கிளியை வளர்த்து பூனைகையில் கொடுத்தமாதிரி என்பார்கள் அல்லவா இப்போது நிஜமாகவே ஒரு கிளி, பூனையிடம் மாட்டிக்கொண்டுவிட்டது.
கிளியைப்பற்றிய விவரத்திற்கு முன்பு பூனையைப் பார்க்கலாம். அந்தப்பெண்பூனையி்ன் பெயர் அஞ்சலை. அஞ்சலேக்கா என்று தான் அந்த கீரைக்காரத் தெரு முழுக்க அவளை அழைக்கும்.பெயருக்கேற்றமாதிரி எதற்கும் அஞ்சாதவள் போன்ற கட்டுமஸ்தானஉடம்பு. கருப்பு நிறம். கோழிமுட்டையாய் கண்கள்.அதில் எப்போதும் உக்கிரம் தவழும் .
வயது ஐம்பதுகளில் இருக்கலாம்.
ரங்கபுதூர் என்ற நாலைந்து தெருக்களும் சிறு கோயிலும் கொண்ட அந்த சின்ன ஊரில் அவளைக்கண்டு பயப்படாதவர்களே இல்லை எனலாம்.உருவம் பேச்சு பார்வை எல்லாவற்றிலும் முரட்டுத்தன்மைதான். அவள் செய்யும் வியாபாரம் வேறு அவளின் குணத்தை அச்சுறுத்தலாய் காட்ட வசதியாய் இருந்தது. சாதாரணமாய் ஆண்கள் தான் கசாப்புக்கடை வைப்பார்கள் ஆனால் அஞ்சலை வீட்டு வாசலில் வேப்பமர நிழலில் அமைந்த திண்ணையில் தினம்மூன்று ஆடுகளை நாலுகோழிகளை சர்வ சகஜமாய் வெட்டி அதன் இறைச்சியை வியாபாரத்திற்கு தயார் செய்வாள். மதியம் மூன்றுமணிவரை கவிச்சி வியாபாரம் அங்கே களைகட்டும்.
‘என்னா பாக்கறீங்க ஒரு பொட்டச்சி கவிச்சி விக்குறான்னா? பொம்பளைங்க ப்ளேன் ஓட்டுனா மதிப்பீங்க, பொழப்புக்கு நாதியில்லாம புருஷனை பறிகொடுத்தவ இப்படி கறிக்கடை வச்சா எளப்பமா பார்ப்பீங்களாக்கும்? டவுனு கவிச்சிமார்க்கெட்டை விட இங்கிட்டு சல்லுசுன்னுதானே அல்லாரும் பறந்தடிச்சிட்டுவரீங்க.. கறிய வாங்கிட்டு வாய முடிட்டுபோங்க ஆமா..‘ என்று தன்னைக் கிண்டலாய் பார்க்கும் ஆண்களை அதிரடியாய் கேட்டு தலைகுனிய வைப்பாள்.
அவள் அலட்சியமாய் கட்டம்போட கண்டாங்கி சேலைத்தலைப்பை உதறியபடி தெருவில் நிமிர்ந்து நடந்து வந்தால் அண்டசராசரம் குலுங்கும். எதிரில் கண்டவர்களுடன் வம்புவார்த்தை பேசாமல் போகமாட்டாள்.அப்படித்தான் ஒருநாள் வசந்தா அவளிடம் மாட்டிக்கொண்டாள்.
“யாருடி நீ? ஊருக்கு புதுசா இதே தெருதானா?”
“ஆ..ஆமாம்.பதினாலாம் நம்பர்வீட்டுவாசல் போர்ஷன்ல குடி வந்து ஒருமாசமாச்சி.”வசந்தா பயத்தில் மென்று முழுங்கினாள்.
“அதென்ன கையில்பெரிய கட்டைப்பையி.. அதுல நாலைஞ்சி சாப்பாட்டுக்காரியரு?”
”ஆ அதுவந்து...மதியம் சாப்பாட்டை சமைச்சி காரியர்லபோட்டு டவுன்ல ஒரு ஆபீசுக்குக் கொண்டுபோறேன்“
”ஆங் பாத்தா முப்பது வயசு தான் இருக்கும்போலிருக்குது? நீ ஏன் சமைக்கணும் டவுனுக்கு கொண்டுபோவணும்? உன் புருஷனுக்கு வேலைவெட்டி கிடையாதா?”
”இல்ல அவருக்கு ஆக்சிடண்ட் ஆகிடிச்சி .வீட்டோடகுழந்தையைப்பார்த்திட்டு கெடக்கறாரு...அவரும் சமையல்வேலைதான் பார்த்தாரு.. டவுன்ல ’கிரிகேட்டரிங்’ல இருந்தார் இப்போ கால்ல அடிபட்டு வீட்டோட இருக்காரு.. அதான்..”
”என்னா வய்சு குளந்தைக்கு?”
