Social Icons

Pages

Saturday, December 11, 2010

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்.....

சுதந்திர வேள்வியில் நெருப்பாய் எழுந்தவர் நீலகண்ட பிரும்மச்சாரி. அவரைச்சிறையிலடைத்தனர் விடுதலை ஆகிவெளியே வந்தவரின் உடலில் சிறைத்தழும்புகளையும் மீறி வறுமைத் தழும்புகள் தெரிந்தன. எம் அன்னையின் கைவிலங்குகள் என்றைக்கு உடையும் என்று கொதித்தவர் தன்னை வதைத்த வறுமையை எண்ணி வேதனையுற்றார். மகாகவியின் மனம்கவர் தோழரான நீலகண்ட பிரும்மச்சாரிக்கு நிலைகெட்ட மனிதர்களை நினைக்கும்போதே நெஞ்சுகொதித்தது. அவரின் பொது உடமை நெஞ்சம் எழுத்துகக்ளில் பொங்கிவழிந்தது, அவர் எழுத்தில் இருந்த நெருப்பு வயிற்றில் வந்து வசிக்கத் தொடங்கியது.

அப்போதுதான் ஒருநாள் மகாகவியின் இல்லத்திற்குவந்துசேர்ந்தார். பசியில் உடல்தள்ளாட கை மகாகவியின் சின்ன மகளிடம் யாசகம் கேட்டது.
சேர்த்துவைத்திருந்த இரண்டணாவை அந்த சின்னப்பெண் அவரிடம் கொடுக்க பெற்றுக்கொண்ட பெருமகனார் இரவில் திரும்பிவந்தார்.

பாரதியிடம்,”தோழா உன் மகளிடம் நான் பெற்ற இரண்டணா இன்றைய பசியை தீர்த்தது இனி நான் என் செய்வேன்? செல்வரிடம் கொள்ளையடித்துத்தான் காத்துக்கொள்ளவேண்டும் வறுமைவாட்டுகிறது இனியும் தாங்கமுடியாதையா முடியாது” என்று தேம்பினார்.

கேட்டதும் மகாகவி எரிமலையானார். “என்ன உலகமடா இது ஒரு பணக்காரனின் சுகத்துக்கு ஆயிரம் ஏழைகள் பலியாவதா? தம்பி நீலகண்டா நீ தடுமாறாதே தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் காத்திடுவாள் சக்தி கவலைப்படாதே” என்று ஆறுதல்கூறினார். அருகில்குடி இருந்தோரை அணுகி ஐந்துரூபாய்வரைப்பெற்று நண்பரை அனுப்பிவைத்தார் . தன்னைக்கும்பிட்டு நகர்ந்த நீலகண்டரைப்பற்றி எழுதினார் மகாகவி.

பாரத சமுதாயம் வாழ்கவே!

(திருமதி சகுந்தலாபாரதி வெளிப்படுத்திய நிகழ்ச்சியைக்கேட்ட என் தந்தை கூறியதிலிருந்து)
மேலும் படிக்க... "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்....."

Sunday, November 21, 2010

திருக்கார்த்திகை மாதம்!

தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகைமாதம்! பன்னிரண்டு தமிழ் மாதங்களிலேயே கார்த்திகைக்கு மட்டுமே திருக்கார்த்திகை என்று பெயர் உண்டு. ஆதியிலிருந்தே மனிதன் அக்னியை தெய்வமாகக் கொண்டாடி வந்தான். பெரும்பான்மையான பண்டிகைகளில் நாம் விளக்கேற்றி வைப்பது இந்த அடிப்படையில்தான்.

ஒளியானது குறிப்பிட்ட அளவுள்ள சலனத்திலேயே நம் கண்ணுக்குத் தெரியும். இவ்வுலகில் நாம் கண்ணால் காண முடியாத ஒளியும், காதால் கேட்க முடியாத ஒலியும் உள்ளது. ஆந்தை பூனை இவற்றுக்கு இரவில் கண் தெரியும் மர்மம் இதுவே. நம் கண்ணால் பார்க்க இயலாத அளவுக்கு குறைந்த சலனம் உள்ள ஒளியை நாம் இருள் என்கிறோம். அளவுக்கு அதிகமான சலனம் உள்ள ஒளியும் மனிதனுக்கு இருளாகவே தெரிகிறது.

'தீப மங்கள ஜோதி நமோ நம...'

'அருட்பெரும் சோதி தனிப் பெரும் கருணை'

இறைவன் ஜோதி மயமானவன். சிவம் என்றால் சிவப்பு நிறம் என்று அர்த்தம். சிவம் என்னும் நாமம் தமக்கே உரிய செம்மேனி அம்மான் என்று பாடினார் திருநாவுக்கரசர். சூரியனை நாம் வழிபடுவதும் ஒரு இறைவழிபாடுதான். பின்பு அது ஒளி வழிபாடாகப் பரிணமித்தது. அந்த ஒளி வழிபாடே திரு விளக்கு வழிபாடாயிற்று. பின்னர் அதுவே திருக்கார்த்திகை தீபமாயிற்று.

தூண்டுச் சுடரளைய சோதி கண்டாய் என்கிறது தேவாரம். ஒரு சமயம் பிரும்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் தமக்குள் யார் பெரியவர் என்கிற போட்டி ஏற்பட சிவபெருமானோ தன்னுடைய அடி அல்லது முடியை காண்பவரே வெற்றி பெற்றவராவார் என்று தெரிவித்தார். பிரும்மன் அன்னப் பறவை வடிவம் கொண்டு வானில் பறந்து சென்று முடியைக் காண முயன்று தோற்கிறான். பகவான் விஷ்ணுவோ வராக அவதாரமெடுத்து பாதாள உலகம் சென்று மலரடியைக் காணமுடியாது போக முடிவில் இறைவன் ஜோதிவடிவமாகக் காட்சி அளித்த இடமே திருவண்ணாமலை. ஆகவேதான் இதை அக்னி ஸ்தலம் என்று கூறுவர். இங்கு ஏற்றப்படும் ஜோதியைக் காண பஞ்ச மூர்த்திகள் தப்பாமல் வருவதாய் ஐதீகம். இந்த ஜோதியைத் தரிசித்தால் ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றல் பெருகுமாம். 'எமது உடல் ஒருமனை உள்ளம் ஒரு பாத்திரம் அதில் உணர்வாகிய நெய்யை ஊற்றி உயிரெனும் தீயை இட்டு பிராணன் எனும் காற்று நிரப்பி அறிவுச் சுடரை ஏற்றி அன்பினால் தூண்டிக் கொண்டே இருந்தால் ஆணவமாகிய மாய இருள் அகலும் பின்பு சிவ பரஞ்சோதி தரிசனம் கிட்டும்' என்று மிக அழகாக அப்பர் சுவாமிகள் கார்த்திகை தீப சரித்திரத்தை நமக்கு எடுத்து இயம்புகிறார்.

இவற்றிலிருந்து திருவிளக்கே இருள் அகற்றும் பெரும் பொருள் என்பது புலனாகிறது. நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கேற்றி நீங்காச் சிவபதம் அடைந்தார்.

கார்த்திகை தீபம் ஏற்றுவோம்! காலமெல்லாம் ஓளிமயமாய் வாழ்வோம்!
மேலும் படிக்க... "திருக்கார்த்திகை மாதம்!"

Friday, October 15, 2010

காதல்ரோபோ(சவால் சிறுகதைப்போட்டி)



”எப்படிடா மச்சான் இப்படி ஒரு காரியம் செய்தே! சூப்பர்டா! நீ ஒரு ரோபோடிக் எஞ்சினீயர்னு தெரியும், அமெரிக்கால பஃபல்லொ
பல்கலைக் கழகத்துல ரோபோ டெக்னாலஜி படிச்சேன்னும் தெரியும் ஆனா இந்தியா வந்த உடனேயே இப்படி ஒரு அட்டகாசமான ரோபோவை தயாரிப்பேன்னு நினைக்கவே இல்லைடா பரத்! எல்லாம் எந்திரன் படம் பார்த்த பாதிப்பால தானே இப்படி ஒரு ரோபோ தயாரிச்சி வச்சிருக்கே?”

’வெறும் ரோபோ இல்லடா இது காதல் ரோபோ! ரோபோ டெக்னாலஜிக்குத்தேவையான கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் தொழில்நுட்பம் கொஞ்சம் கணிதம் கொஞ்சம் பொறி இயல் இவைகளை ஒண்ணாக் கலந்து legokitsவச்சிட்டுபன்னிரண்டுமாசமா -அதாவது ஒருவருஷமாஎந்திரன் படம் வர்ரதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சி படாதபாடுபட்டு நான் தயாரிச்சேன். இதான் எந்திரி.’

’எந்திரிக்கணுமா எதுக்கு?’

’இல்லைடா மாப்பிள்ளை, எந்திரனுக்கு ஆப்போசிட் எந்திரி.பெண் ரோபோஆன இது, உயிருள்ள ஜீவன் போல சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ‘ஐசாய் 1’ என்ற ரோபோவை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது விஞ்ஞானக் கற்பனை அல்ல.. நிஜம் என்கிறார் இந்த ரோபாவை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் டீகோ கார்சியா. மனிதர்களுக்கு ஒரு துணையாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் உயிருள்ள நபர் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலும், முடிவுகளை தாமாக சுதந்திரமாக எடுக்கும் வகையிலும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சி, துக்க சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயல்படும் திறன் படைத்த ரோபோக்களை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி வராங்கன்னு கேள்விப்பதும் அமெரிக்கால எனக்கு நண்பனான ஸ்பெயின் நாட்டு அபிகைல் இந்த விஷயத்துல உதவறேனான். லெகோகிட்ஸ் உதவியோட நான் உருவாக்கினது அப்படியே என் காதலியப்போலவே பேசும் காமினின்னா திரும்பிப்பார்க்கும் அவளைப்பற்றிய எல்லாரகசியமும் எனக்கும் இதுக்கும் இப்போ தெரியும்’

’ரொம்ப விளக்கிட்டியேடா! புரியுதுடா பரத்! ரஜனியோட புதுப்பட வரவினால ரோபோ பத்தி இப்போ கிராமத்து மக்களும் அறிஞ்சிருப்பாங்க! சரி, இந்த ரோபோவை வச்சி உன்னோட காதல்ரோஜாவை நீ மீட்டுக்கப்போறே சரியா?’

’எக்சாட்லி சிவா. இதைவிட்டா வேற வழியே இல்லையேடா ..என் வருங்கால மாமனார் சொக்கநாதன் ரொம்ப கெடுபிடியா இருக்கிறாரே!’

’ஆமா! காமினி படிச்சது சென்னை காலேஜ்னாலும் பொறந்தது திருச்சிகிட்ட இருக்கிற குக்கிராமமாச்சே! இன்னமும் ஜாதி குலம்கோத்திரம்னு அவங்க வீடல் ஸ்ட்ரிக்டா இருக்காங்க.. படிப்புமுடிச்சதும் பொண்ணை ஊருக்கு கூட்டிப்போய்ட்டு காமிரா உள் காமினியாய் அடைச்சிட்டாங்க. கையில செல்லும் இல்ல வாயத்திறந்து பேச சொல்லும் இல்ல , அப்படி அடக்கிவச்சிருக்காரு சினிமா வில்லனாட்டம் இருக்கற அவ அப்பா சொக்கநாதன். இதையும் மீறி உங்க காதல் எந்திரன் படத்து விளம்பரம் மாதிரி எகிறிகுதிச்சி வளருதுன்னா அதுக்குக்காரணம் ராகினி! அவதான் வாரவாரம் உனக்காக சிநேகிதி காமினிக்கு காதல் தூது போகும் காதல்புறா! அவள் கொண்டுபோய் உன் காதல் கடிததை காமினிகிட்ட தரா. பதில்பெற்று வரா. எல்லா கதையும் எனக்குதெரியும்டா பரத்!’


’ராகினிக்கு இந்த ரோபோ காமினியோட நல்ல பழக்கமாகிடிச்சி உயிர்த்தோழிகளாகிட்டாங்க. இன்ஃபாக்ட் ராகினி உதவியோடதான் ரோபோவை கிராமத்துவீட்ல வச்சிட்டு என் காமினியைக்கடத்திட்டு வந்து ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கப்போறேன். கிராமத்துல ராகினி இதுகூட ஒருவாரம் தங்கி, ரோபோவை சந்தேகம் வராதமாதிரி அங்கபழக்கிட்டு வந்துடுவா..அப்புறமா ஒருநாள் ரோபோ’ பரத் இல்லாத வாழ்க்கை எனக்குத்தேவை இல்லை நான் சாகப்போறேன்’னு கடிதம் எழுதிவச்சிட்டு இங்க என்கிட்டயே வந்திடும்!’

