தெருவில் நடந்துகொண்டிருந்த பரந்தாமனை உரசிக்கொண்டு வந்து நின்றது அந்த பென்ஸ்கார்.
பதறிப்போய் அப்படியே நின்றுவிட்டார் பரந்தாமன்.
ரிடையராகிவிட்ட இந்த ஆறுமாதமாய் காலை எழுந்ததும் குளித்துவிட்டுக் கோயிலுக்குச்செல்வது அவரது அன்றாடப்பழக்கம். இன்றும் அதேபோல கோயிலுக்குப்போக நடந்துவந்துகொண்டிருந்தார். சீக்கிரமாய்
போகவேண்டும் ,கோயிலில் இன்னிக்கு கும்பாபிஷேகம் என்று எண்ணியபடி நிமிர்ந்தவரிடம் கார்க்கதவைத் திறந்தபடி ஒரு இளைஞன் நெருங்கினான்.
"பெரியவரே...இந்த ஏரியால ரூபா ஒயின் ஷாப் எங்க இருக்கு வழி சொல்வீங்களா?' என்றுகேட்டான்.
பரந்தாமன் எரிச்சலுடன் அவனைப்பார்த்தார். 'இவனுக்கு என்ன இருபத்திமூன்றுவயது இருக்குமா? பார்த்தாபடித்தவன் போலத்தெரிகிறான்.. பணக்காரவீட்டுப்பிள்ளைபோலும் அதனால்தான் விடிகிறபோதே இப்படி ஒயின் ஷாப்பிற்கு வழிகேட்கிறான்? இப்படி இவனை மாதிரி இளைஞர்கள் இருந்தால் நாடு எப்படி உருப்படுமாம்?' மனதிற்குள் முணுமுணுத்துவிட்டு அவனிடம் வெறுப்புடன் ரூபா ஒயின் ஷாப் செல்லும் வழியை சொன்னார்.
பிறகு அவனைத் திரும்பியும் பாராமல் நகர்ந்துவிட்டார்.
பத்து நிமிடநடையில் கோவிலுக்குள் சென்றவரை ரூபா ஒயின்ஷாப்பிற்கு வழிகேட்ட இளைஞனே
எதிர்கொண்டான்.
பரந்தாமனை பார்த்ததும் முகம்மலர்ந்தவனாய்," பெரியவரே! வாங்க வாங்க! நீங்களும் கோயிலுக்குத்தான் வரீங்கன்னு தெரிஞ்சிருந்தா என்கார்ல அழைச்சிட்டுவந்துருப்பேனே?
நான் இந்தப்பகுதிக்கு புதுசு....ரூபா ஒயின் ஷாப் இங்க பிரபலமான கடையாமே? அதை அடையாளம் சொல்லி அதுக்கு எதிர் ரோடின் முனையில் கோயில் இருப்பதாய் சொல்லி என்னை அனுப்பினார் அப்பா.
அதான் உங்களை அப்போ ரோட்ல நிறுத்தி வழிகேட்டேன். நன்றி பெரியவரே! அப்பாக்கு உடல்நிலை மோசமாய் இருப்பதால் கும்பாபிஷேப்பணி முழுக்க நான் ஏத்துக்கிட்டு இருக்கேன் ..அப்பா இடத்துல நீங்க இருந்து முடிச்சிக் கொடுக்கணும்"என்றான்., கைகுவித்துப் பணிவாக.
Tweet | ||||
யக்கா, நல்ல ட்டுவிஸ்ட். கலக்குங்க.
ReplyDeleteஅருமை.தொடர்ந்து எழுதுங்கள் :)
ReplyDeleteநல்லாயிருந்துச்சு!!!
ReplyDelete