Social Icons

Pages

Wednesday, January 09, 2008

பயணங்கள் சலிப்பதில்லை!

பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை .கார் ரயில் பஸ் விமானம் என்று நமது பயணங்கள் பெரும்பாலும் இவை நான்கினில்தான் இருக்கும். விமானப்பயணத்தில் அதிகம்பேச இயலாது.அருகில் இருப்பவர் mood பொறுத்தது அது!

விமானப்பயணத்தில் ஜன்னல்ஓரம் அமர்ந்தாலும் வெளியே வேடிக்கைப்பார்த்தால் வெண்பஞ்சு மேகங்கள்தான் மூட்டைமூட்டையாய் காட்சி அளிக்கும்.

தெலுங்கில் இக்கட அக்கட தவிர எதுவும் தெரியாத நான் பன்னாட்டு
விமானப்பயணத்தின்போது தெலுங்கு(மட்டும் தெரிந்த)பெண்மணியோடு எதுவும் பேசமுடியாமல் வாஷிங்டன் வரும்வரை மௌனவிரதம் அனுஷ்டித்தேன்! கடைசியில் அந்தப்பெண்மணி அமெரிக்காவின் விமான ஊழியர்களிடமும் தெலுங்கிலேயே மாட்லாடி தனது பெட்டிகளை
சாமர்த்தியமாய் எனக்கு
முன்பாய்எடுத்துக்கொண்டு என்னை நோக்கி வெற்றிப்புன்னகைவேறு வீசிச்சென்றதை ஜன்மத்திற்கும் மறக்க முடியாது.

கார்பயணம் இனிமையானதுதான்..நினைத்த இடத்தில் இளைப்பாறிக்கொள்ளலாம். ஆனால் அறிமுகமான மனிதர்கள் தான் உடன்
வருவார்கள்,அதில் புதுமை ஒன்றும் இருக்காது.

பஸ்ஸில் பலர் ஏறியதுமே அதன் ஆட்டத்தில் ஒன்று தூங்கிவிடுவார்கள் அல்லது தொலைக்காட்சிப்
பெட்டியில் ஆழ்ந்துவிடுவார்கள். இது அவ்வளவு ரசிக்கும்படியான பயணம் அல்ல.

ரயில்பயணம்-அதுவும்-பகல்நேர ரயில்பயணம் இருக்கிறதே..இது தான் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்! இதில்
நமக்கு நிறைய சிநேகிதங்கள் மட்டுமல்ல நிறைய அனுபவங்களும் கிடைக்கும்.(இதெல்லாம் இந்தியால மட்டும் நான் சொல்வது!)

ரயிலில் டிக்கட் ரிசர்வ் செய்துகொண்டு போவதுதான் உத்தமம். ஒருமுறை அவசரமாய் சென்னைக்குபோக வேண்டி இருந்தது .காவேரிகலாட்டா என்று பஸ் ஸ்ட்ரைக் ஆகிவிட, ரயிலிலும் இடமே இல்லை. முடிவில்
அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண் ட்டில் ஏறி புளிமூட்டையாய் அடைந்து பயணம் செய்யவேண்டியதாகிவிட்டது.

பிளாட்பாரத்திற்கு முன்னாடியே வந்து துண்டு போட்டு இடம்பிடித்த கூட்டம், நின்றுகொண்டிருந்த
என்மீது இரக்கம் காட்ட மறுத்தது. ஒருமணிநேரத்திற்குமேல் நிற்க முடியவில்லை...ஆகவே கொஞ்சம் இடம் உக்காரக்கொடுங்க எனக்கெஞ்சியதும் அப்படீஇப்படி யோசித்து ஒருவயதுக்குழந்தை ஒண்டிக்
கொண்டு உட்காரலாம் போலிருந்த இடத்தை தாராளமாய் எனக்கு ஒதுக்கினர்.

அப்போதுகையில் அன்றைய ஆங்கிலச்செய்தி பத்திரிகையுடன் ஏறிய ஒருவரை நான் அதிசியமாய் ஏறிட்டேன்.உடையும் உருவமும் அவரைப்படித்தவராக அடையாளம் காட்டவில்லை..அருகில் யாருடனோ பேசும்போது அது உறுதியாகிப்போனது..ஆனாலும் அந்த ஹிண்டு பேப்பர் என்மனதைக்குண்டுக்கல்லாய் போட்டு உருட்டிக்கொண்டிருந்தது.