“ஹாலிவுட்பட ரேஞ்சுல கதை விறுவிறுப்பாத்தான் இருக்கு சொதப்பாம திட்டப்படி நடக்கணும்”

’சரி வா உன்னை ரோபோக்கு அறிமுகப்படுத்தறேன் இங்க நீ வந்து ரொம்பநாள் ஆச்சில்ல நான் எல்லாம் சொல்லி வச்சிருந்தாலும் ராகினியைத்தெரிஞ்ச அளவு ரோபோக்கு உன்னைத்தெரிஞ்சிருக்காது ’

இப்படி பரத் சொல்லும்போதே

“எதுக்கு அறிமுகம் பரத் ? சிவா என்ன எனக்கு புதுசா? நடிகர் விவேக் மாதிரி துறுதுறுன்னு இருக்காரு பேச்சும் அதே!முதல்ல பார்த்ததே மனசுல பதிஞ்சிபோச்சே” என்று ரோபோ சிரித்தபடி கேட்கவும்,’பாத்தியா எல்லாம் இதுக்கு அத்துப்படி..காமினியாவே ஆகிடிச்சிபோல?’ என்றான் சிவா.

’ஆமா...முக்கா(ல்)மினி ! கிராமத்துக்குப்போனா முழுசாயிடும்! காமினியப்போலவே பாவாடைதாவணில்லாம் போட்டு முகத்துல மாஸ்க் எல்லாம் பொருத்திட்டேன் சிவா!எப்படிடா இருக்கு?’

’அசல் எந்திரன் ரஜினியேதான்! அங்க ஆண் இங்க பெண் அதான் வித்தியாசம்!’

நண்பர்கள் சிரித்துக்கொண்டார்கள் ரோபோவும் வெட்கப்பட்டு சிரித்தது.





அரங்கபுரம் .

திருச்சிஅருகே காவிரிக்கரையோரம் இருந்த அந்தகிராமத்திற்கு கோயிலைப்பார்க்கபோகிறவர்கள் போல பரத்தும் சிவாவும் காரில்பின்பக்கம் அமரவைத்த ரோபோவோடு போனார்கள்.ராகினி முதல்நாளே அரங்கபுரம் போய்விட்டிருந்தாள் இன்னும் சற்றுநேரத்தில் திட்டமிட்டபடி அவள் காமினியுடன் கோயிலுக்குவருவாள். நூற்றுக்கால்மண்டபத்தின் தூண்களைப்பார்க்கிற சாக்கில் அங்கே போகும்போது ரோபோவும் காமினியும் இடம் மாறிவிடும்

ராகினி காமினியோடு கோயிலுக்குள் நுழைந்தாள் .சுற்றுமுற்றும் பார்த்தபடி இருவரும் நூற்றூக்கால் மண்டபத்திற்குள் ஓசைப்படாமல் வந்தார்கள். அங்கே சிவா பரத் ரோபோ மூவரும் காத்திருந்தனர். அப்போது சட்டென
மண்டபத்திற்குள் இருந்த தூசியும் உதிர்ந்த பழைய காரை வாசமும் காமினிக்கு மூச்சடைக்க ’ஹா’ என்று மயங்கிவிழுந்துவிட்டாள்.

’ஐயோ என்னடா இது?’ சிவா அதிர்ச்சியுடன் பார்த்தான்.

’கைத்தாங்கலா கார்வரை கூட்டிப்போய்டுவோம் கோயில்ல யாரும் வர்ரதுக்கு முன்னாடி சீக்கிரமா போயிடலாம்’

காரில் ஏறியதும் பாட்டிலைத் திறந்து நீரை எடுத்துமுகத்தில்
தெளித்தான்பரத்.
மெல்லக்கண் திறந்தவள்,’ மூ ..மூச்சுவிட கஷ்டமாஇருக்கு” என்றாள் .

’டவுன்ல தில்லைநகர்ல நர்சிங்ஹோம் போங்க அவர்தான் எனக்கு ஆஸ்துமாக்கு எப்போவும் வைத்தியம் செய்ற டாக்டர். பேரு ஆத்மநாதன் ’.என்றாள்.

’ஆஸ்துமாநாதன்ன்னு பேர் வச்சிருக்கலாமோ?’ சிவா சிரித்தபடிகேட்கவும் பரத் அதை ரசிக்கும் நிலையில் இல்லாமல் விழித்தான்.

ஆத்மாநர்சிங் ஹோம்.

காமினியைப்படுக்கையில் படுக்கவைத்து சோதித்த அந்தடாக்டர் , சினிமா டாக்டரைப்போல மூக்குக் கண்ணாடியைக்கழற்றியபடி,” ஆல்ரெடி ஆஸ்துமா இருக்கிறபொண்ணு மூச்சுக்கு ரொம்ப சிரமப்பட்டிருக்கா நிலமை சீரிய்சாத்தான் இருக்கு..கொஞ்சம் ட்ரீட்மெண்ட் கொடுத்தாகணும் நீங்க வெளில வெயிட்பண்ணுங்க” என்றார்.

மூக்கில் மாஸ்க்கைப்போட்டு ஏதோ ஒயர்களை கைகளில் செருகிவிட்டு அவர் நகர்ந்துபோனார். அப்பாவிற்கு போன் செய்து விவரம் சொல்லிவிடுவாரோ என பயந்த காமினி தப்பிக்க தீர்மானித்தாள்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

அவள்குதிப்பதை அறைக்கதவைத்திறந்து அப்போதுதான் உள்ளே வந்த பரத் அதைப்பார்த்துவிட்டு அவனும் அதே வழியில் சென்று வெளியே குதிக்க சிவாவும் தொடர்ந்தான். நர்சிங்ஹோமின் வாசலுக்கு அவர்கள் வந்தபோது
.......


’தெரியும் உன்னை இவன் சிவப்பு கார்ல கடத்திட்டுவந்ததா ஊர்க் கோயில்குருக்கள் சொன்னாரு உடனே புயலாய் பொறப்பட்டேன் எவ்ளோ நாளா இந்தக்கதை நடக்குது ம்? ‘வில்லன் அப்பா எதிரில் வந்து கண்ணை உருட்டி உறுமினார்.

காமினி கைகளைப்பிசைந்தாள்

அருகில்நின்ற சிவாவும் பரத்தும்,’ இதென்னடா சேமிக்காமல் நாலுபக்கம் கதையை தட்டச்சிய நேரத்தில் கரண்ட் கட்ஆனமாதிரி?’ (எத்தனை நாளைக்கு வெண்ணை தாழிங்கறது ஹிஹி!)என்பதுபோல முழித்தார்கள்

’ஆஸ்பித்ரி வராம இருந்தா இந்நேரம்கார்ல சென்னைக்கே போய்ருக்கலாம் இப்போ ப்ளான் எல்லாம் ஏரோப்ளானாகிட்டது.’

யோசித்தவன் சட்டென பாண்ட்பாக்கெட்டில்கைவிட்டான், துப்பாக்கியை எடுத்தான்.


“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.தீபாவளிக்கு அக்காசுவாதியின் மகன் அச்சுதன் கேட்டான் என்று வாங்கின பொம்மைத்துப்பாக்கி தான் நிஜம்போலவே தத்ரூபமாயிருக்கவும் சொக்கநாதன் சோகநாதனாகி கை குவித்தார்.

’ஐயோ மகளைக்கொன்னுடாதே ’அலறினார் வில்லன்.

’அப்போ வழிவிடுங்க ’ என்று அதட்டினான் சிவா.

காரில் ஏறினார்கள் மூவரும்

’காரை தில்லைநகர் ஏழாம்கிராசுக்குகொண்டுபோங்க சீக்கிரம்’ என்று பரபரத்தாள் காமினி.

’எதுக்கு ?’

’சொல்றேன் அப்புறம் விவரம். இப்போ போகணும் அங்க முதல்ல’ என்றாள் காமினி அவள் அமமாவின் வயிற்றில் இருந்தபோது ஜூனூன் பார்த்த பாதிப்பில்

ஜோதிடபூஷணம் பரந்தாமன் என்ற போர்டு கொண்ட வீட்டுவாசலில்காரை நிறுத்தச்சொன்னாள்.

கார்நின்றதும் வேகமாய் இறங்கினாள் சேலைமுந்தானைமுடிச்சை அவிழ்த்து
ஒரு பொட்டலத்தை அவரிடம் கொடுத்தாள்.‘வர வழில போலீஸ் ஜீப் வேற நின்னுட்டு இருந்தது பயந்திட்டே இதை எடுத்துவந்தேன்” என்றாள் அவரிடம்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே
” என்று பாராட்டினார் பரந்தாமன்.



’சார் போலீசு கண்ல மண்தூவறது கஷ்டம இல்ல எங்கப்பா கண்ல மண்ணைத்தூவிட்டு இந்த வைரத்தை அவர் பொக்கிஷ ரூம்லிருந்துஎடுத்ததைப் பாராட்டுங்க’

’என்னது வைரம் ?’முழித்தான் பரத்

’இது ஒரு துர் அதிர்ஷட வைரமாம்! இது இருக்கற இடத்துல பெரும் துக்கம் சூழுமாம் மனசுல நல்ல எண்ணத்தையே வரவிடாதாம்.ஒரு வீட்டையே இடிச்சிதள்ளிடுமாம் ஒருவருஷம் முன்னாடியே . ஜோஸ்யர்பரந்தாமன் எங்கவீட்டுக்கு வந்தப்போ எங்கப்பா கிட்ட சொன்னாரு இது மஹாளய அமாவாசைக்கு முன்னாடி வைரத்தை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தலேன்னா பெரிய கெடுதல் நடக்கும் அப்பா அதை நம்பலஅவர் கம்ப்யூட்டர் ஜோதிடர் சிதம்பரம் என்பவர் சொன்னதை நம்பி இதை பொக்கிஷ அறைல வச்சி பூஜை செய்ய ஆரம்பிச்ச நாள் முதல் வீட்ல பசுமாடு செத்துப்போச்சி பாட்டி தடுக்கி விழுந்தாங்க பணம் திருட்டுப் போச்சி ஆனாலும் அப்பாவை சிதம்பரம் தன் கைப்பிடில வச்சிருக்காரு. நான் பரந்தாமனின் ஜோதிடத்தை நம்பினேன் அதான் அப்பாக்குத்தெரியாம கோலிக்குண்டு சைஸ்ல இருக்கற இதைசிரமப்பட்டு எடுத்து வந்தேன்.’

’கல் ஜோசியமா ? ஆகா இனிமே ஜோதிடர் பரந்தாமனுக்கு யோகம்தான்’ சிவா சிரித்தான்.

’கிண்டல்செய்யாதப்பா சில வைரம் அமோகமா அதிர்ஷ்டம் கொடுக்கும் ஆனா சில வைரம் வாழ்க்கையே அழிச்சிடும். எனக்கெதுக்கு இது, இப்பொ இந்த வைரத்தை உங்ககண்முன்னாடியே நான் அகண்டகாவேரிலவீசிடறேன்பாருங்க.. ’

’ரொம்ப நன்றி அப்போ நாங்க வரோம் ’ என மூவரும் கிளம்பினர்.

சொக்கநாதன் கடுப்புடன் வீட்டிற்கு வந்தபோது மனைவி வாயெல்லாம் சமீபத்தில் கட்டிக்கொண்ட பல்லோடு வரவேற்றாள்.

“ராகினி நம்ம பொண்ணை கூட்டி வந்துட்டாங்க காமினி மனசு மாறிட்டாங்க சமைக்கிறா பாட்டெல்லாம் பாடறா !” என்றாள்.

’அப்படியா?’

(ரோபோ) காமினியைப்பார்த்துக் கண் பனித்தார் சொக்கநாதன். ”அம்மாடி ! ஜோசியர் சிதம்பரம் சொல்ற வரனுக்கு உன்னைக்கட்டிதருவேன்மா நான் அதுவரை காத்திரு காமினி!” என்றார்

ஆயிற்று ஒருவாரம் ரோபோகாமினிக்கு வீட்டையும் மனிதர்களையும் பழக்கிவிட்டு ராகினி திரும்பிப்போயிருந்தாள்.

அன்று பத்திரிகை செய்தியாக குடும்ப ஜோதிடர் சிதம்பரம் தனது போலி ஜோதிடத்தொழில் காரணமாய் பலரை ஏமாற்றியதில் போலீசில் மாட்டிக்கொண்டதை படித்தார்.

’அடப்பாவிமனுஷா! பெரிய கம்ப்யூட்டர் ஜோதிடன்னு சொல்லி என்கிட்ட ஏதோ வைரத்தைக்கொடுத்து உசத்தியானதுன்னு பல லட்சம் ரூபாயை வாங்கிக்கிட்டே! வீட்ல பொக்கிஷமா பாதுக்காக சொன்னே!அந்த வைரம் வீட்ல இருக்கக்கூடாது கெடுதல் நடக்கும்னு ஆப்த நண்பன் ஜோதிடன் பரந்தாமன் சொன்னதை நான் கேட்கல.உன் பேச்சை நம்பி அந்த வைரத்தை வீட்லயே வச்சிருந்தேன் மகளையும் அவள் ஆசைப்பட்டவனுக்குக்கட்டித்தரக்கூடாதுன்னு நீ சொன்னதையும் கேட்டேன் நீயே இப்போ போலின்னு தெரிஞ்ச பிறகு எனக்கு அந்த அதிர்ஷ்டமில்லாத வைரம் வேண்டாம் கைவிட்டுப்போன மகளுக்கு அவள் விரும்பினவனையே கட்டிதந்துடப்போறேன் ’ என்று பேப்பரை மூடிவிட்டு ’அம்மா காமினி காமினி’ என்று மகளின் அறைக்கு ஓடினார்

லோ பேட்டரியின் காரணமாக ரோபோ காமினி அங்கே படுக்கையில் அசையாமல் கிடக்கவும் பதறிப்போனவர் ரோபோமகளை அள்ளி எடுத்து காரில் கிடத்தி ஆஸ்பித்திரி நோக்கி விரைந்தார்.


