Social Icons

Pages

Friday, December 08, 2006

லூட்டி(தேன்கூடு போட்டிக்கு)

"இத பாருங்க என்னால இனிமேலும் பொறுத்துக்க முடியாது..இந்த நந்துவோட தொல்லை தாங்கமுடில்ல...பேசாம அவன ப்ளேஹோம்ல சேர்த்துடவேண்டியதுதான்.. "

"என்னவிஜி இப்படிபேசறே? அஃப்டரால் அவனுக்கு ரண்டரை வயசுதான் இந்த வயசுல குழந்தங்க துறுதுறுன்னுதான் இருக்கும்.. எப்டியும் மூணுவயசுல நர்சரில போடப் போறோம் அதுவரை வீட்ல எஞ்சாய் பண்ணட்டுமே குழந்தை? "

"ஆனாலும் இவன் லூட்டி தாங்கமுடில்லயே? கீழ ஒருசாமான் வைக்கமுடில்ல...எல்லாத்தியும் உடச்சி நொறுக்கிட்றான் நேத்து என்ஃப்ரண்ட் சுமி விட்டுல போயி மானத்தை வாங்கிட்டான். "

"என்ன செஞ்சான் அப்டி? "

"அவங்க ஆசைஆசையா வாங்கி டீபாய் மேல வச்சிருந்த க்ருஷ்ணர் பொம்மைய எடுத்துக் கீழ போட்டு உடச்சிட்டான். குறும்பா கைதட்டி சிரிச்சிக்கிறான் தனக்குத் தானே.. அவங்க ஒருமாதிரி சொன்னாங்க 'விஜிபையன்
லூட்டி அடிக்கறான் , சரியானஎமன் 'அப்டின்னு. "

"என்னவோ எனக்கு என் மகன் சமத்தா தான் தெரியறான்..ஆபீஸ் விட்டு வந்தது முதல் என்மடில அமைதியா உக்காந்துட்டுஇருக்கானே...ஒரு பொருளையும் எடுக்கல..உடைக்கல...குறும்புத்தனம் சேட்டை எதுவும் காணோமே? நீ சும்மா அவன் மேல பழி போடறே? "

"எல்லா குழந்தைகளும் இப்படிதான் அப்பா எதிர்ல நல்லாவே ஆக்ட் பண்ணுதுங்க பகலெல்லாம் அம்மாக்கள் உயிரை வாங்கி எடுத்திட்டு சாயங்காலம் அப்பா வந்ததும் சாதுமாதிரி உக்காந்துட்டு நம்ம பேச்சை பொய் பண்ணுதுங்க. சரிசரி ,இந்தாங்க காபி. "

"என்ன விஜி காபில உப்பூகரிக்குது? "

"எல்லாம் உங்க புத்திரபாக்கியத்தின் வேலைதான். சமையல்மேடைமேல எம்பி டப்பாக்களைஎடுத்துஏதாவது லூட்டி செய்துடறான். அதை எடுத்து இதுல இதை எடுத்து அதுலன்னு விஷமம் தாங்கலஎனக்கு.. சுமி சொன்னாப்ல எமனா வந்து எனக்குபொறந்துருக்கான்.."

"குழந்தைய திட்டாத விஜி."

"நீங்கதான் ஒருநாள் வீட்டைப் பாத்துக்குங்களேன், நான் அபீஸ் போய்வரென் ..அப்றோம் தெரியும் இவன் அட்டகாசம்.. இவன் ஒருத்தன் எனக்கு ஜன்மத்துக்கும் போதும்.".


"அதான் உனக்கு ரண்டாவதா குழந்தையே பொறக்க வாய்ப்பில்லேனு டாக்டருங்க சொல்லிட்டாங்களே ..சரிஅதைவிடு விஜி சினிமா எதும் போகலாமா இன்னிக்கு? "

"இந்த வாலு விடுவானா? நினைவிருக்கா, வேட்டையாடுவிளையாடு முதல்பாதி நீங்களும் கடைசி பகுதி நானும்பாத்திட்டு வீடுவந்ததும் கதை கேட்டு புரிஞ்சிட்டோம்..நந்து அங்க வந்து உரக்க ஏதோ பாட்றான்..முன் சீட்டுக்கார லேடீஸ் தலைல இருக்கற பூவை பிச்சி எடுக்கறான். தியேட்டர்ல எல்லாரும் உச்சு உச்சு'ங்கறாங்க...மானம் போகுது.. ஒரு நிமிஷம் அடங்கறதில்ல...அத்தனை சேட்டை..பாருங்க முகத்துலயே டன் கணக்குல குறும்பு வழியுது? எனக்கு நந்துவோட
நாள் முழுக்க ஓடி அவன் குறும்பை சமாளிச்சி களைச்சிப் போயிட்றேன்அமைதியா கொஞ்ச நேரமாவது வீட்ல இவன் சத்தம் லூட்டி இல்லாம நான் இருக்கணும்.."

"சரி ... இன்னிக்கு இவனை நைட் 10மணிவரை உன்கண்லயே காட்ல போதுமா?நான் பாத்துக்கறேன்."

"ரொம்ப சந்தோஷம் முடிஞ்சா உங்களுக்கு கோயிலே கட்டுவேன் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு தர்ரதுக்கு.... முதல்ல உங்க மகனை அழைச்சிட்டுப் போய்ச்சேருங்க. "

கணவனையும் மகனையும் அனுப்பிவிட்டு ஹாலை சுத்தம் செய்யஅரம்பிக்கிறாள் விஜி மூலைக்கொன்றாய் பொம்மைகள் செய்தித் தாள்கள் என்று கிடந்தன.

எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி விஜி நிமிர்ந்தபோது மணி எட்டு ஆகிவிட்டது.

நிம்மதியாய் ஷவரில் ஷாம்பூபோட்டு குளித்தாள்.தலை முடியை வாரி அலைஅலையாய் முதுகில் பரப்பிக்கொண்டாள்.

நிதானமாய் முகத்திற்கு ஒப்பனை செய்து கண்ணாடியில் பார்த்தபோது முப்பதுவயதில் ஆறுவயது குறைந்த மாதிரி இருந்தது.

வீடே அமைதியாய் அதது வைத்த இடத்தில் அழகாய் இருந்தது .அந்த சூழ்நிலையை ரசித்து பார்த்தபடி ஹாலில் சோபாவில் அமர்ந்தாள்.

கண்ணைமூடி ஆனந்தமாய் அப்படியே உறங்க ஆரம்பித்தவளை காலிங்க் பெல் ஓசை எழுப்பியது.

"யாரு?"

கேட்டபடி கதவைத்திறந்தவள் கதவுக்கு வெளியே நின்ற நபரைப் பார்த்து குழப்பமாய் கேட்டாள், 'யா...... யார் நீங்க? யாரைப் பாக்கணும்?'

"மேடம் இது சிவகுமார் வீடுதானே? "

"ஆமா நான் அவர் மனைவி விஜி என்ன விஷயம் நீங்க யாரு?"

"மே.... மேடம்... உங்க ஹஸ்பண்ட் கொஞ்சமுன்னாடி ரோட் க்ராஸ் செய்யறப்போ கைல குழந்தயோட ஒரு கார்ல அடிபட்டு கிழவிழுந்துட்டாரு..விபத்தாயிடிச்சி .."

'அய்யோ.. '

"சாருக்கு பலத்த அடீ இல்ல....... அ... ஆனா.... குழந்த...."

"அய்யோ குழந்தைக்கு என்ன ஆச்சு? "

"நேர்ல வந்து பாருங்கம்மா என்னால் இதுக்கு மேல சொல்லமுடியாது."

வந்தவனின் குரல் உடைந்துவரவும் திகிலோடு விஜி அவனைப்பார்த்தாள்.
அவனைத் தொடர்ந்து அந்த விபத்து நடந்து இடத்திற்கு சென்றாள்

அங்கே...

அவளது அருமைமகன் நந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தான்.

"பாவம் பச்சபுள்ள..ஓடி ஆட வேண்டிய வயசுல அப்படியே அடங்கிக் கிடக்கான் பாருங்க..யாரு பெத்த புள்ளையோ? "

"அய்ய்யோ..இது என் மகன் நந்தூ..... கண்முழிடா நந்தூ இப்படி கிடக்காத இந்த அமைதி என்னைக் கொன்னுடும்டா.... நந்தூ நீ இப்படி ஒரே இடத்துல கிடக்கவேணாம்.... உன் லூட்டியும் விஷமமும் குறும்பும் எனக்குத் தேவைடா கண்ணா.. "

" விஜி என்னாச்சு? ஏன் இப்டி கெட்ட கனவு கண்ட மாதிரி திகிலா எழுந்து உக்காந்துருக்கே? நான் இப்பதான் நந்துவோட வெளியேபோய் வரேன்... நீ சொன்னது உண்மைதான்...போன இடத்துல ஒரு நிமிஷம் சும்மா இருக்கல..ஓட்றான்..குதிக்கறான்..கடைக்கு கூட்டிப் போனா அங்க சாக்லேட் பாட்டிலை உடைச்சிட்டான்...ஃப்ரண்ட் வீடு கூட்டிப் போனேன் அங்க சின்ன பசங்களை சீண்டிவிடறான்..அவங்க வீடு நீட்டா நல்லா இருக்கு நந்து போயி எல்லாத்தியும் கலைச்சிட்டான் ...அவங்க வீட்டு அமைதியே இவனால் குலைஞ்சி போயிடிச்சி... "

"போதும் நிறுத்துங்க...குழந்தைன்னா குறும்புத் தனமாத் தான் இருக்கும் பொருள்களை எடுத்துப் புரட்டிப்போடும்... வீடென்ன ம்யூசியமா அமைதியாயும், அப்படியே வச்சது வச்ச இடத்துல இருக்கவும்? குழந்தையோட குறும்பை ரசிக்கணுங்க,,,இதெல்லாம் அவங்க வளர்ந்த பிறகு நமக்குக் கிடைக்குமா என்ன? "

சிவகுமார் தன் மனவியை திகைப்புடன் பார்க்க ஆரம்பித்தான்.
***********************************************************************************************
மேலும் படிக்க... "லூட்டி(தேன்கூடு போட்டிக்கு)"

Saturday, November 18, 2006

சருகு.

நிறம் மாறும்வரை
மரக்கிளையோடு
பற்றி இருக்கும்
'அற்றது பற்றெனில்
உற்றது வீடு'
என்பதைஅறிந்தாற்போல்
இளமைப்பசுமையை
காலக் கரைசலில்
இழந்துவிட்டு
இனி வரும்மரணத்திற்கு
இசைவாகக்
காத்திருக்கும்
அடித்த பெருங்காற்றில்
அப்படியே உடல் சரியும்
பழுத்த இலை பார்த்து
பச்சை இலை
பரிகாசமாய் சிரிக்கும்
வளர்த்த வேருக்கு
வாழ்க்கை முடியுமுன்
வணங்கி நன்றி சொல்ல
விரைந்து தரை தொடும்
பழுத்த இலைதான்
நாளை சருகாகி
உரமாகப் போவதை
இளமை கர்வத்தில்
காற்றோடு கைகுலுக்கும்
பச்சை இலைதான்
அறியுமா என்ன?
மேலும் படிக்க... "சருகு."

Thursday, November 16, 2006

காதலியின் கடிதம்.

பத்திரமாய் இருக்கிறது
பாதுகாப்புப் பெட்டறையில்
உன் கடிதம்.
அவ்வப்போது
எடுத்துப் பார்க்கிறேன்
பிரிக்கும்போதே
மடிப்புகளில் விரிசல்
பழுப்பேறிவிட்டாலும்
பழைய தாளிலும்
உன் பளிங்கு உடல் வாசம்.
முத்தான கையெழுத்து
உன் முறுவலைப்போல.
ஒவ்வொருவருக்கும்
கையெழுத்து
பிரத்தியேகமாம்
தனி மனித அந்தரங்கம்
மன நிஜத்தின் நிழல்.
கையெழுத்தில் அவரவர்தம்
தலையெழுத்தைக் கூறலாமாம்
எனக்குத் தெரியவில்லை
சிலவிஷயங்கள்
தெரியாமலிருப்பதே
நல்லதுதான்.
கவிதையாய் எழுதிவிட்டுக்
கடிதமெனச் சொல்வாய்
கவிதைக்குத்தான் பொய் அழகு
வாழ்க்கைக்கு அல்ல
உண்மைகளை உதறிவிட்டு
ஒருநாள் சென்றுவிட்டாய்
மறந்தேதான் போனாயா
மறைந்தேதான் போனாயா?
என்றாவது நீவருவாயென்று
காத்திருக்கிறது
என்னோடு
உன் கடிதமும்


**********************
மேலும் படிக்க... "காதலியின் கடிதம்."

Tuesday, November 14, 2006

மேன்மைத் திரு உருவே!(குழந்தைகள் தினம்)

வட்டக் கருவிழிச் சுட்டும் சுடரொளியென்
வாழ்க்கை ஸ்வரத்தினிலே-பல
மெட்டுக்கள் பாடவே இசைந்திங்கு வந்திட்ட
மேன்மைத்திரு உருவே!

கூண்டுக்கிளியென குமைந்து கிடக்கையில்
கூவியே வந்தவளே-நாங்கள்
வேண்டித் தவம் செய்து விரும்பியதும்
வரமான பெரும் பலனே!

