Social Icons

Pages

Thursday, October 26, 2006

சில்லுனு ஒரு நாடகம்

எம்டி அறையினின்றும் ப்யூன் ரங்கசாமி தன் அருகில் வந்து நிற்பதுகூடத் தெரியாமல்'ஜீ சாட் 'டில் மூழ்கி இருந்தான் கார்த்திக் .
உகாண்டா சினேகிதி நிமேகிமியுடன் மனம்விட்டு பேசிக் கொண்டிருந்தபோது அவள் இசகு பிசகாய் ஒரு கேள்வி கேட்டுவிட்டாள்.
'கார்த்திக் ஆர் யூ மேரிட்?'
இதற்கு அவளுக்கு என்ன பதில் சொல்வதென யோசித்தான்.
செல் , 'வள்' என்றது. வீட்டிலிருந்து 'கால்' வந்தால் செல்லில் அல்சேஷன் குரைக்கும்.
"என்ன சந்திரா ஆபீஸ்ல மும்முரமா வேலை செய்யறபோதுதான் போன் செய்யணுமா?"
"உங்களுக்குக் கல்யாணம் ஆனதே மறந்து போயிருக்குமே?" என்று எதிர்முனை சந்தேகமாய் கேட்கவும் நிமேகிமிக்கு 'சற்று நேரத்தில் வருகிறேன்' என்று தகவல் கொடுத்துவிட்டு "என்ன என்ன?" என்றான் லேசான கிலியுடன். சந்திரா ஏதும் மாயக்கண்ணாடி வழியே நோட்டமிடுகிறாளோ?
"நினைவிருந்தா என் நினைவும் வந்திருக்கும் .. காலைல நீங்க ஆபீஸ் போறப்போ நான் சொன்னதும் நினைவுக்கு வந்திருக்கும் இப்போ?"
"என்ன சொன்னே?"
"அதானே? 'நினைவிருக்கு சந்தும்மா'ன்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்தேன்...ஹ்ம்ம் அது ஒருகனாக்காலம்!"
"ஹலோ சீக்ரம் சொல்லு...டோ ண்ட் வேஸ்ட் மை ப்ரஷியஸ் டைம்.. ஐயாம் பிசி யார்!"
"இந்த அலட்டலுக்கு ஒண்ணும் குறைவில்ல... சரிசரி சொல்லிட்றேன் ஆபீஸ் விட்டுவரப்போ நல்லநயம் புளியா அரைகிலோ ஃபுட் வோர்ட்லேந்து வாங்கி வாங்க என்ன?"
"அடச்சே புளிச்சிபோன விஷயம் பேச இப்படி ஒரு கால் வெஸ்ட் பண்ணனுமா? "
"என்ன மூணுமுணுக்கிறீங்க சரியா காதுல விழலயே பக்கதுல ஏதும் ஃபிகரோ?"
"ஐயோ சந்தேகரா! என் காபின்ல இப்போ பக்கத்துல ப்யூன் ரங்கசாமிதான் வந்து நிக்கறான். நீ போனை வை முதல்ல.."
செல்லை வீசி மேஜைமீது எறிந்தான் கார்த்திக். "சாருக்கு வீட்டிலேந்து போனாக்கும்?"என்றான் ரங்கசாமி கிண்டலாய்.சரியான மோப்ப நாய் பாம்புச்செவி!
"சரிசரி எங்க வந்தே?" கார்த்திக் செயற்கை சிரிப்புடன் கேட்டான். கண், கணிணி கன்னியிடம் சாட்டிங்கினைத் தொடர கீ போர்டினை மேய்ந்தது.
"சார், கம்பூட்டர்ல யாரோ' உம்மா' கொடுக்குற மாதிரி சத்தம் வர்து பாருங்க...இஞ்சினீரிங் படிச்சி பெரிய உத்தியோகம் பாத்துகிட்டு நெட்டுல உலக மக்களோட பேசிக் களிக்கிறீங்க ! ஹ்ம்..எங்கள மாதிரி ஆளுங்கதான் மானேஜர் ரூமுக்கும் இங்க வேலை செய்யறவங்க காபினுக்கும் அலைஞ்சி அலைஞ்சி தேஞ்சி போய்ட்றோம்.."
"ரங்கசாமி.ஒவரா பேசாதே.. இந்த டேபில்ள நீ ஒருநாள் உக்காந்து பாரு எவ்ளோ சிக்கல் என் வேலைலன்னு உனக்குப் புரியும்"