”நாலுவயசு,பொண்குழந்தை, பேரு திவ்யா”
”அது கெடக்கட்டும்..கொண்டா உன்வீட்டு சோறு தின்னுத்தான்ப் பாக்குறன்”
நடு ரோட்டில் வசந்தாவின் கையிலிருந்த ஒருமூன்றடுக்கு எவர்சில்வர் காரியரைப் பிடுங்கினாள்.
திறந்து விரல்வைத்து நாவில் ருசிபார்த்தவள்,” ஆஹா வத்தகுளம்பா இது? இதென்ன வாளைக்கா வறுவலா? தயிர்ச்சோறுவேற..ஏண்டி ஒரு கருவாடு கவிச்சி இல்லாம என்ன சமைக்றீங்க? ஆங்? என்று முழங்கினாள்.
:அதெல்லாம் சமைக்கதெரியாதுங்க.. சை.. சைவம்தான் செய்ய வரும்”
”த்தூ,,உங்க வத்தகுளம்பும் தயிர் சோறும் ஒரு சாப்பாடா தூத்தேறி “ காறித்துப்பிவிட்டு,
”சரி சரி போ...ஆங் உன் பேரு என்ன?”என்றாள் அதட்டுவதுபோல.
”வ.. வசந்தா”
”தா பார் வசந்தா.புதுசா வந்திருக்கீங்க..ஊர்ல ரவுடிங்க எவனாச்சும் உங்கவீட்டாண்ட உனக்கு தொல்ல செஞ்சா சொல்லு என்கிட்ட நான் தட்டிவக்கிறேன் என்ன? ஹெஹெஹெ..தலை நான் இருக்க வாலு ஆடாதுதான். ஆனாலும் எச்சரிக்க செய்யுறேன் என்ன?”
”ச சரிங்க..”
வசந்தாவிற்கு அன்றிலிருந்தே வயிற்றில் புளியைக்கரைக்க ஆரம்பித்தது.
கணவன் சுந்தரத்திடம் நடந்ததைக்கூறி,”என்னங்க,, இந்த ஊர்ல இனியும் இருக்கணுமா? அஞ்சலைபொம்பிளை தாதா மாதிரி இருக்கா. அவளைப்பத்தி இந்த போர்ஷன்ல பலர் பலவிதமா சொல்லி பயமுறுத்துறாங்க.நாம இப்படி அவவீட்டுக்கு ரண்டே வீடுதள்ளி இருக்கவும் வேணாம் தினமும் நான் உசுரைக்கையில் பி்டிச்சிட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போய்வரவும்வேணாம் ...பேசாம டவுனுக்கே குடி போயிடலாம் ..” என்றாள்.
” என் கால் கொஞ்சம் நடக்கவரட்டும் வசந்தா நாம போயிடலாம்... நமக்கென்ன கைவண்டில கொண்டுபோகிற சாமான்கள்தானே பெருசா ஏதுமில்லயே,என்னிக்கு வேணா போயிடலாம் கவலைப்படாதே..”சுந்தரம் சாமாதானப்படுத்தினான்.
அன்று டவுனுக்குப் போய் ஆபீசில் காரியரைகொடுத்து வீடுவந்தவள் மகள் திவ்யாவின் கையில் ஒரு கிளிக்கூண்டினைப் பார்த்தாள். சிறிய பச்சைக்கிளி, சிவப்பு அலகோடு அழகாக இருந்தது.
“வாசலில் ஒரு ஆள் கொண்டுவந்தான் வசந்தா! குழந்தையும் ஆசைப்பட்டாள்னு வாங்கினேன் அதிகம் விலை இல்லை” என்ற சுந்தரம் கிளிக்கு பழக்கொட்டைகள் எதையோ கொடுக்க ஆரம்பித்தான்.
“என்னவோ போங்க அப்பாக்கும் பெண்ணுக்கும் பொழுது போகணுமே..ஆச்சி, ஜூன் வந்தா திவ்யாக்குட்டியை டவுன்ல அரசுபள்ளில ஒண்ணாங்கிளாஸ்ல சேர்த்துடணும் வசதி இருந்தா கான்வெண்ட்ல கிண்டர்கார்டன்ல போட்ருப்போம். என்ன செய்றது?”
“படிக்கிற குழந்தைங்க எங்கயும் நல்லா படிச்சி முன்னுக்கு வருவாங்க...நீ வேணா பார்த்திட்டே ,திவ்யா அமோகமா வருவா..இப்போவே ஏபிசிடி எல்லாம் சொல்றா யாராவது வீடுவந்தா வெல்கம் சொல்லுன்ன்னு எனக்குத்தெரிஞ்ச இங்கிலீஷ்ல அவளுக்கும் சொல்லிக்கொடுத்தேன் அதை அவ கிளிக்கும் சொல்லித்தரா!”சுந்தரம் பெருமைப்பட்டுக்கொண்டான்.
