Social Icons

Pages

Friday, April 25, 2008

எனக்கு எப்போதும் இரண்டாவது இடம்

கூட்டம் ஆரம்பிக்க இன்னும் சில நிமிஷங்களே இருந்தன உதயன் தலைவரின் அருகே போய் நின்றுகொண்டுவிட்டான். நான் வழக்கம் போல இரண்டாவதாய் சற்று தள்ளிநின்று கொண்டேன். எனக்குப்பின்னே முகிலன், நிலவன் ஏனையோர்

தலைவர் அரசியலில் மிகவும் பிரபலமானவர். இருமுறை மந்திரிபதவி வகித்தவர். இப்போதும் தேர்தல்கூட்டத்திற்குத்தான் நாங்கள் கோவைக்கு வந்திருக்கிறோம். தலைவரைப்பற்றி எதிர்கட்சிகள் அவதூறாய்ப் பேசினாலும் அவர்மீது எனக்கு அபிமானம் உண்டு.

ஆனால் உதயனைப்போல தலைவருக்கு ஐஸ் வைக்க எனக்குத்தெரிவதில்லை. உண்மையான தொண்டன் எதற்கு தன் தலைவருக்கு ஐஸ் வைக்க வேண்டும் ?இயல்பாய் இருந்தால்போதாதா என நினைத்தே நான் பின்னுக்குபோய்விட்டேன் ,உதயன் முன்னால்போய்விட்டான்.அவனுக்குத்தான் தலைவர் முதலிடம் கொடுத்திருக்கிறார் நான் இரண்டாமிடத்தில். உதயன் இல்லையென்றால் மட்டும் என்னை அழைப்பார் முதலில்.

தலைவரின் பின்னே நாங்கள் ஐந்தாறு பேர் எப்போதும் அவர் எங்கு சென்றாலும் உடன் செல்வோம் ..இப்போதும்

உதயன் குனிந்து கைகட்டி தலைவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவரும் அவனுக்கு
சின்னக்குரலில சில ஆணைகள் இட்ட் வண்ணம் இருந்தார். கூட்டத்தில் பலரின் கண்கள் உதயனைப்பொறாமையுடன் பார்த்தன.

என் மனைவி சொல்வாள்."உங்களுக்குப்பிழைக்கத் தெரியலீங்க....இந்த உலகத்துல முகமூடி போட்டுக்கிட்டுத்தான் பழகணும்..நாம் நாமாக இருந்தா யாரும் மதிக்க மாட்டாங்க..நீங்க இருக்கறதோ அரசியல் என்கிற முகமூடிக்கொள்ளைக்காரங்களின் பாசறைல ..இதுல உத்தம்புத்திரனா இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சா இப்படியே ரெண்டாமிடத்துல இருக்கவேண்டியதுதான்... வேற வழியே இல்ல"

அரசியலிலோ திரைஉலகிலோ நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று என்னைப்போல நாலுபேராவது இருந்தால் தானே மக்களுக்கு மனதில் அவைகளைப்பற்றி நல்ல எண்ணம் வரும்?

ஆனாலும் இந்தக்கூட்டத்தில் உதயனைவிட எனக்கு முன்னுரிமைதருவார் தலைவர் என எதிர்பார்த்திருந்தேன் கூட்டம் அமைக்கப் படாதபாடுபட்டது நான் என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனாலும் இப்போதும் இரண்டாம் இடம் எனக்கு.

பொறுமை இழந்துவிடுவேன் போலிருக்கிறது.
மேடையில் தலைவரின் நாற்காலிக்குப்பின்னே பவ்யமாய் உதயன் நின்றுகொண்டிருக்க மேடையின் பின்னே பளபளக்கும் சாடின் திரையின் ஓரமாய் அனாதையாய் நான்..

என் தலைகுனிகிறது.

குனியக்குனியக்குட்டுவார்களோ? இருக்கும் இருக்கும். கூட்டம் முடியட்டும் தலைவரிடமேபொங்கிவிடவேண்டும்

நினைத்துக்கொண்டே நான் விழிகளை உயர்த்தவும்' டுமீல் டுமீல 'என இருமூறை துப்பாக்கிகுண்டுவெடிக்கவும் சரியாக இருக்கிறது.

'ஐயோ ஐயோ'

கூட்டம் சிதறிசின்னாபின்னமாகிறது
.
மேடை நிலைகுலைகிறது.

"தலைவரை சுட்டுட்டான் யாரோ ஒருபாவி.பக்கத்துலயே நின்னுட்டு இருந்த உதயனுக்கும் குண்டடிபட்டு, ரண்டுபேரும் ரத்த வெள்ளத்துலகிடக்கிறாங்க.." ஓலமிட்டது ஒருகுரல்.

"யாராவது ரெண்டுபேரு வாங்க... தலைவரைத்தூக்கிப்பாருங்க மூச்சு இருக்கா பாக்கணும்"
தொண்டர் ஒருவர் கூக்குரலிட்டார்.

முகிலன் விரைகிறான் முதலில் .

பின்னாலேயே நானும் செல்கிறேன், மேடை ஓரமாய் ரத்தவெள்ளத்தில் அனாதையாய்கிடக்கும் உதயனின்மீது பார்வை படர்வதை தவிர்க்க இயலாதவனாக.


(வா வ ச ..இரண்டு போட்டிக்காக)

3 comments:

  1. நன்றாக இருக்கு...வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  2. மிக நல்ல கதை...ஆனாலும் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக எழுதியிருக்கலாம்.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  3. எதிர்பாராத முடிவு

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.