Social Icons

Pages

Saturday, February 28, 2009

இனி வரும் நாட்கள்....









முதல்வணக்கம்
****************************

உதிரத்தில் உருவமாக்கியதுமட்டுமின்றி
உலகத்திலும் உயரமாக்கிய
என் தாய் தந்தைக்கும்

காற்றில் மிதக்கும் அணுக்களை
அருகில் அழைத்து வந்து
அண்டத்தை அளவெடுத்துதரும்
என் எழுதுகோலுக்கும்

கவிதைக்கனவுகளில்
காலடிமண்ணைப்பதித்துப்போகும்
என் குருபாரதிக்கும்

கொண்டாடும் மழையென
நின்றாடும் அழகினிலே
வந்தாடுகின்ற தமிழுக்கும்.....

முதற் வணக்கம்.
********************************


சபைக்கு வணக்கமும், காப்பும்
******************************************
படிப்பும் துடிப்பும் கொண்ட
பண்பட்ட இளைஞர்களுடனே
நாவிற்கலைமகள் நர்த்தனம் செய்ய
நகைச்சுவைமிளிர் சொற்கள்கொண்ட
நற்கவிஞர் ஆசாத் போன்றோர்
நிறைந்த பண்புடனானஅவைதன்னில்

என்னைக்கவிபாட அழைத்ததுமே
ஏற்றுமகிழ்ந்து வந்துவிட்டேன் - நான்
கற்ற வித்தை கைகொடுக்குமென்று
மற்றவைகளைமறந்தும்விட்டேன்!

உடன்பாடோ எதிர்மறையோ அவையோரே
கடன் உங்கட்கு என்கவிதை!
கொட்டிடுவீர் கரவொலிகள்!
அரங்க நகர் வள்ளல் அருள்தரும்
திருவரங்க நாயகனே காப்பு!





கவிதைக்கு ஒருமுன்குறிப்பு.

(தர்மவர்மாவின் வம்சத்தில் வந்த நந்த சோழனுக்கு மகளாக திருமகளின் அவதாரமாக கமலவல்லி
எனும் அழகுதேவதை அவதரித்தாள். திருச்சி அருகே ஜீயபுரம் எனும் இடத்திற்கு திருவரங்கப்பெருமான் எழுந்தருளும்போது , தான் அரங்கனை விரும்பியதாகவும் அவள் மனம் அறிந்து,அவளை நந்தவனத்தில் வந்து சந்தித்துப்பின் திருமணம் செய்து கொண்டதாயும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இன்றும் திருச்சி உறையூரில் கமலவல்லிஅன்னை, தன் திருக்கோயிலில் அரங்கனுடன் மணக்கோலத்தில் காட்சிதருகிறார். இதையொட்டிய கவிதை இது. அரங்கனைக்கண்ட அரசியின் மனநிலை,தோழியர்கள் வாயிலாக கவிதையாக இங்கு வருகிறது)


