Social Icons

Pages

Wednesday, January 16, 2008

காணும் பொங்கல்!

காணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்

பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டுவார்கள் இல்லையா அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.(இப்பவும் இன்னிக்கு ஒருநாள் கண்டிப்பா மஞ்சள் பூசிக்கறோம் உண்மை!!:):)

கணுப்பிடி இந்தநாளின் சிறப்பு.அதென்ன கணுப்பிடி?

ஆமாம் அது ஒருவகை நோன்பு.உடன்பிறந்த சகோதரர்களுக்காய் பெண்கள் செய்யும் நோன்பு.
உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.

கார்த்திகை எண்ணையும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு என்பது பழமொழி.

அதாவது கார்த்திகைமாதம் எண்ணைதேய்த்துக்குளித்து விளக்குவைப்பதும், பொங்கலில் பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காணும்பொங்கல்தினம் காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இந்தப்பழமொழியின் விளக்கம்.

இரண்டுமஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்குமுகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும்.

முதல்நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள்பொடிதூவி மஞ்சள்சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால்சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப்பொங்கல் கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என 5வகை அன்னங்களை தயாரிக்கவேண்டும்,ஒவ்வொன்றிலும் 5அல்லது 7பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும்போது,"காக்காப்பிடி வச்சேன் கணூப்பிடி வச்சேன் ... காக்கைக்கு எல்லாம் கல்யாணம்..கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்....கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய்வாழணும்" என்று சொல்லிக்கொண்டே வைக்கவேண்டும்.
தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும்.. வீட்டிலென்றால் வாசலில் கொட்டவேண்டும்.

உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து கலந்த சாதம் பாயசம் செய்து விருந்து போடணும்.அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால் இது காணும் பொங்கல் ஆகி இருக்கலாம்!

என் உடன் பிறந்த மூன்றுபேரோடு உடன்பிறக்காத அன்புசகோதர்கள் பலருக்கும் இன்று
வேண்டிக்கொண்டுவிட்டேன், நலம் வாழ!
மேலும் படிக்க... "காணும் பொங்கல்!"

Tuesday, January 15, 2008

வாழ்க்கைப் பாடம்.

எல்லாப்பூக்க்களையும் பறித்தபின்னும்
எப்போதும்போல இயல்புடன் இருக்கும் செடி

அத்தனை இலைகளும் உதிர்ந்தபின்னும்
அப்படியே நிமிர்ந்து நிற்கும் மரம்

இடியையும் மின்னலையும் தாங்கி
மழைபொழிந்தபின்னும்
கலங்காத தெளிந்த வானம்

மண்ணில் விழுந்ததும்
துள்ளி எழுந்து நிற்கும் கன்று

கொஞ்சம்கொஞ்சமாய் தேய்ந்துபோனாலும்
முழுமையாய் ஒருநாள் முகம்காட்டும் பௌர்ணமிநிலவு...

எல்லாமே வாழ்க்கைப்பாடம் நடத்துகின்றன
எதிலும் நம்பிக்கை இழந்த மனிதர்களுக்கு.
மேலும் படிக்க... "வாழ்க்கைப் பாடம்."

Monday, January 14, 2008

பொன்னாள் இந்நாள்!

பனிமூடும் மார்கழியின் பின்னே-பொங்கல்
பரிசாகத்தான் இங்கு வருமே பெண்ணே
இனிதான தமிழர்திருநாளாம் இதற்கு
ஈடுண்டோ வேறேதும் சொல்வாய் பெண்ணே!

பச்சைவயல் முழுதும் காண் செந்நெல்மணிகள்- அங்கு
பகலவனை சேவிக்கும் பலதலைகள்
இச்சகத்தில் உழவர்கள் உழைப்பதுவேயின்றி நம்
உணவுக்கு வழியுண்டோ சொல்வாய் பெண்ணே!

வருடத்தில் ஒருநாளாய் வருமிந்தத் திருநாள்
தரும் வாழ்வில் என்றுமே இன்பம் பலநாள்
திருவெனவே திகழும் மாதருடன் பலரும்
பெருமையுடன் வரவேற்கும் பொன்னாள் இந்நாள்!

மங்கலத்தமிழர்கள் மனம் மகிழ்ந்திடவே
எங்கும் அன்பும் ஆனந்தமும் நிறைந்திடவே
பொங்கலோபொங்கல் என்றே கூவிடுவோம்
தங்கிடும் பொலிவுடன் நாம் வாழ்ந்திடுவோம்!
மேலும் படிக்க... "பொன்னாள் இந்நாள்!"

Thursday, January 10, 2008

பூக்களில் உறங்கும் மௌனங்கள்(கவிதை போட்டிக்கு)

(மனிதன்.....)

வெள்ளி அரும்புகள் விள்ளவே

மெல்லிய தென்றலின் வீச்சிலே

கள்ளத்தனத்தினைக் காட்டிடாக்

கன்னிப் பெதும்பையைப்போலவே

கொள்ளைச்சிரிப்புடன் மெல்லவே

கொத்தாய்க் குலுங்கும் மல்லிகே

என்ன மகிழ்ச்சியைக்கண்டனை

எள்ளத்தனைப்போது வாழ்க்கையில்

மலரத்தெரிந்த உனக்குத்தான்

மௌனம் தானே தாய்மொழி?


