Social Icons

Pages

Tuesday, October 23, 2012

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்!





சங்கீதத்தின் உயிர்நாடியாக விளங்குவது வீணை. வீணையை உற்பத்தி செய்வதும் சரி, பயில்வதும் சரி கடினமானது. வீணை, ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியாய் விளங்கும் சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் தவழும் உன்னத வாத்தியமாகும். தமிழ் இலக்கியங்களிலும், பண்டைய சிற்பக்கலையிலும், ஓவியக்கலையிலும், அதி முக்கிய வாத்தியமாக அன்றும், இன்றும் விளங்குவது வீணை தான்.
வீணை மிகவும் தொன்மை வாய்ந்தது. ஆன்மீகம் சார்ந்தது, வரலாற்றுப் பெருமைமிக்கது. இலங்கை மன்னன் இராவணன் வீணை வாசிப்பதில் உயர்ந்தவனாகவும்  அவனது வீணை இசையில் எல்லாம் வல்ல சிவபிரானே லயித்ததாகவும் புராணக்கதை கூறும்.
 
வீணா  வேணு வினோத  மண்டித கரா   என ராஜராஜேஸ்வரியைப்போற்றுகிறோம்.
வீணா வேணு மிருதங்க வாத்ய ரசிகாம் என்கிறார் மீனாக்ஷி பஞ்சரத்னத்தில் ஆதிசங்கரர்.
 
 
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் என்று சரஸ்வதியை துதிக்கிறார் மகாகவி பாரதி.
 
 

இன்றும் திருவரங்கம் அரங்கன் கோயிலில் இரவு திருவரங்கனுக்கு ஏகாந்த வீணை இசை வாசிக்கப்படுகிறது.(வேறு கோவில்களிலும் இருக்கலாம்)
 
 
இன்று தமிழ் கலையுலகில் அரங்கத்தை அலங்கரிக்கும் அதி சிறப்பு வாத்தியங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடித்துள்ள வாத்தியமாக விளங்குவது வீணை…
 
 பலா மரமே இவ்விசைக் கருவியினை வடிவமைக்க பெரிதும் பயன்படுத்தப்படும் என்றாலும் ஒவ்வொரு வகையான வீணையைப் பொறுத்து வீணை  செய்யப்பயன்படுத்தப்படும் மரமும் மாறுபடுகிறது.. கலைவாணி சரஸ்வதிதேவியின் திருக்கரங்களில் காணப்படும் வீணையானது சரஸ்வதிவீணை           அல்லது இரகுநாத வீணை அல்லது தஞ்சாவூர் வீணையென்று அழைக்கப்படும். தஞ்சையை ஆண்ட மன்னனான இரகுநாத மன்னனின் காலத்தில் சிறப்புற வடிவமைக்கப்பட்ட வீணையே மேற் குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய வீணை இசைக் கருவியாகும். இது தவிர நடைமுறையில் பல வகைப்பட்ட வீணை இசைவாத்தியங்கள் இன்று வழக்கத்தில் இடம்பெற்ற போதும் பொதுப்படையில் மேலே குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய தஞ்சாவூர் வீணையே புழக்கத்திலும் தமிழரின் பாரம்பரிய நாரிசை வாத்தியமாகவும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது.
மேற்குறிப்பிடப்படும் வீணை ஆனது உற்பத்தி செய்யப்படும் இடத்தின் தன்மைக்கு ஏற்ற வகையிலும் அதன் ஒட்டு மொத்த அழகியல் அலங்கரிப்பு உருவஅமைப்பிலும் தஞ்சாவூர் வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாகவும் விளங்குகின்றது. அதே சமயம் மைசூர் வீணையானது அலங்கரிப்பிலும்,வடிவமைப்பிலும் குறைந்ததாகவும், முன்குடமானது அளவில் பெரியதாகவும் விளங்குகின்றது. அவ்வாறே தஞ்சாவூர் வீணையின் (சரஸ்வதி வீணை)
மற்றுமொரு உற்பத்தி பூமியாக திருவனந்தபுரம் விளங்குகின்றது. திருவனந்தபுர வீணை எடையில் குறைவானதாகவும் நீளத்தில் கூடியதாகவும் விளங்குகின்றது. தஞ்சாவூர் வீணை (சரஸ்வதி வீணை), மைசூர், மற்றும் திருவனந்தபுரம், ஆகிய இடங்களை உற்பத்தி மையமாகக் கொண்டு விளங்குவதுடன் அடிப்படையில்அதன் அலங்கரிப்பு, உருவ வடிவமைப்பு என்பன மாற்றம் பெற்ற போதும் அதன் பாவனை, நுட்பவியல், நுணுக்க வடிவமைப்பு என்பனவற்றில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை.
 
கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப்பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை அல்லது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை எனப் பல வகைப் பெயர்களால் குறிப்பிட்டு அழைக்கப்படினும் யாவும் ஓரே வகையான வீணையே ஆகும். பொதுவாக சாதாரண மக்களால் வீணை வாசித்தல் என சொல்லப்பட்டாலும் வீணை மீட்டலே சரியான வார்த்தை ஆகும் .

வீணைகளையும் தம்புராக்களையும் உற்பத்தி செய்யும் தொழிலில் திருச்சியும் நாத பரம்பரையை வளர்ப்பதில் தன்னாலான தொண்டு புரிந்து வருகிறது. பல வெளிநாடுகளுக்கு இந்த வாத்தியங்களை ஏற்றுமதி செய்துவரும் ராம்ஜீ கம்பெனியை திருச்சி ஆண்டார் தெருவில் மிக எளிமையான தோற்றத்துடன் ஆனால் உள்ளே கலையின் சாங்கோபாங்கமான விளக்கமுடன் இருப்பதை சிறுமியாய் இருக்கும்போது அப்பாவுடன் சென்று காண நேர்ந்தது. அப்போது அதன் உரிமையாளராக இருந்தவர் அப்பாவிடம்,” இதை தொழில்னு சொல்லமுடியாதுங்க சார் உயிர்த்துடிப்புள்ள கலைன்னு தான் சொல்வேன் வீணை தம்புராக்கள் செய்யறது மட்டுமில்ல அவைகளை ரிப்பேருக்கு யாரும் கொண்டுவந்தா என் சொந்த செலவுலயே செய்து் தந்துடுவேன்” என்றார் மகிழ்ச்சியாக.

ஒலிநயத்தைப்பற்றியும் சங்கீததைப்பற்றியும் நூற்றுக்கணக்கான நூல்கள் அந்ததொழிலகத்தின் சிறிய நூல்நிலையத்தில் இருந்தன உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த நூல்களைப் பார்த்துதான் சரி செய்துகொள்கிறார்களாம். அந்த வாத்திய தொழிலகத்தின் பின்பக்கம் உள்ள கூடத்தில் முதல் உற்பத்திக்கூடங்கள் இருந்தன ஒருவர் தண்டியை சரி செய்துகொண்டிருந்தார் இன்னொருவர் யாளிமுகப்புக்கு ஃபினிஷிங் டச் கொடுத்தார். வேறொருவர் சுருதிக் கம்பிகளை இணைத்துக்கொண்டிருந்தார் . உற்பத்திக்கட்டங்கள் பலவாறாகக் காணப்பட்டன.
சாதகத்தால் பலம் பெறுகிறது சங்கீத ஞானம் அதேபோல ஆற அமர சிந்திச்சி செதுக்கி நகாசுகள் செய்து நாதப்பரிசோதனை செய்து பெருமை பெறுவதுவீணையாகும்” என்றார் அங்கிருந்த ஒருவர். மேலைநாட்டு சங்கீதவிற்பன்னர்கள் திருச்சியின் இந்த இசைக்கருவி தொழிற்கூடத்திற்குவந்து நாதப்பரிவர்த்தனை செய்து சென்றிருக்கிறார்களாம். பிரமாண சுருதி என்றும் சுருதி ஆனந்தம் என்றும் பெரியோர் கூறுவார்கள் நாதத்தின் உயிர் நாடியே சுருதி தானே!

