”ஒரு வழியா நம்ம ரங்கப்ரசாத்துக்கும் பொண்ணு கிடச்சி கல்யாணம் நிச்சயம் ஆகிடிச்சிப்பா... இவன் இப்படியே நாலைஞ்சிவருஷம் இருந்து அப்புறம் கல்யாண்ம் செஞ்சிட்டுக் குழந்தையைப் பெத்துக்கிட்டா அந்தக்குழந்தை, இவனை ’அப்பா‘ன்னு சொல்லாமல் ’தாத்தா’ன்னு தான் சொல்லிடும்”
ராம்குமார், ரங்கப்ரசாத்தை பார்த்தபடி இப்படி உரக்க சொன்னதும் கூடி இருந்த அவன் நண்பர்கள் எல்லாரும் கையிலிருந்த கண்ணாடி டம்ளரை டீபாய்மீதுவைத்துவிட்டு ஏதோ ஜோக்கைக்கேட்டதுபோல கை தட்டி சிரித்தார்கள்.
”டேய்,டேய் என்னங்கடா உங்களுக்கெல்லாம் என் வீட்டுமொட்டைமாடி ல பேச்சிலர் பார்ட்டி கொடுக்கிற இந்த பொன்னான நாளில், என்னைப்போயி இப்படி கிண்டல் அடிக்கறிங்களே! நான் என்னடா செய்யறது, உங்களுக்கெல்லாம் பொறுப்பா உங்க அப்பா அம்மா பொண்ணு பாத்து கல்யாணம் செய்துவச்சிட்டாங்க..எனக்கு அப்பாவும் இல்ல அம்மாவும் இல்ல லவ் செய்ய எந்தப்பொண்ணும் கிடைக்கல...வரவர பொண்ணு கிடைக்கறதே பெரும்பாடா இருக்கு ...தூரத்து உறவுக்காரங்க . அப்படி இப்படி முப்பத்தி ஆறு வயசுல எனக்கும் கல்யாணம் நிச்சயம் செய்துட்டாங்க...”
ரங்க்ரசாத் வெட்கமும் தயக்கமுமாய் பேசிக்கொண்டிருக்கும்போது மோகனின் செல்போன் குரல்கொடுத்தது.முதல் நாள் மழையில் தவறுதலாய் செல்போனை நனைத்துவிட்டதால் ரிப்பேருக்குக்கொடுத்தது அன்று மாலைதான் கைக்கு வந்திருந்தது.
..
“ யாருடா இந்த அர்த்தராத்திரில? உன் ஒய்ஃப் ஜனனிதான் கீழே ஹால்ல மத்த லேடீஸ்கூட டிவி பார்த்துட்டு இருக்காங்க... ..அடிக்கடி போன் செய்ற நாங்க
நாலு பேரும் இங்க இருக்கோம், வேற யாருடா உனக்கு இந்தமும்பைல இந்த நேரத்துல போன் செய்யறது?” கண்ணடித்தான் விட்டல்.
செல்போனை எடுத்து திரையில் ’வாசுதேவன்’ என்ற பெயரைப் பார்த்ததும் முகம் சுளித்த மோகன்,” அட சட்’ என்று சலித்துக்கொண்டான்..
”யாருடா?”
” ஒரு ரம்பகேஸ் .... திருச்சில என் சில அப்பாவோட ஜிக்ரி தோஸ்த்து. பேரு வாசுதேவன் ...அப்பப்போ போனைப்போட்டு அறுக்கும் ...இந்தாளுக்கெல்லாம்
எங்கப்பா என் போன் நம்பரைக் கொடுத்திருக்கார்.. “ பல்லைக் கடித்தான் மோகன்.
அடித்து ஓய்ந்ததும் பாண்ட்பாக்கெட்டில் செல்போனை திருப்பிப் போடுவதற்குள் மறுபடி அழைப்பு வரவும் எடுத்தான். அவரேதான்.