"சிக்கலும் உண்டு 'கிக்'கும் உண்டுங்க எல்லாம் எனக்கும் தெரியும்"
"சரிப்பா..இங்க வந்த விஷயம் சொல்லு?"
"உங்கள கையோட ரூமுக்குவரச்சொல்லி எம்டி சொன்னாரு"
"அடப்பாவி அதை இப்பொ சொல்றியே வந்ததும் சொல்லி இருக்க வேணாமா ?"
"எப்படியும் அந்தாளு கடுகடுன்னுதான் இருக்கபோறாரு . அதுக்கு ஏன் நிங்க இங்க சாடிங்ல கிளுகிளுப்பா பேசிட்டுருக்கறதைவிட்டு ஓடணும்னு தான் சும்மா இருந்தேன்."
"இருந்தாலும் அவர் விஸ்வருபம் எடுத்துட்டாருன்னா என்ன செய்யறது.. அதுசரி அவரு என்னைமட்டும் கூப்பிட்டு இருக்காரா இல்லே எல்லா ஸ்டாஃபுங்கலையுமா?"
"இல்லியே உங்களைத் தான் சொன்னாரு..?. ஒருவேள நீங்க ஆபீஸ் நேரத்துல இப்டி சாடிங்ல இருக்கறதுஅவருக்கு தெரிஞ்சிடிச்சோ என்னவோ?"
"அப்பா ரங்கசாமி !உனக்கு எம்டியே பெட்டர் !"கைகுவித்தபடி எழுந்தான் கார்த்திக்.
'என்னவாயிருக்கும்? வேலை விஷயத்துல என்னிடம் யாரும் குறை காணவே சான்ஸ் இல்ல.எட்டுமணி நேர வேலையை பளிச்சுனு ஆறு மணிநேரத்துல முடிச்சிடுவேன் .அப்புறம்தான் நெட் உலா போவது வழக்கம் . மன்மதன் மாதிரி பேசுவேனே தவிர பெண்கள் விஷயத்தில் அடியேன் சொக்கத்(916?) தங்கம். உத்தமபுருஷன்(சந்திராவுக்குமட்டும் நான் ஜேப்பி! ஜேப்பின்னா என்னவா? அதை அவளே பிறகு விளக்குவா அதுவரை வெயிட்டுங்க)
'என்னவாகத்தான் இருக்கும்? ஆபீசில் சிலருக்கு நான் பேர் வைப்பதுவழக்கம் .எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்! ' ஃபன்!'
ப்ராஜக்ட் லீடர் ராஜேந்திரனுக்கு அவரது பரந்த உருவம் காரணமாய் கஜேந்திரன். ப்ரோக்ராமர் ஸ்நேகாஅடிக்கடி சீறிவிழுவதால் ஸ்நேக்(snake) கா. கீதாவிடம் அடிக்கடி காதல்தூதுவிடும் பீதாம்பரத்திற்கு கீதாம்பரம் . வாஸ்து பற்றியே பேசும் வாசுதேவனுக்கு வாஸ்துதேவன் . தலையில் நிறைய ஹேர்பின் குத்திவரும் சித்ராவுக்கு பின்லேடி என்றும் பெயர்வைத்தது நான்தான் என்று எம்டி சுதாகரனுக்கு யாரும் போட்டுக்கொடுத்து விட்டார்களா?
அப்படியானால் சுதாகரன் இனி சுதா'காரன் 'ஆகிவிடுவார்!'
எம்டியின் அறைக் கதவருகே போய்நின்றவன் ஆஞ்சநேயக்கவசம் சொல்லியபடியே கதவைத்தட்டினான்"மே ஐ கமின் சார்?"
ஹ்ர்ம்ம்
உள்ளிருந்து உறுமல் கேட்டது
பயந்தபடி கதவை மெதுவாகத் தள்ள நினைத்துக்கொண்டே படபடப்பில் வேகமாய்த் திறந்துவிட்டான்.
ஆடமாடிக் கதவு இவனை உள்ளே தள்ளியதும் வந்தவேகத்தில் தானே போய்மூடிக்கொண்டது
.ஸாரி என்று வழிந்தான்.
அந்த ஏராளஅறையின் தாராள தேக்குமரமேஜை ,அதன்மீது நான்கு நிறத்தில் நான்கு தொலைபேசிகள்ஃபைல்கள் கம்ப்யூட்டர் .