பத்துநாள் கடந்திருக்கும்..அன்று வீட்டில் திவ்யா உரக்க அழ ஆரம்பிக்கவும் வசந்தா டவுனிலிருந்து பஸ்ஸைப்பிடித்து உள்ளே சரியாக இருந்தது.
“என்னாச்சு திவ்யாக்கு?” செருப்பை அவிழ்த்தபடி கேட்டாள் வசந்தா.
சுந்தரம் பதட்டமாய்,”நம்மவீட்டு வாசல் திண்ணைல உக்காந்திட்டு கிளிக்கூண்டைத்திறந்து பழம்கொடுத்திட்டே இருந்தோம்.. சட்டுனு அது பறக்க ஆரம்பிக்கும்னு நினைக்கவே இல்ல. என்னால எழுந்து நின்னு அதைப்பிடிக்கவும் முடியல .. கிளி வேகமா மேல பறந்து அஞ்சலை வீட்டு வேப்பமரத்து கிளைலபோயி உக்காந்திடிச்சி.. நான் காலைக் கெந்திகெந்தி ரோடுக்கு வரவும் அஞ்சலைவீட்ல யாரோ ஒரு பையன் அதை மரத்துல ஏறி கையில் பிடிக்கவும் சரியா இருந்திச்சி... என்ன செய்யப்போறாங்களோ ஆட்டுக்கறி கோழிக்கறி, முயல்கறிமாதிரி கிளிக்கறி செய்து அவ விக்கலாம் அப்படீன்னு நினக்கி்றபோதே எனக்கு உடம்பு பதறிப்போயிடிச்சி...வேற யார் வீடா இருந்தாலும் நான் தைரியமா போயிடுவேன் கேட்டுடுவேன் கிளியைக்கொடுங்கன்னு. அஞ்சலைவீடுன்னதும் குலை நடுங்கிடிச்சி வசந்தா.. திவ்யாவும் கிளி போன துக்கத்துலதுடிச்சி அழறா..ஏன் வசந்தா நீ போய் கேட்டுப்பாரேன் கிளியைதரமுடியுமான்னு?” என்றான் கெஞ்சுதலாய்.
”ஐயோ அவ ராட்சசியாச்சே..மனசெல்லாம் பாறாங்கல்லு.இதயமே இல்லாதவ.அவகிட்ட யாருங்க மல்லுக்கு நிக்கறது? விடிஞ்செழுந்தா ரத்தத்துல கையைக் கழுவறவ..’உன் கிளியா? என்ன சாட்சி?ன்னு இடக்காய் கேட்பாள்..விடுங்க..இதுக்கெல்லாம் விடிவுகாலம் வரப்போகுது..ஆமாம்.. இன்னிக்குன்னு பார்த்து லஞ்ச் கொண்டுபோகிற ஆபீஸ்மேனேஜர்-பேரு-ராமநாதன் - என்கிட்ட இரண்டொருநாளில் அவரும்,அவர்மனைவியும் அவங்க மகள் பிரசவத்துக்கு அமெரிக்காவுக்கு மூணுமாசம்போகப்போவதால் பூட்டின வீட்டைப் பார்த்துக்க நம்பிக்கையா ஏதும் ஆள் தெரிஞ்சா சொல்லும்மான்னார். தங்கிக்கொள்ள வீட்டின் பின்பக்கம் இருக்கிற அவுட் ஹவுசைத் தரேங்கிறார்..நாங்களே வரோம்னு நான் சொன்னதும் சந்தோஷமா சம்மதிச்சார்... நாளைக்காலைல சட்டுனு கிளம்பிடுவோம் ...இந்தவீட்டு சொந்தக்காரர் டவுன்லதான் இருக்காரு.. அவருகிட்ட உங்க கால்ல ஆபரேஷன் செய்யணும் அதனாலகாலி செய்றோம், டவுன்ல வீடு பாத்துப்போறோம்னு சொல்லிடலாம். மூணுமாச அட்வான்ஸ் ஆயிரத்து இருநூறுருபா கொடுத்திருந்தோம்..பாழாப்போகிற அஞ்சலையால் ரண்டே மாசம்தங்கிட்டு ஒருமாச வாடகைப்பணத்தை இழக்கிறோம். பரவாயில்லை இன்னு்ம் அவளால் நமக்கு தொல்லைவரதுக்குள்ள புறப்பட்டுடலாம்...”
ஆயிற்று வசந்தா குடும்பத்துடன் வீட்டைக்காலி செய்துவந்து மூன்றுமாதத்திற்குமேலாகிவிட்டது.