“ அதே ஆளாடா மோகன்? பேசாம போனை சைலண்ட்மோட்ல போடு”
”அதான் பண்ணனும்” என்று மோகன் கடுகடுத்தபோது மாடிப்படி ஏறி அங்கு வந்த அவன் மகன் ஆதர்ஷ்,’அப்பா” என்று கூவினான்.
”என்னடா மணி பதினொண்ணாகுது, இன்னும் நீ தூங்கலையா?”மோகன் தனது ஐந்துவயது மகனை தூ்க்கி எடுத்துக்கொண்டபடி கேட்டான்.
“ எனக்கு தூக்கம் வரல.. மம்மியும் ஆண்டீஸ் எல்லாரும் தூங்கிட்டாங்க.. நிகிலும் வர்ஷாவும் ஆளுக்கொரு செல்போன்ல கேம் விளையாடறாங்க...அம்மாகிட்ட
கேட்டா திட்டுவாங்க அதான் உங்ககிட்ட கேக்கவந்தேன்..அப்பா நானும் விளையாடணும்ப்பா ப்ளிஸ்பா”
”நல்லதாப்போச்சி, நானே இப்போ போனை எங்கடா வைக்கலாம்னு நினச்சிட்டு இருந்தேன்,,, இந்தா ஐபோன் உனக்குத்தான் போன் கால் எதுவும் வந்தால்
அட்டென்ட் பண்ணாத...நான் அப்புறம் மிஸ்டு கால்ல பாத்துக்கறேன் என்ன?
“சரிப்பா”
செல்போனை வாங்கிக் கொண்டு ஆதர்ஷ் திரும்பிப்போனதும் மொட்டைமாடியில் பார்ட்டி களைகட்ட ஆரம்பித்தது.
மூன்றுமணிக்கு எல்லோரும் லேசான தள்ளாட்டத்துடன் கீழே இறங்கிவந்தனர்.
ரங்கப்ரசாத் கேட்டுக்கொண்டபடி எல்லாரும் அவன் வீட்டிலேயே ஹாலில் உருள ஆரம்பித்தார்கள்.
ஜனனி தூக்கக் கலக்கத்தில் மகனிடமிருந்து மோகனின் செல்போனை வாங்கி தலைகாணிக்கு அடியில் வைத்தாள்.
நிதானமாக காலை எழுந்துகொண்டு ஒருவருக்கொருவர்‘ குட்மார்னிங் ! ஹாவ் எ குட் டே!’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பல்லைத்தேய்த்து
காபியைக்குடித்தபடி அரட்டைஅடித்துமுடித்து்க்கிளம்பும்போது மணி ஒன்பதாகிவிட்டது.
செல்போனை உயிர்ப்பித்து வந்த குறுஞ்செய்திகளைப்பார்த்த மோகன் வீறிட்டான்.
”ஐய்யெயொ அப்பா நேத்து மதியமே செத்துப்போயிட்டாராம்”
ஜனனி திடுக்கிட்டு நின்றாள்.
ஆதர்ஷ், ‘தாத்தாவா? திருச்சி தாத்தாவா செத்துப்போயிட்டார்?இனிமே எனக்கு யாருப்பா தெனாலிராமன் கதை சொல்வாங்க ஊஉஊ” என்று அழ
ஆரம்பித்தான்.
“என்ன நேத்து பகலே இறந்துட்டாரா ? மோகன் போனைப்போட்டுக்கேளு சீக்கிரம்” நண்பர்கள் கவலையுடன் பரபரத்தார்கள்.
வாசுதேவனுக்கு போன் செய்தான் மோகன்.
” ஹலோ?என்னாச்சு மாமா ஏன் எனக்கு உடனே சொல்லல்ல?” துக்கமும் கோபமுமாய் கேட்டான்.
“நேத்து மதியத்திலேருந்து பலதடவை முயற்சி செய்தேன்ப்பா..போன் ஸ்விச்டு ஆஃப்னு வந்தது...”