(மல்லிகை....)


வாடிடா காகிதமலரைப்போல நான்

வாழவும் விரும்ப நினைத்திலேன்

வாழும் காலம் சிறிதெனினும்

வாசம் பரப்பியேதான் மகிழ்வேன்

பாடிடும் வண்டினம் அத்தனையும்

பார்த்து மயங்கியே சுற்றிடவும்

சூடிட எண்ணியே நாடிடும்

சுந்தரக்கன்னியர் தேடவும்

ஆடுவேன் செடியில் சில கணமே

அப்புறம் நிரந்தர மௌனத்தில்

ஆழ்ந்தே போவேன் அதுவிதியே!
மேலும் படிக்க... "பூக்களில் உறங்கும் மௌனங்கள்(கவிதை போட்டிக்கு)"

Wednesday, January 09, 2008

பயணங்கள் சலிப்பதில்லை!

பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை .கார் ரயில் பஸ் விமானம் என்று நமது பயணங்கள் பெரும்பாலும் இவை நான்கினில்தான் இருக்கும். விமானப்பயணத்தில் அதிகம்பேச இயலாது.அருகில் இருப்பவர் mood பொறுத்தது அது!

விமானப்பயணத்தில் ஜன்னல்ஓரம் அமர்ந்தாலும் வெளியே வேடிக்கைப்பார்த்தால் வெண்பஞ்சு மேகங்கள்தான் மூட்டைமூட்டையாய் காட்சி அளிக்கும்.

தெலுங்கில் இக்கட அக்கட தவிர எதுவும் தெரியாத நான் பன்னாட்டு
விமானப்பயணத்தின்போது தெலுங்கு(மட்டும் தெரிந்த)பெண்மணியோடு எதுவும் பேசமுடியாமல் வாஷிங்டன் வரும்வரை மௌனவிரதம் அனுஷ்டித்தேன்! கடைசியில் அந்தப்பெண்மணி அமெரிக்காவின் விமான ஊழியர்களிடமும் தெலுங்கிலேயே மாட்லாடி தனது பெட்டிகளை
சாமர்த்தியமாய் எனக்கு
முன்பாய்எடுத்துக்கொண்டு என்னை நோக்கி வெற்றிப்புன்னகைவேறு வீசிச்சென்றதை ஜன்மத்திற்கும் மறக்க முடியாது.

கார்பயணம் இனிமையானதுதான்..நினைத்த இடத்தில் இளைப்பாறிக்கொள்ளலாம். ஆனால் அறிமுகமான மனிதர்கள் தான் உடன்
வருவார்கள்,அதில் புதுமை ஒன்றும் இருக்காது.

பஸ்ஸில் பலர் ஏறியதுமே அதன் ஆட்டத்தில் ஒன்று தூங்கிவிடுவார்கள் அல்லது தொலைக்காட்சிப்
பெட்டியில் ஆழ்ந்துவிடுவார்கள். இது அவ்வளவு ரசிக்கும்படியான பயணம் அல்ல.

ரயில்பயணம்-அதுவும்-பகல்நேர ரயில்பயணம் இருக்கிறதே..இது தான் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்! இதில்
நமக்கு நிறைய சிநேகிதங்கள் மட்டுமல்ல நிறைய அனுபவங்களும் கிடைக்கும்.(இதெல்லாம் இந்தியால மட்டும் நான் சொல்வது!)

ரயிலில் டிக்கட் ரிசர்வ் செய்துகொண்டு போவதுதான் உத்தமம். ஒருமுறை அவசரமாய் சென்னைக்குபோக வேண்டி இருந்தது .காவேரிகலாட்டா என்று பஸ் ஸ்ட்ரைக் ஆகிவிட, ரயிலிலும் இடமே இல்லை. முடிவில்
அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண் ட்டில் ஏறி புளிமூட்டையாய் அடைந்து பயணம் செய்யவேண்டியதாகிவிட்டது.

பிளாட்பாரத்திற்கு முன்னாடியே வந்து துண்டு போட்டு இடம்பிடித்த கூட்டம், நின்றுகொண்டிருந்த
என்மீது இரக்கம் காட்ட மறுத்தது. ஒருமணிநேரத்திற்குமேல் நிற்க முடியவில்லை...ஆகவே கொஞ்சம் இடம் உக்காரக்கொடுங்க எனக்கெஞ்சியதும் அப்படீஇப்படி யோசித்து ஒருவயதுக்குழந்தை ஒண்டிக்
கொண்டு உட்காரலாம் போலிருந்த இடத்தை தாராளமாய் எனக்கு ஒதுக்கினர்.

அப்போதுகையில் அன்றைய ஆங்கிலச்செய்தி பத்திரிகையுடன் ஏறிய ஒருவரை நான் அதிசியமாய் ஏறிட்டேன்.உடையும் உருவமும் அவரைப்படித்தவராக அடையாளம் காட்டவில்லை..அருகில் யாருடனோ பேசும்போது அது உறுதியாகிப்போனது..ஆனாலும் அந்த ஹிண்டு பேப்பர் என்மனதைக்குண்டுக்கல்லாய் போட்டு உருட்டிக்கொண்டிருந்தது.

