ஒளி காட்டும் வழி!
************************
இருளும் ஒளியும்
இணைந்தது வாழ்க்கை!
ஒளிமயமான எதிர்காலம்
ஒருநாள் வருமென்பதே நம்பிக்கை!
ஓலம் கேவல் பெருமூச்சென்றே
காலம் ஓடிக்கொண்டிருக்க
கண்முன் கருமை படர்கிறது,
எண்ணற்றக்கவலை பிறக்கிறது.
விறகாய் எரியும் பண்புகள்,
வெறியாய் மீறும் புனிதங்கள்.
சிறகைவிரிக்கும் கழுகுக்கூட்டம்,
உறவெனச்சொல்லிப்போடும் ஆட்டம்.
கண்கள் முன்னே கறுப்புச்சாயம்
காலம் இதனால் மாறிய மாயம்!
’பாரதநாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் ’என்றான் பாரதி!
நேரெதிர்மோதிடும் தீமை இருளை
நெஞ்சம் சேர்ந்து விரட்டிடுவோம்
நேர்மைப்பாதையில் நடந்திடுவோம்!
பாரதநாட்டினில் பிறந்த நமக்கு
பந்தம் சொந்தம் மறந்திடுமோ?
வருடம் ஒருநாள்வரும் தீபாவளி
வாழ்நாளுக்கான ஆயத்த ஒளி!
ஒன்றிய கைகள் ஏற்றிடும் ஒளியில்
ஓடிவிடாதோ இருள்தடுமாறி?
ஒற்றுமைதான் உயர்வென்றானால்
ஓங்கிய ஒளிதான் வழிகாட்டாதோ!