Social Icons

Pages

Saturday, March 29, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.(தொடர்)

அத்தியாயம் 4



"யாரது சாரங்கனா?"

மாடிப்படியில் இறங்க இருந்தவனை எதிர்ப்ளாட்டின் வாசல்கதவைத்திறந்தபடி வெளியே வந்த பத்ரியின் குரல் திரும்ப வைத்தது.

நிலைப்படியின் ப்ளாஸ்டிக் மாவிலைத்தோரணத்திற்குக் கீழே கைவைத்த வெள்ளைபனியனுடன் லேசான முன் வழுக்கையுடன் பூர்ணம் விசுவநாதனின் ஜாடையில் பத்ரி நின்றுகொண்டிருந்தார். பேசுவதும் அவரைப்போலவே இருக்கும்.

அண்மையில்தான் அஞ்சல் அலுவலகப்பணியின்றும் ஓய்வு பெற்றவர். ஒரேமகள் திருமணமாகி பம்பாயில் இருக்கிறாள். திருமதி பத்ரி அமைதியாய் இருப்பவர்.

பத்ரியின் வீட்டில் எம் எஸ்சின் பாடல்களோ அல்லது ஜி என் பியின் சாகித்யஸ்வரங்களோ ஒலிக்காத நாளில்லை.சங்கீதம் தெரிந்தவராம் முதல் சந்திப்பிலேயே சொல்லி இருக்கிறார். இப்போது உளளேயிருந்து 'குறை ஒன்றுமில்லை' என்றார் எம் எஸ் தன் தேன்குரலில்.
.

"நல்லாருக்கீங்களா பத்ரிசார்?" சாரங்கன்கேட்டதும் அவர் சிரித்தார்.," எம் எஸ் பாட்டுகேட்கும்போதே தெரியணுமே உனக்கு? ஆமா ஆபீஸ் போகலயா இன்னிக்கு?'

"இல்லை சார்.." என்று ஆரம்பித்து காரணம் விவரித்தவன்,"சார்! ராதிகா எங்கவீட்டுசாவி உங்கக்கிட்ட கொடுத்தாளா?" என்று கேட்டான்
.
பத்ரி சிரிப்பை பதிலாக்கினார். "அ அதுல வந்து.." தயங்கினார்.

"ஏன் சார்சிரிக்கறீங்க? தயங்கறீங்க?'

"சாரங்கா! உன் பொறுமையும் பெரியவங்களை மதிக்கிற பண்பும் எனக்கு ரொம்பப்பிடிக்கும். இதுல கால்பங்கு உன் மனைவிக்கு இருக்கலாம்"

"ராதிகா வெளிப்படையா பேசிடுவா... மனசுல வச்சிக்கத்தெரியாது எதையும் பாவம்"

"பேச்சு பத்தி சொல்லவில்லை.. அது பிறவிகுணமாய் இருக்கலாம்..ஆனா விருப்பங்களை தேர்வு செய்யலாமில்லையா? இந்த ஃப்ளாட்ல இருக்கிற பெண்கள் எவ்வளவோ விதத்தில பொழுதை நல்லா கழிக்கறாங்க...பாட்டு பஜனை தையல்வகுப்பு ஓவியப்பயிற்சி கம்ப்யூட்டர் வகுப்புன்னு எல்லாமே இங்க ஆளுக்கொருவர் பொறுப்பேத்து நடத்தறாங்க..அதில் ஒன்றிலும் ராதிகா கலந்துக்கிறதில்லை மாறாய்
நடத்தறபெண்களை கிண்டல் செய்கிறாளாம். 'ஏ'ப்ளாக் விஜி வருத்தப்பட்டுக்கிட்டா அன்னிக்கு என் வீடுவந்தப்போ..."

"ராதிகாவுக்கு எங்காவது வெளில போய் வேலை செய்ய ஆர்வமாம் சார்"

"இப்போவே தினமும் நீ ஆபீஸ் போனதும் கதவைப்பூட்டிட்டு வெளிலதான் போயிடறா,,மாலை நீவரும்போது கரெக்டா வந்துடறா..ஒருநாள்
நான் இதைக்கேட்டபோது ஷட்அப் ன்னு திட்டிட்டு போயிட்டாப்பா..ரொம்ப துணிச்சலானபொண்ணுதான்"

"ராதிகா ஒரு சுதந்திரப்பறவை. அவள் விஷயத்தில் நான் தலையிடவே மாட்டேன் சார். பொதுவா பெண்களை நான் மிகவும் மதிப்பவன்
ராதிகா சார்புல உஙகட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்"

"அதில்ல சாரங்கா.. அதிர்ந்துவராத புருஷனும் முதிர்ந்து வராத சாதமும் உபயோகமில்லைன்னு பழமொழி சொல்வாங்க.. சரி அதிருக்கட்டும் நம் ஃப்ளாட்டுக்கு எதிரே பெரிய காலிமைதானம் இருந்ததே அதுல வேகமா ஒருகட்டிடம் வருதே, நீ பார்த்தியா?"

ஆமாம் சார் என்ன கட்டிடம் அது?

"அங்க ஒரு அனாதை இல்லம் வரப்போகுதாம...உரிமையாளர் .. அடிக்கடி கட்டிடப்பணியை பார்வையிட இங்க வராங்களாம்.. நல்லமாதிரியா இருக்காங்கன்னு ஃப்ளாட்ல எல்லாருமே சொல்றாங்க... கட்டிடத்திறப்புவிழா அன்னிக்கு நம்ம ஃப்ளாட்
பெண்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தந்திருக்காங்களாம்.."

"ஓ அப்படியா? நல்ல சேவை செய்யறாங்க!:"

சாரங்கன் இப்படி சொல்லும்பொது செருப்புசத்தம் படிகளில் கேட்டது.

