Social Icons

Pages

Thursday, December 19, 2013

ஆழிமழைக்கண்ணா!

பெரியாழ்வார்  இன்றைக்கு சீக்கிரமே எழுந்துவிட்டார் உண்மையில் அவர் தூங்கவே இல்லை ..மகளுக்கு முன்பாய்  எழுந்து அவளிடம் தான் எழுதிய ஒருபாடலைக்காட்டவேண்டும் என்னும் பரபரப்பு.அதிலும் தமிழுக்கே  அழகுதரும் ‘ழ’ என்ற எழுத்தை வைத்து  தான் எழுதிய பாசுரத்தை  வாசித்துக்காட்டும் ஆவலில்  இருந்தவரை  கோதை நோக்கினாள்.
 
 
“என்ன அப்பா  இன்று தங்கள்முகத்தில்  இத்தனை  சுறுசுறுப்பு! கண்கள் அலைபாய்கின்றன வாய் ஏதோ சொல்லத்துடிக்கின்றன?”
 
மகள் கேட்கக்காத்திருந்தவர்போல  ஆழ்வார் பெருமான்    சொல்ல ஆரம்பிக்கிறார்.
 
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்
      கோவிந்தனுடைய கோமள வாயிற்
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்
      கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்
      விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகிச்
      சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே             
 
”ழகரத்தை  பத்து முறை  பயன்படுத்தி எழுதினேன் அம்மா! ”என்றார் பரவசமாக
 
“அப்படியா  அப்பா! நீங்கள் எட்டடிபாய்ந்தால் நான் பதினாறடி பாயமாட்டேனா என்ன?!  கேளுங்கள் இன்றைய பாசுரத்தை” என்று குறும்புதவழ  சொன்னாள்  கோதை. புன்னகை மாறாமல்  ஆழ்வாரை ஏறிட்டுவிட்டு பாசுரத்தை வாசித்தாள்.
 
 
 
 
“ஆஹா!  கோதை!! என் பாட்டினில் ‘ழ’ பத்துமுறைதான் வருகிறது உன் பாட்டிலோ 11 முறை வருகிறது! பூமகளை  பூமனிதன்  வெல்லமுடியுமா  ? அருமை அம்மா!”
 
”அப்படியில்லை அப்பா...  உங்களிடம் நான் கற்ற பயிற்சியின் தேர்ச்சியே இது! அப்பா! நான்  அண்ணலை கண்ணா என்று  செல்லமாய் அழைக்கலாம் தானே?’
 
“கூடாது என்றால் நீ  அழைக்காமலா போய்விடுவாய் கோதை?”
 
“போங்கள் அப்பா...சின்னக்கண்ணனைக்கொஞ்சிக்கொஞ்சி உங்களுக்கு எப்போதும் குறும்புதான்.
பக்தியும் ஞானமும்  பிரேமையாக வரவேண்டும். சிருங்காரம் சேரும்போது  அந்நியோன்னியம் அதிகரிக்கும் அன்பு ததும்பும்   பக்தி என்றால் காதல்.  பெருமானிடம் நாம் கொள்ளும் காதல். கண்ணனுக்கே ஆமது காமம்..அதனால்தானே ஆழ்வார்பெருமான்கள் சிலர் நாயகிபாவத்தில்  அண்ணலை தன் வசமாக்குகிறார்கள்.? நானோ நிஜத்தில் பெண்.நான் எப்படி  பிரேமையின்றி  பாடல் எழுத முடியும்? ஆனால் பிரேமையே  எல்லா  பாடல்களிலும் ஆக்கிரமிக்காது அப்பா. வேத சாரத்தைப்பிழிந்துதர நினைக்கிறேன்...சரி  பாடலை நான் விளக்குவதைவிட  என்பாடலைக்கேட்ட  ஒரு  பக்தையின்  விமர்சனமாக  இனி கேளுங்கள் அப்பா...”
 
“உத்தரவு தாயே!”
********************************************************
 
ஆயர்பாடித்திருநகரில் மார்கழி பிறந்துவிட்டது  பனி இல்லாத மார்கழியா?பனிக்காலம் வந்தால் மழை இருக்காது அடுத்து கோடைவந்தால் மழைக்கே இடமில்லை. மழை இல்லாவிட்டால்  மாடு கன்று மக்களின் கதி என்ன? முதல்பாட்டிலேயே  பாவையரை நீராட வரச்சொல்லி அழைத்தாயிற்று  யமுனையோ வற்றிக்கிடக்கிறது  மழை பெய்தால் நீர்நிலை நிறையும் நாட்காலே நீராடலாம். பரமனடி பாடலாம். நெய் உண்ணாமல் பால் உண்ணாமல் மை எழுதாமல் பூச்சூடாமல் வம்பு பேசாமல் புலன்களைக்கட்டிவைத்து புருஷோத்தமனை வழிபடலாம்.  எல்லாவற்றிர்க்கும் மழை பிரதானம் அல்லவா? தோழிகள்  கேட்பார்களே”ஏனடி  கோதை நீராட அழைக்கிறாயே  யமுனையில் மண்ணில்தான் புரளவேண்டும்.”என்று பரிகாசம் செய்வார்களே!
 
மழைதெய்வத்தை வேண்டிக்கொள்வோம் என முடிவெடுக்கிறாள் கோதை
 
ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
 
.
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்!



இதுல வரும் ஆழி-மழை-கண்ணா யாராக இருக்கும்?


கண்ணா என்பது அன்பாக விளிக்கும் சொல்லும் கூட! அதிலும் பெண்களுக்கு  மனதுக்குப்பிடித்தவர்களை  இப்படி அழைக்க மிகவும் பிடிக்கும்!

 மழைக்கண்ணனாமே அப்படியானால் நீர்த் தெய்வம் வருணனா? இல்லை மழைத் தெய்வம் இந்திரனா? :)

* இந்திரனா? அவனைத்தான் அன்று  தோற்கடித்து கோவர்த்தன மலையைத் தூக்கி குன்றுக் குடையாய் எடுத்தாய் குணம் போற்றியாகிவிட்டதே.. கண்ணனின் எதிரி அவள் எதிரியும் தானே? அவனைப் போய் கூப்பிடுவாளா? :)

* வருணனா? அவனோ  அன்று  கடலில் அலையே இல்லாமல் பண்ணியபோது  ராமனிடம் சரணடைந்தவன் ஆயிற்றே ! சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி! மனத்துக்கு இனியான் இராமன்! ! அந்த  இராமனின் எதிரி  வருணன் அவள் எதிரியும் தானே?   பிறகு  கோதை,  வருணனைக் கூப்பிடுவாளா? :)


எப்போது குன்றம் வணங்கிக் குன்றம் எடுத்தானோ, அப்போதே இந்திரனையும் வருணனையும் அடக்கி, மழைக்கும் அவனே நேரடியான அதிபதி ஆகி விட்டான்! சாதாரணப்பெண்ணா கோதை  அறிவால் வாழ்பவள் அல்லவா?எனவே கண்ணனையே மழைக் கடவுளாக  அழைக்கிறாள்!
 
கண்ணனின் கண்களில்  கருணை மழை எப்போதும் உண்டே! உண்மையான பக்தர்களைக்காணும்போது அவன் கண்களில் ஆனந்த மழையென  நீர் பொழியுமாம். எப்படி என்கிறீர்களா?
 
குசேலர் அன்று கிருஷ்னனின் திருமாளிகைக்கு வருகிறார்.தன் நண்பனும் பக்தனுமான  குசேலன் வருவதை அறிந்த  கிருஷ்ணன் அதிவேகமாய்   எழுந்து நடக்கிறான்.  எதிர்கொண்டு அழைத்து பக்தனை  இறுக அணைக்கிறான்.
ப்ரீதோவ்ய முஞ்சத் அபீந்தூன் நேத்ராப்யாம் புஷ்கரேக்ஷண:
பரமபக்தனானான். செந்தாமரைமலர்கள் போன்ற இருகண்களாலும் ஆனந்தக்கண்னீரை வர்ஷித்தான். குசேலருக்கு வரப்போகிற பெரிய ராஜ்ஜியத்திற்கு பட்டாபிஷேகம் செய்தது போலிருந்தது என்கிறார்  சுகப்பிரம்மம்  .அவரது  வாக்கினால் வந்த விஷயம் இது ! ஆழிமழைக்கண்ணா என் ஆண்டாள் விளித்தது சரிதானே!
 
.ஆழி என்பதற்கு  அநேக அர்த்தங்கள்
 
 பொய்கைபெருமான்  அருள்வாரே முதல்பாடலிலேயே
 
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யக்கதிரோன் விளக்காக செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று
 
என்கிறார்
 
இதில் முதல் ஆழி  சக்கரம் இரண்டாம் ஆழி கடல்.
ஆழி எனும் சக்கரம் பெருமானின் பஞ்ச ஆயுதங்களில் தலைமையானது.சக்ராயுதம்  தான் சக்கரத்தாழ்வார் என்றும்  போற்றப்படுகிறார். சுதர்சன சக்கரம் வலிமையானது துன்பம் போக்கக்கூடியது.  சக்கர பிம்பத்தில் அதைச்சுற்றி ஒருவளையமும் தீக்கொழுந்துகளும்   இருக்கும். சூர்யகோடி ஸம்ப்ரபம்  என்பார்கள் . அத்தகைய  ஒளியும்  வலிமையும் கொண்டது.
 
 
 
 
ஆழிமழைக்கண்ணா என்னும் ஆரம்ப வார்த்தைக்கு கடல்போன்ற கம்பீரமான  தோற்றத்தை உடைய மழைக்குத்தலைவனான  கண்ணனே!
ஒன்றும் நீ கைகரவேல்... நீ ஒன்றையும் ஒளிக்கக்கூடாது
ஆழி உள் புக்கு = கடலில் புகுந்து முகந்து கொடு = அள்ளிக் கொண்டு
 ஆர்த்து ஏறி = சத்தமாக/அணிந்து ஏறி
ஆர்த்தல் = ஒலி எழுப்பல் எனக் கொள்ளலாம்!

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் = ஊழிக் காலத் தோற்றம் போல், மேகம் கறுத்து....காளமேகப்பெருமான்.
பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில் = பாழி என்றால் வலிமை/குகை! அம் என்றால் அழகு! வலிமையான, அதே சமயம் அழகான தோள்! மல்லாண்ட திண் தோள் என்கிறார் ஆண்டாளின் அப்பாவும். தோள் கண்டார் தோளே கண்டார் என்கிறார் பின்வந்த கம்பரும். ஆணுக்கு அழகு தோள்.

பற்மநாபன்=பற்பநாபன்! தமிழாக்குகிறாள் கோதை! நாபிக்கமலத்தையுடையவன்..

ஆழி போல் மின்னி = சக்கரத்தின் ஒளியைப் போல மின்னி,,,
வலம்புரி போல் நின்று அதிர்ந்து = சங்கின் ஒலியைப் போல இடி இடித்து(வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ  என்பாள்  பிறகு ஒருபாட்டினில்.. சங்குக்கு அழகு முழங்குவது)

முதலில் மின்னல்! அப்புறம் இடி- என  விஞ்ஞானம்  கற்பிக்கிறாள் கோதை!
ஒளி, ஒலியை விட வேகமாகச் செல்ல வல்லது!

தாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல் = சாரங்க வில்லில் இருந்து புறப்பட்டு விழும் அம்பு போல, சரம் சரமா சேர்ந்து குத்துகிறது மழை!
 
 வாழ உலகினில் பெய்திடாய்! =  அம்புச்சரமாய் மழை மட்டும் வரட்டும் அது அழிவாகாமல் நல்லபடியாய்  பெய்து நாங்கள்  எல்லாரும் வாழ,  மழை பெய்யட்டும்!
 
 

இந்தப் பாசுரத்தில், பெருமானின் பஞ்சாயுதங்களில்,
மூன்றைச் சிறப்பித்தும் சொல்லி விடுகிறாள்!
1. சுதர்சனம் என்னும் திருவாழி (சக்கரம்)
2. பாஞ்சசன்னியம் என்னும் சங்கு
3. சாரங்கம் என்னும் வில்
 

நாங்களும் மார்கழி நீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய் = மழை பெய்தால் தானே,  ஆன்மீக விஷயமெல்லாம் ஒழுங்கா நடக்கும்! மகிழ்ச்சிவரும்? மார்கழியில்  மகிழ்ந்துநீராடுவோம்   எம் தோழிப்பெண்களே!


ஆழிம‌ழைப்பாட‌லை ம‌ழைவேண்டிபாட‌லாம் என்கிறார்க‌ள்
.
மேலும் படிக்க... "ஆழிமழைக்கண்ணா!"

Wednesday, December 18, 2013

உத்தமன் பேர் பாடி!




  ஆண்டாளின் மூன்றாவது பாசுரத்தைக்கேட்க ஆவலாக  மகளிடம்  வந்தார் பெரியாழ்வார். பேச ஆரம்பித்தார்.

”கோதைகுழந்தாய்!  என்னவோ எனக்கு இன்று காலைமுதல்  பெருமானின்  திருவடியில் வழக்கத்தைவிடவும் அதிகம்  ஈடுபாடுவந்துவிட்டது அதிலும்  உலகளந்தானே அந்ததிருவடிமீதினில்... 
பொய்கை ஆழ்வார் பெருமான் அருளினாரே” பார் அளவும் ஓர் அடிவைத்து ஓர் அடியும் பார் உடுத்த நீர் அளவும் செல்ல  நிமிர்ந்ததே  “ என்று அப்படிப்பட்ட  திருவடியம்மா அது! அகலில் அகலும் அணுகில் அணுகும், புகலும் அரியன் அல்லவா  அந்தக்கண்ணன்? அவனைப்பற்றிய  இன்றைய  உன் பாசுரம் என்ன கோதை?”
 
“அப்பா! என் மனத்தை  உங்களைவிட யாரால் அறியமுடியும்? நானும் அந்ததிருவடியையே இன்று பாடலில் முதலடியாய்  கொண்டுவருகிறேன். சிறிதிலிருந்தே  பெரிது பிறக்கிறது அல்லவா?   வாமன அவதார மகிமை வானைவிட  உயர்ந்ததே அதனைக்கூற விரும்பினேன்.. சட்டென வேகமாய்  செய்யும் செயலை  ஓங்கி என்ற முதற்சொல்லில்  பிரயோகிக்கும்போது அதன் வலிமை பன்மடங்கு   உயர்கிறது ஆகவே ஓங்கி உலகளந்த என ஆரம்பிக்கிறேன் கேளுங்கள்.
 
