Social Icons

Pages

Monday, January 16, 2012

அன்புச்சகோதரர்களுக்கு.....

 ஒரே சொல்தான் இந்த மாதத்திற்கு ஆனால்  ஆயிரம் காலப்பயிருக்கு வித்திடுவது இந்த மாதம்தான்.  அதனால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார்கள்! தை பிறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம் என்கிற  பழையபாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

திங்களையும், மழையையும், ஞாயிற்றையும் போற்றி வாழ்த்திச் சிலப்பதிகாரக் காப்பியம் தொடங்குகிறது.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்


காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு

மேரு வலந்திரித லான்.


என்கிறார் இளங்கோ அடிகள்.

முதலில் இயற்கையைப்போற்றுவோம் இயற்கைதான் தெய்வம்! ஆதவ வழிபாடு பொதுவானது!நீர் இன்றி அமையாது உலகு. அந்த நீரையும் கிரகித்து மழையாக்கித்தருவது சூரியன் தான். மண்ணின் ஈர வளத்தை சூரியன் இயற்கை உரமாக்கித் தருகிறது சூரிய ஒளி உடலுக்கு வைட்டமின் சக்தியைக்கொடுக்கிறது. பற்பல விதங்களில் சூரியன் மனிதர்களுக்கு தாவரங்களுக்கு செய்யும் உதவிகள் அனைவரும் அறிந்ததே. ரிக் யஜுர் சாம வேதங்களில் சூரியன் திகழ்கிறான் என்பார்கள்  சான்றோர்கள்.

 சிவனின் வலது கண்  சூரியன் என்றும் சிவபுராணம் கூறும்.
வேத காலத்திற்கு முன்னே சூரிய வழிபாடு இருந்ததாக ஞான நூல்கள் கூறுகின்றன.

உதயத்தில் செய்யும் சூரிய நமஸ்காரம் கண்களைப்பாதுகாக்கும். கண் கெட்டபின் செய்து பயனில்லை!
காயத்ரி மந்திரம் உபாசனைபெற்றவர்கள் காலை மதியம் மாலை என மூன்று வேளைகளிலும் கதிரவனுக்கு வந்தனம் செய்கிறார்கள். அவர்கள் முகத்திலேயே சூரிய தேஜஸ் அதனால் வந்துவிடுவதை நாம் தெரிந்துகொண்டுவிடலாம்.

 முருகனின் அழகைக்கூறும்போது அருணகிரியார்,கனகரத சதகோடி சூரியனும் எனவும்,  தினகரன் என வரு பெரு வாழ்வே என்றும் பாடி உள்ளார்.

கதிர் மதியம் போல் முகத்தான் என்பாள் ஆண்டாள். இறைவனின் கண்களில் ஒன்று சூரியன் இன்னொன்று சந்திரன். தீயவர்களை அழிக்க வலக்கண்னைத்திறப்பார் அருளாளர்களுக்கு அவரது இடதுவிழி இமைதிறந்தாலே இன்பமழை பொழியும்!

 இந்திரனுக்கு போகி என்று பெயர் உண்டு. போக தேவேந்திரன் என்பார்கள். மழையைப்பொழியவைக்கும் தெய்வம் இந்திரன் என்பதால் அதற்கு நன்றியாக புதுப்பயிரைப்பறித்து அவனுக்குப்படைப்பார்கள் முன் காலத்தில். கிருஷ்ணர் அவதாரம் எடுத்தபோது அந்தப்படையலை சூரியனுக்கு வைக்க கட்டளையிட அதனால் கோபம் கொண்ட இந்திரன் மாமழையாய் பொழிய வைத்தான்.

 அசுரமழைகண்டு அஞ்சினர் மக்கள். நிலைகுலைந்தனர் மாடுகன்றுகள்  தவித்தன. கதறின அபயம் என கிருஷ்ணரிடம் அண்டின.

மக்களையும் மாடுகன்றுகளையும் காப்பாற்றவேண்டி கருணாமூர்த்தி கோவர்த்தன மலையைக்குடையாகப்பிடித்தார்.  இந்திரன் தனது நிலைக்கு வெட்கம் அடைந்து கண்ணனிடம் மன்னிப்புகேட்டான். அந்த நிலையிலும் அவனை மன்னித்த பகவான் ‘போகியான உன்பெயரில் சூரியனை வழிபடும் பொங்கல் நாளுக்கு முதல் நாளை மக்கள் வழிபடட்டும்.உன் மனதிலிருந்த தீய எண்ணங்கள் அசுரசெயல்கள் அழிந்ததுபோல பழையன தீயாய்க்கழியட்டும் போகி என அந்த நாளை மக்கள் கொண்டாடட்டும் என்றார்.