கடைசியாக் குறிப்பிட்டதில் ஏதோ பார்வையிட்டுக்கொண்டிருந்தவர் குரல்கேட்டுத் திரும்பினார்.இலவசமாய் கொடுத்தாலும் புன்னகையை வாங்கத் தயாரில்லாதவர்போல முகத்தில் கடுகடுப்புடன்நிமிர்ந்தார்.
"ஹ்ம்ம் உட்கார் "என்றார்.
"சார்?" தயக்கமாய் கேட்டபடி அந்த பெரிய சுழல் நாற்காலியின் நுனியில் கார்த்திக்அமரவும் நாற்காலி முன்னோக்கி நகர்ந்து மேஜையில் மோதிக்கொண்டது.கார்த்திக்கின் தடித்த மூக்குக்கண்ணாடி நழுவி வாய்க்குவந்து விழுந்தது.
"எக்ஸ்ட்ரீம்லி ஸாரி" பயத்துடன் மேஜையில் கவிழ்ந்துகொண்ட பேப்பர்வெயிட்டைநிமிர்த்தி வைத்தான்.அது பம்பரமாய் சுற்றியது.
"ஹஹ்ஹாஹா!"கைதட்டி சிரித்தார் சுதாகரன்.
திருட்டுமுழி முழித்த கார்த்திக்கிடம்"சரியான ஜோக்கர்பா நீ !அசப்புல நீ நடிகர்சோ இளம் வயசுல இருந்த மாதிரியே இருக்கறே..அதே உருண்டைமுழி; மூக்குக்கணாடி! ஹெஹே"
இதுக்கு எதுக்கு இழவு சிரிப்புடா மடையா என்று மனசுக்குள் நினைத்த கார்த்திக் எரிச்சலை அடக்கி 'சோ'கமாகவே விழித்தான்
சுதாகரன் ஒருவழியாய் சிரிப்பதை நிறுத்தி "கார்த்திக் உன்னை எதுக்குஅழைச்சேன் தெரியுமா? வர்ரவாரம் நம்ம ஆபீசின் ஆண்டுவிழா வரபோகுது.. இது சில்வர் ஜுப்ளிவருஷம் என்பதால் சிறப்பாக நடத்த திட்டம். தமிழ் நாடுமுழுவதும் இருக்கும் நம் கிளைகள் எல்லாம் சேர்ந்து இங்கே சென்னைக்குவந்து மூணுநாள் விழா நடத்த தீர்மானம். கடைசிநாள் நாடகபோட்டி நடக்கபோகுது. காலையிலிருந்து இரவுவரைக்கும் லஞ்ச் ப்ரேக் தவிர்த்து தொடர்ந்து ஏழுநாடகங்கள் நடக்கபோகிறது .நம் சென்னை தலமை ஆபீசின் சார்பில் நடக்கப் போகும் நாடகத்தை நீதான் எழுதி இயக்கணும்.சில்லுனு ஒருநாடகம் உன் பொறுப்பில் அசத்தலா வரணும் ."
திகைப்பில் ,'நாநானா?" என்றான் கார்த்திக்.
"ஆமாஆமா.,உன் ப்ளாக் பார்த்தேன் சமீபத்துல. ஆபீஸ்ல பீதாம்பரம்தான் உன் வலைப்பூ பத்தி சொன்னாரு. நானும் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்.. ரொம்ப அருமையா சிரிக்க சிரிக்க எழுதி இருக்கே! அப்போவே திர்மானம் செய்துட்டேன் ஆபீஸ் நாடகம் உன் கையிலதான்னு .."
'சார் அது அது வந்து சும்மா ஆபீசில் பொழுதுபோகாத நேரத்துல..."
"ஆபீஸ்ல வேலை செய்யாம இப்டி வலைல விழுந்து கிடக்கிறியா இடியட்னுநான் திட்டமாட்டேன், மை பாய்! நானும் இளமையைக்கடந்து அரை செஞ்சுரி போட்டவன் தான். கார்த்திக் !நீ காலேஜ் நாடகத்துல எழுதி இயக்கி நடிச்சி ப்ரைஸ் வாங்கின தகவல் சொல்லுதேப்பா உன்னால முடியும்னு .இப்போல்லாம் ஸ்டேஜ் நாடகமெல்லாம் அபூர்வமாயிடிச்சேப்பா உன்னைமாதிரி துடிப்புள்ள இளைஞர்கள்தான் அதை மறுபடி உயிர்பெறச் செய்யணும்.."