“ஐயோ போன் ரிப்பேர் அதான், சரி , சாயந்திரம் ஏழுமணிபோல சரியாத்தானே இருந்தது அப்போ செய்யக்கூடாதா?”
”ஏழுமணிக்கு உன் வீட்டுல உறவுக்காரங்க எல்லாரையும் ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்டுன்னு கொண்டுவிடப்போகவேண்டி இருந்ததுப்பா.....அப்புறம்
பத்துமணிக்கு மேலன்னு நினைக்கிறேன் மூணுவாட்டி செய்தேனே கட் ஆகிட்டதுப்பா....கடைசில எஸ் எம் எஸ் கொடுத்தேன்பா...”
” ஓ ஆமாம்....இப்போ நினைவுக்கு வருது அப்போ நான் ஆபீஸ் மீட்டிங்க்ல இருந்தேன் அதான் எடுக்க முடியல...சரி டெட்பாடி இருக்கில்ல நான் பொறப்பட்டு
வரேன் இப்போவே, ஆனா ஜனனி ஆதர்ஷ் வரது டவுட்டு..ஆதர்ஷுக்கு எக்சாம் டைம் இப்போ”:
” மோகன், ஒரு நிமிஷம் உன் அம்மா பேசணுமாம்” என்றார் எதிர்முனையில் வாசுதேவன்.
அம்மா என்றதும் மோகனுக்கு வியர்த்தது. அப்பா திருமலை சாது, அதிகம் பேசமாட்டார்.
எத்தனையோ தொழில் இருந்தும் தான் ஆசிரியப்பணியைமேற்கொண்டதை மட்டும் அடிக்கடி பெருமையாக சொல்லிக் கொள்வார்
’கல்வி என்பது ஆழ்வார் பேசுவதுபோல ஞான ஒளி இன்றுவரை அறிவியல் விளக்கமுடியாத ஒரு அதிசியம் தீபம் எப்படி தன்னில்குறையாமல் எப்படி மற்றொரு விளக்கிற்கு ’ஒளியைப்பரப்புகிறது என்று அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாய் இன்புறுகிச்செயும் கல்வி தான்தீபம் .அது தனக்கும் ஒளிகாட்டும் மற்றவர்க்கும் ஒளிகாட்டும் என்பார். அ்ம்மா தைரியசாலி. வீட்டில் முழுப்பொறுப்பும் அம்மாவுடையது. தவறுகளைச்சுட்டிக்காட்டத்தயங்கமாட்டாள். வைராக்கியமும் தன்னம்பிக்கையும் அம்மாவிற்கு அதிகம் என்பதை மோகன் அறிவான்.
”ஹலோ அம்,,, அம்மா” என்றபோது நா தழு தழுத்தது. சதைஆடியது.
”அட , அம்மா அப்பாவையும் நினைவில் இருக்காப்பா? இருந்தால் ஆறுமாசம் மு!ன்னாடி உங்கப்பா திடீர்னு ஸ்ட்ரோக்ல படுக்கைல விழுந்ததும்
வந்துபார்த்திருக்கலாமே? பாவம் கண்காணாத தூரம் ! விசாகிடைக்கணும் அதான் வரலை!. ஒருத்தர். உயிரோடு இருக்கிறபோது அவங்களைவிட்டு ஒதுங்கிப்போகிற உறவுகளை அவர் இறக்கிறபோது தொலைவில் தள்ளிடும் முகமுழிகூட கிடைக்கவிடாது தெரியுமா?”
மோகனின் அம்மா வசந்தா எதார்த்தமாகத்தான் கேட்டாள் மோகனுக்கு சுர்ரென கோபம் தலைக்கேறி விட்டது.