ஓங்கி உலகளந்த உத்தமன், "பேர்" பாடி,
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து,
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயல் உகளப்,
பூங் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்!
நீங்காத செல்வம் நிறைந்து ஏல்-ஓர் எம் பாவாய்!
 
 
 த்ரிவிக்ரமனின் முதலடி  என்னைக் கவர்ந்தது. அடிதேடிப்பலர் செல்ல அடிக்கீழ் பலர் தவமிருந்து அமர்ந்திருக்க  அந்த அடி இருந்த இடத்திலேயே மலர்ந்து ஒரு அழுத்தமில்லாத சுக ஸ்பரிசம் !  நெருக்கத்தில் பூவுலகு முழுவதையும் ஒரு தாய் தூங்குகிற குழந்தையை முகர்வது போல தொட்டு அளந்து கொண்டது. நான் பூமாதேவியின் அம்சம் என்பதால்  தன்னிச்சையாய் உணர்ந்த அனுபவத்தை நினைத்துச் சிலிர்க்கிறேன்  அப்பா!
மேலும் எந்தப் பிரிவினர் செய்யும் யாகத்திலும், மூன்று முறை திரிவிக்ரமனுக்கு அவிர்ப்பாகம் அளித்தே யாகம் செய்ய வேண்டும் என்பது நியதி.

திருப்பாவையும் ஒரு யக்ஞம் தானே! அதனால் தான்,


 முதல் பத்தில் = ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்கிறேன் பிறகு  இரண்டாம் பத்தில் = அம்பரம் ஊடறுத்து ஒங்கி உலகளந்த என்றும்
மூன்றாம் பத்தில் = அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
  என்றும் முடிக்க இருக்கிறேன்

என்று ஆண்டாளும் மூன்று முறை அவிர்ப்பாகம் அளிக்கிறாள், வாமன மூர்த்திக்கு என  வருங்காலம் என்னைப்போற்றவேண்டும்.
மஹாபலி பக்தனாயிருந்தும் அவன் செயல்பாடுகளில் அத்து மீறிய அதிகார துர் உபயோகமும் அட்டூழியமும் இருந்ததால் இப்படி அவனை அப்புறப் படுத்த வேண்டி வந்தது
நாம் மிகவும்  அடியவர்கள்  என்றால் அண்ணலின் திருவடியைத்தான் பிடிக்கவேண்டும்  அவனுக்கு அடியவர்கள் என்பதை  நாம் இப்படித்தான்  நிரூபிக்கவேண்டும். சரிதானே  தந்தையே?”

“ஆஹா  கோதை  பேச வார்த்தை வரவில்லை அம்மா!” பெரியாழ்வார்  மகிழ்ச்சியில் நெகிழ்ந்துவிட்டார்.

ஆண்டாளைப்பற்றி நாம் இனி பேசுவோம்!

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்ததில்
என்ற குறள் அறியாதவர் யார் ?பிச்சை எடுக்கும்போது ஒருவனுடைய கல்வி, கேள்வி,புகழ்,சாதுரியம்,மற்றும் வெற்றி என்ற ஐந்து தேவதைகளும் அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து மீண்டு வர இயலாத தூரத்துக்கு விலகுகிறார்கள் என்பது தெரியாதா ? அதையும் செய்தான் பெருமாள். அது வாமனாவதாரம். அவன் உத்தமன்.
 
ஆண்டாள்  அண்ணலை உத்தமன்  என்றாள்  . உத்தமன் என்பனுக்கான  உன்னத குணங்கள் எல்லாம் கொண்டவன் கண்ணனே என்பதால். அவன்பேர்  பாடவேண்டுமாம் நாம மகிமை!  கூவிஅழைத்தால் குளிர்ந்துபோவான் கோவிந்தன். யாருக்குமே  தன்பெயரை தன் அன்பர்கள் அழைக்கும்பொழுது  இன்பம் தானே! ஆகவே உத்தமன் பேர்பாடி..

 
நாங்கள் நம் பாவைக்கு, சாற்றி, நீராடினால் = எங்கள் நோன்புக்கு, திருநாமத்தைச் சாற்றிக்கொண்டே நீராடுகிறோம்!

தீங்கின்றி, நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து = எந்தக் குறைவும் இன்றி, ஒரே இடத்தில் மட்டும் இல்லாமல், நாடு முழுக்க மும்மாரி என்னும் மூன்று மழைகள் பெய்யும்!
ஒரேயடியாக் கொட்டினாலும் பாதகம்! கொட்டவே இல்லை என்றாலும் பாதகம்! அதான் மும்மாரி!

ஓங்கு பெறும் செந்நெல், ஊடு கயல் உகள = இப்படிப் பெய்ததால் விளைந்த நெல்லு! அந்த நெல் வயலின் ஊடே, தண்ணிர் பாய்ந்தபடி இருக்கு!
அதில் கயல் மீன்கள் குதித்து விளையாட..
பூங் குவளைப் போதில் = நெல்வயலே குளம் போல இருக்க, அதில் குவளைப் பூ பூத்துள்ளதாம்  (போது=பூ)
பொறி வண்டு கண் படுப்ப = அந்தக் குவளைப் போதில், சாதாரண வண்டு இல்ல பொறி வண்டு! அது வந்து கண் படுக்குது! ஆனா தூங்கலை!
கண்ணு மட்டுமே படுக்குது! கண் மட்டுமே படுத்தா என்ன அர்த்தம்?!

தேங்காதே, புக்கு இருந்து, சீர்த்த முலை பற்றி வாங்க =  தேக்கி வைக்காமல்  நமக்காக  அதன்  மடி பற்றியதும் 

குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் = குடம் குடமா நிறைக்கும் வள்ளல்கள் என்கிறாள்.நமக்கு தீனி போடுவதைவிடவும்  பதிலுக்கு அவர்களுக்கு வாரிவாரி  வழங்கவேண்டும் என்னும் எண்ணம் கொண்டதால் வள்ளல்.
ஆண்டாளின் ஜீவகாருண்ய சிந்தனையின் வெளிப்பாடு இது  மனிதனை  வள்ளல் என்போம்  இவள் விலங்கினை வள்ளல் என்கிறாள் ஆஹா
* மாடு = செல்வம்! கேடில் விழுச் செல்வம் கல்வி! ஒருவர்க்கு மாடு அல்ல மற்றையவை! -
நீங்காத செல்வம் நிறைந்து = என்னிக்குமே நீங்காத செல்வம், உங்க வாழ்வில் நிறைந்துஇருக்கட்டும்!
நீங்காத செல்வம் = நித்ய விபூதி!
கீதையில் விபூதி யோகம் உண்டு!
விபூதி என்பதற்குச் செல்வம்-எனப் பொருள்!
இந்தப்பாட்டில் கயல்மீன்கள் ஆத்மாக்களாகவும் குவளைமலர் இதயங்களையும்
பொறிவண்டு இறைவனையும் , பசுக்க‌ள் குருவையும், பால் ஞானத்தையும் குறிப்பதாக ஒரு ஆன்மீகப்பெரியவர் கூறக்கேட்டிருக்கிறேன்.


பக்குவமடைந்த ஆத்மாக்கள் (பசுவின் மடியைப்பற்றுவதுபோல) குருவின்காலைப்பிடித்து ஞானப்பாலைப்பெற்று பருகினால் ஆன்ந்த வெள்ளமாம் அது! அவர்களின் இதயகமலத்தில் ஆண்டவன் பொறிவண்டுபோல படுத்து உறங்குவானாம்

 



 
 
 

ஓர்தல் = ஆராய்ந்து அறிதல்! தெரிந்து தெளிதல்! ஓர்மையுண்டோ?-மலையாளச்சொல்
ஏல் = ஏற்றுக் கொள்ளல்! மனமறிய அவனை ஏற்றுக் கொள்ளல்!
எம் பாவாய் = என் பெண்ணே,தோழியே...அவனை ஏற்றுக் கொள், தெரிந்து தெளி!


 
மேலும் படிக்க... "உத்தமன் பேர் பாடி!"

Tuesday, December 17, 2013

மதிநிறைந்த நன்னாளில் மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்!

முதல்பாசுரம்.
 
பெரியாவாருக்கு  மனமெல்லாம் பூரிப்பு..ஆமாம்  தசரதனும்   வசுதேவனும்  பெற்ற  பெருமையை தான் அடைந்திருக்க்கிறோமே என்று  இல்லையாபின்னே  ! பூமகளே தன் மகளாய் துளசிதளத்தில்  கிடக்க அவளை  அரவணைத்து வளர்த்து அண்ணலைப்பற்றி அழகழகாய்  கதை சொல்லி...இன்று  தன்மகள்  எழுத்தாணியை எடுத்துக்கொண்டு  பாசுரம் எழுதுகிறாளே..என்ன  என்று பார்ப்போம் என அருகில் சென்றார் பெரியாழ்வார
 

மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்?
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
,
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்,
கார்மேனி, செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்!
நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்!!
பாரோர் புகழப் படிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்
>+++++++++++++++++++++++++++++++++++++++++
 
 
 
 
 
 
மார்கழியின் இரண்டாம் நாள்.பெரியாழ்வாருக்கு மகள்  அடுத்த திருப்பாவை  பாட்டாக என்ன எழுதப்போகிறாள் என்று ஆர்வம். அருகில்போய்  என்னம்மா எழுதுகிறாய் என்று கேட்கவும் தயக்கம். ஏற்கனவே  மகளுக்கு 108 திவ்யதேசபெருமான்களைப்பற்றி தான் கூறியதிலிருந்து  மகளின் மனம்  மாலிடமே மயங்கிவிட்டதை அவர் அறிந்துதான் இருந்தார்.  தான்  அண்ணலைகுழைந்தையாய்  பாவித்து 

 ”முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
. ”  என்று  பாடிக்கொண்டிருக்க  இவள்  என்னடாவென்றால் அவனை நாயகனாய் அல்லவா வரிக்கிறாள்!

ம்ம் பார்க்கலாம்  இன்னிக்கு என்னதான் எழுதி இருக்கிறாள் என்று.
பெரியாழ்வாரின் மனதைப்புரிந்துகொண்டமாதிரி கோதை  ஓலைச்சுவடியை  அவர் அருகே கொண்டுவந்தாள் 
இன்றைய  பாசுரத்தை பாடட்டுமா அப்பா  என்று கேட்டாள்.
சொல்  கோதை  கண்ணனைப்பற்ரி என்ன சொன்னாலும் இனிக்குமே! அவனுக்கு 
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ” என்று    ஏழை நான்
பாடினேன்  இந்த  மழைக்கு ஒழுகும் குடிசையில் இருந்துகொண்டு!


“அப்பா! நான் அவனை  உறக்கத்திலிருந்து எழுப்ப  பாடல் எழுதப்போகிறேன்  உங்களை மாதிரி தாலாட்டெல்லாம்  கிடையாது. எழுந்து ஓடிவந்து  அருள் செய்யலேன்னா  தெரியும் சேதி என்பதாக!

அம்மாடி அவன் இறைவன்!

இருக்கட்டுமே அதனால் என்ன? அன்பினால் சிறுபேர்  இட்டூ அழைத்தால் சீறுவானோ?  உனக்கே ஆட்செய்வோம்  மற்றை நம் காமங்கள்  மாற்று என்று  போகப்போக  எழுதி அவனை
என் வசப்படுத்தாமல் போகமாட்டேன்.சரி இன்றைய பாட்டு கேளுங்கள்.



வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ? பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன், "அடி" பாடி,
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி,

மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக் குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி,
உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்து, ஏல்-ஓர் எம் பாவாய்

அருமை கோதை     எனக்குப்புரியவில்லை  விளக்கம் சொல்லேன்.

ஆமாம் அப்பா  சும்மா சொல்லாதீர்கள்..
 
என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை
கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய
பொன்திகழ்மாடப் புதுவையர்கோன்பட்டன்சொல்
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே
 என்று  அருளிய உங்களுக்கா  நான் எழுதுவது புரியவில்லை? இந்த பெற்றோர்களுக்குக்குழந்தைகள் முன்பு  தான் குழந்தையாக நிற்பது மிகவும் பிடித்தமான ஒன்றுதானே    போகட்டும் விளக்கம் கேளுங்கள்.


உலகமகா ஜனங்களே  நாம் பாவை நோன்பு  செய்யவேண்டிய விதிகள்(கிரிசைகள்  கர்மயோகம்)  என்னன்ன தெரியுமா  கேளுங்க   பாற்கடலில்   பைய(நாங்க மதுரைக்காரங்க   பையன்னுதான் சொல்வோம் அர்த்தம் தெரியாதவார்களுக்கு மதுரைத்தமிழ்ச்செல்வர்களும் செல்விகளும் விளக்கட்டுமே?:) தூங்கும் பரந்தாமனின் திருவடியைப்பாட,  இதெல்லாம்  செய்யமாட்டோம் நாங்க.அதாவது...




* நெய்யுண்ணோம் பாலுண்ணோம் = நெய்யும் பாலும் ஆயர்களின் அடிப்படை உணவு! அதையே உண்ண மாட்டோம், நோன்பு முடியும் வரை- ஏன்?
நெய் சூடு! பால் குளிர்ச்சி! ரெண்டும் கலந்து கலந்து அடிச்சா, நாம மிதப்புல தான் இருப்போம்! ஒன்னும் ஏறாது! அதான் முதலில் உடலைத் தயார் பண்ணனும்

.காலைநேரத்துல தண்ணீர்  ஜில்லுனு இருக்கும்  அதனாலே நாட்காலே நீராடி

மை இட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்! ஏன்?

கண்ணுக்கு மை அழகு! மனக்கண்ணை திறந்து வைத்து மாலவனைப்பார்க்கவேண்டாமோ?அதனால் மை வேண்டாம்.
 நானே ஒரு அழகான பெண் தானே! ஆண்டாள் கொண்டை  அதில் சுற்றும் பூ என்று எத்தனை அழகு! மலரெல்லாம் வேண்டாம். ஏன் அலங்காரம் வேண்டாம் என்கிறேன்? புறச்சிந்தனைக்கு  மனம் போகவேண்டாம் என்றுதான். 
செய்யாதன செய்யோம் = எது செய்யத் தகாதது-ன்னு அடி மனசுக்கு தெரியும்! ஆனா மேல் மனசு செய்ய சொல்லும் ஆனாஅடி மனசில் அவன் இருக்கான் (அந்தர்யாமி, உள்ளத்துள்ளான்)!
! அது செய்யாதே-ன்னு சொல்வதைச் செய்யாம இருப்போம்


* தீக் குறளை சென்று ஓதோம்குறளை = குறுகிய
* பாக்களில் குறுகிய வடிவம் உள்ள பா = குறள் பா!
* அவதாரங்களில் குறுகிய வடிவம் உள்ளவன் = குறள் அப்பன் (வாமனன்)!
* அதே போல் குணங்களில், குறுகிய குணம் = குறளை-கோள் சொல்லுதல்!