'பாக்லாம் பிரிச்சிப்படிக்கறப்போ தெரிஞ்சிட்டுப்போகுது உண்மை'

அப்போது சட்டென அந்தமனிதர் பேப்பரைப்பிரித்துவிட்டார்,'ச்சே..யாரையும் வெளித்தோற்றத்தை வச்சி எடைபோடவேக்கூடாதுப்பா' என் உள்மனசு எச்சரித்தது.

பிரித்தபேப்பரை நான் பார்த்துக்கொண்டே இருக்கையில் அவர் அதை கீழே பரத்தி அதன்மீது ஜம்மென உட்கார்ந்துவிட்டு,"ரயிலுபொட்டில எப்பவும் சுத்தமா இருக்காதில்ல.. அதான் தோட்டவேலை செய்றவூட்ல கேட்டு ஒரு பேப்பரு வாங்கியாந்தேன்"என்று விளக்கம் வேறு
அளிக்கவும் என்முகம் போனபோக்கை என்ன சொல்வேன்?:)

அண்மையில் சென்ற பகல்நேர விரைவு ரயிலில் என் அருகில் அமர்ந்திருந்த ஒரு அறுபதுவயது
மதிக்கத்தக்க மாமி என்னைக்கண்டதும் பொன்னகையிட்டார்..(ஆமா ஒருபல்மட்டும் தங்கம் அவங்களுக்கு):)

எங்க இருக்கீங்க என்ன செய்றீங்க எத்தனைகுழந்தைங்க என்றுபொதுவாகப்பெண்கள் பேசிக்கொள்ளும் பேச்சில் ஆரம்பித்து பெங்களூரில் இந்தவருஷம் குளிர் அதிகம் பிசிபேளாபாத் நல்லாசெய்யவருமா(கவனிக்க மைபா அல்ல:)) சிக்பேட்டில் சேலைகள் மலிவு எம்டிஆரில் ரவாஇட்லி அமிர்தம் என்பதுப்போல பேச்சு சென்றது.ஒருதடவைகூட என்னோடுவரும் அறிமுகமில்லாத பெண்கள்தாங்கள் படித்த புத்தகங்கள்பற்றி பேசுவதே இல்லை.அல்லது அவர்களை நான் சந்திப்பது இல்லை.

பிறகு மாமியின் செல்போன் மச்சான் பேரு மதுரை என்றது. மாமி சின்னசங்கடத்துடன்,"கர்னாடிக் பாட்டுதான் முத தடவ வச்சிருந்தேன் மதுரை என் பொறந்தவீடு அதான்..ஹிஹி..இப்போ இது..." என்று அசடுவழிந்துவிட்டு ,"ஹலோ..யாரு பத்மஜாவா? என்று எட்டூருக்குக்கேட்பது போல பேச ஆரம்பித்தார்.அந்த கம்பார்ட்மெண்ட்டில் மொத்தம் 75 இருக்கைகள்.அனைவருக்கும் கேட்கட்டும் என்ற
நல்லெண்ணம்போலும்!

"பத்மஜா! நான் மெட்ராஸ் போறேன்டீ! லால்பாக் வண்டிலதான்... என்னது மாமாவா? அவர் என்கூட வரல தனியாத்தான் போறேன் அவர் தன் அக்காவப்பாக்க ஈரோடு போயிட்டார். வீட்டைப்பூட்டி நகை வெள்ளிப்பாத்திரம் எல்லாம் மேல ஜாக்ரதயா பரண்ல வச்சிட்டேன்...
எனக்கு பாங்க் சேஃப்டிலாக்கர்ல்லாம் நம்பிக்கை இல்லைடிம்மா..இதோ இப்போ சடனா உறவுக்காரங்க கல்யாணத்துக்குப் புறப்படறேன்.
.வீட்ல இருக்கறதால முப்பதுபவுன் நகை எடுத்துப்போட்டுட்டு வரமுடியற்து. பணம்கூட காஷா வீட்லதான் வச்சிப்போம்..லட்ச
ரூபாய்னாலும் எனக்கும் மாமாக்கும் பாங்க் போகவே பிடிக்காது.வட்டிபோயுடும்கிறயா? போனாபோகட்டும்.உனக்குத்தான் தெரியுமே என் பசங்க 2பேரும் அமெரிக்கால் இருக்காங்கன்னு...மாசம் ஒவ்வொருத்தனும் ஆயிரம் டாலர் அனுப்பிட்றான்...மாமாக்கும் பென்ஷன் மாசம் பத்தாயிரம் ரூபா...ஒண்ணும் பணப்பிரச்சினை இல்லை..இப்போ கூட சரவணா ஸ்டோ ர்ஸ்போயி நவரத்தின நெக்லஸ் வாங்கறதா ப்ளான் இருக்கு...ஒருதரம் ஒரேதரம்ன்னு சிநேகா வேற அடிக்கடி டிவில வந்து சொல்றாளே அதான்..அப்றோம் வேற விஷயமில்ல..ரயில்பொது இடம் பார்த்தியா அதிகம்பேசக்கூடாதே அதான்... வச்சிடட்டுமா?"