”அம்மா, இந்த நேரத்துல இது தேவையா? பம்பாய் வந்தது முதல் ஆபீஸ்ல கொள்ளையாய் வேலை.அதான் மாசாமாசம் சுளையா மூணாயிரம் ரூபா
அனுப்பறேனே ஒரு நாள் மறந்தாலும் வாசு மாமா போன் பண்ணிடுவாரே ? சரி சரி... நான் கிளம்பி வரேன் எப்படியாவது”
” ஆஹா!வந்து உன் பங்குக்கு சாம்பலைக்கரைச்சிடு...நம்ம ஊர் காவேரிலபோதும்பா.. கங்கைக்கெல்லாம் போயி சிரமப்டாதே என்ன?”
”என்னது சா..சாம்பலா ? அப்போ அப்பாவை தகனம் பண்ணியாச்சா?”
”ஆச்சு...உனக்கு தகவல் சொல்லத்தான் முடியவே இல்லையேப்பா? வாசு மாமாவுக்கு உனக்கு போன் பண்ணிப்பண்ணி விரலே தேஞ்சி போயிருக்கும்”
”அய்யோ அம்மா போன் தண்ணி பட்டு கெட்டுப்போயிருந்ததும்மா....நானே ஜனனி செல்லுலதான் மேனேஜ் பண்ணினேன் தெரியுமா?”
”அந்த செல் நம்பரை எங்களுக்கு நீயோ அவளோ கொடுக்கலையே! வேற எப்படி யாரைக்கொண்டு உனக்கு தகவல் சொல்றது?..மனம் போல மாங்கல்யம்!”
“என்னம்மா இப்ப போய் இடக்கா?”
”இயற்கைதானே இதுல இடக்கு எங்கப்பா வந்தது?”
”சரி நான் வரேன்”
திருச்சி ஏர்ப்போர்ட்டிலிரு்ந்து வாடகைக்காரில் உறையூருக்கு வந்தான். வீட்டிற்குள் நுழைந்ததும் கூச்சலிட்டான்.
”மூத்தபிள்ளை நான் வந்து கொள்ளிபோடணும்னு உங்களுக்குத் தோண வேண்டாமா? ஐஸ் பெட்டில வச்சிருக்கவேண்டியதுதானே??”
“உனக்காக அந்தி சாயறவரைக்கும் காத்திருந்து தகவலும் கொடுக்க வழிதெரியாமல் தவிச்சி வேற வழி இல்லாம சின்னவனை விட்டு காரியத்தை முடிக்க வச்சேன்..பகலில் இறந்தவர்களை மூன்றரை மணி நேரம் வைத்திருக்கலாம் அதற்குமேல் வச்சிருந்தா இறந்தவர் இருந்தபோது செய்த
புண்ணியங்களுக்குப் பலன் இருக்காது. இறந்தவர்களின் இறுதிப்பயணத்தை தாமதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.என்கிறது தர்ம சாஸ்திரம்” அழுத்தமாய் சொன்னாள் வசந்தா.
அம்மாவின் தீர்க்கமான குரல் மோகனை எரிச்சலூட்டியது”‘ஏம்மா உனக்கு அப்பா போன சோகமே கிடையாதா? என்னைக்கண்டதும் கட்டிண்டு அழுவாய்னு பார்த்தா தர்மம் சாஸ்த்திரம்னு பேசறே?”
“அதெல்லாம் சினிமா அம்மாக்கள் செய்யலாம்.எதார்த்தத்துல தங்களை தவிக்கவிட்டுட்டுப்போன பி்ள்ளைகளை நினைச்சி ஒவ்வொரு பெத்தவயிறும்
புழுவாய்த்துடிக்கும்,. உனக்கு நிஜமாவே பிரியம் இருந்தால் ரிடையர் ஆகி வீட்டோடு கிடக்கும் அப்பாவுக்கு ஒரு சிநேகிதனாய் துணைக்கு
இருந்திருக்கமாட்டியா? திடீர்னு பம்பாய் ஒருகோடி வேலை மாத்திண்டு போகத்தோணுமா? மூளை நோயால் பாதிக்கப்பட்டுதன்னாலே எதையுமே
செய்துகொள்ள முடியாமல் கிடக்கும் உன் இருபத்திஆறுவயது தம்பியை இப்படி விட்டுப்போகத்தான் முடியுமா?அப்பாவை தன்னிடம் அழைத்துக்கொண்டது கடவுளின் விருப்பம். இன்னும் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்படவேண்டாம்னு அந்தக் கடவுள் தன் நிழலுக்குக்கூட்டிக்கொண்டதுக்கு நான் ஏன் அழணும்? ’அமரபதவி’ன்னா சும்மாவா? என்னடாது அம்மா இப்படிக்கேக்கறேனேன்னு நினைக்கிறியா? அடிப்படையில் அன்பும் ஆதரவும் கொண்டவள்தான்.
