முதல்வணக்கம்
****************************
உதிரத்தில் உருவமாக்கியதுமட்டுமின்றி
உலகத்திலும் உயரமாக்கிய
என் தாய் தந்தைக்கும்
காற்றில் மிதக்கும் அணுக்களை
அருகில் அழைத்து வந்து
அண்டத்தை அளவெடுத்துதரும்
என் எழுதுகோலுக்கும்
கவிதைக்கனவுகளில்
காலடிமண்ணைப்பதித்துப்போகும்
என் குருபாரதிக்கும்
கொண்டாடும் மழையென
நின்றாடும் அழகினிலே
வந்தாடுகின்ற தமிழுக்கும்.....
முதற் வணக்கம்.
********************************
சபைக்கு வணக்கமும், காப்பும்
******************************************
படிப்பும் துடிப்பும் கொண்ட
பண்பட்ட இளைஞர்களுடனே
நாவிற்கலைமகள் நர்த்தனம் செய்ய
நகைச்சுவைமிளிர் சொற்கள்கொண்ட
நற்கவிஞர் ஆசாத் போன்றோர்
நிறைந்த பண்புடனானஅவைதன்னில்
என்னைக்கவிபாட அழைத்ததுமே
ஏற்றுமகிழ்ந்து வந்துவிட்டேன் - நான்
கற்ற வித்தை கைகொடுக்குமென்று
மற்றவைகளைமறந்தும்விட்டேன்!
உடன்பாடோ எதிர்மறையோ அவையோரே
கடன் உங்கட்கு என்கவிதை!
கொட்டிடுவீர் கரவொலிகள்!
அரங்க நகர் வள்ளல் அருள்தரும்
திருவரங்க நாயகனே காப்பு!
கவிதைக்கு ஒருமுன்குறிப்பு.
(தர்மவர்மாவின் வம்சத்தில் வந்த நந்த சோழனுக்கு மகளாக திருமகளின் அவதாரமாக கமலவல்லி
எனும் அழகுதேவதை அவதரித்தாள். திருச்சி அருகே ஜீயபுரம் எனும் இடத்திற்கு திருவரங்கப்பெருமான் எழுந்தருளும்போது , தான் அரங்கனை விரும்பியதாகவும் அவள் மனம் அறிந்து,அவளை நந்தவனத்தில் வந்து சந்தித்துப்பின் திருமணம் செய்து கொண்டதாயும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இன்றும் திருச்சி உறையூரில் கமலவல்லிஅன்னை, தன் திருக்கோயிலில் அரங்கனுடன் மணக்கோலத்தில் காட்சிதருகிறார். இதையொட்டிய கவிதை இது. அரங்கனைக்கண்ட அரசியின் மனநிலை,தோழியர்கள் வாயிலாக கவிதையாக இங்கு வருகிறது)
இனி வரும் நாட்கள்
**********************************
அன்னாயிங் கிதுகேளாய் அன்றொருநாள் பிற்பகலில்
பொன்னனைய இளவரசி பூப்பறிக்க எமையழைத்தாள்
நீங்குகிலா தென்றுமவள் நிழல்போல விளங்குகிற
பாங்கியரேம் தாமுமவள் பக்கத்தில் சென்றிட்டோம்
மண்ணினிலே வந்திறங்கி நடைபயிலும் மதியம் போல்
பெண்ணரசி முன் செல்லப் பின்னேயாம் தொடர்ந்திட்டோம்
காவிரியின் வெள்ளத்தில் களிப்புடனே விளையாடிப்
பூவிரியும் சோலைக்குள் போயெங்கள் உடை மாற்றி
ஆடுவதும் ஓடுவதும் பாடுவது மாய்வனத்தில்
நீடியதாம் போதிருந்து நிறைந்தெங்கும் காண்கின்ற
மல்லிகையே முதலான மலர்களெலாம் பறித்தெடுத்து
நல்ல பல ஆரங்கள் நாராலே தொடுத்ததன் பின்
மாளிகைக்கு மீளவும்யாம் வரவெண்ணும் நேரத்தில்
காளைபோல் பெருமிதத்தன் கண்கவரும் தோளழகன்
விண்ணொத்த கருநீலம் மிளிர்கின்ற மேனியினான்
வெண்ணிறத்துப் பரியேறி விரைவாயெம் முன்வந்து
வேட்டைக்கு வந்தேன் நான் மெல்லியரே வேங்கையிக்
காட்டுக்குள் உள்ளதேல் காட்டுங்கள் என்றிடவும்
ஆங்குளது காணுமென அரசகுலத்திருமங்கை
ஓங்கியதாய்க் கிளைவிரித்தே உள்ளதொரு மரங்காட்ட
கொல் என்று யாம்சிரித்தோம் கொல்வான்போல் அவன் நோக்கி
வெல்லுஞ்சொல் சொல்லுவதே மெல்லியலுக் கழகென்றான்
பாரோர்கள் புகழுகிற பார்த்திபனின் மகளறியீர்
ஆரோநீர் என வினவின், அரங்கத்தான் என்றிட்டான்
தங்களுயர் இளவரசி முன்னுற்றுத் தாழ்கின்றேன்
இங்கிதுபோல் மணமாலை யானறியேன் என்பவனாய்
நங்கைதன் செங்கரத்து நறுமணமார் தொடையலினை
அங்கையால் பறித்தெடுத்தே அழகுறத்தன் தோள் சேர்த்துத்
தன்னெழிலார் ஆரத்தைச் சட்டென்று தானெடுத்து
அன்னவள்தன் கழுத்தினிலே அரைநொடிக்குள் சூட்டினனாய்
மின்னலெனப் பரியேறி விரைவாக மறைந்திட்டான்
என்னசெயல் என்றெண்ணி யாம்திகைத்து நோக்குகையில்
அன்னவனுக்காய் இனிவரும் நாட்களெனும் நினைவோடே
கன்னிகையின் நீர்மலிந்த கண்.
________வெண்கலிப்பா___________
{பண்புடன் குழுமத்தில் பொங்கல்கவியரங்கத்தில் இனிவரும் நாட்கள் என்னும் தலைப்பில் கவிதை பாட அழைத்தனர் அப்போது எழுதிய கவிதை இது)