நினைவுவந்து முட்டுகிறது
நிலாபார்த்து நீ
சோறுண்ண
வாய்திறந்ததை
மனம்கிடந்து
அசைபோடுகிறது
பண்டிகை நாட்களில்
பள்ளிவிட்டு
பரபரப்பாய் வீடுவந்ததும்
பலகாரம் தின்று
காரம்தாங்காமல் தவித்தபோது
வெல்லத்துண்டுஒன்றை
சட்டென் உன்வாயில்
மெல்ல அழுத்தியதை
மனம்கிடந்து
அசைபோடுகிறது
அப்பாவிற்குத்தெரியாமல்
பின்கட்டுவழியே நடுநிசியில்
நண்பனுடன் படம்பார்த்துவீடுவந்தவனை
தப்பாமல் காப்பாற்றியதற்கு
காத்தான் சாமிக்கு படையல்
நேர்ந்துகொண்டதை
மனம்கிடந்து
அசைபோடுகிறது.
காதலித்த பெண்ணையே
கரம்பிடித்து
காசுக்காக காததூரம்
நகர்ந்துபோய்விட்டது
நீமட்டுமல்ல மகனே
என்னைப்பற்றிய
உன் நினைவுகளும் என்பதை
மனம்கிடந்து
அசைபோடுகிறது
இப்போதெல்லாம்
அசைபோடுவது
கொட்டிலில் மாடுகள் மட்டுமல்ல
தனிமைச்சிறையிலிருக்கும்
தாய்மனதும்தான்.
Tweet | ||||
பெத்தமனம் பித்து என்பது உண்மைதானே
ReplyDelete//காசுக்காக காததூரம்
ReplyDeleteநகர்ந்துபோய்விட்டது
நீமட்டுமல்ல மகனே
என்னைப்பற்றிய
உன் நினைவுகளும்//
துளைக்கும் வரிகள் ஷைலஜா!
தவறு புரிபவர் எல்லார்க்கும் தவறு புரிகிறோம் என்று தெரிந்தாலும் தெளிவதில்லை! :-(
இந்தக் கவிதையை அசை போடுவதா இல்லை தம்மைத் தாமே எடை போடுவதா? - இந்தக் கேள்வியை அசை போடுகிறேன்!
திருவிளையாடல் படத்தில் முருகனுக்கு KBS பாடுவது நினைவுக்கு வருது!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை!
இதோட நான் இன்னொன்னு சேத்துக்கறேன்!
அதனினும் கொடிது முதுமையில் தனிமை!