ஆனால் .வாழ்வின் அமைப்பும் சிக்கல்களும் என்னை ரொம்பவே மாத்திட்டது.. இப்ப என்னைச் சுற்றி ஒரு கடினத்தோல். நத்தைக்கும் ஆமைக்கும் ஏன் கடுமையான/கெட்டியான மேல் கூடு? முள்ளம்பன்றி சிலிர்த்தால் ஏன் அதன் முட்கள் வெளிப்படுகின்றன அப்படித்தான்னு வைத்துக்கொள்”
”அம்மா.! உன்னைப்போல எனக்குப்பேசத்தெரியாது ஆனாலும். உனக்கு என்னிக்கும் தம்பி மேலதான் பாசம் அதான் அவனைவிட்டு கொள்ளிபோட
வைச்சிருக்கே?”
“நான் பாசத்துக்கு முன்னுரிமை கொடுப்பதே இல்லை. அதில் வழுக்கிவிழுவது அபத்தம். அறிவுபூர்வமா சிந்திச்சதுல கடமை என்பதைத்தான் நான் மதிக்கறேன்.உன் அ்ப்பாவிற்கான என் கடமையை சரியா முடிச்சேன் ..உன்னைப்படிக்கவைச்சி கல்யாணம் செய்கிறவரைக்குமான என் கடனையும் முடிச்சேன்.கடைசியாய் இப்படி மூளைவளர்ச்சி இல்லாத பையனை காப்பது என் கடமை.. ஸ்பாஸ்டிக் என்றால் ஒரு குணப்படுத்த முடியாத நோய்,அவர்களுக்கு ஆதரவான தேவைகள் இருக்கும் பட்சத்தில் நீண்ட நாட்கள் வாழ முடியும்..இந்த நோய் உனக்கு வந்தாலும் என்கடமையை செய்வேன்”
”சரி ....நீ புலம்பிக்கொண்டே இருக்கிறாய், நான் சாம்பலைக்கொண்டு காவேரில கரைச்சிட்டு பத்தாம் நாள் வரேன் ,என்ன?”
கொள்ளிபோட்டவன் கைலயே அதையும் செய்யவைப்பேன்... உனக்கு ஒழிஞ்சா திரும்பிவா”
”என்னம்மா கிண்டலா? எனக்கும் கடமை இருக்காதா?”
”ஆமாம்பா கல்யாணமான இந்த பத்து வருஷத்துல உன் கடமையைதான் நான் பார்த்திட்டுவரேனே உன் அப்பா ஒரு அப்பாவி வாயில்லாப்பூச்சி ,,பக்கவாதம்வந்து படுக்கையோட கிடந்தவரைபார்க்க வராமல் போன உன் கடமையைத்தான் கண்ணால் பார்த்தேனே... மாசாமாசம் அதுவும் வாசுமாமா போன்பண்ணி நினைவுபடுத்தினால் பாங்குக்கு பணம் அனுப்புவாய் கடனேன்னுதான்! கடமையின் நிறம் கருப்பு போல இருக்கு.
கருப்பு ஒண்ணுதான் நிறம். மத்த எல்லா வண்ணமும் சாயம்தான்.. எதுவுமே அக்னில போட்டா கருத்துப் போயிட்றது இல்லயா.. ஆனா சாயம்
கருத்துப்போறதுன்னு சொல்றதில்லையே.. வெளுத்துப் போறதுனு சொல்றா!.”
