Social Icons

Pages

Thursday, October 06, 2011

அரங்கன் அந்தாதி!

விஜயதசமி தினத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும் என்பார்கள். நீண்ட நாளாய் வலைத்தளைத்தை சற்று புதுமைப்படுத்த எண்ணி இருந்தேன் நேரமில்லாமல் போனது இன்று ஒருவழியாய் வலைப்பூவிற்கு புதியபெயரையும் சூட்டி சில மாற்றங்கள் செய்துவிட்டேன்! நல்ல நாளில் திருவரங்கன் பேரில் ஒரு அந்தாதியை இடுகிறேன்!



முன்குறிப்பு...



இந்தக் கவிதையை 5வருடம் முன்பு எழுதியதும் ஸ்ரீரங்கம்போக நேர்ந்த நாள் ஒன்றில் இதனை பேப்பரில் எழுதிக்கொண்டுபோய் திருவரங்கன் சந்நிதி உண்டியலில் போட்டுவிட்டுவந்துவிட்டேன் எனது காணிக்கையென அரங்கனுக்கு. (பாவம் அரங்கன்!) பிறகு இப்போது இதனை இன்று இங்கு இடத்தோன்றவும் இடுகிறேன்.. சிலபிழைகள் தவறுகள் இருக்கக்கூடும் .அதற்கு முதலிலேயே மன்னிப்பு!






அரங்கன் அந்தாதி

**********************************



ஷைலஜா(திருவரங்கப்ரியா))

காப்பு.
அகிலாண்ட நாயகியாம், அன்னை அபிராமியாம்,
மஹிஷாஷ§ரனை வென்ற மாமங்கை மாரியாம்,
முகில் வண்ணன் முகுந்தனவனுக்கு முத்தான சகோதரியாம்,
சகித்தென்னை யாளும் அவள் தாளடியே காப்பு.

அந்தாதி.

அரங்கமதில் துயில் கொள்ளும்
அன்பு நிறை அண்ணல்,
இரங்கி நிற்கும் பக்தருக்கு
இசைந்தருளும் வள்ளல்.
உறங்குவது போலிருக்குமவன்
உள்ளமதில் விழிப்பு,
அறங்களை யாளுமவன் அறிந்திடுவான்
அண்டத்தின் கணிப்பு. (1)


புகல் என்று வருவோர்க்குப்
புன்னகையோடு தருவான்,
இகழ்வாரையும், இன்னல் புரிவாரையும்
இனிமையோடு ஏற்பான்.
பாம்பணையில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன் அவன் தான்.
நாம் வணங்கும் நாரணன்,
நலம் தரும் திரு அரங்கனே.(2)



கன்னங்கரு மேனி அழகன்,
கார்முகில் வண்ணன்.
எண்ணும் பொழுதிலேயே ஏற்று
ஏராளமாய் வழங்கும் மன்னன்.
உயர்வான ஆழ்வார்கள்
உளமாறத் துதித்தக் கண்ணன்
பெயர் பலகொண்டானை
நினைக்கையிலே உளம் உருகுமே.(3)

உருகும் பெரும் பனி போன்றது
உத்தமன் அவன் உள்ளம்.
பெருகிவரும் திருவருள்
அதுவே பேரானந்த வெள்ளம்.
நாள் தோறும் நாரணனை
நாம் வணங்கும் போதில்
வாள் கொண்டு வெட்டியது போல்
வினை நீங்கிடுமே கடிதிலே. (4)

கடிதில் விரைந்து அன்று
கஜேந்திரனைக் காத்தவன்.
சடுதியில் வந்து நம்மைச்
சக்கரம் ஏந்திக் காப்பவன்.
தாயினும் மேலான தாமோதரன்
தயா சாகரன்
ஆயிரம் நாமங்கள் கொண்ட
அராவமுதன் அரங்கனே(5)



அரங்கனவன் உறங்குமிடம்
அனந்தனது திருமேனி
அரவரசன் தன் சிரந்தூக்கி
அண்ணலைக் காப்பான் பேணி
திருவடியும், திருக்கரமும்
தெய்வத் திருமேனி எங்கும்
ஒரு பொழுதும் விட்டகலாத
அரவின் புகழ் தங்குமே.(6)



தங்கும் படி யாவரையும்
தன்னகத்தேக் கொள்வான்
பொங்கும் சூழ் புனலாம்
பொன்னியையும் கொள்வான்
ஆரம் போல் காவிரிப் பெண்
அழகிய மணவாளனுக்கு
தாரமாம் திருமாமகள் அவளும்
அருள் தரப் பார்ப்பதில்லை கணக்கே(7)



கணக்கில் என்றும் அடங்காதது
அரஙகனைக் காண வரும் கூட்டம்
வணங்கும் தன் அடியார்களை
வாழ வைப்பதே அவன் நாட்டம்
அவனன்றி ஓரணுவும் அசையாது
அவனியில் காண்
கவலைகள் பறந்து போகும்
கார்வண்ணன் பெயரில் தானே!(8)



தான் எனும் அகந்தை நீக்கி
தாமோதரன் தாள் சேர்வோம்
ஊன் எடுத்த பயன் தீர
உத்தமன் புகழ் பாடுவோம்
அரஙகமதில் குடிகொண்ட
அண்ணலைத்தேடி ஒடுவோம்
தரணியெல்லாம் வாழ வைக்கும்
ரங்கராஜனையே நாடுவோமே.(9)



நாடுவோம் என்றும் நாரணன் பதம்
நல்லன எல்லாம் தரும்
பாடுவோம் பரந்தாமன் புகழ்
பக்தியும் பணிவும் வரும்.
குறையென்று ஏதுமில்லை
அன்று குன்றேந்தியவன் பாதம் சரண்
மறை புகழும் மாதவனின் அருளிருக்க
மனதிற்கு அது அரணே.(10)



அரண்மனையினும் பெரியது அகிலம் காக்கும்
அரங்கனவன் திருக்கோயில்.
திரண்டு வரும் திருமால் அடியார்கள்
திருவருள் பெற நிற்பதுமதன் வாயில்
நல்லெண்ணம்,நற் செயலில் ,தெய்வமது
தேடி வரும் நம் அந்தரங்கம்
பலம் அதுதான் பற்றிக் கொண்டு
பாடிச் செல்வோம் திருவரங்கமே!(11)








--

5 comments:

  1. அரங்கனின் முன்னாடி நிக்கிற அந்தத் தருணம் மெய் சிலிர்க்க வைக்கக் கூடியதல்லவா!!!. அதே உணர்வு இந்த இடுகையை வாசிச்சப்பவும் கிடைச்சது. ஸ்ரீரங்க ராஜகோபுரம் கொள்ளையழகு.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. \நன்றி அமைதிச்சாரல்.

    ReplyDelete
  4. அரங்கனைப் பற்றி சொல்லும்போதே சிலிர்த்துப் போகிறது

    ReplyDelete
  5. //ரிஷபன் said...
    அரங்கனைப் பற்றி சொல்லும்போதே சிலிர்த்துப் போகிறது

    6:37 PM

    ////வாங்க ரிஷபன் ஸ்ரீரங்கத்திலேயே வாழும் உங்களுக்கே இப்படீன்னா அரங்கனைப்பிரிஞ்சி வாழும் எனக்கெல்லாம் எப்படி இருக்கும் சொல்லுங்க? கருத்துக்கு நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.