மாமி செல்போனை ஆஃப் செய்துவிட்டு கொண்டுவந்த கட்டுசாததைப்பிரித்தார்.

இவங்களைப்போல பலர் பொது இடத்துல போன்ல எப்படி எதை பேசறதுன்னு தெரியாமத்தான் ஆபத்துல மாட்டிக்கிறாங்க...
பிரயாணத்தின்போது சிலபெண்கள் நகைக்கடையாய் வருவதும் சரி இல்லை..

திருடர்களை ரத்தினக்கம்பளம் போட்டு வரவேற்பது பெண்கள் அணியும் கண்ணைக்கவரும் அதிகப்படி
நகைகள்தான்.

எனக்குத் தெரிஞ்ச ஒரு கிராமத்துப்பெண்மணி
நல்ல நாளிலேயே ஃபிஃப்டிகேஜி(தங்கநகை அணியும்) தாஜ்மஹால்.அன்றைக்கு ஒருகல்யாணத்திற்காக இன்னும் நிறைய அணிந்து வெளியூருக்கு காரில் பயணம் சென்றார்..பாதிவழியில் கார் விபத்துக்குள்ளாகி
பின் கதவு உடைந்துதெறித்துவிழ அந்த பெண்மணி எங்கோ தூக்கி எறியப்பட்டு மரணமடைந்துவிட்டார்.

தகவல் கிடைத்து அனைவரும் ஓடினோம்...கார் ட்ரைவர் சடலம் காருக்குள்ளேயே இருந்தது.

அந்தப்பெண்மணியுடையதை சிரமப்பட்டு தேடி பலமணிநேரங்களுக்குப் பிறகு மீட்டுக் கொண்டுவந்தார்கள்
"ஐயோஓஓஓஒ" என்று பெரிதாக வீறிட்டாள் எங்களோடுவந்த ஒரு பெண்.
துக்கம்தாங்கவில்லைபோலும் என நான் நினைக்கும்போதே அவள்" அடப்பாவிங்களா...பெரியம்மா உடம்புல
பொட்டுத்தங்கம் வைக்காம அத்தினை நகையும் யாரோ சுருட்டிக்கிட்டுபோயிட்டாங்களே..எழுபத்திஅஞ்சுபவுனாச்சே..எழுபத்தி அஞ்சி பவுன்ல சொக்கத்தங்கமாச்சே.. ஐயோ எல்லாம் போயிடிச்சே" என்று அழுதபோது எரிச்சல்கலந்த சிரிப்பாய் வந்தது!
*************************************************************************
மேலும் படிக்க... "பயணங்கள் சலிப்பதில்லை!"

அசை(kavithai)

நிலவைபார்க்கும் போதெல்லாம் உன்
நினைவுவந்து முட்டுகிறது
நிலாபார்த்து நீ
சோறுண்ண
வாய்திறந்ததை
மனம்கிடந்து
அசைபோடுகிறது

பண்டிகை நாட்களில்
பள்ளிவிட்டு
பரபரப்பாய் வீடுவந்ததும்
பலகாரம் தின்று
காரம்தாங்காமல் தவித்தபோது
வெல்லத்துண்டுஒன்றை
சட்டென் உன்வாயில்
மெல்ல அழுத்தியதை
மனம்கிடந்து
அசைபோடுகிறது

அப்பாவிற்குத்தெரியாமல்
பின்கட்டுவழியே நடுநிசியில்
நண்பனுடன் படம்பார்த்துவீடுவந்தவனை
தப்பாமல் காப்பாற்றியதற்கு
காத்தான் சாமிக்கு படையல்
நேர்ந்துகொண்டதை
மனம்கிடந்து
அசைபோடுகிறது.

காதலித்த பெண்ணையே
கரம்பிடித்து
காசுக்காக காததூரம்
நகர்ந்துபோய்விட்டது
நீமட்டுமல்ல மகனே
என்னைப்பற்றிய
உன் நினைவுகளும் என்பதை
மனம்கிடந்து
அசைபோடுகிறது

இப்போதெல்லாம்
அசைபோடுவது
கொட்டிலில் மாடுகள் மட்டுமல்ல
தனிமைச்சிறையிலிருக்கும்
தாய்மனதும்தான்.
மேலும் படிக்க... "அசை(kavithai)"