பெண்மைக் கிங்கு தாய்மை நிறைவென்ற
பேச்சினை நிஜமாக்கியவளே-இன்று
உண்மையில் என் மனம்மகிழக் காரணமாய்
ஊர் வாயை அடைத்தவளே!

சந்ததிச் சங்கிலி தொடர்ந்திட வந்திட்ட
சந்திரப் பேரொளியே-இங்கே
வந்திடு என் கையில் இனியெந்தன்
வாழ்வும் உன் வசத்திலே!
மேலும் படிக்க... "மேன்மைத் திரு உருவே!(குழந்தைகள் தினம்)"

Thursday, November 09, 2006

அருள் இலவசமே!(மரபுக்கவிதை.தேன்கூடு போட்டி)

கதிருடன் மதியினை நிகரும் காட்சியன்
இதயத் துள்ளவன் நாவில் இருப்பவன்
காரிருள் சீய்க்கும் கவின்மிகு சோதியன்
பாருயர் விசும்பு பாதளம் அளந்தோன்
வெண்சங்கு ஊதும் செவ்வாய்க் கரியவன்
கண்ணும் கையும் சிவந்த சேடியன்
செம்பொன் மாமணி திரள்முத் தணிந்தோன்
அம்பும் வாளும் ஆழியும் கதையும்
வேலும் ஏந்திய வீரன்
ஞாலம் காப்பவன் அருள், இலவசமே!

(மரபில் இது முரண்தொடை எனப்படும் வகையினைச் சேர்ந்தது.)

மரபுபற்றி தெரியாதவர்களுக்கு மட்டும் கவிதை விளக்கம்.
மோனை ,எதுகை, முரண், இயைபு ,அளபெடை அந்தாதி, செந்தொடை என வகைகள் உண்டு.
எதுகை மோனை பலர் அறிந்திருக்கலாம், முரண் எனப்படுவது ஒரே வரியில் வார்த்தைகள் முரணாகி, அதாவது வேறுபட்டு வருவது. கதிருடன் மதியினை என்னும் வரியில் கதிர்= சூரியன். மதி =சந்திரன்.
இதயத்துள்ளவன் நாவில் இருப்பவன். இதயம் என சொல்லிவிட்டு நா என்பது முரண்.
காரிருள் சீய்க்கும் கவின்மிகு சோதியன்...இதில் இருள் சோதி என இரண்டும் முரண்.
மீதத்தை கவிதை படிப்பவர்களிடம் விட்டுவிடுகிறேன்!! ஒரேவரியில் 2அல்லது 3, 4 முரண்களும் வரலாம் இதில் வந்திருக்கிறது.கடை இருவரிகள் கணக்கில் கிடையாது!
மேலும் படிக்க... "அருள் இலவசமே!(மரபுக்கவிதை.தேன்கூடு போட்டி)"

Monday, November 06, 2006

ஒன்றா இரண்டா இலவசம்?

'செல்லமே' என்பாய்
சிணுங்கிச் சிரிப்பதை
ரசித்தே நிற்பாய்!

கள்ளப்பார்வையில் பல
காவியங்கள் வரைவாய்!
உள்ளம் குளிரக் குளிர
உற்சாகமாய்ப் பேசுவாய்!

மெல்லமெல்லவே என்
வெட்கத்தைக் களைந்தெடுப்பாய்
அள்ளியெடுத்தே
ஆலிங்கனமும்செய்வாய்!!

தங்கச் சரம் நகர்த்தி
சங்குக்கழுத்தினிலே
சட்டென விரல் பதிப்பாய்!!

அங்கமே துடித்து நிற்க
பொங்கும் வெட்கத்தில்
பூரித்தமுகந்தன்னை உன்
கைக்குள் சிறைவைப்பாய்!!

உறங்கும் அழகைப் பார்க்க
அருகிலேயே நீ
உறங்காது உட்கார்ந்திருப்பாய்!!

மேனிக்குள் எங்கெங்கெல்லாம்
வெட்கம் புதைந்துள்ளதென்பதை
நீ தொட்ட பிறகுதானே
நான் உணர்ந்து கொண்டேன்?

கசங்கிய போர்வையைக்
கண்ணுறும் போதிலெல்லாம்-நவ
ரசங்களின் காட்சிப்பின்னல்
ரயில் போல ஒடக்கண்டேன்!

'ஒரு முத்தம் கொடுத்தால் உனக்கு
இருமுத்தம் இலவசம்' என்றாய்
கணக்கென்ன கண்ணா-இந்தக்
கருவூலம் உனக்குத்தானே?
மேலும் படிக்க... "ஒன்றா இரண்டா இலவசம்?"

Friday, November 03, 2006

குறையொன்று உண்டு(தேன்கூடு போட்டிக்கு)

மழை வேண்டி யாகம் செய்வர்
யாகத் தீ சுற்றி வலமும் வருவர்
நிலமகளை பூமித் தாயென்று
பூஜிப்பர்
தன்னில் காணா இறைவனை
விண் நோக்கி தியானிப்பர்
காற்றுக்கு உண்டா கைகுவித்து
வரவேற்பு?
இலவசங்கள் என்றைக்குமே
இரண்டாம்பட்சம்தான்.
மேலும் படிக்க... "குறையொன்று உண்டு(தேன்கூடு போட்டிக்கு)"

Wednesday, November 01, 2006

இலவச இணைப்பு (தேன்கூடு போட்டிக்கு)

ஆபீசிற்குள் நுழைந்த அரைமணியில் செல்போன், 'சுட்டும்விழி சுடரே' என்கிறது.

'காபி'னைவிட்டு நழுவி காரிடருக்கு நடந்தபடியே போனில்,"விஜி! வீட்டைவிட்டு புறப்படறப்பவே சொன்னேன் இல்ல, இன்னிக்கு முக்கியமான மீட்டிங்னு? இன்னும் பத்து நிமிஷத்துல நான் அதுக்குத் தயாராகணும்..இப்பொ எதுக்கு போன் செய்றெ? என்கிறேன் கொஞ்சம் கோபத்துடனே. ஏற்கனவே காலை ஆபீசிற்குப் புறப்பட காரை எடுத்து வெளியே வந்தபோது, சாலையில் எங்கிருந்தோ அந்த தொழுநோயாளி ஓடிவந்து என்னிடம் பிச்சைக்குக் கை ஏந்தியபோது 'போபோ'என்று சீறிவிழுந்ததின் தாக்கம் இன்னமும் முற்றிலுமாய் மறையவில்லை. எனக்கு எல்லாமே சுத்தமாய் அழகாய் இருக்கவேண்டும்.

எதிர்முனையில் அழகி- என்மனைவி- பேச ஆரம்பிக்கிறாள்.

"தெரியுங்க .ஆனாலும் முக்கியமான விஷயம் சொல்லத்தான் கூப்ட்டேன்.. உங்கப்பா ஊர்லேந்து கொஞ்சநேரம் முன்னாடி வந்துட்டாரு.."

"அதான் அன்னிக்கே போன்ல சொல்லி இருந்தாரே ' மகேஷ் பிறந்த நாளுக்கு சென்னைக்கு முதநாளே வந்துடறேன்'ன்னு?'..இத சொல்லவா போனு?"

"ஐயோ..அவர்மட்டும்வரலேங்க கூடவே அந்தபொம்பளயும் வந்திருக்காங்க"

விஜி இப்படிச்சொன்னதும்"வ்வாட்?" என்கிறேன் எரிச்சலாய். உடனேயே விஜி குறிப்பிட்ட அந்தப்பெண்ணின்முகம் கண்முன் வந்து நிற்கிறது. அந்த தீய்ந்துபோனகன்னங்களும் மோவாயும் , எரியும் நெருப்பில் உருக்குலையும் ப்ளாஸ்டிக் தாளாய் கழுத்தும் ,சிதிலமானநெற்றியும் ....ய்யக்...நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது.

அவளைப் போய் எதுக்கு கிராமத்திலிருந்து இழுத்திட்டுவந்திருக்கிறார் அப்பா?

போனமாதம் கிராமத்துக்கு வாரவிடுமுறைக்கு நான் மட்டும் போனபோது அவளை வீட்டுவாசல் திண்ணையில் பார்த்தேன். .

"யாருப்பா அவங்க கோரமா, பாக்கவே அருவெறுப்பா இருக்கு?"

"வேண்டப்பட்டவங்கதான் ரவி"

அப்பா அண்மையில் ஓய்வுபெற்ற பள்ளி வாத்தியார் .அதிகம் பேசமாட்டார் அதுவும் நாலுவருஷம்முன்பு அம்மா போனதிலிருந்து பேச்சையே குறைத்துவிட்டார். என்னோடு சென்னைக்குவந்து தங்கச்சொல்லி பலமுறை கெஞ்சிப் பார்த்துவிட்டேன்.

"வீடு நிலம் இருக்குதேப்பா..எல்லாத்தியும் கவனிச்சிட்டு நான் முடியறவரைக்கும் இங்கயே இருக்கேன்,, ஏதும் விசேஷம்னா உன் இடத்துக்கு அவசியம் வரேனே?'என்றார் .

வற்புறுத்த முடியவில்லை .அப்பாவின் முடிவுகளில் அர்த்தம் இருக்கும்.

அதனாலே அப்பாவிடம் அந்தப் பெண்மணிபற்றி அதிகம் கேட்கவும்தயக்கம்.

ஆனால் போனவாரம் கிராமத்திலிருந்து என்னைப்பார்க்க வந்த என் பள்ளி நண்பன் ப்ரகாஷுடன் பேசும்போது தெரிந்தது அந்தப்பெண்மணி இன்னமும் அப்பாவோடுதான் இருக்கிறாள் என்பது.

விஜி கூட கிண்டலாய் ,"உங்கப்பாவோட அந்த நாள் கேர்ல் ஃப்ரண்டோ என்னவோ ?வயசு காலத்துல அந்தம்மா அதிரூப சுந்தரியா இருந்திருக்கலாம்... இப்பொ பழய நெனப்புல இழைய வந்திட்டாங்க போல இருக்கு...ஆனாலும் அறுபதுவயச நெருங்குற உங்கப்பாக்கு புத்தி இப்டிபோகவேணாம் ?" என்றாள்.

விஜி சொல்வது நிஜம்தானோ?

"சரி, நீ போனை வை..நான் வீட்டுக்கு வந்து அப்பா கிட்ட பேசிக்கறேன்"

மதியம் லீவுபோட்டு வீட்டிற்குவருகிறேன்.

அழைப்புமணியை அடித்தேன் கதவுதிறந்தது கதவுக்குபின்னால் ....

அந்த கோரமுகம் கண்டு எரிச்சலுடன்முறைக்கிறேன்.

"விஜ்ஜீஈஇ எங்க தொலைஞ்சே?" எட்டூருக்குக் கேட்கிற மாதிரி கத்துகிறேன்.

"என்னங்க ?"என்று விஜி ஓடிவருகிறாள்.

"குழந்தயக் குளிப்பாட்டிகிட்டு இருந்தேன் ..காலிங்பெல் சத்தமே கேக்கல எனக்கு... உங்கப்பா ரூம்ல தூங்கறார் போல்ருக்குது...?"

நான் எரிச்சலுடன் அப்பா படுத்திருந்த அறைக்குள் நுழைகிறேன்.

சின்னதாய் குறட்டைவிட்டபடி தூங்கிக் கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி," என்னப்பா இதெல்லாம் தேவையா உங்களுக்கு?" என்று கடுப்புடன் கேட்கிறேன்.

அப்பா இடுப்பு வேஷ்டியை இறுகக் கட்டியபடியே எழுந்து உட்கார்ந்தவர்,
"அடடே ரவி வந்திட்டியாப்பா ?சாயந்திரம்தான் நீ வருவேன்னு விஜி சொன்னா..சரி ,குட்டிதூக்கம் போடலாம்னு படுத்தென் நானும்..நாளைக்கு உன்பையன் பிறந்தநாளுக்கு நான் ஃப்ரெஷா சுறுசுறுப்பாத்தெரியணுமில்ல?" என்கிறார் புன்னகைத்தபடி.

"ஆ! ரொம்பவே சுறுசுறுப்பாத்தான் தெரியறீங்க !வாலிபம் திரும்புதில்ல உங்களுக்கு? ஏன்ப்பா, தெரியாமத்தான் கேக்கறேன் அந்த பொம்ளைய எதுக்கு இங்கயும் கூட்டிவந்தீங்க? இதெல்லாம் ஸோஃபிஸ்டிகேட்டட் ஃப்ளாட்ஸ்.ரொம்ப டீசண்ட் ஜனங்க வசிக்கறஇடம் .இங்க ஊர் பேர் தெரியாத அந்த தீஞ்சிபோன முகத்துக்காரப் பொம்பளைய அழைச்சிட்டு வரணுமா நீங்க? "

"ரவி..அவங்க வரேன்னு சொல்லலப்பா...நாந்தான் அழைசிட்டுவந்தேன்.."

"விலைகொடுத்து வாங்கற பொருளோட சில நேரங்களில் ஒட்டிக்கிட்டு வருமே ஒண்ணு , அதுமாதிரி இலவச இணைப்பா? இலவச இணைப்பெல்லாம் எனக்குத்தேவைஇல்லை..எனக்கு விலைமதிப்பு பெறுமானது தான்முக்கியம்"

"ரவி! நீ வெறுக்கிற இலவச இணைப்பு நாந்தாம்பா.."