ஆத்மா நர்சிங் ஹோம்.

மறுபடி ஆஸ்துமா தொல்லை காரணமாய் அங்கே நிஜக்காமினி அட்மிட் ஆகி இருக்க அவளைப்பார்த்து திடுக்கிட்டார் சொக்கநாதன் ’ காமினி காமினி’ என இருமுறை அலறினார்.

அதற்குமேலும் அப்பாவை ஏமாற்ற மனமில்லாத காமினி நடந்ததைச்சொல்லிவிட்டாள்.

’ரெஜிஸ்டர் கல்யாணம்தானே ஆகி இருக்கு பரவால்லமா நான் ஊரைக்கூட்டி எட்டுப்பட்டிஜனங்களையும் வரவழைச்சி ஜோரா கண்ணாலம் செய்துடறேன்’ என்றார்.

பேட்டரி சார்ஜ் ஆகி எழுந்து உட்கார்ந்த ரோபோகாமினி,”அப்போ நான்?” என்று கண்கலங்க,” அம்மாடி நீ எப்போதும் என்கூட கிராமத்துலயே இருக்கலாம்மா” என்ற சொக்கநாதனிடம் ,”ஸாரி மாமா...ரோபோ காமினியை உங்களால் கவனிச்சிக்கமுடியாது. நான் சென்னைக்கு கூட்டிட்டுப்போய் என் ஆராய்ச்சி சாலைல வச்சிக்கணும்” என்றான்

மாப்பிள்ளை ! அப்போ நாங்களும் கிராமத்தைவிட்டு சென்னைக்கே வந்துடறோம் எங்களால சொந்தமகளைக்கூடப்பிரிஞ்சி இருக்கமுடியும் ஆனா.. ஆனா.. ரோபோங்கறீங்களே இவளைவிட்டுப்பிரியமுடியாதுப்பா”

என்று அழ ஆரம்பித்தவரை அருகில்போய் தேற்ற ஆரம்பித்தார்கள் காமினிகள்!

--
மேலும் படிக்க... "காதல்ரோபோ(சவால் சிறுகதைப்போட்டி)"

Thursday, October 14, 2010

தசரா யானைகளின் அவஸ்தைகள்.




மைசூர் தசராவில் முக்கிய அம்சமாய் இடம் பெறுவது 'ஜம்புசவாரி' எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவைகளின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுக்களும்.

நாகரஹோலே காட்டிலிருந்து மைசூருக்கு 70 கிலோமீட்டர் கஜபயணம் நடைபெறும். 'பலராமா' என்ற யானையின் தலைமையில்
மற்ற யானைகள் தசராவிற்கு ஒருவாரம் முன்பாகவே மைசூர் அரண்மனை வாயிலுக்கு வந்துநிற்பது வழக்கம்.


பலராமா எனப்படும் மூத்த யானைக்கு தங்க முகப்படாம் அணிவிக்கப்படும்.
(இந்த வருஷம் பலராமன் பலமில்லாராமனாய் உடம்பு சரி இல்லாமல் இருப்பதாக் சொல்கிறார்கள்)
இதனால் யானை, மற்றவர்கள் பார்வையைக் கவர்ந்தாலும், படும்அவஸ்தையை அந்த யானைதான் உணரும்.

தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்தினால் வலி இல்லாமல் போகுமா?
அதுபோலத் தான். 750கிலோ எடை உள்ள சுமையான தங்கக் கவசம் அதன் வயோதிக உடலை வேதனைப்படுத்துவதை மிகச் சிலரே உணரமுடியும். இதே
அவஸ்தை தான் மற்ற யானைகளுக்கும், மைசூர்நகரத்தின் சந்தடித்தெருக்களீல் ஆறுகிலோமீட்டர் நெருசல்களினிடையே அவை பாகனின் கட்டளைக்கு பயந்து நடக்கும்.

தசரா வைபவத்தையொட்டி யானைகள் காட்டிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. அவைகளை ஒத்திகையின்போதே நகரத்தின் தார் சாலையில் ஏறத்தாழ 40கிலோமீட்டர் தினமும் நடந்து செல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. காட்டின் அமைதியான சூழ்நிலையில் மிருதுவான சாலைகளில் நடந்துபழக்கப்பட்ட யானைகள் தார்சாலையின் காலடியில் கண்ணாடிச்சில்லுகள் குத்தியெடுக்க சிரமப்பட்டு நடப்பது
வேதனை. தினமும் 750 கிலோ எடை உள்ள தங்க முகப்படாமுடன் தலைமை யானை, பயிற்சிக்குச் செல்லவேண்டும். தினமும் சூரியவெப்பத்தின்கீழ் பாகனின் அங்குசத்திற்கு அடிபணிந்து அவஸ்தைகளை அழுத்திக்கொண்டு யானை
நிற்பது பரிதாபக் காட்சி.

அணிவகுப்பின்போது யானைகள் கூட்டதினரின் கூச்சலுக்கும் வானவேடிக்கை ஒலிக்கும் மிரண்டு சற்றே முரண்டு செய்தால் பாகனின் ஆயுதம் அவைகளின் உடலைப் பதம் பார்க்கும் அவைகளின் உடல் அழுத்தம் நீங்க அவ்வப்போது ரம், ஒப்பியம் அளிக்கிறார்கள், இது உடல்நலக்கேட்டை விளைவிக்கும் என அறியாமல்.

அணிவகுப்பிற்கென்றே அவைகளுக்கு செயற்கையாய் அலங்காரங்கள் செய்யப்பட அதற்கு 10லிருந்து 12 மணிநேரவிரயம். இதற்கு சம்மதிக்காத யானைகள் பாகனின் அங்குச மிரட்டலில் அடிபணிகின்றன.


வனவாழ்வுநலப்பாதுகாப்பு அமைப்பு (Wildlife Rescue and Rehabilitation Centre (WRRC) தலைமைப் பொறுப்பிலிருக்கும் சுபர்ணாபக்ஷி கங்குலி சொல்கிறார், "வனவிலங்கு நல்வாழ் உரிமைச் சட்டப்படி எந்த யானைக்கும் 400கிலோ எடைக்குமேல் பாரம் சுமக்க
அனுமதி இல்லை.காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட யானைகள் இந்தியா முழுவதும் மொத்தமாக 3000 வரை இருக்கலாம், இதில்
கேரளாவிலிருந்து மட்டுமே 800 யானைகளாம். பிடிக்கப்பட்டயானைகள் ஜெய்ப்பூரில் சுற்றுலாவாரியத்தில் 87ம், ராஜஸ்தானில் அம்பேர்கோட்டையின்கடின சாலையில் சுற்றுலா பயணிகளை சுமக்க 120 யானைகளும் உள்ளனவாம்.
தவிரகோயில்களுக்கு சில கொடுக்கப்படுகின்றன. கோயில் யானைகள் சங்கிலியால்பிணைக்கப்பட்டு கான்க்ரீட் தரையில் அதன் பாதம் பதிய நிற்கவைக்கப்
படுகிறது. இதை வனத்தில் வாழ்ந்த எந்த மிருகமும் தாங்கிக் கொள்ளாது. அரசுதான் இதைக் கருத்தில் கொண்டு கவனிக்கவேண்டும்" என்கிறார்.

தசரா கமிட்டிக்கும் Department Of Wildlife Rescue and Rehabilitation Centre (WRRC)- க்கும் சில ஆலோசனைகளை வைத்தாயிற்று.

1. தசரா நேரத்தில் யானைகளை உபயோகிப்பதை நிறுத்தவேண்டும்.

2. யானைகளுக்கு, சுமையான முகப்படாம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3, 20 அல்லது 30 கிலோ எடைக்குமேல் உள்ள மர உருளைகளை யானைகள் தூக்கக்கூடாது.

4. யானைகளின்மீது வண்ணமிட்டு அலங்கரிப்பது கூடாது.

5. வன்மையான பயிற்சிகளைத் தடை செய்யவேண்டும்.

2003ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் மட்டும் யானைக் கலவரம் மூன்று முறை நடந்தது. அதில் கொச்சினில் கோயில் விழாவுக்குச் செல்லும் வழியில் பாகனைக் கொன்ற நிகழ்ச்சி மிகவும் வேதனையானது. அமைதியான மனித சஞ்சாரமற்ற
காட்டின் இயற்கைச் சூழலிலிருந்து நகரத்திற்கு கொண்டுவரப்படும் விலங்குகள் வன்மையாகவும் கொடூரமாகவும் செயல்படக் காரணம் அவற்றிற்கு நகரத்தின்
சந்தடியும் தங்களது தனிமை பறிபோவதாலும்தான்.
அன்று 'ஆதிமூலமே' என்று கஜேந்திரன் என்னும் யானை கத்தியதும் ஆண்டவன் ஓடிவந்து காப்பாற்றினார்;
இன்று அரசு அதைச் செய்யுமா?

இதோ மைசூரில் தசரா திருவிழா ஆரம்பமாகிவிட்டன!.
'மைசூருதசரா எஷ்டந்து சுந்தரா?' (மைசூரின் தசராப்பண்டிகை, எத்தனை அழகு!’
என்று ஒலிபெருக்கியில் பாடல் வீறிடுகிறது.

பயிற்சி யானைகள் அணிவகுப்புப் பாதைகளில் நடக்கத் தயாராகிவிட்டன!




--
மேலும் படிக்க... "தசரா யானைகளின் அவஸ்தைகள்."

Thursday, October 07, 2010

நவராத்திரி தகவல்1 செய்குதம்பி பாவலர்.

ஒரு நவராத்திரி விழாவில் சதாவதானி செய்குதம்பி பாவலரை அவரது நண்பர் இட்டாபார்த்தசாரதி நாயுடு என்பவர் பாடும்படி கேட்டபோது

“உருமகளை அயன் நாவில் உறைபவளை
பொறை மகளை உலகுக்கெல்லாம்
குருமகளை அன்பர் புகழ் குலமகளை
மலர்மகளை குறைதீர் செல்வத்
திருமகளின் மருமகளை நிலமகட்கும்
கலைமகளை செவ்வி வாய்ந்த
ஒரு மகளை எனக்கருள வருமகளை
பெருமகளை உன்னல் செய்வாய்!”

என்று பாடலைப்பாடினார்.

இந்து தெய்வத்தை இதுபோன்று எதுகை மோனையுடன் பாடிய இஸ்லாமியப்பெரியவர் செய்குதம்பி பாவலரின் நாவன்மையும் பாவன்மையும் அவர்தம் பெருந்தன்மையைப்போலவே சிறப்பாக இருக்கிறது அல்லவா?

இதை இங்கே உங்களுக்கு அளித்தவர்.....:)

ஷைலஜா(எ) மலைமகள்
மேலும் படிக்க... "நவராத்திரி தகவல்1 செய்குதம்பி பாவலர்."

Wednesday, September 15, 2010

இதயங்களில் இன்றும் இருப்பவர்!





இன்று வாழ் சமுதாய்ச் சிறப்பெலாம்
எழில் படங்களாய் வார்த்திட்ட வித்தகர்
ஒன்றினோடொன்று மாறுபற்றிடும்
உலகமக்களின் உள்ளங்கள் ஆய்ந்தவர்
வென்றிபெற்றிடும் மானிடன் மாட்சியும்
வீழ்ச்சியுற்றிடும் தாழ்ச்சியும் கண்டவர்
என்றும் வாழும் தமிழிலக்கியம் தந்தவர்
இதயங்களில் இன்றும் இருப்பவர்!


மனிதர் மேல் அபிமானம் மிகுந்தவர்
மாநிலமுதலமைச்சர் பதவிவகித்தவர்
கனவு கொண்டிடும் நற்றமிழ் வாழ்வுறக்
கதை கவிதைகள் பலவும் படைத்தவர்
புனிதமாம் சமுதாயம்பிறந்திடப்
புதினம் பற்பல நன்கு அளித்தவர்
இனிமையே உருவாகவேவிளங்கியவர்
இதயங்களிலே இன்று இசைந்தே இருப்பவர்!



காவிரி வெள்ளமென களிமணம் கொண்டவர்
கலைகள் யாவினும் ரசனை மிகுந்தவர்
பூவினைப்போன்றுள மென்மனம் வாய்த்தவர்
பொருந்து நண்பரைத்தோளொடு அணைப்பவர்
நாவினாலுரைத் தேனினை வார்த்தவர்
நாடு முற்றும் புகழ்பெறத் திகழ்ந்தவர்
யாவும் செய்யும் பேனாவினை ஆணடவர்
யாவரும் போற்றும் தலைவராய் இருப்பவர்!

--~--~---------~--~----~------------~-------~--~----~
மேலும் படிக்க... "இதயங்களில் இன்றும் இருப்பவர்!"

Saturday, September 11, 2010

தாலாட்டு பாடாத பாரதி!