உற்பத்தியாளராக வியாபாரியாக மட்டும் இல்லாமல் தன்னை ஒரு கலைஞராயும் அமைத்து தாம் உற்பத்திசெய்யும் தம்புரா வீணைகளை சுருதி மீட்டி சரி பார்த்தார் அன்று நான் சென்றபொது இருந்த அந்த உரிமையாளர்(பெயர் மறந்துவிட்டது)ஆண்டார் தெருவில் தயாராகும் வீணையைப்பற்றி அப்போது திருச்சி தொழிலதிபர் இப்படிக்கூறினார் என அப்பா விவரித்தார்,” வீணை இங்கே உற்பத்திச் செய்து விற்கப்படுகி்றது ஆனால் மறக்கப்படுவது கிடையாது! (A Veena is sold here, but is not forgotton)
 
 
இசைக்கருவிகளில் வீணை சிறந்தது ஏன் என்றால் அதை எளிதிலே உண்டாக்கிவிட முடியாதாம் நல்ல மரத்தைதேர்ந்தெடுத்து வெவ்வேறு பகுதிகளையும் அமைத்து அவற்றை இணைத்து தந்தி பூட்டி உருவாக்கவேண்டும். அழகிய பருவ மங்கைபோல் விளங்கும் வீணை கமகத்தில் சிறந்தது. எந்தக்கருவிக்கும் இல்லாத சிறப்பு வீணைக்கு உண்டு , ஆம், மற்ற கருவி்களை இயக்கும்போது ஒலிக்கும் விரல்களையோ வாயையோ எடுத்தால் ஒலி நின்றுவிடும் ஆனால் வீணையை மீட்டியவிரலை எடுத்த பிறகும்  அதன் கார்வை இனிதாக ஒலித்துக்கொண்டே இருக்கும் , பெண் மனம் போல!
 

10 comments:

  1. நல்ல நாளில் சிறப்பான பகிர்வு...

    அருமையாக எழுதி உள்ளீர்கள்...

    விழாக்கால வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  2. ராம்ஜீ கம்பெனியை திருச்சி ஆண்டார் தெருவில் மிக எளிமையான தோற்றத்துடன் ஆனால் உள்ளே கலையின் சாங்கோபாங்கமான விளக்கமுடன் இருப்பதை சிறுமியாய் இருக்கும்போது அப்பாவுடன் சென்று காண நேர்ந்தது. அப்போது அதன் உரிமையாளராக இருந்தவர் அப்பாவிடம்,” இதை தொழில்னு சொல்லமுடியாதுங்க சார் உயிர்த்துடிப்புள்ள கலைன்னு தான் சொல்வேன் வீணை தம்புராக்கள் செய்யறது மட்டுமில்ல அவைகளை ரிப்பேருக்கு யாரும் கொண்டுவந்தா என் சொந்த செலவுலயே செய்து் தந்துடுவேன்” என்றார் மகிழ்ச்சியாக.//



    // அந்த உரிமையாளர்(பெயர் மறந்துவிட்டது)ஆண்டார் தெருவில் தயாராகும் வீணையைப்பற்றி அப்போது திருச்சி தொழிலதிபர் இப்படிக்கூறினார் என அப்பா விவரித்தார்,” வீணை இங்கே உற்பத்திச் செய்து விற்கப்படுகி்றது ஆனால் மறக்கப்படுவது கிடையாது! (A Veena is sold here, but is not forgotton)//

    ராம்ஜி அன்ட் கம்பெனி உரிமையாளர் பெயர்: திரு ராமனாதன் அவர்கள். அவர்கள் வீட்டு எதிர் வீட்டில் தான் நாங்கள்
    1943 முதல் 2000 வருடம் வரை இருந்தோம். திரு ராம நாதன் அவர்களின் மூத்த பையன் திரு ராம கிருஷ்ணன். என்னுடைய பால்ய சினேகிதன். அவனும் நானும் ஒன்றாக 1956 வரை இ.ரெ.உயர்னிலைப்பள்ளியில் படித்தோம்.
    அவன் பெயர் தான் ராம்ஜி. ராம்ஜியின் இளவல்கள் பெயர் லக்ஷ்மணன், பரதன். மூன்று சகோதரிகள். லக்ஷ்மணன் ஆடிட்டர். பங்களூரில் தான் இருக்கிறார்.

