Social Icons

Pages

Tuesday, October 11, 2011

நினைவலைகள்.

எனது பள்ளிநாட்களில் காதல் என்கிற வார்த்தையை ஒரு தீவிரவாதம் போல நினைக்கவைத்திருந்தார்கள். அதையும் மீறி காவிரிப்படுகையிலும் கடைவாசலிலும் சிலரின் காதல் நாடகங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருந்தன. ஆனால் எங்களைப்போன்ற நடுத்தரக்குடும்பத்துப்பெண்களுக்கு ஒன்று காதலிக்க நேரமிருக்காது அல்லது காதலித்துவிட்டால் அதைச்சொல்ல தைரியம் இருக்காது.

நான் முதல் ரகம். ஆனால் என் சிநேகிதி ராஜி திருவரங்கம் தெற்குவாசலில்நாட்டுமருந்துக்கடை வைத்திருந்த ஓர் இளைஞனை விரும்பிவிட்டாள். இளைஞனின் அப்பாதான் பெரும்பாலும் கடையில் இருப்பார் அவர் மதியம் சாப்பிடவீடுபோகும்போது இளைஞன்வருவான் அவன்பெயர் மதன் என்று வைத்துக்கொள்வோம்(உண்மைப்பெயரை எழுத இயலாது) மதன் வரும் நேரமாய் ராஜி கடைக்குபோய் கூந்தல்வளர்தைலம் தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கிவருவாள். ராஜிக்கு ஆறடிகூந்தல். மாநிறம் என்றாலும் துறுதுறுவென்றிருப்பாள். கட்டுப்பாடான் குடும்பம். அப்பா இல்லை என்பதால் அவள் அம்மாவும் அண்ணனும் அவளை மிகவும் போர்த்திபோர்த்திவளர்த்தனர்.ராஜியின் அண்ணனுடன் பள்ளியில் ஒன்றாகப்படித்தவந்தான் மதன். பள்ளிப்படிப்பிற்குப்பிறகு அவன் டிபளமோ படிக்க ஆரம்பிக்க ராஜியின் அண்ணன் சென்னைகல்லூரிக்கு மேற்படிப்பு படிக்கப்போனான்.

அண்ணனைப்பார்க்க மதன் வீடுவரும்போது அவனிடம் மனதைப்பறிகொடுத்திருக்கிறாள் ராஜி. ஆனால் அதை மதனிடம் அவள் சொல்லவில்லை.ஜாதி மதத்தடைகள்! வீட்டில் சொல்லவே முடியாது. ராஜியின் அண்ணன் சென்னை போனதும் மாதம் ஒருமுறை வீடுவருவான் அப்போது மதனும் அவனைப்பார்க்க வருவான்.

மதன் தன்னைக்காதலிக்கிறானா என்று ராஜிக்குத்தெரியவில்லை ஆனால் அவனது பார்வை ஏதோ சொல்வதுபோல அவளுக்குத்தோன்றிவிட்டது. மனசுக்குள் மதனை மாதக்கணக்கில் அவள் காதலித்து கல்யாணம் செய்து குடும்பம் நடத்த திடீரென ராஜிக்கு அந்தப்பதினேழு வயதில் ( கல்லூரிக்கெல்லாம் அனுப்பவில்லை )திருமணம் நிச்சயம் செய்துவிட்டனர்.அப்போதாவது அவள் பெற்றோரிடம் சொல்லி இருக்கலாம். -- ஏன் என்னிடமே சொல்லவில்லை ராஜி.

கல்யாணமாகி ராஜி சென்னை சென்றுவிட்டாள்..முதலில் சில நாட்கள் கடிதத்தொடர்பு இருந்தது அப்புறம் அதுவும் நின்றுவிட்டது எனக்குக்கல்யாணமாகி நானும் பெங்களூர் வந்துவிட்டேன் கல்யாணத்திற்கு அவளை அழைக்கவில்லை முகவரியை எங்கோ தவறவிட்டுவிட்டேன். அவள்பிறந்தவீட்டில் எல்லோரும் அவள் அண்ணனுக்குதுபாயில் வேலை கிடைத்துவிட ஊரைவிட்டே போய்விட்டார்கள்.

இருபதுவருஷத்திற்குப்பிறகு ஒருநாள் சென்னைக்கு உறவினர்வீட்டுத்திருமணத்திற்கு சென்றபோது கல்யாணமண்டபத்தில் சற்று குட்டையாய் இருந்தாலும் களையான முகத்துடன் இருந்த அந்தப்பெண்ணின் முகத்தை எனக்கு எங்கோ பார்த்த நினைவு சட்டென் அவள் திரும்பி நிற்கவும் அந்த நீளமான பெரிய பின்னல் எனக்கு அவளை ராஜிதான் என்று உறுதி செய்ய நெருங்கினேன்.