இன்னும் இரண்டு ஆபீசுகளிலும் பாங்க் ஒன்றிலும் அவளிடம சாப்பாட்டுக் காரியர் கொண்டுவரும்படி கேட்டுவிட்டதால் வேலை சரியாக இருந்தது. சுந்தரம் மெல்ல நடக்க ஆரம்பித்துவிட்டான்.திவ்யாவும் கொஞ்சநாளைக்குக் கிளி நினைவில் அழுதுகொண்டிருந்தாள்.பிறகு பள்ளிக்கூடம் சேர ஆரம்பித்ததும் படிப்பில் கவனம் போய்விட்டது.
அமெரிக்கா சென்ற ராமனாதன் தம்பதிகள் வீடு திரும்பிவந்துவிட்டனர். அவுட்வுசில் தொடர்ந்து சுந்தரமும் வசந்தாவும் குழந்தையுடன் தங்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.
அன்று ரங்கபுதூர் கோயிலின் தேர்த்திருவிழாவைப் பார்க்க காரில் போகலாம் என்று வசந்தாவை திருமதி ராமநாதன் அழைத்த போது முதலில் தயக்கமாக இருந்தது. ஆனாலும் அஞ்சலைமீதிருந்த பயம் நீங்கி விட்டிருந்ததால் வசந்தா சட்டென கிளம்பிவிட்டாள்.
கோவில் வாசலில் கார் நின்றதும் திருமதி ராமனாதன் இறங்கிக்கொண்டாள்.
வசந்தாவிடம் ஐம்பதுரூபாயைக்கொடுத்து,”பூ பழம் வாங்கிவா.. கூட்டமாயிருக்கு..நான் இப்படி ஓரமாய் நிக்கறேன்..” என்றாள்.
வசந்தா கோவில் வாசலில் சிறு ஸ்டூல்மீது மூங்கில்தட்டைவைத்து அதில் பூச்சரத்தை பந்தாய் உருட்டி வைத்து வியாபாரம் செய்துகொண்டிருந்த பூக்காரிகளில் ஒரு பெண்மணியை நெருங்கி,”ரண்டுமுழம் மல்லிப்பூ ஒரு முழம் கனகாம்பரம் கொடுங்க..” என்றாள்.
“எத்தினி கேட்டீங்கம்மா?” என்று அன்பாய் கேட்டு நிமிர்ந்தவளைப்பார்த்தாள் வசந்தா. உடல் தளர்ந்திருந்தாலும் அந்த பெரிய கண்கள் அவள் யாரென்று காட்டிக்கொடுக்க,“அ ..அஞ்ச..?” என்று முடிக்கமுடியாமல் குழப்பமாய் கேட்டாள்.
அவளும் வெய்யிலில் கூசிய கண்களை இடுக்கிப்பார்த்துவிட்டு,”வசந்தாவா?” வியப்புடன் கேட்டாள்.
“ஆமாமாம் வசந்தாவே தான்” தைரியமாய் அழுத்தமாய் உரக்கவே சொன்னாள் வசந்தா.’இனிமே உன்கிட்ட என்னடி பயம்? உன் எல்லைல நான் இல்லை.. யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதாக்கும்?’
“டவுனுக்குபோயிட்டதா கேள்விப்பட்டேன்..புருஷனுக்கு கால் ஆபரேஷன்னு திடீர்னு போயிட்டியாமே..?”
“ஆமா...இதென்ன நீங்க உருக்குலைஞ்சி இப்படி இளைச்சிபோயிட்டீங்க? கம்பீரமா கசாப்புக்கடையில் வியாபாரம் செய்யாமல் கனக்காம்பரப்பூவும் மல்லிகையும் வித்திட்டு இப்படி இருக்கீங்க?” சற்று இளக்காரமாகவே கேட்டாள் வசந்தா.
ஹ்ம் என்று பெருமூச்சுவிட்டாள் அஞ்சலை.
பிறகு,”அய்ய அதையேன் கேக்கற ?...மூணுமாசம் முன்னாடி இதேப்போல ஒரு ஒருவெள்ளிக்கிழமைன்னு நெனைக்கிறேன், மதியம் ஒருகிளி என் வீட்டுவாசல் வேப்பமரத்துல வந்து குந்திக்கிச்சு... என்னடாஇது அதிசியம்னு நான் பாக்குறப்போவே என்சின்னமகன் மரத்துல நைசா ஏறி அதை லபக்குனு பிடிச்சான்..கீள குதிச்சான்.கிளி கீச் கிச்சுனு கத்திச்சி...”
அஞ்சலை சற்று மூச்சுவிட பேச்சை நிறுத்தினாள்.
’அடப்பாவி..அம்மாவும் மகனும்கோழிக்கறி முயல்கறி செய்யறமாதிரி கிளியை வெட்டி கிளிக்கறி செஞ்சி தின்னிங்களாக்கும்? அந்தப்பாவம்தான் உன்னை இப்படி உருக்குலைச்சி ஓரமா உக்காரவச்சிருச்சாக்கும்?’வசந்தாவின் மனம் பொறுமியது.
அஞ்சலை தொடர்ந்தாள்.