'ஸார்! குருவி தலைல பனங்காய்! காக்கா சிறகுல கருங்கல்! எறும்பு மேல எக்லர்ஸ் சாக்லேட்.. பயமாயிருக்கு"
"சரித்திர நாடகம்னா பயப்படணும் , வசனம் சரியா வரணும்னு கவலைப்படணும் .இது சும்மா காமெடி நாடகம்தானே.... உனக்கு இதெல்லாம் அல்வா. ஜமாய் ராஜா! நாளைக்கே ரிகர்சல் ஆரம்பி .நம் ஆபீஸ் ஸ்டாஃப் எல்லாரையும் உதவிக்கு வச்சிட்டு சீக்கிரமா ஆரம்பிச்சிடு ..ஒகே நீ போகலாம் இப்போ?"பேசி முடித்ததும் சுதாகாரனாகிவிட்டார் மறுபடி.
கார்த்திக் அங்கிருந்து வெளியேவரும்போது மனசு கேட்டது 'கார்த்திக் நீ நகைச்சுவையாய் சில்லுனு நாடகம் எழுதி இயக்கி நடிக்கணுமா இதைவிட ட்ராஜடி வேறு உண்டா?'
ஆனால் சக ஊழியர்கள் அனைவரும் அவன் விஷயம் சொன்னந்தும் சுகப்ரசவத்தில் ஆண்குழந்தைபிறந்த தம்பதியர்க்கு வாழ்த்து சொல்வதுபோல் கைகுலுக்கி 'கங்கிராஜுலேஷன்ஸ்!' என்றனர் கோரஸாய்.
"நாங்க எல்லாரும் ஒத்துழைக்கிறோம்டா" என்றான் வெங்கட்.
"ஷ்யூர் கார்த்திக்!" என்றாள் சீறாமல் ஸ்னேகா.
கீதா ,அருணா ,ராதிகா, நந்தினி நால்வரும் ஸ்நேகாவுடன் சேர்ந்து ஐம்பெரும்பெண்மணிகளாய் வாழ்த்தினர்.
நயாகாரா நடுவில் நின்றார்போல் சிலிர்த்தான் கார்த்திக்.
அந்த ஐந்துபேரையும் ஒன்றாய் பார்த்ததும் 'கண்டேன் கருவை' என்று உணர்ச்சிவசப்பட்டவனாய் கத்தினான்.
'ஐயோ!' என்று தனது இரண்டுமாத கர்ப்ப வயிற்றினை சேலைத்தலைப்பில் மூடிவெட்கப்பட்டாள் அருணா.
"நாடகக்கரும்மா! நீங்கவேற ?" வெங்கட் விளக்கினான்.
ஐந்துபெண்கள் !ஒரு ஆண்!
யோசித்தான்.
ஆஹா! கதை ரெடி!
குதூகலகமாய் வீடு வந்தவனிடம் சந்திரா கேட்டாள் " என்ன ஜொள்ளுபார்ட்டி என்னும் ஜேப்பி!புளி வாங்கிவந்தீங்களா?"
"யு மீன் டைகர்? இம்பாசிபிள்மா"
"போதுமே ..உங்க ஜோக்கைரசிக்கத்தான் ஆபீஸ்ல ரசிகைபட்டாளம் தவிப்பாங்களே.. அதுகிடக்கட்டும்...புளி அதான் சமையல் புளி,வாங்கிவரச் சொன்னேனே...மறந்திட்டீங்களா? நெனச்சேன். இந்த அத்வானத்துல வீட்டைக்கட்டிக் குடிவந்துட்டோ ம் பக்கத்துல கடை ஏதும் இல்ல..இரண்டுவாலுகுழந்தைகளோட நான் எங்கபோறது?"
"ஆபீஸ் வேலைல மறந்தே போயிட்டேன்மா"
"நான் எது சொன்னாலும் காதுல ஏறாது.. ஆனா அடுத்த தெரு லதா ஒருநாள் பிசாத்து ப்ரஷ்வாங்கிவரச்சொன்னால் டாண் னு வாங்கிவருவீங்க.என்னவோ போங்க ரண்டு குழந்தங்க அதாவது நினைவிருக்கும்னு நினைக்கறேன்"
"யார்க்கு லதாக்கா? நம்பவே முடில்ல! இப்பத்தான் வயசுக்குவந்தவ மாதிரி இருக்கா?"
"நான், ரண்டு குழந்தங்கன்னு சொன்னது உங்களுக்கு ..ஆறுகழுதைவயசுஆவுது உங்களுக்கு ஒருகழுதைக்குவயசு ஆறு."