என்ன உளற்றீங்க ?"

"ரவி... சொல்லாம இனியும் மறைக்கமுடியாது. சில தர்மங்களை நிலை நிறுத்தணும்னா கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியாம போகக்கூடும்னு சொல்வாங்க..இப்போ அது நிஜம்னு நிரூபணமாகுது..ஆமாம்ப்பா... முப்பதுவருஷம்முன்னாடி உங்கம்மா பிரசவத்துல வயித்துலேயே இறந்துபோன குழந்தையைத்தான் பெத்தெடுத்தா..
இனிமேகுழந்தை பிறக்க வாய்ப்பில்லைனு டாக்டர்சொல்லிய அந்த நேரத்துல உங்கம்மாவோட சிநேகிதி கமலா ,
'என் புருஷன் மூணுமாசம் முன்னாடி ,குழந்தைவயத்துல இருக்கறப்போவே செத்துட்டாரு. இப்போ உன் குழந்தையை நீ இழந்த சமயத்தில எனக்கும் குழந்தை பொறந்திருக்கு இது இனி உன்குழந்தையா வளரட்டும்..நான் அம்மான்னு சொந்தம் கொண்டமாட்டேன்..நீங்க ரண்டு பேரும் தான் குழந்தைக்கு அப்பா-அம்மா.இதை சத்திய வாக்கா நாம் நினைச்சிக்கணும் ".ன்னு சொல்லி எங்க கைல உன்னைக் கொடுத்தா...பாலூட்டி உன்னை வளர்க்க கூடவேஇருந்தா ஒன்றரைவயசு குழந்தையா இருக்கறப்போ விளக்குல விளையாட்டா நீ ஏதோ செய்யப் போக அது தீவிபத்தாகவும் உன்னைக் காப்பாத்த செய்தமுயற்சில கமலாவோட சேலைல நெருப்பு பிடிச்சிபரவி தலையிலிருந்து பாதம் வரைக்கும் தோல், தீக்கு இரையாயிடிச்சி. அவங்க உயிரைத்தான் எங்களால காப்பாத்தமுடிஞ்சிது.ஆஸ்பித்திரிலிருந்து திரும்ப வீடுவராமல் எங்ககிட்ட எதுவுமே சொல்லாம,எங்கயோ போனவளை போனமாசம் திருச்செந்தூர்ல கோயில் வாசல்ல பிச்சை எடுத்துட்டு நிற்கிறபோது பாத்தேன்..வற்புறுத்தி அழைச்சிட்டு வந்தேன்.'உன் பேரனை ஒருவாட்டிப் பாத்துட்டுப்போ'ன்னுசொன்னேன் தயங்கித்தான் கமலாவும் வந்திருக்கா இங்க.."

அப்பா நீண்ட நேரம் பேசிய களைப்பில் பெருமூச்சு விடுகிறார். விஜி திகைப்புடன் என்னையே பார்க்கிறாள்.நான் வேதனையுடன்," என்னைப் பெத்த தாயா அவங்க? கடவுளே!" என்று கதறி நிமிர்ந்தபோதுஅந்த அறையின்சுவரில் மாட்டப்படிருந்த நிலைக் கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கிறேன்.

அகத்தின் அழகை கண்ணாடி பிரதிபலிக்கிறது முகம் வழியே.

பரிதவிப்புடன் ஹாலிற்கு ஓடிவருகிறேன், அங்கே என் அம்மா இல்லை.

வெளியே சாலைக்கு வேகமாய் வந்த என்னைப் பார்த்ததும், எதிரே மரத்தடியில் உட்கார்ந்திருந்த அந்த தொழு நோயாளி பயத்துடன் வேறுபக்கமாய் நகர்கிறான்.
நான் , அவனைத் தொடர்கிறேன்.
****************************************************************
மேலும் படிக்க... "இலவச இணைப்பு (தேன்கூடு போட்டிக்கு)"

Saturday, October 28, 2006

ரக்சியம்.

செல்வாயோ எனைப் பிரிந்து,
செல்வதுதான் மிக எளிதோ?
சொல்லத்தான் நினைப்பாய்
சொல்லமாட்டாய்
சொல்லு சொல்லு என்று
என்னைத்தான் வற்புறுத்துவாய்
என் மனக் கேணியில்
உன் நினைவே
தினம் சுரக்கும்
புது ஊற்று
கூட்டங்களில் தனியாக
தனிமையில் கூட்டமுடன்
தவிப்பாக ம்னது.
அவசரக்கணங்களிலும்
அப்ப்டியே அச்சடித்தாற்போல்
நெஞ்சினிலே உன்முகம்
இது என்ன அதிசியம்?
சொல்ல் இயலுமோ
அது ரகசியம்!
மேலும் படிக்க... "ரக்சியம்."

Friday, October 27, 2006

உறக்கம் கலைக்கும் கனவுகள்

கனவுகள் காணவே
கண்களை மூடி
உறங்க நினைத்தது
அந்தக்காலம்

கனவுகளின் நினைவுகளை
கற்பனையாய்
விற்பனை செய்து
களிப்படைந்ததும்
ஒருகாலம்

மணிக்கணக்கில்
மாதக்கணக்கில்
மகிழ்ந்துபோன உணர்வுகளை
நித்திரையில்
இலவச இணைப்பாய்
கனவில் கண்டதும்
அந்தக்காலம்

வசந்தத்தின் வாசத்தை
வாடாத நிலையோடு
கனவில்கண்டது
ஒருகாலம்

பாலை நிலத்தில்
கானல் நீரில்
நாணல்புற்களை
கனவில் கண்டது
அந்தக்காலம்

உறக்கதில் கனவுகள் கண்டது
கட்ந்தகாலம் .

நிழலும் நிஜமும் புரியாமல்
நிம்மதி தொலைந்த நிலைதன்னில்
கற்பனைமுழுதும் வற்றிப்போக
காண்பதில் ம்னம் வெறுப்படைய
கனவுகளால் உறக்கம் கலைவது
நிகழ்காலம்
மேலும் படிக்க... "உறக்கம் கலைக்கும் கனவுகள்"