கனக்கும் செல்வமும் நூறுவயதும் கணபதியிடன் தரவேண்டிப் பாடியவன்!அமுதம்தரவேண்டி அன்னை சக்தியின் தாள் பணிந்தவன்! கனக்கும் செல்வத்தையும் அவன் காணவில்லை அன்னையிடம் அமுதம்பெற்று ஆயுள் நீண்டு வாழவுமில்லை. ஆனாலும் சத்தியமாய் உரைத்திட்ட அவனது சாகாவரிகளில் நித்தியம் வீற்றிருப்பான் பாரதி!


உணவின்றி ஒருமனிதன் பசித்திருந்தாலும்கூட உலகினை அழிப்பதுதான் சரியென்று சொன்னவன். ஜாதியில் பேதம் சொன்ன பாவிகளைப்பார்த்து சவுக்கடியாய் அவன் கேட்ட கேள்விகளில் தலைகுனிந்தது அந்தக்கூட்டம். அடுப்பூதப் பிறந்தவளா ஆரணங்கு அவள் மகத்துவத்திற்குத் தலைவணங்கு என்றான் மகாகவி!

காக்கையும் குருவியும் உறவென்று சொல்லிக்களிநடம்புரிந்தவன் எரியும் தீக்குள் விரலைவைத்தால் அது தெய்வத்தின் தீண்டலான இன்பம் என்று உணர்ந்து உரைத்தவன்!

நிலைகெட்ட மனிதரை நினைத்துக்கொதித்தவன், நெஞ்சு பொறுப்பதில்லையே என்று துடித்தவன்! எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று இயற்கை அழகினில் மனத்தை பறிகொடுத்தவன்!

ஒருநாள் பாரதி தெருவில் நடந்துபோய்க்கொண்டிருந்தான் அப்போது ஒருவீட்டில் அழும் குழந்தையை வாய்வார்த்தைபேசி சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள் அது கேட்கவில்லை வீறிட்டு அழுதபடியே இருக்கவும் வீட்டின் உள்ளிருந்த ஒரு வயதான பெண்மணி வாசலுக்குவந்தவள் நடந்துபோகும் பாரதியைப்பார்த்தாள்

“அப்பா பாரதி! இந்தக்குழந்தை ஓயாமல் அழுகிறது இதைதூங்க வைக்க நீ ஒரு தாலாட்டுப்பாடேன்” என்று கேட்டுக்கொண்டாள்.

அதற்கு பாரதி,”தமிழர்கள் எல்லாரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் அதனால் நான் தாலாட்டுப்பாடமாட்டேன். தூங்குவோரை எழுப்பும் சக்தி கொண்டபாடல்களையே பாட விரும்புகிறேன்” என்று கூறி பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி பாடினார்.

கடைசிவரை பாரதி ஒரு தாலாட்டுப்பாடல்கூட பாடவில்லை!
மேலும் படிக்க... "தாலாட்டு பாடாத பாரதி!"

Thursday, September 09, 2010

மலர்போல மனம் வேண்டும்!






செப்டம்பர்1ம்தேதி குங்குமச்சிமிழ் நாவல் மலர்போல மனம் வேண்டும் !

சில கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த புத்தகத்தின் விலை ஐந்துரூபாய்க்குள்தான்! நான் எழுதி இருப்பதால் உடனே வாங்கிப்படிக்கணும் என்ன?!(எப்படில்லாம் அதட்டி உருட்டி படிக்கவைக்கவேண்டி இருக்குப்பா?!

இம்மாதம் கலைமகள் பெண்மணி மாத இதழ்களிலும் சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கு ! யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!
இதை அறிவிக்கவே இந்தப்பதிவு!!
எங்கே யார் ஃபஸ்ட் கடைக்குபோயி புக் வாங்கிப்படிச்சி பின்னூட்டம் இடப்போறீங்க?!
மேலும் படிக்க... "மலர்போல மனம் வேண்டும்!"

Saturday, September 04, 2010

வேருக்கு விழா!

ஆசிரியர்தினம் வருவதற்கு முன்பே சிறந்தஆசிரியர்களுக்கான விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்.

சென்னையில் நடந்த ‘அன்புள்ள ஆசிரியர்க்கு’என்ற இந்த நிகழ்ச்சியில் விருது வாங்கிய 14 ஆசிரியர்களில் 7பேர் பெண்கள் என்பது இன்னொரு சிறப்பு!

இவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சிப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள். இவர்கள் கடந்த ஆண்டு தனியார்பள்ளிகளுக்கு இணையாக 10மட்டும் 12ம் வகுப்பு பொதுதேர்வுகளில் தேர்ச்சி சதவீததை சாதித்துள்ளார்கள்.

ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவதாக சொன்ன ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முரளி தன்னுடைய பள்ளிப்பருவ அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவரதுபேச்சு தனது ஆசிரியர்கள்மீது அவர் வைத்திருந்த அன்பை உணர்த்துவதாக இருந்தது

மனதைத்தொடும் ஒரு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார் தன் பேச்சில்.

ஒருமுறை தனது ஆசிரியரின் பிறந்தநாளை ஞாபகம் வைத்து அதனை பத்திரிகை ஒன்றில்புகைப்படத்துடன் அளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

படத்தைக்கண்ட் பல நண்பர்களுக்குப் பழையநினைவுகளை அது கிளறிவிட அவர்களும் ஆசிரியருக்கு உடனே போனில் வாழ்த்துசொன்னார்களாம் !ஆசிரியர் நெகிழ்ந்துபோய்விட்டாராம்.


இதைத் தொடர்ந்து ஒவ்வொருவருடமும் இவருடைய நண்பர்கள் ஆசிரியரின்பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்களாம்! இதைச் சொன்ன முரளி மாணவர்களும் ஆசிரியர்களை தங்கள் வாழ்நாளில் மறவாமல் இருக்க வேண்டும் என்றார். ஆசிரியர்களும் மாணவரிடம் அன்போடும் பரிவோடும் நடந்துகொள்ளவேண்டும் அப்போதுதான் சிறந்தகுடிமகனாக ஒரு மாணவன் உருவாகமுடியுமென்றார்.

சென்னை ஐஐடியின் துணைப்பதிவாளர் சூர்யகுமாரும் ஆசிரியரின்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்தினார் .விருதுபெற்ற் ஆசிரியர்களுக்கு மறகக்முடியாதபொன்னாளாக அன்றைய தினம் அமைந்தது .

சிலமாதங்கள் முன்பு வாழ்ககையில்வெற்றிபெற்ற பிரபலங்களின் அன்னையர்களை கௌரவித்தது இதே கிருஷ்ணாஸ்வீட்ஸ் நிறுவனம் .அதனை தொலைக்காட்சி ஒன்றில் பிறகு காண்பித்தார்கள். இப்போது நாளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களை கௌரவிக்க விழா எடுத்திருப்பது வேர்களை என்றும் நினைவுபடுத்துவதாக இருக்கிறது!
மேலும் படிக்க... "வேருக்கு விழா!"

Tuesday, August 10, 2010

தத்து.(சிறுகதை)

தத்து..

சிறுகதை
முகு!
(ஆகஸ்ட் நம்தோழி மாத இதழில் இந்தசின்ன கதை வந்துள்ளது!(பின்குறிப்பும் பாருங்க!)



அந்த தனியார் தொலைக்காட்சி நிலையத்திற்கு ரசிகாவுடன் போய் நாற்காலியில் உட்காருகிறேன்..


ரசிகா?

என் குழந்தைதான் .ஒன்றேகால்வயது ஆகிறது. என்குழந்தை என்றேனே தவிர அதை நான் பெற்றேன் என்று சொல்லவரவில்லை..ஆமாம் தத்துக்குழந்தைதான்..முதலில் நான் பெற்ற மகன் நாலுவயதில் இருக்கிறான்.இரண்டாவதாக தத்து எடுத்து ஒரு அனாதைக்குழந்தையை வளர்ப்பதென நானும் என்கணவரும் தீர்மானித்தோம் அதன்படி தத்து எடுத்துக்கொண்ட விவரம் அறிந்து அதனைப்பாராட்டி தொலைக்காட்சியில் அதுபற்றி பேட்டி எடுக்க என்னைப்போல சிலரை இன்று அழைத்திருக்கிறார்கள்.

பிறந்தோம் வளர்ந்தோம் என்று இருக்கலாமா என்ன ஏதாவது சாதனையாய் செய்யவேண்டாமா? அதிலும் சமூகத்திற்கு உதவியாக செய்யவேண்டும் என்றுதான் நான் இந்த தத்து விஷயத்திற்குய் சம்ம்மதித்தேன்.

மொத்தம் பதினாலுபேர் வந்திருந்தோம்.அதில் ஒரு பெண்மணி- வயது என்னைப்போல முப்பதுகளில் தெரிந்தாள்- தனியே வந்திருந்தாள். அவளையும் எங்களோடு நிகழ்ச்சி அமைப்பாளர் உட்காரவைத்தது எனக்கு நெருடலாக இருந்தது.

அருகில் மடியில் சிறுகுழந்தையோடு அம்ர்ந்திருந்தவளிடம் சொன்னேன்”யார் அந்த அம்மா அவங்க நம்மைமாதிரி தத்து எடுத்து வளக்கிற நல்லமனசுக்காரங்களா என்ன? தனியே கையைக்கட்டிட்டுவந்திருக்கா அவளைப்போய் நம்மகூட உக்காத்திட்டுப்பொயிருக்காங்களே?” என்று புலம்பிவிட்டேன்.

குழந்தையை தோளுக்கு மாற்றியபடி அந்தப்பெண்மணி சொன்னாள்
“அம்மா! இந்தக்குழந்தையை அவங்கதான் தத்து எடுத்துருக்காங்க”

“என்ன நிஜமாவா? அப்போ நீங்க ஏன் குழந்தையோட உக்காந்திருக்கீங்க அவங்க கைல கொடுக்கவேண்டியதுதானே?”

“அவங்க என்னையும் தத்து எடுத்திருக்காங்கம்மா... எய்ட்ஸ் நோய்ல முத்தின நிலமைல இருக்கற நான் பெத்த எய்ட்ஸ் நோய் உளள குழந்தைதான்மா இந்தக்குழந்தையும். தத்து எடுக்கிறதுலயே வித்தியாச சாதனை செய்திருக்கிற அவங்களை என்னையும் பேசவச்சி பேட்டி எடுக்கபோறாங்க......கல்யாணம் செஞ்சிட்டும் தான் குழந்தைபெத்துக்காம இப்படி எய்ட்ஸ் உள்ளகுழந்தையை தத்து எடுத்து உறவு ஜனத்தால் ஒதுக்கப்பட்ட என்னையும் தத்து எடுத்து பேணி வளக்கிற தெய்வம்மா அவங்க”


அந்தப்பெண் கண்கலங்கியபோது கர்வத்தில் நிமிர்ந்திருந்த என் தலையும் சட்டென குனிகிறது.
*************************************************************************

(நம்தோழி மாத இதழுடன் இலவச இணைப்பாக ஒரு சிடி தராங்க அதுல நல்ல சிறுகதைகள் புதுமைப்பித்தன் போன்றோர் எழுதினதை குரல்வழி கொடுக்கிறாங்க மேலும் ஒருஆன்மீக சொற்பொழிவும் இருக்கு கேட்க இனிமையான சிடி இது.
இன்னொரு இலவச இணைப்பாக சமையல்குறிப்பு புத்தகம் வருது இம்மாதம் கர்னாடக சமையல் என்னும் தலைப்பில் 6 கன்னடவாசனை அடிக்கிற சமையலை எழுதி இருக்கேன்.
அது என்னோட இன்னொரு பெயர்ல! போட்டோல்லாம் போட்டு கலக்கி இருக்காங்க!(பாக்றவங்கதான கலங்கணும்?!)
மேலும் படிக்க... "தத்து.(சிறுகதை)"

Saturday, July 03, 2010

மங்களூர்விமானவிபத்தும், மனதில் உதித்தகதையும்.



மங்களூர்விமான விபத்தின் சோகம் இன்னமும் யார்மனதையும் விட்டு அகன்றிருக்காது. தீயில் கருகிய மொட்டுக்களும் மலர்களும் சருகுகளும் விட்டுச்சென்ற ஞாபக வாசனை
பல நாட்களுக்கு நம்மிடம் சுழன்று கொண்டு இருக்கும்.

எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகளோடு யாரையாரையெல்லாம் சந்திக்கப்போகிறோம் என்ற மனமகிழ்ச்சியோடு அவர்கள் அன்று புறப்பட்டார்களோ?

சாலையில் ஒரு ரோஜாப்பூ கீழே கிடந்தாலும் அது யார்கூந்தலிலிருந்துவிழுந்ததோ என்று உதிரிப்பூவிற்காய் ஊசலாடும் நம் மனம், உயிரற்ற சடலங்களை கரிக்கட்டைகளாய் அன்று தொலைக்காட்சியில்பார்த்தபோது யார்பெற்ற பிள்ளையோ யாருடைய நேசத்துக்குரியவர்களோ என்றே தவித்துப்போனது.

கருப்புக்காட்டில் பூத்த அழகிய ரோஜாவாய் விபத்தில் தீயின் கோரப்பிடியிலிருந்தும் தப்பித்த அந்தப்பொருளையும் அன்று டிவி9என்னும் உள்ளூர் சானலில் காட்டினார்கள்.

