Social Icons

Pages

Thursday, April 10, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்!

காலமெல்லாம் காத்திருப்பேன்
அத்தியாயம் 7




சந்தேக நூலிழை கயிறாகமுன்பு அதை அறுத்து எறிய நினைத்த சாரங்கன், அன்று வீடுவந்ததும் ராதிகாவை அழைத்தான்.

"என்ன இது புதுசா இருக்கு குரலை உயர்த்தி என் பேரைச்சொல்லிக்கூப்பிடறீங்க?" வியந்தாள் ராதிகா.

'காரணம் இருக்கு ராதிகா..ஆமா அன்னிக்கு எனக்காக வாங்கினதாய் நீ காண்பித்த அந்த பித்தளைபட்டர்ப்ளை வச்ச ஷூ எங்க?
ஷூ ராக்கிலயும் காணோமே?' என்று சாரங்கன் கேட்டான்.

"அ அது அதுவந்து... அந்த மாடல் உங்க அழகுக்கு எடுபடாதுன்னு கடைல கொண்டுபோய் கொடுத்து அதுக்கு பதிலா எனக்கு ஒரு சப்பல் வாங்கிட்டேன்."

நிஜம்தானே இது ராதிகா?

பின்ன நா நான் என்ன திட்டம்போட்டு பொய் சொல்றேனா ? சரி அபத்தமாய் பேசறதைவிட்டு இந்த காஃபியைக்குடிங்க நான் ஜெய்நகர் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் போகணும்.."

எதுக்கு போகணும்?

என்ன கேள்வி இது? வெஜிடபிள் வாங்கிவரத்தான்..


என்கூட பைக்குல வாயேன் நான் அழைச்சிட்டுப்போறேன்

போதும் உங்க கூட பைக்கில வந்தா பின்னாடி வரும் சைக்கிள் ஓவர்டேக் செய்யுது நம்ம வண்டியை அவ்வளோ மெதுவா ஓட்டறீங்க!"

ஸ்லோ அண் ட் ஸ்டெடி நான்

எனக்கு ஸ்பீட் தான் பிடிக்கும் சரி நான் ஆட்டோ ல போயிட்டுவரேன்

அமர்க்களமாய் அலங்கரித்துக்கொண்டு அவள்புறப்படவும் சாரங்கன் அழைத்தான்.

ராதிகா?


அடட்டா எனாச்சு இன்னிக்கு உங்களுக்கு ?சும்மா கூப்பிட்டறீங்க ஏதேதோ கேக்கறீங்க ?

ராதிகா! இருட்டப்போற நேரத்துல உன் கழுத்துல எதுக்கு இப்படி ஒரு டால் அடிக்கும் நெக்லஸ்? ஆமா அது என்ன வைரமா இப்படிமின்னுகிறதே?

வைரமா? அதெல்லாம் சாத்தியமா நமக்கு? எல்லாம் போலிகற்கள்தான்..நகையும் தங்கமேஇல்ல...கவரிங்தான்"

அப்படியா கைலகொடு நான் பார்க்கிறேன்

ஹலோ எதுக்கு உங்களுக்கு பெண்கள் நகையெல்லாம்?


கொடுக்கறியா இல்லையா?

சாரங்கனின் உஷ்ணக்குரலில் சற்றே அதிர்ந்த ராதிகா நெக்லசைக் கழற்றினாள்

கோபமாய் "இந்தாங்க" என்றாள்

நெக்லசைவாங்கியதுமே அது கனத்தது. கற்களின் மிதமான ஒளி வைரம் என்பதை உறுதிப்படுத்தியது.

போலிகள்தான் அதிகமாய் மின்னும்..அசலுக்குத்தான் கனம் அதிகம். தங்கசங்கிலியில் பதிக்கப்பட்ட வைரநெக்லஸ்தான் அது என்பதை உணர்ந்த சாரங்கன் அதை திருப்பி அவளிடமே கொடுக்கவும் வாங்கி அணிந்தவள் விருட்டென வெளியேறினாள்.

அவள் நகர்ந்ததும் வாசல் கதவைத் தாளிட்டான் சாரங்கன்.

அறைக்குள் நுழைந்து ராதிகாவின் பீரோவைத்திறந்தான். குடித்தனம் வந்ததும் அவள் ஆசைப்பட்டாளே என வாங்கித்தந்த புது பீரோ.அவனுடையதற்கென தனி வார்ட்ரோப் இருக்கிறது .உடைகளில் கூட கணவனோடு சேர்ந்து இருக்க விரும்பாத பெண் தனக்கு மனைவியாக வாய்த்ததை எண்ணி ஒருக்கணம் வருந்தினான்.