இருவருக்கும் திகைப்பும் மகிழ்ச்சியும் பெருகின.

பிரியும்போது ஞாபகமாய் அவளது விலாசம் போன்நம்பரை வாங்கிகொண்டேன் அவள் என்னிடம் ரகசியமாய் கேட்டாள்.” நீ ஸ்ரீரங்கம் போகிறாயா இப்பவும்? எனக்குத்தான் அங்க யாருமே இல்லை கணவர் கூட்டிட்டுப்போகமாட்டேங்கிறார். கல்யாணமாகி சென்னைபோன ஒரேவருஷத்தில்கணவருக்கு வேலை மாற்றலாகி டில்லிபோனவள்தான் இந்தமாதிரி ஏதாவது கல்யாணம்னாதான் சென்னைப்பக்கம் வரேன்.என் மனசெல்லாம் ஊரிலேயே இருக்கு... “ என்றவள் கண்கலங்கினாள்.

“ஏய் என்னாச்சு?”

“ உன்கிட்ட சொல்றேன் இப்பவாவது.” என்று ஆரம்பித்தவள் நான் இங்கு ஆரம்பத்தில் எழுதியவைகளை விவரித்தாள்

, பிறகு”.நா நான் ..மதனை விரும்பினேன் ரொம்ப நேசிச்சேன்.அதை அவன்கிட்ட சொல்லமுடியல அவனும் என்னை நேசிச்சானா தெரியல...நேசிக்கறதைவிட நேசிக்கப்படற சுகம் அலாதி இல்லையா? காலம் தாழ்ந்தாலும் அந்த உணர்வு அவன்கிட்டயும் இருக்குன்னு தெரிஞ்சாபோதும். அடுத்த ஜன்மத்தில் நாங்க கண்டிப்பா இணைவோம். என் அன்பினை நீ அவனிடம் எனக்காக சொல்றியா ப்ளீஸ்? நீ மதனைப்பார்ப்பியா?” என்றாள் கெஞ்சுதலான குரலில்

“வருஷாவருஷம் ஊர் போனா அவன் கடைலதான் என் பெண்களுக்கு கூந்தல்வளர் தைலத்திற்குத்தேவையான நாட்டுமருந்துசாமான்களை வாங்கறேன் அவன் அப்போல்லாம் உன்னை கேட்பான் ராஜி எப்டி இருக்காங்கன்னு நாந்தான் ‘தொடர்பே விட்டுப்போச்சு’ என்பேன். மதன் ஊர்ல சமூக சேவைலாம் செய்றானாம். ”

“இந்த தடவை போனா சொல்றயா மதனை மனசுக்குள் ஆராதிச்சவ விஜாரிச்சான்னு?”

“கண்டிப்பா.அந்த நினைவு உனக்கு ஆறுதலாய் இருக்கும்னா தெரிஞ்சிட்டுவரேனே?’

விடைபெற்று ஊர்வந்தபிறகு மதனின் கடையின் பொருட்கள் வாங்கிய சீட்டினை எடுத்துப்பார்த்தேன் அதில் அவன் அலைபேசி எண் இருந்தது. அட பழம் நழுவிப்பாலில் இவ்வளவு சீக்கிரமாக விழுந்துவிட்டதே! சட்டென அவனை அழைத்தேன்

“மதன்.”அழைத்து அவனிடம்,”ராஜியைப்பார்த்தேன்” என்றேன்.

உடனே ஆர்வமாய்.”எங்கே எங்கேபார்த்தீங்க என் தேவதையைப்பார்த்திட்டீங்களா?” என்றவன் உடனே”ஸாரி .ராஜிக்குக்கல்யாணம் ஆகிடிச்சி.அவள் நினைவில் நான் வாழ்கிறேன் என்பதை என்னையும் அறியாம உளறிட்டேன் ஸாரி” என்றான்.

“பரவாயில்லை.சீக்கிரமே நான் ஊருக்கு வரேன் நேர்ல உங்ககிட்ட பேசணும் “ என்று சஸ்பென்சாக சொல்லி போனை வைத்துவிட்டேன்.

மதனும் ராஜியை நேசித்திருக்கிறான் இன்னமும் நேசிக்கிறான் மானசீக அன்பு இருவரையும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது.அதை ஒருவருக்கொருவர் தெரிந்துகொண்டு விட்டால் வருங்காலத்தில் அந்தப்பிடிப்போடு இன்னமும் உற்சாகமாய் வாழ முடியும் என்று தோன்றியது. சில நினைவுகள் மனதிற்கு பலம்!