காணாமல்போன களிமனது

காணாமல் போன களி மனது
ஷைலஜா

கரியடுப்பில் கொதிக்கும்
கற்சட்டிக்குழம்பின் வாசனையும்
சாணமிட்டு மெழுகிய தரையில்
பளிச்சிடும் கோலமும்
அணில் விளையாடித் திரிந்த
முற்றமும்
அகல்விளக்கு எரியும் பிறைகளும்
ஆடிப் பிடித்து விளையாடும் தூண்களும்
கொண்ட அழகான கூடமும்
நிலா பதுங்கும் கிணறும்
வந்தவர்கள் அமர்ந்து
வம்புபேசும் திண்ணையும்
கொலுசொலிக்குப் போட்டியாய்
கிணுகிணுக்கும் ஊஞ்சலொலியும்
சிட்டுக்குருவிகள் கூடுகட்ட வாகாய்
இடம்கொடுக்கும் உத்திரமும்
அவ்வப்போது ஓட்டப்பந்தயம் நடத்தும்
எலிகள் நிறைந்த பரணும்
மரமும் செடியுமாய்
மணக்கும் பூக்கள் கொண்ட
தோட்டமும்
அசைபோட்டபடியே
சதா அமர்ந்திருக்கும்
மாடுகள் நிறைந்த கொட்டிலும்
என்றான கிராமத்து வீட்டை
நகரத்து நாகரீகபாணியில்
மாற்ற வேண்டுமென
பெரியண்ணன்
பிடிவாதமாய் இடித்துக்
கட்டி முடித்ததைப்
பார்க்க நேர்ந்தபோது
காணாமல் போனவைகள்
பட்டியலில்
மேற்கூறியவை மட்டுமல்ல
களியாட்டம் போட்ட
மனதும்தான்
மேலும் படிக்க... "காணாமல்போன களிமனது"

அப்பாவைப்போல.....

அறுந்த வார் செருப்புடனேயே
அவசர அவசரமாய்
அலுவலகம் செல்வார்
எங்கள் ஐவருக்கும்
அப்பாவே தாயுமானவர்.

அழுத்தும் குடும்பச்சுமைகளிலும்
அகலாத புன்னகை.
எளியவர்; நல்லவர்; நாணயமானவர்.
அதனாலேயே கிடைத்த பட்டம்
பிழைக்கத்தெரியாதவர்.

வார இறுதி நாட்களில்
சைக்கிள்பெடல் அழுத்தி
மைல்கணக்கில் பாதைகடந்து
சில்லரைவியாபரம் செய்து
பைக்குள் சிறுபணம்
கொண்டுவருவார்.

அக்காவின் கல்யாணக்கடனை
அல்லல்பட்டு அடைத்து முடித்தவருக்கு
அறுபதுக்குள் வந்தது மாரடைப்பு.

அப்பா போனதும்
அதற்காகவே காத்திருந்ததுபோல்
அண்ணன்
அரசியல்வாதி ஆனான்.

சைக்கிள் போய்
கார் வந்தது.
ஓடு வீடுபோய்
உயர்ந்த வெளிப்புறச்சுவர்கள் கொண்ட
பங்களா வந்தது

சில்லறையின் சத்தங்கள் மறைந்து
கல்லறை மௌனமாய்
காகித நோட்டுகள் பேசின.


ஒவ்வொரு நாளும்
புதுப்புது மனிதர்களின் வரவு.

ஆனால்
அப்பாவைபோல
எவருமே வரவில்லை.
மேலும் படிக்க... "அப்பாவைப்போல....."

பெருசு (கவிதை)

தவித்த வாய்க்கு நெஞ்சு நனைக்க
தண்ணீர் கொடுத்ததில்லை
தற்போது தாராளக் குளியலில்
உடம்பே நனைகிறது.

பொங்கலுக்கே கிட்டாத புதுத்துணிப்
போர்த்திக்கிடக்கிறது உடல்முழுதும்
கனவில்மட்டுமே அனுபவித்த சந்தனமும் சவ்வாதும்
கையிலும் காலிலும் மணக்கிறது.

புத்தகம்படிக்க சிறுவிளக்கு தந்ததில்லை
புதுக்குத்துவிளக்கு இன்று பூரித்து எரிகிறது.

அதட்டி விரட்டி ஒடுக்கிய குரல்கள் எல்லாம்
அழுகை பொங்க அல்றிட
அமைதியாய் கண்மூடி
அப்படியே கிடக்கிறது,

வீட்டுப்பெருசு என்று நேற்றுவரை
அழைக்கப்பட்ட
இன்றைய சவம்.
மேலும் படிக்க... "பெருசு (கவிதை)"

Monday, January 07, 2008

பாசாங்குகள்.

அன்றாடம் அணிந்து கொள்கிறோம்
பாசாங்குப் புன்னகைகளை.
அறிமுகமாகும் முதல்
மனிதருக்கு
காலைவணக்கம் சொல்வதிலிருந்து
ஆரம்பமாகும் பாசாங்குகள்
அலுவலகப்பணி முடித்து
ஆயாசமுடன் வீடு
திரும்பும்வரை
ஆக்கிரமித்துக்கொள்ளுகிறது.

அனைவரிடமும்
தன்னை மறைத்துக்கொண்டு
அழுத்தமாய்
அப்பிக்கொண்டிருக்கும் பாசாங்குகள்,
வீட்டிற்குள் நுழைந்ததும்
தெறித்துவிடுகிறது,
தன் உயிரற்ற
புன்னகைகளை.
மேலும் படிக்க... "பாசாங்குகள்."

எங்கும் நிறைந்தவன்!(கவிதை)

சிறப்புவழிக்கு சீட்டுவாங்கி
சீக்கிரமாக கடந்து செல்ல
பறக்கும் ஒருகூட்டம்

(முக்கிய பிரமுகர் என்றால்
முதுகிற்குப்பின் மூச்சுவிட யாருமின்றி
முன்னே செல்ல அனுமதி உண்டு.)