"ஸோ வாட் சந்திரா? ஐயாம் யங் அட் ஹார்ட் .கண்ணாடி கழட்டினா ரொம்ப இளமையா இருக்கேனாம்!" "யாரு" ஆபீஸ் காரிகைகள் சொன்னாங்களாக்கும்? 'ஹி' ன்னு பல் இளிப்பீங்களே அவங்களைக்கண்டா?":"எல்லார்கிட்டயும் நான் ஜோவியலாப் பேசறேன்"
"என்கிட்டஒருநாளும் ஜோக் அடிச்சதே இல்லையே...பொண்டாட்டிகிட்ட பேசவே நேரம் கிடையாதாம்இதுல ஜோக் எங்க ஜோக்!..."
லட்சார்ச்சனை ஆரம்பமாகவும் கார்த்திக் பாத் ரூமுக்குள் பதுங்கினான்
மறுநாள் ஆபீசில்நுழையும்போதே ஸ்நேகா ஆர்வமாய் ,
"கார்த்திக்!ஸ்க்ரிப்ட் ரெடியா எனக்கு என்ன ரோல் ? மெயின் ரோல்எனக்குத்தானே ?பிச்சிட்றேன்" என்றாள்.
"எதை ஸ்க்ரிப்டையா?"
"ஹையோ! நாட்டி கை!"
"கோபமா வரணுமே மேடத்துக்கு?"
"இனிமே வராது நாடகத்துல உணர்ச்சியக்கொட்டி நடிக்கணுமே நான்?"
"ஓ ரொம்ப் இன்வால்வ் ஆகிறீங்க போல?"
ஸ்நேகாவைப்போலவே மற்ற பெண்களும் தங்களது இருபதுப்ளஸ் வயதுக்கே உரிய துடிப்புடன் கார்த்திக்கிடம் நாடக விவரம் கேட்டனர்.
"நாடகம் ஸ்க்ரிப்ட் ராவோடுராவா எழுதிட்டேன். ஆமா,ரிகர்சல் எங்கே வச்சிகறதுடா வெங்கட்?"
"உன் வீட்லதான்.,ஊர்கோடில அமைதியாயிருக்கு. மொட்டைமாடில ஒத்திகையை ஆரம்பிக்கலாம்டா"
"ஓகே! நானும் வீட்ல கண் எதிரில் இருந்தா மிஸஸ்டவுட்ஃபயருக்கும் நிம்மதியா இருக்கும். என் வீடுதான் ஒத்திகைக்கு சரியான இடம்."
சந்திரா அரைகுறைமனதாய் சம்மதித்தாள்
"ஒத்திகை மட்டும் பண்ணுங்க சும்மா அந்த மினுக்கிங்க கிட்ட வழிய வேணாம்"என்று கண்டிஷன் போட்டாள்.
மறுநாள் கதையை விவரிக்கத் தொடங்கினான் கார்த்திக்.
"அதாவது குடும்பத்தலைவர் பாஞ்சலனுக்கு ஐந்து -ஹிந்தில பாஞ்ச் -மனைவிகள்.ஐந்துபேருமே அல்ட்ரா மாடர்ன் லேடீஸ். நகரின் பெரிய க்ளப்பில் அவங்க எல்லாரும்சீட்டு ஆடிதோத்துப் போயிடறாங்க .வீடு நிலம் பொருள் எல்லாம் அடமானம் வச்சும் கடன் அடையல கடைசியா கட்டின கணவனையே அடமானம் வைக்கும் நிலமை.
எதிர் அணித்தலைவி தன் மாமியின் சூழ்ச்சியோடு தங்கை துரியாவை அழைத்து ஐந்து பெண்மணிகளின் ஒரே கணவரான பாஞ்சாலனை க்ளப்புக்கு அழைத்துவரசொல்லி ஆணையிடுகிறாள்.
துச்சா பாஞ்சாலனை பஞ்சகச்சம் வேஷ்டியோடு அப்படியே அழைத்துவர ."துரியா அவனது துகிலை உரிக்கவா?" என்றாள் துச்சா பழைய பகையை நினைவில் கொண்டு.
பாஞ்சாலன் பரிதாபமாய்க் கெஞ்சுகிறான் தன்மனைவிகளை ஆற்றாமையாய் பார்க்கிறான் ஆனாலும் சகுனியும் துரியாவும் சிரிக்க சிரிக்க பாஞ்சாலனின் வஸ்திரத்தை உருவுகிறாள் துச்சா.பாஞ்சாலன் 'ஹேராதே'என்று செல்லில் தனது சகோதரிபோன்ற அந்த பிரமுகப்பெண்மணிக்கு தகவல் தருகிறான் அவள் ஏதோ செல்லில் சொல்லவும் பாஞ்சாலன் க்ளப்பில் எல்லரையும் பார்த்து ஆவேசமாய் கத்துகிறான்.