இனி வரும் நாட்கள்
**********************************


அன்னாயிங் கிதுகேளாய் அன்றொருநாள் பிற்பகலில்

பொன்னனைய இளவரசி பூப்பறிக்க எமையழைத்தாள்

நீங்குகிலா தென்றுமவள் நிழல்போல விளங்குகிற

பாங்கியரேம் தாமுமவள் பக்கத்தில் சென்றிட்டோம்

மண்ணினிலே வந்திறங்கி நடைபயிலும் மதியம் போல்

பெண்ணரசி முன் செல்லப் பின்னேயாம் தொடர்ந்திட்டோம்

காவிரியின் வெள்ளத்தில் களிப்புடனே விளையாடிப்

பூவிரியும் சோலைக்குள் போயெங்கள் உடை மாற்றி

ஆடுவதும் ஓடுவதும் பாடுவது மாய்வனத்தில்

நீடியதாம் போதிருந்து நிறைந்தெங்கும் காண்கின்ற

மல்லிகையே முதலான மலர்களெலாம் பறித்தெடுத்து

நல்ல பல ஆரங்கள் நாராலே தொடுத்ததன் பின்

மாளிகைக்கு மீளவும்யாம் வரவெண்ணும் நேரத்தில்

காளைபோல் பெருமிதத்தன் கண்கவரும் தோளழகன்

விண்ணொத்த கருநீலம் மிளிர்கின்ற மேனியினான்

வெண்ணிறத்துப் பரியேறி விரைவாயெம் முன்வந்து

வேட்டைக்கு வந்தேன் நான் மெல்லியரே வேங்கையிக்

காட்டுக்குள் உள்ளதேல் காட்டுங்கள் என்றிடவும்

ஆங்குளது காணுமென அரசகுலத்திருமங்கை

ஓங்கியதாய்க் கிளைவிரித்தே உள்ளதொரு மரங்காட்ட

கொல் என்று யாம்சிரித்தோம் கொல்வான்போல் அவன் நோக்கி

வெல்லுஞ்சொல் சொல்லுவதே மெல்லியலுக் கழகென்றான்

பாரோர்கள் புகழுகிற பார்த்திபனின் மகளறியீர்

ஆரோநீர் என வினவின், அரங்கத்தான் என்றிட்டான்

தங்களுயர் இளவரசி முன்னுற்றுத் தாழ்கின்றேன்

இங்கிதுபோல் மணமாலை யானறியேன் என்பவனாய்

நங்கைதன் செங்கரத்து நறுமணமார் தொடையலினை

அங்கையால் பறித்தெடுத்தே அழகுறத்தன் தோள் சேர்த்துத்

தன்னெழிலார் ஆரத்தைச் சட்டென்று தானெடுத்து

அன்னவள்தன் கழுத்தினிலே அரைநொடிக்குள் சூட்டினனாய்

மின்னலெனப் பரியேறி விரைவாக மறைந்திட்டான்

என்னசெயல் என்றெண்ணி யாம்திகைத்து நோக்குகையில்

அன்னவனுக்காய் இனிவரும் நாட்களெனும் நினைவோடே

கன்னிகையின் நீர்மலிந்த கண்.


________வெண்கலிப்பா___________



{பண்புடன் குழுமத்தில் பொங்கல்கவியரங்கத்தில் இனிவரும் நாட்கள் என்னும் தலைப்பில் கவிதை பாட அழைத்தனர் அப்போது எழுதிய கவிதை இது)

10 comments:

  1. முதல்வணக்கம், சபைவணக்கம் ஈசியாக புரிஞ்சிடுச்சி...பட் கவிதை தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்துச்சி ;)

    கவிதையை படிக்கும் போது ம்ம்ம்...என்னாமா உழைச்சியிருக்காங்கன்னு தோணுச்சி ;))

    வாழ்த்துக்கள் அக்கா ;)

    ReplyDelete
  2. பழைய கால கலித்தொகை போன்ற நூல்களில் இப்படிப்பட்ட வர்ணனைகளை வெண்பாக்களாகப் படித்திருக்கிறேன். வெண்பா இலக்கணம் மரபிலக்கணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அழகான காட்சி விபரிப்பை ரசிக்க முடிகிறது உங்கள் கவிதையில். பண்புடன் குழுமத்தின் கவியரங்கில் தந்த தலைப்பில் எல்லோரும் நவீனகால சூழலில் கவிதை எழுதியிருக்க நீங்கள் மட்டும் மிகவும் வித்தியாசமாக பண்டைய பக்தி வரலாற்றுக் காட்சியொன்றை கவிதை வடிவில் எழுதியிருந்தீர்கள். பாராட்டுகள்.

    அன்புடன்
    சுவாதி

    ReplyDelete
  3. ஆத்தாடிஈஈஈஈஈஈஈஈ

    எனக்கு தமிழ் தெரியும்னு இனிமே சொல்ல பயமா இருக்கு.


