Social Icons

Pages

Wednesday, January 08, 2014

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி!

 
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்.//
******************************************************







னதுநடையழகைக்காண  வேண்டும் என்று  ஆயர்குலப்பெண்கள்  விரும்பியதும்   கிருஷ்ணன் உடனே  சிம்மாசனம் நோக்கி நடக்க ஆயத்தனானான். சற்றுதாமதித்தாலும்  அவர்கள்  கோபித்துக்கொள்ளலாம் திருமங்கைஆழ்வார்  மாதிரி..  ‘என்னப்பா க்ருஷ்ணா  உன்னைத் தேடி நான்  வந்திருக்கிறேன் எனக்கு சேவை சாதிக்கமாட்டாமல் என்ன உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்டவர்.


எம்மைகடிதாக் கருமம்   அருளி ஆஆ என்றிரங்கி  நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோம் ஏ’  என்றாரே! உன் திருமேனியை ஒருநாள் காண்பித்து வாசலில் நடந்துபோனால் நாங்கள்  மகிழ்வோமே கதவை சாத்திக்கொண்டு உள்ளேயே உட்கார்ந்திருப்பதோ பக்தனுக்கு காட்சிதரவேண்டாமா? என்றெல்லாம் அன்பின் உரிமையில் கடிந்துகொண்டவர் மேலும் ‘காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்  வாசிவல்லீர் இந்தளூரீர்  வாழ்ந்தேபோம் நீரே’ என்று உன் வடிவை வைத்துக்கொண்டு நீரே வாழ்ந்து போம் என கோபித்துக்கொண்டவர். இப்படியெல்லாம் ஆயர்குலச்சிறுமிகள்  கூறுமுன் நடப்போம். ராமாவதாரத்தில் நாம் நாலு நடையும் நடப்போம்..  சிங்கம்  ரிஷபம் புலி புரவி என...   ஆனால்இன்று  இவர்கள்  விரும்பியதுபோல  ராமனின் சிம்ம நடையைக்காட்டுவோம்  என  கிருஷ்ணன்  எழுந்து சிம்ம நடைபோட்டான்.


ஆஹா! கம்பீரத்துடன்  அவன்நடந்துவந்த  அழகில்  வெளியே நின்ற பெண்கள் மெய்மறந்தனர் வந்த  காரியமே மறந்துபோக, அவன் திருவடியை நோக்கிக்கைகுவித்தனர்.கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகின!சேவடி செவ்வித்திருக்க்காப்பு என்று அதற்குக்காப்பிட்டவர் பெரியாழ்வார். அவர்மகளும் தந்தை வழியில் பல்லாண்டுபாடும்விதமாக   திருவடியை  முதலில் வைத்து பாசுரம் அருளத்தொடங்கினாள்.


அன்று  இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!


 ஓங்கி உலகளந்த உத்தமனின் பேர் பாடினாள் முதலில்  இன்றோ அளந்த திருவடியை நேரில்கண்ட பெருமையில்  போற்றிப்பாடுகிறாள்! எப்பேர்ப்பட்ட திருவடி அது! திரு உலகு அளந்தபோது இரண்டடியன்றோ இட்டது இன்று எங்களுக்காகப்பத்தெட்டு இடுகிறதே! எங்கள் மேல் என்னே கருணை கண்ணா உனக்கு!


” ஒருமதியன்பர் உளம் கவர்ந்தன
உலகம் அடங்க வளர்ந்து அளந்தன
ஒருசடை ஒன்றிய கங்கை தந்தன
உரக படங்கள் அரங்கு கொண்டன..’ என்பது சுவாமி தேசிகன் வாக்கு.


மேல் உலகம் வந்து நீண்ட இடது திருவடியில் உள்ள சங்கரேகை, சக்ர ரேகை, கல்பக ரேகை, த்வஜ ரேகை, அங்குச ரேகை, பத்மரேகை  ஆகியவற்றைகண்டுகொண்ட பிரும்மன் இது பரமனின் திருவடி என நினைத்து அபிஷேகம் செய்தானாம்!  அப்படிப்பட்ட  திருவடிகள்! ‘இன்னமுதத்திருமகள் என்று இவரை(மற்ற ஆசாரிய பெருமக்கள்) முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளை அடைகின்றேனே’ என்ற அடியார்  உரையின்படி திருமகளாம் நப்பின்னையை முன் வைத்து அடைந்த திருவடிகள்! அதை  வணங்குகிறோம்!


சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி!


ராமாவதாரக்காலத்தில் அழகான இலங்கை நகருக்கு கடலில் அணைகட்டி அதன்மீது நடந்து சென்றாய். ‘சதுரமாமதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர ஓட்டி’என்றார் பாணரும்..   உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடறுத்துபண்ணிய இச்செயல்கள் எல்லாம் எம்மைப்போன்ற ஒரு பெண்ணிற்காகத்தானே?  பிராட்டிக்காக இப்பாடுபட்ட உன் பலத்திற்கு  தீங்குவராமல் இருக்கவேண்டுமே  ஆகவே உன் திறல் போற்றி!


பொன்றச்சகடம் உதைத்தாய் புகழ்போற்றி!


சகடாசுரனை உதைத்து அழித்த  உன் புகழைப்போற்றி வணங்குகிறோம்!
சகடம் என்றால் சக்கரம். இந்த  சகடம் ஜீவாத்மாக்களை  அசுரன் போல அழித்துக்கொண்டிருக்கிறது. அதைப்பார்த்த பரமன் தன் திருவடிகளால் உதைத்து  தவிடுபொடியாக்குகிறான். ஜீவாத்மா கர்மவ்சத்தால் நல்ல செயல்களை செய்ய இயலாமல்போனாலும்  அவனுக்கு ஆசார்ய சம்பந்தம்(குருவின் க்ருபை) வரச்செய்து அவர் மூலமாக பகவானை சரணாகதி செய்யும்படி செய்கிறானாம்.. 