மற்றவர் பொருட்களை -அது மனைவியாக இருந்தாலும்- தொடவிரும்பாத சாரங்கன் ,கண்களில் எரிச்சலோடு பீரோவைக்குடைந்தான்.

சேலைகள் சுடிதார்கள் ஜீன்ஸ்டாப்ஸ் உள்ளாடைகள் என்று அடைத்துவைத்திருந்தாள். அடுக்கி ஒழுங்காக எதுவுமேஇல்லை.
ராதிகாவின் மனதைப்போல அதுவும் சிதறி காணப்பட்டது. அவைகளில் எதையோ தேடினான்.

சில்நிமிடங்களில் கண்டுபிடித்தான்.

அது ஒரு வெல்வெட்நகைப்பெட்டி.

அதைத்திறந்தான்.

பெட்டியில் நகை இல்லை ஆனால் ஒரு சீட்டு இருந்தது.

எடுத்தான் பிரித்தான் படித்தான்.

'வித் லவ் டு மை ஸ்வீட்கார்ட் ஃப்ரம் மஞ்சு 'என்று எழுதி இருந்தது.

அதிலேயே நெக்லஸ்வாங்கிய ரசீதும் இருந்தது.. க்ருஷ்ணையாசெட்டி நகைக்கடையில் வைரநெக்லஸ் ஒன்று நான்குலட்சத்திற்கு வாங்கின ரசீது.

"மஞ்சுநாத்!துரோகி!' சாரங்கனின் வாய் கோபமாய் கத்தியது.

ஷூவில் ஏற்பட்டசந்தேகம் காரணமாய் நெக்லஸ் விஷயத்தை சோதனை செய்ய உண்மைதெரியவந்தது.

கம்பெனியில் சுருட்டிய பணத்தில் தன் மனைவிக்கு-அவனுடைய காதலிக்கு- மஞ்சுநாத் நெக்லஸ்வாங்கிக்கொடுத்ததை தன் கண்களால்
பார்க்க நேரிட்டதை தாங்க இயலாதவனாய் நின்றான்.

பழைய்படிபீரோவைபூட்டிவிட்டு ஹாலிற்குள் நுழைந்தான்.

படபடப்பாய்வந்தது .

தண்ணீர்குடிக்க சமையலறைக்குப் போகும்பொது காலிங்பெல் அடிக்கப்படவும் தயங்கிப்பின் திறந்தான்.

வாசலில் பத்ரி நின்றுகொண்டிருந்தார்.

இவனைக் கண்டதும்,
"சாரங்கா! என்னப்பா முகமெல்லம் சிவந்திருக்கு ?அன்றலர்ந்ததாமரை போல எப்போவுமே இருக்குமே உன்முகம்? உடம்புசரீல்லையாப்பா? நான் உன்னை எதிர்கட்டிடத்திறப்புவிழான்னு இன்னிக்கு நடக்க இருக்கிற ஆன்மிக சொற்பொழிவுக்கு அழைத்துப் போக வந்தேன்...இன்னிக்குகோகுலாஷ்டமிதினம் தெரியுமா உனக்கு?" என்றார்.

'கோகுலாஷ்டமியா இன்றைக்கு? உலகை ரட்சிக்க துஷ்டர்களை அழிக்கஅவதாரம் செய்த க்ருஷ்ணின் ஜன்ம தினமா? இதைக்கொண்டாடக்கூட நேரமில்லாம்ல் ஊர் சுற்றுகிறாள் ராதிகா!

நரகாசுரன் என்கிற அசுரனை அழிக்க நாராயணன் அவதாரம்செய்தார். ராவணனை அழிக்க ராமாவதாரம்நடந்தது.
துஷ்டர்களை அழிக்க கடவுள்களேஅவதாரம் எடுக்கிறார்கள்.

நான் ராமனாக இருக்கிறேன் ஆனால் என் மனைவி சீதையாக இல்லையே..

நம்பிய எனக்கு அவள் துரோகம் செய்கிறாள், அப்படியானால் நானும் அவதாரபுருஷனின் செயலை செய்தால் என்ன?'

என்னப்பா யோசிக்கறே?" என்று பத்ரிகேட்கவும் சுதாரித்த சாரங்கன்

"நான் வரேன் சார் உங்ககூட" என்றான்.

சாரங்கன் ஒருமுடிவோடு அவருடன் புறப்பட்டான்.

தொடரும்..
.
.

2 comments:

  1. wow
    Interesting. waiting for next part.

    ReplyDelete
  2. மங்களூர் சிவா said...
    wow
    Interesting. waiting for next part.

    .....>>>
    இட்டதும் கதையை சூடா படிச்சாச்சா? நன்றி சிவா சீக்கிரமே அடுத்த அத்தியாயம் வரும்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.