அன்று பஸ் ஏறும்போதே மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி.
திருச்சியில் இறங்கி ஸ்ரீரங்கம் செல்லும் ஒன்றாம் எண் பஸ்ஸில் ஏறி காவிரிப்பாலம் கடக்கையில் ஆடி வெள்ளத்தில் காவிரி கைவீசி போய்க்கொண்டிருக்க பஸ்ஸில் எல்லோருமே சிரித்தமுகத்துடன் அமர்ந்திருந்தமாதிரிப்பட்டது.

‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ?’ பஸ்ஸில் எஃப் எம் கூடசூழ்நிலைக்கு ஏற்ற பாட்டினை ஒலிபரப்பியது.
ஆயிற்று பஸ் ஸ்ரீரங்கத்திற்குள் நுழைந்துவிட்டது. தேவிடாக்கீஸ் வழியாக ரங்கநகர் மெயின் பஸ் நிறுத்தம் செல்ல திரும்பியபோது சட்டென என் பார்வை பக்கவாட்டுச் சுவரிலிருந்த போஸ்டரில் பதிந்தது.


‘எங்கள் அருமைச்சகோதரன் சமூக சேவகர் ஸ்ரீரங்கம் ஆர்.மதன் அவர்கள் நேற்று இரவு மாரடைப்பில் காலமானார் அவருக்கு கண்ணீர் அஞ்சலி தெரிவிக்கிறோம்.’என்று மதனின் போட்டோவைப்போட்டு கீழே இரு கண்களைவரைந்து அதிலிருந்து கண்ணீர் வழிகிறமாதிரி வெளியிட்டிருந்தது.

’ஐயோ’

தூக்கிவாரிப்போட எழுந்துவிட்டேன்.

பஸ் நின்றதும் கீழே இறங்கினேன் ஸ்ரீரங்கம் பிரதான சாலை எங்கும் அந்த நோட்டீஸ்தான் .கண்ணில் பட்டது.

நடைப்பிணமாய் ஊர் திரும்பினேன்...! இன்னும் நான் இந்தவிஷயத்தை ராஜிக்குத்தெரிவிக்கவே இல்லை.

17 comments:

  1. நானும் ஒருத்தவங்கள தேடுறேன், பட் எந்த தகவலும் இல்லை

    என்ன செய்ய ...

    ReplyDelete
  2. Anonymous11:45 AM

    FENTASTIC

    WHAT A TOUCHING STORY. I FELT VERY SAD.

    VAZTHUKKAL

    KARUNAJI

    ReplyDelete
  3. jamal!
    ரொம்பத்தான் குறும்பு போங்க:)

    ReplyDelete
  4. கருனாஜி
    நன்றிங்க பின்னூட்டத்துக்கு.

    ReplyDelete
  5. ////உடனே ஆர்வமாய்.”எங்கே எங்கேபார்த்தீங்க என் தேவதையைப்பார்த்திட்டீங்களா?” என்றவன் உடனே”ஸாரி .ராஜிக்குக்கல்யாணம் ஆகிடிச்சி.அவள் நினைவில் நான் வாழ்கிறேன் என்பதை என்னையும் அறியாம உளறிட்டேன் ஸாரி” என்றான்.////

    "அன்புகொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு" உண்மையான அன்பின் சக்தி என்பது இது தானோ!
    ஒரு கணம் என்னுள் ஒரு உணர்வு, அது ஆனந்தமா, சோகமா என்று தெரியவில்லை இரண்டும் கலந்த ஒரு உணர்வு தனால் தான் இதயத்தில் குருதி பெருகியது போன்றும்; கண்கள் கலங்கியதுமான உணர்வைப் பெற்றேன்..

    ////மதனும் ராஜியை நேசித்திருக்கிறான் இன்னமும் நேசிக்கிறான் மானசீக அன்பு இருவரையும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது.அதை ஒருவருக்கொருவர் தெரிந்துகொண்டு விட்டால் வருங்காலத்தில் அந்தப்பிடிப்போடு இன்னமும் உற்சாகமாய் வாழ முடியும் என்று தோன்றியது. சில நினைவுகள் மனதிற்கு பலம்!/////

    மிகவும் அற்புதமான விஷயம்...

    /////‘எங்கள் அருமைச்சகோதரன் சமூக சேவகர் ஸ்ரீரங்கம் ஆர்.மதன் அவர்கள் நேற்று இரவு மாரடைப்பில் காலமானார் அவருக்கு கண்ணீர் அஞ்சலி தெரிவிக்கிறோம்.’என்று மதனின் போட்டோவைப்போட்டு கீழே இரு கண்களைவரைந்து அதிலிருந்து கண்ணீர் வழிகிறமாதிரி வெளியிட்டிருந்தது./////

    இதை உண்மையிலே நான் எதிர் பார்க்கவில்லை அதே நேரம் அப்போது உங்களின் மனநிலையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை...

    ///இன்னும் நான் இந்தவிஷயத்தை ராஜிக்குத்தெரிவிக்கவே இல்லை.////

    சொல்லனுமா? வேண்டாமா? எப்படி, எதை சொல்வீர்கள்?