    //கவிதையை படிக்கும் போது ம்ம்ம்...என்னாமா உழைச்சியிருக்காங்கன்னு தோணுச்சி ;))
    //

    பெரீரீரீரீரீரீய்ய்ய்ய்ய்ய்யயய ரிப்பீட்டு

    :)

    ReplyDelete
  4. கோபிநாத் said...
    முதல்வணக்கம், சபைவணக்கம் ஈசியாக புரிஞ்சிடுச்சி...பட் கவிதை தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்துச்சி ;)

    கவிதையை படிக்கும் போது ம்ம்ம்...என்னாமா உழைச்சியிருக்காங்கன்னு தோணுச்சி ;))

    வாழ்த்துக்கள் அக்கா ;)

    10:47 PM
    >>>.நன்றிகோபி
    இலக்கணம் கொஞ்சம் கற்றதால் ஏதோ எழுதீஇருக்கேன் மத்தபடி ஒண்ணும் பிரம்மாதமால்லாம் உழைக்கல:)

    ReplyDelete
  5. சுவாதி சுவாமி. said...
    பழைய கால கலித்தொகை போன்ற நூல்களில் இப்படிப்பட்ட வர்ணனைகளை வெண்பாக்களாகப் படித்திருக்கிறேன். வெண்பா இலக்கணம் மரபிலக்கணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அழகான காட்சி விபரிப்பை ரசிக்க முடிகிறது உங்கள் கவிதையில். பண்புடன் குழுமத்தின் கவியரங்கில் தந்த தலைப்பில் எல்லோரும் நவீனகால சூழலில் கவிதை எழுதியிருக்க நீங்கள் மட்டும் மிகவும் வித்தியாசமாக பண்டைய பக்தி வரலாற்றுக் காட்சியொன்றை கவிதை வடிவில் எழுதியிருந்தீர்கள். பாராட்டுகள்.

    >>>
    வாங்க சுவாதி
    ஆமாம் இது நடந்த வரலாறு என்பதால் கதையைஉள்வாங்கி அதைகவிதையாக்கினேன். தமிழ்ல இலக்கணம்தெரிஞ்சி மரபில் கவிதை எழுதுவதே ஈசி சுவாதி.
    புள்ளிவச்சி கோலம்போடறமாதிரி டக்டக்ன்னு இழைகள் அங்கங்கேபோய் கோர்த்துக்கொண்டுவிடும் புதுக்கவிதைதான் கஷ்டம் எனக்கு:)நன்றிவரவுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  6. எம்.எம்.அப்துல்லா said...
    ஆத்தாடிஈஈஈஈஈஈஈஈ

    எனக்கு தமிழ் தெரியும்னு இனிமே சொல்ல பயமா இருக்கு.


    //கவிதையை படிக்கும் போது ம்ம்ம்...என்னாமா உழைச்சியிருக்காங்கன்னு தோணுச்சி ;))
    //

    பெரீரீரீரீரீரீய்ய்ய்ய்ய்ய்யயய ரிப்பீட்டு

    :)
    >> அய்யோடி..இதெல்லாம் ஓவர்ப்பா:0 :) இலக்கணம் இங்க உதவினது வேறென்ன பெருசா செய்துட்டேன்!
    நன்றி அப்துல்லா கருத்துக்கு!

    ReplyDelete
  7. //காற்றில் மிதக்கும் அணுக்களை
    அருகில் அழைத்து வந்து
    அண்டத்தை அளவெடுத்துதரும்
    என் எழுதுகோலுக்கும்//

    //கொண்டாடும் மழையென
    நின்றாடும் அழகினிலே
    வந்தாடுகின்ற தமிழுக்கும்.....//

    முதல் வணக்கமே அழகு. அழகு தமிழ் கவிதை அதனினும் அழகு.

