....மேலும் நான் அந்த இண்டர்வ்யூபோகபோறதில்ல"

"ஏன்மா?'

"என்னவோ பிடிக்கல..விடுங்க.."
"அப்டியா?ராதிகா !!எதிரே ஒரு அனாதைஇல்லம் வரப்போகுதாம் ..அதுக்கு நீயே வாலண்டியரா ஏதும் சேவை செய்யலாமே?மனசுக்கும் நிறைவா இருக்குமே?"

'அய்யோ! ஒரு அனாதை இல்லமா அங்கவரப் போகுது? நான் ஏதோ ஸ்டார்ஹோட்டல் இல்ல டான்ஸ்க்ளப்புனு நினச்சேன்...
சினிமாதியேட்டர் வந்தா நல்லா இருந்திருக்கும்...சினிமால நடிக்க ஆசைப்பட்ட எனக்கு தினம் சினிமாபோய் பார்க்கவாவது
முடிஞ்சிருக்கும்..இது எதுவுமில்ல ச்சே ச்சே.."

"சினிமால நடிக்கணுமா உனக்கு?"

"ஆமாங்க..ஒரு ஜோதிகா அல்லது நயனதாரா மாதிரி வரணும்..நான் பார்க்க அழகாத்தானே இருக்கேன் நடிக்கக்கூடாதா என்ன?"

சாரங்கன் தன் இளம் மனைவியை குழப்பமாய்பார்த்தான் .
இவள் என்ன ஆர்ப்பரிக்கும் கடலா? கொட்டும் அருவியா?

புன்னகையுடன் நின்றவனின் கைகளை இறுகப்பிடித்துகொண்டாள் .

தோளில்முகம் சாய்தபடி,"நைட் டின்னருக்கு தாஜ் போகலமா?" எனக்கேட்டாள் .

அந்தக்கன்னங்களின் செழுமையும் கண்களின் குறுகுறுப்பும் சாரங்கனை திக்குமுக்காடவைத்தன.அப்படியே அவளை இறுக்க அணைத்தபடி"ம்..அதற்குமுன்.."என்று அவளின் சிவந்த இதழ் நோக்கிகுனிந்தான்.

சட்டென விலகிய ராதிகா."இப்போ வேணாம் ப்ளீஸ்'என்று நகர்ந்துவிட்டாள்.

கல்யாணம் ஆன இந்த ஆறு மாதமாய் அருகில் வரும்போதெல்லாம் இதையே தான் சொல்கிறாள் ,சாரங்கனும் பொறுமையாகத்தான் இருக்கிறான் .


கிணற்று நீர்தானே ஆற்றுவெள்ளமாஅடித்துக் கொண்டு போகும் என நினைத்து சமாதானம் செய்துகொள்கிறான்.

பாவம் அவனுக்குத் தெரியுமா, வெள்ளம் வேறுதிசையில் அடித்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது என்பது!!?

(தொடரும்)
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்.(தொடர்)"

Friday, March 28, 2008

சுடோகுசுமதி!

சுமதி, சிறுகுறிப்பு...


சமையலில் கைதேர்ந்தவள்.. அதுவும் வட இந்திய உணவுகள் மேலைநாட்டு பாஸ்தா, பீஸ்ஸா இவைகளில்
தேர்ந்தவள். ஓவியக்கலையில் மன்னி. ஹிந்துஸ்தானீ இசை அவளிடம் கொஞ்சும். மிமிக்ரி
செய்து அசத்துவாள்.
கைபார்த்து ஜோதிடம் சொல்வாள். சீட்டுக்கட்டினைவைத்துக்கொண்டு மேஜிக்
செய்வாள்..இன்னும் பல கலைகள் அவள் வசம் இருக்கிறது.


ஒருநாள் சுமதி என் வீட்டிற்கு வந்தாள் கணவர் பாஸ்கருடன்.


வந்ததும்,"நியூஸ் பேப்பர் இருக்கா?" என்றுகேட்டாள்.


லஞ்சம் வாங்கிய எம்பியைபற்றியோ அடிக்கடி உருவாகிவரும் காற்றழுத்த
மண்டலம்பற்றியோ, கருடாமாலில் நடக்கும் கார்டன்சில்க் சேல் பற்றியோ அண்மையில்
கைதான போலிசாமியார்பற்றியோ - இதில் ஏதாவது ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ
தெரிந்துகொள்ளத்தான் சுமதி ஆர்வமாய் கேட்கிறாள் என நான் நினைத்தேன்


ஆனால் பேப்பர்அவள் கைக்குபோனதும்தான் உண்மையே தெரிந்தது.


அவள்கணவர் பாஸ்கர் என்னைபரிதாபமாய்பார்த்தார்.


"எத்தனை நாளாய் இந்த வியாதி?' என்று நான் கேட்டது கூட சுமதியின் காதில்
விழவில்லை.


அதைவிட எகிறிவிட்ட மியூசிக்சானலின் காதைப்பிளக்கும் சத்தமோ,
எட்டூருக்குக்கேட்பதுபோல கிச்சனில் அலறும் மில்க்குக்கரின்
விசிலோ எதுவுமே கேட்காமல் சுற்றுப்புறம் மறந்த நிலையில் கையிலிருந்த பேப்பரில்
சுடோ க்கு கட்டங்களில் எண்களை இடுவதும் பின் அழிப்பதுமாய் இருந்தாள்.


"சுமதிகிட்ட சென்னாபடூரா இன்னிக்கு கத்துக்கலாம்னு நினச்சேன்...கஜல் பாடச்
சொல்லி கேட்க ஆவலா இருந்தேன்... அவ என்னடானா வந்ததுமுதல் சுடோக்குலயே மூழ்கி


சோகக்தையை ஆரம்பித்தார் பாஸ்கர்.


"என்ன சுமதி , வீடுவாசல், பாட்டு படம்வரைவது, சமையல் மேஜிக் -எல்லாத்தியும்
மறந்தே போயிடபோறியா என்ன?" என்று அவளிடமே கேட்டுவிட்டேன்.


"நீயுமா ஷைலஜா? வீட்டுமுல்லைமணம் யாருக்குமே தெரியாதா? .. ஒரு நிகழ்ச்சில சுடோ
கு அறிஞர்கள் அத்தனைபேரும்
கலந்துகிட்டு சுடோ குவில் நான் சாதனை செய்த போது ஆச்சரியப்பட்டு அப்ரிஷியேட்
செய்தாங்க தெரியுமா? வீட்லதான்
ஒரு ரெகக்னீஷன் இல்ல...ஜப்பான்லயோ சீனாலயோ சுடொகுபத்தி புது புத்தகம்
வந்திருக்காம் ஒண்ணு வாங்கித்தாங்கன்னு கேட்டேன் , பாஸ்கர்கிட்ட... காதில்
போட்டுக்கவே இல்ல. எல்லாம் மேல் ஷாவனீசம்... பார்த்திட்டே இரு... நான் சுடோ கு
எக்ஸ்பர்ட் ஆயிடுவேன் உலகமே என்னைப்புகழும் அந்த நாள் அருகில்தான் தோழி!"


சொல்லிவிட்டு திரும்ப பேப்பரில் கட்டம்கட்டமாய் எண்களோடு
முன்னேறிக்கொண்டிருந்தாள்.


"சுடோ க்கு சொடக்கு சுடேகு என்றுகடமுடன்னு இதை எப்படிவேணாலும் அழைக்கலாம்.
இந்தக்கட்டம் நிரப்பும் ஆட்டத்தை நாந்தான் இவளுக்கு பொழுதுபோக்காய் இருக்குமேன்னு
முதலில்அறிமுகப்படுத்தினேன், சொல்லியும் கொடுத்தேன். இப்போ இவள் வெறும் சுமதீ
இல்லை, சுடோ குசுமதி ஆகிட்டாளே என்ன செய்வேன் நான்?" அழாதகுறையாகப்
புலம்பினார் பாஸ்கர்.


பிறகும் நான் அவளை கவனித்ததில்,


டிவி சீரியல்களையே ஒதுக்கும் அளவுக்கு அதில் ஈடுபாடும், வாரமாதநாவல்களை
மறக்கும் அளவுக்கு அதில் மனம் லயிப்பதும்,
மார்கழிமாதம் வாசலில் அரிசிமாவில்போட்டு வைத்து அதற்கு அடுத்தவீட்டு
மாமிகளிடம் விடைகேட்டு உபத்திரம் செய்யுமளவுக்குபோய் விட்டாள் என்பது
தெரியவந்தது.


பாஸ்கரின் மனக்குறையைத் தீர்க்க யோசித்தேன்.


தலைமேல் சட்டென பல்பு எரிந்தது.


சுமதியின் சுடொக்கு பித்தினையே ஒரு உபயோகமான முறையில் கொண்டுபோய்விடுவது என்ற என் எண்ணத்தை செயலாக்க முயன்றேன்.


