Social Icons

Pages

Sunday, January 12, 2014

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!




கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்!
அறிவு "ஒன்றும்" இல்லாத ஆய்க் குலத்து, உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்!
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா, உந்தன்னோடு,

உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!
இறைவா நீ தாராய் பறை! ஏல்-ஓர் எம் பாவாய்



****************************************************************


”அப்பா! கூடி இருந்து குளிரவேண்டும் என்றோம் கண்ணனிடம் உடனே இசைந்தான் அந்த இனியவன்..”


கோதையின் குரல்குதூகலம்  பெரியாழ்வாரை  பெருமைப்படவைத்தது. மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம்  என்று கூறி தூயோமாய்ச்சென்று தூமலர் தூவி வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்த  மகளின் மலர்ந்தமனத்தை  மாலவன் கண்டு கொண்டதில் வியப்பென்ன  என்று எண்ணினார்.


எல்லாவற்றையும் தியாகம் செய்தால் கடவுள் தரிசனம் கிடைக்கும் என்பது நிதர்சனம்
அற்றது பற்றெனில் உற்றது வீடு என்பது நம்மாழ்வார் வாக்கு..


“நல்லது கோதை! அவனுக்கும்  நமக்குமான  உறவுக்கு நாம் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.அதற்கு அவனுக்கு நீ என்றென்றும் கடமைப்பட்டிருக்கவேண்டும்.”


நிச்சயம் அப்பா.... இன்று கண்ணனிடம் அதை உறுதிசெய்துவிட்டுவருகிறேன்..


கோதை  தோழிகளூடன்  திருமாளிகைக்குவந்தாள்.


கண்ணன் அவர்களை வரவேற்றுவிட்டு,” நேற்றே நான் உங்கள் பிரார்த்தனையைக்கேட்டு அளிக்க சித்தமாக இருப்பதை தெரிவித்தேன்..ஆமாம்..நான் அவ்வாறு இசைவதற்கு நீங்கள் செய்த உபாயம் தான் என்ன?”   என்று கேட்டான்.


“எங்களிடம் உபாயம்  எதுவும்இல்லை.. நாங்கள்  மாடுகள்பின்னே சென்று காட்டில் சேர்ந்து உண்டு திரிவோம்..  அறிவு இல்லாத ஆய்ரகுலத்தில் பிறந்துள்ள உன்னை பிறவி பெறும் புண்ணியம் உடையோம்... ‘


நோயற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்’ என்கிறார் நம்மாழ்வாரும்..
’நலந்தான் ஒன்றுமிலேன் நல்லதோர் அறம்  செய்துமெலேன்’ என்கிறார் கலியனும்.


ஆயர்குலத்தில்  பிறந்த எங்களுக்கு கர்மயோகம் ஞானயோகம் பண்ணியபிறகு பக்தியோகம்  பண்ணி மோட்சமடைய என்ன தகுதி இருக்கிறது? ஆனாலும் கறவைகள் ( ஆசாரியர்கள்(குருக்கள்) அவைகள் பின் சென்று கானம்(ஞானக்காடு) அடைந்து  சேர்ந்து உண்போம்..  மாடுகள் கொடுப்பதை (அவர்கள்  உபதேசிப்பதை மனதில் உணவாக்கிக்கொள்வோம்..)..இந்தக்குலத்தில்  உன்னைப்பிறவியிலேயே தலைவனாகப்பெற்ற புண்ணீயத்தை அடைந்துள்ளோம்.. எங்களிடம் அறிவு இல்லாததை தெரிந்தே   நீ உபாயம் என்னவென்று கேட்கலாமா?”


“அப்படியானால்  இந்தக்குலத்தில் பிறந்த நான் குறை உள்ளவன் என்கிறீர்களோ?’ கிருஷ்ணன் விளையாடத்தொடங்கினான்  வழக்கம்போல!


இதைக்கேட்டதும் கோதை துடித்தாள் பிறகு சொன்னாள்.


“கிருஷ்ணா   என்ன  வார்த்தை சொல்லிவிட்டாய்!   வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றியது ராமாவதாரத்தில் ஆயர்குலத்திற்கு நீ அணிவிளக்கு! ஞான ஒளிச்சுடரே  வேதஒளீயே  உன்னைக்குறை உள்ளவன் என்போமா  குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!  அகலகில்லேன் இறையும் என்று உன் திருமார்பில் அன்னைத்திருமகள் வீற்றிருக்க  ஏது குறை எமக்கும்? குறை ஒன்றும் இல்லாத  கோவிந்தா!


உன்னோடு உள்ள எங்களின் உறவினை உன்னாலும் விடமுடியாதது எங்களாலும் விடமுடியாதது.
நானுனையன்றி  இலேன் கண்டாய் நாரணனே! நீ  என்னையன்றி இலை” ”


:அது உன் தகப்பனாரின் வார்த்தையன்றோ?”