”நல்லவேளை கிளிக்கு ஒண்ணும் அடிகிடி இல்ல ..’ஏண்டா இருபத்திநாலுவயசு ஆவுது உனக்கு! உனக்கு விளையாட கிளிகேக்குதா?’ன்னு அவனைநாலு சாத்து சாத்திட்டு கிளியை கையில் வச்சிப்பாத்தேன்! நெசமா அளகு கொஞ்சினது!கூண்டுவாங்கி அதுல வச்சி பத்திரப்படுத்தினேன். இங்கீலீசுல வெல்கம் வெல்கம்னு சொல்லிச்சி..வெல்கம்மு்ன்னா தமிளுல நல்வரவாமே, கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன். கிளிக்கு அசைவம் ஆகாதேன்னு மறுநா வியாபாரத்தை நிப்பாட்டினேன்.கிளி எப்பவும் வெல்கம்வெல்கம்னு சொல்லிக்கிட்டே இருந்திச்சி...அப்படீன்னா இது தெருல யாரோட வளர்ப்புப்பிராணியா இருக்கணும்னு முடிவுகட்டினேன். உடனே கிளியை கவனமா எடுத்திட்டு தெருல எல்லாரையும் கேட்டேன்,’யாரு இந்தக்கிளியை என் வீட்டுக்கு அனுப்பினது?’ன்னு உரக்கவே கேட்டேன். ஒருத்தரும் வாய் தொறக்கல ..என்னுதுன்னு யாரும் சொந்தம் கொண்டாடல..நீயும் உன் புருஷனுக்கு கால் ஆபரேஷன்னு வெளியூரு போயிட்டதா கேள்விப்பட்டேன்.மேலும் உன்னுதா இருந்தா நீ விட்டுக்கொடுப்பியா ஒரு வாயில்லா பிராணியை வளர்த்த ஜீவனை விட்டுப்போற கொடூரக்கார மனசு தயிர்சோறு துன்னுற உனக்கு வருமா? வராது...நானும் என்கிட்ட அடைக்கலம்னு வந்த அந்த கிளிக்காக அது சைவப்பறவைங்கிறதால கவிச்சிகூட வீட்டுல செய்யாம இருந்தேன்.. ஆடுவெட்டாமகோழித்தலையை சீவாம வீட்ல ரத்தவாடையே இல்லாம வச்சிக்க ஆரம்பிச்சேன்.வியாபாரம் இல்லாம வீட்ல வறுமை சூழ்ந்திச்சி..ஆனாலும் என்னிக்காவது கிளிக்கு சொந்தக்காரங்க வருவாங்க அவங்க கையில் ஒப்படைச்சிச்சிடலாம்னு காத்திருந்தேன். அது என்ன சாப்பிடும்னு கேட்டு அதைத்தான் தந்தேன்..’அஞ்சலைனு என்பேரை சொல்லு’ன்னேன் அளகா அஞ்சல அஞ்சலன்னு என் பேரையும் கூப்பிட ஆரம்பிச்சிது.என்னவோ அதுபேர்ல பளகின பத்துநாள்ள பாசம் பொத்துக்கிச்சி.
வீட்ல சைவ வாடை அடிக்குதுன்னு மகன் சத்தம்போட்டான். ‘இல்லடா கிளிக்கு சொந்தக்காரங்க வருவாங்க அதுவரை சைவமா இருப்போமுடா..’ன்னு அவனை சமாதானப்படுத்தினேன் ஆனா படுபாவி போனவாரம் ஒருநா கடுவன் பூனைய வூட்ல சேர்த்து கிளியைக்கொல்ல வச்சிட்டான். பூனை கிளியைக்குதறிடிச்சி..துடிச்சிட்டேன் வசந்தா.என் இதயமே உடைஞ்சிபோயிடிச்சி.பாவிமகனை வூட்டைவிட்டே துரத்திட்டேன்.எனக்கு சோகம் தாங்கல..
அதான் கோயில் வாசல்ல வந்து செஞ்ச பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடிக்குறேன் வயித்தைக்களுவிக்க பூ வியாபாரம் செய்றேன்.. என் ஒடம்பு உருக்குலைஞ்சிபோனதைதான் கண்ணால பாக்கமுடியும் கிளியைப்பறிகொடுத்ததுல மனசு சிதைஞ்சி போயிருக்கிறதை சொன்னாதான் தெரியும். இப்போ நான் நடப்பொணமா ஆகிட்டேன்மா..நடப்பொணமா ஆகிட்டேன்..கிளியை வளர்த்தவங்க மட்டும் உடனே தேடிவந்து அந்தக்கிளியை வாங்கிப்போயிருந்தா அந்த வாயில்லா ஜீவனுக்கு இப்படி ஒரு நிலமை வந்திருக்குமா வசந்தா? ”
ஆற்றாமையுடன் அஞ்சலை கூறிமுடித்தபோது வசந்தாவிற்கு ஏற்பட்ட உணர்ச்சியை எழுத்தில் வடிக்க இயலுமா என்ன?