கம்யூட்டரில் ஒரு விளம்பரத்தை லேசர்ப்ரிண்ட் அடித்துக்கொண்டு அவள் வீடுபோனேன்
.
சுலோகவகுப்பு யோகாவகுப்பு போல சுடோகுவகுப்பு நடத்தக்கூடாதா என்ன ?


*இவ்விடம் சுடோ கு கற்றுத்தரப்படும். மாதக்கட்டணம் நபருக்கு நூறேரூபாய்தான்.
சுமதிபாஸ்கர்
7.முதல்குறுக்குத்தெரு
பசவண்ணா லேஅவுட்
பெங்களூர்*
விளம்பரத்தாளை நல்ல அட்டைஒன்றில் ஒட்டிக்கொண்டேன்.


"வீட்டுவாசலில் உடனே இந்த விளம்பரஅட்டைபோர்டை அவசரத்திற்கு மாட்டிவிடு சுமதி
அப்புறமாய் முறைப்படி விளம்பரப்பலகை மட்டிக்கலாம். உனக்கு இதில் உன்
எண்ணம்போலபொழுதும்போகும் வருமானமும் வரும் எப்படி ஐடியா?"


இப்படிக்கேட்க மனதிற்குள் ஒத்திகை செய்து கொண்டேன்.


ஆறுகிலோமீட்டர் அட்டோவில் பயணித்து அன்று ஆர்வமுடன் அவள் வீட்டுக்கதவைத்
தட்டினேன்..


திறந்த கதவிற்குப்பின்னே கையில் அன்னக்கரண்டியுடன் பாஸ்கர்!


'கவலைப்படாதே சகோதரா..ஷைலஜா வந்திருக்கா கவலையைத்தான் தீர்த்திடுவா கவலைப்படத
சகோதரா' அகன்ற புன்னகையுடன் ஏறிட்டேன்.


"உள்ளவாங்க"


சமையற்கட்டிலிருந்து புகைமண்டலம் தெரிந்தது. ஏதோ தீயும்வாசனை. சுமதி சுடோ கு
போட்டபடியே சமைக்கிறாள்போலும்.


உள்ளேபோனதும் பாஸ்கர் ஏதோ சொல்ல வாயெடுக்குமுன்பாக நான் பெருமையாய் விளம்பர
அட்டையைக்காண்பித்து என் திட்டத்தை கூற வாய் எடுப்பதற்குள் அவர்மகன்
மாடியிலிருந்து கிழே இறங்கினவன்,"அம்மாவைத்தேடியா வந்தீங்க ஆண்ட்டீ? அவங்க
காலைல சுடொகுக்ளாஸ்போயிட்றாங்க...நான் தினம் ஸ்கூலுக்குப் போகிற மாதிரி தினமும்
எனக்கு முன்னாடி கிளம்பிடறாங்க....சாய்ந்திரம்தான் வராங்க...
மாசம் ஐநூறுருபாயாம் இதுக்கு..... அப்பா சொன்னாரா?" என்று கேட்டான்.
***************************************************************************
மேலும் படிக்க... "சுடோகுசுமதி!"

Tuesday, March 25, 2008

நம்பிக்கை!

நேற்றைக்கிங்கோர் நெடுமரந்தன்னில் நிறைந்திருந்த பச்சிலைகளெல்லாம்,
காற்றடிக்கக் காம்பொடிந்து கதறித்தான் வீழ்ந்தனவே!
காற்றடித்து வீழ்ந்தாலும் மண்ணுக்குள் எருவாகி;
மரமதுவின் வலிமையதை மங்காது உரமாக்கும்!

சீற்றமிகு சிங்கம்போல் சீறிவந்தக் கதிரவன்தான்,
மேற்றிசையின் மலைமடியில் மோகமுடன் வீழ்ந்துவிட்டான்!
மேற்றிசையின் மலைமடியில் வீழ்ந்துவிட்ட கதிரவனும்,
ஊற்றுமொளிப் பிழம்பாகி உதித்திடுவான் கீழ்த்திசையில்!

நேற்றைகிவ்வூர் கலங்க நிமிர்ந்துவந்த மேல்காற்றோ,
ஆற்றலெலா மொடுங்கக் கீழ்ஆழிக்குள் போயிற்றே!
ஆற்றலெலாம் மீண்டுவர ஆழியிலே நீர்முகந்தே,
ஏற்றுவரு கொண்டலென இங்குவரக் காண்போமே!


--------------------------------------------------------------------------------
மேலும் படிக்க... "நம்பிக்கை!"

சின்னஞ்சிறுகதை ...

நினச்சதுஒண்ணு.


தெருவில் நடந்துகொண்டிருந்த பரந்தாமனை உரசிக்கொண்டு வந்து நின்றது அந்த பென்ஸ்கார்.
பதறிப்போய் அப்படியே நின்றுவிட்டார் பரந்தாமன்.

ரிடையராகிவிட்ட இந்த ஆறுமாதமாய் காலை எழுந்ததும் குளித்துவிட்டுக் கோயிலுக்குச்செல்வது அவரது அன்றாடப்பழக்கம். இன்றும் அதேபோல கோயிலுக்குப்போக நடந்துவந்துகொண்டிருந்தார். சீக்கிரமாய்
போகவேண்டும் ,கோயிலில் இன்னிக்கு கும்பாபிஷேகம் என்று எண்ணியபடி நிமிர்ந்தவரிடம் கார்க்கதவைத் திறந்தபடி ஒரு இளைஞன் நெருங்கினான்.

"பெரியவரே...இந்த ஏரியால ரூபா ஒயின் ஷாப் எங்க இருக்கு வழி சொல்வீங்களா?' என்றுகேட்டான்.

பரந்தாமன் எரிச்சலுடன் அவனைப்பார்த்தார். 'இவனுக்கு என்ன இருபத்திமூன்றுவயது இருக்குமா? பார்த்தாபடித்தவன் போலத்தெரிகிறான்.. பணக்காரவீட்டுப்பிள்ளைபோலும் அதனால்தான் விடிகிறபோதே இப்படி ஒயின் ஷாப்பிற்கு வழிகேட்கிறான்? இப்படி இவனை மாதிரி இளைஞர்கள் இருந்தால் நாடு எப்படி உருப்படுமாம்?' மனதிற்குள் முணுமுணுத்துவிட்டு அவனிடம் வெறுப்புடன் ரூபா ஒயின் ஷாப் செல்லும் வழியை சொன்னார்.
பிறகு அவனைத் திரும்பியும் பாராமல் நகர்ந்துவிட்டார்.

பத்து நிமிடநடையில் கோவிலுக்குள் சென்றவரை ரூபா ஒயின்ஷாப்பிற்கு வழிகேட்ட இளைஞனே
எதிர்கொண்டான்.

பரந்தாமனை பார்த்ததும் முகம்மலர்ந்தவனாய்," பெரியவரே! வாங்க வாங்க! நீங்களும் கோயிலுக்குத்தான் வரீங்கன்னு தெரிஞ்சிருந்தா என்கார்ல அழைச்சிட்டுவந்துருப்பேனே?
நான் இந்தப்பகுதிக்கு புதுசு....ரூபா ஒயின் ஷாப் இங்க பிரபலமான கடையாமே? அதை அடையாளம் சொல்லி அதுக்கு எதிர் ரோடின் முனையில் கோயில் இருப்பதாய் சொல்லி என்னை அனுப்பினார் அப்பா.
அதான் உங்களை அப்போ ரோட்ல நிறுத்தி வழிகேட்டேன். நன்றி பெரியவரே! அப்பாக்கு உடல்நிலை மோசமாய் இருப்பதால் கும்பாபிஷேப்பணி முழுக்க நான் ஏத்துக்கிட்டு இருக்கேன் ..அப்பா இடத்துல நீங்க இருந்து முடிச்சிக் கொடுக்கணும்"என்றான்., கைகுவித்துப் பணிவாக.
மேலும் படிக்க... "சின்னஞ்சிறுகதை ..."

Monday, March 24, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.

அத்தியாயம் 3


"குட்மார்னிங் சாரங்!" கூவினாள் ராகினி..

இடம் ராகவ் எண்டர்ப்ரைஸின் மூன்றாவதுதளம்.

நேரம் காலை பத்துமணி பத்துநிமிடங்கள்.

சாரங்கன் அப்போதுதான் ஆபீசுக்குள் நுழைந்து வேகவேகமாய் தனது அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.

" ஓ,காட்!..பத்துநிமிஷம் லேட்டா வந்திருக்கேனே" முணுமுணுத்தபடி நடந்துகொண்டிருந்தவனுக்கு ராகினி காலைவணக்கம் கூறியது
காதில்விழவேயில்லை.

புதிய டிசைனர் சேலையில்,அதற்கு மேட்சாக கழுத்தில் சோக்கர் அணிந்துகொண்டு ப்யூட்டிபார்லரில் நேற்று ஹைலைட்ஸ் செய்துகொண்ட மெரூன்வண்ணமுடி காற்றில்பறக்க தேவதைபோல நிற்கும் தன்னை ஏறெடுத்தும்பார்க்காமல் போன சாரங்கனீன்மீது செல்லக்
கோபமாய் வந்தது.