ரோஜா வண்ணத்தில் அழகிய கைப்பைதான் அது! பெண்கள் உபயோகிக்கும் அந்தக் கைப்பை , தீயில் கருகாமல் கைப்பிடியில்மட்டும் லேசான காயங்களுடன் தெரிந்தது. அதனை ஒரு கோலில் எடுத்து உயரத்தூக்கிப்பிடித்து எடுத்துப்போட்டதை பலமுறை அன்று ஒளிபரப்பினார்கள்.

பார்த்துக்கொண்டே இருந்த போது அந்தக்கைப்பையின் பின்னணிக்கதை என்னவாக இருக்கும் என்று நினைத்தேன் .

எதையுமே இழந்த பிறகு அதன் மதிப்பு இரட்டிப்பாகும் என்று ஒரு அறிஞர் சொல்லியதுபோல
அந்தக்கைப்பை தன்னை வைத்துக்கொண்டிருந்தவரின் அருகாமையை இழந்து அனாதையாய் தவிப்பதுபோல தோன்றவும் அதன்மீதான என் பார்வை வித்தியாசமாகிப் போக ஆரம்பித்தது.

அதன்பாதிப்புதான் இந்த சிறுகதை! படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்!
(தேவி 07-07-2010 இந்தவாரம் வந்துள்ளது இந்தக்கதை!)








மேலும் படிக்க... "மங்களூர்விமானவிபத்தும், மனதில் உதித்தகதையும்."

Wednesday, May 05, 2010

தென்றல் வந்ததா சேதி சொன்னதா?!

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தமிழ் இதழான தென்றல் எனும் மாதப்பத்திரிகையில் இந்தமாதம் எனது நேர்காணல் வந்துள்ளது! இலங்கையின் வீரகேசரி இதழுக்குப்பிறகு ஒரு வெளிநாட்டுப்பத்திரிகையில் என் நேர்காணல் வருவது மிகவும் மகிழ்ச்சியைத்தருகிறது!

http://www.tamilonline.com/thendral/Contentnew.aspx?id=114&cid=2

இந்தச்சுட்டில இருக்கு...எதுக்கும் அங்க இருப்பதை இங்கயும் அப்படியே அளிக்கறேன்போட்டோ மட்டும் என்னவோ வரவில்லை(தப்பிச்சீங்க)!

///////
நவீன கதைப்போக்குக்கு ஏற்றவாறு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காத்திரமான படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர் ஷைலஜா.

திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் பிறந்த ஷைலஜாவின் இயற்பெயர் மைதிலி. தந்தை பிரபல எழுத்தாளர் ஏ.எஸ். ராகவன். பள்ளிப்படிப்பு ஸ்ரீரங்கத்தில். அப்போதே ஆனந்த விகடனுக்கு ஒரு நகைச்சுவைத் துணுக்கை எழுதி அனுப்ப, அது உடனடியாகப் பிரசுரமாக, அதுவே ஷைலஜாவின் எழுத்தார்வத்துக்குப் பிள்ளையார் சுழி ஆனது. திருச்சி எழுத்தாளர் சங்கத்திற்குத் தந்தையுடன் சென்று பல எழுத்தாளர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டதில் எழுத்தார்வம் கொழுந்து விட்டது. வீட்டுக்கு வருகை தந்த சாவி, மணியன், ஜெயகாந்தன் போன்ற பல பிரபலங்களைச் சந்திக்க முடிந்ததும் சிறுவயதிலேயே ஷைலஜாவுக்கு எழுத்தின் மீதான காதலை அதிகரிக்கச் செய்தது.

பள்ளியில் நாடகங்களுக்கு கதை-வசனம் எழுதியதுடன் தொடர்ந்து கதை, கவிதை எழுத ஆரம்பித்தார். கல்லூரியில் படிக்கும்போது எழுதிய நகைச்சுவைக் கட்டுரை விகடனில் பிரசுரமானது. அது எழுத்தில் தன்னம்பிக்கையை அளித்தது. முதல் சிறுகதை குமுதம் இதழில் 1983ல் வெளியானது. அதற்கு கிடைத்த வரவேற்பில் இவரது பேனா சுறுசுறுப்படைந்தது. விகடனில் வெளியான 'வானைத்தொடலாம் வா' என்ற இவரது தொடர்கதைக்குச் சிறப்புப் பரிசு கிடைத்ததுடன் பிரபல எழுத்தாளர்கள் முன்னிலையில் பாராட்டு விழாவும் நடந்தது. தொடர்ந்து கல்கி, கலைமகள், அமுதசுரபி, தினமலர் போன்ற இதழ்களில் எழுதினார். இணையத்திலும், மடற்குழுக்களிலும் கதை, கவிதை, கட்டுரைகள் என்று கலக்கத் தொடங்கினார்.

இதுவரை 225 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 4 தொடர்கதைகள் மற்றும் எண்ணற்ற கவிதை, கட்டுரை, நாடகங்களை எழுதியிருக்கும் ஷைலஜா, தான் எழுத ஆரம்பித்த நாளில் தந்தையார் ஊக்கம் தந்திருக்காவிட்டால் தொடர்ந்து எழுதியிருக்கச் சாத்தியமே இல்லை என்கிறார்.

வாழ்க்கையின் லட்சியம் எதுவோ அதைத்தான் இலக்கியம் என்று தாம் கருதுவதாகக் கூறும் இவர், வாழ்க்கையும் இலக்கியமும் வேறல்ல என்றே தமக்குத் தோன்றுவதாகக் கூறுகிறார். "அப்பாவின் சில சிறுகதைகளை இப்போது படித்தாலும் அந்தக் கதைகளில் ஜீவன் இருப்பதை உணரமுடியும். எத்தனையோ கதைகள் இருந்தாலும் 'அம்மா' என்ற என் அப்பாவின் சிறுகதை தந்திருக்கும் பாதிப்புதான் எனக்கு இன்னமும் உந்துசக்தியாகச் செயல்படுகிறது" என்று கூறும் இவர், லாசராவில் ஆரம்பித்து, குபரா, திஜார, சுஜாதா, ஆர். சூடாமணி, வசுமதி ராமஸ்வாமி, ராஜம் கிருஷ்ணன், மேலாண்மை பொன்னுச்சாமி, பிரபஞ்சன், இரா. முருகன், உஷா சுப்ரமணியன், எஸ் ராமகிருஷ்ணன், அழகியபெரியவன் என பலரது எழுத்துக்கள் தன்னைக் கவர்வதாகச் சொல்கிறார்.

ஷைலஜாவின் எழுத்துக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிப்பது தம் கணவர்தாம் என்று கூறும் ஷைலஜா, பிரபல எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்திரராஜன், இலக்கியபீடம் விக்கிரமன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் போன்றோரது அக்கறையும், ஊக்குவித்தலும் தம்மைத் தொடர்ந்து உற்சாகத்தோடு இயங்கச் செய்கிறது என்கிறார்.

"கலைமகள் பத்திரிகையில் அமரர் கி.வா. ஜகந்நாதன் சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்ற எனது 'சருகு' சிறுகதைக்கு, முதியோர் இல்லத்திலிருந்து ஒரு பெண்மணி நெகிழ்ச்சியுடன் எழுதிய விமர்சனக் கடிதத்தை மறக்க முடியாத பாராட்டாகக் கருதுகிறேன்" என்று கூறும் ஷைலஜா, அரங்கன் கோயில், ஆழ்வார் பாடல்கள், ஆண்டாள் பாசுரங்கள், அகண்ட காவிரி, தெளிந்த கொள்ளிடம், தெற்கு வாசல் என்ற பசுமையான ஊர்ச் சுவைகளே இன்றும் தனது எழுத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதாகக் கூறுகிறார்.


தினபூமி, தினச்சுடர், மாலைமதி, குடும்ப நாவல், குங்குமச் சிமிழ் என பல மாத இதழ்களில் இவரது நாவல்கள் வெளியாகியுள்ளன. 'திரும்பத் திரும்ப' என்னும் சிறுகதைத் தொகுப்பு திருமகள் வெளியீடாக வெளியாகியுள்ளது. பல சிறுகதைத் தொகுப்புகளிலும் இவரது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. திரிசக்தி பதிப்பகம் 'அவனும் இவனும்' என்ற சிறுகதைத் தொகுப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. இவரது இரு சிறுகதைகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி, இலக்கியபீடம் சிறுகதைப் போட்டி, தினமலர் சிறுகதைப் போட்டி, கலைமகள் கிவாஜ சிறுகதைப் போட்டி எனப் பல போட்டிகளில் பரிசு வென்றிருக்கும் ஷைலஜா, இணையத்தில் மரத்தடி, தமிழுலகம் ஆகியவை நடத்திய கதை, கவிதைப் போட்டிகளிலும் பரிசு வென்றதுண்டு.

விக்கிரமன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'இலக்கியபீடம்' இதழ் நடத்திய அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய 'திக்குத் தெரியாத காட்டில்' என்னும் நாவலுக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது. விளம்பரப் படங்கள் மற்றும் குறும் படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துவரும் ஷைலஜா, இணைய வானொலியில் சிலகாலம் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இசை, ரங்கோலி, ஓவியத்தில் அளவற்ற ஈடுபாடு உண்டு. மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் அனைத்துத் தமிழ் நாடக மன்றங்களுக்கான நாடகப் போட்டியில் இவர் நடித்ததற்குச் சிறந்த நடிகைக்கான முதல் பரிசு கிடைத்திருக்கிறது. கோவை, திருச்சி, பெங்களூரு வானொலிகளில் இவரது படைப்புகள் ஒலிபரப்பாகியுள்ளன. பொதிகைத் தொலைக்காட்சியில் சித்தர்கள் பற்றிய கலந்துரையாடலில் பதினெட்டு வாரங்கள் கலந்துகொண்டிருக்கிறார்.

நிறைவாக இன்னும் எதுவும் எழுதவில்லை எனும் நெருடல் இருக்கிறது என்று கூறும் ஷைலஜா, "சொற்களையே சார்ந்திருக்கும் எழுத்துத் துறையில், அனைவரும் பாராட்டி வியக்கும்படியான சிறப்பான சிறுகதை ஒன்றைப் படைக்கவேண்டும், அது மொழி எல்லையைக் கடந்து எல்லாருடைய மனங்களையும் ஊடுருவிச் செல்லவேண்டும், காலத்தால் அழியாத கலைப் படைப்பாய் இருக்கவேண்டும். இதுவே எனது லட்சியம்" என்கிறார்.

கணவர், குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வரும் ஷைலஜா, அங்குள்ள கன்னட அமைப்பினருடன் இணைந்து சமூகப் பணிகளும் ஆற்றுகிறார். "பெண்கள் அழுமூஞ்சிகள். அவர்களால் நகைச்சுவை எழுதமுடியாது என்ற பொதுவான கருத்தை என் எழுத்தின் மூலம் மாற்றியமைக்க விரும்புகிறேன்" என்கிறார் மாறாத புன்னகையுடன் ஷைலஜா. அதில் அவர் வெற்றி கண்டிருக்கிறார் என்பதைத்தான் அவரது எழுத்துகள் சொல்கின்றன.//////


************************************************************************


இதை சொல்லாமல் விட்டால் சிலர் ஏன் சொல்லல்லேன்னு கோபிக்கிறார்கள் சொன்னால் ரொம்பத்தான் பெருமையடிச்சிக்கிறோமோன்னும் எனக்குத்தோன்றுகிறது! என்னவோ போங்க எப்போதும் நான் தோற்கிறேன்!

சரி அப்படியே அன்னிக்கு நூல்வெளியீட்டில் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி.பாரதிபாஸ்கர் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் பாராட்டிப்பேசினதையும் சிலவரிகள் சொல்லிடறேன்.


“பேச்சாளர்களுக்கு பேசினதும் உடனே கைதட்டல் கிடைச்சி அந்த மகிழ்ச்சி சில நிமிஷங்களுக்குத்தான், ஆனா எழுத்தாளர்களுக்கு அவங்களைப்பார்க்காமலேயே வாசகர்கள் அவங்க எழுத்துக்களை தினமும் நினைச்சி மகிழ்கிறாங்க.அது நிரந்தர நினைவுகள்! கதை சொல்லும் யுத்தி காலங்காலம் ஆனாலும் அழியாது மாறாது! என்றோ படித்த ஒரு சிறுகதையின் ஒரு சில வரிகளும் படைப்பில் வந்த கதாபாத்திரங்களும் என்ரும் நம்மனசில் பூவாய் வாசம் வீசிக்கொண்டிருக்கும்! மாமியார்களையும்(சீரியலில்) சாமியார்களையும்(செய்தியில்) காண்பித்துக்கொண்டிருக்கும்
தொலைக்காட்சியில் மனங்களைத்தொலைத்துவிடாமல் இப்படி எழுத்தாளர்களின் சங்கமத்திற்கும் நூல் வெளியீட்டுவிழாவிற்கும் இத்தனை பேர் வந்திருப்பது வாசிப்பின்மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது ”

இன்னும் சுவைபட பேசினார் அதை நான் இங்கே எழுதுவதைவிட காதாரக்கேட்டால்தான் இனிமை! பேச்சுகக்லை எல்லாருக்கும் வந்துவிடுமா என்ன?அல்லது யார் பேசினாலும் நம்மால்தான் கேட்டுவிடமுடிகிறதா? அன்று பாரதிபாஸ்கர் ஒருமணிநேரம் பேசினதை முடித்தபின்பே உணர்ந்தோம் அப்படி ஒரு கட்டிப்போட்ட பேச்சு!