குறளி என்பது பாண்டி நாட்டு வட்டார வழக்கு!
உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசல் தவறு.

* ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி = ஐயம்= நம்மை ஒத்தவர்களுக்குக் கொடுப்பது!
பிச்சை= நம்மை விட மேல் நிலையில் உள்ள (துறவிகள்)/ கீழ் நிலையில் உள்ள இரப்பவர்களுக்குக் கொடுப்பது! ஆக மொத்தம் கொடுக்கவேண்டும்.இது ஒரு தர்மம். நோன்பிற்கான   அறம்"!
உய்யும் ஆறு என்று எண்ணி = இது நமக்கு உய்யும் வழி!
உகந்து = அதனால் விதியே-ன்னு (நோன்புக்காக மட்டும்) செய்யாது, உகந்து செய்வோம்!
ஏல்-ஓர் எம் பாவாய் =  பாவைப்பெண்களே    வாங்க  எழுந்து!

எப்படி இருக்கு அப்பா?

பெரியாழ்வார்  பிரமிப்பில் என்ன  சொல்லி இருப்பார்?
 
(நாளைமுதல்தினம் ஒரு பாசுரமாக வரும்)
மேலும் படிக்க... "மதிநிறைந்த நன்னாளில் மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்!"

Thursday, November 07, 2013

மாறநேர் நம்பி .

மாறனுரை செற்றதனில் தேனிருந்தான் வாழியே
நம்மாழ்வார் அவதார ப்ரதிநிதியோன் வாழியே
யாமுனாரின் வினையனைத்தும் தான் தரித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைத்திட்டான் வாழியே!
..காழியூர் மன்னார் அனந்தாழ்வார்--


 மாறநேர் நம்பி ஆளவந்தாரின் அந்தரங்க சீடர்களில் முக்கியமானவர். இவர் பஞ்சகுலத்தவர். இவரது சரித்திரம் ஆழ்வார்கள் ஆசாரியர்களின் வாழ்க்கையைப்போலவே போற்றத்தக்கது.
மாறநேர் நம்பி ஒரு முறை மிகவும் பசித்த போது வாய்க்கால் நீரை சேற்றுடன் அள்ளி குடித்தாராம்.. அதைக் கண்டு வியந்து வினவிய ஆளவந்தாரிடம் ‘கஞ்சிக்குக் காத்திருந்தேன் வரவில்லை. எனவே இந்த மண்சுவருக்கு(உடம்பிற்கு) மண்ணிட்டேன்” என்றராம். உலகப்பற்று அறுத்த உத்தமர். தம் உணர்வில், நம்மாழ்வாரை ஒத்திருந்ததால் ‘மாறன்நேர் நம்பி” (மாறனுக்கு இணையான நம்பி) என   அவரை அழைத்த ஆளவந்தார்,” மாறநேர் நம்பியே! இனி நீர் இந்த கிராமத்தில் வயலில் பணி செய்யவேண்டாம் என்னோடு ஸ்ரீரங்கம் வாருங்கள்” என்றார்.

“சுவாமி  நான் தங்கள் அருகில் கூட நிற்கத் தகுதி இல்லாதவன் தாழ்ந்தகுலத்தைச்சேர்ந்தவன்”

“ஜாதி குலம் ஆசாரம் இவைகளுக்கு அப்பாற்பட்ட ஞான தேசிகனாய் இருக்கிறாய் அப்பா! இனி நீர் எமது கோஷ்டியில்தான் சேரவேண்டும் “ என்று கட்டளையிட்டார் ஆளவந்தார்.

 குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ண்ற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார், எம்அடிகளே

என்ற நம்மாழ்வாரின் பாசுரம் இங்கு சிந்திக்கத்தக்கது.

காவிரிநதிக்கரையில் குடில் அமைத்துக்கொண்டு ஆளவந்தாரையே ஆசாரியராகக்கொண்டு அவருக்கு வழுவிலா அடிமை செய்து வந்தார் மாறநேர்நம்பி.

கீழச்சித்திரை வீதியில் (தற்போது சித்திரைத்தேர் நிற்குமிடத்திற்கருகில்)  திருமாளிகையமைத்து ஒரு பிரவசனக்கூடமும் (உபதேசிக்கும் மண்டபம்) அமைத்தார். மறுநாள் அதற்கு  ஒரு சுத்தப்படுத்தும் வைதீக காரியம் நடத்த உத்தேசித்திருந்தார் ஆளவந்தார்.

 நள்ளிரவில் ஒரு கரிய உருவம் வீட்டினுள் புகுந்து அங்குமிங்கும் அலைந்து எல்லாவற்றையும் நன்கு பார்த்து விட்டு வெளியேறியது. ஆளவந்தார் இதனைப் பார்த்து விட்டார். யாரென கேட்க  முற்படுகையில் அது மாறநேர்நம்பியெனவும், தாம் தாழ்ந்தகுலம் என்பதால் அடுத்த நாள் காலை சுத்தம் செய்யும் வைதீகக்காரியம்  நடந்துவிட்டால் பார்க்க இயலாதாகையினால் இரவே வந்து பார்த்துவிட்டு சென்றதாயும் அறிந்தார். ஆளவந்தார் கண்ணீர் சிந்தினார்.” மாறநேர் நம்பி திருவடிகள் பட்டதே போதும் – இந்த இடம் மிக மிக புனிதமாகிவிட்டது. இனி புனிதப்படுத்துவதற்காக புண்யாஹம் தேவையில்லை” என்று மறுநாள் காலை நடக்கவிருந்த நிகழ்ச்சியினை ரத்து செய்து விட்டார்.


ஆளவந்தாருக்கு ராஜபிளவை நோய் தாக்கியது. தம் ஆச்சார்யனுக்கு ஏற்பட்ட இப்பெரும் தீங்கைக் கண்டு துடித்தார் மாறநேர்நம்பி. அரங்கனிடம் வெகுவாக மன்றாடினார். இறுதியில் வென்றார். அவரது நோயை தாம் பெற்றார் அரங்கனிடம் பிரார்த்தித்து. தமக்கு இந்த ‘ராஜபிளவை’ நோய் வந்தபோது அதனை ‘ஆச்சார்ய பிரஸாதம்’ என்றெண்ணி பெருமிதம் கொண்டார். ஆளவந்தார் மாறநேர்நம்பியிடம் ,”என்னே கருணை என்னே குருபக்தியப்பா உனக்கு! என் பிறவிதனை போக்கவந்த கொடுநோயை நீ எடுத்துக் கொண்டாயே!’ என்று வருத்தப்பட்டாராம். தமது பாட்டனாரும் ஆசாரியாருமான நாதமுனிகளின் தாள்களை மனத்தில் இருத்தியபடியே பெரியபெருமாள் திருவடிகளைச்சேர்ந்தார் ஆளவந்தார்.(பிதா மஹம் நாதமுனிம் ப்ரஸீத மத்வ்ருத்த ம சிந்தயித்வா--ஸ்த்தோத்திர ரத்னம் 65)

மகாஞானியானவரும் மகாபூரணருமான பெரியநம்பிகளால் நீராட்டி, புண்ணுக்கு மருந்திட்டு, உணவு ஊட்டப்பட்டு அன்போடு ஆதரிக்கப்பட்டார் மாறநேர்நம்பிகள்.

“பெரிய நம்பி சுவாமிகளே! தங்கள் பணிவிடைகட்கு  என்னென்று நன்றி கூறுவேன்? நா தழுதழுக்கிறது. அடியேன் இன்னும் மூன்றுநாட்களே தேகவாசம் செய்வேன் ப்ராணப்ரயாண சமயத்தில் கேசவா கோவிந்தா மாதவா என்று கூறி உயிர் பிரிந்தால் என்னுடைய உடலை எரித்து புஷ்கரணியில் தீர்த்தாமாடி வீடு திரும்பவும், அன்றியும் ஆழ்வார்கள் புகழ்பாடும் தருணம் உயிர்பிரிந்தால் உடலை எரித்து கண்டஸ்நானம்(கழுத்தளவு குளியல்) பண்ணிவிட்டு வீடு திரும்பவும். இவை இரண்டுமின்றி ஆச்சாரியன் ஆளவந்தாரின் திருநாமங்களை ஜபித்துக்கொண்டிருக்கையில் உயிர் பிரிந்தால் உத்தம வைஷ்ணவர்களுக்குப் பண்ணுவது போல ப்ரும்மரதமேரருளி அந்திம காரியங்களைச்செய்யவும். ” என்று எடுத்துக்கூறினார்.

மாறநேர் நம்பியின் குருபக்தியைக்கண்டு பெரிய நம்பிகள் மிகவும் வியந்துபோனார்.

அந்த அந்திம நேரமும்  வந்தது.

மாறநேர் நம்பி ஆளவந்தாரையே மனதில் நிறுத்தி அவர் நாமத்தை ஜபித்துக்கொண்டே ஆசாரியன் திருவடியை அடைந்தார்.
மனம் வருந்திய பெரியநம்பி சுவாமிகள், நம்பி கூறியபடி  உயர் அந்தணர்களுக்குச் செய்யும் அந்திமக்காரியங்களை மாறநேர்நம்பிக்குச்செய்ய ஆயத்தமானார்..  ஸம்ஸ்காரங்களனைத்தும் மாறநேர்நம்பிகளுக்கு செய்தார்.
ஆனால் மாறநேர்நம்பிகள் என்ற தாழ்ந்தகுலத்தவருக்கு ஸம்ஸ்காரம் செய்து வைத்தபடியால் இவரை சக அந்தணர்கள் ஒதுக்கினர் தம் சமுதாயத்தினை விட்டு.

. இது குறித்து இராமனுஜர் வினவுகின்றார்.”நம்மிடம்
 தெரிவித்திருந்தால் நாமே சம்ஸ்காரத்தை பூர்த்தி பண்ணியிருப்போமோ  தாங்கள் அபவாதததை ஏற்கவேண்டுமா?” என்று கண்பனித்தார் பாஷ்யக்காரர்.


  ‘ஜடாயுவிற்கு ஸ்ரீராமபிரான் பண்ணவில்லையா? விதுரருக்கு தர்மர் கொள்ளிபோடவில்லையா?.ஜடாயு, விதுரரையும் விட எந்தவிதத்திலும் எந்தன் மாறநம்பி தாழ்ந்தவரில்லை  ..ஸ்ரீராமனையும் யுதிர்ஷ்டிரனையும்விட அடியேன்  அந்த தகுதி உடையவனுமல்லன். பயிலும் சுடரொளி நெடுமார்க்கடிமை பாசுரங்களின் பொருள்பட நடப்பவன் அடியேன். திருவாய்மொழி மறவாது மொழியும் என்னை தூஷிப்பவர்களின் கூச்சல் கடல் ஓசையைப்போல பயனற்றுப்போகும்” என்றார் பெரியநம்பி.

 உடையவரும் மனம் நெகிழ்ந்து பெரிய நம்பியை வணங்கி நின்றார்.
பெரியநம்பி  இப்படிமாறநம்பிக்கு  அந்திமக்காரியங்கள் செய்ததால் ஊர்மக்களின் பகைக்கு ஆளானார்.

திருவரங்கத்தில் நான்கு சித்திரைவீதிகள்(கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு) நான்கு கோபுரங்களைக்கொண்டது, இந்தவீதிகளில் ஆச்சார்ய புருஷர்கள் என்று அழைக்கப்படும் வைணவசமயத்தலைவர்களின் திருமாளிகைகள் அமைந்துள்ளன. சித்திரைதேரடியும் கிழக்கு சித்திரைவீதியில் இருக்கிறது. தேரடி அருகே பெரியநம்பியின் திருமாளிகையும் அவருக்கென்று சிறு சந்நிதியும்  இன்னமும் உள்ளது.

 அன்று சித்திரைத்தேர்..தேர்த்திருவிழா என்றால்  ஊரே இரண்டுபடும். பெரிய நம்பியின்மீது பகைகொண்டவர்கள் அவர் இல்லத்து  வழியாக தேர் செல்வதை விரும்பவில்லை.. அவர்களின் முணுமுணுப்பை நம்பியின் மகள் அத்துழாய் கேட்டுவிட்டாள்.  மானசீகமாய் நம்பெருமானிடம் வேண்டுகோள் விடுத்தாள்”அரங்கா! என்  தந்தை செய்தது தவறில்லை என்று உனக்குத்தெரியும் அப்படியானால் அவருக்கு தரிசனம் தராமல் உனது தேர் நகரக்கூடாது” என்றாள்.

திருத்தேர் நகராமல் நின்றது.


பின்னர் ஊர்மக்கள் பெரியநம்பிகளின் உயர்ந்தகுணத்தை எம்பெருமானே ஏற்றுக்கொண்டதை அறிந்து தங்கள் தவறினுக்கு  வணங்கி அவரிடம் மன்னிப்புகேட்டார்கள். அவரை அன்போடு  தேருக்கு அழைத்து  வந்தார்கள்.
பெரிய நம்பியும் எம்பெருமானின் தரிசனம் பெற்று பெருமகிழ்ச்சி அடைந்தார்

 தேர் நின்ற இடமே தேரடியானது. அதன் மிக அருகிலேயே பெரிய நம்பிதிருமாளிகை!   இவை இரண்டையும் திருவரங்கம் கிழக்குச்சித்திரைவீதியில்  இன்றும் காணலாம்!




 எனது இக்கட்டுரையை வெளியிட்ட விஜயபாரதம்  தீபாவளிமலர்2013க்கு நன்றி

 









--
 
. .


--
மேலும் படிக்க... " மாறநேர் நம்பி ."

Monday, November 04, 2013

சேஷ வாகனம்.(சிறுகதை)

 
 
விஜயபாரதம் தீபாவளி மலரில் வந்துள்ள  சிறுகதை  உங்கள் பார்வைக்கு!
 
சேஷ வாகனம்.

.

"ராஜு !இன்னிக்கு  சேஷவாகனமாம் கிளம்புடா போயிட்டுவரலாம்” என்று அழைத்தபடியே  வந்தார் திருமலை.
 