அறைக்குள் சென்றதும் தன் இருக்கையில் அமர்ந்த சாரங்கனுக்கோ அந்த ஏசி குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது.

தாமதமாய் ஆபிசுக்கு வந்து பழக்கமில்லாததால் ஏதோ குற்ற உணர்ச்சியில் மனம் குறுகுறுக்க தவிப்பாய் காணப்பட்டான்.

இன்றும் எப்பொழுதும்போல காலை சீக்கிரமே எழுந்து குளித்து பூஜைகளைமுடித்து டிபனையும் சாப்பிட்டு ஷூ அணிந்துகொண்டு பைக்கிலேறிஉட்காரும்போதுதான் பின் சக்கரம் பஞ்சர் ஆகி இருப்பதை கவனித்தான் சாரங்கன்.

"என்ன ஆச்சு?" உரத்தகுரலில்கேட்டபடி ராதிகா அந்த நான்காவது மாடியின் பால்கனிக்குவந்து நின்றாள்.

அந்த சூர்யா அபார்ட்மெண் டில்
மொத்தம் ஆறு ப்ளாக்குகள். அதில் சி ப்ளாக்கின் நான்காவதுமாடியில்தான் சாரங்கன் - ராதிகா குடி இருக்கிறார்கள். இரண்டு பெட் ரூம் ஹால் கிச்சன் என்ற அளவிலான அழகிய ஃப்ளாட். பேஸ்மெண்ட்டில் சிறுவர்கள் விளையாட இடம் உண்டு. ஆறுப்ளாக்குகளுக்குமாய்
பெரிய நீர்த்தொட்டி, நீச்சல்குளம் . பேஸ்மெண்ட்டில் ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் வாகனங்களை நிறுத்த வசதியாய் பார்க்கிங் இருக்கிறது.

"பஞ்ச்சர் "என்றான் சாரங்கன் மேலே நின்ற ராதிகாவை நிமிர்ந்துபார்த்து.

அடுத்த நிமிடம் ராதிகா கீழே வந்துவிட்டாள். இரவு உடையோடு அவள் அப்படி தடதடவென்று ஓடிவருவதை ஃப்ளாட்டின் கீழ்க்குடி இருப்பினர் சிலர் வேடிக்கைபார்த்தனர்.

ராதிகா யாரையும் லட்சியம் செய்யாமல், ஃப்ளாட்டின் வாட்ச் மேனை உரக்க அழைத்தாள்."வேலைய்யா வேலய்யா எங்க போய்த்
தொலைஞ்சீங்க?"

"ராதிகா...அவரை எதுக்கு இப்போ அழைக்கிறே? பாவம் வயசானவர் ராத்திரி எல்லாம் தூக்கம்முழிச்சி, இப்போதான் அந்த ஓரமாய்
படுத்துதூங்க்ப்போனார்.." என்று தடுத்தான் சாரங்கன்.

"நீங்க சும்மா இருங்க... "என்று அதட்டிவிட்டு ஓடிவந்த வாட்ச்மேனிடம் சீறத் தொடங்கினாள்.

"என்னய்யா கிழவா நீ காவல் காக்கிற லட்சணமா இது? உன்னை நம்பிதானே இங்க வண்டிகளை எல்லாரும் விடறாங்க? மாசாமாசம் சம்பளம் மட்டும் வாங்கிக்கறியே ,இங்க நிறுத்தும் வாகனங்களை ஒழுங்கா கவனிச்சிக்க துப்பு இல்லயா உனக்கு? எங்க பைக்கை
யாரோ பஞ்சர் செய்திருக்காங்க அதை நீ தடுத்திருக்கவேணாமா? யு இடியட்.
..கிழவனையெல்லாம் காவலுக்கு வச்சா இதான் கதி.. அடுத்தமாச ஃப்ளாட்மீட்டிங்ல உன்னை வேலைய விட்டு எடுக்க சொல்றேன் பாரு"

"எ..எனக்கு ஒண்ணும் தெரியாதும்மா.. யா...யாரும் இங்க வரலயே?"

வாட்ச்மேன் அறுபதைக்கடந்தவர்.ராதிகாவின் கூச்சலில் அரண்டுபோய் கைகட்டிக் குனிந்து நின்றார்.

"ராதிகா ப்ளீஸ் அவரை எதுவும் சொல்லதேம்மா.." சாரங்கன் கெஞ்சினான்

"வயசான ஆளேன்னு பாக்றேன்.. இல்லேன்னா அறைஞ்சிருப்பேன் ராஸ்கல்"

"ஐயோ ராதிகா... எல்லாரும் பாக்றாங்கம்மா,,,சத்தம்போடாதேயேன்.. வாட்ச்மேன் மேல எந்தத் தப்பும் இல்ல. நாந்தான் நேத்திக்கு ஆபீஸ் முடிஞ்சி வெளிலவரப்போ பைக்கை ஆபீஸ்ல என்னோடு வேலைபார்க்கும் மஞ்சுநாத் என்பவர்கிட்ட தந்தேன் ." அம்மாக்கு உடம்பு சீரியஸ் ஆஸ்பித்ரிபோகணும் என் வண்டி சர்வீஸ்க்கு போயிருக்கு.. உங்கவண்டிதாங்க"ன்னு கேட்டார். அவர்தான் ராத்திரி பைக்கை இங்கவச்சிட்டு நான் ஆன்மீக சொற்பொழிவுக்குபோயிட்டதினாலும் ,நீ கருடாமாலுக்கு உன் தோழிகூட ஷாப்பிங் போயிட்டதாலும், பைக் சாவியை
எதிர்ஃப்ளாட் பத்ரிசார்கிட்ட கொடுத்துப் போனார். மஞ்சுநாத்துக்கே பஞ்சர் ஆனது தெரிஞ்சிருக்காது, பாவம்"

ராதிகா பட்பட் என்றுதலையில் அடித்துக்கொண்டாள்.

"அந்த மஞ்சுநாத் தடியனுக்கு வண்டியை தராதீங்கன்னு நான் முன்னமே சொன்னேன் ..அப்போ ஒருவாட்டி உங்ககிட்டே வாங்கிட்டு
3நாள்கழிச்சி திருப்பிக் கொடுத்தான். அவனும் உங்களமாதிரி அந்த ஆபீஸ்ல பெரியபொறுப்புள்ள வேலைல உள்ளவன்னு சொல்லிக்காதீங்க கேவலமாஇருக்கு"

"ச்சேசே..மஞ்சுநாத் நல்லவர் ராதிகா. என்னைவிட மூணுவயசுதான் மூத்தவர். எனக்குமுன்னாடியே இந்தக் கம்பெனில சேர்ந்து
பணிபுரியறவர் "

'அதென்னவோ அவனைக்கண்டாலே எனக்குப்பிடிக்கல.அன்னிக்கு ஒருநாள் நானும் நீங்களும் சினிமாதியேட்டர்ல இன்டர்வல்ல
பார்த்தப்போ, நீங்க முதமுதல்ல அறிமுகம் செஞ்ச நாளே எனக்கு அவனைப்பிடிக்கல..அவன் மூஞ்சியும் அவனும்.."

"யாரையும் வெளித்தோற்றம் வைத்து எடைபோடக்கூடாதும்மா..சரி...வண்டி சாவியைக்கொண்டு வீட்ல வைச்சிடு. நான் ஆட்டோ ல
போய்க்கறேன்"

'ஒரு கார்வாங்கமாட்டீங்க... கேட்டா பெங்களூர்ல இப்போ ட்ராஃபிக் அதிகம். ஆபீசுக்கு நேரத்துக்குப் போகணும்னா பைக்தான் வசதின்னு சொல்ல வேண்டியது.. ஒரு செல்போன் வச்சிக்கமாட்டீங்க..அதுக்கும் ஒரு காரணம். 'லாண்ட் லைன் போதும் எனக்கு ..ஆபீஸ்போனால் அங்க மேஜைல நாலுபோன் இருக்கு.. எனக்கு எதுக்கு செல்போன் வேறதனியா?"ன்னு சொல்லவேண்டியது.நிஜமா நீங்கஅதிசயப்
பிறவிதான்! " நைட்டீசின் லேசினை இறுக்கியபடி முணுமுணுத்தாள் ராதிகா.

சாரங்கன் சிரித்தபடி,"வரேன்ராதிகா" என்றான்.

"ஒகே நான் இன்னிக்கு சாய்ந்திரம் அஞ்சுமணிக்கு forum ல ஒரு கடைல சேல்ஸ் கேர்ல் வேலைஇருக்காம் ..
விசாரித்துவரபோகப்போறேன்..."

"ராதிகா நீ எதுக்குமா வேலைக்குப்போகணும்?நான் தான் கைநிறைய சம்பாதிக்கிறேனே?"