காளிங்கன் என்ற கொடிய நாகத்தை அடக்க கண்ணபிரான் காளிங்க மடுவில் பாய்ந்தார். காளிங்கவிஷம் கண்ணனுக்கு ஏறாதபடி ஆயர்பாடி சிறுவர்கள் தீமூட்டினார்கள். பறைகொட்டியபடி இரவு முழுவதும் கண்ணனுக்காக விழித்திருந்தனர் இதனால்தான் போகியன்று பறைகொட்டும் பழக்கம் ஏற்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

இதை பெரியாழ்வார்

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்


நீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்

தோள்வலி வீரமே பாடிப் பற,

தூமணி வண்ணனைப் பாடிப் பற
 
என்கிறார்.
 
 
பொங்கலன்று பால்பொங்கியாச்சா என்றுகேட்கிறோம்  சுபதினங்களில் பால்காய்ச்சுதல் என்பதும் அது பொங்குவதும் முக்கியம்  புதுவீடு கட்டி குடியேறும்போது பால்காய்ச்சுவது இதற்குத்தான். பொங்குதல் என்பது மீறுதல்  நலமும் வளமும்  மீறிப்பொங்கினாற்போல பெருக வித்திடுவது தை மாதம்!

கரும்பு மங்களகரமானது. கரும்பைத்தாங்கி நிற்பவள் பராசக்தி! கரும்பு பிழியப் பிழிய இனிப்பைத்தான் தரும். எவ்வளவு கடித்தாலும் அது தன் வலிமறந்து நமக்குத்தருவது இனிப்பைத்தான்.அதுபோல நற்குடி பிறந்தவர்கள்  எப்போதும் இனிமையாகத்தான் பேசுவார்கள். நாலடியாரில்கூட ஒரு பாடல் வரும்(தற்போது மறந்துவிட்டது!! மன்னிக்க)

மஞ்சளும் மங்கலச்சின்னம்.கிருமிநாசினியும் கூட நோயின்றி மங்கலமாய் வாழ மஞ்சளை பொங்கலில் படைக்கிறோம்.

ராம ராவண யுத்ததின்போது ராமன் தளர்ச்சி அடைந்துவிட அப்போது அகஸ்திய மாமுனி உபதேசித்த மந்திரம் தான் ஆதிதய் ஹ்ருதய ஸ்தோத்திரம். இதைப்படிக்க ஆதித்யனின் பார்வைபட்டு நாம் எதிலும் வெற்றி அடைவோம்!
 


காணும் பொங்கல் எனப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டுவார்கள் இல்லையா அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.(இப்பவும் இன்னிக்கு ஒருநாள் கண்டிப்பா மஞ்சள் பூசிக்கறோம் உண்மை!!:):)கணுப்பிடி இந்தநாளின் சிறப்பு.அதென்ன கணுப்பிடி?ஆமாம் அது ஒருவகை நோன்பு.உடன்பிறந்த சகோதரர்களுக்காய் பெண்கள் செய்யும் நோன்பு.

உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.கார்த்திகை எண்ணையும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு என்பது பழமொழி.அதாவது கார்த்திகைமாதம் எண்ணைதேய்த்துக்குளித்து விளக்குவைப்பதும், பொங்கலில் பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காணும்பொங்கல்தினம் காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இந்தப்பழமொழியின் விளக்கம்.இரண்டுமஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்குமுகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும்.முதல்நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள்பொடிதூவி மஞ்சள்சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால்சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப்பொங்கல் கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என 5வகை அன்னங்களை தயாரிக்கவேண்டும்,ஒவ்வொன்றிலும் 5அல்லது 7பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும்போது,"காக்காப்பிடி வச்சேன் கணூப்பிடி வச்சேன் ... காக்கைக்கு எல்லாம் கல்யாணம்..கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்....கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய்வாழணும்" என்று சொல்லிக்கொண்டே வைக்கவேண்டும்.

தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும்.. வீட்டிலென்றால் வாசலில் கொட்டவேண்டும்.உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து கலந்த சாதம் பாயசம் செய்து விருந்து போடணும்.அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால் இது காணும் பொங்கல் ஆகி இருக்கலாம்!என் உடன் பிறந்த மூன்றுபேரோடு உடன்பிறக்காத அன்புசகோதர்கள் பலருக்கும் இன்று வேண்டிக்கொண்டுவிட்டேன், நலம் வாழ!

"எவ்வழி ஆடவர் நல்லவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே" என்று  இலக்கிய பாடல்வரிகள் உண்டு.
 ஒரு நாட்டில் மன்னவர்- அதாவது-ஆடவர் நல்லவராக இருந்தால் அந்த நாடு நலம் பெறும்.

அனைவரும் நல்வழி சென்று நன்மை அடைவோம்!


25 comments:

 1. கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
  இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
  வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
  கூறார்தம் வாயிற் சிதைந்து..

  நீங்க சொன்ன செய்யுள் இதுதானே :-)

  சகோதரர்களுக்காகக் கொண்டாடப்படும் கணுப்பொங்கல்தான் காணும் பொங்கல் ஆகியிருக்குமோ.. அருமையான சிந்தனையைத் தூண்டும் வரிகள், விவரங்களும் அருமை.

  ReplyDelete
 2. அமைதிச்சாரல் அருமையாசொன்னீர்கள் செய்யுள் இதுதான் நன்றி நன்றி!!

  ReplyDelete
 3. Anonymous9:55 AM

  ஆதவனின் பெருமைகளைப் பற்றிய தொகுப்பும்
  கணுப்பிடி விவரங்களும் அருமை..
  பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 4. அன்பு சகோதரன் திரட்டிகள்ல இணைச்சுட்டேன். படிச்சுட்டு வர்றேன்...

  ReplyDelete
 5. கணுப்பிடி பற்றியும் பொங்கல் பண்டிகையின் பின்னணில் உள்ள தாத்பரியங்களையும் அறியாதன பல இன்று அறிந்தேன். மகிழ்ந்தேன். கண்ணா... உன் லீலா வினோதம்! உடன் பிறந்த சகோதரர்களுடன் எங்களுக்காகவும் வேண்டிய உங்களின் அன்பு உள்ளத்திற்கு தலை வணங்கி நன்றி நவில்கிறேன்.

  ReplyDelete
 6. நிறைய விஷயங்களை புலமையுடனும் சுவையுடனும் தந்து உள்ளீர்கள். மிக்க நன்றி. .
  அன்பு சகோதரியே,உங்களுக்கு இந்த நன்னாளில் என் மனமார்ந்த வாழ்த்துகள்

  ReplyDelete
 7. ஆகா! அற்புதம் அருமை...

  முதலில் உங்களுக்கு எனது நன்றிகள் சகோதிரி...
  நல்ல பல தகவல்களுடன் போகியும் பொங்கலும் பிறந்த புராதனக் கதையையும் அதனால் கொண்ட வழக்கமும் அதனோடு உறவில் அமையும் அன்புப் பாலமும் அலாதியாக எப்போதும் இருக்கச் செய்யும் இந்தப் பொங்கல் பண்டிகையைப் பற்றிய உங்கள் எண்ணப் பதிவிற்கும், பகிர்விற்கும் மீண்டும் நன்றிகள் சகோதிரி...

  ReplyDelete
 8. தெரிந்த சில
  தெரியால பல
  விஷயங்கள்.. -- நன்றி பகிர்விற்கு.
  :-)

  ReplyDelete
 9. அன்புநிறை சகோதரி,
  எதையுமே ஆதாரப் பூர்வமாக எழுதும் உங்கள் திறன் என்னை
  பிரமிப்பில் ஆழ்த்துகிறது. கணுப் பொங்கல் காணும் பொங்கல் ஆனது விளக்கம் மிக அருமை சகோதரி.

  ReplyDelete
 10. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. வணக்கம்!
  //அனைவரும் நல்வழி சென்று நன்மை அடைவோம்!//
  உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்!