Thursday, October 26, 2006

சில்லுனு ஒரு நாடகம்

எம்டி அறையினின்றும் ப்யூன் ரங்கசாமி தன் அருகில் வந்து நிற்பதுகூடத் தெரியாமல்'ஜீ சாட் 'டில் மூழ்கி இருந்தான் கார்த்திக் .
உகாண்டா சினேகிதி நிமேகிமியுடன் மனம்விட்டு பேசிக் கொண்டிருந்தபோது அவள் இசகு பிசகாய் ஒரு கேள்வி கேட்டுவிட்டாள்.
'கார்த்திக் ஆர் யூ மேரிட்?'
இதற்கு அவளுக்கு என்ன பதில் சொல்வதென யோசித்தான்.
செல் , 'வள்' என்றது. வீட்டிலிருந்து 'கால்' வந்தால் செல்லில் அல்சேஷன் குரைக்கும்.
"என்ன சந்திரா ஆபீஸ்ல மும்முரமா வேலை செய்யறபோதுதான் போன் செய்யணுமா?"
"உங்களுக்குக் கல்யாணம் ஆனதே மறந்து போயிருக்குமே?" என்று எதிர்முனை சந்தேகமாய் கேட்கவும் நிமேகிமிக்கு 'சற்று நேரத்தில் வருகிறேன்' என்று தகவல் கொடுத்துவிட்டு "என்ன என்ன?" என்றான் லேசான கிலியுடன். சந்திரா ஏதும் மாயக்கண்ணாடி வழியே நோட்டமிடுகிறாளோ?
"நினைவிருந்தா என் நினைவும் வந்திருக்கும் .. காலைல நீங்க ஆபீஸ் போறப்போ நான் சொன்னதும் நினைவுக்கு வந்திருக்கும் இப்போ?"
"என்ன சொன்னே?"
"அதானே? 'நினைவிருக்கு சந்தும்மா'ன்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்தேன்...ஹ்ம்ம் அது ஒருகனாக்காலம்!"
"ஹலோ சீக்ரம் சொல்லு...டோ ண்ட் வேஸ்ட் மை ப்ரஷியஸ் டைம்.. ஐயாம் பிசி யார்!"
"இந்த அலட்டலுக்கு ஒண்ணும் குறைவில்ல... சரிசரி சொல்லிட்றேன் ஆபீஸ் விட்டுவரப்போ நல்லநயம் புளியா அரைகிலோ ஃபுட் வோர்ட்லேந்து வாங்கி வாங்க என்ன?"
"அடச்சே புளிச்சிபோன விஷயம் பேச இப்படி ஒரு கால் வெஸ்ட் பண்ணனுமா? "
"என்ன மூணுமுணுக்கிறீங்க சரியா காதுல விழலயே பக்கதுல ஏதும் ஃபிகரோ?"
"ஐயோ சந்தேகரா! என் காபின்ல இப்போ பக்கத்துல ப்யூன் ரங்கசாமிதான் வந்து நிக்கறான். நீ போனை வை முதல்ல.."
செல்லை வீசி மேஜைமீது எறிந்தான் கார்த்திக். "சாருக்கு வீட்டிலேந்து போனாக்கும்?"என்றான் ரங்கசாமி கிண்டலாய்.சரியான மோப்ப நாய் பாம்புச்செவி!
"சரிசரி எங்க வந்தே?" கார்த்திக் செயற்கை சிரிப்புடன் கேட்டான். கண், கணிணி கன்னியிடம் சாட்டிங்கினைத் தொடர கீ போர்டினை மேய்ந்தது.
"சார், கம்பூட்டர்ல யாரோ' உம்மா' கொடுக்குற மாதிரி சத்தம் வர்து பாருங்க...இஞ்சினீரிங் படிச்சி பெரிய உத்தியோகம் பாத்துகிட்டு நெட்டுல உலக மக்களோட பேசிக் களிக்கிறீங்க ! ஹ்ம்..எங்கள மாதிரி ஆளுங்கதான் மானேஜர் ரூமுக்கும் இங்க வேலை செய்யறவங்க காபினுக்கும் அலைஞ்சி அலைஞ்சி தேஞ்சி போய்ட்றோம்.."
"ரங்கசாமி.ஒவரா பேசாதே.. இந்த டேபில்ள நீ ஒருநாள் உக்காந்து பாரு எவ்ளோ சிக்கல் என் வேலைலன்னு உனக்குப் புரியும்"
"சிக்கலும் உண்டு 'கிக்'கும் உண்டுங்க எல்லாம் எனக்கும் தெரியும்"
"சரிப்பா..இங்க வந்த விஷயம் சொல்லு?"
"உங்கள கையோட ரூமுக்குவரச்சொல்லி எம்டி சொன்னாரு"
"அடப்பாவி அதை இப்பொ சொல்றியே வந்ததும் சொல்லி இருக்க வேணாமா ?"
"எப்படியும் அந்தாளு கடுகடுன்னுதான் இருக்கபோறாரு . அதுக்கு ஏன் நிங்க இங்க சாடிங்ல கிளுகிளுப்பா பேசிட்டுருக்கறதைவிட்டு ஓடணும்னு தான் சும்மா இருந்தேன்."
"இருந்தாலும் அவர் விஸ்வருபம் எடுத்துட்டாருன்னா என்ன செய்யறது.. அதுசரி அவரு என்னைமட்டும் கூப்பிட்டு இருக்காரா இல்லே எல்லா ஸ்டாஃபுங்கலையுமா?"
"இல்லியே உங்களைத் தான் சொன்னாரு..?. ஒருவேள நீங்க ஆபீஸ் நேரத்துல இப்டி சாடிங்ல இருக்கறதுஅவருக்கு தெரிஞ்சிடிச்சோ என்னவோ?"
"அப்பா ரங்கசாமி !உனக்கு எம்டியே பெட்டர் !"கைகுவித்தபடி எழுந்தான் கார்த்திக்.
'என்னவாயிருக்கும்? வேலை விஷயத்துல என்னிடம் யாரும் குறை காணவே சான்ஸ் இல்ல.எட்டுமணி நேர வேலையை பளிச்சுனு ஆறு மணிநேரத்துல முடிச்சிடுவேன் .அப்புறம்தான் நெட் உலா போவது வழக்கம் . மன்மதன் மாதிரி பேசுவேனே தவிர பெண்கள் விஷயத்தில் அடியேன் சொக்கத்(916?) தங்கம். உத்தமபுருஷன்(சந்திராவுக்குமட்டும் நான் ஜேப்பி! ஜேப்பின்னா என்னவா? அதை அவளே பிறகு விளக்குவா அதுவரை வெயிட்டுங்க)
'என்னவாகத்தான் இருக்கும்? ஆபீசில் சிலருக்கு நான் பேர் வைப்பதுவழக்கம் .எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்! ' ஃபன்!'
ப்ராஜக்ட் லீடர் ராஜேந்திரனுக்கு அவரது பரந்த உருவம் காரணமாய் கஜேந்திரன். ப்ரோக்ராமர் ஸ்நேகாஅடிக்கடி சீறிவிழுவதால் ஸ்நேக்(snake) கா. கீதாவிடம் அடிக்கடி காதல்தூதுவிடும் பீதாம்பரத்திற்கு கீதாம்பரம் . வாஸ்து பற்றியே பேசும் வாசுதேவனுக்கு வாஸ்துதேவன் . தலையில் நிறைய ஹேர்பின் குத்திவரும் சித்ராவுக்கு பின்லேடி என்றும் பெயர்வைத்தது நான்தான் என்று எம்டி சுதாகரனுக்கு யாரும் போட்டுக்கொடுத்து விட்டார்களா?
அப்படியானால் சுதாகரன் இனி சுதா'காரன் 'ஆகிவிடுவார்!'
எம்டியின் அறைக் கதவருகே போய்நின்றவன் ஆஞ்சநேயக்கவசம் சொல்லியபடியே கதவைத்தட்டினான்"மே ஐ கமின் சார்?"
ஹ்ர்ம்ம்
உள்ளிருந்து உறுமல் கேட்டது
பயந்தபடி கதவை மெதுவாகத் தள்ள நினைத்துக்கொண்டே படபடப்பில் வேகமாய்த் திறந்துவிட்டான்.
ஆடமாடிக் கதவு இவனை உள்ளே தள்ளியதும் வந்தவேகத்தில் தானே போய்மூடிக்கொண்டது
.ஸாரி என்று வழிந்தான்.
அந்த ஏராளஅறையின் தாராள தேக்குமரமேஜை ,அதன்மீது நான்கு நிறத்தில் நான்கு தொலைபேசிகள்ஃபைல்கள் கம்ப்யூட்டர் .
கடைசியாக் குறிப்பிட்டதில் ஏதோ பார்வையிட்டுக்கொண்டிருந்தவர் குரல்கேட்டுத் திரும்பினார்.இலவசமாய் கொடுத்தாலும் புன்னகையை வாங்கத் தயாரில்லாதவர்போல முகத்தில் கடுகடுப்புடன்நிமிர்ந்தார்.
"ஹ்ம்ம் உட்கார் "என்றார்.
"சார்?" தயக்கமாய் கேட்டபடி அந்த பெரிய சுழல் நாற்காலியின் நுனியில் கார்த்திக்அமரவும் நாற்காலி முன்னோக்கி நகர்ந்து மேஜையில் மோதிக்கொண்டது.கார்த்திக்கின் தடித்த மூக்குக்கண்ணாடி நழுவி வாய்க்குவந்து விழுந்தது.
"எக்ஸ்ட்ரீம்லி ஸாரி" பயத்துடன் மேஜையில் கவிழ்ந்துகொண்ட பேப்பர்வெயிட்டைநிமிர்த்தி வைத்தான்.அது பம்பரமாய் சுற்றியது.
"ஹஹ்ஹாஹா!"கைதட்டி சிரித்தார் சுதாகரன்.
திருட்டுமுழி முழித்த கார்த்திக்கிடம்"சரியான ஜோக்கர்பா நீ !அசப்புல நீ நடிகர்சோ இளம் வயசுல இருந்த மாதிரியே இருக்கறே..அதே உருண்டைமுழி; மூக்குக்கணாடி! ஹெஹே"
இதுக்கு எதுக்கு இழவு சிரிப்புடா மடையா என்று மனசுக்குள் நினைத்த கார்த்திக் எரிச்சலை அடக்கி 'சோ'கமாகவே விழித்தான்
சுதாகரன் ஒருவழியாய் சிரிப்பதை நிறுத்தி "கார்த்திக் உன்னை எதுக்குஅழைச்சேன் தெரியுமா? வர்ரவாரம் நம்ம ஆபீசின் ஆண்டுவிழா வரபோகுது.. இது சில்வர் ஜுப்ளிவருஷம் என்பதால் சிறப்பாக நடத்த திட்டம். தமிழ் நாடுமுழுவதும் இருக்கும் நம் கிளைகள் எல்லாம் சேர்ந்து இங்கே சென்னைக்குவந்து மூணுநாள் விழா நடத்த தீர்மானம். கடைசிநாள் நாடகபோட்டி நடக்கபோகுது. காலையிலிருந்து இரவுவரைக்கும் லஞ்ச் ப்ரேக் தவிர்த்து தொடர்ந்து ஏழுநாடகங்கள் நடக்கபோகிறது .நம் சென்னை தலமை ஆபீசின் சார்பில் நடக்கப் போகும் நாடகத்தை நீதான் எழுதி இயக்கணும்.சில்லுனு ஒருநாடகம் உன் பொறுப்பில் அசத்தலா வரணும் ."
திகைப்பில் ,'நாநானா?" என்றான் கார்த்திக்.
"ஆமாஆமா.,உன் ப்ளாக் பார்த்தேன் சமீபத்துல. ஆபீஸ்ல பீதாம்பரம்தான் உன் வலைப்பூ பத்தி சொன்னாரு. நானும் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்.. ரொம்ப அருமையா சிரிக்க சிரிக்க எழுதி இருக்கே! அப்போவே திர்மானம் செய்துட்டேன் ஆபீஸ் நாடகம் உன் கையிலதான்னு .."
'சார் அது அது வந்து சும்மா ஆபீசில் பொழுதுபோகாத நேரத்துல..."
"ஆபீஸ்ல வேலை செய்யாம இப்டி வலைல விழுந்து கிடக்கிறியா இடியட்னுநான் திட்டமாட்டேன், மை பாய்! நானும் இளமையைக்கடந்து அரை செஞ்சுரி போட்டவன் தான். கார்த்திக் !நீ காலேஜ் நாடகத்துல எழுதி இயக்கி நடிச்சி ப்ரைஸ் வாங்கின தகவல் சொல்லுதேப்பா உன்னால முடியும்னு .இப்போல்லாம் ஸ்டேஜ் நாடகமெல்லாம் அபூர்வமாயிடிச்சேப்பா உன்னைமாதிரி துடிப்புள்ள இளைஞர்கள்தான் அதை மறுபடி உயிர்பெறச் செய்யணும்.."
'ஸார்! குருவி தலைல பனங்காய்! காக்கா சிறகுல கருங்கல்! எறும்பு மேல எக்லர்ஸ் சாக்லேட்.. பயமாயிருக்கு"
"சரித்திர நாடகம்னா பயப்படணும் , வசனம் சரியா வரணும்னு கவலைப்படணும் .இது சும்மா காமெடி நாடகம்தானே.... உனக்கு இதெல்லாம் அல்வா. ஜமாய் ராஜா! நாளைக்கே ரிகர்சல் ஆரம்பி .நம் ஆபீஸ் ஸ்டாஃப் எல்லாரையும் உதவிக்கு வச்சிட்டு சீக்கிரமா ஆரம்பிச்சிடு ..ஒகே நீ போகலாம் இப்போ?"பேசி முடித்ததும் சுதாகாரனாகிவிட்டார் மறுபடி.
கார்த்திக் அங்கிருந்து வெளியேவரும்போது மனசு கேட்டது 'கார்த்திக் நீ நகைச்சுவையாய் சில்லுனு நாடகம் எழுதி இயக்கி நடிக்கணுமா இதைவிட ட்ராஜடி வேறு உண்டா?'
ஆனால் சக ஊழியர்கள் அனைவரும் அவன் விஷயம் சொன்னந்தும் சுகப்ரசவத்தில் ஆண்குழந்தைபிறந்த தம்பதியர்க்கு வாழ்த்து சொல்வதுபோல் கைகுலுக்கி 'கங்கிராஜுலேஷன்ஸ்!' என்றனர் கோரஸாய்.
"நாங்க எல்லாரும் ஒத்துழைக்கிறோம்டா" என்றான் வெங்கட்.
"ஷ்யூர் கார்த்திக்!" என்றாள் சீறாமல் ஸ்னேகா.
கீதா ,அருணா ,ராதிகா, நந்தினி நால்வரும் ஸ்நேகாவுடன் சேர்ந்து ஐம்பெரும்பெண்மணிகளாய் வாழ்த்தினர்.
நயாகாரா நடுவில் நின்றார்போல் சிலிர்த்தான் கார்த்திக்.
அந்த ஐந்துபேரையும் ஒன்றாய் பார்த்ததும் 'கண்டேன் கருவை' என்று உணர்ச்சிவசப்பட்டவனாய் கத்தினான்.
'ஐயோ!' என்று தனது இரண்டுமாத கர்ப்ப வயிற்றினை சேலைத்தலைப்பில் மூடிவெட்கப்பட்டாள் அருணா.
"நாடகக்கரும்மா! நீங்கவேற ?" வெங்கட் விளக்கினான்.
ஐந்துபெண்கள் !ஒரு ஆண்!
யோசித்தான்.
ஆஹா! கதை ரெடி!
குதூகலகமாய் வீடு வந்தவனிடம் சந்திரா கேட்டாள் " என்ன ஜொள்ளுபார்ட்டி என்னும் ஜேப்பி!புளி வாங்கிவந்தீங்களா?"
"யு மீன் டைகர்? இம்பாசிபிள்மா"
"போதுமே ..உங்க ஜோக்கைரசிக்கத்தான் ஆபீஸ்ல ரசிகைபட்டாளம் தவிப்பாங்களே.. அதுகிடக்கட்டும்...புளி அதான் சமையல் புளி,வாங்கிவரச் சொன்னேனே...மறந்திட்டீங்களா? நெனச்சேன். இந்த அத்வானத்துல வீட்டைக்கட்டிக் குடிவந்துட்டோ ம் பக்கத்துல கடை ஏதும் இல்ல..இரண்டுவாலுகுழந்தைகளோட நான் எங்கபோறது?"
"ஆபீஸ் வேலைல மறந்தே போயிட்டேன்மா"
"நான் எது சொன்னாலும் காதுல ஏறாது.. ஆனா அடுத்த தெரு லதா ஒருநாள் பிசாத்து ப்ரஷ்வாங்கிவரச்சொன்னால் டாண் னு வாங்கிவருவீங்க.என்னவோ போங்க ரண்டு குழந்தங்க அதாவது நினைவிருக்கும்னு நினைக்கறேன்"
"யார்க்கு லதாக்கா? நம்பவே முடில்ல! இப்பத்தான் வயசுக்குவந்தவ மாதிரி இருக்கா?"
"நான், ரண்டு குழந்தங்கன்னு சொன்னது உங்களுக்கு ..ஆறுகழுதைவயசுஆவுது உங்களுக்கு ஒருகழுதைக்குவயசு ஆறு."
"ஸோ வாட் சந்திரா? ஐயாம் யங் அட் ஹார்ட் .கண்ணாடி கழட்டினா ரொம்ப இளமையா இருக்கேனாம்!" "யாரு" ஆபீஸ் காரிகைகள் சொன்னாங்களாக்கும்? 'ஹி' ன்னு பல் இளிப்பீங்களே அவங்களைக்கண்டா?":"எல்லார்கிட்டயும் நான் ஜோவியலாப் பேசறேன்"
"என்கிட்டஒருநாளும் ஜோக் அடிச்சதே இல்லையே...பொண்டாட்டிகிட்ட பேசவே நேரம் கிடையாதாம்இதுல ஜோக் எங்க ஜோக்!..."
லட்சார்ச்சனை ஆரம்பமாகவும் கார்த்திக் பாத் ரூமுக்குள் பதுங்கினான்
மறுநாள் ஆபீசில்நுழையும்போதே ஸ்நேகா ஆர்வமாய் ,
"கார்த்திக்!ஸ்க்ரிப்ட் ரெடியா எனக்கு என்ன ரோல் ? மெயின் ரோல்எனக்குத்தானே ?பிச்சிட்றேன்" என்றாள்.
"எதை ஸ்க்ரிப்டையா?"
"ஹையோ! நாட்டி கை!"
"கோபமா வரணுமே மேடத்துக்கு?"
"இனிமே வராது நாடகத்துல உணர்ச்சியக்கொட்டி நடிக்கணுமே நான்?"
"ஓ ரொம்ப் இன்வால்வ் ஆகிறீங்க போல?"
ஸ்நேகாவைப்போலவே மற்ற பெண்களும் தங்களது இருபதுப்ளஸ் வயதுக்கே உரிய துடிப்புடன் கார்த்திக்கிடம் நாடக விவரம் கேட்டனர்.
"நாடகம் ஸ்க்ரிப்ட் ராவோடுராவா எழுதிட்டேன். ஆமா,ரிகர்சல் எங்கே வச்சிகறதுடா வெங்கட்?"
"உன் வீட்லதான்.,ஊர்கோடில அமைதியாயிருக்கு. மொட்டைமாடில ஒத்திகையை ஆரம்பிக்கலாம்டா"
"ஓகே! நானும் வீட்ல கண் எதிரில் இருந்தா மிஸஸ்டவுட்ஃபயருக்கும் நிம்மதியா இருக்கும். என் வீடுதான் ஒத்திகைக்கு சரியான இடம்."
சந்திரா அரைகுறைமனதாய் சம்மதித்தாள்
"ஒத்திகை மட்டும் பண்ணுங்க சும்மா அந்த மினுக்கிங்க கிட்ட வழிய வேணாம்"என்று கண்டிஷன் போட்டாள்.
மறுநாள் கதையை விவரிக்கத் தொடங்கினான் கார்த்திக்.
"அதாவது குடும்பத்தலைவர் பாஞ்சலனுக்கு ஐந்து -ஹிந்தில பாஞ்ச் -மனைவிகள்.ஐந்துபேருமே அல்ட்ரா மாடர்ன் லேடீஸ். நகரின் பெரிய க்ளப்பில் அவங்க எல்லாரும்சீட்டு ஆடிதோத்துப் போயிடறாங்க .வீடு நிலம் பொருள் எல்லாம் அடமானம் வச்சும் கடன் அடையல கடைசியா கட்டின கணவனையே அடமானம் வைக்கும் நிலமை.
எதிர் அணித்தலைவி தன் மாமியின் சூழ்ச்சியோடு தங்கை துரியாவை அழைத்து ஐந்து பெண்மணிகளின் ஒரே கணவரான பாஞ்சாலனை க்ளப்புக்கு அழைத்துவரசொல்லி ஆணையிடுகிறாள்.
துச்சா பாஞ்சாலனை பஞ்சகச்சம் வேஷ்டியோடு அப்படியே அழைத்துவர ."துரியா அவனது துகிலை உரிக்கவா?" என்றாள் துச்சா பழைய பகையை நினைவில் கொண்டு.
பாஞ்சாலன் பரிதாபமாய்க் கெஞ்சுகிறான் தன்மனைவிகளை ஆற்றாமையாய் பார்க்கிறான் ஆனாலும் சகுனியும் துரியாவும் சிரிக்க சிரிக்க பாஞ்சாலனின் வஸ்திரத்தை உருவுகிறாள் துச்சா.பாஞ்சாலன் 'ஹேராதே'என்று செல்லில் தனது சகோதரிபோன்ற அந்த பிரமுகப்பெண்மணிக்கு தகவல் தருகிறான் அவள் ஏதோ செல்லில் சொல்லவும் பாஞ்சாலன் க்ளப்பில் எல்லரையும் பார்த்து ஆவேசமாய் கத்துகிறான்.
நான் வேஷ்டி கட்டியதால்தானே எனக்கு இந்த கதி இனி நான் வேஷ்டியே கட்டப்போவதில்லை என்று பேசுவதை சட்டென நிறுத்துகிறான்.
க்ளப் அதிர்கிறது ஆண்கள் வெட்கத்தில் தலைகுனிகிறார்கள்.
பாஞ்சாலன் தொடர்கிறான் 'இனி நான் பேண்ட் தான் அணியபோகிறேன் இதுதான் பாஞ்சாலன் சபதம்'என்கிறான் திரை போடப்படுகிறது.எப்படி கதை?"
"இந்த பாதிப்பில ஒருகதை கேட்டமாதிரிஇருக்கே...காலேஜ்நாளில் டீவில சங்கு ஊதிட்டே ஒரு நிகழ்ச்சி பார்த்தமாதிரி இருக்கே?"
வெங்கட் குழப்பமாய் கேட்டான்.
"மஹாபாரதத்தின் உள்டா தான் ..நவின பாணில முயற்சித்தேன். வேற என்னடா செய்வது அவசரத்துக்கு என் கற்பனை இப்படித்தான் போனது.."
வெங்கட் கண் பனித்தான்.
"காமெடிகதைக்கு அழறியேடா வெங்கட்?"
"அஞ்சுபொண்ணூங்களைக் கட்டிட்ட பாஞ்சாலனுக்காக இந்தக்கண்ணீர்டா"
"பாஞ்சாலன் நீதான் வெங்கட்"
'ஐயோநானா அஞ்சுபேருடா... அஞ்சியே ஒத்திகையில செத்துடுவேன்"
"கமான் வெங்கட்..இன் ஃபாக்ட் நான் நடிக்கலாம் ;ஆனாஎழுதி இயக்கி நடிக்கவும் முடியாதுடா மேலும் ஐந்து பெண்களுக்கு நான் கணவன்னா என் மனைவி அதை நாடகம்னாலும் சம்மதிக்கமாட்டா."
"பீதாம்பரம் ரவி குமார் கணேஷ் இவங்களைக் கேட்டுப்பாத்தியா?"
"அவங்கதமிழ் உச்சரிப்பு சரியா இல்லடா வெங்கட்...மேலும்இந்த நாடகம் மட்டும் வெற்றி அடைந்தால்நாமே சுயமாய் ஒரு குழு தொடங்கிடலாம்"
"சரி"
ஜீன்சில், சூடிதாரில், லோஹிப் சேலையில் என்று ஐந்து இளம் பெண்களும் வீட்டில் நுழையவும், சந்திராவின் கண்கள் கார்த்திக்கின் மீது தாவிக்கொண்டே இருந்தது. அவனோ நாடக டென்ஷனில் பரபரத்துக் கொண்டிருந்தான் இதில் நந்தினி என்னும் இருபத்திஓருவயது இளமைப்புயல் 'ஆண்ட்டி' என்று சந்திராவை அழைத்துவிட்டாள்
சந்திரா தனியே கார்த்திக்கை சமையல் அறைக்குத்தள்ளிக் கொண்டுபோய் கைமா செய்ய ஆரம்பித்தாள்.
"ஆண்ட்டியாமே அந்த ஜீன்ஸ் சுந்தரிக்கு நான்? எத்தனை கொழுப்பு இருக்கணூம்?சோடாப்புட்டி போட்டுகிட்டு கொஞ்சம் கிராமத்துப்பெண்ணா அடக்க ஒடுக்கமா தேவர்மகன் ரேவதிமாதிரி இருக்கறதுனால என்னை ஆண்ட்டின்னு கூப்பிடணுமா? நானும் மேக் அப் போட்டுக்கிட்டா நமீதா ரேஞ்சுல இருப்பேன்....சொல்லிவைங்க உங்க ஆபீஸ் அழ்ழ்ழகிங்ககிட்ட க்கும்?"
திருமதிதுச்சா துரியா சகுனிமாமி கதாபத்திரங்களுக்கு முறையே பீதாம்பரம் விட்டல் டேனியல் ஆகியோர் பெண் வேடமணிய ஒருவழியாக சம்மதித்தனர்.
முதல் இரண்டு நாட்கள் ஒத்திகை சரியாக அமையவில்லைதான் ஆனால் பிறகு அனைவரும் ஈடுபாட்டுடன் நடிக்கவும் மிகவும் திருப்தியானது கார்த்திக்கிற்கு.
அன்று மொட்டைமாடியில் ஒத்திகை முடிந்ததும் 'சபாஷ் ஒண்டர்ஃபுல்!" என்று குரல் வந்தது.
எல்லாரும் திகைப்புடன் திரும்பிப் பார்த்தனர்
பக்கத்துவீட்டு மொட்டைமாடியில் ஒரு இளைஞன் நின்றுகொண்டு கைதட்டினான் .
கார்த்திக்கைப்பார்த்து,"என் பேரு சுரேஷ்.இங்க ஒருமாசம் முன்பு குடிவந்தேன் ..உங்க ஒத்திகையை தினமும் பார்த்து பிரமிக்கிறேன் அனுபவம் வாய்ந்த நடிகர்களா என்ன அனாயாசமா நடிக்கறீங்களே?' என்றான்
"நன்றி சுரேஷ்! எல்லாரும் எங்க அபீஸ் மக்கள்தான் !ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு எங்க சார்புல சில்லுனு ஒரு நாடகம் போடணும்னு எம்டி சொன்னார் அதான்...". "ஓ அப்படியா?ஆல்தி பெஸ்ட்!"
கார்திக்கிற்கு உற்சாகமாயிருந்தது.
ஆயிற்று இன்னும் இரண்டே நாளில் ஆபீஸ்விழாநிகழ்ச்சிகளைத்தொடங்கவேண்டும்
அப்போதுதான் ஆபீஸ் முழுமைக்கும் அந்தத் தகவல் வந்தது .
டில்லியில் போர்ட் மீட்டிங்கிற்கு சென்ற கம்பெனி சேர்மென் மாரடைப்பில் திடீரென இறந்துவிட்டாராம் அதனால் விழா நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து என்று.
துக்கமும் சோகமுமாய் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு ஆபீசிலிருந்து கார்த்திக் வீட்டிற்கு வந்தான் . சந்திராவிஷயம் கேட்டு அதிர்ச்சியில் அதிசயமாய் அமைதியாகிவிட்டாள்.
மொட்டைமாடியில் ஒத்திகை நடந்த இடத்தைப் பார்த்து மலரும் நினைவுகளை அசைபோட்டான் .ஒத்திகையின் போது எல்லாரும் எவ்வளவு குதூகலமாய் ,அந்நியோன்னியமாய் பழகினோம்? ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த நம்பிக்கை, சேர்மனின் இழப்பு என்னும் சுனாமியால் அடித்துக்கொண்டு போய்விட்டதே? "கார்த்திக்! எப்போ உங்க நாடக அரங்கேற்றம்? என்னைமாதிரி வெளி ஆட்கள் பார்க்க அனுமதி உண்டா?"
பக்கத்துவீட்டு மொட்டைமாடியில் நின்றபடி ஆர்வமாய் சுரேஷ் கேட்டான்.
"இல்ல சுரேஷ் நாடகம் கான்சல்ட் கம்பெனி சேர்மன் இறந்துட்டாராம்"
சொல்லிவிட்டு கண்கலங்குவதை மறைக்க முகத்தைத் திருப்பிக் கொண்டான் கார்த்திக்.
"அப்படியா? கார்த்திக்! இஃப் யு டோ ண்ட் மைண்ட் அந்த நாடகத்தை 'ஹாய் டிவி 'ல ஒளிபரப்பிடலாமா? அந்த டீவியின் உரிமையாளர்ல நானும் ஒருத்தன் தான். இப்படி ஒருநகைச்சுவை நாடகத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை.எல்லாரும் அருமையா நடிச்சதை ஒத்திகையில தினமும் பார்த்தேன். இது பலலட்சம் மக்களுக்குப் போய்ச் சேரணும் ..அதற்கு எங்க 'ஹாய்டீவி' உதவும் ...என்ன சொல்றீங்க?"என்று சுரேஷ் கேட்டான்.
கனவுகளில் மிதக்க ஆரம்பித்தான் கார்த்திக்!*******************************************************************************
மேலும் படிக்க... "சில்லுனு ஒரு நாடகம்"