"ஐயோ 18ம் நூற்றாண்டு மனுஷனாட்டம் பேசாதீங்க . பெண்கள் வேலைக்குப்போவது சம்பாதிக்கமட்டுமா? வீட்லபோர் அடிக்குதுங்க...
என் படிப்புக்கு நான் என்ன சாஃப்ட் வேர் கம்பெனியிலா வேலைபாக்க முடியும்? ஏதோ இதுவே என் பழைய தோழி ஜெயந்தி
ஏற்பாடு செய்துதரேன்னா..மேலும் வீட்ல இருந்தால் ஒருநிமிஷம் வாசல் கதவைதிறந்து வச்சிக்கமுடியறதில்லை..எதிர்வீட்டு பத்ரிக்கிழம் என்னையே லுக் விடுது"

"ச்சேசே...பெரியவங்களைப்பத்தி அப்படியெல்லாம் சொல்லக் கூடாதும்மா.. சரி, நான் சாயங்காலம் ஜெய்நகர் கோயில்ல
உபந்நியாசம்கேட்டு லேட்டா தான் வருவேன்...எனக்காக சாப்பிடாம வெயிட் செய்யாதம்மா...சரியா?"

இப்படி ராதிகாவிடம் பேசிவிட்டு ஆட்டோ கிடைத்து ஏறி புறப்பட்டுவர தாமதமாகிவிட்டதில் வருத்தமாய் அமர்ந்திருந்தவனை
ராகினி, இன்ட்டர்காமில் அழைத்தாள்.

"ஒரு முக்கியமான விஷயம் பேசணும், இப்போ நான் உங்க ருமுக்குவரலாமா சாரங்?"

லாவ்ண்டர் பெர்ஃப்யும் மணக்க அறைக்குள் நுழைந்த ராகினி ,சாரங்கனைக் கண்டதும்,"வாவ்! இந்த க்ரேகலர் சூட்ல you look awesome! "என்றாள்.

"தாங்க்ஸ். என்னவோ முக்கியமா பேசணும்னீங்களே?"

ஆமாம்... நம்ம எம் .டி. இன்னும் வரவில்லை....செல்போனில் பேசமுயற்சித்தால் எடுக்கவேஇல்லை.. சாதாரணமாய் அவர் இப்படி
இருக்கமாட்டார். உங்களைப்போல கனிவும் அன்பும் மனிதர்களை மதிக்கும் நல்லபண்பும் கொண்டமனிதர். அதான் ஏதோ
கவலையாய் இருக்கிறது."

"சென்னைக்கு ஏதோ கல்யாணத்துக்கு போகபோவதாய் என்னிடமும் சொல்லி இருந்தார். எனி டைம் இங்க வந்துவிடுவார்
வெயிட்பண்லாமே போனில் தொல்லைசெய்வதைவிட?"

"சரி...கார்லதான் போயிருக்கார்...நேராய் சென்னையிலிருந்து இங்க ஆபீசுக்கே வந்துடலாம்"

"மஞ்சுநாத்தும் வந்தமாதிரி தெரியலையே? அவர் அம்மாக்கு உடம்பு சீரியஸ்னு சொன்னார் பாவம்"

" மஞ்சுநாத்தின் அம்மாக்கு சீரியசா?"சிரித்தள்ராகினி .

பிறகு,"சாரங்..வெளுத்ததெல்லம் பால் உங்களுக்கு.. அப்பாவி நீங்க. ஆனா அந்த மஞ்சுநாத் நேத்து சந்தோஷ் தியேட்டர்ல தன் கேர்ல் ஃப்ரண்ட் கூட உக்காந்திட்டு சினிமா பார்த்ததை என் தம்பி கவனிச்சிட்டான், அவன் அவங்களுக்கு பின் சீட்டுலதான் உக்காந்துந்தானாம்.
'ரண்டு சினிமா பாத்தேன்கா "ன்னு தலையில் அடிச்சிட்டான். தம்பி என்னைப்பார்க்க வந்தபோது, மஞ்சுநாத்தை ஒருநாள் நாந்தான் அறிமுகப்படுத்திவைத்தேன்.. .சாருக்கு இதெல்லம் சகஜம்"

ராகினி இப்படிச் சொல்லும்போதே தடதடவென ஷூ ஒலிக்க அந்த இடத்தில் பிரவேசித்தான் மஞ்சுநாத்.

திரைப்படவில்லனைபோன்றமுகம். ஆறடி உயரம், ஒல்லியான உருவம். ஆனால் முரட்டுத் தோற்றம் .ராகினியிடம் ஒருமுறை
மஞ்சுநாத் ஆபாசமாய்பேச ஆரம்பித்து அறைவாங்காமல் தப்பித்துப் போயிருக்கிறான். ஆளுக்கு ஏற்றபடி பேசுவதில் அவன் வல்லவன்.எம்டியிடம் அப்படிபேசிப்பழகியே நல்லபெயரை சம்பாதித்துக்கொண்டிருப்பதில் ராகினிக்கு மிகவும் கடுப்பு.

மஞ்சுநாத் அங்குவந்ததும் சாரங்கனையும் ராகினியையும் ஏறிட்டவன்;'சாரி...உத்தரவின்றி உங்க அறைக்கு வந்துவிட்டேன் சாரங்...
சூழ்நிலையின் பதட்டம் என்னை இங்க வரவழைச்சது...நம்ம எம்டி சென்னையிலிருந்து வந்துகொண்டிருந்த கார் சற்றுமுன்
விபத்துக்குள்ளாகி விட்டது. அவர் ஸ்பாட்ல மரணமாம்.. இப்பதான் எனக்கு மெசேஜ் வந்தது" என்றான்.

ஆபீசே திடுக்கிட்டது, அனுதாபமாய் சூள்கொட்டியது.

.அவரது மறைவையொட்டி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.

சாரங்கன் மனவேதனையுடன் வீடுவந்தான்.

காலிங்பெல்லை அழுத்தினான்.

நீண்டநேரமாகியும் ராதிகா வந்துகதவைத் திறக்கவில்லை.மணிபார்த்தான் , காலை மணி11 -30தான் .
இந்தநேரத்தில் ராதிகா எங்கே போனாள்?

(தொடரும்)
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Friday, March 21, 2008

கோலமயில்மீதேறி.....

பங்குனி உத்திரத்தைமுன்னிட்டு இன்று இந்தப்பாடலை முருகப்பெருமானுக்கு சமர்ப்பிக்கிறேன்.


கோல மயில் மீதேறி ஏன் இங்கு வந்தாய்?
கோரும் அடியார்கள் வினை தீர்த்தருள நின்றாய்!

பாயுமொளி போலவோ உன்கருணை உள்ளம்?
பார்க்கத்தான் வந்ததிங்கு பக்தர்பெருவெள்ளம்!

உத்திரத்திற்கு இன்று உன்னால்தானே மகிமை?
உன்புகழைப்பாடுவதே எங்களுக்கு பெருமை!

பக்தர்களுக்கு அருள்வதுதானே உன் வாடிக்கை?
பணிவான உள்ளங்களே இங்குனக்குக் காணிக்கை!

ஈசனுக்குபதேசம் செய்தவனும் நீயோ?
ஈன்றவளாய் காப்பதால் நீ எங்கள் தாயே!

வற்றாத நதிபோலும் பெருகுமோ உன் அருள்?
வந்து விடும் புதுஒளியில் மறையுமே எங்கள் இருள்!

பாமாலை பலகொண்ட உனக்குண்டோ ஈடு?
(உனை)பாடுவதால் பக்தர்க்குக் கிடைக்கும் மறுவீடு!
மேலும் படிக்க... "கோலமயில்மீதேறி....."

காலமெல்லாம் காத்திருப்பேன்!

அத்தியாயம்2*
**
*காலமெல்லாம் காத்திருப்பேன்*
*************************************************


மாலதி, டில்லியில் சாரங்கனோடு அலுவலகத்தில் ஒன்றாய் பணி புரிந்தவள். அறிவும்
அடக்கமும் அழகும் சேரும்போது அங்கே அலாதியான முகக்களை ஏற்படுமே
கவனித்திருக்கிறீர்களா அது மாலதியிடம்
ஏராளமாகவே உண்டு.


பலவருஷங்கள்முன்பே தொழில்நிமித்தம் டில்லிக்குக் குடிபெயர்ந்த பலகுடும்பங்களில்
மாலதியின் குடும்பமும் ஒன்று. மாலதியின் அப்பா பூமிநாதன் பிரபல மேஜிக் நிபுணர்.
தன் ஒரே வாரிசான மாலதியை தனக்குப்பின் இந்தக்கலையைக்கற்று அந்தக்கலையை மேலும்
பிரபலப்படுத்த நினைத்தார். மாலதி கற்றுக் கொண்டாள்.ஆனால் அப்பாவைப்போல அதையே
தொழிலாக்கிக்கொள்ள அவள் மனம் இடம் தரவில்லை. இலக்கியம் சமூக சேவை ஆன்மீகம்
என்றே சின்னவயதிலிருந்து அவைகளில் மனம் நாட்டம் கொண்டுவிட்டது. அதனாலேயே
ஏறக்குறைய தன் ரசனைக்கேற்ப இருந்த சாரங்கனின் மீது அவளுக்கு பற்று ஏற்படது.
அழகுதேவதையான மாலதியின் கடைக்கண்பார்வைக்கு எத்தனையோ டில்லி இளைஞர்கள்
ஏங்கித்தவமிருக்க அவளோ சாரங்கனை மானசீகமாய் விரும்ப ஆரம்பித்தாள்.