முட்டிமோதி க்யூவில் நின்று
எட்டிப்பார்த்து எம்பிக்குதித்து
கிட்டும்தர்மதரிசனத்திற்கு
ஓடும் ஒருகூட்டம்.

எங்கும் நிறைந்த இறைவனைக்காண
எத்தனை வழிகள் மனிதனுக்கு?


.
மேலும் படிக்க... "எங்கும் நிறைந்தவன்!(கவிதை)"

மனசு..(கவிதை)

இறுக்கிக்கட்டிச் சரமாய்
தொடுத்தபின்னும்
மணம்பரப்பும் மலர்போல

அடக்கிப்பின்னலிட்டும்
அடங்கமறுக்கும்
தலைமுடிபோல

குடம்குடமாய் நீர்விட்டும்
மழையை விரும்பும்
மலர்ச்செடிபோல

எத்தனையோ மனிதர்கள்
அருகில் இருந்தும்
தொலைதூரத்திலிருக்கும்
உன்னையே எதிர்பார்க்கும்,
மனசு.
மேலும் படிக்க... "மனசு..(கவிதை)"

ஆண்சிலை

அன்பினை அதிகம் தின்று
அபரிமிதமாய் வளர்ந்திருக்கிறது
நம் தோழமை.

காதலாக மாறியதைக்
கண்களால் சொல்ல
பெண்களால் இயலும்
பின் விளைவுகளை
எண்ணிப்பார்க்காத
அவசரமும் ஆர்வமும்
உன் பார்வைகளில்
ததும்பிவழிகின்றன.

சுமைகளை தோள் ஏற்றிக்கொண்டதில்
அமைதியாய்
இருக்கமுயன்றும்
அவ்வப்போது
வெறுக்க நினைப்பதாய் நடித்து
இறுகிக் கிடக்கும் என்னை
இனியவனாய் வடிவமைக்க
உன் புன்னகை உளியுடன்
வந்து நிற்கிறாய்.

தெறித்துவிழும் துணுக்குகளில் தெரியும்
கண்ணீர்ச்சொட்டுகளும் குருதித்துளிகளும்
உன்னை அதிரவைக்கும்.

கல்தான் ஆண்
சட்டென் கலங்கிநிற்கவும்
அனுமதியாத உலகம்.

ஆசைகளை அசைபோட்டு பார்க்கமட்டுமே
அரும்பொருள்இல்லாத
அன்புமனங்களுக்கு சாத்தியம்.

உன் செதுக்கல் முடிவடைவதற்குள்
என் சுமைகள் குறையலாம்
கனவுகள் நனவாகலாம்.
சிலையின் கண்களை
கடைசியில் தான்
திறப்பார்களாமே?
மேலும் படிக்க... "ஆண்சிலை"

Friday, January 04, 2008

story about four people!

டைரக்டர் விசு பாணில ஒரு ஆங்கிலக்கதை!

There is a story about Four People!
Every body, Somebody,Any body, Nobody!
There was an important job to be done and Everybody was asked to do it. Every body was sure Smebody would do it. Anybody could have done it. but Nobody did it. Somebody got angry about that because it was Everybody's job. Everybody thought Any body could do it. but No body realised that. Everybody wouldn't do it. It endedup that Everybody blamed Somebody when actually Nobody asked Anybody!
மேலும் படிக்க... "story about four people!"

Thursday, January 03, 2008

ஆஹா மெல்ல நட மெல்ல நட!

தலைவலி பல்வலி சைனஸ் தொல்லை டைபாயிடு மலேரியா காலரா எல்லாமே நல்ல நோய்கள்!

ஞானசம்பந்தர் தன் உள்ளத்தில் சிவபெருமான் புகுந்தபோது எல்லாக்கோள்களும் சனி ராகுகேது உட்பட 'நல்ல நல்ல' என்றுதான் பாடி இருக்கிறார்!

அப்படித்தான் போன வருடம் இந்தியா முழுவதும் பரவலாய் ஆக்கிரமித்திருந்தது, சிக்குன்குனியா chickungunya . என்ற நோய்.

அது உடலில் புகுந்தபோது அனைத்து நோய்களுமே
நல்லவை ஆகிவிட்டன!

ஹிட்லராய் பின்லேடனாய் அனைவரையும் பயமுறுத்திய நோய்தான் ..சிக்குன்குனியா..பலரை விழுங்கிக்கொண்டதும் கூட.

அன்று எனக்கு ஜுரம்..கை கால் வலி..முக்கியமாய் சிக்குன்குனியாவின் அறிகுறிகளான கால்வலி அதனால் எப்போதும் உப்பு சத்தியாக்ரக காந்திஜீயாய் வேக நடைபோடும் எனக்கு நடை தளர்ந்துபோனது. மெல்ல மெல்ல அடியெடுத்துவைத்துக்கொண்டிருந்தேன்.

." சிக்கன்குனியாவா அது உனக்கெப்படி வந்தது? நீதான் வெஜிடேரியன் ஆச்சே?" எதிர்வீட்டு மாமி அறியாமையால் கேட்டாலும் அதற்கு சிரிக்கக்கூட முடியாமல் சோர்வாக இருந்தது.