அறுபது வயதிருக்கும்  திருமலை மாமாவிற்கு. சின்னஸ்ரீரங்கத்தில்  திருமலை என்றால் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. ஊரின் மேல் உள்ள பற்றி்ல் பதவி உயர்வுக்கான தேர்வு எழுத விருப்பமின்றி அருகில் வங்கியில்  கடைசிவரை கிளர்க்காகவே இருந்து  அண்மையில்  பணி ஓய்வு பெற்றவர். சின்ன ஸ்ரீரங்கம் அழகியரங்கன் கோவிலின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருப்பவர்.நெடுநெடுவென ஆறடி உயரத்தில் ரோஜாப்பூ நிறத்தில் பளிச்சென்ற திருமண் முகத்தில் தெரியும் தேஜசில்  மாமாவே எனக்கு  பெருமாளாகக்காட்சி அளிப்பதுபோலிருந்தது.

கிராமம் என்றில்லாத பெரிய நகரம் என்றுமில்லாத  சற்றே பெரிய சிற்றூர்தான்  சின்ன ஸ்ரீரங்கம்.  ஊருக்கே பெருமை கோவிலால்தான். கோவிலில்  வருடா வருடம் நடக்கும் புரட்டாசிமாத உற்சவம்  ஆரம்பித்துவிட்டது.
 
“இதோ வந்துட்டேன்  ....மாமா,நாதஸ்வரம் யார் வாசிக்கப்போறா?” என்று கேட்டேன் நான்.
 
திருமலைக்கு நாதஸ்வரக்கச்சேரி என்றால் உயிர்  .பொதுவாகவே இசையில் நல்ல ரசனை அவருக்கு.அப்பா   இருந்தவரை அவரும் திருமலைமாமாவும் ராகங்களைப்பற்றி விமர்சனம் செய்து பேசிக்கொண்டிருப்பார்கள். அ்ப்பா    மாரடைப்பில் திடீரென போனதும் நானும் அம்மாவும்  என் வேலை காரணமாய்  இரண்டுவருஷம் முன்புஊரைவிட்டே  போய்விட்டோம் இதுபோல உற்சவ சமயங்களில் மட்டும்  ஊர் வந்து பூட்டிக்கிடக்கிற வீட்டைத்திறந்து  10நாட்களும் தங்கிச்செல்வோம்.  இந்ததடவை அம்மா  வடக்கே தீர்த்தயாத்திரைக்குப்போய்விட்டாள் . தனியே இருக்கும் உணர்வே ஊரில் ஏற்பட சாத்தியமில்லை.

கோயிலில் தினமும் யாராவது ஊர்க்காரர்களின் மண்டகப்படி இருக்கும் ததியாராதனம் நடக்கும் சாப்பாட்டுக்குக்கவலை இல்லை .திருமலை மாமாவின் குடும்பம் இருக்கிறவரை எனக்கு எதற்கும்  கவலை இல்லை. எனது இன்னொரு அப்பா திருமலை மாமா.
 
“யாரோ  தங்கமணின்னு ஒருத்தராம்.. இதல்லாம் என்ன கச்சேரி அந்த நாளில் அனந்தபத்மநாபன் வாசிக்கணும் அதைக்கேக்கணும்” என்றார் சுவாரஸ்யமில்லாமல்.
 
அந்த சமயம் கோவில் வாசலிலிருந்து  பெருமாள் புறப்பாட்டின் வேட்டுச்சத்தம் கேட்டது இல்லாவிட்டால் திருமலை ஒரு புராணமே பாடி இருப்பார்.கோவிலை நோக்கி அவர் முன்னே நடக்க நான் பின் தொடர்ந்தேன்.
முத்தும் ரத்தினமும் மின்ன  வைரங்கள்  ஒளியினை வாரிக்கொட்ட எம்பெருமான் நாகவாகனத்தில்  கண்கொள்ளா காட்சி அளித்தார். படமெடுக்கும்ஐந்துதலை நாகவாகனம் முழுவதும் பொன் பூச்சில்  தகதகத்தது.
‘இருளறியச்சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த அரவரசப்பெருஞ்ஜோதி’என்று ஆழ்வார் பாடியதுபோல  நாகத்தலைகள் கண்ணையும் மனதையும் நிறைப்பதை உணர்ந்தேன்.
 
வாகனத்தை  தோளில் சுமந்தபடி ஸ்ரீபாதம் தாங்கிகள் முன்னே  சென்றனர்.   நாங்களும்  கூடவே நடக்க ஆரம்பித்தோம்.





 ராகமாலிகையை நாதஸ்வரத்தில்  இழைத்துக்கொண்டிருந்தார் தங்கமணி.சிவரஞ்சனி  கரகரப்ரியாவைத் தொடர்ந்து  கீரவாணிராகத்தை நாதமாய்க்குழைத்தபோது காதுகளைத்திறந்துகொண்ட நான் கண்களை அப்படியே  அனுபவிக்கும் நோக்கத்தில் மூடிக்கொண்டேன்.

இசைக்குத்தான் எத்தனை கவர்ச்சி.செவிவழிபுகுந்து இதயத்தை வருட இசையால்மட்டுமே முடியும்.ராகமாலிகையில் அடுத்து புன்னாகவராளிராகத்தை வாசித்தபோது மெய் சிலிர்க்க ஆரம்பித்தது. நெஞ்சக்காட்டில் பாம்பு ஒன்று புகுந்து ஆடுகி்றமாதiிரி இருந்தது.
 
தiிடுக்கிட்டுக்கண்விழித்தேன்.
 
எதிரே நாகவாகனத்தில் எம்பெருமான்! ‘என்ன ராஜூ  ஊரைவிட்டுப்போனாலும் என்னை மறக்கவில்லைதானே? ‘என்று குறும்பாய் கேட்பதுபோல இருந்தது. அதெப்படி இருபத்தி ஐந்து வருடம் புரண்ட மண்ணை மறக்கமுடியுமா என்ன? அப்பா சொல்லிக்கொடுத்த ஆழ்வார்பாசுரங்களும்  கீதை உரைகளும் என்னை மேலும் உரம்போட்டு ஊர் நினைவை உற்சாகப்படுத்துமே தவிர மறக்க வைத்துவிடுமா?
நானும்  மகிழ்ச்சிகலந்த பார்வையை அரவணையில் வீற்றிருந்த  எம்பெருமானிடம்  செலுத்தியபோது  ஐந்துதலை நாகம் மெல்ல அசைந்ததுபோல இருந்தது. என்ன! வாகனத்தில் நாகத்தலைகள் எங்காவது  தானாய்அசையுமா?
ஒரு நொடிதான் அசைவு நின்று மறுபடி நாகத்தலைகள் நிமிர்ந்தே நிற்க ஆரம்பித்தது . என்ன இது பிரமையா? மறுபடி நிமிர்ந்தேன் லோகமூர்த்தி சிரித்துக்கொண்டிருந்தார். அப்பாடி எல்லாம் பிரமை வெறும் பிரமைதான்!
 
 .
 
”ராஜூ,போகலாமா? ”திருமலை என் தோளைத்தட்டினார். என்ன ஆயிற்று மாமா முன்பெல்லாம்  கோவிலின் உற்சவம் என்றால்  சந்நிதி வாசலிலேயே  நின்றுகொண்டிருப்பார், அர்ச்சனை , அலங்காரம் பிரசாதம் அம்சை ஆகி விநியோகம்  வரைஎல்லாம் சரிவர நடக்கிறதா என்று  பார்ப்பார். கோயில் ட்ரஸ்டி என்ற முறையில் கணக்குவழக்குகள் எல்லாம் கவனிப்பார் வீதி உலா சமயங்களில் வேதகோஷ்டியோடு தானும் சேர்ந்து நடப்பார். போனவருஷமே மாமா அவ்வளவு உற்சாகமாய் இல்லைதான்  இந்தவருஷம் இன்னமும்  வாடிப்போனவராய் தெரிகிறாரே!
 
‘ஏன் மாமா கச்சேரி அற்புதமா யிருக்கே மனசே இல்லையே கிளம்பறதுக்கு”
 
“கிளம்பு சொல்றேன்.. எனக்கும்மனசே சரியில்லை”நகர ஆரம்பித்தார்.
 
திருமலையின் குரல் சுரத்தில்லாமலிருக்கவும் ‘சரி;என சொல்லி அவரைப்பின் தொடர்ந்தேன்.
 
வழியெல்லாம்  அவர் பேசவே இல்லை திடீரென,”ராஜூ!   உனக்கு சாரநாதபட்டரைத்தெரியுமோல்லியோ என்று கேட்டார்.
 
“தெரியுமே  மாமா .இப்போ  ரண்டுவருஷமா  கோவிலில்  பெருமாளுக்குக்கைங்கர்யம் பண்ணுகிற பட்டப்பா பட்டரின் அண்ணாதானே? நீங்க அடிக்கடி   புகழ்ந்து சொல்லும்  ரெங்கபட்டரின் மருமான் தானே அவர்?”
 
“ஆமா அவரைத்தான் இப்ப  பாக்கப்போறோம்”
 
கீழ் வீதியின் கோடியிலிருந்த  ஒரு வீட்டை அடைந்தோம்.
 
வாசல்திண்ணையில்  விசிறியை  வீசிக்கொண்டு உட்கார்ந்திருந்த சாரநாதபட்டர் எங்களைக்கண்டதும் முகம் மலர்ந்தார்.

“வாடா ராஜூ! சென்னைல  ஜோலியாக்கும்?  கல்யாணம்  எப்ப?  ஏதும்  பட்டணத்துல வேற ஜாதிக்காரப்பொண்ணைப் பாத்து வச்சிட்டியா?” என்றார்  கிண்டலும்  உரிமையும் கலந்த குரலில்.

“அதெல்லாம்  பண்ணமாட்டான் ராஜகோபாலன்.. வேதசிரோன்மணியோட பேரன்... அவனும்  வேதம் படிச்சிருக்கான். வேலை நிமித்தம் வெளியூர்போயிட்டானே தவிர அவன் ஊரையும் கோயிலையும் பெருமாளையும் மறக்கிறவன் இல்லை.பெரியவா ஆசிர்வாதம் அவனுக்கு நிறைய இருக்கு. பெருமாளை ஆத்மார்த்தமா  நேசிக்கிறவா தப்பு பண்ணமாட்டா” என்றார் திருமலைமாமா  நறுக் என்ற  குரலில்.

மாமாவின் வார்த்தைகளில் எனக்குப்பெருமையாக இருந்தாலும் அவர் ஏதோ கோபத்தில் இருப்பதை முகம் காட்டியது.




“வாங்கோ  திருமலை என்ன அதிசியம்  தேவரீர் என் குடிசைக்கு  வந்திருக்கிறீர்கள்!  நானும் சேஷ வாகனம் சேவிக்கப்போகாமல்  கால்வலின்னு  திண்ணைலயே  உக்காந்துட்டேன்,.  இப்படி உக்காருங்கோ ரண்டுபேரும்” என்று  அமர்ந்தபடியே வரவேற்றார் 
 
மாமா உட்காராமலேயே,” சாரநாதா! உங்க மாமா முன்னே எழுதிவைச்சிருந்தாரே அந்த சுவடிகளைக்கொடு” என்றார் சற்று  அதட்டலான குரலில்.
 
“என்ன திருமலை  இப்போ திடிர்னு கேக்கறீர்?போனவருஷம் எடுத்துக்கொண்டுபோங்கள்  இங்கே யாருக்கு சுவடியெல்லாம்  படிக்கப்பொறுமை இருக்குன்னு மன்றாடினேன் நீங்க அப்போ  எடுத்துக்கவேஇல்லை”
 
“அது பழையசமாசாரம் ஆனா இப்ப அதைப்பார்த்தாகணும்னு தோன்றது கொண்டுவாயேன்..”
 
்  உள்ளேபோனவர் திரும்பி வருகிற கால்மணி நேரமும் அப்படியே நின்றுகொண்டிருந்தோம்.

சுவடிகளைப்பெற்றுக்கொண்டு”வரேன்” என்றவர் விருட்டென நடக்க ஆரம்பித்தார்.
 
எனக்கு மாமாவின் செய்கை  புதுமையாய் இருக்கவே”சுவடில என்ன இருக்கு?’ என்று கேட்டேன்.
 
“மாமா பெருமுச்சுவிட்டபடி “நாளைக்கு   வாயேன்,பேசலாம் ” என்றார்

. மாமாவுக்கு என்ன ஆயிற்றுதிடீரென்று?
 
என்னவோ ஆகி இருக்கி்றது இவ்வளவு பதட்டம் அவரை ஆட்கொண்டு நான் பார்த்ததில்லை. பெருமாள் புறப்பாடு என்றால்  வீதி உலா  முடிகிறவரை  பெருமாள்கூடவே இருப்பவர்  இப்படி  சட்டென  தன் வீட்டை நோக்கி நடப்பது வியப்பாகப்பட்டது.


மறுநாள் போனேன்.

“வா  ராஜு.. உட்கார்.. நேத்திக்கு உன்னை ரொம்ப குழப்பிவிட்டுட்டேனோ? எனக்கே  ஏன் அப்படி நடந்துகொண்டேன்னு புரியலைப்பா..”  என்று சொல்லி சிரிக்க முயன்றார். அவர்முன்  மேஜையில் பழைய ஓலைச்சுவடிகள் கிடந்தன.
அவரே தொடர்ந்தார்.”கோயில் முன்னமாதிரி இல்லை ராஜூ.. ரங்கபட்டர் இருந்தவரை  அவரது தொண்ணூறுவயசுவரை கோயிலுக்காக  உழைச்சார் உண்மையான சேவகம் பண்ணினார். அவர் இருந்தவரை கோவில் நிர்வாகத்தில் எந்தக் குளறுபடியும் வரலை.அவர்போனதும் அவருக்கு வாரிசு இல்லாததால் மருமான்கள் இருவரும் போட்டியிட  கால்வலி தொல்லையால் சாரநாதனும் கோவிலுக்கு கைங்கர்யம் பண்ண போகாமல் அடிக்கடி வீட்டோட தங்கிவிட  பட்டப்பா பட்டர் தான் முழுப்பொறுப்பு ஏற்கிறான். அவனுடைய அரசியல்வாதிகளின் சகவாசத்தில் கோயிலில் அக்கிரமம் நடக்கிறது அதைஎனக்குத்தெரியாமல் பட்டப்பா மறைக்கப்பார்க்கிறான்.
இன்னிக்கு நாகவாகனத்தில் இருக்கிறது பழைய பொன் நாகமே இல்லை அதேபோல  வெள்ளீல பண்ணி தங்கமுலாம் பூசி  வச்சிட்டான் பட்டப்பா..  இதெல்லாம் அரசல்புரசலா எனக்குத்தெரிந்துதான் இருக்கிறது ஆனா எதையும் கேட்கமுடியாமல்  அவனோட சமீபத்திய அரசியல் பலம்  என்னைக்கட்டிப்போடறது. ..ஆனா  தெய்வம் எல்லாத்தையும் பாத்துண்டுதான் இருக்கு”

பெருமூச்சுவிட்டு நிறுத்தினார்.