பெண்கள் இலேசில் காதல்வயப்படமாட்டார்கள், அப்படிப்பட்டுவிட்டால் அதை
நிறைவேற்றிக்கொள்ள எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள்.


அன்று அலுவலக லஞ்ச் நேரத்தில் தனிமையில் சாரங்கனை சந்தித்து தன்
உள்ளக்கிடக்கையை தெரிவித்துவிட தீர்மானித்தாள். ஆனால் பாழாய்ப்போகிற நாணம்
பேசவிடாமல் தடுத்தது. இந்தகாலத்துப்
பெண்தான் என்றாலும் அவள் வளர்ப்பு அவளுக்கு சில நியதிகளை நினைவுபடுத்தியது.
மனதுக்குப்பிடித்த ஒரு ஆணை அழகினால் வசப்படுத்துவதைவிட அறிவினாலும் அன்பினாலும்
நெருங்குவது எளிது என்பதை புரிந்துகொண்டிருந்தாள்.


தன் உணர்ச்சிகளைக் கவிதையாக்கிக் கொண்டாள்.


பூரியும் ஆலுகோபியும் தட்டில் வைத்துக்கொண்டு மேஜையில் சாப்பிடத்தயாரான
சாரங்கன் தன் அருகில் மாலதி வந்தி நிற்கவும் திகைப்புடன்," வாங்க மாலதி லஞ்ச்
ப்ளேட் எடுத்துட்டு இப்படி உட்காருங்க" என்று தன் அருகில் இடம் கொடுத்தான்.


"உங்க மனசிலும் எனக்கு ஓர் இடம் வேண்டும்சாரங்கன்" என்று தன் மனம்
அடித்துக்கொள்வதை மாலதி உணர்ந்தாள்.


'என்ன ஆயிற்று எனக்கு? பருவம் மட்டுமல்ல அந்தப்பருவ வயதில் சொல்லாமல்
கொள்ளாமல் வருவது
காதலும் தானோ? காதல் வந்தால் மனம் சிறகடித்துத்தான் பறக்குமோ?ஆதே நேரம் மௌனமே
பார்வையாய் நாணமே ஜாடையாகியும் விடுமோ?


என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது?'


தயங்கி நின்றாள சிலக்கணம். ஆனாலும் இதைவிட்டால் பிறகு சாரங்கனை சந்திக்க இப்படி
ஒரு வாய்ப்பு கிடைக்காது என நினைத்து சட்டென சொல்ல ஆரம்பித்தாள்.


"சாரங்! நான் ஒரு கவிதை எ.எழுதி இருக்கிறேன்" என்று சொல்லி நிறுத்தினாள். சந்தன
நிறத்தில் கடைந்த சிற்பமாய் புன்னகைதவழ பறித்த புது மலராய் அருகில்வந்து
நின்றவளை பரவசமாய்ப்பார்த்தான்
சாரங்கன்.


"சொல்லுங்க மாலதி.ஆய கலைகள் அறுபத்தி நாலில் உங்களுக்கு தெரியாத கலைகளே
இல்லைபோலிருக்கே? பாட்டு ஓவியம் படிப்பு மேஜிக்கலை இப்படி ஏற்கனவே கையில்
திறமைகளோடு
இருக்கீங்க..இப்போ கவிதையுமா? எனக்குக்கவிதை எழுத வரது ஆனா படிக்கப்பிடிக்கும்
எங்கே உங்களது கவிதைகள்?"

மாலதி தன்கைகளை நெஞ்சுக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு சாரங்கனையே
ஆழமாய்ப்பார்த்தாள் பிறகு சொல்ல ஆரம்பித்தாள்.


" உனக்காக சிரிக்கும்
இந்த உதடுகளுக்கு '
வத்துவிடாதே நெருப்பு


உனக்காகப்பறக்கும்
என்மனப்பறவையின்
சிறகுகளை
வெட்டக்கூடாதது
உன் பொறுப்பு


விரல்களைவெட்டினால்
வீணையா வாசிக்கமுடியும்?
விரிக்காத காதல்வலையில்
வீழ்வதும் ஒருசுகம்தானே?


உன் கடைக்கண்பார்வைக்கு
சம்மதமே பொருளானால்
அந்தப்பார்வைக்காய் நான்..
காலமெல்லாம் காத்திருப்பேன்"


உணர்ச்சிபூர்வ்மாய் சொல்லிமுடித்தவள், சாரங்கனை மறுபடி அர்த்தம் நிறைந்த பார்வை
பார்த்தாள்.


சாரங்கனுக்குப்புரியாமல் இல்லை.இது கவிதை அல்ல என்பதை அவனும் உணர்ந்தான்.
உணர்ந்தாலேயன்றி உணர்வுகளை மதிக்கவும் இயலாது.


மாலதியைப்போன்ற அழகானபுத்திசாலியானபெண் தனக்குக் கிடைக்ககொடுத்து
வைத்திருக்கவேண்டும் என எண்ணும்போது மனம் மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்தது.
தன்னை அவள் நேசிக்கிறாள் எனும் நினைவே நெஞ்சை நிறைத்தது. .நேசிப்பதைக்காட்டிலும்
,நேசிக்கப்படுவது சிறப்பானது.


ஒருக்கணம்தான் அந்த இனிய உணர்வுகளில் மிதந்தான் அடுத்தகணமே
சுதாரித்துக்கொண்டான் சாரங்கன்
காலங்காலமாய் காதலுக்கு குறுக்கே நிற்கும் ஜாதிமதம் அதன் உட்பிரிவுகள் என்னும்
தடைகள் சீனிவாசன் குரலில் அசரீரியாய்காதில் விழுந்தன.மதம் ஒன்றானாலும் ஜாதி
உட்பிரிவுகளைக்காட்டி சீனிவாசன் மாலதியை தனக்கு மனைவியாக்கமாட்டான்
,வறட்டுக்குடும்பப்பெருமைபேசி திரியும் சிலமனிதர்களில் அவனும் ஒருவன்என்பதை
சாரங்கன் நினைத்துப்பார்த்தான் .மீறி செய்துகொண்டால் சீனிவாசன் தன் கோபத்தை
அக்காவிடம் காட்டிவிடுவான் என்பதையும் நினைத்தபோது உடம்பேநடுங்கியது.


மனதை அடக்கிக்கொண்டான்.


பிறகு மாலதியிடம்," அருமையான கவிதை மாலதி. பத்திரிகைகு அனுப்புங்க..இணையத்துல
போடுங்க நல்லாருக்கு"என்றான் .


மாலதி அவனைவிடவில்லை ,அப்போது சாரங்கன் வேறுவழியின்றி சீனிவாசனைப்பற்றிச்
சொல்ல வேண்டிவந்தது.


மாலதி மறுவாரமே அவனை சந்திக்க கிராமத்திற்கு வந்தாள்.பேசிப்பார்த்தாள்.ஆனால்
சீனிவாசனோ,
"போம்மா வெளில.. வீரசைவ வெள்ளாளர்குடும்பம் இது, இங்கவந்து சம்மந்தம்பேசறவங்க
இதுல உள்பிரிவுல மாறி இருந்தாக்கூட நான் சம்மதிக்கமாட்டேன்...உன் குடும்பம்
இந்த பிரிவுல இல்ல...குலம்கோத்திரம் பாக்காம கண்ணாலம் செய்றது எங்ககுடும்பத்துல
கிடையாது ..காலம் எவ்வளொ மாறினாலும் இதையெல்லாம் கெட்டியாபிடிச்சிட்டு
என்னைமாதிரி இதுக்குக்காவலா இருக்கறவங்களும் இருக்காங்க.. அதான் இந்த கலாசாரம்
அழியாம இருக்குது. இந்தவீட்ல காதலும் கத்திக்காயும் நுழையமுடியாது
தெரிஞ்சுதா போ போ"என்று சீறிஅனுப்பிவிட்டான்.


சுமித்ரா, பதட்டமுடன் மாலதிக்குப் பரிந்துகொண்டுவந்தபோது கையிலிருந்த
குடையினால் அப்படியே அவளைஒருசாத்துசாத்தினான் சீனிவாசன். .நிலமை புரிந்து மாலதி
வெளியேறிவிட்டாள்.


