Social Icons

Pages

Monday, October 01, 2012

மானுடம் வெல்லும்.(சிறுகதை)


“பெரியப்பா... நாளைக்குக் காசிக்குப் புறப்படுகிறோம். மூட்டை, முடிச்சைக் கட்டிண்டு தயாரா இருங்க...’’

கணேசன் இப்படிச் சொன்னதும் ராமநாதனுக்கு திகைப்பானது. சென்னைக்கு அருகிலிருக்கும் ஸ்ரீபெரும்புதூருக்கு ஒருமுறை போவதற்கு தான் ஆசைப்பட்டதைக் கூறியபோது கணேசனும், அவன் மனைவி வசந்தாவும் கூறியது நினைவிற்கு வந்தது.

எழுபது வயசுக்கு வீட்டோடு கிடக்காமல் அதென்ன ஊரைச் சுத்தற ஆசை, உங்களுக்கு? குழந்தை குட்டி இல்லாத உங்களை, ஏதோ அந்த நாளில் என்னை வளர்த்துப் படிக்க வைத்த தோஷத்துக்காக சோறு போட்டு வச்சி காப்பாத்தத்தான் முடியும்; ஊரைச் சுத்திக் காட்டவா முடியும்? எனக்கும் வயசு நாப்பதாச்சு; பொண்டாட்டி, ரெண்டு பசங்க இருக்கு. புரிஞ்சிண்டு நடங்க பெரியப்பா...’’ என்று கணேசன் சீறினான்.

“பள்ளிக்கூட வாத்தியாராயிருந்து ரிடையராகி பிசாத்து பென்ஷனை எங்க கையில் கொடுத்துக்கிட்டு இருக்கிற உங்களுக்கு இந்த மாம்பலத்துல இருக்கிற கேயில்கள் போதாதாக்கும். ஸ்ரீஈஈஈஈஈஈ பெரும்புதூர் போய்ச் சேவிக்கணுமாக்கும்?’’ வசந்தா எரிச்சலும் கிண்டலுமாய்ச் சொன்னாள்.

ராமநாதன் அதற்குப் பிறகு ஏன் வாயைத் திறக்கிறார்?
ஒரு மனிதனுக்கு அந்திமக்காலத்தில் மனைவி உடன் இருப்பது சாலச்சிறந்தது; பெற்ற மகனிருப்பது சிறந்தது; உறவுக் கூட்டம் உறுதுணையாயிருந்தால் ஓரளவு நல்லது; இவையாவும் இல்லாவிடினும் நிறைந்த செல்வமிருப்பின் அது தெய்வ பலத்திற்குச் சமம். ராமநாதனுக்குத் தன்னிடம் அப்படி எதுவுமே இல்லாததில் தன் மீதே வெறுப்பாக வந்தது. அதனாலேயே பல நேரங்களில் மௌனமாக இருந்து விடுவார். கணேசன் சொல்வது போல அவனை வளர்த்த தோஷத்திற்கு அவன் இவ்வளவு செய்வதே பெரிதுதான். பாங்க் கிளார்க்காக இருந்தவன் சமீபத்தில் ஆபீசர் உத்தியோகத்திற்கான பரீட்சை எழுதித் தேறி விட்டதாய் அவன் பையன்கள் மூலம் கேள்விப்பட்டார். அதைக் கூட கணேசன் அவரிடம் சொல்லாததில் இலேசான வருத்தமென்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.


இப்போது திடீரென காசிக்கு அழைத்துப் போவதாய் கணேசன் சொன்னதும் அந்த வருத்தமெல்லாம் போன இடம் தெரியவில்லை. அவன் சொன்னது போல மூட்டை, முடிச்சுகளைக் கட்ட ஆரம்பித்தார்.
“தாத்தா! காசிக்குப் போனால் எதையாவது விடணுமாமே, அப்பாவும் அம்மாவும் சொன்னா...? நான் உருளைக்கிழங்கு விடப் போறேன்... பத்ரி, நுடுல்ஸ் விடப் போறானாம்!’’ பத்து வயது பேரன் நந்து, தன்னிடம் இப்படிக் கூறியதும் ராமநாதன் சிரித்தார்.