Monday, October 23, 2006

ஆண்மனசு.

பொழுதோட வாரேன்னு
பொறப்பட்டுப்போன மச்சான்
பொம்பள என் மனசத்தான்
பொறுமை இழக்க வச்சான்

சந்தைக்குப் போயெனக்கு
சாதிமல்லி வாங்கியாந்து
சட்டுனு தலயில் வச்சி
சாகசமாப் பேசிப் போனான்

புதுப்பொண்ணு நாந்தனியே
புருஷனுக்குக் காத்திருக்க
புன்னகைச்ச (வேற)பொண்ணருகே
புல்லரிச்சி நிக்கிறானா?
புதிராக இருக்குதம்மா
புரியாத ஆண்மனசு
மேலும் படிக்க... "ஆண்மனசு."

Thursday, October 19, 2006

விடுதலை ஹைக்கூ

பெண்விடுதலை பற்றிபேசவேண்டும்
அனுமதிகேட்கிறாள் கணவனிடம்
மனவி.

***************************
விடுதலை கிடைத்தும்
பறக்கமுடியாதநிலை
ஜோதிடக்கிளி

*****************************

மௌனத்திரை போட்டுவிட்டாய்
மனசிறைக்குள் வந்த உனக்கு,இல்லை
விடுதலை.
********************************
மேலும் படிக்க... "விடுதலை ஹைக்கூ"

Saturday, October 14, 2006

விடுதலை வேண்டா விருட்சங்கள்(தேன்கூடு போட்டிக்கு)

அடித்த பெருங்காற்று
சொல்லி இருக்கலாம்
ஏறிக் குதித்து
கிளைக்குக்கிளை தாவி
விளையாடியகுரங்குகள்
சொல்லி இருக்கலாம்
தவறாமல் நிழல்தேடிவந்து
நிற்கும் நெஞ்சங்களில்
ஏதாவது ஒன்றாவது
சொல்லி இருக்கலாம்,
சாலைவிரிவுப் பணியில்
வேலை பார்ப்பவர்கள்
நாளை மாலைக்குள்
மரத்தை வேரோடு
விழ்த்தப்போவதை.
மேலும் படிக்க... "விடுதலை வேண்டா விருட்சங்கள்(தேன்கூடு போட்டிக்கு)"

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!(தேன்கூடு போட்டிக்கு)

பரசுவிற்கு இன்று விடுதலை.சட்டம் வழங்கிய மூன்றுமாத தண்டனை இன்று பூர்த்தியாகிறது.

"நாளையிலிருந்து நீ சுதந்திரமனிதன்!" என்று நேற்று படுக்கப்போகும்போது ஆறுமுகம் பரசுவைப் பார்த்து சொன்னான்.

"ஜெயிலு விட்டு போனதும் எங்களை எல்லாம் மறந்துடுவே, இல்லியா பரசு?' வரதன் வேதனையுடன் அவன் விரலைப்பற்றியபடி கேட்டான்.