டில்லிவந்த அடுத்த வாரமே ஒருநாள் அலவலகத்தில் நேரே எம்டியிடம் சென்று தனது
ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டாள்.


சாரங்கனின் கேபினில் ஒருகவரைவைத்துவிட்டு மௌனமாய் சென்றுவிட்டாள்.


சாரங்கனுக்கு அவன் அக்காமூலமாய் எல்லாவிஷயமும் தெரிந்திருந்தது வேதனையுடன்
அந்தக்கவரைப்
பிரித்தான். கவிதை எழுதிய அந்தக்கவிதையை நெஞ்சு கனக்கப் படிக்கத்தொடங்கினான்.


உச்சந்தலையில் நெருப்புகிரீடம்
உருகிக்கொண்டே
மெழுகுவர்த்திதருவது
வெளிச்சம்


இயந்திரப்பற்கள்
இடையே மிதிபடும்
கரும்புதருவது
சக்கரை


உன்னிடமிருந்து
உடலால்
விலகிப்போகும்
என்னுள் உன் நினைவுகள்
என்றும் அழியா சித்திரம்


புனரபி ஜனனம்
புனரபிமரணம்
மறுஜன்மம்
அதுவே என் தருணம்


சாரங்கன் கண்கலங்கியது. மென்மையும் தன்னை இறுக்குவதை உணர்ந்தபோது தன்மீதே
வெறுப்பாகவும்வந்தது. ஆனால் வளர்த்து தன்னை ஆளாக்கிய அக்காவை நினைத்தபோது
காதல்உணர்வு நீரலைமேல் தோன்றிய நிழலானது.
கவிதைத் தாளைக் கிழித்துப் போட்டவன், மாலதியை அக்கண்மே அடியோடுமறந்தான்.


அடுத்த சில நாட்களில்பெங்களூருக்கு வேலைமாற்றல் கேட்டுவந்துவிட்டான்...அடுத்த
சிலமாதங்களில்
சீனிவாசனே மனம் உவந்து தேடிப் பார்த்துவைத்த பெண்ணின்கரம்பிடித்தான்.


அழகுச் சிலையாய் இருந்தாள் ராதிகா. ஆனால் அவளிடம் அலட்சியமும் ஆணவமும் பேச்சில் தெறிப்பது
புதுக்கணவனான சாரங்கனுக்குபுதிராய் இருந்தது.


ஒவ்வொரு ஆனின் சுபாவத்திற்குள்ளும் பெண்தன்மை இருக்குமாம் அதேபோல ஒவ்வொரு
பெண்ணிற்குள் இலேசான ஆண்தன்மையும் இருக்குமாம்.

ராதிகாவின் சுபாவம் , பிறகு பேராபத்தில் கொண்டுவிடப்போவதை அப்பாவியான சாரங்கன்
அறிந்திருக்க நியாயமில்லைதான்
(தொடரும்)
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்!"

Thursday, March 20, 2008

சின்னஞ்சிறுகதையே!

சின்னஞ்சிறுகதை(1 )

இருகோடுகள்
***************************


பேரனின் பிறந்த நாளுக்கு வாங்கிய பெரிய கப்பல் வடிவ கேக் அப்படியே நிறைய
மீந்துவிட்டதையும்

சாக்லேட்டுகள் கொட்டிக்கிடப்பதையும் சிதம்பரம் கவனித்தார்


சட்டென அவருக்கு வீட்டு வேலைக்காரி அபிராமியின் நினைவு வந்தது.


இருபதுவருஷத்துக்கு மேலாய் வீட்டில் விசுவாசமாய் வேலைசெய்யும்
ஏழைப்பெண்மணி.

குடிகாரப்புருஷன் ஐந்துகுழந்தைகள் என்று கஷ்ட ஜீவனம், அவளுக்கு இந்த
கேக்கும் சாக்லெட்டுகளும் போகட்டுமே!

சிதம்பரம் தனது தாராள மனதைத்தானே மெச்சிக்கொண்டவராய் மனைவிமருமகளை
அழைத்துவிஷயத்தை சொன்னார்.


"இம்புட்டுகேக்கும் இத்தினி சாக்லேட்டுக்கும் எங்க வீட்டுக்கா?" என்று
அபிராமி நம்பமுடியாமல்
கேட்டபோது சிதம்பரம் அலட்சியமாய் சிரித்தார் .

'ஆமாம் நாங்கள்ளாம் வாரித்தான் வழங்குவோம்...எடுத்துட்டுப்போ.."


ஒருவாரம் கழித்து சிதம்பரம் , சூப்பர்மார்க்கெட் ஒன்றில் உதவும் நெஞ்சங்களின் உரிமையாளரான நடராஜனைப் பார்த்தார். எப்போதாவது அந்த அனாதை இல்லத்திற்கு ஆயிரம் இரண்டாயிரம்ரூபாய்கள் என்று நன்கொடை கொடுப்பது அவரது வழக்கம் ,அதுவும்
நண்பர்களிடம் நிதிதிரட்டித்தான்.


நடராஜன் வணக்கம் சொல்லிவிட்டு,'"போனவாரம் உங்க பேரனுக்கு பிறந்த
நாள்அமர்க்களம் போல இருக்கு?" என்றுகேட்கவும் சிதம்பரம்அதிர்ந்தார்.


அவரை அழைக்கவே இல்லையே, எப்படித் தெரிந்தது என வியந்தார்.


குழப்பமாய் தன்னைப்பார்த்தவரிடம் நடராஜனே தொடர்ந்தார்.


"உங்க பேரன் பிறந்த நாளுக்கு வெட்டியகேக் துண்டங்களும்,சாக்லேட்டும்
எங்க இல்லத்தின் அனாதை குழந்தைகளுக்கெல்லாம் வந்ததே ? உங்கவீட்டு வேலைக்காரஅம்மா- பேரு- அபிராமினு சொன்னாங்க, அவங்க ஆசையா குழந்தைகளுக்கு உங்க பேர் சொல்லி கொடுத்தாங்க..
' நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே
பொசிந்தமாதிரி ' உங்க தர்ம சிந்தனை உங்கவீட்டு பணியாட்களுக்கும் இருக்கே?"என்றார் மகிழ்ச்சியும் வியப்புமாய்.


சிதம்பரத்திற்கு கண்முன் இருகோடுகள்தெரிந்தன அதில் சிறுகோட்டில்தான்
நிற்பதை உணர்ந்தார்
மேலும் படிக்க... "சின்னஞ்சிறுகதையே!"

Wednesday, March 19, 2008

உங்களில் யாருக்காவது?:)

ஏகப்பட்ட போன் கால்ஸ்(அட நெஜமாத்தான்) எக்கச்சக்க
மெயில்ஸ்! ஏழெட்டு கொரியர் பார்சல்கள்(தம்பி உடையாள் பரிசுக்கு
அஞ்சாள்!) காலை( கனவுல தான்)ப்ருத்விராஜுடன் ப்ரேக்ஃபாஸ்ட்!
இயக்குநர்சங்கர்(என் அடுத்தபடத்துக்கு உங்களோட வானைத்தொடலாம் வா நாவலை
எனக்குத்தாங்க) தொடர்ந்து, ரெஹ்மானின் இசைஅமைப்பில்"சின்னமலைக்காட்டு
சிறுக்கியே,உன் சின்ன இடுப்பினில் நான்
வழுக்கியே..'பாட்டு ,ஸ்ரீனிவாசுடன் ,காதுல ஹெட்போன் மாட்டிக்கொண்டு..
(இதுவும் கனவே வேறெதுவே?:))

இந்த உற்சாகத்துல உணர்ச்சிவசப்பட்டோ என்னவோ வந்த விருந்தினருக்கு
ஃபில்டர் காபிகொடுக்க(கலக்கப்போவது நானே என்பதால்:)
குளிர்பதனப்பெட்டியை ஆவலுடன் திறந்தேன்.அதிலோ....


நேற்றைய வற்றல்குழம்பும் அடைமாவும் அட்டகாசமாய் சிரித்ததே தவிர
பால்பாக்கெட்டுகளைக் காணவில்லை.


அப்போதான் நினைவுக்குவந்தது காலையில்பால்பாயசத்துக்கு(கவனிங்க
பால்பாயசம்தான் மைபா இல்ல):) எல்லாபாலையும்
ஊற்றிகாலிசெய்துவிட்டதை..ஆனால் பத்துமணிக்கு ராஜ்ஷாப்பிலிருந்து
வழக்கம்போல பால்பாக்கெட் வந்திருக்கணுமே? பிறந்த நாள் குஷில
அதைநான் கவனிக்காம விட்டுவிட்டேன்.


இந்த விருந்தினர்கள் எல்லாம் பலநேரங்களில் நான் படைபலம் இல்லாமல் தனியாய்
நிராயுதபாணியாய்(அதென்ன நிராயுதபாணியோ? சக்கரபாணி தெரியும் சாரங்கபாணி
தெரியும் ,இதுக்கு என்ன சரியான அர்த்தம்?) வீட்டில் இருந்தேன்
வந்தவர்களை அமரவைத்துவிட்டு நான் கடைக்கு பையை எடுத்துட்டுப்போகலாமா
சொல்லுங்க?