  ReplyDelete
 12. //ஷைலஜா said...//

  வணக்கம்!
  நீங்கள் உங்கள் குடை புராணத்தை பற்றி குறிப்பிட்டதால், தாங்கள் எழுதிய “குடை வள்ளல்கள்” ( நவம்பர்,09,2010) என்ற பதிவினை கூகிளில் தேடிச் சென்று படித்தேன். மடக்கிப் பிடிக்கும் குடையைக் கண்டு பிடித்த ஜோனாஸ் ஹான்வே முதற் கொண்டு ஏராளமான தகவல்களை வள்ளலாய் வழங்கியுள்ளீர்கள். இடையே இலக்கிய வரிகள். நீங்கள் அந்த கட்டுரையை எழுதிய காலத்தில் நான் தமிழ் மணம் வாசகராக மட்டுமே இருந்தேன்.

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
  16 January 2012 16:40

  (எனது பதிவில் தங்களுக்காக எழுதியது)

  ReplyDelete
 13. உண்மையில் நிறையத் தெரியாத விஷயங்கள்.அதோடு ஈழத்தில் இப்படி ஆழமாக எதையும் நான் காணவில்லை.போர்க்காலங்களுக்கு முன் இருந்திச்சோ என்னமோ.காணும் பொங்கல் அதிசயம் எனக்கு.அன்பான பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கு !

  ReplyDelete
 14. கனுப்பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல்.உழவர் எல்லாம் வயல், வரப்பு வேலைகளை விட்டு அன்று ஓய்வு கொடுத்து,தன் உற்றம், சுற்றம் பார்க்கவும், கேளிக்கை கொண்டாட்டமாய் பொழுது போக்கவும் இந்த தினத்தை செலவுகிறார்கள்.
  அருமையான பதிவு

  ReplyDelete
 15. ஆஹா!, உங்களுக்கு எனது வந்தனங்கள்...எங்களையும் நினைத்துக் கனுப்பிடி வைத்தமைக்கு. :)

  ReplyDelete
 16. பெண்கள் தன் உடன்பிறந்த சகோதரர்களுக்காகச் செய்யும் கணுப்பிடி பற்றி நன்கு விளக்கமாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 17. Anonymous11:51 PM

  அருமையான சிந்தனையைத் தூண்டும் வரிகள்...விவரங்களும் அருமை...வாழ்த்துகள்

  ReplyDelete
 18. //முதலில் இயற்கையைப்போற்றுவோம் இயற்கைதான் தெய்வம்! //

  இந்த வார்த்தைகளை எழுதியதற்காக உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு.

  பொங்கல் பண்டிகையை பற்றி பறவை பார்வையில் அழகாக அனைத்தும் சொல்லி இருக்கிறீர்கள். நாளை ஏதாவது சந்தேகம் இருந்தால் படித்து தெளிவு பெறலாம். அந்த அளவிற்கு அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். இதற்கு ஆதாரமாக பல மேற்கோள் காட்டி இருக்கிறீர்கள். உங்கள் உழைப்பு அதில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. ஒன்பதாம் எண்ணுக்கான இடுகையின் இணைப்பை (http://vaazhveperaanantham.blogspot.com/2011/03/blog-post_15.html) ஏற்கனவே கொடுத்திருந்தேனே அக்கா!

  2011 மார்ச் மாதத்தில் கேட்டது கிடைத்தது என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறேன். படித்து கருத்து சொல்லுங்கள் அக்கா.

  ReplyDelete
 20. Anonymous12:50 PM

  கணுப் பிடி, காணும் பொங்கல் போன்ற பல விளக்கங்கள் மிக பயனுடைத்து சகோதரி. வாழ்த்துகள் இனிய பிந்திய பொங்கல் வாழ்த்துகள்.
  வேதா.இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 21. மூன்று தினங்களாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை பற்றி அழகாக விளக்கி இருக்கீங்க.சிறப்பான பதிவு.

  ReplyDelete
 22. பொங்கி வரும் பொங்கல் தகவல்கள் அருமை!

  ReplyDelete
 23. இடுகைக்கு வந்து பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் மிக்க நன்றி. பொங்கல்முடித்து அரஙகனை தரிசிக்க திருவரங்கம்போய்விட்டதால் தாமதமாய் பதிலெழுதுகிறேன்.

  ReplyDelete
 24. Why not informed of Srirangam visit.. expecting it and disappointed

  ReplyDelete
 25. some infos were new to me. Awesome post. thanks.

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.