உலகில் பெண்ணைப்பெற்ற ஒவ்வொருவரும் பெரியாழ்வார் அல்லர்.
பிறந்து பின் புகுந்த வீடு போகும் ஒவ்வொரு பெண்ணும் ஆண்டாளும் அல்லள்.
உலகியல் விடுத்து இறை அடியே தேவை என்று புகுந்தவீடு போனவள் ஆண்டாள்.
அப்படியொரு பரம சந்தோஷமும், பரிதவிக்கும் துக்கமும் கலந்து பறிகொடுத்தவர் பெரியாழ்வார்.செங்கண்மால்தான் கொண்டுபோனான் என்று மனதை சமாதானம் செய்துகொண்டாலும் பிரிவாற்றாமை அவரையும் சூழ்கிறது.
பெரியாழ்வார்!வேதியர்க்கே பெருமைதந்த மாணிக்கம்!
அரியவைரம் ஆண்டாளை அவனிமண்ணில் கண்டெடுத்தவர்.
ஆண்டாள் மீது பெரியாழ்வார் கொண்ட பாசத்தினைப்போல வேறெந்த தந்தை-மகளுக்கிடையே இப்படி ஒரு பாசப்பிணைப்பு இருக்குமா என்றால் அது சந்தேகமே!
ஆண்டாளைப்பற்றிப்பாடும்போது ’பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!’ என்கிறார்கள். இத்தனைக்கும் அவர் துளசிக்குவியலில்தான் ஆண்டாளைக்கண்டுபிடித்திருக்கிறார். பெற்ற பெருமை இல்லாதவருக்குக்கிடைத்த பேற்றினைப்பாருங்கள்!
’பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலைமுப்பதும் தப்பாமே’ என்கிறாள் ஆண்டாளே தான் வடித்த திருப்பாவைப்பாடலில். அப்பாவும் பெண்ணும் மாறிமாறி அன்பைப்பரிமாறிக்கொள்கிறார்கள்.
தான் சூடிய மாலையை இறைவனுக்குச்சூட்டிட அதனை தந்தையிடம்கொடுத்த துணிச்சல்காரியான பெண் ஆண்டாள்.
அந்த நாளிலேயே பெண் சுதந்திரம் இருந்திருக்கிறதென்பதற்கு ஆண்டாளின் நாச்சியார் திருமொழி வாசகங்களே போதும். அப்படி ஒரு சுதந்திரத்தை அவளுக்கு அளித்தவர் பெரியாழ்வார் என்றால்மிகை இல்லை.
மகளின் ஆசையைபூர்த்தி செய்து அவளை திருமாலுடன் சேர்த்துவைத்து வீடுவந்தவர் மகளின் பிரிவில் மனம் தவிக்கிறார். செங்கண்மால்தான் கொண்டுபோனான் என மனதைத்தேற்றிக்கொள்ள பிரயத்தனப்படுகிறார்.ஆனாலும் பாசம் மனசை வழுக்கிவழுக்கி நினைவுகளை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது.மகளோடு கூடிக்கழித்த நாட்களை அசை போடுகிறது.
’நல்லதோர் தாமரைப்பொய்கை
நாண்மலர் மேல்பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
அழகழிந்தாலொத்ததாலோ
இல்லம் வெறியோடிற்றாலோ
என்மகளை எங்கும் காணேன்
மல்லரையட்டவன் பின்போய்
மதுரைப்புறம் புக்காள்கொலோ’
கண்ணில் நீர்மல்கப்பாடுகிறார் பெரியாழ்வார்.
கண்பனித்தது என்பார்கள்.
ஆமாம் பெரியாழ்வாருக்கு மகள் மணமாகிசென்றதும் கண்பனித்துத்தான் போனது.
அவரது விழிகளாகிய தாமரைக்கு மகள் எனும் சூரிய ஒளி இல்லாமல்போய்விட்டதாம்.
பனிவந்து தாமரையைச் சூழ்கிறதாம். பனிகண்டமலர் விரியுமோ?
பெண்ணிருந்தவரை இல்லம் தாமரைப்பூத்த பொய்கையாய் அழகாக இருந்ததாம்.இப்போது பனிபெய்வதால் இதழ்கள் உருகிக்கருகிவிட்டதாம்,கொடி மொட்டையாய் நிற்கிறது இதுபோல வீடு அழகழிந்து வெறியோடிவிடுகிறது.