நான் வேஷ்டி கட்டியதால்தானே எனக்கு இந்த கதி இனி நான் வேஷ்டியே கட்டப்போவதில்லை என்று பேசுவதை சட்டென நிறுத்துகிறான்.
க்ளப் அதிர்கிறது ஆண்கள் வெட்கத்தில் தலைகுனிகிறார்கள்.
பாஞ்சாலன் தொடர்கிறான் 'இனி நான் பேண்ட் தான் அணியபோகிறேன் இதுதான் பாஞ்சாலன் சபதம்'என்கிறான் திரை போடப்படுகிறது.எப்படி கதை?"
"இந்த பாதிப்பில ஒருகதை கேட்டமாதிரிஇருக்கே...காலேஜ்நாளில் டீவில சங்கு ஊதிட்டே ஒரு நிகழ்ச்சி பார்த்தமாதிரி இருக்கே?"
வெங்கட் குழப்பமாய் கேட்டான்.
"மஹாபாரதத்தின் உள்டா தான் ..நவின பாணில முயற்சித்தேன். வேற என்னடா செய்வது அவசரத்துக்கு என் கற்பனை இப்படித்தான் போனது.."
வெங்கட் கண் பனித்தான்.
"காமெடிகதைக்கு அழறியேடா வெங்கட்?"
"அஞ்சுபொண்ணூங்களைக் கட்டிட்ட பாஞ்சாலனுக்காக இந்தக்கண்ணீர்டா"
"பாஞ்சாலன் நீதான் வெங்கட்"
'ஐயோநானா அஞ்சுபேருடா... அஞ்சியே ஒத்திகையில செத்துடுவேன்"
"கமான் வெங்கட்..இன் ஃபாக்ட் நான் நடிக்கலாம் ;ஆனாஎழுதி இயக்கி நடிக்கவும் முடியாதுடா மேலும் ஐந்து பெண்களுக்கு நான் கணவன்னா என் மனைவி அதை நாடகம்னாலும் சம்மதிக்கமாட்டா."
"பீதாம்பரம் ரவி குமார் கணேஷ் இவங்களைக் கேட்டுப்பாத்தியா?"
"அவங்கதமிழ் உச்சரிப்பு சரியா இல்லடா வெங்கட்...மேலும்இந்த நாடகம் மட்டும் வெற்றி அடைந்தால்நாமே சுயமாய் ஒரு குழு தொடங்கிடலாம்"
"சரி"
ஜீன்சில், சூடிதாரில், லோஹிப் சேலையில் என்று ஐந்து இளம் பெண்களும் வீட்டில் நுழையவும், சந்திராவின் கண்கள் கார்த்திக்கின் மீது தாவிக்கொண்டே இருந்தது. அவனோ நாடக டென்ஷனில் பரபரத்துக் கொண்டிருந்தான் இதில் நந்தினி என்னும் இருபத்திஓருவயது இளமைப்புயல் 'ஆண்ட்டி' என்று சந்திராவை அழைத்துவிட்டாள்
சந்திரா தனியே கார்த்திக்கை சமையல் அறைக்குத்தள்ளிக் கொண்டுபோய் கைமா செய்ய ஆரம்பித்தாள்.
"ஆண்ட்டியாமே அந்த ஜீன்ஸ் சுந்தரிக்கு நான்? எத்தனை கொழுப்பு இருக்கணூம்?சோடாப்புட்டி போட்டுகிட்டு கொஞ்சம் கிராமத்துப்பெண்ணா அடக்க ஒடுக்கமா தேவர்மகன் ரேவதிமாதிரி இருக்கறதுனால என்னை ஆண்ட்டின்னு கூப்பிடணுமா? நானும் மேக் அப் போட்டுக்கிட்டா நமீதா ரேஞ்சுல இருப்பேன்....சொல்லிவைங்க உங்க ஆபீஸ் அழ்ழ்ழகிங்ககிட்ட க்கும்?"
திருமதிதுச்சா துரியா சகுனிமாமி கதாபத்திரங்களுக்கு முறையே பீதாம்பரம் விட்டல் டேனியல் ஆகியோர் பெண் வேடமணிய ஒருவழியாக சம்மதித்தனர்.
முதல் இரண்டு நாட்கள் ஒத்திகை சரியாக அமையவில்லைதான் ஆனால் பிறகு அனைவரும் ஈடுபாட்டுடன் நடிக்கவும் மிகவும் திருப்தியானது கார்த்திக்கிற்கு.
அன்று மொட்டைமாடியில் ஒத்திகை முடிந்ததும் 'சபாஷ் ஒண்டர்ஃபுல்!" என்று குரல் வந்தது.