"தெரியல மாமி...சிக்குன்குனியாவின் அறிகுறிகள் எல்லாம் இருக்கு..முதல்ல ஜுரம் அப்றோம்.ரண்டுநாளா நடக்கவே முடில்ல.."

"நடைதளர்ந்தது நாணமல்லவா?" என்று பாடிக்கொண்டே வந்து கடுப்பேற்றினாள் என் தோழி.

மாமி ஆர்வமாய்,"நல்ல கஷாயம் சொல்றேன் செய்துகுடி... நிலவேம்புன்னு பலசரக்குக்கடைல கிடைக்கும் அதை வாங்கி கருப்பட்டி சேர்த்து கஷாயம் போட்டு மூணு வேளைகுடிச்சிப்பாரு.அப்புறம் எலும்பெல்லாம்
ஸ்ட்ராங்க் ஆகி கிடுகிடுன்னு நடக்க ஆரம்பிச்சிடுவே!" என்றார்.

அந்த நிலவேம்புவேரை கஷாயம் வைத்துக்குடித்ததில் வாய் கசந்துபோய்விட்டது..ஒருடன்பாகற்காய் சூப் குடித்த கசப்பு... அடுத்து அதிக சக்கரைபோட்டுக்குடித்த பாலை குடித்தபோது,"பாலும் கசந்ததடி சகியே" என்று பாடவேண்டியதாயிற்று!!

"ஹோமியோபதி ட்ரைசெய்ங்களேன்"

"ஆலோபதிதான் இதுக்கெல்லாம் பெட்டர்!"

ஆளாளுக்கு ஆலோசனை சொல்ல என் 'பதி' சற்றே கடுப்பாகி,"முதல்ல இது சிக்குன்குனியாதானான்னு டெஸ்ட் பண்ணனும்....அந்த சிம்ப்டம்ஸ் வச்சி நாமே அதுதான்னு நினச்சிடக்கூடாது" என்றார் ..

"ஆரஞ்சு ஜூஸ்தான் இதுக்கு மருந்து..."

"ஐய்யயோ ஆரஞ்சு பக்கமே போகக்கூடாது".

"நிறைய பேரிச்சம்பழம் சாப்பிடணும்"

"கால்ஷியம் மாத்திரை போட்டுக்கோ..இல்லேன்னா எலும்பு பலம் இழந்து நடைப்பிணம் ஆகிடுவே"

அரைகுறை வைத்தியர்கள் பலரின் அட்வைஸ் என்னை அதிரவைத்தன.

கதைகவிதை எழுதும்போது சண்டித்தனம் பண்ணும் கற்பனைக்குதிரை இந்தமாதிரி விஷயங்களின் போது பஞ்சகல்யாணியாய்ப் பறந்து , என்னை கையில் கோலோடு மலை உச்சியில் நடக்கவைத்தன. பி.டி. உஷாக்களாய் ஷைனிஅப்ரஹம்களாய் என்னோடுவந்தவர்கள் ஓடிக்கொண்டிருக்க நான் மட்டும் அன்னநடை--இல்லைஇல்லை--- சின்ன நடைகூட போடமுடியாமல்....அப்போ பார்த்து எஃப் எம்மில் இனிய பழைய பாடல்கள் நிகழ்ச்சியீல் ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் பாட்டு ஒலிபரப்பாகி,"ஐயோ என்னைக்காப்பாத்த யாருமே இல்லையா? என்று கௌரவம் படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் வக்கில்களைப்பார்த்து கத்துவாரே அதுமாதிரி நான் கூச்சலிட.......

"முதல்ல டாகடரைப்போய்ப்பார்க்கலாம்" என்று பதி கட்டளையிட பக்தியோடு அவரைப்பின் தொடர்ந்தேன்..

"சிக்குன்குனியாவால் பலபேர் நடக்க சிரமப்பட்டாங்க..பழைய நடை திரும்ப ஆறுமாசம்கூட ஆகுமாம்....உங்களைப்பார்த்தா அவ்ளோ மோசமா தெரியல..." குடும்ப நண்பர் ஆறுதலாய் கூறினார் க்ளினிக் வாசலில். ஆர்வமாய் நானும்," அப்படியா?' என்றேன்.

"ஆமா கண்டிப்பா அஞ்சரை மாசத்துல நடக்க ஆரம்பிச்சிடுவீங்க!" என்றவரை நான் மட்டும் கௌதமமுனிவராயிருந்தால் சாபம் கொடுத்து கல் ஆக்கி இருப்பேன்!!!!

பலிபீடத்திற்குப்போவதுபோல அல்லது தூக்கு மேடைக்கு நடக்கும் கைதியைப்போல தயங்கித்தயங்கி டாக்டரின் அறைக்குள் நுழைந்தேன்...

கன்னட எழுத்தாளரும் பிரபல வைத்தியருமான திருமதி ஷோபாநாகராஜ் என்னை பரிசோதித்துவிட்டு,"சிக்குன் குனியா உங்களுக்கு இல்லையே..இது வேற வைரஸ் ஜுரம்..சரியாயீடும்" என்றார்.