ராதிகா!

"நான்சென்ஸ் ,,பவர் இல்ல லிஃப்ட் வேலை செய்யாதாம்...பேட்டரி சரிசெய்துவைக்கவேணாமோ என்ன ஃப்ளாட் இது? வாடகைமட்டும் பதினைஞ்சாயிரம் ரூபா வங்கிட்றாங்க..ஹ்ம்ம்....ஆமா நீங்க என்ன திடீர்னு வந்திருக்கீங்க?" என்று கடுகடுத்தவள்.
சாரங்கனைப் பார்த்துக் கேட்டாள் வியப்புடன்.

கதவைத்திறந்த அவளிடம் சுருக்கமாய் சொல்லிவிட்டு பத்ரியிடம் திரும்பிப்பார்த்து,"வரேன் சார் ..நன்றி, இவ்வளவு நேரம் பேசி எனக்கு கம்பெனி தந்ததற்கு"என்றான்.

"சிலருக்கு வாசல்கதவைதிறந்துவச்சிட்டு யார் எங்கபோறாங்கன்னு பாக்றதே வேலை?" என்று ராதிகா பார்வையிலும் வார்த்தையிலும் அனலைக்கக்கவும், பத்ரி உள்ளே
நழுவினார்.

"பெரியவங்ககிட்ட மரியாதையாப்பேசணும்மா ராதிகா" சொல்லியபடியே

பாத்ரூம்போய் வந்தவன்,"ராதிகா! பாத்ரூம்ல சிகரெட் துண்டுபார்த்தேன்"என்றான்.

"ஆ அ அதுவா? "

"குழாய்ரிப்பேர்காரர் வந்தாரா என்ன?"

"ஆ அ ஆமாம் ...அவந்தான் யூஸ்லெஸ்ஃபெலோ ..அங்ககுடிச்சிட்டு போட்டிருப்பான்.."

"பர்வால்ல... நான் சாக்கடைல தள்ளிவிட்டுட்டேன்.. ஆமா ராதிகா!!ஏதோ இன்டர்வியூன்னு சொன்னியே இப்போ அதுவிஷய்மாவா வெளில போயிருந்தாய்? மாலையிலதான்னு சொன்ன நினைவு எனக்கு. ஆம் ஐ ராங்?"

"நான் ரிலையன்ஸ் ஃப்ரெஷ்போய் காய்பழம்வாங்க வெளிலபோனேன்....மேலும் நான் அந்த இண்டர்வ்யூபோகபோறதில்ல"

"ஏன்மா?'

"என்னவோ பிடிக்கல..விடுங்க.."
"அப்டியா?ராதிகா !!எதிரே ஒரு அனாதைஇல்லம் வரப்போகுதாம் ..அதுக்கு நீயே வாலண்டியரா ஏதும் சேவை செய்யலாமே?மனசுக்கும் நிறைவா இருக்குமே?"

'அய்யோ! ஒரு அனாதை இல்லமா அங்கவரப் போகுது? நான் ஏதோ ஸ்டார்ஹோட்டல் இல்ல டான்ஸ்க்ளப்புனு நினச்சேன்...
சினிமாதியேட்டர் வந்தா நல்லா இருந்திருக்கும்...சினிமால நடிக்க ஆசைப்பட்ட எனக்கு தினம் சினிமாபோய் பார்க்கவாவது
முடிஞ்சிருக்கும்..இது எதுவுமில்ல ச்சே ச்சே.."

"சினிமால நடிக்கணுமா உனக்கு?"

"ஆமாங்க..ஒரு ஜோதிகா அல்லது நயனதாரா மாதிரி வரணும்..நான் பார்க்க அழகாத்தானே இருக்கேன் நடிக்கக்கூடாதா என்ன?"

சாரங்கன் தன் இளம் மனைவியை குழப்பமாய்பார்த்தான் .
இவள் என்ன ஆர்ப்பரிக்கும் கடலா? கொட்டும் அருவியா?

புன்னகையுடன் நின்றவனின் கைகளை இறுகப்பிடித்துகொண்டாள் .

தோளில்முகம் சாய்தபடி,"நைட் டின்னருக்கு தாஜ் போகலமா?" எனக்கேட்டாள் .

அந்தக்கன்னங்களின் செழுமையும் கண்களின் குறுகுறுப்பும் சாரங்கனை திக்குமுக்காடவைத்தன.அப்படியே அவளை இறுக்க அணைத்தபடி"ம்..அதற்குமுன்.."என்று அவளின் சிவந்த இதழ் நோக்கிகுனிந்தான்.

சட்டென விலகிய ராதிகா."இப்போ வேணாம் ப்ளீஸ்'என்று நகர்ந்துவிட்டாள்.

கல்யாணம் ஆன இந்த ஆறு மாதமாய் அருகில் வரும்போதெல்லாம் இதையே தான் சொல்கிறாள் ,சாரங்கனும் பொறுமையாகத்தான் இருக்கிறான் .


கிணற்று நீர்தானே ஆற்றுவெள்ளமாஅடித்துக் கொண்டு போகும் என நினைத்து சமாதானம் செய்துகொள்கிறான்.

பாவம் அவனுக்குத் தெரியுமா, வெள்ளம் வேறுதிசையில் அடித்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது என்பது!!?

(தொடரும்)

2 comments:

  1. ஆகா...நல்லா விறுவிறுப்பாக கொண்டு போறிங்க.!

    ReplyDelete
  2. கோபிநாத் said...
    ஆகா...நல்லா விறுவிறுப்பாக கொண்டு போறிங்க.!

    >>>மிக்க நன்றி கோபிநாத்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.