'பாக்லாம் பிரிச்சிப்படிக்கறப்போ தெரிஞ்சிட்டுப்போகுது உண்மை'

அப்போது சட்டென அந்தமனிதர் பேப்பரைப்பிரித்துவிட்டார்,'ச்சே..யாரையும் வெளித்தோற்றத்தை வச்சி எடைபோடவேக்கூடாதுப்பா' என் உள்மனசு எச்சரித்தது.

பிரித்தபேப்பரை நான் பார்த்துக்கொண்டே இருக்கையில் அவர் அதை கீழே பரத்தி அதன்மீது ஜம்மென உட்கார்ந்துவிட்டு,"ரயிலுபொட்டில எப்பவும் சுத்தமா இருக்காதில்ல.. அதான் தோட்டவேலை செய்றவூட்ல கேட்டு ஒரு பேப்பரு வாங்கியாந்தேன்"என்று விளக்கம் வேறு
அளிக்கவும் என்முகம் போனபோக்கை என்ன சொல்வேன்?:)

அண்மையில் சென்ற பகல்நேர விரைவு ரயிலில் என் அருகில் அமர்ந்திருந்த ஒரு அறுபதுவயது
மதிக்கத்தக்க மாமி என்னைக்கண்டதும் பொன்னகையிட்டார்..(ஆமா ஒருபல்மட்டும் தங்கம் அவங்களுக்கு):)

எங்க இருக்கீங்க என்ன செய்றீங்க எத்தனைகுழந்தைங்க என்றுபொதுவாகப்பெண்கள் பேசிக்கொள்ளும் பேச்சில் ஆரம்பித்து பெங்களூரில் இந்தவருஷம் குளிர் அதிகம் பிசிபேளாபாத் நல்லாசெய்யவருமா(கவனிக்க மைபா அல்ல:)) சிக்பேட்டில் சேலைகள் மலிவு எம்டிஆரில் ரவாஇட்லி அமிர்தம் என்பதுப்போல பேச்சு சென்றது.ஒருதடவைகூட என்னோடுவரும் அறிமுகமில்லாத பெண்கள்தாங்கள் படித்த புத்தகங்கள்பற்றி பேசுவதே இல்லை.அல்லது அவர்களை நான் சந்திப்பது இல்லை.

பிறகு மாமியின் செல்போன் மச்சான் பேரு மதுரை என்றது. மாமி சின்னசங்கடத்துடன்,"கர்னாடிக் பாட்டுதான் முத தடவ வச்சிருந்தேன் மதுரை என் பொறந்தவீடு அதான்..ஹிஹி..இப்போ இது..." என்று அசடுவழிந்துவிட்டு ,"ஹலோ..யாரு பத்மஜாவா? என்று எட்டூருக்குக்கேட்பது போல பேச ஆரம்பித்தார்.அந்த கம்பார்ட்மெண்ட்டில் மொத்தம் 75 இருக்கைகள்.அனைவருக்கும் கேட்கட்டும் என்ற
நல்லெண்ணம்போலும்!

"பத்மஜா! நான் மெட்ராஸ் போறேன்டீ! லால்பாக் வண்டிலதான்... என்னது மாமாவா? அவர் என்கூட வரல தனியாத்தான் போறேன் அவர் தன் அக்காவப்பாக்க ஈரோடு போயிட்டார். வீட்டைப்பூட்டி நகை வெள்ளிப்பாத்திரம் எல்லாம் மேல ஜாக்ரதயா பரண்ல வச்சிட்டேன்...
எனக்கு பாங்க் சேஃப்டிலாக்கர்ல்லாம் நம்பிக்கை இல்லைடிம்மா..இதோ இப்போ சடனா உறவுக்காரங்க கல்யாணத்துக்குப் புறப்படறேன்.
.வீட்ல இருக்கறதால முப்பதுபவுன் நகை எடுத்துப்போட்டுட்டு வரமுடியற்து. பணம்கூட காஷா வீட்லதான் வச்சிப்போம்..லட்ச
ரூபாய்னாலும் எனக்கும் மாமாக்கும் பாங்க் போகவே பிடிக்காது.வட்டிபோயுடும்கிறயா? போனாபோகட்டும்.உனக்குத்தான் தெரியுமே என் பசங்க 2பேரும் அமெரிக்கால் இருக்காங்கன்னு...மாசம் ஒவ்வொருத்தனும் ஆயிரம் டாலர் அனுப்பிட்றான்...மாமாக்கும் பென்ஷன் மாசம் பத்தாயிரம் ரூபா...ஒண்ணும் பணப்பிரச்சினை இல்லை..இப்போ கூட சரவணா ஸ்டோ ர்ஸ்போயி நவரத்தின நெக்லஸ் வாங்கறதா ப்ளான் இருக்கு...ஒருதரம் ஒரேதரம்ன்னு சிநேகா வேற அடிக்கடி டிவில வந்து சொல்றாளே அதான்..அப்றோம் வேற விஷயமில்ல..ரயில்பொது இடம் பார்த்தியா அதிகம்பேசக்கூடாதே அதான்... வச்சிடட்டுமா?"