மூன்றே மாதத்தில் எல்லாருடைய மனத்திலும் இடம் பிடித்து விட்ட பரசு, சிறைக்குள் நுழைந்த முதல்நாள் நடுங்கித்தான் போனான். இருபத்துமூன்றுவயதில் சிறைவாசம்! படிப்பைமுடித்து வேலை பார்க்க வேண்டிய வயதில் சிறையில் கல்லுடைத்து, களிதின்று என்று நாட்களைக் கழிக்கும்படி விதியாகிவிட்டது. முதல்வாரம் முழுவதும்தூக்கமே வரவில்லை. ஆனால் நாளாவட்டத்தில் பக்கத்தில் இருந்த இதரகைதிகளின் அன்பான பார்வையில், பரிவான பேச்சில் சிறை வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கிகொண்டான். அவன் நினைத்தமாதிரி சிறையில் உள்ளவர்கள் எல்லாருமே கெட்டவர்களாய்த் தெரியவில்லை. அவர்களில் பலர் தனது பிரியமுள்ளவர்களுக்காக ஏங்கி சோகக் கதைகளைச் சொல்லி அழும்போது பரசு நெகிழ்ந்துதான் போனான் .

"பரசு !வெளியே போனதும் உன்கிட்ட எல்லாரும் நல்லா பழகி நெருங்குவாங்களா?"

"நெருங்கணும் வரதா! நாம கவசம் போட்டுக்காம உலகத்தோடப் பழகினா உலகமும் நம்ம கிட்ட உண்மையாப் பழகும் இல்லியா?":

"பரசு! உன் லட்சியம் கிராம முன்னேற்றம், அதற்குப் பாடுபடுவது இல்லையா? நல்லது,.அது வெற்றி பெறட்டும்! சீக்கிரமாய் ஒரு வேலைகிடைத்து நீ சந்தோஷமாய் வாழ என்மனமார்ந்த வாழ்த்துகள்!"
என்று தங்கராசு வாயார வாழ்த்தினார்

தங்கராசு, ரௌடிகள் ,தாதாக்கள் தொடங்கி சிறை அதிகாரிகள் அனைவருக்கும்யோகா கற்றுத்தரும் யோகா மாஸ்டர். அத்தனைபேருக்கும் அவரிடம் தனிமதிப்பும் மரியாதையும் உண்டு.அவர்தான் அடிக்கடி சொல்வார் ....

'சிறை வாழ்க்கைதான் ஒருமனிதனை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது? சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளியாகி இளம்வயதில் இங்கே நான் ஆயுள்கைதியாகவந்தேன் .வாழ்க்கையே அஸ்தமிச்சிப் போயிட்டதாய் முதலில் நினைச்சேன். இது நல்லது, இது கெட்டது, இவர் நல்லவர் அவர் கெட்டவர் என்று மனுஷன் போட்டுவரும்கணக்கெல்லாம் மாறிப்போகும். அனுபவம் மனுஷனை மாத்திடும்.ஜெயில்ல நல்லவனா வாழ்ந்துக் காட்டணும்னு எனக்குள்ள வைராக்கியம் வந்தது. ஆனா வாழவிடாமல் மனசுக்குள்ளிருந்து சாத்தான் தடுப்பான் .ஒருமனுஷனுக்கு எதிரி, வெளில யாருமில்ல. அவன் மனசுதான் பரம எதிரி . ஜல்லிக்கட்டு காளையாய் கைக்கு அடங்காமல் அங்குமிங்கும் தறி கெட்டு அலை பாயற மனசை அடக்கப் போனால் அதுவே ஆவேசமும் அகங்காரமுமாய் நம்மைப் புரட்டிஎடுக்கும். அதை அடக்கஆத்மபலம் வேணும்; மிருகமனத்தை அடக்க நாம் மனிதனாய் இருக்கணும்; அதுக்கு மனுஷத்தன்மை பெறணும்,


'மகாயோகி அரவிந்தர் மறைந்தப்போது அவருடைய உடம்பு நீண்டநேரத்துக்கு தங்கம்போல ஜொலிச்சிதாம்! சந்தன மணம்வீசியதாம்! அதுபோல வாழும்போது தங்கமா மின்னி, சந்தனமாய் மணக்கணும். அதுக்கு மனசை மாத்திரம் புதுசா வச்சிக்கணும் ..கர்மத்தொடர்பை ஆன்மா என்று எண்ணிக் கொள்ளக் கூடாது .அதாவது நாம் செய்த செயல்களையும் அவற்றின் விளைவுகளையும் தொகுத்துவைத்துக்கொண்டு அந்ததொகுப்பு தான் 'நாம்' என்று எண்ணக் கூடாது.
இப்படிவாழ்கிற வாழ்வுதான் வாழ்வாங்குவாழ்தல்! அப்படி ஒருவாழ்வு சித்தியானால் அது அமரவாழ்வு என்கிறார் பாரதி ! அதிமானிடவாழ்வென்கிறார் அரவிந்தர்! அருள்வாழ்வு என்கிறார் வள்ளலார்! விளங்கிகொள்ளமுடியாமல் திணறுகிறோம் நாம்' "

தங்கராசு நல்ல சிந்தைனையாளர் .அவரது அருகாமையில் பரசுவிற்கு சிறையே போதிமரமாயிற்று.


"ஒவ்வொருமனிதனும் மனதால் செயலால் சிறைப்பட்டிருக்கிறான். பாரதி சொல்வதுபோல,
'விடுதலையைப் பெறடா-நீ
விண்ணவர் நிலை பெறடா
கெடுதலை ஒன்றுமில்லை-உன்
கீழ்மைகள் உதறிடடா'
என்று வாழப் பழகிக் கொள்ள வேண்டும்" என்று தங்கராசு யோகக்கலைக்கு நடுவே வாழ்வியல் கலையையும் போதிப்பார்.

சிறையில் இருப்பவர்கள் ஏதோ சூழலில் குற்றம்புரிந்து உள்ளே இருக்கிறார்கள்; ஆனால் பலபேர் நிரபராதி எனும் போர்வையில் வெளியே திரிகிறார்கள் என்பது பரசுவின் சொந்த அனுபவத்திலேயே
அவனுக்குப் புரிந்து போயிற்று.

மூன்றுமாதம் முன்பு கிராமத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியை அவனால் மறக்கமுடியுமா என்ன?

அன்று ஊர்தோப்பில் ஆலமரத்தின்கீழே உட்கார்ந்து ஆசிரியர் வேலைக்கு மனுப்படிவத்தை பூர்த்தி செய்துகொண்டிருந்தான்பரசு. அங்கு மரத்தின் மேல் கீச்கீச் என்று நிறைய குருவிகள் கத்திக்கொண்டிருந்தன. ஏதோஒருகுருவிமட்டும் சோகமாய் தன்துணைதேடி கத்துவதுபோல பரசுவிற்குப்பட்டது.


அப்போதுதான் அருகாமையிலிருந்த வயல்பக்கம் உரத்தகுரலில் சிலர்விவாதம் செய்வது காதில் விழுந்தது. இடையிடையே தாழ்ந்தகுரல் ஒன்று கெஞ்சுவதுபோலக்கேட்கவும்'சித்தப்பா?' என்று அலறிக்கொண்டு ஓடினான்.

பரசுவின் சித்தப்பா குமரவேல் கிராமத்துப் பள்ளிக்கூட டீச்சர் .பொதுப்பணி, சமூகசேவைதான் அவருக்கு உயிர்மூச்சு. குடித்துக்குடித்து கடைசியில் வயிறுவெந்து இறந்துபோன தன் அப்பாவைவிடவும் அவரது தம்பியான குமரவேலின் மீது பரசுவிற்கு மதிப்புஅதிகம். ஐந்துவருடம் முன்பு விஷ சாராயம் குடித்து ஊரெல்லாம் கடனை வைத்துவிட்டு அவன் அப்பா போனதும் தன் குடும்பப் பொறுப்பை குமரவேல் ஏற்றார் என்பதால்மட்டுமல்ல ஒரேகுழந்தை ஆதிக்காக அவர் மறுமணமே செய்துகொள்ளாமல் கிராமத்தில் ஜாதி வித்தியாசம் பாராது அனனவருக்கும் எழுத்தறிவிப்பவர். மென்மையான இதயம் , தெளிவான பேச்சு , எல்லார்க்கும் உதவும் நல்லமனம் ...இவைகளின் மொத்தக்கலவைதான் தனது சித்தப்பா என்பது பரசுவின் எண்ணம்.

அவரைப்போய் ஒருவன் சீண்டிக்கொண்டிருந்தான். வயலுக்கு யார் முதலில் நீர்விடுவது என்று இரு தரப்பிலும் ஆரம்பித்த பேச்சு பிறகு வாக்குவாதமாகியது .குமரவேல் நியாயத்தின்பக்கம் நின்றார். தர்மமாய்ப் போக வேண்டும் என்றார்.அவ்வளவுதான் அதர்ம அணித்தலைவனுக்கு ஆவேசம் வந்துவிட்டது.

" மாரி!எடுடா அரிவாள?" என்று ஆணையிட்டான். காத்திருந்த அவன் ஆள் ஒருவன், அரிவாளால் குமரவேலை சகட்டுமேனிக்குத் தாக்கினான்.தலைமுகட்டில் ரத்தத்துளி முதலில் தயங்கிப் பிறகு'குபுக்' என பொங்கிக் கொண்டு வரவும் குமரவேல் தலையைத் தாங்கியபடியே நிலத்தில் சரிந்தார்.

"டேய் மாரீ! என்னடா நீ? இவனப்போயி வெட்டிப் போட்டியா அறிவுகெட்டவனே ?என் பங்காளி தலைய சீவுன்னு சொன்னேன்... அவன் தான் தண்ணீ தன் வயலுக்கு முதல்ல விடச் சொல்லி மல்லு கட்டினான்...அவன் இப்போ கலவரம் பாத்து பயந்து ஓடிட்டான்போல.?. எப்டியோ சரிதான்... தர்மம் நியாயம் பேசினவனுக்கே இப்டீன்னா நம்ம கதி என்னான்னு பங்காளிய யோசிக்கவைக்க நீ சேஞ்சதும் சர்தான்" என்று ஆணையிட்டவன் கெக்கலிக்கவும் பரசு எரிச்சலுடன்,"அடப்பாவி?" என்று வீறிட்டான்

ரத்தவெள்ளத்தில்குற்றுயிராய் கிடக்கும் தன் சித்தப்பாவை கண் கலங்கப் பார்த்தபடியே அரிவாளை வீசினவனின் சட்டையைப்பிடித்தான்.ஆத்திரமாய் குரல்கொடுத்தான். "ட்ட்ட்டேய்..கொலைகாரப்பாவி ஒருநல்ல மனுஷனை தீர்த்துக் கட்டிட்டியேடா? இனி வயலில் தண்ணிபாயுமாடா? அவர் ரத்தம்தான் இப்போவே ஓடுதுடா" என்று உரக்கக் கத்தினான். உடனே மாரி மன்னிப்பு கேட்பதுபோல் தன் இரு கரத்தை கூப்பியபடியே பின்னோக்கி நடக்க, அங்கிருந்த ஒருவன் அவனுக்கு ஏதோ சைகை காட்ட உடனே அவன் அங்கிருந்த பெரிய கல்தடுக்கி அருகிலிருந்த பாறையில் தலையை மோதிக் கொண்டதை பரசு கவனித்தான். இதுதான் நடந்தது


ஆனால்அந்த சதிக்கூட்டம்செய்தசூழ்ச்சியில் ,சட்டம் பரசுவை பிடித்துக்கொண்டது.பங்காளிச்சண்டையை பார்வையிட வந்த குமரவேலை யாரோ அவரிடம் தமக்கு இருந்த வேறு பகை காரணமாய் கொலை செய்துவிட்டதாயும் பரசு அதை நம்பாமல் மாரிதான்கொலை செய்தான் என்றுஅவனை பாறை மீது தள்ளி கொலை செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியது.

போலீஸ், கோர்ட், விசாரணை நடந்து, "குற்றம் ருசுவானதால் மூன்றுமாதம் சிறை தண்டனைவழங்குகிறேன்" என்று நீதிபதியை சொல்ல வைத்தது.

சித்தப்பாவின் பத்துவயதுமகன் ஆதி ஜெயிலுக்கு பரசுவைப் பார்க்க வரும்போதெல்லாம் சொல்வான். "பரசுண்னே அந்தாள் மாரிக்கு பெரிய அடி ஒண்ணுமில்ல. ஆஸ்பித்திரிலிருந்து வந்திட்டான்.நல்லாத்தான் இருக்கான் ...சூழ்ச்சி செஞ்சி உங்கள மாட்டிவிட்டுட்டாங்க... இதுல பெரியம்மா -அதான் உங்கம்மா- படுத்தபடுக்கைஆயிட்டாங்க ....மீனாக்கா அழுதுட்டே இருக்குது...எங்கப்பாவும் இல்ல..வழக்கம்போல குடும்பத்துக்கு ஆறுதல்சொல்லிக் காப்பாத்த.."

"வருத்தப்படாதே ஆதி! உப்புதின்னவன் தண்ணிகுடிச்சிதான் தீரணும்..நான் வரவரைக்கும் வீட்டை நீ கவனிச்சிக்கோ..நான் வந்ததும் சித்தப்பா இடத்துல இருந்து உன்னையும் என் அம்மா தங்கச்சியையும் கவனிச்சிக்கறேன் என்ன? "


என்னாவோ பதினைந்துநாளாய் ஆதியும் ஜெயில்பக்கம்வரவேஇல்லை .