”அம்மா! ஓவரா பேசாதே. இனி உன்னையும் தம்பியையும் நான் தானே பார்த்துக்கணும்? ”
”எப்படிப் பார்த்துக்கொள்வாயப்பா? உன் பம்பாய் ஃப்ளாட் ரொம்ப நாகரீகமானவங்க வாழும் இடமாமே? அங்கே இந்த மூளை வளர்ச்சி இல்லாத தம்பியைக்கூட்டிட்டுப் போகமுடியாதுன்னு உன் பொண்டாட்டி சொல்லிட்டாளே அன்னிக்கே.?.அவளுக்கு எல்லாமே அழகாய் இருக்கணும்னு அடிக்கடி சொல்வா..அம்மாகூட இப்போ பழைய அழகில்லை, இனிபூவும்பொட்டும் போய் அசிங்கமாயிடுவேன். ஆனா நெஞ்சுல உரம் இருக்குப்பா... கணவனை இழந்த பெண்களுக்கு இது கொஞ்சம கூடுதலாகவே வந்துடும். அதனாலதான் புருஷன் போனாலும் தனி ஒருத்தியா குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிவிடுகிறாள் ஒரு பெண். அந்த நெஞ்சுரம் தான் பல எதிர்ப்புகளை தாங்கிக்கொள்ள உதவியா இருக்கு.. அப்பாவை நீ உயிரோட இருந்தப்போ வந்து பார்க்காததையும் நான் இப்போ குத்தமாசொல்லலை...உன் பாட்டியோடு இருந்த சமயத்தில், (அவருக்கு அப்போது 106 வயதுக்கு மேல்) சிவப்பெறும்பு அவரைக் கடித்துவிட்டது. மெல்ல கடிபட்ட
இடத்தைத் தடவி, எறும்புக்கு மென்னி கின்னி முறிந்துவிடாமல் எடுத்துப் போட்டார். பிறகு சொன்னார். ‘வெய்ய காலம். சின்ன ஜீவன். அதென்ன பண்ணும் பாவம். எத்தயாவது பிடிச்சுண்டா தேவலாம்போல இருக்கோ என்னவோ...‘. அப்படித்தான் பிள்ளைகளின் அலட்சியத்தையும் பெத்தவங்க
நினைக்கிறாங்கப்பா...“
வசந்தா நிதானம் இழக்காமல் இப்படிச்சொல்லி முடிக்கும் போது வக்கீல் உடையில் ஒரு இளைஞன் வீட்டிற்குள் நுழைந்தான்.
வாசுதேவன் தனது அறுபது வயதைக்கடந்த நிலையிலும் ஓட்டமாய் ஓடி அவனை வரவேற்றார்.
“வாப்பா மாதவா உன்னைத்தான் எதிர்பார்த்திட்டே இருக்கோம்.... ” என்றார் உற்சாகமாக..
“எங்க வாத்தியார் விஷயமாச்சே டிலே பண்ணுவேனா அங்கிள்? அவரால படிச்சி முன்னுக்குவந்த மாணவன்..இன்னிக்கு திருச்சில பிரபல வக்கீலா நான்
இருக்கேன்னா அது திருமலைசார் அன்னிக்குப்போட்ட கல்விப்பிச்சை.“ என்று நெகிழ்ந்தான்.