    பரதன் இன்று திருச்சி உறையூரில் ராம்ஜி யின் திருமண் மண்டபத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.

    அவர்கள் வீட்டில் தான் வீணை தொழிற்சாலை. மரம் அறுக்கப்பட்டு இழைக்கப்பட்டு கம்பிகள் பொருத்தப்பட்டு
    ஒவ்வொரு நிலையிலும் செய்யப்படும் ப்ராஸஸ்களை நான் பக்கத்தில் இருந்து கவனித்து இருக்கிறேன். வீணை,
    தம்புரா, வயலின் கம்பிகளும் அங்கே நேர்த்தி செய்யப்பட்டன. எங்களுக்கும் இரண்டு வீணைகள் அவர்கள் தந்து இருக்கிறார்கள். என் அன்னை வீணை நன்றாக வாசிப்பார். அவர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு மூலைக்கதவும் சன்னலும் எங்கள் ந்டபைக்கூறும். என் மேல் திரு இராமனாதன் அவர்களுக்குத் தனியான அன்பு.

    ராம்ஜியும் நானும் இணை பிரியா நண்பர்களாக இருந்தோம். அவர்கள் வீட்டிலேயே தான் எப்போதுமெ நான்
    இருப்பேன். 1975 ல் திருமணமான ஒரு சில ஆண்டுகட்குள்ளாகவே திரு ராம்ஜி, எனது மறக்க முடியாத இனிய‌
    நண்பர் அகால மரணமடைந்தார். அந்த சமயத்தில் அவர் ஐ.ஐ.டி யில் கெமிகல் எஞ்சினியரங் பேராசிரியராகப்
    பணி புரிந்து வந்தார்.

    இன்று அந்தக் கம்பெனி இல்லை. ஆனால் என் போன்றவர்களுக்கு ராம்ஜீ அன்ட் கம்பெனி ஒரு லேன்ட் மார்க்
    புறத்தோற்றத்தில் மட்டும் அல்ல, என் நினைவுகளிலே.

    வீணை என்று சொன்னாலே எனக்கு எனது நண்பன் ராம்ஜி நினைவு தான் வரும். சரஸ்வதி பூஜை அன்று
    அவனது நினைவினைத் தக்கவாறு கொண்டு வந்தமைக்கு நன்றி பல.

    இந்தப் பதிவினைப்பற்றி நான் ராம்ஜியின் இளைய சகோதரர் திரு லக்ஷ்மணன் அவர்களுக்கு இதோ ! இப்பொழுதே
    இ மெயில் மூலம் தெரிவிப்பேன்.

    சுப்பு ரத்தினம்.
    PS: They know me as sury of vakkeel aaththu paiyan. Indeed, for everyone in their family, there is a class mate from our family

    ReplyDelete

  3. சற்று முன் இராம்ஜியின் இளவல் திரு பரதன் அவர்களிடம் பேசினேன். அந்த வீட்டில் வீணை தயாரித்தவர்கள்
    அந்தத் தொழில் நுட்பக்கலைஞர் பெயர்கள், கிச்சுலு, பழனி.
    இராம்ஜியும் வீணைக்கம்பியின் நயத்தினை சரி பார்ப்பது வழக்கம்.

    உங்களது பதிவினைப்பற்றி எடுத்துச்சொன்னேன். மகிழ்ந்தார்.
    அது சரி. அந்த வீணை இன்னும் நீங்கள் வாசிப்பதுண்டா ?

