ஷைலஜா
கரியடுப்பில் கொதிக்கும்
கற்சட்டிக்குழம்பின் வாசனையும்
சாணமிட்டு மெழுகிய தரையில்
பளிச்சிடும் கோலமும்
அணில் விளையாடித் திரிந்த
முற்றமும்
அகல்விளக்கு எரியும் பிறைகளும்
ஆடிப் பிடித்து விளையாடும் தூண்களும்
கொண்ட அழகான கூடமும்
நிலா பதுங்கும் கிணறும்
வந்தவர்கள் அமர்ந்து
வம்புபேசும் திண்ணையும்
கொலுசொலிக்குப் போட்டியாய்
கிணுகிணுக்கும் ஊஞ்சலொலியும்
சிட்டுக்குருவிகள் கூடுகட்ட வாகாய்
இடம்கொடுக்கும் உத்திரமும்
அவ்வப்போது ஓட்டப்பந்தயம் நடத்தும்
எலிகள் நிறைந்த பரணும்
மரமும் செடியுமாய்
மணக்கும் பூக்கள் கொண்ட
தோட்டமும்
அசைபோட்டபடியே
சதா அமர்ந்திருக்கும்
மாடுகள் நிறைந்த கொட்டிலும்
என்றான கிராமத்து வீட்டை
நகரத்து நாகரீகபாணியில்
மாற்ற வேண்டுமென
பெரியண்ணன்
பிடிவாதமாய் இடித்துக்
கட்டி முடித்ததைப்
பார்க்க நேர்ந்தபோது
காணாமல் போனவைகள்
பட்டியலில்
மேற்கூறியவை மட்டுமல்ல
களியாட்டம் போட்ட
மனதும்தான்
Tweet | ||||
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!