ஓஹோ மாமாவின்  கவலை இதுதானா?

திருமலை  மேலும் பேசத்தொடங்கினார்.”ராஜூ..அதிருக்கட்டும்..இங்கே பாரேன் இது ரங்கபட்டர் எழுதின ஓலைச்சுவடிகள் எனக்கு சுவடி வாசிக்கிற கலை தெரியும் அதான்  நேத்து கேட்டு வாங்கிண்டுவந்தேன் இதுல அவர் தான்  பகவானை நேரில் பார்த்ததை அனுபவிச்சி எழுதி இருக்கார்,..”

“அப்படியா?”

‘ஆமாம் ராஜூ அதுவும் வெறும் சங்குசக்கரத்தோட  இல்லை தலைக்குமேலே குடைபிடிச்சமாதிரி ஐந்துதலை நாகத்தோட    சேஷவாகன உற்சவத்திருநாளில் தரிசித்து இருக்கார்..அண்ணலின் சிரம் மீது நிஜ நாகம் படமெடுத்து ஆடுவதை  அப்படியே வர்ணித்து எழுதி இருக்கிறார் ராஜூ! இதுல ஒரு விசேஷம் என்னன்னா  அந்த சொரூபம் பார்த்ததுமே அவருக்கு  திகைப்பில் வாய் அடைச்சிபோய்டுத்தாம்.   ஊமையாகிப்போனேன்  என் அனுபவத்தை ஒருஓலைச் சுவடியில் எழுதுகிறேன்”ன்னு   அன்னிக்கே என்னிடம் ஜாடையில் சொன்னார் அப்போது நான் இதை  பெரிதாக எண்ணவே இல்லை..”

“இது ரொம்பவே ஆச்சரியம் மாமா?”

“ஆச்சரியம் ஒன்றுமே இல்லை ராஜூ..எங்கோ வெடித்த அணுகுண்டின் கதிர்கள் எங்கோ இருக்கிறவனைத் தாக்கிடறதுன்னு  படிக்கலையா? அதை நம்புகிறாய் இதை நம்பமாட்டாயா?”

என்பிரமை நீங்குமுன்பே அவர் தொடர்ந்தார்.

”ரங்கபட்டர் சிறுவயதுமுதலே கோயில் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர். அவர் அர்ச்சனை செய்தாலோ  சஹஸ்ரநாமம் சொன்னாலோ கணீரென கேட்கும் ஆத்மார்த்தமாய் செய்வார். அரைகுறையாய் எதையும் செய்யமாட்டார். சேஷவாகனம்  மட்டும் அவர்பொறுப்புதான்  யாரையும் நெருங்கவிடமாட்டார்.
பழையநாளில் விஜயநகர ராஜா  ஒருத்தர்அன்பளிப்பாய்கொடுத்ததாம்  இந்த ஐந்துதலைநாக வாகனம்  முழுக்கச்சொக்கத்தங்கமாம். ரங்கபட்டருக்கு மனசும் கையும் சுத்தம். இந்த ஓலையில் அவர்  எல்லா விவரமும் எழுதி இருக்கிறார்.  வாசிக்கிறேன் கேளேன்..“

திருமலை ஆர்வமாய் வாசிக்க ஆரம்பித்தார்.

‘ இன்னிக்கு சேஷ வாகனம்.வாகனத்தில் பெருமாளை எழுந்தருளப்பண்ணிவிட்டு ஒருமுறை பெருமாளைப்பார்க்கிறேன்..ஸ்வர்ணாபரணங்களும் முத்து ரத்தினமாலைகளும் பெருமாளின் திருமேனியில்  பெருமையுடன்  வீற்றிருக்கின்றன. விருட்சியும் தவனமும் சேர்த்துக்கட்டிய பூமாலையும் மணக்கக்காட்சி அளிக்கிறது..ஐந்துதலையுடன்  படமெடுக்கும் தங்க நாகம்  மின்னுகிறதுஆனாலும் ஏதோ குறை தெரிகிறதே...பூக்களாலேயே  பெருமாளின் முதுக்குப்புறத்தை உயர்த்திக்காட்டவேண்டாமோ? சட்டென கோவில் நந்தவனத்துக்கு ஓடினேன்.புதராய் மண்டிக்கிடந்தது  தாழம்பூ.அப்படியே பறித்துக்கொண்டுவந்து  பெருமாளின்  பின்பக்கமாக சற்று உயரக்காணும்படியாக விசிறிபோல  தாழம்பூவை வைத்து அலங்கரித்தேன் ஆஹா! மனசு குளிர்ந்தது இப்போதுதான்.  என்ன அழகு என்ன அழகு எம்பெருமான்  என்னமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக்காணாவே என்று ஆழ்வார்பெருமான் அருளியதும் எத்துணைப்பொருத்தம்!பார்த்துக்கொண்டே இருக்கையில் பெருமானின் தலைக்குமேலே ஐந்து தலைநாகம் அழகாக ஆடியபடி குடைபிடிக்கிறது.  பிரமையோ?  ஊஹும் இல்லை இல்லை நாகம் அப்படியே இருக்கிறது..நிஜ நாகம்!உடம்பே சிலிர்க்கிறது அப்படியே சாஷ்டாங்கமாய் கீழே விழுந்து சேவித்தேன்.”எம்பெருமானே  என்னே உன் கருணை! அலங்கார வாகனத்தை அசல்வாகனமாய் மாற்றிக்காட்டிவிட்டாயே!” கண் நிறைக்க  தரிசித்தேன் ..கண்ணில் நீர் பெருகிப்பார்வையை மறைத்தது துடைத்துக்கொண்டு திரும்பிப்பார்க்கையில் பெருமாள் இருக்கிறார் குடைபிடித்த நாகம் மறைந்திருந்தது.
அதன்பின்பு எனக்கு உடல் தளர்ந்துவிட்டது. படுக்கையில் விழுந்துவிட்டேன்திருநாடேகும் நாளுக்குக்காத்திருக்கிறேன் எம்பெருமான் திருவடியை அடைய சித்தமாகிவிட்டேன் அதற்குமுன்பாக  என் அனுபவத்தை இதில் எழுதி வைக்கிறேன். ‘

திருமலை கண்பனிக்கப்  படித்துமுடித்ததும் எனக்கு நேற்றுஇதேபோல்  படமெடுத்து  தலை நிமிர்த்தி நின்ற   காட்சி நினைவுக்குவந்தது. நான் கண்டதும்  இதைத்தானே!  ்  சேச்சே  ரங்கபட்டர் என்னும் உயர்ந்த ஆத்மா எங்கே நான் எங்கே! பிரமைதான் இதையெல்லாம் மாமாவிடம் சொல்லிப்பெருமையடித்துக்கொள்ளக்  கூடாது.

ஒருவாரம் ஓடிவிட்டது ஆயிற்று நானும் ஊர்போகிற நாள் வந்துவிட்டது.

கோவில் பக்கம்  போனவன் அங்கே நந்தவனத்தின் அருகே பெரிய கூட்டத்தைக்காணவும் திகைப்புடன் அருகில் போனேன்.

“பட்டப்பா  பட்டரை பாம்பு கடிச்சிடுத்து... நந்தவனத்துல தாழம்பூப்புதர்ல தாழம்  பூப்பறிக்க  போனவரை பாம்பு தீண்டியதும் கூப்பாடு போட்ருக்கார்  எல்லாரும் ஓடி வந்தாளாம்.  டவுன் அஸ்பித்ரிக்கு கார்ல  கூட்டிண்டு போய்ருக்கா..ஒருத்தர் பாம்பு நெளிஞ்சி ஓடறதைபபர்த்து  ஆ’ன்னு  வீறிட்டாராம்  .அஞ்சுதலைப்பாம்பாம். அஞ்சுதலைப்பாம்பைப்பார்த்தேன் அதுதான் பட்டரைக்கடிச்சிடுத்துன்னு சொன்னார் ..பெரிய  பாம்பாம் அடிக்க பின்னாடியே  போய்ருக்கா.. அது  தப்பிச்சிப்போய்டுத்துபோல்ருக்கு  பாம்பை அடிக்கப்போனவாளை இன்னும் காணல..பட்டப்பா வேற  உயிருக்கு ஆபத்தான நிலைல இருக்கார்..”

நான் யோசிக்கலானேன்.  தாழம்பூப்புதர்ப்பாம்பென்றால் முன்னர் இரண்டுவருஷம் முன்பு ரங்கபட்டருக்குக்காட்சி அளித்த அதே ஐந்துதலைப்பாம்புதானோ? இங்கிருந்துதானே படமெடுத்து வந்து அவருக்கு அரிய காட்சியைக்கொடுத்தது? உண்மையான பக்தராகிய அவரைத்தீண்டாத நாகம் கோவிலுக்கு துரோகம் செய்யும் பட்டப்பா பட்டரைக்கண்டதும் வெகுண்டு தீண்டி விட்டதோ?

அப்படியானால் நேற்று எனக்கு ரங்கபட்டர் கண்ட அதே காட்சியை பெருமாள் காணவைத்தாரே! கூடவே சி்ன்ன சிரிப்பும் சிரித்துவைத்தாரே!  கலியுகத்தில்  வேறு எவ்விதம் பக்தருக்குக்கடவுள்   பிரசன்னமாகப்போகிறார்? சீறவேண்டிய பாம்பு அடங்கிக்குடை பிடித்ததே அதுவல்லவோ விசேஷம்?
நான் கண்களைத்  துடைத்துக்கொண்டேன்.





****************************************************************







--

 
 
. .
Reply
Forward
 
    
மேலும் படிக்க... "சேஷ வாகனம்.(சிறுகதை)"

Tuesday, October 29, 2013

ரூபனின் தீபாவளிச் சிறப்புக்கவிதை போட்டி.

     




ஒளி காட்டும் வழி!
************************

இருளும் ஒளியும்
 
இணைந்தது வாழ்க்கை!
 
ஒளிமயமான எதிர்காலம்
 
ஒருநாள் வருமென்பதே நம்பிக்கை!
 
ஓலம் கேவல் பெருமூச்சென்றே
 
காலம்  ஓடிக்கொண்டிருக்க
 
கண்முன் கருமை படர்கிறது,
 
எண்ணற்றக்கவலை பிறக்கிறது.
 
விறகாய் எரியும் பண்புகள்,
 
வெறியாய் மீறும் புனிதங்கள்.
 
சிறகைவிரிக்கும்  கழுகுக்கூட்டம்,
 
உறவெனச்சொல்லிப்போடும் ஆட்டம்.
 
கண்கள் முன்னே கறுப்புச்சாயம்
 
காலம் இதனால் மாறிய மாயம்!
 
’பாரதநாடு பழம்பெரும் நாடு
 
நீரதன் புதல்வர் ’என்றான் பாரதி!
 
நேரெதிர்மோதிடும் தீமை இருளை
 
நெஞ்சம் சேர்ந்து விரட்டிடுவோம்
 
நேர்மைப்பாதையில் நடந்திடுவோம்!
 
பாரதநாட்டினில் பிறந்த நமக்கு
 
பந்தம் சொந்தம் மறந்திடுமோ?

வருடம் ஒருநாள்வரும் தீபாவளி
 
வாழ்நாளுக்கான ஆயத்த ஒளி!  
 
ஒன்றிய கைகள் ஏற்றிடும் ஒளியில்
 
ஓடிவிடாதோ  இருள்தடுமாறி?
 
ஒற்றுமைதான் உயர்வென்றானால்
 
ஓங்கிய ஒளிதான் வழிகாட்டாதோ!



 
மேலும் படிக்க... "ரூபனின் தீபாவளிச் சிறப்புக்கவிதை போட்டி."

Thursday, October 24, 2013

திகட்டாததே திவ்யப்பிரபந்தமே!

 
 
 
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்ப்படுத்த
விமலன் விண்ணவர்கோன்  விரையார் பொழிலவேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.
 
முதல் வரியைப்பாருங்கள் அமலனாம் ஆதிபிரானாம்
 
அவன்அடியார்க்கு ஆட்படுத்த..வேண்டுமாம்
 
//பூதாதி: நிதி: அவய்ய:
 
பூதாநாம் ஆதிகாரணத்வாத் பூதாதி:’ என்பது ஸ்ரீ பகவத் பாதரின் உரை. 
 
 வெறுமனே ஆதி அன்று. பூதங்கள் எல்லாம் சென்று சேரத் துடிக்கும் லட்சியமான ஆதி. அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து விருப்பங்களையும் அளிக்கும் ஆதி. எது இருந்தால் உலக இன்பங்கள் கூட இனிக்குமோ, எது இல்லையென்றால் வேறு எது இருந்தும் இலலமையே மிஞ்சுமோ அப்படிப்பட்ட ஆதி, உண்டான பொருட்களுக்கு இந்த பூதாதி: என்கிறார் ஸ்ரீபராசர பட்டர்.// என்று  விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கத்தை  அருமையாக  எழுதிவரும் அன்பரின் மடலில் இதை வாசிக்கவும்  ஆதிபிரானைப்பற்றி  இன்று  எழுத ஆரம்பிக்கவும் சரியாக இருக்கிறது!
 
 
ஆண்டவனைப்பாடுமுன் அவன் அடியார்களைப்பாடுகிறார்  வணங்குகிறார் ஆழ்வார் பெருமான்.. அதைதானே அண்ணல் விரும்புவான்?
 
அமலன்  விமலன்  நிமலன் நின்மலன்  என்று  அண்ணலை நான்குமுறை  திருப்பாணாழ்வார் ஏன் அழைக்கிறார்?
 அமலன்..பரிசுத்தமானவன்; குறைகள் அற்றவன்; மேலும் பிறர் குறைகளையும் களைபவன்.

விமலன் - அண்டியவர்களிடம் குற்றம் காண்பது என்ற குறை இல்லாதவன்.

நிமலன் - அடியார்கள் வேண்டினால் தான் உபகாரம் செய்வேன் என்ற குறை இல்லாதவன். எதையும் எதிர்பாராதவன்.

நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்
 
”என்னையா என்னையா  அரங்கன் அழைத்துவரச்சொன்னான்?” என்று நம்பமுடியாமல் கேட்டு  தலையைத்தூக்கிய ஆழ்வார்பெருமானுக்கு  மலையப்பன்  கண்முன் வந்துவிட்டான்.உயரேஇருப்பவன் அவந்தானே ?

அவனைத்துதித்து  முடிக்கவும்அரங்கனின்  பாதம் விழிகளின் வசம்  அங்கு வாசம்!
ஆதிபிரானை வேங்கடவனை முன்வைத்து அரங்கனை  பாதம்  தொழுகிறார் திருப்பாணாழ்வார்.