ஆனால் நீ எங்களுக்குத்தந்த மூலமந்திரத்தின் முதல் எழுத்தை பார்த்துக்கொள்..ஒம் என்பது அது... அ+உ+ம=ஓம்
அகரம்=அவன்;  அதாவது நீ
மகரம்=நாம்;  நாங்கள்
உகரம்=(அவன்-நாம்)உறவு
.. கோவிந்தா  இது உன்னோடான  உன்னத உறவு,நீ இங்கு எங்களுக்காக  தோன்றி நாங்கள் உணர்ந்த  உறவு  நாராயணத்வமாகிய பழைய உறவு  கிடக்கட்டும்.. பசுக்களைக்காக்கும் கோவிந்தா என்னும் பெயர் தான் பெரும்பெயர்   உனக்கு உகந்த நாமம்  கோவிந்தன்.. கூவி  கோவிந்தா என அழைத்தால் நீ ஓடிவருகின்றாய்! இன்னமும்  பிந்தைய காலத்திற்கும் இந்த கோவிந்த நாமம்  மக்களின் வாய்வழிப்பெருகிப்பரவப்போகிறது. இதற்கு முன்பாக உனது மற்ற  பெயர்கள் சிறுபெயர்கள்தான்.


ஆனால் முந்தைய பாசுரங்களில்  நாராயணா கேசவா பத்மநாபா  தேவாதிதேவா என்றெல்லாம் சிறுபேரிட்டு அழைத்தமைக்கு  கோபம் கொள்ளாதே..  சீறி அருளாதே..




“இப்போதுதான்  கோவிந்தா  என அழைக்க ஆரம்பித்திருக்கிரீர்கள்  முதல்பாட்டில் நாராயணா என்றீர்கள் அப்போதே இப்படி அழைக்கத்தோன்றவில்லையோ?’


“என்ன செய்வது கிருஷ்ணா நாங்கள் அறியாதவர்கள். அறியாமையில் செய்யும் பிழையைப்பொறுப்பது உன் கடன் அன்றோ?
 நீயோ, ‘துளையார் கருமென்குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா,இளையார்


விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான்’என்னும் பெரியதிருமொழிப்படி நீ விளைவித்த அன்பு எங்களை இந்தப்பாடு படுத்துகிறது. இதற்கு நீ கோபிக்கலாமா?
நாங்கள் உடல் நீ எங்கள் உயிர்!
 உன்மேல் அன்புகொண்டவர்கள்.எங்களுக்கு கிருஷ்ணபக்திதான்  அறிவு அந்த அறிவே சொத்து.






இறைவா  நீ தாராய்! 


தலைவனே  எங்கள் நோன்பிற்குவேண்டிய பறையைத்தருவாயாக! நப்பின்னை தான் செய்யவேண்டியதை எங்களுக்கு்செய்துவிட்டாள். இனி நீதான்  மனம் வைக்கவேண்டும்.. நீ தந்தாலே ஒழிய வேறு கதி இல்லை கண்ணா!


****************************************************


கிருஷ்ணபக்தி! அது ஒன்றுதான்  ஆஸ்தி என்று
சரணடைந்தவர்களை  ஏற்றுப்பறை தருவாய்  என்றவர்களை கண்ணன்   ரட்சிக்கிறான்..
அறிதோறும் அறியாமை பெருகிக் காண்பதுபோல அறியாமை அதிகரிக்க அந்த அறியாமையைக்கடவுள் போக்கிவிட்டு தன்னிடத்தில் சேர்ந்திருக்குமாறு ஆட்கொள்கிறானாம். படித்துதர்க்கம் செய்பவர்களுக்கு கடவுள் தரிசனம்  கிடைக்காது பக்தி ஒன்றையே ஆபரணமாகப்பூணும் ஒருவர் கடவுள் காட்சி பெறுவர் என்பதை இந்தப் பாசுரம் விளக்குகிறது.





3 comments:

  1. எல்லா பதிவுகளுக்கும் சிகரம் வைத்தாற் போல அருமையாக அமைந்து உள்ளது இந்த பாசுரத்திற்கு உங்கள் விளக்கம்."பக்தி ஒன்றையே ஆபரணமாகப்பூணும் ஒருவர் கடவுள் காட்சி பெறுவர்" என்கிற உங்கள் வார்த்தை நூற்றுக்கு நூறு சரியானதே..உங்களுக்கு எல்லா மங்களமும் பெறுகட்டும்

    ReplyDelete
  2. நல்லதொரு விளக்கத்துடன் அருமையான பகிர்வு அம்மா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மூலமந்திரத்தின் விளக்கம் மேலும் சிறப்பு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.