வசந்தா அவனைப்பார்த்து புன்னகை செய்தபடி,” இப்படித்தாம்பா அன்னிக்கு அமெரிக்காலேருந்து சதீஷ்னு ஒரு பையன் வந்தான்...அவன் வந்தவேளை எங்கவாழ்க்கைலயும் வெளிச்சம் வந்துவிழுந்தது. அப்போ உங்க வாத்தியாருக்கு கைகால் சுவாதீனமாகத்தான் இருந்தது ..சதீஷ் ஆர்வமாய் தன் வாத்தியார் செய்யும் பூஜையையும் அன்னிக்குப்பார்த்தவன் சட்டுனு கண்மலர்ந்தான் அன்னிக்கு பூஜை த்தட்டில் இருந்த அந்த சாளகிராமங்கள் சில அவன் கண்ணில் பட்டதும், அவைகளைப்பற்றி அவன் பூரித்துச்சொன்னதும் அப்புறம் அந்தக்கல்லை கின்னஸுக்கு தெரியப்படுத்தியதும் எதிர்பாராமல் நடந்தவைகள்.. “ என்றாள் பெருமூச்சுவிட்டபடி.
.
”சதீஷால் திருமலைசாருக்குக்கிடைச்சது ஒரு கோடி ரூபாய்!
World largest Ruby and Saphire weighing 2805 carats in original form, the worth was equal to U.S Defence budget.
The Guenness Book of world records lists these gems as the largest gems in the world!
ஆமாம் உலகிலேயே பெரிய அளவிலான மாணிக்கக்கல்லும் பச்சைமரகதக்கல்லும் என் ஆசானின் வீட்டில் பூஜை அறையில் வழிப்பாட்டுக்கற்களா இருந்து பூஜிக்கப்பட்டு வந்திருக்கு! பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது எத்தனை நிதர்சனமான உண்மை! சதீஷ் விவரம் சொன்னதும் திருமலை சார் அதைக்கொடுக்க முன் வந்ததே எதிர்பாராததுதான்! ஆனா உயிலைப்படிச்சா
காரணம் விளங்கிடும்!உடனே திருச்சி தில்லை நகர்ல அப்போ விலைக்கு வந்த வீட்டை வாங்கிப்போட்டுட்டார் .திருமலை சார். பிறகு ஒருநாள் என்னை
வைத்துக்கொண்டு இரண்டு சாட்சிகளுடன் உயில் எழுதி வச்சிருக்கார்.. அதை வாசிக்கத்தான் வந்திருக்கிறேன்!” மாதவனபெருமையுடன் இப்படிச்சொன்னதும் மோகன் பொறுக்கமுடியாமல் கேட்டுவிட்டான்,
”இவ்வளவு நடந்திருக்கு இந்தவீட்டின் மூத்தபையன்னு எனக்கு எதுவுமே சொல்லலையே! போகட்டும் உயிலையாவது என் முன்னாடி
வாசிக்கறீங்களே அது போதும்..அப்பாவுக்குப்பெருந்தன்மை அதிகம்.. அவர் பாரபட்சமாக எல்லாம் நடந்திருக்கமாட்டார் தன் உயிலில்.” என்றான் உறுதியான குரலில்.
ஆனால் உயிலை மாதவன் வாசித்து முடித்ததும் முகம் வெளிறிப்போனவனாய்,” எ என்ன ? அந்த வீட்டை ஸ்பாஸ்டிக் சொசைட்டிக்கு எழுதி வச்சிட்டாரா? மனசுல என்ன பெரிய பாரி வள்ளல்னு நினைப்பா? மும்பய்ல நான் ஒரு ஃப்ளாட் வாங்க நினச்சிருக்கேன் அதுக்காவது உதவி இருக்கக்கூடாதா? பிள்ளைகளை படிக்க வச்சா மட்டும்போதுமா சொத்து சுகம்னு சேர்த்து வைக்கணும்னு பெத்தவங்களுக்குத்தோணாதா? “என்று ஆவேசமாய் கூச்சல் போட்டுக்கொண்டே இருக்க, வீட்டைக்காலிபண்ணிக்கொண்டு சின்னப்பையனுடன் அந்த மாற்றுத்திறனாளிகளின் மையத்தில் நிரந்தரமாய் தங்கி சேவை செய்ய, வசந்தா ஆயத்தமானாள்.
*************************************************************************************************************************************************************************************************