ஏப்ரல் 10ம்தேதி நங்கநல்லூர்ல ஒரு கவியர்ங்கம்ல கவிதை வாசிச்சேன் அன்னிக்கு எடுத்துட்ட போட்டோ இது! மதுமிதா இசைக்கவிரமணன் ஆர் எஸ் மணி ஹரிக்ருஷ்ணன் த்ரிசக்தி சுந்தர்ராமன் இவர்களோட கீழ படத்துல நானும் ஆரஞ்சு சல்வார்ல !

a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7bu9-BpwPJznR5jHJWsenuTZppXpJk3FXP76BU3cGt2SQ3yw6uGC91dfhLXkpmpd3Mw8DYLSf7xdBy-kgWXezyGlPQbTr_FUbP2y4tuJ5u0ZxauIZ706w3fcvgzySwxD1dXLWJg/s1600/kaviyarangam+with+Madhumitha+Rasmaniji+ramanan+ad+thrishakthi+MD.jpg">










இதுல பாரதிபாஸ்கர் என் நூலை வெளியிட முதலில்பெறுபவர் மக்கள்குரல் ராம்ஜி அவர்கள் நீலசேலைல நான்!

a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz6jq3dFzagoQNLryez6i_axOk5OJuz3ehKnji0aJVPqcn47b2NKd-F38zcmC9nczQpwm8vNKjo-vor0raU2Qi2wsIhjbMPOr0yYhYZHUyl3eu4oJ_TnC3u0kJifDrVmCG5-52Xw/s1600/bookrelease+snap2.jpg">

இதுவும் புத்தகவெளியீட்டில் மேடையில் நிற்கும்போது.....




<

எனது நூல் அவனும் இவனும் சிறுகதைத்தொகுப்பு நூல் தெரியுதா? .... அங்கே ஸ்டாலில் விற்பனையில்!




மதுமிதா தமிழ்ச்செல்வியின் நூல் மேடையில் மஞ்சள்பட்டுசேலையில் மது!

a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5lNAP8SzFVYgMbgbM3PW7a4IF5DEz3qXwQLwNxUEuhyphenhyphenW5_3zYYvydZ-hRsDjdPKM4WXx_8KUgB6xgjOqmVhQefQYqD4ajfCtvQI_00IscvYsJ0uYGEoIP8-QFnWTo114T8UGCsQ/s1600/jamal+++ithula.jpg">

ஜம்முனு சிரிச்சிட்டு ஜமால் எங்களுடன்! துளசி மேடத்துடனும்///







யார் இந்த நால்வர்? கண்டுபிடிச்சா...யெஸ்...அதான் பரிசு!



எனக்காக அன்று வந்த துளசிமேடம் உஷா நிர்மலா ஜமால் மற்றும் அனைவருக்கும் மறுபடி நன்றி.
மேலும் படிக்க... "தென்றல் வந்ததா சேதி சொன்னதா?!"

Monday, May 03, 2010

விண்ணைத்தாண்டி வந்தேனே!

மரத்தடி.காம் என்று ஒருகாலத்துல ஒரு மடலாடற்குழு இருந்தது.அதில் எத்தனை எத்தனைபேர் பறவைகளாய் கூவி மகிழ்ந்தோம் தெரியுமா? பலர் அதில் முகம்தெரியாதபறவைகள் ஆனால் மனச்சிறகை விரித்து எண்ணங்களைப்பரிமாறிக்கொண்டு இருக்கிறோம் ! அதெல்லாம் விண்ணைத்தாண்டிய சந்தோஷங்கள்!


ஆசிப்ஜீ ஆசாத்ஜீ ம்ரவண்டு கணேஷ் மஞ்சூர்ராசா மதுமிதா நிர்மலா பிகே எஸ், உஷா துளசி ஐயப்பன் ஜீவ்ஸ்,ஹரிக்ருஷ்ணன், பால்ராஜன் கீதா, கேவி ராஜா, சக்திப்ரபா ஜெய்ஸ்ரீகோவிந்தராஜன்(யாரையும் மறக்கல் இங்க குறிப்பிடலேன்னாலும் மனசுல அவங்க இருக்காங்க) என்றுஎத்தனை எத்தனை நல்ல இதயங்கள் எனக்குக்கிடைத்த அரும் புதைய்ல்கள்! அவர்களுடனான நட்பு இதமாய் இருக்கிறது இன்னமும்....

அந்தப்பறவைகளில் சிலவற்றை ஏப்ரல் 30ஆம்தேதி நடந்த திரிசக்தி குழுமத்தினரின் 12நூல்கள்வெளியீட்டுவிழாவில் பார்க்க நேர்ந்ததும்...ஆஹா..! என்னவென்று சொல்வதம்மா எந்தன் மனம் கொண்ட மகிழ்ச்சியினை? விண்ணைத்தாண்டி வந்த மகிழ்ச்சிதான் அது!


நுனிப்புல் எனவலைபெயர்கொண்ட என் அன்புத்தோழி உஷா பதிவுலக அரசி துள்சிகோபால் கவிதாயினி நிர்மலா இவர்களைமுதலில்பார்க்கிறேன்! மதுமிதாவும் சேர்ந்துகொள்ள அங்கே வந்த அண்ணா கண்ணனிடம் காமிராவைக்கொடுத்து இந்த நாற்பெரும் தேவியரை சேர்ந்து படம் எடுங்கன்னு கேட்டுட்டோம்!


மரத்தடி நினைவுகளை அசைபோட்டோம் ஆசிஃப்ஜீ மண்டையை உருட்டினோம்:)

பதிவர் நட்புடன் ஜமால் என்பவர் வந்தாரு

அக்கா நான் ஜமால் என்றார் புன்னகைதவழ! ஆஹா இவரா ஜமால்! சிரித்த முகத்தோட ஜமாய்க்கிறாரேன்னு நினச்சி சந்தோசத்துல அதிகம் பேசவும் முடியாம அவஸ்தை!


நூல்வெளியீட்டுல என்னைப்பத்தி இசைக்கவிரமணன் நாலுவரி அறிமுகம் என்றுபுகழ்ந்துசொல்லிட்டே வந்தவரு மைசூர்பாக்கையும் சேர்த்துட்டுசொல்ல
நான் நடந்து மேடை நோக்கிப்போகையில் பின்னாலேயே கரகோஷம் வரவும்,’ பாருங்க இவங்கரசிகர்கூட்டத்தையும் கூட்டிட்டு வந்துட்டாங்க’ என்று லேசா கிண்டல் செய்ய..... கூச்சமாய் சிரிச்சுட்டேன் அங்கயே!


நிலாரசிகன் விழியன் என்று அன்புத்தம்பிகள் ஆவலாய் முன்னமே வந்திருக்க வேறு சிலரும், எனது பத்திரிகைஉலக எழுத்தாள நண்பர்களும் வந்திருக்க வலல்மைதாராயோ இயக்குநர் மதுமிதா பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர் எஸ் எம் சில்க் அதிபர் இலக்கியபீடம் ஆசிரியர் கலைமாமணி விக்கிரமன் இந்துமுன்னணித்தலவர் ராம்கோபால் ,நான் அழைப்பிதழ் அனுப்பிக்கேட்டுக்கொண்டதற்கு இணங்கி வருகைபுரிந்த மதிப்பிற்குரிய திரு அப்துல ஜப்பார் யுகமாயினி ஆசிரியர் திரு சித்தன் , எழுத்தாளர்கள் இந்துமதி ஜோதிர்லதாகிரிஜா எஸ் சங்கரநாராயணன் காந்தலஷ்மி இன்னும் பலர் பலர்! மரத்தடி சிமுலேஷன் திடிரென வந்து நின்றார் திகைப்பில் நின்ற என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். வசந்த்குமார் (பதிவர்) விழாவில் கிளிமுற்றம் எனும் தனது சிறுகதைதொகுப்பினை அன்போடுபெற்றுக்கொண்டார் அவரையும் முதன்முதலில்பார்க்கிறேன்.சின்னதம்பி ப்ரபுமாதிரி கழுக்மொழுக்குன்னு இருந்தார்! என்னையும் தம்பி வசந்தையும் யாராவது அருகருகே பார்த்தால்,”சபாஷ் சரியான போட்டி’ என்றோ அல்லது ‘எந்தக்கடையிலே அரிசி வாங்கறே? னும் பாடலாம்!


பாரதி பாஸ்கரின் அற்புதமான சொற்பொழிவு அன்று சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி தான்!

எதைச்சொல்ல எதைவிட! அந்த மாலைப்பொழுதின் மயக்கம் இன்னும் தீர்ந்த்பாடில்லை! செவிக்கு விருந்தென்பது இதுதானா? விழியும் செவியும் நிறைந்தாலே வயிறும் நிறைந்து மனமும் நிறைந்துதான் விடுமோ? (வயிற்றுக்கும் நல்ல டிபன் கிடைத்தது)

ஒன்றுமட்டும் நிதர்சனம் இந்தமாதிரி விழாக்களைப்பார்க்கிறபோது பிறக்கும் நம்பிக்கை இதுதான்,,,,,தமிழ் என்றும் தரணியில் வாழ்ந்துகொண்டிருக்கும்!
தேமதுரத்தமிழோசையை உலகமெல்லாம் பரவச்செய்வது எழுத்தாளர்களின் கையில்தான் இருக்கிறது என்பதை அங்கே புரிந்துகொண்டேன்,

மறவன்புலவு க.சச்சிதானந்தம், ரவி தமிழ்வாணன், சுப்பு, வீரராகவன், தமிழ்த்தேனீ, சந்திரசேகர் அம்சப்ரியா, அய்யப்ப மாதவன், ரீச் சந்திரா, சைதை முரளி.. அண்ணாகண்ணன்,விழியன் நிலாரசிகன் ஓவியர் ஜீவநாதன், ,,,..........இன்னும் இன்னும் பலப்பலமுகங்கள்!

எனது சிறுகதை தொகுப்பு (அவனும் இவனும்) அன்று பட்டிமன்ற பேச்சாளர்பாரதிபாஸ்கர் மற்றும் மக்கள்குரல் ராம்ஜி கைகளால் எனக்கு அளிக்கப்பட்டது.கதைகள் பற்றியும் பிறகுபாரதி பாஸ்கர் சிலாகித்துப்பேசினார் அன்புத்தோழி மதுமிதாவின் நூலையும் பாராட்டி விமர்சித்தார். (இதுபற்றி ஞாயிறு தினமலரிலும் வந்துள்ளது)


மேலும் விவரங்கள் இனி தொடரும்......


--
மேலும் படிக்க... "விண்ணைத்தாண்டி வந்தேனே!"

Wednesday, April 28, 2010

த்ரிசக்திகுழுமம் நடத்தும் இனிய இரு விழாக்கள்!

மே மாசம் 2ஆம்தேதி ஞாயிறு மாலை த்ரிசக்திகுழுமம் பெரிய விழா நடத்த இருக்கிறார்கள்!
அதுல அவங்க மூணு புத்தகங்கள் அதாவது பத்திரிகைகள் வெளியிடப்போறாங்க. ரசனை என்கிற இலக்கிய மாத இதழ், கொலுசு என்கிற நாவல்மாதாமாதம், அப்புறம் த்ரிசக்தி ஜோதிடம் என்று.

a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYo1c9MatxwhRJwx4qmFXMLm4U116DOxaF85_Hz3Tt6Wuuq7kAx5q7KB7MxiolN1aTH-9ZEd04ngqdYHvJM5kAT4q1DOLOFyrThazTo2MmT4wfU_xb4iM8L2ZayxN1Mg_31cDH5g/s1600/Invitation++for+2nd+May+++function.jpg">



அதுக்கு வைரமுத்து வராரு எழுத்தாளர் ரமணிசந்திரன் வராங்க மேலும் சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் சில பிரபலங்களும்!
தில்லானா மோகனாம்பாள் மறுபதிப்பு வெளியிடறாங்க புத்தகமாக.. புத்தகம் எழுதியவரும் இல்லை,அந்தப்படத்தில் நடித்தவர்களில் பெரும்பான்மையினர் இப்போ இல்லை நடிகைமனோரமாவை விழாக்கு வரும்படி கேட்டுட்டாங்க அவங்களால வர இயலவில்லை. அதனால நாவலை எழுதிய கொத்தமங்கலம் சுப்புகுடும்பத்தினருக்கு அமரர்இயக்குநர் ஏபிநாகராஜனின் மகன் பரமசிவன் அவர்கள் அளிக்க இருக்கிறார்.
நிகழ்ச்சில மதுரைஎம்பிஎன் பொன்னுசாமி(சேதுராமன்) குழுவினரின் தில்லானா மோகனாம்பாள் நாதஸ்வர இன்னிசை நடைபெறும்.
தி நகர்ல வாணி மஹால்ல நடக்குது எல்லாரும் வரலாம்! தேமதுரத்தமிழோசையை செவி குளிரக்கேட்கலாம். நிறைய புத்தகங்களை அங்கே நீங்க வாங்கலாம்!