மாமி செல்போனை ஆஃப் செய்துவிட்டு கொண்டுவந்த கட்டுசாததைப்பிரித்தார்.

இவங்களைப்போல பலர் பொது இடத்துல போன்ல எப்படி எதை பேசறதுன்னு தெரியாமத்தான் ஆபத்துல மாட்டிக்கிறாங்க...
பிரயாணத்தின்போது சிலபெண்கள் நகைக்கடையாய் வருவதும் சரி இல்லை..

திருடர்களை ரத்தினக்கம்பளம் போட்டு வரவேற்பது பெண்கள் அணியும் கண்ணைக்கவரும் அதிகப்படி
நகைகள்தான்.

எனக்குத் தெரிஞ்ச ஒரு கிராமத்துப்பெண்மணி
நல்ல நாளிலேயே ஃபிஃப்டிகேஜி(தங்கநகை அணியும்) தாஜ்மஹால்.அன்றைக்கு ஒருகல்யாணத்திற்காக இன்னும் நிறைய அணிந்து வெளியூருக்கு காரில் பயணம் சென்றார்..பாதிவழியில் கார் விபத்துக்குள்ளாகி
பின் கதவு உடைந்துதெறித்துவிழ அந்த பெண்மணி எங்கோ தூக்கி எறியப்பட்டு மரணமடைந்துவிட்டார்.

தகவல் கிடைத்து அனைவரும் ஓடினோம்...கார் ட்ரைவர் சடலம் காருக்குள்ளேயே இருந்தது.

அந்தப்பெண்மணியுடையதை சிரமப்பட்டு தேடி பலமணிநேரங்களுக்குப் பிறகு மீட்டுக் கொண்டுவந்தார்கள்
"ஐயோஓஓஓஒ" என்று பெரிதாக வீறிட்டாள் எங்களோடுவந்த ஒரு பெண்.
துக்கம்தாங்கவில்லைபோலும் என நான் நினைக்கும்போதே அவள்" அடப்பாவிங்களா...பெரியம்மா உடம்புல
பொட்டுத்தங்கம் வைக்காம அத்தினை நகையும் யாரோ சுருட்டிக்கிட்டுபோயிட்டாங்களே..எழுபத்திஅஞ்சுபவுனாச்சே..எழுபத்தி அஞ்சி பவுன்ல சொக்கத்தங்கமாச்சே.. ஐயோ எல்லாம் போயிடிச்சே" என்று அழுதபோது எரிச்சல்கலந்த சிரிப்பாய் வந்தது!
*************************************************************************

3 comments:

  1. 50 kg ஆளு போறப்ப நகையையெல்லாம் எடுத்துப்போயிருக்கலாம் அல்லவா?
    மறந்திட்டாங்க போல இருக்கு. :-)

    ReplyDelete
  2. பகல் நேர ரயிலில் மட்டுமல்ல இரவு நேர ரயிலிலும், குறிப்பாக ரிசர்வ்ட் கம்பார்ட்மென்டிலும் கொட்டமடிப்பதற்கென்றே ஒரு கூட்டம் வரும். இரவு 1 மணி வரை அவர்கள் கொட்டம் தாங்காது...!

    பி.கு: சில சமயங்களில் நானும் கொட்டமடிக்கும் குரூப்ஸ்ஸில் ஐக்கியமாவதுண்டு :-p

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துகும் நன்றி வடுவூர் குமார் மற்றும் கருப்பன்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.