எல்லாரும் திகைப்புடன் திரும்பிப் பார்த்தனர்
பக்கத்துவீட்டு மொட்டைமாடியில் ஒரு இளைஞன் நின்றுகொண்டு கைதட்டினான் .
கார்த்திக்கைப்பார்த்து,"என் பேரு சுரேஷ்.இங்க ஒருமாசம் முன்பு குடிவந்தேன் ..உங்க ஒத்திகையை தினமும் பார்த்து பிரமிக்கிறேன் அனுபவம் வாய்ந்த நடிகர்களா என்ன அனாயாசமா நடிக்கறீங்களே?' என்றான்
"நன்றி சுரேஷ்! எல்லாரும் எங்க அபீஸ் மக்கள்தான் !ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு எங்க சார்புல சில்லுனு ஒரு நாடகம் போடணும்னு எம்டி சொன்னார் அதான்...". "ஓ அப்படியா?ஆல்தி பெஸ்ட்!"
கார்திக்கிற்கு உற்சாகமாயிருந்தது.
ஆயிற்று இன்னும் இரண்டே நாளில் ஆபீஸ்விழாநிகழ்ச்சிகளைத்தொடங்கவேண்டும்
அப்போதுதான் ஆபீஸ் முழுமைக்கும் அந்தத் தகவல் வந்தது .
டில்லியில் போர்ட் மீட்டிங்கிற்கு சென்ற கம்பெனி சேர்மென் மாரடைப்பில் திடீரென இறந்துவிட்டாராம் அதனால் விழா நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து என்று.
துக்கமும் சோகமுமாய் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு ஆபீசிலிருந்து கார்த்திக் வீட்டிற்கு வந்தான் . சந்திராவிஷயம் கேட்டு அதிர்ச்சியில் அதிசயமாய் அமைதியாகிவிட்டாள்.
மொட்டைமாடியில் ஒத்திகை நடந்த இடத்தைப் பார்த்து மலரும் நினைவுகளை அசைபோட்டான் .ஒத்திகையின் போது எல்லாரும் எவ்வளவு குதூகலமாய் ,அந்நியோன்னியமாய் பழகினோம்? ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த நம்பிக்கை, சேர்மனின் இழப்பு என்னும் சுனாமியால் அடித்துக்கொண்டு போய்விட்டதே? "கார்த்திக்! எப்போ உங்க நாடக அரங்கேற்றம்? என்னைமாதிரி வெளி ஆட்கள் பார்க்க அனுமதி உண்டா?"
பக்கத்துவீட்டு மொட்டைமாடியில் நின்றபடி ஆர்வமாய் சுரேஷ் கேட்டான்.
"இல்ல சுரேஷ் நாடகம் கான்சல்ட் கம்பெனி சேர்மன் இறந்துட்டாராம்"
சொல்லிவிட்டு கண்கலங்குவதை மறைக்க முகத்தைத் திருப்பிக் கொண்டான் கார்த்திக்.
"அப்படியா? கார்த்திக்! இஃப் யு டோ ண்ட் மைண்ட் அந்த நாடகத்தை 'ஹாய் டிவி 'ல ஒளிபரப்பிடலாமா? அந்த டீவியின் உரிமையாளர்ல நானும் ஒருத்தன் தான். இப்படி ஒருநகைச்சுவை நாடகத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை.எல்லாரும் அருமையா நடிச்சதை ஒத்திகையில தினமும் பார்த்தேன். இது பலலட்சம் மக்களுக்குப் போய்ச் சேரணும் ..அதற்கு எங்க 'ஹாய்டீவி' உதவும் ...என்ன சொல்றீங்க?"என்று சுரேஷ் கேட்டான்.
கனவுகளில் மிதக்க ஆரம்பித்தான் கார்த்திக்!*******************************************************************************