“நந்து! உனக்கு உருளைக் கிழங்கு பிடிக்காது. பத்ரிக்கு நுடுல்ஸ் பிடிக்காது. அதை விடறது சரியில்லை. வாஸ்தவத்துல பிடிச்சதைத்தான் விடணும். உதாரணத்துக்கு எனக்குக் கத்திரிக்கா பிடிக்கும். நாகப்பழம் பிடிக்கும். ரெண்டையும் நான் காசி போனதும் சாப்பிடறதை விடணும்...’’“அப்படியா தாத்தா? நமக்குப் பிடிச்சதைத்தான் விடணுமா? எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும். பத்ரிக்கு பாப்கார்ன் பிடிக்கும். நாங்க எப்படி அதைவிட முடியும்? முடியாது, தாத்தா...’


’ “குழந்தைகளுக்கு எதையும் விட வேண்டிய அவசியமில்லை நந்து! பெரியவர்களுக்குத்தான் அந்த ஏற்பாடு... நீயும், பத்ரியும் சின்னக் குழந்தைகள்!’’அப்பாவும், அம்மாவும் பெரியவங்க தானே, அவங்க எதை விடப் போறாங்களாம்?’’தெரியலையேப்பா? அவர்களுக்குப் பிடிச்சதைத்தான் விடுவார்களாயிருக்கும்? எனக்குக் கத்திரிக்கா, நாகப்பழம் மாதிரி அவங்களுக்கும் ஏதாவதிருக்காதா, என்ன?’’இருக்கும்... இருக்கும்...’’ நந்து பெரிய மனுஷன் போல தலையை ஆட்டினான்.

காசியில் விஸ்வநாதர் கோயில், அன்னபூரணி கோயில் என்று சகல ஆலயங்களின் தரிசனம் முடித்து, கங்கையில் முழுகி, சாஸ்திரங்களைக் கொண்டு இறந்தவர்களுக்கு திதிக் காரியங்கள் முடித்து, தனக்குப் பிடித்த கத்திரிக்காயையும், நாகப்பழத்தையும் துறப்பதாக பிரமாணம் செய்து நிமிர்ந்தார் ராமனாதன். கங்கையில் குளித்ததோ என்னவோ மனசையே அலம்பி விட்ட மாதிரி இருந்தது.


கண் மூடித் தியானித்தபடி அப்படியே அமர்ந்தவர் மறுபடி எழுந்த போது அருகில் கணேசனையோ, அவன் மனைவியையோ, பேரன்களையோ காணாது திகைத்தார். மொழி தெரியாத புது இடத்தில், குழப்பமாய்த் தேட ஆரம்பித்தார். போலீ°ஸ்உதவியை நாடினார். காசி வந்ததும் தங்கிய ஒரு மடத்தின் விலாசம் நினைவிற்கு வர சட்டென்று அதைக் கூறினார். போலீஸ் அவரை அங்கு கொண்டு விட்டுச் சென்றது.


மடத்தின் அதிபதி சந்துரு ஒரு தமிழர்தான். ராமநாதனைக் கண்டதும், அதிர்ச்சியுடன் புருவம் தூக்கினார்.