Tweet | ||||
வித்தியாசமான களம். அருமையான கதை ஷைலஜா. வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteகல்லுக்குள் ஈரம் உண்டு. ஒரு கிளியால் பூனையின் குணம் மாறியதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் அக்கா! சூப்பர்ப்!
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎழுத்து பிழைகளை கொஞ்சம் திருத்திகொள்ளுங்கள்.
உதாரணம்: ”என்னா வய்சு குளந்தைக்கு?”
அருமையான கதை
ReplyDeleteமிக அழகாகச் சொல்லிப் போகீறிர்கள்
கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்பதை
மிக அழகாக்ச் சொல்லிப் படிப்பவர்கள் நெஞ்சிலும்
ஈரக்கசிவை ஏற்படுத்திப்போகும் அழகான பதிவு
வெல்ல வாழ்த்துக்கள்
த.ம 1
//சண்முகம் said...
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்.
எழுத்து பிழைகளை கொஞ்சம் திருத்திகொள்ளுங்கள்.
உதாரணம்: ”என்னா வய்சு குளந்தைக்கு?”
7:16 AM
..
<<,வாங்க சண்முகம். என்னா வய்சு குளந்தைக்கு என்று வேண்டுமென்றேதான் எழுதினேன் அஞ்சலைமொழி அப்படிப்பட்டது எனக்காட்ட.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மிக
//ராமலக்ஷ்மி said...
ReplyDeleteவித்தியாசமான களம். அருமையான கதை ஷைலஜா. வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
7:05 AM
//
நன்றி ராமல்ஷ்மி...வழக்கம்போல களத்துலகுதிச்சாச்சு:) வெற்றிக்கு வாழ்த்திட்டமைக்கு நன்றி.
கணேஷ் said...
ReplyDeleteகல்லுக்குள் ஈரம் உண்டு. ஒரு கிளியால் பூனையின் குணம் மாறியதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் அக்கா! சூப்பர்ப்!
7:11 AM
>>>>ஆமாம் கணேஷ்...கிளியின் வரவில் அஞ்சலை மனமாற்றம் கதைக்கு சற்று திருப்புமுனையாகப்பட்டது ஆகவே அப்படி கொண்டுபோனேன் நன்றி பாராட்டுக்கு.
//Ramani said...
ReplyDeleteஅருமையான கதை
மிக அழகாகச் சொல்லிப் போகீறிர்கள்
கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்பதை
மிக அழகாக்ச் சொல்லிப் படிப்பவர்கள் நெஞ்சிலும்
ஈரக்கசிவை ஏற்படுத்திப்போகும் அழகான பதிவு
வெல்ல வாழ்த்துக்கள்
த.ம 1
/// மிக்க நன்றி திரு ரமணி ...அழகான புரிதல் தங்களுக்கு நன்றி அதற்கு
இயல்பான கதைக் களம்,
ReplyDeleteகதை சொல்லும் விதம் நீர்மமாய் பாய்கிறது.
அஞ்சலையின் குணச்சித்திரம்
வெகு இயல்பாய் இருக்கிறது.
////படிக்கிற குழந்தைங்க எங்கயும் நல்லா படிச்சி முன்னுக்கு வருவாங்க...நீ வேணா பார்த்திட்டே ,திவ்யா அமோகமா வருவா..இப்போவே ஏபிசிடி எல்லாம் சொல்றா யாராவது வீடுவந்தா வெல்கம் சொல்லுன்ன்னு எனக்குத்தெரிஞ்ச இங்கிலீஷ்ல அவளுக்கும் சொல்லிக்கொடுத்தேன் அதை அவ கிளிக்கும் சொல்லித்தரா!”சுந்தரம் பெருமைப்பட்டுக்கொண்டான்.////
சுந்தரத்தின் பேச்சு அப்படியே ஒரு சராசரி தந்தையின் பேச்சு. குழந்தைகள் வளர்ந்து எதிர்வினைகள் கொடுக்கும் வரை ஒவ்வொரு தந்தையின் மனதில் உள்ள என்னத்தை கண்ணாடி போல பிரதிபலிக்கிறது.
கதை நன்று சகோதரி.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
// மகேந்திரன் said...
ReplyDeleteஇயல்பான கதைக் களம்,
கதை சொல்லும் விதம் நீர்மமாய் பாய்கிறது.
அஞ்சலையின் குணச்சித்திரம்
வெகு இயல்பாய் இருக்கிறது.
சுந்தரத்தின் பேச்சு அப்படியே ஒரு சராசரி தந்தையின் பேச்சு. குழந்தைகள் வளர்ந்து எதிர்வினைகள் கொடுக்கும் வரை ஒவ்வொரு தந்தையின் மனதில் உள்ள என்னத்தை கண்ணாடி போல பிரதிபலிக்கிறது.