"எல்லாரும் சிக்குன்குனியா மாதிரி இருக்குன்னு சொன்னாங்க டாக்டர்"

"ஒருவேளை உங்களுக்கு வந்திருக்கறது ச்சிக்கு(கன்னடத்தில் ச்சிக்கு என்றால் சின்ன) சிக்குன்குனியாவாக இருக்குமோ?"
என்று டாக்டர் ஜோக் அடித்தபோது வாய்விட்டு சிரித்ததிலோ என்னவோ அடுத்த இரண்டே நாட்களில் வாராதுவந்த அந்த நோய் விடைபெற்று போய்விட, என் நடை திரும்பிவிட்டது!!!!








"
மேலும் படிக்க... "ஆஹா மெல்ல நட மெல்ல நட!"

Tuesday, January 01, 2008

வருக 2008!(கவிதை)

வாடையும் பனியும் சூழ்ந்த
மார்கழித்திங்கள் நாளில்
நாடெல்லாம் புதுமை செய்ய
காடெல்லாம் விளைந்து செழிக்க
தேடிவந்ததிங்கு தேன்சுவைப் புத்தாண்டு!
வீடெல்லாம் நிறைந்த தூசி
ஓடிடப் பெருக்கித்தள்ளி
பாடி நாம் பரவசமாய்
ஆடிக் கொண்டாடியே வரவேற்கும் புத்தாண்டு!!

செந்தமிழ் நாட்டிற்கென்றே சிறப்புற அமைந்தபொங்கல்
வந்ததும் விளைவுபொங்கத் தருவதும் புத்தாண்டு!

இத்தாரணியில் நாம் என்றும் இனிதே வாழ
புத்தாண்டில் உறுதிமொழி இப்படியே எடுப்போம்!

"அறிவெனும் நீரைப்பாய்ச்சி
அன்பெனும் பயிரை நடுவோம்
நெறி எனும் வேலி போட்டு
நெஞ்செனும் நன்னிலத்தில்
வெறி என வளரப் பார்க்கும்
வேற்றுமை களைந்திட்டு
அறுவடை நாம் செய்வதெல்லாம்
அளவிலா மகிழ்ச்சி தானே?"


(கவிதை முத்தமிழ் போட்டிக்கு சமர்ப்பணம்!)
மேலும் படிக்க... "வருக 2008!(கவிதை)"

புத்தாண்டு சபதம்!

பாஞ்சாலிசபதம் சிவகாமியின்சபதம் மாதிரி (வேற இன்னும் சபதங்கள் இருக்கும்..கண்ணபிரான் ரவி ஹெல்ப் ப்ளீஸ்!!) இது புத்தாண்டுசபதம்!

இனி வருடம்முழுக்க எப்படில்லாம் இருக்கணும்னு முன்கூட்டியே தீர்மானம்போட்டுட்டு அப்படியே இருக்கபோறேன்
பாருங்கன்னு சபதம் எடுப்பதுதான் இந்தபுத்தாண்டுசபதம்!

சபதம் நிறைவேறுகிறவரை பாஞ்சாலிகூந்தலை முடியவேஇல்லையாம்..!!இப்போ சபதம்லாம் எடுக்கமாயே பெண்கள் பலர் அப்படித்தான் இருக்கோம்:!! சரி ...இப்போ நான் என சொல்லவரேன்னா நாலுமாசத்துக்குமேல பூட்டிவச்சிருந்த என் வலைமனையை இனிமே அப்படி விடறதாஇல்ல!!

பெருக்கி நல்லா துடச்சி மார்கழித் தி஢ங்கள் அல்லவா, அதனால் மதிகொஞ்சும் வேளைபார்த்து கோலமிட்டு வீட்ல தூசிதட்டி
விளக்஧த்த்திட்டேன்,,,


இனிமே வாரம் ஒருபதிவுபோடறதாகவும் இருக்கேன்,,, யாருங்க அங்க துகா துகா ன்னு ஓட்றது?:)

புத்தாண்டை வரவேற்கும் கவிதை அடுத்து வர, இப்போது வலைமனைபுகுவிழா ஆரம்பமாகிறது ஜோரா கைதட்டுங்க எல்லாரும்!

அதுக்கு முன்னாடி புத்தாண்டு தின சபதம் உங்களுக்கும் இருக்குமே.. இனிமே விடாம டைரி எழுதறது ,இனிமே தினம் வாக் போவது,
இனிமே சக்கரைஇல்லாமல் காஃபி, இனிமே ஃபிகர்பக்கம் தலைவைப்பதில்லை இனிமேமெகா சீரியல் பாக்றதில்ல இப்படி ஏதாவது இருக்குமே?

கொஞ்சம் விரிவா எழுதுங்க ப்ளீஸ்,,.... அப்படியே நீங்க எழுத விரும்பும் 4பேரையும் அழைச்சிடுங்க.என்ன?

சபதம் எடுத்தவங்களில் நான் அழைக்கு நாலுபேர்..நாலுபேருக்கு(ம்) முன்கூட்டியே நன்றி!!

மஞ்சூர்ராசா
கண்ணபிரான் சங்கர்
சுவாதி
ஆசிஃப்மீரான்

வாங்க வந்து கலக்குங்க!!
பிரியங்களுடன்
ஷைலஜா
மேலும் படிக்க... "புத்தாண்டு சபதம்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.