    //தமிழ்ல இலக்கணம்தெரிஞ்சி மரபில் கவிதை எழுதுவதே ஈசி சுவாதி.//

    எங்கேயோ போயிட்டீங்க! நான்லாம் ஒரு வெண்பா எழுதறதுக்குள்ளேயே ஒருவழியாயிடுவேன் :)

    //எனக்கு தமிழ் தெரியும்னு இனிமே சொல்ல பயமா இருக்கு.//

    அதேதான் :)

    ReplyDelete
  8. கவிநயா said...
    //காற்றில் மிதக்கும் அணுக்களை
    அருகில் அழைத்து வந்து
    அண்டத்தை அளவெடுத்துதரும்
    என் எழுதுகோலுக்கும்//

    //கொண்டாடும் மழையென
    நின்றாடும் அழகினிலே
    வந்தாடுகின்ற தமிழுக்கும்.....//

    முதல் வணக்கமே அழகு. அழகு தமிழ் கவிதை அதனினும் அழகு.
    >>>>>>>>>>>>>>>>>


    வாங்க கவிநயா! தமிழ் என்பதால் அழகானதோ கவிதை!


    \\\\\\எங்கேயோ போயிட்டீங்க! நான்லாம் ஒரு வெண்பா எழுதறதுக்குள்ளேயே ஒருவழியாயிடுவேன் :)

    //எனக்கு தமிழ் தெரியும்னு இனிமே சொல்ல பயமா இருக்கு.//

    அதேதான் :)|||||\\\\


    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.

    மரபுக்கவிதை எழுத இலக்கணம் கொஞ்சம் தெரிஞ்சாபோதும் இதுக்குப்போய் என்னைப்பெருசா நீங்கள்ளாம் பாராட்டறதுக்கு நான் தகுதியான்னு தெரியல ஆனாலும் கருத்துக்கு நன்றி கவிநயா.


    10:17 PM

    ReplyDelete
  9. சூப்பர்-க்கா!
    ஒவ்வொரு வரியும் ரசித்துப் படித்தேன்! முழுக்கவே பாடியிருந்தீங்கன்னா அரங்காயணம் ஆகியிருக்கும்! உம்....பாதியிலேயே நிறுத்திட்டீங்க!

    //அன்னவனுக்காய் இனிவரும் நாட்களெனும் நினைவோடே
    கன்னிகையின் நீர்மலிந்த கண்//

    அழகா வந்திருக்கு!

    //கொல் என்று யாம்சிரித்தோம் கொல்வான்போல் அவன் நோக்கி
    வெல்லுஞ்சொல் சொல்லுவதே மெல்லியலுக் கழகென்றான்//

    வெல்லுஞ் சொல், கொல்-ன்னு குறள் சொற்கள் பொங்குது பொங்கல் பாட்டில்! :)

    ReplyDelete
  10. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    சூப்பர்-க்கா!
    ஒவ்வொரு வரியும் ரசித்துப் படித்தேன்! முழுக்கவே பாடியிருந்தீங்கன்னா அரங்காயணம் ஆகியிருக்கும்! உம்....பாதியிலேயே நிறுத்திட்டீங்க! \\\\\>>>>

    அரங்காயணமா! நானா! ஜோக்கடிக்காதீங்க ரவி! அதெல்லாம் பெரியவிஷயம்!ரசிச்சதுக்கு நன்றி

    //அன்னவனுக்காய் இனிவரும் நாட்களெனும் நினைவோடே
    கன்னிகையின் நீர்மலிந்த கண்//

    அழகா வந்திருக்கு!

    //கொல் என்று யாம்சிரித்தோம் கொல்வான்போல் அவன் நோக்கி
    வெல்லுஞ்சொல் சொல்லுவதே மெல்லியலுக் கழகென்றான்//

    வெல்லுஞ் சொல், கொல்-ன்னு குறள் சொற்கள் பொங்குது பொங்கல் பாட்டில்! :)>>>>>>>>

    மிக நன்றிரவி ! மெல் வெல் கொல்பற்றி சில் லுனு எழுதினதுக்கு!

    5:27 PM

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.