கதை நன்று சகோதரி.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
7:33 AM
welcomeமகேந்திரன்! இப்படி மனம்திறந்து பாராட்டவும் நல்ல மனம் வேண்டும் .பொறுமையாய் வாசித்து கருத்துகூறியதற்கு நன்றி எனமட்டும் கூறிப்போகிறேன் இப்போது.
கல்லையும் கரைத்து..
ReplyDeleteஇரும்பையும் உருக்கி..
கடும் பாறைக்கு நெகிழாத
இரும்புக் கோடாரி -
இளம் கதலித்தண்டுக்கு நாணுமாப் போலே அருமையான கனிவான கதை.
பரிசுபெற் வாழ்த்துக்கள்..
பாராட்டுக்கள்..
//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteகல்லையும் கரைத்து..
இரும்பையும் உருக்கி..
கடும் பாறைக்கு நெகிழாத
இரும்புக் கோடாரி -
இளம் கதலித்தண்டுக்கு நாணுமாப் போலே அருமையான கனிவான கதை.
பரிசுபெற் வாழ்த்துக்கள்..
பாராட்டுக்கள்..
8:22 AM
/////
Thankyou so much Rajeswari!
நாம் சக போட்டியாளன் என்பதால் கருத்து கூற முடியவில்லை... வாழ்த்துக்கள்
ReplyDelete//suryajeeva said...
ReplyDeleteநாம் சக போட்டியாளன் என்பதால் கருத்து கூற முடியவில்லை... வாழ்த்துக்கள்
8:58 AM
//
பரவாயில்லை திரு சூர்ய ஜீவா.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..தங்கள் படைப்பினையும் வாசிக்கிறேன் வலைப்பூவில் உள்ளதுதானே?
Touching story.
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துகள்!
ReplyDeleteமுதல் 4 பத்திகளில் ஒரு சொர்ணாக்கா தோற்றத்தை விவரித்திவிட்டீர்கள், மேலே உட்செல்ல நமக்கே யோசனையாக இருந்திச்சி,
கசாப்பு கடை வச்சிருப்பவரிடமும் ஈரம் உண்டு மனதிலே என்பதை நல்லா சொல்லியிருக்கீங்க ...
அருமையான கதை. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகதையின் ஆரம்ப நடை, பெரிய எழுத்தாளர் ஒருவரின் கதையை படிக்கும் சுவாரஸ்யம் தந்தது. அற்புதம். கதையின் முடிவும் மனசை "என்னவோ செய்யும் விதம்" தான்.
ReplyDelete"பலாப்பழப் பெண்கள்" வரிசையில் நம் அஞ்சலை
வெற்றி பெற பிரார்த்தனைகள்.
//cho visiri said...
ReplyDeleteTouching story.
9:48 AM
//
நன்றிங்க சோ விசிறி.
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துகள்!
முதல் 4 பத்திகளில் ஒரு சொர்ணாக்கா தோற்றத்தை விவரித்திவிட்டீர்கள், மேலே உட்செல்ல நமக்கே யோசனையாக இருந்திச்சி,
கசாப்பு கடை வச்சிருப்பவரிடமும் ஈரம் உண்டு மனதிலே என்பதை நல்லா சொல்லியிருக்கீங்க ...
10:13 AM
/////வாங்க ஜமால் ஆமா இபடி பல சொர்ணாக்கள் வாழ்க்கை வாசலில் நிக்கறாங்க..ஆனா அவங்க மனசுலயும் ஈரம் இருக்கும் அதை சொல்லும் கதையாக கொண்டுபோனேன் பாராட்டுக்கு நன்றி..மெதுவாபோனா போரடிக்குமோன்னு கொஞ்ச்ம வேகம் ஏற்படுத்தினேன் ஜமால்.
////
ReplyDeleteநன்றி சே.குமார்
Shakthiprabha said...
ReplyDeleteகதையின் ஆரம்ப நடை, பெரிய எழுத்தாளர் ஒருவரின் கதையை படிக்கும் சுவாரஸ்யம் தந்தது. அற்புதம். கதையின் முடிவும் மனசை "என்னவோ செய்யும் விதம்" தான்.
"பலாப்பழப் பெண்கள்" வரிசையில் நம் அஞ்சலை
வெற்றி பெற பிரார்த்தனைகள்.
4:27 PM
>>>>.
பலாப்பழபெண்கள்! நல்ல உவமை ஷக்தி.நன்றி//ஆமா நீ எழுதலையா கதை?
எப்போ ஒருத்தருக்குள் மாற்றம் வரும், எதனால் வரும் என்றே தெரியாது...ஆனால் திடீரென மாற்றம் வந்திடும்....அருமையான கதை....வெல்ல வாழ்த்துக்கள் ஷைல்ஸக்கா...