வழில மாமிங்க நாலுபேரு கிடைப்பாங்க பேசியே ஆகணும் அன்புத்தொல்லை
அதிகமே(சரிசரி அடங்கு ஷைலஜாங்கறீங்களா ஓகே ஓகே:)


அதனால ஆபத் பாந்தவனான என் அலைபேசியை எடுத்தேன்.


ராஜ் என்றபேர்கண்டதும் எண்கள் ஓடோ டிவந்தன.


எதிர்முனை லைனுக்கு வந்ததும்,"ஹலோ? உடனே நாலுபாக்கெட்பால் அனுப்புங்க...
10மணிக்கெ வந்திருக்கணும் என்னாச்சு இன்னிக்கு?
நானும் பிசி கவனிக்கவே இல்ல... ப்ரெட்,
கோடம்பி(கன்னடதுலமுந்திரிப்பருப்பு) திராட்சை பச்சைக்கற்பூரம்
இதெல்லாமும் அனுப்புங்க என்ன?" என்றேன் வேக வேகமாக.விருந்தாளிகள் என்
சுறுசுறுப்பைப்பார்த்து வியக்கவேண்டாமா என்ன?


எதிர்முனை ஒருக்கணம் அமைதியாய் இருக்கவும்,"ஹலோ? கடைல பையன் இல்லியா
என்ன?' என்று கேட்டேன்.
"இது கடையே இல்ல"


என்றுபதில்வந்தது
"வாட்? ராஜ் ஷாப்தானே நம்பர்சரிதானே?"


"ராஜ் வரை சரிதான்"


எதிர்முனை சிரித்தது .பிறகு," உங்க தோழி பவித்ராவின் ஹஸ்பண்ட் ராஜ்
நான்...ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங்குல இருக்கேன் ...."என்று சொல்லி
சிரித்தார்., நல்லவேளையா!!


ஐய்யெயோ ஸாரி ஸாரி


நோப்ராப்ளம்


ராஜ் ஷாப், பவித்ராவின் கணவர் ராஜ் - இருவருக்கும் ராஜ் என்ற ஒரே
பெயரில் . என் செல்போனில்.பதித்துக்கொண்டுவிட்ட என் புத்திசாலித்தனத்தை
என்ன சொல்வது?:):)


என்முகம்போனபோக்கை விருந்தாளிகள் ஏறெடுத்துப் பார்ப்பதற்குள்
வேறுஅறைக்கு ஓட்டமெடுத்தேன்.
உங்களில் யாருக்காவது இப்படி மாட்டிக்கொண்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?


***************************************************************************
மேலும் படிக்க... "உங்களில் யாருக்காவது?:)"

காலமெல்லாம் காத்திருப்பேன்(மெகா தொடர்)

இது ஒரு காதல்-க்ரைம் தொடர்

சாலையில் செல்லும் இளம்பெண்கள் எல்லாம் ஒருநிமிஷம் தடுமாறி நிற்கிறார்கள் என்றால் அந்த இடத்தில் சாரங்கன் நடந்துபோய்க்கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்! ஊட்டிகேரட் நிறத்தில் ,ஆறடி-அரை அங்குல உயரத்தில், கொஞ்சம் சூர்யா கொஞ்சம் ப்ருத்விராஜ் என்ற கலவையிலான முகத்தில் அனைவரையும் கவரும் புன்னகை கொண்ட சாரங்கன் படித்த (எம்பி ஏ) படிப்புக்கு சிறிதும் அலட்டிக்
கொள்ளாத அடக்கம், எளிமை!

முதல் அத்தியாயத்தின் முதல்பாராவிலேயே சாரங்கனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறபோதே உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமே?

யெஸ் யு ஆர் கரெக்ட்!

சாரங்கன் தான் இந்தக்கதையின் கதாநாயகன்!
அவனப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்..

பெயர்..சாரங்கன் என்னும் சாரங்.

தொழில்.. பெங்களூரில் ராகவ் எண்ட்டர்ப்ரைசஸ் என்றபிரபல கம்பெனியில் தலமைப்பொறுப்பாளர்.

விருப்பம்...உபந்நியாசங்கள் ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்பது.

கொள்கை..பெண்மையைமதிப்பது அவர்கள் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது.

குணங்கள்-வாய்மை நேர்மை பொறுமை,

வயது..மார்ச் பத்தொன்பதாம் தேதிக்கு இருபத்தி ஏழு

நண்பர்கள் ,.. அனைவரும்.

கல்யாணம்... அண்மையில் ஆனது மனைவிபெயர் ராதிகா.

மறந்தது.. காதலித்த மாலதியை

இனி கதைக்குள் செல்லலாம்.

ராகவ் எண்ட்டர்ப்ரைசஸில் அனைவரது அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமான சாரங்கன், ராகினியை அதிகமாய்க்கவர்ந்தான். அவன்மீது அவளுக்கு ஒருகண் அல்ல இரண்டுகண். "வாட் எ நைஸ் கை ! இவனை மூணுமாசம்முன்னாடி நான் பார்த்திருக்கக்கூடாதா? வளைச்சிப்பிடிச்சிப்போட்டிருப்பேனே என் வலைக்குள்? யாரோ ராதிகாவாமே அவளுக்கு அடிச்சிருக்கு ஜாக்பாட்!" என்று ராதிகாவைப்பார்க்காமலேயே அவள்மீது பொறாமைப்பட்டாள். ராகினி அந்தக்கம்பெனியில் முக்கியபொறுப்பானபதவியில் இருப்பவள். ஷ்ரேயாவின் உடல்வாகில்,ஜோதிகாவின் துறுதுறுப்பான முகவெட்டில் கம்பெனியில் பல ஆண்களின் காதல்தேவதை.

சாரங்கன் சுபாவத்திலேயே சாது என்றாலும் சின்ன வயதில் தாய் தந்தையை விபத்தில் இழந்ததும் அவனை விட பத்துவயது மூத்தவளான அக்கா சுமித்ராவின் வீட்டில் தான் வளர்ந்தான்.

சுமித்ராவின் கணவன் சீனிவாசன் ரேஸ், சீட்டு, போதைப்பொருட்கள் ,குடி என சகல கெட்டப்பழக்கங்களுக்கும் அடிமையாகி இருந்தான் .சுமித்ராவை அடித்துத்துன்புறுத்துவான் .
ஆனால் சாரங்கனிடம் மட்டும் வெறுப்பைக்காட்டமாட்டான் .தனக்குக்குழந்தை இல்லாததால் பிற்காலத்தில் சாரங்கன் தனக்கு நன்கு சம்பாதித்து உதவுவான் என்று அவனிடம் குழைவான். ஆனாலும் சுமித்ராவை வார்த்தைகளாலும் தன் செய்கைகளாலும் சித்திரவதை செய்வான். சாடிஸ்ட்.

சாரங்கன் நன்குபடித்து டில்லியில் வேலைகிடைத்துபோகும்போது அக்காவையும் அவள்கணவனையும் தன்னோடுவரும்படி அழைத்தான்.

"டில்லி பாஷை தெரியாத ஊருப்பா.. எனக்கு இங்க வாய் நிறைய வெத்திலபோட்டுக்கிட்டு சீட்டுவிளாடிட்டு ஊரை ஜாலியா சுத்தணும் நமக்கு அந்த ஊரு சரிப்படாது உங்கக்காவை வேணாகூட்டிப்போ.. அவளுக்குத்தான் தஞ்சாவூர்பக்கத்து இந்தகிராமம் போரடிச்சிருக்கும்"என்றான் சீனிவாசன்.

ஆனால் சுமித்ரா தம்பியோடு டில்லிபோகவில்லை.சினிவாச்னை ஊரில் தனியே விட்டால் இன்னும் கெட்டப்பழக்கங்களில் மூழ்கிவிடுவான் என்று அவள் தங்கிவிட்டாள்

"சாரங்கா! மாசாமாசம் உன்சம்பளப்பணத்துல பாதி இங்கஅனுப்பணும் தெரிஞ்சுதா?'

'அனுப்பறேன் மாமா..நீங்கமட்டும் அக்காவைஅடிக்காம கொள்ளாம அன்பா வச்சிக்கிட்டால் ,முழுசம்பளமுமே அனுப்பிடறேன்' என்று சொல்ல தைரியமின்றி தலையைமட்டும் ஆட்டினான்.

அக்காவைப்பிரியும்போது கண்ணீர்முட்டியது.
சுமித்ரா அவனின் உச்சந்தலையைக் கோதிவிட்டு,"போய்வா தம்பீ, நல்லாஇருப்பா...கல்யாணம் கட்டிக்
கிட்டா உன் மனைவியை அன்பா அனுசரணையா வச்சிக்கோப்பா.. உன் மாமாமாதிரி சந்தேகப்படறதும் வார்த்தைகளிலும் தீக்குச்சியிலும் சுடறதுகூடாதுப்பா"என்று சொல்லி விசும்பினாள்.