8 comments:

  1. வாவ் கலக்குறீங்க ஷைலஜா :) நல்லா சிரிச்சேன்.

    ReplyDelete
  2. நன்றி ஜொள்ளுப்பாண்டி!
    ஷைலஜா

    ReplyDelete
  3. .,உன் ப்ளாக் பார்த்தேன் சமீபத்துல. பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்.. ரொம்ப அருமையா சிரிக்க சிரிக்க எழுதி இருக்கே!

    உங்கள் வார்த்தைகளையே உங்களுக்கு திருப்பி அளிக்கிறேன்.மிக நல்ல பதிவு.கவிதைகளும் ஜோர்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி திராச. ஆமா சமீபமாத்தான் ப்ளாக் ஆரம்பிச்சி ஏதாவது எழுதிட்டு இருக்கேன்..உங்க வார்த்தைகளுக்கு மறுபடி நன்றி
    ஷைலஜா

    ReplyDelete
  5. டைப் செய்யும்போது கொஞ்சம் கேப்பு தந்து டைப் செய்யுங்க...

    நீளம் அதிகமானா இரண்டு பதிவுகளா போடலாம் தப்பில்லை...!!!!

    ReplyDelete
  6. சரி ரவி.. அடுத்த வாட்டி இப்டி ஆகாது
    ஷைலஜா

    ReplyDelete
  7. Anonymous2:06 PM

    Neenda kathai, arumaiyaaga iruntathu, continue :)

    ReplyDelete
  8. மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் ஷைலஜா.

    முகம்மது யூனுஸ்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.