சிறை சம்பிரதாயங்களைமுடித்துக்கொண்டு ஜெயிலரின் அறையை விட்டு நகர்ந்தான். வாசலில் பெரிய இரும்புக்கேட்டின் வயிற்றுப்பகுதியில் சின்னதாயிருந்த கதவின் வழியே குனிந்து வெளியேவந்தான் கதவின் அருகே துப்பாக்கியை நிமிர்த்திவைத்துக்கொண்டு வீச்சரிவாள் மீசையுடன் நின்ற காவலாளியிடம் "போய்வரேன்" என்றுசொல்லி கைகுவித்தான்

"வராதே, திரும்பி இங்க வரவேவராதே. ஜெயில்லயும்,சாவுவீட்லயும்'போயிட்டுவரேன்'என்கிறவார்த்தை வரவேகூடாது'என்று அதட்டலாய் சொல்லி சிரித்தான் அவன் .தொடர்ந்து "வெளிலபோயி ஒழுங்கா இரு" என்றான் .


'நான் ஒழுங்காய்தான் இருந்தேன் ஆனால் யாரும் என்னை நம்பவில்லையே?நீதிபதியே நம்பாததால்தான் சிறைதண்டனை கிடைத்தது '.பரசு மனசுக்குள் புலம்பிக் கொண்டான்.


இந்தமூன்றுமாதத்தில் அம்மா எப்படி இருக்கிறாளோ? படுத்தபடுக்கைன்னு ஆதி சொல்லிட்டே இருத்தான். தங்கச்சிமீனா டவுன்போயி நாலு பசங்களுக்கு ட்யூஷன் எடுக்குதாம் பாவம்.
வேராய்குடும்பத்தைத் தாங்கிட்டு இருந்த சித்தப்பா திடீர்னு மறைந்ததுல விழுதுகள் எல்லாம் ஆட்டம் கண்டிடிச்சி. ஊருக்குப்போனதும் அம்மா, மீனா ,,ஆதி சுப்ரமணிவாத்தியார். எல்லாரையும்பார்க்கணும் .
.
மனசுக்குள் ஏதேதோ நினைத்தபடி பரசு பஸ்ஸைவிட்டு கீழே இறங்கினான்.

பட்டியலில் கடைசியாய் நின்றவர் பஸ்ஸை விட்டு இறங்கியதுமே முதலில் எதிரில் வந்து நின்றார்

"பரசு? "

குரல் கேட்டு விழி உயர்த்தி அவரைப்பார்த்தான்பரசு. ஆறடி உயரத்தில் நல்ல பருமனும் தக்காளீ நிறமுமாய் இருந்தவர் கருத்து உடல் இளைத்துக்குறுகிப்போயிருந்தார்.

திடுக்கிட்ட பரசு,

"வாத்தியாரய்யா! உங்க நண்பர்- என் சித்தப்பா- போனதுல நீங்க இப்படி உருக்குலைஞ்சி போயிட்டீங்களே ஐயா? " எண்று நா தழுதழுத்தான் .

"ஆமாப்பா..நல்லவங்களுக்கு இதுகாலமில்ல.. நல்லதுக்கும் காலமில்ல. குமரவேல் போன நேரம் நான் ஊரில் இல்லாமல் என் மகளோட வடக்கே கோயில் யாத்திரை போயிருப்பேனா? அவன் முகத்தைக்கூட கடசில பார்க்காத பாவி நான். எளியாரை வலியார் அடிச்சா, வலியாரை தெய்வம் அடிக்கும் தம்பி! ஆமா நீங்க இன்னிக்குத்தான் விடுதலை ஆகிவரிங்களா என்ன?"

"ஊருக்குள்ல வரவே வெக்கமா இருக்குது வாத்தியரய்யா ...தப்பு செய்யாமல் சந்தர்ப்ப சூழ்நிலைல ஜெயிலுக்கு போன என்னை ஊர்ல எல்லாரும் ஏத்துக்குவாங்களா? இவந்தான் அன்னிக்கு போலீஸ்காரங்க பக்கத்துல வர, தலையக்குனிஞ்சிட்டு வேனில் ஏறின பரசு?"ன்னு தான் என்னை நினனவுபடுத்திப்பாங்க இல்லீங்களா?"

"அதைவிடுங்க தம்பி...'உலகின் வாயைத் தைப்பது கடினம்; உந்தன்செவிகளை மூடுதல் சுலபம்.'.வைரமுத்து வரிகளை ஞாபகம் வச்சிக்குங்க... அதுசரி..பரசு! உங்க அம்மாவும் தங்கச்சியும் டவுனுக்கு வீடுகுடி போயிட்டாங்க தெரியுமா?"

"அப்படியா? ஆதி வாரம் ஒருவாட்டி என்னைப் பார்க்க வருவான் எல்லாம் சொல்லுவான் என்னவோ ரண்டு வாரமா அவன் வரல ..அதான் விஷயம் தெரியல. .ஐயா! டவுன்ல அம்மாவீட்டு அட்ரஸ் சொல்றீங்களா?"

அவரிடம் முகவரி வாங்கிக்கொண்டு டவுனுக்கு பஸ் ஏறினான்.



வீட்டிற்குள் நுழைந்ததும் ஆர்வமாய்." அம்மா!" என்றவனை,"எங்கவந்தே?" என்பதுபோல அவன் அம்மாபார்வதி பார்த்தாள்.

பிறகு, "ஏண்டா பெரியதலைங்க சண்டை போடற இடத்துல உனக்கென்ன வேலல? உங்கசித்தப்பனுக்கும் அறிவுஇல்லை, நியாயம் ,நேர்மை தர்மம்னு கடைசில உயிரை பலி கொடுத்துப் போய்ச் சேர்ந்தாரு...நீ செஞ்ச காரியத்துல எங்களுக்கு எத்தினி அவமானம்? உன் தங்கச்சிக்குக் கல்யாணம் ஆகவேணாமா? நாங்க டவுனு வந்ததே அவளுக்கு வரன் திகயணும்னுதான் இங்கயும் வந்து அதைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிடாதே..கண் காணாம எங்கனாச்சும் போயிடு ஆமா?"

"அம்மா! நான் தப்புசெய்யல...ஆனா சித்தப்பாவையே புரிஞ்சிக்காம அவரை விமர்சனம் செய்யும் உங்ககிட்ட நான் எப்படி என்னை நிரூபிச்சி காட்டுறது?"

"அண்ணே!"

குரல் கொடுத்தபடி உள்ளீருந்து வந்த மீனாவிடம், "மீனா1 நீ பத்து க்ளாஸ் படிச்சவ நீ சொல்லும்மா நம்ம அம்மாவுக்கு ?"என்றான் தவிப்பான குரலில்.

"அம்மா சொல்றதுல தப்பு இல்ல..ஆளு படை வச்சிருக்கிறவங்ககிட்ட நீ ஏன் மோதணும் அண்ணே?"

'அப்போ அநியாயம் நடந்தா பாத்துகிட்டு சும்மா நிக்கணுமா?" சிவ்வென்று கோபம் தலைக்கேற வெடித்தான் பரசு.

'அதெல்லாம் எனக்கு தெரியாது .நான் இப்போ நாலு பசங்களுக்கு ட்யூஷன் எடுக்கணூம்..அதுல
வர்ர காசுலதான் குடித்தனம் செய்யறோம்...அந்த ஆதிப்பய வேற ஆஸ்பித்திரிசெலவு அம்பது ரூபா வச்சிட்டான்.."


"ஐயோ என்னாச்சு ஆதிக்கு?"

'ஆமாடா...அந்த தண்டச்சோறுக்கு காலராவாம்..நீ கிளம்புடி மீனா. வெட்டிக்கு இங்க பேசி நிக்கவேணாம் " என்றாள் பார்வதி கடுப்புடன்.


குடையைவிரித்தபடி சாலையிலிறங்கிய தங்கையை ஆற்றாமையாய்பார்த்தான் பரசு .

குடையைவிரிக்குமுன் உன் மனசைவிரிக்கப் பழக்கிக்கொள் பெண்ணே...

"அம்மா1 ஆதி எந்த ஆஸ்பித்த்ரில இருக்கான் ?"

"தர்மாஸ்பித்ரிதான்னு நினைக்கறேன் யாருகண்டா?".
.
"என்னம்மா இப்படி அலட்சியமா சொல்றீங்க? பத்துவயசுப்பையனஆதி... பாவம் '

"உன்னைப்பாக்க ஜெயிலுக்கு போவாதடான்னா என்னைமீறிப்போன நாயி "

"அம்மா...?"

வார்த்தைகளை தடித்து வீச இருந்த பரசு, சட்டென தங்கராசுவின் முகம் நினைவிற்குவரவும் அடக்கிக் கொண்டான்.

பரசு வேதனையுடன் வீட்டைவிட்டு வெளியேறி ஆஸ்பித்திரிக்கு வந்து ஆதியை பார்த்தான்.

.இளைத்துத் துரும்பாய் கிடந்தவன் இவனைக்கண்டதும்," பரசண்ணே1 வந்துட்டிங்களா? சந்தோஷமா இருக்குது. உங்க நினவுல பெரியம்மாவும் மீனாக்காவும் வாடிப் போயிடாங்க...எப்பவும் உங்களையே நினைச்சிட்டே இருக்காங்க" என்றான் ஜெயிலுக்குப் பார்க்க வரும் போது சொல்வதுபோல.

"போதும்ப்பா... பொய் சொன்னதெல்லாம் போதும்...இப்போநான் எல்லாரையும் புரிஞ்சிட்டேன் உடம்பு மோசமாயிருக்கிறேயேப்பா ஆதி...பட்டினி கிடந்தியாப்பா பலநாளூ?"

'இல்லியே பெரியம்மா வடை பாயாசத்தோட சாப்பாடு போடுவாங்களே?" என்று அப்பாவுக்குப்பிள்ளை தப்பாமல் வெகுளியாய் புன்னகைத்தபடி சொன்னான்.

பரசு கலங்கிய கண்களுடன் அந்த ஆஸ்பித்திரியின் டாக்டரிடம் போய் விவரம் கேட்டான். அவர் நோய் மிகவும் முற்றிப்போனபிறகு வந்து சேர்ந்ததால் ஆதிக்கு உயிர் பிழைக்கும் சாத்தியக்கூறுகள் குறைவென தெரிவித்தார் .பரசு தான் நிலை குலைந்து கீழே விழாமலிருக்கவேண்டுமே என நினைத்தபடி மறுபடி பஸ் ஏறி கிராமத்து தோப்பிற்குள் சென்று ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டான். மனசில் பாறாங்கல்லை கட்டிவைத்தமாதிரி நெஞ்சு கனத்தது.


'ஆதி உடம்பு தேறிபிழைச்சி வரணும்' என்று வாய் முணுமுணுத்தது.


வழக்கம் போல மரத்தின் மேலே குருவிகள் 'கீச்கிச்ச் என்று கத்தின

நீண்ட நேரம் அப்படியே அமர்ந்தவனை"பரசு!" என்ற இனியமென்மையான குரல் நிமிர வைத்தது .

பத்மா!

சுப்ரமணிசாரின் மகள்! கிராமத்துப்பள்ளியில் பத்தாவது வரை ஒன்றாய் படித்தவள்.

"நலமா பத்மா?"

"பரசு, அப்பா சொன்னாரு நீ ஜெயிலிருந்து விடுதலை ஆகி இன்னிக்கு வந்திட்டேன்னு.... எப்படியும் இங்கே ஆலமரத்தடிக்கு நீ வருவேன்னு எனக்குத் தெரியும்..நானும் இங்க தினமும் வந்து ஆலமரத்துக் குருவிகள்கிட்ட உன்னைப் பத்தி விசாரிச்சிட்டுதான் இருப்பேன் ."'பத்மா நிறுத்திவிட்டு அவனையே ஆழமாய்ப் பார்த்தாள் .

பரசு விழித்தான்.

பத்மா தொடர்ந்தாள். "நினைவிருக்கா பரசு? ஊர்க்குழாயில தண்ணீர் எடுக்க சண்டைவந்தபோது பல எதிர்ப்புகளுக்கு இடையில நீதானே டோக்கன் முறை வச்சி வரிசைல நின்னு எடுத்திட்டுப் போகணும்னு கட்டுப்பாடு கொண்டுவந்தே? உன் சித்தப்பாவுடன் சேர்ந்து கிராம முன்னேற்றத்துக்கு ஏதும் செய்யணும்னு நீ சொல்லிட்டே இருப்பேன்னு அப்பா அடிக்கடி பெருமையா சொல்வார்..அதனாலேயே உன்னை என்மனசில ஏத்துகிட்டேன். "

"பத்மா! என்ன சொல்றே/ உன் மனசில நான் இருக்கேனா, நிஜமாவா?"

"ஆமாம் பரசு! பொண்ணுங்க சட்டுனு மனசில இருக்கிறதை வெளியே சொல்லமாட்டோம் ஆனா, கண்ணு காமிச்சிக் கொடுத்திடும்....' விழிகளின் ஒளியில் கண்டு கொள் காதலை , வார்த்தைகள் அர்த்தமற்றவை...' நான் எழுதின கவிதைதான், நல்லாருக்கா ?"


"அழகு, கவிதையும், அதை எழுதுன நீயும்தான்! சந்தோஷமாயிருக்கு பத்மா! இந்த ஆலமரத்துல அம்பது நூறு குருவிகள் கீச் கீச் னு கத்தறப்போ ஒரு குருவி மட்டும் எனக்காக கத்துதுன்னு நினைச்சிக்குவேன். இப்போ அது நிஜமாயிடிச்சி. ! ஆனா ,பத்மா, உலகத்தின் பார்வையில் நான் சிறுத்துப் போயிருக்கேனே?"