அரங்கனின் சந்நிதிக்குள்  நுழையுமுன்பாக வலப்புறம்  வேங்கடவனின்    சித்திரம்  காட்சி அளிக்கும்
 
(என் குருவின் அன்பு ஆணைப்படி   இன்றுமுதல் இந்தத்தலைப்பில்  ஆழ்வார்களை  அன்போடு   மேலும் மேலும் ஆராதிக்க அரங்கன்  அருளவேண்டும்)



--
 
 
மேலும் படிக்க... "திகட்டாததே திவ்யப்பிரபந்தமே!"

Monday, October 14, 2013

சக்திவருகிறாள் சக்திவருகிறாள்!

 
 
 
 
சக்திவருகிறாள் சக்திவருகிறாள்
முக்தியதை நமக்களித்திடவே பரா
சக்தி  வருகிறாள் சக்தி வருகிறாள்
 
கூறுவோம் அவள்பேரை  காலைமாலை இடை
யூறெல்லாம் தேடிப்போகுமிடம் பாலை
 
யாதுமாகித்தான்  நிற்பவள் அறிவாள்  நம்துன்பம்
ஏதும் இல்லாமல் அதை அழித்துச் செறிவாள்
 
 ஆலம்குடித்தவன் ஆயுள் வளர்த்தவள் மகாசக்தி அவள்
சீலம் மிக தந்து சிந்தையைவளர்க்கும்  ஆதிபராசக்தி!
 
எங்கும் எதிலும்  வெற்றியே பெற்றிட  வேண்டிவணங்கிடுவோம்
மங்களம்பாடியே  அன்னை திருப்பாதம் பணிந்திடுவோம்!
மேலும் படிக்க... "சக்திவருகிறாள் சக்திவருகிறாள்!"

Sunday, October 13, 2013

ஆதலினால் வேண்டுகின்றேனே!

கமலமே  உந்தன் வெண்ணிறமே
அமரவே  என்  உள்ளமே
உயருமே  உவகை கொள்ளுமே!

வீணையே உன் வடிவு விந்தையே
ஆணையாய்  உன் ஒலியிலே
இருப்பவள் தன்னையே
அருள்தரச்சொல்லுவையே!

கவிதை  வடிக்கும் பாவலரே
தவிக்குமெனக்கு அவள்தங்கும்
உள்ளமதை தாருமே!

நான்மறையே நல் வேதமே
உன் உள்செல்ல வழிதாயே(ன்)
ஒளிர்நின்றிருக்கும் ஒரு மகளை
தெளிவுற யான்நோக்கவே!

கருணை வாசகமே
அ்ருந்தவம் செயும் முனிவாழுமிடம்
எனைக்கடத்தே(ன்) கலைமகள்
தனைக்காண தயை செய்யே(ன்)!

 தீம்குரல் இசைக்கும் மாதே
இம்மாதுக்கும்  உன் பாட்டை அருளே(ன்)
மழலை மக்களே உங்கள் பேச்சினில்
வாழும் அவளை க்காணவையுங்களே(ன்)!

கீதம் பாடும் குயிலின் குரலே
கிளியின் நாவே! தேடிதன்
இருப்பிடம்  எனவந்த இனியவளைக்
கருத்துடனே தான்காட்டுங்களேன்

குலவு சித்திரமே கோபுரமே கோயிலே
புலவன் பாரதி சொன்னானே
ஈதனைத்திலும் எழிலிடை உற்றாளேயென்று
ஆதலினால் வேண்டுகிறேனே!

 
மேலும் படிக்க... "ஆதலினால் வேண்டுகின்றேனே!"

Saturday, October 12, 2013

கலைவாணி அருளாலே.....

 
 
 
 
 
கற்ற கல்வி கூட வரும்
கலைவாணி அருளாலே
சிலைபோலஞானம் உறுதி பெறும்
 
அடியெடுத்துப்பாடுங்கால்
முடித்துவைக்க துணைபுரிவாள்
 
எதுகையொடு மோனையும்
அதுவதுவாய் பொருந்திவரும்
பாக்கள் எனும் பூக்கள் விரிய
ஆக்கசக்தி தந்து  ஊக்குவிப்பாள்
வெண்பூவில் வீற்றிருக்கும் தெய்வப்
பெண்பூவின் அருளிருந்தால்
புலமையது புகுந்துகொள்ளும்
அளவற்ற புகழ் தேடிவரும்
மேலும் படிக்க... "கலைவாணி அருளாலே....."

Friday, October 11, 2013

வாணி வரம் தருவாய் நீ!


 
 
 
வாணி வரம்  தருவாய் நீ
காணி நிலம் கேட்ட கவிஞனின்
நாவில் நர்த்தனம் செய்த தேவி நீ
 
கல்விக்கு அதிபதி கருணைக்கடலும் நீ
செல்வமாய் உன் அருளிருப்பின்
கொள்ளூமோ பழவினைதான்?
 
பாமரனாயிருந்தவனுக்குப்
பாட்டுக்கனிகுலுங்கும்
பா  மரமாக்கிவைத்த பாரதி!
 
 
அறிவைப்பெருக்கும் அருவி நீ
செறிந்த ஞானம்தரும் செல்வி நீ
உரிய நேரத்திலே உயரக்கொண்டுசென்று
அரிய புகழ் அளிக்கும் சரஸ்வதி !
 
மேலும் படிக்க... "வாணி வரம் தருவாய் நீ!"

Thursday, October 10, 2013

கனா கண்டாளின் கழல் போற்றி!



நிலமங்கைக்கு
 நீண்டநாள் ஆசை
பொறுமையின் சிகரத்திற்கு
 பூமியில் செய்யவேண்டுமாம்
பூவண்ணனுக்குப்பூசை
அண்ணலின்  ஒரு தாரம்
நிலமகள் அவதாரம்
ஜனகனுக்கு சீதை
அண்ணல்புகழ்பாடும்
 ஆழ்வாருக்கு கோதை
நிலமகள் என்னும் தையல்
துளசிதளத்துப்புதையல்
சூடிக்கொடுத்தாள் பூமாலை
பாடிக்கொடுத்தாள் பாமாலை
 
 
கோதையெனப்பெயர்பெற்றாள்
திருப்பாவையெனும்
வேத சாரமதைத்தந்தாள்
மானிடர்க்கென வாழ்கிலேன்
என விரதம் பூண்டாள்
மாலவனையே கரம் பற்றக்
கனா கண்டாள் ஆண்டாள்
அரங்கனை மட்டுமா
அன்பர்மனத்தையும்  ஆண்டாள்!
மேலும் படிக்க... "கனா கண்டாளின் கழல் போற்றி!"

Wednesday, October 09, 2013

பொன் மகள் வந்தாள்!

 
 
 
எனதுனதென்பதெலாம் கனகமகள்
தனது திருவடியினில்சரணமென
மனமதுவும் நினைத்துமிக நெகிழ்ந்துவிட
கணப்பொழுதில் கரைந்துவிடும்
தினமுமருள் சேர்ந்துவரும்
மாதவனின்சக்தியவ்ள்
பாதமதைப்பணியுங்கால்
பாதகங்கள் பறந்துவிடும்
சேதமதுவாழ்க்கையிலே
 சேராது  தடுத்துவிடும்
கற்பகமே கனியமுதே
கண்டோர்கள் கையெடுக்கும்
 சிற்ப வடிவழகே
பொற்புடைய பொன்மகளைப்
போற்றிப்பரவிநின்றால்
நிற்காது துன்பத்தீ தூய
நீராகும் அவளாலே!
மேலும் படிக்க... "பொன் மகள் வந்தாள்!"

Tuesday, October 08, 2013

படிதாண்டா பத்தினி!

to தமிழ், vallamai, மின்தமிழ், தமிழ்
 
 
சீரார் மதில்கள் சூழ் திருவரங்க மாநகரில்
காரார்ந்த மேனியனின் கன்னல் கண்மணியை
வேரதைவாழ்த்தும் விருட்சமாய் வாழ்த்துவேன்
சீரதாய் தமிழை என் சிந்தையிலே வைத்தவளை வாழ்த்துவேன்!
 
. .தேரெழுந்தூர் பெற்ற தமிழ்ச்செல்வமது
பாரெல்லாம் புகழ்கின்ற  ராமகாதைதன்னை
அரங்கேற்றம் செய்திடவே அலைந்திட்டபோது
அரங்கநகர் அன்னை தன் எதிரிலேயே அமரவைத்து
கரங்கொண்டு ஆசிசெய்தாள் கம்பனுக்கு நரசிம்மமும்
சிரக்கம்பம்செய்து  சிரித்து ஆமோதித்தார்
படிதாண்டாபத்தினி !அவள் பாதம் பற்று நீ!
 
மேலும் படிக்க... "படிதாண்டா பத்தினி!"

Monday, October 07, 2013

உமையவளோ உண்மைப்பரம்பொருளோ!





உமையவளோ உண்மைப்பரம்பொருளோ
எமைக்காக்கும் சமயபுரத்தவளோ
உக்கிரம் கொண்டவளோ  உலகில் நிறைந்திருக்கும்
வக்கிரமனத்தோரின் வலிமையை அழிப்பவளோ
சக்கரசங்கக்கரத்தானின் சகோதரியோ   சகலகலாவல்லியோ
எக்கரம் ஏந்தி நிற்பினும்  அருள்பிச்சையை  ஈந்திடும் எம் தாயோ?
 
 
மாவிளக்கேற்றிவைப்போர் வாழ்வில் மனையிலே வளம் வைப்பவளோ
பாவிளக்கேற்றிவைத்தால்  பாழும் இருள் அகற்றி ஞானத்
தூவிளக்கேற்றிவைத்து துயரெனும் இருட்டைத்துரத்து்பவளோ
காலம் முழுதும் நம்மைக்காப்பவளோ காவலாய் இருப்பவளோ
ஞாலம் அனைத்திற்கும் மூலமோ
 ஞானமின்றி நான் இன்னும் புலம்புவதோ?!
மேலும் படிக்க... "உமையவளோ உண்மைப்பரம்பொருளோ!"

Sunday, October 06, 2013

நம் அன்னை மீனாட்சி!

 
 

 
 
 
வாராத  கல்விவரும் வளர்பிறைபோல் பொருளும் வரும்
கூராகும் புத்தியும் நல்லோர் கூட்டமும் சேர்ந்துவரும்
யாராலும் பயமில்லை நம் அன்னை மீனாட்சிதன்
பாதார விந்தங்களை ப்பற்றிப்பணிவோர்க்கு என்றும்!
மேலும் படிக்க... "நம் அன்னை மீனாட்சி!"

Saturday, October 05, 2013

வானம் சக்தி ஆழ்கடலும் சக்தி!

எங்கெங்குகாணினும் சக்தியடா!
என்றவன் எங்கள்பாரதியடா!
அங்கங்கே அவன்கண்ட ஓவியமே
தங்கக்கவிதையாய் தரணியில் நின்றதுவே!
 
சக்திதனை துணையாக்கிக்கொள்வான்
பக்திப்பாமாலை பலபடைப்பான்
 
திக்கெட்டும் வெற்றிக்கொடிகட்டென்பான்
தக்கத்திமியென்றே குதிப்பான்!
 
சக்திக்கென்றால் அவன் எழுதுகோலும்
திக்குமுக்காடித்தான்போகும்!
 
வானம் சக்தி ஆழ்கடலும் சக்தி
கானமயிலும் சக்தி மோனத்தவமும் சக்தி
யானை சக்தி சிறுபூனை சக்தி
பார்க்கும் பொருளெல்லாம் சக்தி
களிப்பில் கூத்தாடி நிற்கும்
கவிஞனுக்கே அவள்மீது பக்தி
மேலும் படிக்க... "வானம் சக்தி ஆழ்கடலும் சக்தி!"

Friday, October 04, 2013

சக்தி ரதம்.

சென்ற ஆண்டி ல்இதே  மஹாளய அமாவாசை தினம் ஆரம்பித்து  நவராத்திரியின் ஒன்பது நாட்களில்  அன்னைமீது பாடல்கள் எழுத அவள்  அருள அது இனிதாய் நடந்தது இ்ந்த ஆண்டும்  அவள் தாள் வணங்கி சக்தி ரதம்  என தலைப்பிட்டு தினம் ஒரு கவிதையாக  வழங்க எண்ணம்   எண்ணிய முடிதல் வேண்டும்!

காப்பு
 
ஆனைமுகங்கொண்ட ஞான முதலோனே
பானை வயிற்றுக்குள்ளே பாரைக்காப்போனே
ஞானமேதுமின்றிலும் பாடமுனைகின்றேன்
தேனாய்ப் பெருகிடவே  தேவே அருள்வீரே!



-
_____________________________________________

 நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்தி
நீருக்குள் சுவையாக  இனிக்கின்றாள்-அவள்
பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்
 
சொல்லுக்குப்பொருளாக திகழ்கின்றாள்-சக்தி
சோர்வுக்குத் தெம்பைத் தருகின்றாள்-அவள்
கற்பகத்தருவெனக் கொடுக்கின்றாள்-கரு
காப்பதைப் பணியாகக் கொள்கின்றாள்.
 
பேரொளியின் ஜோதியாய் நிற்கின்றாள் -சக்தி
பேர்தனிலே வலிமை சேர்க்கின்றாள் அவள்
கார்வண்ணக்காளியாய் சிரிக்கின்றாள் -எல்லைக்
காவல்தெய்வமாயும் காக்கின்றாள்!
___________________
நவராத்திரி குறிப்பு...
 
உடுப்பிகிருஷ்ணன்  கோவிலில் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கிருஷ்ணருக்கு புடவை அணிவித்து அலங்கரிப்பார்கள் இவைகள் மைசூர் மகராஜா வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.
. .
மேலும் படிக்க... "சக்தி ரதம்."

Monday, September 16, 2013

ஓண நினைவுகள்!

 
 
 
காலனியில் எங்கள்   குடும்ப நண்பர்களின் வீட்டில் நவராத்திரி நாட்களுக்கு  குடும்பத்தலைவர்கள்   எங்களோடு  என்னவோ  தூக்கு மேடைக்குச்செல்லும்  கைதிகள்போல சோகமாய் வருவார்கள். நவராத்திரி என்றால் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வீட்டில்  மாலை எங்கள்குடும்பங்கள் கூடி பக்திப்பாடல்கள் பாடிவிட்டு  2ஜி 3ஜி  என பல ஜீக்கள்,கருணாநிதி ஜெயலலிதா  எடியூரப்பா பங்காரப்பா ராஜ்குமார் வரை  என்று ஆண்கள் அரசியல் பேச நாங்க பிசிபேளாபாத் ஆலு பரோட்டாவிலிருந்து ஆனந்தவிகடனில் வந்த கதைகள்,சினிமாவிமர்சனம் வரை எல்லாம்  அலசி   சுண்டல்+ டின்னரை முடித்துக்கொண்டுஇரவு வீடு திரும்புவோம்.
 