“என்ன மாமா, நீங்க போகலையா உங்க பிள்ளை, மருமகள் குடும்பத்தோடு ஊருக்கு?’’ என்று கேட்டார்.“ஊ... ஊ... ரு.... க்.... கா?’’ ராமநாதன் விழித்தார்.ஆமா... மூணு மணி சாவகாசமாச்சே. அவங்க இங்க வந்து பெட்டி படுக்கையத் தூக்கிண்டு போயீ?’’
அ... ப்... ப... டி... யா?’’
“ஆமாம். உங்களை மறந்து விட்டுட்டுப் போயிட்டாளா, என்ன?’’
“இருக்கலாம்... ஓரிரு நாள் நான் இங்க தங்கட்டுமா. கணேசன் திரும்ப வந்து அழைச்சிட்டுப் போற வரைக்கும்?’’ குழந்தை போலக் கேட்ட ராமனாதனை வேதனையுடன் பார்த்தார் அந்த நடுத்தர வயது மனிதர். ஓரிரு நாள் என்ன, ஒரு வாரமானது. கணேசன் வரவுமில்லை; அவனிடமிருந்து ஒரு தகவலுமில்லை.
“மாமா! இது தர்ம மடம்தான். உங்களை மாதிரி வயசானவங்களுக்குச் சாப்பாடு போடறது எங்களுக்கும் பாக்கியம்தான். ஆனாலும் உங்களை நிரந்தரமா இங்க வச்சிக்கணும் என்றால் உங்களை வைத்துக் காப்பாற்றும் நபர்களின் அனுமதி வேணும். அதைக் கேட்க நான் தீர்மானிச்சுட்டேன். கணேசன் போன் நம்பர் ஞாபகம் இருக்கா, உங்களுக்கு?’’
“சந்துரு... கணேசனுக்கு வீட்டில் போன் கிடையாது. ’பிபி’ நம்பர் தெரியும். எதிர் வீடுதான்...’’ என்று போன் நம்பரைச் சொன்னார்.
சந்துரு போன் செய்து கேட்டபோது, “கணேசன் தனக்கு ஆபீஸர் ப்ரமோஷன் கிடைத்ததும், வடக்கே எங்கோ உத்திரப் பிரதேசத்தில் வேலை மாற்றலாகி அங்கு போய் விட்டார். காசி போவதற்கு முன்பே இங்கு எல்லாரிடமும் அவர் சொல்லிவிட்டு, ஒரு வழியாய் வீட்டையும் காலி செய்து விட்டு, காசி வழியே உத்திரப்பிரதேசம் போகப் போவதாகவும் சொன்னார். வேறு விவரம் எதுவும் தெரியாது...’’ என்றார் எதிர் வீட்டு மனிதர்.
சந்துரு இதைத் தயங்கித் தயங்கி ராமநாதனிடம் கூறவும், அவர் முகம் ஏமாற்றத்தில் தொங்கிப் போனது. காசியில் கடைசியில் தன்னை விட்டுவிடத்தான் கணேசனும், வசந்தாவும் இங்கு அழைத்து வந்தார்கள் என்று தெரிந்த போது மனம் உடைந்துதான் போனது.

“மாமா... மாமா... கவலைப்படாதீங்க. உங்களை
 மாதிரி கடைசிக் காலத்தில் பிள்ளைகளால் உறவினர்களால் கைவிடப் பட்டவங்களைக் காப்பாத்தி ரட்சிக்கத்தான் எங்க தாத்தா இங்க தர்மமடம் ஏற்பாடு பண்ணி இருக்கார். நீங்க கவலைப்படாதீங்க மாமா... நான் உங்களைக் கைவிட மாட்டேன்...’’ சந்துரு தழுதழுத்த குரலில் கூறவும், ராமனாதன் நெகிழ்ந்து போனார்.