    அன்பானவர்கள் அன்பால் சேர்ந்தால் அரையாண்டானாலும், ஆயிரமாண்டுகள் வாழ்ந்ததாகுமே! மனித உரிமைகள் புதைக்கப்படுவது தான் கொடுமை.

    நன்றிகள் சகோதிரி.

    ReplyDelete
  6. சில நினைவுகள் மனதிற்கு பலம்!

    அருமையான பகிர்வு.

    ReplyDelete
  7. தமிழ் விரும்பி said...
    ////
    "அன்புகொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு" உண்மையான அன்பின் சக்தி என்பது இது தானோ!
    ஒரு கணம் என்னுள் ஒரு உணர்வு, அது ஆனந்தமா, சோகமா என்று தெரியவில்லை இரண்டும் கலந்த ஒரு உணர்வு தனால் தான் இதயத்தில் குருதி பெருகியது போன்றும்;..அன்பானவர்கள் அன்பால் சேர்ந்தால் அரையாண்டானாலும், ஆயிரமாண்டுகள் வாழ்ந்ததாகுமே! மனித உரிமைகள் புதைக்கப்படுவது தான் கொடுமை.

    நன்றிகள் சகோதிரி//

    மிக்க நன்றி தமி்ழ்விரும்பி...அழகான பின்னூட்டம் வாசிப்பின் தாக்கம் ஒவ்வொரு வரியிலும் பிரதிபலிக்கிறது மிக்க நன்றி கருத்துக்கு

    ReplyDelete
  8. // இராஜராஜேஸ்வரி said...
    சில நினைவுகள் மனதிற்கு பலம்!

    அருமையான பகிர்வு.

    10:09 AM

    //

    நன்றி இராஜேஸ்வரி....

    ReplyDelete
  9. ஒரு கதை என்றே நினைக்க முடியவில்லை. உயிரோட்டமான கதை..

    ReplyDelete
  10. //ரிஷபன் said...
    ஒரு கதை என்றே நினைக்க முடியவில்லை. உயிரோட்டமான
    ///

    இது நிஜம் ரிஷபன்..என்ன செய்வது நட்பைப்பாதுகாக்க கதையாக்கிவிட்டேன் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. சொல்லிச் செல்லும் விதம் பிரமாதம்
    ஆனாலும் அவருடைய கணவனின் நிலை
    இவருடைய மனைவியின் நிலையில் இருந்து யோசிக்க
    பயமாகத்தான் இருந்தது
    அருமையான பதிவு

    ReplyDelete
  12. Ramani said...
    சொல்லிச் செல்லும் விதம் பிரமாதம்
    ஆனாலும் அவருடைய கணவனின் நிலை
    இவருடைய மனைவியின் நிலையில் இருந்து யோசிக்க
    பயமாகத்தான் இருந்தது//

    வாங்க ரமணி. வருகைக்கு நன்றி
    தோழியின் கணவரின் நிலையில் இருந்து யோசிக்க பயம் ஒன்றும் இல்லை நண்பரே ஏனெனில் அவள் அவருக்கு துரோகம் செய்ய நினைக்கவில்லை நேசித்த நினைவுகளைப்பகிர்ந்தாள் அவ்வளவுதான்..நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எத்தனை காலமானாலும் அல்லவா?

    ReplyDelete
  13. நானும் இதை கதை என்றே நினைத்தேன்! நிஜம் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது! சில நெருடல்கள் இருந்தாலும் மனதை தொடும் பகிர்வு! (பெயரையாவது மாற்றியிருப்பீர்கள் என நம்புகிறேன்!)

    ReplyDelete
  14. நம்பிக்கைபாண்டியன் said...
    நானும் இதை கதை என்றே நினைத்தேன்! நிஜம் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது! சில நெருடல்கள் இருந்தாலும் மனதை தொடும் பகிர்வு! (பெயரையாவது மாற்றியிருப்பீர்கள் என நம்புகிறேன்!)

    11:55 PM

    //////

    வருகைக்கு நன்றி நம்பிக்கைபாண்டியன்,
    ஆம் பெயர்களை மாற்றி இருக்கிறேன்.

    ReplyDelete
  15. தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்
    நேரமிருக்கும்போது பார்க்கவும்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_20.html

    ReplyDelete
  16. raji said...
    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்
    நேரமிருக்கும்போது பார்க்கவும்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_20.html

    11:49 AM

    >>>>>>>நன்றி ராஜி
    இதோ பார்த்துவருகிறேன்

    ReplyDelete
  17. என்னதான் அவரோட பேர மாத்தி எழுதினாலும், ராஜினு உண்மை(!) பெயரில் எழுதியதை தவிர்த்திருக்கலாமே..

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.