கன்றுகுணிலாய் எறிந்தாய் கழல்போற்றி!
‘கன்றெறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு’ என்றார் பொய்கைப்பெருமான்.





பசுக்கள்போல வேஷம்போட்டுக்கொண்டு கொல்லவந்த இரண்டு அசுரர்களையும்  ஒரே நேரத்தில் மாள வைத்து  எறிதடியாய் கொண்டு விளாங்கனி வடிவாய் நின்ற கபித்தாசுரன்  மீது  எறிந்தாய் அந்தக்கழல்-திருவடி போற்றி! எறிந்தது கரம் எனினும் தூக்கிக்காட்டியது கழல் அன்றோ?


குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி!


வெற்பொன்றெடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே..’ என்று பக்தர்கள் பாடும்படியான குணம் அல்லவோ கோவிந்தனுடையது? பசுக்களும் அதை மேய்ப்பவர்களும் மழையில் நனையாமல் இருக்க அந்த மாமலையை   குடைபோல   தூக்கிப்பிடித்தாயே  அப்போது மலைக்கற்கள் ஏதும்  கீழே நிற்பவர்கள் மேல் விழாமல்  காத்தகுணம்  உன் கருணை குணம் அல்லவா அதை வணங்குகிறோம்!
!


வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி!




உன்னையேபுகழ்ந்தால் கண்ணேறுபடுமே  உன் கைவேலைப்புகழ்கிறோம்  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபனின் குமாரன் நீயும் பசுக்களைக்காக்க கையில் வேல் வைத்திருக்கிறாய் பகைவர்களை வெல்லப்பயன்படும் அந்த வேலுக்கு வணக்கம்.. சுடராழியும்பல்லாண்டு என உன் கை ஆயுதத்தை பெரியாழ்வார் பாடினாரே!


என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்



இதுவரை ஆறுவிதமாய் போற்றிவிட்டோம்..நாவிற்கு இடும் ஷட்ரஸம்  இதுவே! அறுசுவை உணவு இது! இனி என்றும் உனக்குக்கைங்கர்யம் செய்வதே எம்  நோக்கம்.. அதற்கே  இன்று நாங்கள் வந்துள்ளோம். ஏத்திப்பறைகொள்வான்... ஏத்துகை எங்களுக்குப்பலன்  பறைகொள்வது ஊரார்க்குப்பலன் இவ்விரண்டு பலன்களைப்பெறவே இன்று யாம்  வந்தோம்.
நீ இரங்கு  கண்ணா!


“சிம்மாசனம் ஏறு என்றீர்கள் மறுபடி இறங்கச்சொல்கிறீர்களே நியாயமா பெண்களே?’


“போதும் கண்ணா  ..உன் பொல்லாத்தனமும் குறும்பும் நாங்கள் அறிவோம்..  நாங்கள் இடையனான உனக்கு  வல்லினத்தை உபயோகம் செய்வோமா? ்  இரக்கம் காட்டு என்பதாக  இரங்கு என்கிறோம்..அதாவது  நாங்கள்   ஆற்றாமையால் இப்படி உன் இருப்பிடம் வந்து விட்டோம்..அப்படிவந்த குற்றம் பொறுத்து இரங்கவேண்டும்”




கண்ணன் சிரித்தான்.


******************************************************


இந்தப்பாசுரத்தில் அறுவகை வாழ்த்தும் கன்னியர் நாவிலே அறுசுவையாக தித்தித்தது. இப்பாசுரத்தை படிக்கப்படிக்க  இதன் வெண் சொல்லும் புதைபொருளும் இசை இன்பமும் நமது நாவிலும் செவியிலும் மனத்திலும்  தெவிட்டாது இனிக்கின்றன.



7 comments:

  1. பசுக்களும் அதை மேய்ப்பவர்கலும் மழையில் நனையாமல் இருக்க அந்த மாமலையை குடைபோல தூக்கிப்பிடித்தாயே அப்போது மலைக்கற்கள் ஏதும் கீழே நிற்பவர்கள் மேல் விழாமல் காத்தகுணம் உன் கருணை குணம் அல்லவா அதை வணங்குகிறோம்!

    மிக அழகாக போற்றிக்கொண்டாடத்தக்க சிறப்பான பாசுரம் ..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    இன்று எமது வலையில்

    கோவர்த்தனம் -கொற்றக்குடை..
    http://jaghamani.blogspot.com/2014/01/blog-post_8.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜேஸ்வ்ரை...உங்கள் வலைப்பூவில் கோவர்த்தனமலை படங்கள் விவரங்கள் கண்டேன் மிகச்சிறப்பாக உள்ளது

      Delete
  2. ரசிக்க வைக்கும் விளக்கம்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மிகவும் அருமை...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சாந்தி...

      Delete
  4. இந்த பாசுரத்தில் ஆண்டாள் ஒவ்வொரு அடியும் அன்று,சென்று,
    பொன்று கன்று என்று ஆரம்பித்து பகவானின் திருவடிகளை போற்றியும் அவைகளின் சாகசங்களையும் பெருமைகளையும் சொல்லி மனதுக்கு இனியதாக புனைந்து விட்டாள். ரொம்ப பிரமாதமாக விளக்கி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கேபி சார் அடிஅடியாக வைத்து அண்ணலை நெருங்கும் பாசுரம் இது உங்கள் விளக்கமும் அழகு நன்றி மிக

      Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.