சிலவருடங்கள் முன்புஓமனா என்று ஒரு மலையாளப்பெண்  காலனியில் குடிபுகுந்து எங்களுக்கு தோழியானாள். அவள்கணவரும்  எங்கள் கணவர்களுக்கு நண்பரானார். 
 
ஓணத்திருநாள் வருவதால் அன்றைக்கு விருந்துக்கு நாங்கள் எல்லாரும் வரவேண்டுமென ஓமனா கேட்டுக்கொண்டாள்.. ’ கூடிய சீக்கிரமே கணவருக்கு துபாயில் வேறு்  நல்ல வேலைகிடைத்துப்போய்விட இருப்பதால் இந்த ஓணம்  க்ராண்டா செய்றோம் வழக்கத்தைவிட குடும்பமே கூடுகிறது நீங்களும் வாங்க; என்று அழைத்துவிட்டாள்.
 
எங்காவது  எங்களோடு வெளியே ஷாப்பிங்கிற்கு மால் என்று வந்துவிட்டால்  எங்களுக்கு ஏதோ தூரத்து உறவு போல   அதுவும் புடவைக்கடைப்பக்கம்  வந்தா்ல்  போதும்,விரோதிபோல  முகத்தை வைத்துக்கொ்ண்டு ஒரு மூலையில் நிற்கும் எங்கள்  பதிகள்
 
 ஓணம் பண்டிகைக்கு தோழி ஓமனா வீட்டுக்கு  விடிகிறபோதே எழுந்துகொண்டுவி்ட்டார்கள்.பளிச்சென  பட்டுவேட்டி (ஜரிகைபோட்டது)   பட்டு சட்டை கட்டிக்கொண்டு(மச்சினர்கள் கல்யாணத்தின் போதெல்லாம் இதைக்கட்டிக்கொள்ள தோன்றாது என்னவோ பிறந்துவளர்ந்ததே  இங்கிலாந்தில்போல  பேண்ட்டும் இன் செய்த ஷர்ட்டுமாய் போட்டுக்கொண்டு எப்போதோ பம்பாயில் வேலைபார்த்த தோரனையில்  ஹிந்தியில்  பல வார்த்தைகளுடன் சொற்ப தமிழில்  பேசி அலட்டல்மன்னராய் இருக்கும் என் சு பதி(சுபுத்ரமாதிரி சு பதி:)ஓணத்தன்று  மல்லுவாக  மாறி நின்றார். மற்ற    தோழிகளின் கணவர்களும் மலையாளஆ்ண்களாய் அங்கே காணவும் தெரி் ந்துபோனது முதல்நாள் இவர்கள் எல்லாரும்  சலூனுக்கு      திட்டமிட்டு  போன காரணம்  எதற்கு என்று:)
ஓமனாவின் வீட்டில் ஓணத்தன்று அவள் குடும்பமே  கூடி விட்டது..பெண்வாசனை அதிகம் தெரிந்தது!
 
 ‘நாட்டிலிருந்தால் இப்படித்தான்  அத்தரைபேரும்  கூடிக்கொண்டாடுவோம் இப்போள்  இவ்விட பெங்கலூரில் ஆளுக்கொரு திசைல இருக்கோம்  ஓணம் சமயம் எங்க குடும்பமே  கூடிக்களிப்போம் டான்சும் உண்டாக்கும்” என்று ஓமனா  புத்தாண்டுதினம் நடந்த சந்திப்பில் சொல்லிவிட்டாள்..
 
குடும்பப்பொறுப்புகளில் ஆண்களின் பங்கு என்பதைப்பற்றிக்  காட்டுக்கத்திப்  பட்டிமன்றம்  : நடத்தும் போதெல்லாம் கேட்காத எங் கள் பதிகளின் செவிகள்  ஓமனா முணுமுணுத்ததை கேட்டுவிட்டதுபோலும்!  உடனேயே,’உங்க குடும்பமா எதுக்குப்பிரிக்கறீங்க மேடம் எங்க குடும்பமும் அதுதானே.?”   என.எது என்னுதோ அது உன்னுது எது உன்னுதோ அது என்னுது  என்கி்ற விளம்பரப்பாடல்  போல  சுதாவின் கணவர் ஜோக்கடித்தார்.
 
 
மனுஷனுக்கு வீட்டைவிட்டுவெளியே வந்தா    ஜோக்கா  கொட்டுமே-----  சுதா பல்லைக்கடித்தாள்.
 
ஆண்கள் உலகில் இதெல்லாம் சகஜம்டி என்று  ஜனனி அவளை சமாதனப்படுத்தினாள்.
 
மலையாள மக்களைகுஷி்ப்படுத்தவோ என்னவோ”உங்க கேரளா  தமிழுக்கு எவ்வளவு  கொடுத்திருக்கு!!  ஆஹா  அன்று பத்மினி ராகினி  இன்றுஅசின், கோபிகா, நயன்தாரா, பாவனா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர்னு தமிழுக்கு அவங்க தமிழ் உலகுக்குஆற்றியுள்ள சேவைகள் கொஞ்சமா நஞ்சமா?’ என்று  சுரேஷ் ஆரம்பித்தார்.
 
ஆஹா  ஒரு ஆம்பிளை  பெயர் நினைவிருக்கா பாரேன் இவங்களுக்கு?  கிசுகிசுத்தாள் விஜி.
 
ஓம்னா வீட்டு வாசல்  நிறைய  பூக்கோலம் பார்த்ததும்  ” ஆஹா  பூலோகமே இங்கு  வந்ததோ?” என்று கவிதை பாடாதகுறையாக  வியக்கவும்  விஜி”போதுமே  கிருஷ்ண ஜெயந்திக்கு மாஞ்சிமாஞ்சி  குட்டிக்குட்டிக்கால் எல்ல்லாம் போட்டு  வீட்டில்  ஒருத்தியாய்  அத்தனையும் செய்வேன் அப்போ  கண்டுக்கிட்டதே இல்லையே நீங்க இப்ப என்ன  பூக்கோலம் பார்த்து பூ  லோகம்னு  ரொம்பத்தான்  வழியல்?”  என்றாள்.
 
.
 
 
சுரேஷை  மிஞ்சினார்  ஆதித்யா  ///ஓமனாவின் ஒன்றுவிட்ட சகோதரிஎன ஒரு இளம்பெண்  கூந்தலை  விரித்து நுனிமுடிச்சிட்டு அதில்  மல்லிகைப்பூ சுற்றிக்கொண்டு மலையாள  பாணி உடையில் குனிந்து கோலம்போடவும், 
 
 கோலம்போடக்குனிகின்றாய்
 கோலம் அழகா
உன்கோலம் அழகா
 
என்று கவிதைஎ ழுத கைதுறுதுறுப்பதாய் ரகசியமாய் நண்பர்களிடம் சொல்ல  கேட்ட  என் தோழி அவர் மனைவி சசிகலா, ’வீட்டில் புது்சாவாங்கி இருக்கற பூந்துடைப்பமும் அழகு ’ என்றாள்  சிரித்தபடி.
 
ஆக  நாங்கள் எல்லாம் தமிழ்ப்பெண்களாய்  பட்டுசேலை பின்னிய தலை என்று அவர்கள் வீட்டில் நுழைய எங்கள் பதிகள்  வேஷ்டி பட்டுஷர்ட்டுடன் நெற்றியில் சின்ன சந்தனப்பொட்டையும் தீற்றிக்கொண்டு  தொடந்தனர்.
 
உள்ளே யேசுதாஸ் பாடிக்கொண்டிருந்தார்  ஏஷியா நெட்டில்
 
 யேசுதாஸ் பாட்டுக்கு சில மோகினிகளே மோகினி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
 
 ”அடடா! கண் கொள்ளா காட்சி! என்ன நெளிவு சுளிவு! என்ன லாவகம்!!”
வழக்கம் போல ஆண்களில்  ஒரு குரல்  பாட்டை  ரசித்தமாதிரி தெரியவில்லை.
 
 
ஏஷியா நெட்  சானல்தான்  பெஸ்ட் என்ப்துபோல  பேசிவிட்டு  ஓமனாவின் குடும்பத்தார் சிலரோடு  எங்கள்  பதிகள்  அரைகுறை்மலையாளத்தில்பேச ஆரம்பித்தனர்.
 
என்ன ஆச்சு இவங்களுக்கு என நாங்கள்: கிண்டலாய்  கேட்டு சிரித்தபடி  ஹாலில் அமர்ந்தோம்.
 
ஓ ?
ஒ!
 
என் கணவர் சம்மந்தமே  இல்லாமல் மைக்கேல் மதனகாமராஜன் பார்த்த பாதிப்பில்  குரல்கொடுத்தார்,.
 
‘இவள் என் கசின்  பேரு வனஜை  பாலக்கோட்டில்  இருக்கா  தமிழ்  பேசும் உங்களாட்டம்” என்றாள் ஓமனா.
 
பார்க்க   வனஜா சற்று துறுதுறுப்பாக இருந்தாள்..  அவள் நகர்ந்தும் ஹாலில்  ஜொள் பெருகியதால் நாங்கள்”   நினைவில் வச்சிக்குங்க ரெண்டு வளர்ந்த  குழந்தைங்க” என்றோம்
 
“அட  ரெண்டு வளர்ந்த குழந்தைக்கு வனஜை அம்மையோ   ஓ நம்ப முடியவில்லை வில்லை வில்லை” என்றார் ஆதித்யா.
 
“ அட  ரெண்டு வளர்ந்த குழந்தைன்னு சொன்னது  உங்களுக்கெல்லாம்...” என்றேன் நான்.
 
 
கைகொட்டுக்களி  நடனத்தைப்பார்க்கும் போது ,” ஆஹா எத்தனை எளிமையான உடை  மலையாள மங்கயைர்க்கு!
பண்டிகைனாலும் நம்மவீட்டு மாதர்குல திலகங்கள் போல பத்தாயிரத்துக்கு பட்டுபுடவை வாங்காம, சிம்பிளா சந்தன கலரில் பொன் பார்டர் போட்டு அவங்க பாரம்பரிய புடவையில கலக்குறாங்களே””என்று  தங்களுக்குள் பேசிக்கொள்வதாய் நினைத்துக்கொண்டு
 காமிராவுடனிருந்த  எங்கள் கணவர்கள் அனைவருமே  பிசி ஸ்ரீராம் சந்தோஷ் சிவன் பாலும்மகேந்திரா, கேவி ஆன்ந்த ஆனார்கள்.. பத்திரிகைக்குக்கொடுக்க என்னை நல்லபோஸ்ல நல்லதாபோட்டோ எடுங்கன்னு நான் கரடியா கத்தினதை நினைத்துக்கொண்டேன்::)
 
 கை கொட்டுக்களிமுடிந்ததும்,’ எத்தரை சுந்தரமாயிட்டு?” என்று  தைரியமாய் ,மலையாளத்தில் பேச ஆரம்பித்தார்  ஆதித்யா.
 
”சூர்யா டிவில  நயனதாரா  க்ளோபல்வாமிங் பத்தி  ரொம்ப சிந்திச்சிப்பேசாறாங்க  அதைவைங்க ”என்று  விரட்டினார் சுரேஷ்
 
பேசறதைக்கேட்கவா அல்லது பார்க்கவா என்று ஜனனி சீண்டினாள்..
 
 
”க்ளோபால் வாமிங்! இட்ஸ்  சீரியஸ் யு  நோ?ஏந்தான் இப்படி அவேர்னெ்ஸ்சே இல்லாம் இருக்கீங்களோ நம்ம லேடீஸ்லாம்    சரி சரி  கமான் யார் லெட்ஸ் வாட்ச்  சூர்யா சானல்”
 
’ஓ’  என்றேன் நான் நமுட்டு சிரிப்பு சிரித்தபடி
 
 எசியா நெட்ல   மோகன்லால்  மமுட்டி ப்ருத்விராஜ் இன்னும் சில  ஹாண்ட்சம் ஆண்கள் வராங்களாம்,நாங்க கேக்கணுமே என்ற  எங்கள்  குரல்களை ’  கடலினக்கர போனோரே காணாப்போயினபோனோரே  என்ற  பழைய பாடலை  தாளம்போட்டு ரொம்ப அனுபவித்துத்தப்பும் தவறுமாய் பாடிய அவர்களின் குரல்கள்  அமுக்கிவிட்டுவிட்டன:)
 
ஓமனாவின்  சமையல்  அட்டகாசமாய் இருந்தது  அதிலும்ஓணப்பண்டிகையின் முக்கிய அம்சமே ஓண சத்ய என்று அழைக்கப்படும் தடபுடல் ஓண விருந்தாகும் என்று அதைப்பற்றி அவள்  விவரித்தாள்.
 