ReplyDeleteஅற்புதமான அருமையான கதை ஷைலஜா மேடம். வெற்றி பெற வாழ்த்துகள்.
ReplyDelete//மதுரையம்பதி said...
ReplyDeleteஎப்போ ஒருத்தருக்குள் மாற்றம் வரும், எதனால் வரும் என்றே தெரியாது...ஆனால் திடீரென மாற்றம் வந்திடும்....அருமையான கதை....வெல்ல வாழ்த்துக்கள் ஷைல்ஸக்கா...
6:16 AM
அமைதிச்சாரல் said...
அற்புதமான அருமையான கதை ஷைலஜா மேடம். வெற்றி பெற வாழ்த்துகள்.
12:26 PM
/////
மௌலிக்கும் அமைதிச்சாரலுக்கும் அன்புகலந்த நன்றி
கிளியை வைத்து பெரிய புரட்சியே நிகழ்த்தி விட்டீர்கள்.
ReplyDelete//
ReplyDeleteரிஷபன் said...
கிளியை வைத்து பெரிய புரட்சியே நிகழ்த்தி விட்டீர்கள்.
6:35
////
<<<<<>.நன்றி ரி.
கதை நன்றாக இருக்கிறது. சிலர் எதை செய்தாலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள். வீழ்தலும் வாழ்தலும் இவர்களுக்கு பெரும்பாலும் நடக்கும். அஞ்சலை அப்படித்தான் போலிருக்கிறது.
ReplyDeleteகிளியே எழுதின கிளி கதை நன்னா இருக்கு! :))
ReplyDelete//சாகம்பரி said...
ReplyDeleteகதை நன்றாக இருக்கிறது. சிலர் எதை செய்தாலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள். வீழ்தலும் வாழ்தலும் இவர்களுக்கு பெரும்பாலும் நடக்கும். அஞ்சலை அப்படித்தான் போலிருக்கிறது.
9:54 AM
////<<<<>>thankyou சாகம்பரி
//தக்குடு said...
ReplyDeleteகிளியே எழுதின கிளி கதை நன்னா இருக்கு! :))
11:59 AM
////naughty boy!!! thanks little brother thakkudu!!!
அருமையானக் கதை...
ReplyDelete"உருவு கண்டு எள்ளாமை" என்பதுவும் இது தானோ!
சிலரின் சூழல் அவர்களின் வாழ்வின் நடைமுறைக்கு
பாதை அமைக்கிறது....
கொடுஞ்சூரியாக தோன்றிய அஞ்சலை
என்னும் பாறைக்குள்ளும் ஈரம் உண்டல்லவா!...
அவளும் ஒருப் பெண்ணல்லவா!...
இல்லை அவள் தான் முழுமை பெற்றப் பெண்.
வசந்தாவின் பயம் அவளின் குடும்பம் சார்ந்த சூழலைக் காண்பித்தாலும்...
அதற்காக ஒரு கணமும் வருந்தாத வசந்தாவை விட அஞ்சலை ஆயிரம் மடங்கு மென்மையானவளாகவே தோன்றுகிறாள்.
கதையும் கருத்தும் நன்று...
//தமிழ் விரும்பி said...
ReplyDeleteஅருமையானக் கதை...
"உருவு கண்டு எள்ளாமை" என்பதுவும் இது தானோ!
சிலரின் சூழல் அவர்களின் வாழ்வின் நடைமுறைக்கு
பாதை அமைக்கிறது....
கொடுஞ்சூரியாக தோன்றிய அஞ்சலை
என்னும் பாறைக்குள்ளும் ஈரம் உண்டல்லவா!...
அவளும் ஒருப் பெண்ணல்லவா!...
இல்லை அவள் தான் முழுமை பெற்றப் பெண்.
வசந்தாவின் பயம் அவளின் குடும்பம் சார்ந்த சூழலைக் காண்பித்தாலும்...
அதற்காக ஒரு கணமும் வருந்தாத வசந்தாவை விட அஞ்சலை ஆயிரம் மடங்கு மென்மையானவளாகவே தோன்றுகிறாள்.
கதையும் கருத்தும்
நன்று..////
தமிழ்விரும்பியின் உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
அருமையான கதை ஷைலஜா. வெற்றிக்கு வாழ்த்துகள்!
ReplyDelete//Kanchana Radhakrishnan said...
ReplyDeleteஅருமையான கதை ஷைலஜா. வெற்றிக்கு வாழ்த்துகள்
...
நன்றி காஞ்சனா ராதாக்ருஷ்ணன்
நல்லா எழுதியிருக்கிங்க!
ReplyDeleteமுடிவு கொஞ்சம் யதார்தத்திற்கு அப்பாற்பட்டே இருக்கிறது!
அஞ்சலையின் மாற்றத்தில் நல்ல கருத்தை சொல்லியிருக்கீங்க