"ஆலம்விதை சின்னதுதான் அதுதான் பெரியவிருட்சத்துக்கே ஆதாரம் பரசு? "

" இனி என்னால் என்ன சாதிக்கமுடியும் பத்மா? "

'வாழ்க்கையே ஒரு சாதனைதான்.. மெல்லமெல்ல ஆமை முன்னேறுகிற சாதனை ! உனக்கு நான் துணையா வரேன் பரசு"

" என் எதிர்காலத்துக்காக இப்போ நான் உன்கூட சேர்ந்துகொள்வது சுயநலமில்லையா? "

'சுயநலமாவது தியாகமாவது ? அப்படி எதுவுமே இல்லை.நிறைந்தமனதுடன் செய்யப்படும் காரியம் எதுவும் நம்மீது ஒட்டிகொள்வதில்லைன்னு உன் சித்தப்பா தான் அடிக்கடி சொல்வார். '

"ஆனாலும் எனக்கு பயமாயிருக்கு பத்மா. என்லட்சியப்பயணம் வெற்றியடையும் என்கிற நம்பிக்கையே போய்விட்டது. பெத்த தாயே என்னை இன்னமும் கெட்டவனாய்ப் பாக்கறாங்க..இங்கே யாரையும் திருத்தவே முடியாதுபோலிருக்கு?"

"பரசு! கடவுளின் படைப்பில் கோளாறே கிடையாது .பிழை இருப்பதாகத்தோன்றுவதெல்லாம் நமது எண்ணங்களின் நிழலாட்டமே இல்லாது வேறில்லை . நமது எண்ணப்படி இந்த உலகத்தை திருத்தி மாற்றியமைக்க முயல்வது பேதமை. உலகம் எப்படி இருக்கிறதோ அப்படி ஏற்று, நமது இயக்கம் அதில் பொருந்துகிறமாதிரி செய்துகொள்வது அறிவு. 'மனம் வேண்டியபடி செல்லும் உடலும் நசையறுமனமும் வேண்டு'மென பாரதி வரமாய்கேட்டது கவலை அச்சம் இவற்றை அடிமை கொள்ளும் பொருட்டாகத்தானே? காயிலே புளிப்பதெல்லாம் கனியிலே இனிக்காமல் போகாது..எல்லாத்துக்கும் காத்திருக்கணும்..சரி,நேரமாகிறது, எழுந்திரு பரசு!"

பத்மா நின்றபடிக்குனிந்து அவனை நோக்கி தனது வலது கரத்தை நீட்டினாள்.

பேச்சைவிட மௌனம் வலியது; ஒருநூறுவார்த்தைகளை பார்வை சொல்லிவிடும், ஓராயிரம் விஷயங்களை சின்ன ஸ்பரிசம் தெரிவித்துவிடும்.

பரசு மௌனமாய் பத்மாவின் கரத்தை தன்கரத்தினால் அழுந்தப் பற்றியபடி எழுந்துகொண்டான்.
அடைபட்டிருந்த காற்று மனக்கூடிலிருந்து விடுதலையாகி சுவாசமாய் வெளியே வர ஆரம்பித்தது.
*********************************************************************************
மேலும் படிக்க... "நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!(தேன்கூடு போட்டிக்கு)"

Thursday, October 12, 2006

மௌனமே பார்வையாய்....

பாசாங்குகளைக் களைந்து
பரிவுடனே நீ பார்க்கும்போது
பரவசத்தில் என் விழிகள்
படபடத்து இமை கொட்டுகின்றன

நேசத்தை விழிகளில் தேக்கி
ஆசையுடன் நீ பேசும்போது
பதில் கூறவும் தெரியாது
மௌனமாகிறேன்

கடந்து சென்ற பூக்கூடையினின்றும்
மிதந்துவரும் பூவாசம்போல
பிரிந்து சென்ற பின்பும்
உன் பார்வையின் தாக்கமும்
பேச்சின் வீச்சும் என்னுள்ளே
பரவிக்கிடக்கின்றன ..

உன்னைப்போல்
பார்க்கவும் தெரியாமல்
உன்னைப்போல்
பேசவும்தெரியாமல்
மௌனமாகவே இருக்கிறேன்,
இன்னமும்.
உன்னதங்களில்
மௌனமும் ஒன்று
அறிவாயா மௌனத்தின்
அர்த்தங்களை?
மேலும் படிக்க... "மௌனமே பார்வையாய்...."

மகரந்தசேர்க்கை

உன் நட்பு வேண்டித்தான்
என் இருகரங்களை நீட்டுகிறேன்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு
எப்படி சாத்தியம்?
வசப்படுத்த நினக்கும்போதெல்லாம்
வாராது நழுவுகிறாய்
கையணைப்பில் அடங்க மறுக்கும்
காற்றாகக் கடக்கின்றாய்
மணல் பிரதேசங்களை மூழ்கடித்து
நுரை சுழித்தோடும் வெள்ளமென
பிரவாகமெடுக்கிறது என் ஆவல்
பனி படர்ந்த சோலைகளுக்குள்
படர்ந்து விரிகிறது
பூக்களுக்கான என் கனவு
நில வெ(வொ)ளியில் திரிகிறது
என் காதல் நினைவுகள்
சில்லென்ற காற்றில்
சிறகடிக்கும் மழைத்தும்பிகள்
சேர்க்க வேண்டும் உன்னிடம்
என் மகரந்தங்களை.
மேலும் படிக்க... "மகரந்தசேர்க்கை"

காதல் மொழி

சட்டென்று சொல்லிவிட்டாய்
என்னை நேசிக்கிறேன் என்று
சொல்ல நாணம் எனக்கு
சொல்லாததால் கோபம் உனக்கு
நீ விரும்பும் மலர் என்கூந்தலில்
நீ விரும்பும் வண்ணம் என் உடையில்
நீ விரும்புவதெல்லாம் என் செயலில்.
மனதின் நிலையை
மௌனத்தில் மொழி பெயர்க்கிறேன்.
விழிகளின் ஒளியில்
கண்டுகொள் காதலை
வார்த்தைகள் அர்த்தமற்றவை.
மேலும் படிக்க... "காதல் மொழி"

Tuesday, October 10, 2006

வாழ்க்கை எங்கும் வாசல்கள்!

இன்றைய மங்கையரே!
வாழ்க்கை என்பது என்ன?
பிரச்சினைகள் சூழ்ந்த ஒன்றா? அழகிய ஓடமா? எதிர்நீச்சல் போடவேண்டிய நதியா? புதிரான கேள்விதான்!
ஒவ்வொரு கால கட்டத்திலும் நமது வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது..குழந்தையாய், சிறுமியாய்,பருவப் பெண்ணாய், மனைவியாய், தாயாய் என்று பெண் எடுக்கும் அவதாரங்களுக்கு ஏற்ப வாழ்க்கைமாறுகிறது
.வாழ்வெனும் பெருங்கடலை நீந்துவதற்கு அனுபவம் எனும் படகில் ஏறி அமர்கிறோம். பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள்தான் எத்தனை எத்தனை பேர்கள்! அவர்களிடம் பழகும்போது நாம் கற்றதும் பெற்றதும் அதிகமிருக்கும்...ஆயினும்....
வாழ்க்கை எப்போதுமே இனிமையாக இருக்கிறதா? இல்லையெனில் அதை இனிமையாக மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது.
பெண்களாகிய நம்மிடம் திறமை இருக்கிறது,உற்சாகம் இருக்கிறது, ஆனால் ஒரு செயலை செய்து முடிக்கத் தேவையான மனத்தீவிரம் இல்லை.
நம்மை நாமே புரிந்துகொள்ள சுய அலசல் செய்து பார்க்கலாம் அப்படிப் பார்க்கும்போது குறைகள் தெரியவரும். அவைகளைப் போக்க முயற்சி செய்ய ஆரம்பிக்கலாம்.
முதலில் என்ன செய்யபோகிறோம் என்பதை திட்டமிடுதல் வேண்டும் அதைப்பற்றிய விஸ்தாரமான விவரங்களை வெளிப்படுத்துதல் அவசியமில்லை ஏனெனில் செய்து முடிக்க இயலாத பெரிய திட்டத்தைவிடவும் செய்யக்கூடிய சிறிய திட்டமே மேலானது.
செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் போடுதல் முக்கியம். கடைக்குபோகவேண்டியதிலிருந்து இரவுபடுக்கபோகுமுன்பு வாசல்கதவினைப் பூட்டவேண்டியதுவரை எல்லாமே திட்டமிட்டு செய்யும்போது கோடுகிழித்தாற்போல் நேராகபோய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையும்.
நம் மகிழ்ச்சியை அழகு அந்தஸ்தினால் நம் பெற்றுவிடமுடியாது நம் மனதின் எண்ணங்களினால் தான்அவை சாத்தியமாகும் .எண்ணியமுடிதல் வேண்டும் என்றபாரதி நல்லவைஎண்ணல் வேண்டும் என்றான் அடுத்து.ஆகவே நல்லவைகளை எண்ணும்போது அந்த நல்லெண்ணங்களைக் கொண்டு இயங்கும்போது நல்ல சூழ்நிலை நமக்கு உண்டாகும்.
நல்ல எண்ணங்கள் தோன்றுவதற்கு அன்பின் வழியதில் நாம் செல்லவேண்டும். அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு என்பது தான் உண்மை வாழ்க்கை நெறியும்கூட,,குற்றம் பாராது அனைவரையும் ஏற்றுகுணங்களோடு வாழும்போது வாழ்க்கையில் ஒளி வீசத்தொடங்கிவிடும். வீண்கவலைகளில் மனதை உழலவைக்காமல் அதற்கான தீர்வு என்ன என்று யோசிப்போம், உலகைப் பார்த்து ரசிக்கப்பழக்கிக் கொள்வோம்.
மனிதர்களாகிய நாம் தவறுதலாக சில குற்றங்கள் செய்யகூடும் அதை நினைத்தே மருகாமல் திருத்திக்கொண்டு வாழலாம்
உணவு உடை படிப்பு பொழுதுபோக்கு என எல்லாவற்றிலும் ருசி,ரசனையோடு தேர்ந்தெடுத்து விட்டால் குழப்பங்களுக்கு வாய்ப்பில்லை.
குறிக்கோள் ஒன்றை வைத்துகொண்டு அந்த இலக்கினை அடைய முயற்சிப்பது அதைப்பற்றிய சிந்தனையை வளர்க்கும்.
வீட்டுப்பணி அலுவலகப்பணியைதவிர பெண்களுக்கு வேறு ஒருகலை தெரிந்திருந்தால் ஓய்வுக்காலங்களில் மனதை அதில் செலுத்தமுடியும். பாடுவது படிப்பது எழுதுவது ஓவியம்வரைவது என பலகலைகளில் எதையாவது இளம்பருவத்தில் பயிற்சி எடுத்துவைப்பது நல்லது.
முக்கியமாய் தன்னம்பிக்கை மனதில் வேண்டும் .உறுதியான மனது தெளிவான அறிவு இவைகளுடன் வெளி உலகம் செல்லும்போது மதிக்கப் படுகிறோம் என்பது உண்மை.
நம்மால் முடியும் என்னும் உணர்வை வளர்த்துக் கொண்டால் வெற்றிப் படிகளில் தடுக்கி விழமாட்டோம் ..

ஆம் வாழ்க்கையெங்கும் வாசல்கள்! வாழ்ந்து பார்க்கலாம் வாருங்கள்! ************************************************************************************
மேலும் படிக்க... "வாழ்க்கை எங்கும் வாசல்கள்!"

Monday, October 09, 2006

எழுதாத கவிதை ஒன்று

எப்போதோ சந்தித்ததுசாவகாச நினைவுகள்
கரைந்த உணர்வுகள்
உன்னைத் தேடுகின்றன
உனக்குப் பிடித்த பாடல்களை
எஃப் எம் ஒலிபரப்புகிறது
உனக்குப் பிடித்த படங்களை
தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது
கவிதை, மலர், வாசனை என்று
உனக்குப் பிடித்ததெல்லாம்
என் நினைவுப் பதிவில்நிரந்தரமாகி விட்டன
நினைவுகளைப் புரட்டவே
நிகழ்வினில் நேரமில்லை
உன்னைப்பற்றி கவிதை எழுத
ஒருநாளும் முடிவதில்லை
எழுதாத கவிதை ஒன்று
எனக்குள்ளேஎப்போதும் இருக்கிறது.
மேலும் படிக்க... "எழுதாத கவிதை ஒன்று"

என்னை பற்றி

மைதிலி நாராயணன் என்னும் ஷைலஜாவாகிய நான் காவிரிக் கரையில் பிறந்து (ஸ்ரீரங்கம்) காவிரியின் பிறந்த வீட்டில்(கர்நாடகா) வசிக்கிறேன். நீண்டநாட்களாய் எழுதிவந்தாலும் நிறைவாக இன்னும் எதுவும் எழுதவில்லை எனும் நெருடல் இருக்கிறது.சமையல், அரட்டை என்று பொழுதினைக் கழிக்கும் உற்சாகமான இல்லத்தரசி. விளம்பரப் படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்து வருகிறேன். ஒலி எஃப் எம் இணைய வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளர்.
மேலும் படிக்க... "என்னை பற்றி"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.