கணேசனைப் போன்ற நபர்கள் பிறக்கும் பூமியில்தான் சந்துருவைப் போன்றவர்களும் பிறக்கிறார்கள்.
ராமநாதனுக்கு, சந்துருவின் மீது மிகுந்த மதிப்பும், அளவு கடந்த அன்பும் பெருகியது. காசி வாழ்க்கைக்கு அவர் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்ட ஒரு சில நாட்களில்... அன்று திடீரென கணேசனிடமிருந்து போன் வந்தது.
சந்துரு மகிழ்ச்சியுடன் ராமநாதனை அழைத்து, “மாமா! உங்கள் தம்பி மகன் கணேசன், மனம் திருந்திட்டார்னு நினைக்கிறன். உங்களை உடனே பேசச் சொல்றார், வாங்க’’ என்று அவர் அறையினின்றும் கைபிடித்து மெல்ல நடத்தி, மடத்து ஹாலிற்குக் கொண்டு போனார்.
ரிஸீவரை அவர் கையில் தந்த சந்துரு, “பேசுங்க மாமா!’’ என்றார்.
“ஹ... ஹலோ... நா... நான் பெரியப்பா பேசறேன்’’ என்றார் ராமநாதன்.
“பெரியப்பா, சவுக்கியமா? ரொம்ப ஸாரி. அன்னிக்குக் காசியில உங்களை வழி தவறி விட்டுட்டோம். ஊர் மாறி ஜாகை வரும் அவசரம் வேறு. எப்படியோ அந்த மடத்தில்தான் இருக்கணும் நீங்க என்று வசந்தா சொன்னாள். நல்ல வேலை அங்கேயே இருக்கீங்க! பெரியப்பா... முக்கியமான விஷயம். அதுக்குத்தான் ஃபோன் பண்ணேன். அன்னிக்கு மெட்ராஸ்ல காசிக்கு ரயில் ஏறும் போது, சென்ட்ரல் ஸ்டேஷனில் நான் ஒரு லாட்டரிச்சீட்டு வாங்கினேன். அதை உங்களுக்கு வாங்கின சீனியர் சிடிஸன் ரயில் டிக்கெட்டோடு தவறுதலா சேர்த்து வச்சிட்டேன். மறுபடி அந்த லாட்டரிச் சீட்டை வாங்கிக்க மறந்துட்டேன். இப்பத்தான் லாட்டரி ரிசல்ட் வந்தது. பதினைந்து லட்ச ரூபா பரிசு விழுந்திருக்கு.!ஆகையினால அந்த சீட்டை எடுத்து வைங்க, நான் ப்ளேனில் வரப் போறேன். சீட்டு நம்பர் உடனேயே நான் அன்னிக்கு டைரில எழுதி வச்சிக்கிட்டேன். அதனால நிச்சயமா அதே சீட்டுக்குத்தான் பரிசு என்பது உறுதி.ஆமா, சீட்டை பத்திரமா வைச்சிருக்கீங்கதானே?’’ கணேசன் இப்படிக் கேட்டு முடித்ததும் ஒருகணம் யோசித்த ராமனாதன் அடுத்த கணம், “ அடடாகணேசா! கங்கையில முழுகறப்ப அதையும் சேர்த்து முழுகிட்டேன், டிக்கெட், என் உடமைகள் எல்லாமே போய்டிச்சுப்பா. அனாவசியமா இங்கே அலையாதே’’ என்றார்சகஜமான குரலில்.

“ஐயோ பெரியப்பா. அறிவு இருக்கா உங்களுக்கு, பதினைஞ்சு லட்சம்! கங்கயில அதையும் மூழ்கடிச்சிட்டீங்களா? ஐயோ ஐயோ...முட்டாள்தனமா, அறிவுகெட்டத்தனமா,மடத்தனமாய் இப்படி...’’ அவன் கத்திக் கொண்டே இருக்க, ராமநாதன் ரிஸீவரைக் கீழே வைத்தார்.

சந்துரு திகைப்பும், குழப்பமுமாய், அவரையே பார்த்தார்.

“என்ன ஆச்சு, மாமா?’’ தயக்கமாய்க் கேட்டார்.

“சந்துரு! உன் தர்மஸ்தாபனத்திற்கு நான் ஏதாவது செய்ய நினைச்சிருந்தேன். இப்போ கடவுள் அதற்கு ஒரு வழி பண்ணிட்டார்!’’ என்று கூறிச் சிரித்தார்.

(மங்கையர் மலரில்  சில வருடங்கள் முன்பு பிரசுரமான கதை..இன்று முதியோர் தினம் என்பதால்  இப்போது  இங்கே  அளிக்கிறேன்)


--

16 comments:

 1. மிகவும் அருமையான கதை.

  நான் மீண்டும் மீண்டும் பலமுறை படித்தேன்.

  அழுதேன்.

  மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.

  பிறகு கொஞ்சம் சிரித்தேன்.

  தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

  வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  மங்கையர் மலரில் பிரசுரம் ஆனதற்கும் என் அன்பான வாழ்த்துகள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 2. இன்று முதியோர் தினம். இன்றைய தினத்திற்கு பொருத்தமான கதை. திக்கற்றோருக்கு தெய்வமே துணை என்பார்கள். உங்கள் கதையும் அதனை தெளிவுபடுத்துகிறது.