. உண்டறியணும் ஓணம் என்று கேரளாவில் கூறுவர். தலைவாழை இலைபோட்டு 15க்கும் மேற்பட்ட கூட்டுக்கறிகளுடன் விருந்து படைக்கப்படும். ஓண விருந்து பரிமாறுவதிலும், சாப்பிடுவதிலும் வழிமுறைகள் வகுத்துள்ளனர். தலைவாழை இலையில்தான் ஓண விருந்து பரிமாறப்படும். காரம், புளி, உப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அடங்கிய அறுசுவைகளும் ஓண விருந்தில் இடம்பெறும். அவியல், சாம்பார், பருப்பு, எரிசேரி ஆகியவையும், 4 வகையான உப்பு இடப்பட்ட கறிகளும் உண்டு. தரையில் பாய் விரித்து அமர்ந்துதான் உண்ண வேண்டும். இலையில் இடது ஓரத்தில் முதலில் அப்பளம், அதற்கு மேல் பழம், அப்பளத்தின் வலது புறம் சிறிது உப்பு வைக்க வேண்டும்.
இலையின் இடது புறத்தின் மேல்பகுதியில் நேந்திரங்காய் உப்பேரியும், அதற்கு கீழே சர்க்கரை வரட்டியும், இடது புறத்தின் மேல் உப்பில் இட்ட கறிகளான எலுமிச்சை, மாங்காய், இஞ்சிக்கறி பின்னர் ஓலன் எரிசேரி, அவியல் கிச்சடி, பச்சடி, துவரன் ஆகியவை பரிமாறிய பின்னர் கடைசியில் சாதம் பரிமாறப்படும். இதற்கு பிறகுதான் பருப்பு, சாம்பார், காளன், பாயாசம் அடுத்தடுத்து பரிமாறப்படும். முதலில் சாதத்துடன் பருப்பும், நெய்யும் அப்பளமும் சேர்த்து சாப்பிட்ட பின்னர், சாம்பார் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாயாசமும், அடை பிரதமன், கடலை பிரதமன், பருப்பு பாயாசம், அரிசி பாயாசம், பாலடை என்று பல வகைகள் உண்டு. பாயாசத்திற்கு பின்னர் ரசத்துடன் சிறிது சாதம். இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் வழக்கம் தென் கேரள பகுதியில் மட்டுமே காணப்படும். இதன் பிறகு கடைசியாக சிறிது மோருடன் சாதம் சாப்பிடுவதுடன் நிறைவு பெறுகிறது. வட கேரள பகுதிகளில் ஓண சத்யவுக்கு முன்பே இலையில் பழம், அப்பளம், நெய், சீனி ஆகியவற்றை கலந்து பிசைந்து சாப்பிடுவர். அதன் பின்னர் ஓண சத்ய உண்பர். கொல்லத்தில் பைன் ஆப்பிள் கொண்டு தயார் செய்யப்பட்ட சாராயம் கண்டிப்பாக இருக்கும்(எங்களுக்கு இல்லை சத்தியம்:)). மரச்சீனி கிழங்கும் வைப்பது
 
 ஒமனாவின் ஒன்றுவிட்ட தங்கை அசப்பில் மீ  ரா ஜாஸ்மின்போலதுறுதுறுவென்றிருந்தாள்.. அவள்  சுரேஷுடன் வந்த தம்பியைப்பார்த்து ,’நீங்க அப்படியே ப்ரித்விராஜ்போல இருக்கீங" எனப்புகழ்ந்துவிட்டாள்.
 
ஆஹா...   இந்த மொழி  சத்தம்போ்டாதே படத்தில நடிச்ச ப்ருத்விராஜையா சொல்றீங்க
நம்பமுடியாமல் கேட்டார்  சுரேஷ்.
 
அதே அதே என்று அந்தப்பெண் அநியாயத்துக்கு வெட்கப்பட்டாள்
 
மொழி ஜாதி  மாறினால் என்ன  நாமெல்லாம் இப்போ ஒரே குடும்பம் இந்த மீரா  ஜாஸ்மினை நம்மப்ருத்விராஜுக்கு  முடிச்சால் என்ன?
 
 
சுரேஷ் ஏதோ கணக்குபோட ஆரம்பித்தார்.
 
சாப்பாடு ஆனதும்மறுபடி அந்தமீராஜாஸ்மின் சுரேஷின் தம்பியை’ எத்தரை ஸ்மார்ட்டாயிட்டு?” என்றோஎன்னவோ மலையாளத்தில் புகழ்ந்தாள்.
 
ஆஹா  காதல் வந்திருச்சா?
 
சுரேஷ் என் கணவரிடம்,”பௌர்ணமிபோல  என்ன ஒரு பளிச்  லுக்!அந்தப்பெண் நம்மகுடும்பத்துக்கு வந்தா எவ்வளவு  நல்லாயிருக்கும் சொல்லுங்க ?  ஆனாலும்பாருங்க  நமக்கும் வாய்ச்சீருக்கே..?”  என்று முனகினார்  அவர் மனைவி,”்ஹலோ மாசத்துல ஒரு்நாள்தான் பௌர்ணமி     பளிச் லுக்காம் பளிச் லுக்!  அமாவாசைக்குபோனாலும்வானத்தைகைவிடாம மறுபடி வளர்ந்திட்டே வர்ர நிலாத்துண்டங்கள்  நாங்க!!   பௌர்ணமி ஒரு நா வந்து தலையகாமிச்சிட்டுப் போய்டும்  இளமையும் நில்லா யாக்கையும் நில்லா...  அடிகளார் பாட்டு்  தெர்யுமில்ல?”!
 
ஆனாலும் சுரேஷின் தம்பியைவிடவும் சுரேஷ்  இப்படி ஒரு வாய்ப்பைதவறவிடக்கூடதென நினைத்தார்போலும்
 
 நல்ல நாள் இன்னிக்கு ஓணம் அதிலும் திருவோணம் ஆஹா  என்றார்  புதிதாய் கண்டுபிடித்த மாதிரி!
 
மதியம் மணி 3 ஆனதும்விடைபெற்றுக்கொண்டோம் .
 
 அப்போது மீரா ஜாஸ்மின் சுரேஷிடம்,” உங்கப்ரதர் ரொம்ப ஸ்வீட்  ...  ஐ லைக் ஹிம் சோ மச்”. என்றாள்
 
இதான் சமயம் நழுவவிடாதே சுரேஷ்  உன் தம்பியும்  மௌனமா இருக்கான் மௌனம் சம்மதம்  .. மனசிலாயி? என்று
 
ஆதித்யன்  உசுப்பினார்
 
 
சுரேஷ்  ஓமனாவிடம் சென்று,” உங்க கசின்  அதான் மீரா  ஜாஸ்மின் மாதிரி  இருக்காங்களே  - அவங்க---?” என இழுத்தார்.
 
“ ஆமாம்.. அவ  வாயாடி ஏதும் பேசிட்டாளா எசகுபிசகா?  ஏய்  இவ்விட  வா”
என்று அவளை அழைத்துவிட்டாள்.அதற்குள் அவள் ஓ்டி வந்தபடி,” சேச்சி...  சுரேஷ் அங்கிள்  தம்பிய  நீங்க பார்த்தீங்களா?  அப்படியே  ப்ருத்விராஜ் போல  இருக்கார் இல்லையா?” என்றாள்
 
“ஓ ஆமா  அப்படியே  அவர்தான்  அதான் சேட்டன் நினைவு வந்துதா உனக்கு?  அது ஒண்ணுமில்ல சுரேஷ்  இவள் காலேஜுக்கு  திருச்சூர்க்கு  விழாக்கு ஒருவாட்டி ப்ருத்விராஜ் வந்தாராம்  இவளைப்பார்த்து  ஏதோ சொன்னாராம்  அன்னிலிருந்து  இவள் அவரை சேட்டன் என்பாள்.. இப்போ அவர் மாதிரி இருக்குற உங்க தம்பியை  தனக்கு சேட்டன்னு சொல்றா”
 
சேட்டன்?
 
என்ன அர்த்தம்?
 
திரும்ப வீடு் வரும்போது சுரேஷ் கேட்டார்.
 
சேட்டன்னா அழகன்னு  அர்த்தம். என்றோம் நாங்கள்  வேண்டுமென்றே.
 
 
ஓ?
 
என்ற சுரேஷைப்பார்த்து  எல்லோரும் சிரித்துவிட்டோம்!!! 
 
 இப்படியாக எங்களின் ஓணத்திருநாள் அமைந்தது.
 
 
 
 
 
 




--
 
 
மேலும் படிக்க... "ஓண நினைவுகள்!"

Monday, September 09, 2013

தோள் கண்டார் தோளே கண்டார்!




அறத்தை  நிலைநிறுத்தத்தோன்றிய இரு காப்பியங்கள்  ராமாயணமும் மகாபாரதமும். காலம் பல கடந்தும் அவைகள்  இன்றும் நம்மிடையே  பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
 
விஞ்ஞான முன்னேற்றத்தில் உலகமே ஒரு சிறு கருவிக்குள் கைக்கு அடக்கமாக வந்துவிட்டது.இளமையில் செல் (cell)என்றாகிவிட்ட இந்த நவீன யுகத்தில் தர்மங்களும் நியாயங்களும் கூட  மெல்ல மெல்ல சென்றுகொண்டுதான் இருக்கின்றன.ஆனாலும்  கற்றறிந்த சான்றோர்கள் அவற்றை  இழுத்துப்பிடித்து வைத்திருக்கின்றனர். அறம் நெறி  நீதி நியாயம் என்பதை வலியுறுத்தும் பெருமைகளை  கூறிவருகின்றனர்.
 
ராமாயணத்தைக்கம்பன் தேர்ந்தெடுத்தமைக்குக்காரணம் தன் திறமையை
முற்றிலும் வெளிப்படுத்துவதற்காகத்தான் என்று  சொல்லுவார்கள்.
இந்தக்கதை காலத்தினால் மட்டும் பெரிதல்ல இராமன் பிறப்பதற்கு முன்னால் தொடங்கும் கதை. இராமன் முடி சூட்டி தன்னுடன் இருந்தவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பும்வரைஎன்று வடக்கே இருக்கும் கோசலநாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள இலங்கைவரை நீடிக்கிறது.
 
இராமாயணம் போன்ற  ஒரு காப்பியத்தை கம்பன் பாடப்புகும்போது
பல பாத்திரங்களைப்பற்றி யும் பல தேசங்களைப்பற்றியும்,பல்வேறுபட்ட மனிதர்களைப்பற்றியும் அரக்கர்களைப்பற்றியும்மட்டுமல்ல பலவிலங்குகள் பறவைகள்  பற்றியு்ம்  விவரிக்க வேண்டி உள்ளது.
 
அத்தனையையும்  கம்பன்  விளக்குகிறான்.
 
அவன் காட்டும் திறமைக்கூறுகளையும் அவை மிளிரும் கதைப்பகுதிகளையும்  கூறவேண்டுமானால் அதற்கே பல நூல்கள் எழுதவேண்டும் என்பார்முன்னாள்  நீதிபதி திரு இஸ்மாயில் அவர்கள்.
 
பொழுதுபோக்கிற்காக சொல்லப்படும் கதைகள் அல்ல  இரு காப்பியங்களும்நிரந்தரமாக என்றும் அழியாத  ஓர் உண்மையை  ஒரு தர்மத்தை வலியுறுத்துவதற்காகவே இந்தக்கதைகள் 
தோன்றியிருக்கின்றன.
 
தனது முதல்பாடலில் கம்பர் ‘

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,


அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
அன்னவர்க்கே சரண் நாங்களே"
என்று ஆரம்பிக்கிறார்! 
 
 ஆண்டவன் சுவாமிகளை ஒருமுறை தரிசி்க்க சென்றபோது  ஒருவர்  கம்பன் ஏன் இப்படி  தாம் உள ஆக்கலும் என்றார் எனக்கேட்க அதற்கு வடமொழியிலும் தமிழிலும் மிகப்புலமை நிறைந்த  அந்தஆச்சாரியசுவாமிகள் சொன்னார்.
 
**” இருப்பதை ஆக்கினால் எப்படி ஜகத் காரணத்வம் வரும்? ஸூக்ஷ்ம சிதசித்விசிஷ்டனானவன்   ஸ்தூல சித சித் விசிஷ்டனாக மாறுகிறான்” என்றார்.(இதன் அர்த்தம் கடைசியில்)
 
வாழ்வியலை அவன் கூறுவது இருக்கட்டு்ம் தேசம் பற்றி கூறுவது இருக்கட்டும்
 
பெண்ணின் மனநிலையை  அப்பட்டமாக கூறுகிறானே அதைத்தான்  ஒரு பெண்ணாக என்னால்வியக்காமல் இருக்கமுடியவில்லை!
 
 
மிதிலைவீதியில் தேரில்-கவனியுங்கள்-தேரில்தான் இராமன் வருகிறானாம். அவனைப்பார்க்க பேதைமுதல் கடைப்பேரிளம் பெண் வரை  வீதியில் வநதனர் என்று மட்டும் எதிர்கொள் படலத்தின் கடைசிபாடலில்  சொன்னவன்  பிறகு அடுத்து  வரும்உலாவியற்படலத்தில்  மகளிர் அனைவரும்  ராமனைக்காண  மொய்க்கும் விதத்தை   பெண்பாத்திரமாகவே மாறி சொல்கிறான் அல்லது செல்கிறான்!!
 
பார் என்றது பருவம்    என்று ஒரு திரைப்பாடல்கூட உண்டே!
 
.இராமனைக்காண வந்த மகளிரின் தன்மைகளை  ‘தமை வலித்தவன்பாற் செல்லும்உள்ளத்தைப்பிடித்து நாமென்றோருகின் றாரு மொத்தார்’என்கிறார். ராமனைக்காண அவர்களுக்கு முன் அவர்களின் உள்ளம்  ஓடுகிறதாம்  அதைப்பிடிக்க ஓடுகiிறார்களாம்!
 
 
17பாடல்களில்  கம்பனின் கைவண்ணத்தில் அந்தமகளிரின்  உடல்கோலமும்  உள்ளக்கோலமும் மிளிர்கின்றன!
 
 
கடைசியiில் இப்படி சொல்லி முடிக்கிறார்!
 
 
""தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரோ வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன் னானுருவு கண்டாரை யொத்தார்''

__________________________________________________________________________________

**சிதசித்விசிஷ்டம் = சித் + அசித் + விசிஷ்டம்
ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்தம் சித், அசித், ஈச்வரன்
எனும் மூன்று தத்வங்களை ஒப்புக்கொள்கிறது -

சித் - ஜீவன், ஜீவகோடிகள்
அசித் - உயிரற்ற பிரபஞ்சம்
ஈச்வரன் - ஸ்ரீமந்நாராயணன்
இம்மூன்றும் அழிவற்றவை.

பிரளய காலத்தில் அனைத்தும் உருவத்தை
இழந்து நுண்ணிய நிலைபெற்று ஈச்வரனான
நாராயணனிடம் ஒடுங்கும். [அழிவதில்லை]
படைப்பின் போது உருவம் பெற்று தூல
வடிவுடன் கண்ணுக்குப் புலப்படும்.

அதைத்தான் ”ஸூக்ஷ்ம சித் அசித் விசிஷ்டனானவன்
ஸ்தூல சித் அசித் விசிஷ்டனாக மாறுகிறான்” என்று
ஸாதிச்சிருக்கிறார் ஆண்டவன் சுவாமிகள். பர தத்வம் என்றால் மூன்றும் எப்போதும்
பிரிக்க முடியாத வண்ணம் சேர்ந்தே இருக்கும் நிலை.

உலகம் யாவையும்  தாம் உள ஆக்கல் - படைத்தல்
நிலை பெறுத்தல் - காத்தல்
நீக்கல் - அழித்தல்
ஆக முத்தொழில்
 
இப்படி எண்ணற்ற உலகங்களை ஆக்கி, அழிப்பது
அலகிலா விளையாட்டு!
 
(கம்ப  மகா சக்கரை சமுத்திரத்திலிருந்து ஒரு துளி .இன்றைக்கு!)
 
 
மேலும் படிக்க... "தோள் கண்டார் தோளே கண்டார்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.