நம் மனதிற்குப்பிரியமானவர்கள் பிரிந்துவிட்டால் இல்லமென்ன நம் உள்ளமே ’வெறிச்’ என்றுபோய்விட்டதாய் சொல்கிறோம் அல்லவா? அதைத்தான் ஆழ்வார் இந்தப்பாடலில் சொல்லி இருக்கிறார்.
பொய்கையின் படம் பெரியாழ்வாரின் சொற்சித்திரத்தில் மனதில் பதிந்துவிடுகிறது.கவிதைக்கென்று தனி வார்த்தைகள் இல்லையென்று காட்டிவிட்டார் பெரியாழ்வார், ஆமாம் உலகத்தில் வழங்கிவரும் சொற்களை வைக்கிற இடத்தில் வைத்தால் அவைகளுக்கு அபூர்வ சக்தி ஏற்பட்டுவிடுகிறது என்பது உண்மைதானே!
(வைகுண்ட ஏகாதசி சிறப்புப்பதிவுகள் இத்துடன் நிறைவுபெறுகின்றன)
Tweet | ||||
மிகவும் அழகான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
vgk
நல்ல செய்தி. .நல்ல கருத்துக்கள்.. இந்த இனிய நாளில்.
ReplyDeleteநன்றி
மிகவும் ரசித்தேன். பெரியாழ்வார்/ஆண்டாளைப் பற்றிப் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள் அக்கா.
படித்து ரசித்ததோடு , பிறகு .
ReplyDeleteநாலாயிர திவ்விய பிரபந்தம் எடுத்து படித்தேன்
நன்றி
பெரியாழ்வாரைத் தாக்கிய வெறுமை மனம் நெகிழ்த்தியது. என்ன ஒரு அற்புத வரிகள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபெரிய....ஆழ்வாரல்லவா? பாசத்தைப் பொழிவதிலும் பெரியாழ்வாராகவே இருந்திருக்கிறார். தந்தையின் பாசத்தைத் தெற்றன உணர்த்திய வரிகள் மனதைத் தொட்டன.
ReplyDeleteசிறப்பான சிறப்புப் பதிவினைக் கொடுத்து
ReplyDeleteஇந்த திரு நாட்களின் பெருமையை அழகாக
தெளிவாக உணரச் செய்தமைக்கு நன்றி
வாழ்த்துக்கள்
த.ம 2
இறையருள் பெற்றவராயினும் தானும்
ReplyDeleteஒரு தந்தை என உணர்த்தும் இடங்கள்
அற்புதம் சகோதரி...
மேன்மக்கள் மேன்மக்களே ...
மிக நல்லதொரு பகிர்வு பாராட்டுக்கள் மேடம்
ReplyDeleteநம் மனதிற்குப்பிரியமானவர்கள் பிரிந்துவிட்டால் இல்லமென்ன நம் உள்ளமே ’வெறிச்’ என்றுபோய்விட்டதாய் சொல்கிறோம் அல்லவா? அதைத்தான் ஆழ்வார் இந்தப்பாடலில் சொல்லி இருக்கிறார்.
ReplyDelete>>>
தா ஒரு தந்தை என்று நிரூபித்து விட்டார்
//பெண்ணிருந்தவரை இல்லம் தாமரைப்பூத்த பொய்கையாய் அழகாக இருந்ததாம்.இப்போது பனிபெய்வதால் இதழ்கள் உருகிக்கருகிவிட்டதாம்,கொடி மொட்டையாய் நிற்கிறது இதுபோல வீடு அழகழிந்து வெறியோடிவிடுகிறது//
ReplyDeleteபெண்ணைப் பெற்ற ஒவ்வொரு தந்தையும் பெரியாழ்வார்தானோ இப்படியொரு உணர்வை அனுபவிக்கும்போது..
கருத்து கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteமிக அருமையாகப்பெரியாழ்வார் உள்ளத் துன்பம் தெரிய வைத்தீர்கள்.
ReplyDeleteஎன்னதான் புத்தகத்தில் படித்தாலும் தமிழில் ஆழம் கண்டவர்கள் உரை சொல்லும்போதுதான் இன்னும் பிடித்திருக்கிறது. நன்றி ஷைல்ஸ்.