இந்த நிகழ்ச்சிக்கு 2நாட்கள் முன்பாக அதாவது ஏப்ரல் 30 தேவநேயப்பாவாணர் அரங்கில் த்ரிசக்தி குழுமத்தினரின் வெளியீடாக 12 நூல்கள் வருகின்றன. முன்னர் நிலாரசிகன் விழியன் அவர்களுது வந்தமாதிரி இப்போ அவனும் இவனும் என்கிற 16சிறுகதைகள் அடங்கியதும் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் கலைமகள் ஆசிரியரின் அணிந்துரை பெற்ற எனது சிறுகதை நூல் அன்னிக்கு வரப்போகுது.இதற்கு பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர் வராங்க. இதற்கும் வர முடியுமானால் அனைவரும் வரவும் நன்றி.










மேலும் படிக்க... "த்ரிசக்திகுழுமம் நடத்தும் இனிய இரு விழாக்கள்!"

Friday, February 26, 2010

ஆத்தா ஒன் சீலதான்....




ஆத்தா ஒன் சீலைதான்
காத்தாக அணைச்சிருக்கு
தறியிலே நெஞ்சது என்
உசுருலே பிணைஞ்சிருக்கு.

உதிரத்துல பாலூட்டி
உத்திரத்துல சீலைதூளிகட்டி
உள்ள என்னை படுக்கவச்சே.
பத்துமாசம் வரையிலும்
பாவிமவ நான் படுத்துறங்கி
பகலிரவு நேரமெல்லாம்
ஈரப் படுத்தினதை
பன்னீரா தொடச்சதும்
ஆத்தா உன் சீலையிலே,

மாரியாத்தா திருவிளாவுல
ஆரியமாலா வேஷங் கட்ட
அன்னிக்குப் பொருத்தமாச்சி
ஆத்தா உன் சீலை தான்.

உலக்கைக்கு உள்ளாற
உட்கார்ந்த ’அந்த’ நாளில்
திரையாகக் கிடந்தததுவும்
ஆத்தா உன் சீலைதான்

அப்போதைய வறுமையில
தாவணியா மாறினதும்
ஆவணிச்சந்தையில வாங்கின
ஆத்தா உன் சீலைதான்

சொத்துபத்து எல்லாம் வித்து
சொற்பதொகை சேகரிச்சி
பாத்துப்பாத்து சீரு செஞ்சி
புகுந்தவீட்டுக்கு அனுப்பிவச்சே.
பொறப்பட்டு வருகையில
பொட்டியிலே முக்கியமா
பொக்கிஷமா வந்ததுவும்
ஆத்தா உன் சீலைதான்.

நாகரீகம் தெரிஞ்சவரு
நல்லாத்தான் மகளோடு
குடும்பம் நடத்தறாருன்னு
ஆத்தா நீ நம்பி இருக்கே.
நகரமில்லஆத்தா ,நரகத்துல
நான் வந்திருக்கிற சேதி சொன்னா
அய்யோ உன் இதயம்தான்
அப்போதே நின்னுப்பிடும்

வாய்தொறக்க வழி இல்ல
அடிதடி இம்சையினு
நாலுமாச தாம்பத்தியத்துல
நாய்ப்பொழைப்பா நாறுகிறேன்
நாலெழுத்துப்படிச்சிருந்தா
நானும் தல நிமிந்து பேசிடுவேன்.
பயத்துல செத்துக்கிட்டு
பிடி சோறுக்கும் வழி இல்லாம்
பட்டினியில் கிடக்கும் என்னை
இடிபோல தாக்கிச்சி நேத்திக்கு
என்புருஷன் சொன்ன பேச்சு

பாலோட பண்பாட்டயும் ஊட்டி
வளத்த பாசக்காரி ஒன் கிட்ட
பாதகன் சொன்ன சொல்லை
பாவிநான் சொல்லிப்புட்டா
ஆத்தா நீ தாங்கமாட்டே.
மானங்கெட்ட மக்களுக்கு
முந்தானைவிரிச்சிப்போடணுமாம்
முட்டாள்புருஷன்கட்டளை.

தாள முடியலம்மா
சாவது தான் முடிவுன்னு
ஆத்தா ஒன் சீலையினை
அழுதபடி எடுக்கறேன்,
ஆசைதீரத்தொட்டு
தொட்டு த்டவறேன்.
கழுத்துக்கு சுருக்காக
கடைசிப்பயணமாக
ஆத்தா உன் சீலதான்
ஆயுசுக்கும் என்கூட.

முடிவோட சீலையினை
மூச்சுமுட்ட அணைக்கையிலே
முந்தானைமுடிச்சு
நெஞ்சுல நெருடிடவும்
திடுக்கிட்டுப் பாக்கறேன்.

திகைப்போட முடிச்சினை
வேகமா அவிழ்க்குறேன்,
கசங்கித்தான் கிடக்குது ஒத்த
நூறுரூவா நோட்டு!
மலர்ந்தேதான் மனசும்
மானசீகமாக் கூவிக்கொள்ளுது,
”பொறந்த ஊரு போய்ச்சேர
கிடச்சாச்சு,
ரயிலு டிக்கட்டுக்கு துட்டு!”














--
மேலும் படிக்க... "ஆத்தா ஒன் சீலதான்...."

Monday, February 22, 2010

தமிழ்க்கடல்!








ஆழி சூழ் உலகம்!


********************************************




மொழிகள் பலவற்றில் ஒருபொருட்பலசொற்கள் அமைந்துள்ளன.தமிழ்மொழியில் ஒருபொருட்பல்சொற்கள்(பெயர்கள்)மிகுந்தே இருக்கின்றன.

அவையாவும் பொதுப்பெயரில் ஒத்து இருந்தாலும் சிறப்புப்பொருளில் தனிதனிக் கருத்தை உணர்த்துகின்றன.

கடல் எனும் சொல்லினை எடுத்துக்கொள்வோம்..


கடற்படை கடற்செலவு கடல் வணிகம் முத்துக்குளித்தல் கடலில் மீன் பிடித்தல் கடல்விளையாட்டு ஆகியவைகளில் தமிழ் மக்கள் தலை சிறந்திருந்தனர்.

கடலைக் குறிக்க தமிழில் பலசொற்கள் இருக்கின்றன.ஒவ்வொரு சொல்லும் கடலின் தனித்தனிப் பண்பை தெளிவாக விளக்குவதுடன் கடலைப்பற்றி நம்முன்னோர் பெற்றிருந்த ஆழ்ந்த அறிவையும் நன்கு புலப்படுத்துகிறது.

கடப்பதற்கு மிகவும் அரிதாக இருப்பதால் கடல்(கட+அல்=கடக்க அல்லாதது) என்று பெயர்பெற்றது.மிகவும் ஆழமாக இருப்பதால் ஆழி ,ஆழம், பௌவம் என்னும் பெயர்கள் ஏற்பட்டன. .பௌவம் என்னும் சொல் ஆழத்தைக் குறிக்கும்.

கடலில் எப்போதும் நீர் பெருகி இருப்பதால் பெருநீர் என்றும் கடலைக் குறிப்பிடுவதுண்டு.
கடலில் எப்போதும் வெள்ளம் மிகுந்திருப்பதால் வெள்ளம் என்றும் அதற்குப்பெயர்.

கடலிலிருந்து உப்பு கிடைப்பதால் உப்பின் உவர்ப்புச்சுவையை ஒட்டி கடலுக்கு உவர் என்றும் பெயர் இருக்கிறது.

கடல் மிகப்பெரியதாக பரவலாக உலகைசுற்றி இருப்பதால் பரவை என்கின்றனர்.







கடலில் அலை அடித்துக்கொண்டெ இருப்பதால் அலை என்றும், ஆறுகள் யாவும் கடலுடன் புணர்வதால் புணரி என்றும் பெயர்கள் வருகின்றன

மேகம் நீரை மொண்டு கொள்ளும் இடமாகக் கடல் இருப்பதால் கார்கோள் என்று பெயர்பெற்றது.

(கார்=கரியமேகம், கோள்=எடுத்துக்கொள்ளுதல்)

கடலி ல் எப்போதும் இரைச்சல் இருப்பதால் அது ஆர்கலி., நரலை ஓதவனம் (ஓதம்=ஈரம்) என்றும் சக்கரம் வட்டமாக இருப்பது போல கடலும் ஏறக்குறைய நிலத்தைச் சுற்றி வட்டமாக இருப்பதால் சக்கரம், நேமி ஆகியபெயர்கள் எற்பட்டன.

மீன்களுக்கு உறைவிடம் கடல் ஆகவே மகராலயம்(மகரம்=மீன் ஆலயம்=இருப்பிடம்) என்றானது.

கடலில் தண்ணீர் பெரியநிதியைப்போல இருப்பதால் அதற்கு சலநிதி(சலம்=தண்ணீர் நிதி=பெருக்கு)என்று ஒருபெயர்.

முத்து பவழம் போன்ற பொருட்களை வாரிவாரித்தருவதால் வாரி, வாரிதி.
கடல் நீரின் உறைவிடம், ஆகவே அதற்குப்பெயர் சலதி.

கடலின் நிறம் கருநீலம்,சுவையோ உவர்ப்பு. இரண்டையும் கருதி கடலுக்கு கார்மலி உவரி என்றும் சொல்கின்றனர்.

இவ்வாறு கடலைக் குறிக்கும் பல சொற்கள் தமிழ் மொழியில் பொருட் செறிவுடன் விளங்குகின்றன.

கடலைக்குறிப்பிட பல சொற்கள் இருப்பதுபோலவே கடலில் செல்லும் பல்வேறு ஊர்திகளை உணர்த்த பல சொற்கள் அமைந்திருத்தல் இயல்பே.

மரக்கலம் என்னும் பொதுச்சொல் நீரில் செல்லும் எல்லா ஊர்திகளையும் குறிக்கும்.
நிரில்மிதக்கும் கட்டை புணை எனப்படும், இதனை மிதவை என்றும் சொல்வர்.

பலமிதப்புக்கட்டைகளின் இணைப்புக்கு தெப்பம் எனப்பெயர்.

இருபக்கங்களிலும் வளைந்த மரக்கட்டு கட்டுமரம் எனப்படும்.

கட்டுமரம் என்ற தூய தமிழ்ச்சொல்லை ஆங்கிலேயர்கள் கடன் வாங்கி கட்டமாரான் (catamaran)என்கிறார்கள்!

மரத்தைக் குடைந்து தோண்டி செய்யபடுப்வது தோணி.

ஓடுவதுபோல விரைந்து செல்வது ஓடம் .மீன்பிடிக்க பயன்படும்மரக்கலம் திமில்.
பன்றிபோல வடிவமுள்ள மரக்கலத்திற்கு பஃறி.

விலங்கு அல்லது பறவைமுகம் போன்ற கலம் அம்பி எனப்படும்.

'பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும்..'

என்னும் அடிகளை சிலப்பதிகாரத்தில் காணலாம்.

பரிசல் என்பது பிரம்பால ஆகிய வட்டமான கலம்,
காற்றின் இயக்கத்தால் செல்லும் பாய்கட்டிய கலம் படகு.

தண்ணீரைப் பிளந்து செல்லும் போர்க்கலம் நாவாய்.

கப்பல் வங்கம் ஆகிய சொற்கள் பெருங்கலத்தைக்குறிக்கும்.

நீரில் மூழ்கிச்செல்லும் கலம் நீர்மூழ்கிக்கப்பல்.

submarine சொல் பிற்காலத்தில் தோன்றியது.

தமிழ் மொழியே கடலாக இருக்க , அதனுள் புதைந்திருக்கும் சொல் எனும் முத்துக்கள் தான் எத்தனை எத்தனை!
மேலும் படிக்க... "தமிழ்க்கடல்!"

Sunday, February 14, 2010

”தேவதை”யைக் கண்டேன்!

மனம்கவரும் ஒரு மகளிர் இதழாக தேவதை , தமிழ்ப்பத்திரிகை உலகில் வலம் வந்துகொண்டிருக்கிறது! வண்ணப்படங்களுடன் கண்ணையும் கருத்தையும் கவரும் தகவல்களுடன் இணையதள படைப்பாளிகளைப்பற்றி வெளி உலகுக்கு அடையாளம்காட்டி அறிமுகப்படுத்தும் தேவதையின் பணி சிறப்பானது. ஏனென்றால் இணையம் பக்கம் அனைவராலும் வர இயல்வதில்லை. பத்திரிகையை மட்டும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் இணையத்தின் தமிழ் ஆர்வலர்களைப்பற்றிய செய்தியை
கொண்டு சேர்க்கிறது தேவதை என்றால் அது மிகை இல்லை.















இன்றைய தேவதை(15.02.’10) இதழில் என்னைப்பற்றியும் வலைப்பூவினைப்பற்றியும் சிறப்பாகக்கூறி இருக்கும் தேவதைக்கு முதலில் என் நன்றி.

இனி உங்களிடன் தேவதை வருகிறாள் , நீங்களும் காணவேண்டுமென்று இங்கே அளித்திருக்கிறேன்!

















மேலும் படிக்க... "”தேவதை”யைக் கண்டேன்!"

