Social Icons

Pages

Tuesday, February 03, 2015

தைப்பூசத்திருநாளிலே...!






பூச நாளின் பிரதான தேவதை குரு பகவான். கோள்களில் ஞானம் தருபவர். அது போல் நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் 
சிறப்பு வாய்ந்தது. 

 
ஆதலால் தைப்பூசத்தன்று புனித தீர்த்தத்தில் நீராடி, குரு பகவானா கிய பிரகஸ்பதியையும், குருவின் குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.

தைப்பூசம்........
தைப்பூசமென்பது தை மாதத்துப் பூசத்திருநாள் எனப்படும். தை என்பதற்குப் பல பொருள்கள்  இருக்கின்றன. 
 
 தைக்கத் தக்கவை. தையென்னேவல், தாளக்குறிப்பினொன்று(நடனத்தில் தா   தை  என்று வருமே அந்த தை)
 
திருச்செந்தூர்  இன்று அமர்க்களப்படும்...இன்னும் பல  சிறப்புத்தகவல்கள்  இருக்கும் எனக்குத் தெரிந்த  தை  பகிர்ந்துகொள்கிறேன்.
 
சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கநாதரின் தங்கை என்று கருதப்படுகிறாள். அதை நிரூபிக்கும் வகையில் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஸ்ரீரங்கம்- கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரி காணுகிறாள் மாரியம்மன்.
தைப்பூசத்தன்று ஸ்ரீ ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொண்டு கொடுப்பார்.மயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கநாதரின் தங்கை என்று கருதப்படுகிறாள், திருவரங்கள் அந்நியப் படையெடுப்பால் ஆக்கிரமிக்கப் பட்ட பொழுது திருவரங்கன் சாந்நித்யத்தை ஒரு கும்பத்தில் ஆவாஹனம் செய்து சமய புரத்தில் (அன்றைய பெயர் சமர புரம் = சமர் சண்டை) புதைத்து விட்டுச் சென்றனராம், அதனால் தான் சமய புரம் திருவரங்கன் கோயிலுடன் இணைக்கப் பட்டது.

 "கொடுங்கோலாட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர் கொண்ட படி காட்சி தந்தேன் உனக்கு" என்று சமய புரத்தைப் பற்றி எழுதிஇருக்கிறார்  கண்ணதாசன்.


 ரங்கநாதர் கோவிலிலிருந்து மாலை, சந்தனம், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் யானைமீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சீர்வரிசை சமர்ப்பிக்கப்படுகிறது..கொள்ளீடக்கரையில்  அப்போது கூட்டம்  அதிகமிருக்கும்..கடைகன்னி(கண்ணி?:) என்று  அமர்க்களப்படும் ..பாவாடைதாவணிகாலங்களில்  அந்தப்பௌர்ணமி நிலவில் நதிக்கரையில்  அடித்த கொட்டங்கள் மலரும் நினைவுகள்!

பாம்பு கடித்து இறந்துபோன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்திக் கலசத்திலிருந்து எழுந்து வரும்படி பதிகம் பாடி ஞானசம்பந்தர் அவளை உயிர்ப்பித்தார். இந்த நிகழ்வு தைப்பூசத்தன்று நடந்ததாக மயிலை கபாலீஸ்வரர் தலபுராணம் கூறுகிறது.
 
 
மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்

பாடல் இதுதான்.
 
 

கும்பகோணத் திலிருந்து தென் கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத் தலம். இங்கு காவேரி யானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக் கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது. இத்தலத்தில் மட்டும் தைப்பூசத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீலாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய தன் ஐந்து பத்தினிகளுடன் தேரில் பவனி வருவார். 
 
 
 
கடவுள் ஜோதி வடிவில் இருக்கிறார் என்று கூறி ஜோதி வழிபாட்டை வள்ளலார் தொடங்கி வைத்தார். வடலூரில் அவர் தொடங்கி வைத்த தைப்பூசம் ஜோதி தரிசனம் 144 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்துள்ளது.இன்று நடப்பது 144 -வது ஆண்டு தைப்பூசம் ஜோதி தரிசனம் ஆகும். சத்தியஞான சபையில் அமைக்கப்பட்டுள்ள சதுர பீடத்தில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் இன்றும் அணையாமல் இருக்கிறது.


அந்த தீபம் பக்தர்கள் பார்வைக்கு காட்டப்படுவது தான் ஜோதி தரிசனம் ஆகும். வள்ளலர் தீபத்துக்கு முன்பு 6.9 அடி உயரம் 4.2அடி அகலத்தில் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக ஜோதியை தரிசிக்க வேண்டும். கண்ணாடிக்கு முன்பு 7 திரைகள் பொருத்தப்பட்டு இருக்கும். அந்த திரைகள் ஒவ்வொன்றாக ஆகற்றப்பட்டு ஜோதி காண்பிக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் பூசம் நட்சத்திர தினத்தன்று ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது 6 திரைகள் மட்டும் அகற்றி ஜோதி காண்பிக்கப்படும். தைப்பூசம் தினத்தன்று மட்டும்தான் 7 திரைகள் அகற்றப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். 7 திரைகள் அகற்றபடும் போது ஜோதியை பார்ப்பது விசேஷ சக்தி கொண்டது.

"நடனம் ஆடினார்  என்ற பாடலில்  சரணத்தில் அஷ்டதிசையும் கிடு கிடுங்க
சேடந்தலை நடுங்க

என்று ஆரம்பித்து முடிவில்  கோபாலகிருஷணபாரதி   "தைப்பூசத்தில் பகல் நேரத்தில்  "
நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில்   " என்று வசந்தா  ராகத்தில் அமைந்த
பாடலும் இதன்  பெருமையை உணர்த்துகிறது
 
 தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அன்று, பத்துமலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருகிறார். உலக நாடுகளில், தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப்படுகிறது. மலேசியாவில் மட்டுமே.




4 comments:

  1. அருமையான விளக்கம்...

    ReplyDelete
  2. திருச்சேறை சாரநாத பெருமாள் அருகில் தான் எங்கள் வீடு இருந்தது.
    நான் பிறந்த ஊரும் அதுவே.
    1942 ல்.

    அந்த ஊர் பெருமாள் பற்றி தகவல் அறிந்து
    பழைய நினைவுகள் எல்லாம் வந்தன.

    நன்றி.

    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி மற்றும் மூனாட்சிப்பாட்டி.
      திருச்சேறை உங்கள் ஊரா மீனாட்சிபாட்டி அப்ப உங்களுக்கு ஊர்க்கோவில் விஷயம் இன்னும் தெரிந்திருக்குமே .? பதிவிலிட்டால் அவசியம் வாசிக்கறேன் நன்றி மிக

      Delete
  3. நல்ல தகவல்கள். நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.