    என் அன்னை வாசிப்பாள்: சாம கானப்பிரியே...என்று ஆனந்த பைரவியில் .
    சாமஜ வர கமனா... ஹிந்தோளம்
    நின்னுவினா .... . என்னா ராகம்? மறந்து போச்சே... தங்கை கிட்டே கேட்கணும்'

    இன்று சரஸ்வதி பூஜை .
    யாகுந்தேந்து துஷார ஹார தவளா
    யா சுப்ர வஸ்தாவ்ருதா
    யா வீணா ...வரதண்ட மண்டிதகரா
    யா ஸ்வேத பத்மாஸனா

    வாசியுங்கள்.
    \
    சுப்பு தாத்தா.
    meenasury@gmail.com


    ReplyDelete
  4. informative.. thanks for sharing

    ReplyDelete
  5. திரு சுப்பு அவர்களுக்கு
    விரிவான மடலுக்கு நன்றி..அந்த ராம்ஜீ குடும்பத்தைப் பற்றி தனக்கள் எழுதியதில் மகிழ்ச்சி 1973ல் அப்பாவுடன் அங்கு அவரை சந்தித்த நினைவு சிறு பெண்ணாக இருந்ததால் அத்தனையும் இப்போது நினைவில் இல்லை. ஆனால் அவர்ளைப்பற்றி அப்பா பலகாலம் சொல்லிக்கொண்டிருப்பார்.மேலும் பல விவரம் அளித்தமைக்கு நன்றி
    நான் வீணை அங்கு வாங்கவில்லை அப்பா தன் நண்பர் ஒருவர் இசை ஆர்வம் மிக்கவர் அவருக்காக வீணை பற்றி விஜாரிக்கப்போனார். எனக்கு வீணையைப்பார்க்கும் போதே தெய்வீகமாய் இருக்கும். வாய்ப்பாட்டு சொல்லிக்கொண்டேன் என்னவோ வீணைகற்றுக்கொள்ள அவகாசம் இல்லாமல் போய்விட்டது இலக்கியம்+எழுத்தில் எனக்கு 10வயதிலேயே நாட்டம் வந்துவிட்டதால் கவனம் வீணை வாசிப்பில் போகாமல் புத்தகம் வாசிப்பதில் திரும்பிவிட்டது!!

    ReplyDelete
  6. மாதவன் மற்றும் தனபாலனுக்கு கருத்துகூறியதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  7. இன்று சரஸ்வதி பூஜை .
    யாகுந்தேந்து துஷார ஹார தவளா
    யா சுப்ர வஸ்தாவ்ருதா
    யா வீணா ...வரதண்ட மண்டிதகரா
    யா ஸ்வேத பத்மாஸனா

    வாசியுங்கள்.
    \
    சுப்பு தாத்தா.
    meenasury@gmail.com
    >>>

    இங்கே நீங்க எழுதினதை வாசித்து ராகமுடன் கலைமகளுக்குப்பாடுகிறேன் நன்றி மிக

    ReplyDelete
  8. அரியாத பல தகவல்கள்...

    சுப்பு தாத்தா அவர்களின் கருத்தினைப் படித்த பிறகு, உலகம் ரொம்பவே சிறியது என்று தோன்றுகிறது!

    ReplyDelete
  9. சரஸ்வதி பூஜை தினமான இன்று பொருத்தமாக வீணையைப் பற்றிய பதிவு. நிறைய விவரங்கள். சுப்பு அவர்கள் மூலம் திருச்சி ராம்ஜி பற்றிய தகவல்கள். நன்றி! வாழ்த்துக்கள்!

    ( ரிஷபன் அவர்களது பதிவில் உங்களுக்கு மறுமொழி > ஷைலஜா said... // ரிஷபன் பற்றிய என் விகடன் சுட்டி தர இயலுமா தமிழ் இளங்கோ அவர்களே? //

    சகோதரி அவர்களுக்கு! எழுத்தாளர் ரிஷபன் அவர்கள் பற்றி வந்துள்ள என் விகடன் – திருச்சி – இணைய இதழின் சுட்டி
    http://en.vikatan.com/article.php?mid=33 )

    ReplyDelete
  10. திரு வெங்கட் நாக்ராஜின் கருத்துக்கு நன்றி
    திரு தமிழ் இளங்கோ . ரிஷபனும் தனி மடலில் அனுப்பி இருந்தார். தாங்களும் அனுப்பியதற்கு மிக்க நன்றி,,இடுகை பற்றிய கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.