"அக்கா !என் குணம் மென்மைன்னு உனக்குத்தெரியாதா? அதுசரி, நீ இவரோட 20வருஷம் வாழ்ந்து என்னபலன் கண்டேக்கா?உதறித்தள்ளிட்டு என் கூட டில்லி வந்துடு ..உன்னை தங்கமா வச்சி நான் காப்பத்தறேன்.."

"எப்படி சாரங்கா விடறது? நம்ம அம்மா அப்பா நம்மை அப்படி வளர்க்கலயேப்பா..?அதிகம் படிக்கலேன்னாலும் அன்பினால் ஆகாதது எதுவுமில்ல பொறுத்தார்பூமி ஆள்வார்னு பெரியவங்க சொல்லி கேட்டு இருக்கேனேப்பா? என்னிக்காவது நமக்குவிடியும், ஒளிபிறக்கும்னு நம்பறேன் ...நீ போய்வாதம்பி!"

டில்லி சென்ற சாரங்கன் தவறாமல் மாதாமாதம் பணம் அனுப்பினான். லீவில் ஊருக்குவரும் போதெல்லாம்
நிறைய பொருட்களுடன் வருவான்.

அடுத்தமுறை அவன்வரும்பொழுது அவைஎல்லாம் காணாமல் போயிருக்கும்.சுமிதரா வேதனையுடன்
சொல்வாள் ,: எல்லாம் சீட்டாட்டத்துக்கும் குடிக்குமே பணமா மாறிப் போயிடுதுப்பா.. என்கிட்ட சொல்லமலேயே.."

"ஏன் அக்கா இதை நீ தட்டிக்கேக்ககூடாதா?"

"கேட்டதுக்குக் கிடச்ச பரிசைப்பாருப்பா.."

சுமித்ரா கைகளின் பின்புறத்தையும் பாதங்களையும் காண்பித்தபோது சாரங்கன் காண சகியாமல் கண்களைமூடிக்கொண்டான்.

ஊருக்குப்புறப்படும்போது சீனிவாசன் ,"சாரங்கா உனக்கு திருவாரூர்ல ஒருபொண்ணு பாத்ருக்கேன்.. டிகிரிபடிச்சிருக்காம்..பாக்க நல்லாவே இருக்கு..உனக்கு சரியான ஜோடிதான் உயரத்திலும் நெறத்திலும்"என்றான்.

"தம்பியும் ஒரு வாட்டி நேர்ல பாத்துசொல்லவேணாமாங்க?"

"என்னடி அவன்பாக்கணும் ?நாம் வளர்த்தபுள்ளை 'தாலிகட்றா'ன்னா கட்றான்.. பாக்கணுமாமே? ஏன் உனக்குபாக்கணுமா?என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு, நாயே.. ?அடி பின்னிடுவேன்.." மேலும் கெட்டவார்த்தைகளோடு பெல்ட்டைக் கழற்றினான்.

"மாமா நீங்க சொல்ற பொண்ணையெ கட்டிக்கறேன் .அடுத்தவாட்டி ஊருவரப்போ நிச்சயம் செய்துடுங்க."
என்று கலங்கிய கண்களுடன் அக்காவைப் பார்த்தபடியே சாரங்கன் கிளம்பினான்.

சீனிவாசனுக்கு பயந்தே அவன் டில்லிஅலுவலகத்தில் தன்னை தீவிரமாய்காதலித்த மாலதியை
நிராகரிக்கவேண்டிவந்தது. ஆனால் மாலதி விடவில்லை.

மாலதீ?

அவளைப்பற்றி...
(அடுத்த அத்தியாயத்தில்)
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்(மெகா தொடர்)"

Tuesday, March 18, 2008

மாலை ஒண்ணு கட்டிவச்சேன்.

மனசுக்குள்ள நீதான்னு
மஞ்ச சிறகடிச்சி
வண்ணத்துப்பூச்சி ஒண்ணு
என்காதோரம் சொல்லியதே.

கொஞ்சம் போல குங்குமத்த
நெஞ்சுமேல சரியும்படி
நெத்தியிலே இட்டுக்கிட்டு
மஞ்சணத்திப்பூ எடுத்து
மாலையொண்னு கட்டி வச்சேன்.


சாணத்தைத்தட்டிக்கிட்டே
நாணத்தை உன்கிட்ட
ரகசியமா அனுப்பி வச்சேன்.


உன் நெனப்பில் நான் தவிச்சி
ஊனுருகக் கிடந்ததெல்லாம்
சோலையிலே உலாவரும்
காத்துக்குத் தெரிஞ்சிடுச்சி
கருக்கல்லில் குளிக்கையிலே
காவிரிக்கும் புரிஞ்சிபோச்சி.


ஆசைமுகம் மறந்துடாம
அத்தைமகன் நீ வரணும்
ரோசாப்பூமாலைபோட்டு
ஜோராக தழுவிக்கணும்.


உன்மேல கொண்ட காதல்
உயிர்சுமக்கும் கர்ப்பமய்யா
ஊருக்குத் தெரியுமுன்னே தாலிக்
கயிறோடு வரவேணுமய்யா
மேலும் படிக்க... "மாலை ஒண்ணு கட்டிவச்சேன்."

Tuesday, March 04, 2008

சின்னத்திரையிலும் பெரியதிரையிலும் சீரழியும் குழந்தைகள்.

சின்னத்திரையிலும் பெரியதிரையிலும் சீரழியும் சின்னக்குழந்தைகள்
**************************************************************

சின்னவயதில் பெற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு தனக்கென்று சுயமான பாதை எதுவும் தெரியாது. அப்பாவும் அம்மாவும் கைபிடித்துக்கூட்டிப்போகும் பாதைதான் அவர்களின் பாதையாகிறது.

பலருக்குத் தாங்கள் திரைநட்சத்திரமாக முடியாத ஏக்கத்தை அல்லது வெறியை தங்கள் வாரிசுகளின் மூலமாய் தீர்த்துக்கொள்கிறார்கள். குழந்தைகளும் ஒரு கட்டத்தில் தங்களைச் சுற்றிவிழும் ஆடம்பர வெளிச்சத்தை விரும்பி மாயவலையில் விழுந்துவிடுகிறார்கள்.வளரவளர அதற்காக படிப்பை இதர லட்சியங்களை அழித்திக்கொள்ளவும் சித்தமாகிறார்கள். பள்ளி செல்லும் பருவத்தில் தங்களது அடித்தளத்தையே
மாற்றிக்கொண்டு படப்பிடிக்குப்போகிறார்கள்.

ஹாலிவுட்டில் குழந்தை நட்சத்திரங்களுக்கு அரசாங்க விதிகள் இருப்பதால் சனிஞாயிறில்தான் ஷூட்டிங் செல்வார்களாம். அதிலும் அஞ்சுமணிநேரத்துக்குமெல் அங்கு குழந்தைகளை வேலைவாங்கக்கூடாதாம். தப்பித்தவறி பள்ளிநாட்களில் படப்பிடிப்புக்குவந்தால் பள்ளி
ஆசிரியரே ஸ்பாட்டுக்கு வந்து பாடம் சொல்லித்தரணுமாம்.

ஆனால் இந்தியாவிலோ தங்களது எதிர்காலம் எப்படிப்போகும் என்றே அறியாமல் குழந்தைகள் பள்ளியைவிட்டு படப்பிடிப்புக்கு வருகிறார்கள்.இதுவும் குழந்தைத்தொழிலாளர்களுக்கு நடக்கும் கொடுமைதானே?

இப்படிப்பட்ட குழந்தைகளின் வலி நிறைந்த வாழ்க்கையை ஒளியோடு தருகிறார் நடிகை ரோகினி ஒரு ஆவணப்படம் மூலமாக.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வரும் ஏப்ரலில் நடக்க இருக்கும் Indian Film Festivalக்கு தேர்வாகி இருக்கிறது இவரது ஆவணப்படம்.

' நிலா நிலா ஓடிவா' இதன் பெயர்.

குழந்தைநட்சத்திரமாய் நடிக்கஆரம்பித்து பின் படிப்படியாய் கதாநாயகிநடிகையாய் நடித்த அனுபவம் , அப்போது ஏற்பட்ட
தாக்கம் அவரை இந்தப்படத்தை ஆழ்ந்து சிந்திக்கவைத்து சிறப்பாய் எடுக்க வைத்திருக்கிறதாகக் கூறுகிறார்.

பூனைக்கு மணி கட்டினாலும் அது எழுந்து ஓடினால்தான் சத்தம் மற்றவர்களுக்குக் கேட்கும்?
மேலும் படிக்க... "சின்னத்திரையிலும் பெரியதிரையிலும் சீரழியும் குழந்தைகள்."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.