  ReplyDelete
 3. நல்ல கதை.மனம் திருந்திதான் போன் பண்ணானோ என்று ஒரு க்ஷணம் நினைத்தேன்.இப்படியும் ஈரமில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள்.காசியில் மாத்திரம் அல்லாது நிறைய கோவில் உள்ள இடங்களில் இந்த மாதிரி மடங்கள் நிறுவ வசதியுள்ளவர்கள் உதவினால் கோடி புண்ணியம் உண்டு

  ReplyDelete
 4. இறுதி அருமை ஷைலு அக்கா

  ReplyDelete

 5. முதியோர் தினத்தை ஒட்டி பதிவிட்டுள்ள கதை நன்றாக இருக்கிறது
  இப்படியும் மனிதர்களா என்று எண்ண வைக்கிறது. கையில் பணம் இல்லையென்றால் பிணத்துக்கு சமம். வயதானவர்கள் சுதாரித்துக்கொள்ள வேண்டும். பயமுறுத்துகிறீர்கள்.

  ReplyDelete
 6. இன்றைய தினத்திற்கு மிகவும் பொருத்தமான கதை ஷைலஜாக்கா.

  சந்தர்ப்பவாதிகளை நன்றாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள். அருமை

  ReplyDelete

 7. கணேசனைப் போன்ற நபர்கள் பிறக்கும் பூமியில்தான் சந்துருவைப் போன்றவர்களும் பிறக்கிறார்கள்.//

  நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
  அதனால் தான் மானுடம் வாழ்கிறது, வெல்கிறது.

  அருமையான கதை.

  முதியோர் தின சிறப்பு கதை மங்கையர் மலரில் வந்தமைக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. சிறப்பான நாளில் சிறப்பான கதை... மங்கையர் மலரில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

  மிக்க நன்றிங்க...

  ReplyDelete
 9. ராமநாதன் எடுத்த முடிவு மிகச் சரி. மனிதம் இறந்து போனவனை மகன் என்று எப்படிச் சொல்ல முடியும்? நல்ல தருணத்தில் படித்து மனநிறைவைத் தந்த சிறுகதைக்கா. சூப்பர்.

  ReplyDelete
 10. பிரமாதம்.. பொருத்தமான முடிவு.

  ReplyDelete
 11. கதையை மனம் ஒன்றிப் படித்தேன்.

  அடி நெஞ்சில் ஒட்டிக் கொண்டுவிட்டது.

  அட்டகாசமான எதிர்பாராத முடிவவு.

  நெஞ்சு நிறைந்த பாராட்டுகள்.

  ReplyDelete
 12. மிகவும் அருமையான கதை சகோதரி!


  உண்மைவிரும்பி.
  மும்பை.

  ReplyDelete
 13. Anonymous6:19 PM

  மனதைப் பிசைந்த உருக்கமான கதை. இது கதையென்றாலும் உண்மையிலும் இது போல் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் கதையின் முடிவு போல் எல்லோருக்கும் நடப்பதில்லை. அதனால் கண்களில் நீர் கோர்த்தது. மானுட உணர்வுகளைத் தொலைத்துவிட்ட இந்தக் காலத்துக்கு தேவையான கதை. நன்றி!

  எஸ். பழனிச்சாமி

  ReplyDelete
 14. கதைக்கு கருத்து தெரிவித்த அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி.. வாசித்து கருத்து கூறுவது என்பது போற்றவேண்டிய செயல். அந்த வகையில் இங்கே பின்னூட்டமிட்ட அன்பு உள்ளங்களுக்கு மறுபடி நன்றி.

  ReplyDelete
 15. மறுபடி எழுதத் தொடங்கினது தெரியாம போச்சே! கொஞ்ச நாளா செக் பண்ணலை.

  அட்டகாசமான ரிடர்ன். வரச்சொல்லிட்டு அப்புறம் விஷயத்தைச் சொல்லியிருக்கலமோ? (குதர்க்கம் எனக்கு ரொம்பவே வரும் :)

  ReplyDelete
 16. முதியோர் தினத்திற்கு பொருத்தமான கதை. மனதைப் பிசைந்த உருக்கமான கதை. நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
  அதனால் தான் மானுடம் வாழ்கிறது,

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.