Saturday, February 13, 2010

அழகாய் அவனே இருக்கின்றான்!

ஓர் அறிவிப்பு!

பாடல் குரல்பதிவிலும் வருகிறது!





காதலர்தின சிறப்புக்கவிதை!
***************************

அழகாய் அவனே இருக்கின்றான்
ஆதலால் மனதை அடைக்கின்றான்
ஆற்றுமணலில் அவன் நடந்துவந்தால்
ஊற்றுப்புனலாய் உள்ளம் பொங்கிடுமே!

அருவிவீழ்ச்சியில் தலைகொடுத்தே
அந்த அழகன் நிற்கும் கோலம்தான்
மருவித் துளைத்தென் மனத்துள்ளே
மயக்க அருவிதான் பொழிகின்றதே!

அங்காடித்தெரு வாசலிலே
அடிகள்மிதித்து அவன் நடக்கையிலே
இணைந்த என் இரு பாதஅடி
இழைந்தே போகவும் விழைகின்றதே!

தென்றல் சுகமாய் வீசுகையில்
தெள்ளிய நிலவு வானில்தெரிகையில்
நெஞ்சம் மட்டும் அலைபாயும்
நினைத்துநினைத்துத் தடுமாறும்!

என்னே இந்த ஏக்கமோ
என்னபெயர்தான் இதற்கோ?
முன்னே பின்னேகண்டதில்லை
இன்னமும் பெருக இதற்கேது எல்லை?

காதலென்றுதான் சொல்வீரோ
காமன் கணைதான் இதுவோ?
ஏதும அறிய இயலாமல்
மாது நான் மயங்கிக்கிடக்கின்றேன்!



(இந்தப்பாடலைப்பாடியவர் யார் எனக்கண்டுபிடிக்கறவங்களுக்கு அரைகிலோ மைசூர்பாக் இலவசம்:)
மேலும் படிக்க... "அழகாய் அவனே இருக்கின்றான்!"

Friday, February 05, 2010

அம்பி, ரிஷான் ,துளசிடீச்சர் ,சுப்பையா சார், இந்தமாதம் கலைமகள் பத்திரிகையில்!

இணையஎழுத்தாளர்களைப்பற்றிய கட்டுரை இம்மாதக்கலைமகள் பத்திரிகையில் பிரசுரமாகி உள்ளது. தொடர்ந்து இதில் பலரும் வர இருக்கிறார்கள்.
இப்போது உங்கள் பார்வைக்கு இங்கே அந்தக்கட்டுரை!








a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJqqFpVORjNfv-VZXEw6YhijJTx_zlKN7oFfQNiuZQX_Iksp1gd9B6VkgalQQGMPyhMgmYinA7_P7ZXRt66dD44QXSnn1KdQG2YV5GtajKPmThBtGEMBgN2FuMP5q6u4wwAHMaXA/s1600-h/page2.jpg">


a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK59DeUdlOdI36rj9pG2ztO98qIsA6g3BFa8wKFLLE9pqahwXGcKN0FBNYYXKxNWjMS0-pxkC2yFUesgnN8V2dAGp5tmCoPYLaf-Ezqufmv6NZBfqWgpRsPfBPpmDgpS87KpxYnA/s1600-h/page3.jpg">







மேலும் படிக்க... "அம்பி, ரிஷான் ,துளசிடீச்சர் ,சுப்பையா சார், இந்தமாதம் கலைமகள் பத்திரிகையில்!"

Thursday, February 04, 2010

தமிழர் இசை!

/////கொஞ்சநாள்முன்னாடி மணற்கேணி அமைப்பும், சிங்கைபதிவர்கள் மற்றும் இணையதளமும் நடத்தின கருத்தாய்வுபோட்டிக்காக கஷ்டப்பட்டு இதை ஆராய்ந்து எழுதி அனுப்பினேன்.பரிசு கிடைச்சா சிங்கப்பூருக்கு அனுப்பறதா அறிவிப்பு கொடுத்திருந்தாங்க. உடனே .கனவுல முஸ்தபா போய் ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சேன்! பெரிய சிங்கப்பூர் விசிறி வாங்கி ஹால் சுவரில் மாட்டி அழகுபார்த்தேன்! சிங்கை நண்பர்களைசந்தித்து மைசூர்பாக்கெல்லாம் கொடுத்தேன். கனவு நனவாகவே இல்லை! ஆமாம்,
போட்டியே நடக்கலன்னு அப்புறமா தெரிஞ்சது); ’இனிபொறுப்பதில்லை பெண்ணே’ என்று மனசு குரல்கொடுக்கவும் இப்போ இதை இங்கே இட்டுவிட்டேன்!/////

**********************************************************************





இசை என்றாலே இனிமை எனலாமோ? செவிவழிபுகுந்து மனதிற்கு மகிழ்ச்சியைத்தரும் ஓர் ஒலிதான் இசை என்பது!

இசை என்ற சொல்லுக்கு இசையவைப்பது என்று பொருள் இருக்கிறது.

ஒழுங்கான கட்டுபடுத்தப்பட்ட இனிய ஒலியை இசை என்கிறோம்.இனிய இசைஒலியை நாதம் என்று சொல்கிறோம்.

பிறப்புமுதல் இறப்புவரை இசை நம்மோடேயே பயணிக்கிறது.


தாலாட்டாக ஆரம்பித்து இறப்பில் ஒப்பாரியாக இசை விரியும் பரிமாணங்கள் அடர்த்தியானது. தமிழரின் வாழ்நாட்களில் மகிழ்ச்சியைக்கொண்டாட இசை நிகழ்ச்சிகள் நடத்துவதும் அதனைப்பலர் கேட்பதும் இன்றும் தொடர்கிறது.

அகம்புறம் இரண்டினையும் ஐக்கியப்படுத்தி ஒருமித்த தன்மையில் இவற்றில் ஊடுருவி உள்ளம், உடல் இரண்டினுக்கும் விவரிக்க இயலாத சுகமான அனுபவத்தை வழங்கக்கூடியது இசை என்றால் அதை மறுப்பதற்கில்லை.

தமிழ்மொழியை இயல், இசை, நாடகம் என்று பாகுபடுத்திக்கூறுவது தமிழ்மொழியில் தவிர வேறெந்த மொழியிலும் இல்லாத புதுமையாகும்.

பரதமுனிவர்,தமது நாட்டிய சாத்திரம் என்னும் நூலில் தென்னாட்டுமக்கள் பாட்டிலும் பல இசைக்கருவிகள் வாசிப்பதிலும், கூத்திலும் மிக்கதிறம் வாய்ந்தவர்கள் என்றுகுறிப்பிட்டுள்ளார்.

அவர்குறிப்பிட்டிருப்பது பண்டைய தமிழ் இசையே என்பதும் பண்டையதமிழிசையே இன்றைய கர்னாடக சங்கீதத்திற்கு தாயாகத் திகழ்ந்தது எனபதும் அனைத்து ஆய்வாளர்களின் ஒருமித்தக் கருத்தாகும்.

தொல்காப்பியத்தில் மக்கள்தம் தொழிலைச்செய்ய உதவும் கருவி இசை ஒன்றைப், ‘பறை’ என்றும் ,பொழுதுபோக்கிற்கான கருவி இசையை’ யாழ் ’என்றும் குறிப்பிடுகிறார்.
.
எட்டுத்தொகை சேர்ந்த பரிபாடல் பண்ணுடன்கூடிய,70இசைப்பாடல்களைக்
கொண்ட ஒருதொகுப்பாகும் ஆனால் நமக்கு 20பாடல்களே கிடைத்திருக்கின்றன.

எட்டுத்தொகையைச்சேர்ந்த அகநானுற்றில் பெண் ஒருத்தி,யாழெடுத்துக்,குறிஞ்சிப்பண் இசைத்து தினை உண்ன வந்த யானையைத் தூங்கும்படி செய்துவிட்டாள் என்ற செய்தி கிடைக்கிறது.

அக்கால மன்னர்கள் இசையைஆதரித்ததை இப்பாடல்களில் அறியமுடிகிறது. மூவேந்தர்களின் அவையில் தமிழ் இசை பெரிதும் போற்றப்பட்டிருக்கிறது!

சிலப்பதிகாரத்தில் இளங்கோஅடிகள் யாழ் ஆசிரியன் மற்றும்குழல ஆசிரியன் ஆகியோரின் இலக்கணங்களை சிறப்பாக எடுதுரைக்கிறார். புலவரே இசை மற்றும்நாட்டியகக்லை நுட்பங்களில் தேறியவர் என்பதால் தமிழர் இசை பற்றிய அறிவு நிரம்பப்பெற்றவராய் இருந்தார்.

.ஆய்ச்சியர் குரவையில் ஏழுமகளிர் ஏழு இசையின் பெயர்தாங்கி இசைஇலக்கணத்தை விளக்கும் வகையில் நின்று ஆடும்முறை அருமையாக விளக்கப்பட்டுள்ளது.

இன்னும் திவாகரம் பிங்கலம் ஆகிய நிகண்டுகளிலிருந்தும் பண்டைத்தமிழைபற்றிய பலசெய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது
.
103பண்களின் பெயர்கள் தமிழர் இசையில் விளங்கியதை சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன

,கிபி3ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி6ஆம்நூறாண்டுவரை தமிழக வரலாற்றுக்கும் தமிழ் இசைக்கும் இருண்டகாலம் என்றுகூறப்படுகிறது.

கிபிஆறாம் நூற்றாண்டு சமணர்காலத்தில்,சமணர் இசையை வெறுத்ததால் பல இசைநூலக்ள் அழிந்து போய்விட்டன.

கிபிஏழு, எட்டு, ஒன்பதாம்நூற்றாண்டுகளில் ,தேவார திவ்யபிரபந்தங்கள் தமிழில் தோன்றின.


ஆழ்வார்களும், நாய்ன்மார்களும்பண்ணோடு பாடிய சிறந்த தமிழ்ப்பாடல்கள், தமிழுக்குக்கிடைத்த அரும் புதையல்கள்!


பாடல் தாய் மொழியில் இருக்கும்போது அதை நாம் ஆழ்மனத்தோடு உணர்ந்து அனுபவிக்கிறோம். நாவுக்கரசரின் ‘தூக்கிய திருவடி எடுத்த பொற்பாதம்’ எனும் பாடலுக்கு சைவ சித்தாந்தத்தில் பலவித அர்த்தங்கள் உண்டு. மொழியிலிருந்து இசையைப்பிரிக்கமுடியாததால்தான் புல்லாங்குழலில் ‘’தீராதவிளையாட்டுப்பிள்ளை’; என்று வாசித்தால் நமது மனம் கண்ணனின் குழந்தை விளையாட்டை கண்முன் காண ஆரம்பித்துவிடுகிறது,



மணிமேகலை சீவகசிந்தாம்ணி பெரியபுராணம திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்களில் பல இசைக்கருத்துக்கள் காணப்படுகின்றன.

தமிழர்இசை எனும்போது தமிழ்மொழிமட்டுமல்ல தமிழ்ப்பண்பாட்டினையும் சேர்த்துதான் நாம் காணவேண்டி உள்ளது.

மொழிலியிலிருந்து,இசையைப்பிரிக்கமுடியாது ,அதனால்தான் இசைத்தமிழ் என்கிறோம்.


நான்குவகை நிலங்களாக இயற்கையைப் பிரித்தவர் தமிழர். நான்கிற்கும் கருப்பொருள், உரியபொருள் வகுத்தது நம் மரபு.

நால்வகை நிலங்களுக்குமான நான்குபெரும்பண்கள் உருவானது. பண்களே,காலப்போக்கில் ராகங்களாக வளர்ச்சியடைந்தன பண்ணென்பது பாடலின் இசைவடிவம் அதை’மெட்டு’என்றும்கூறலாம்

நான்குநிலத்திற்கும் உரிய பெரும்பண்ணை ’பாலை’ என்கிறோம்
ஒரு பழையபண்தான் இன்று முக்கிய ராகமாகத் திகழ்கிறது

.
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர்குரவை பாடலில் ’முல்லைத்தீம்பாணி ’என்று குறிப்பிடப்பட்டுள்ளது

ச ரி க ப த இதன் சுரம்(ஸ்வரம்)

இதுதான், இன்றையமோகன ராகம்.திரைப்படப்பாடல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ராகம்..ஆம், இதுவேமோகனம்! சுகமான ராகம் இது!


தமிழர் இசையானது, அடிப்படையில் இன்னிசை( மெலொடி) யானது!அதுதான் நமக்கு அடிபடையானசுவை !


15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரின் திருப்புகழ்பாடல்களில், பல,தாள எண்ணிக்கைகளைப் பயன்படுத்திஅமைத்தார்.

18ஆம் நூற்றாண்டில் அருணாசலக்கவிராயர்.’இராம நாடகம்’ என்னும இசைநாடகத்தைதமிழில் இயற்றினார்.

திரிகூடராசப்பகவிராயர்,’குற்றாலக்குறவஞ்சி ’என்னும் அருமையான இசைநாடகத்தை இயற்றினார்.



19ஆம் நூற்றாண்டில் கவிகுஞ்ச்ரபாதி,அண்ணாமலைரெட்டியார்,((காவடிச்சிந்தின் தந்தை)
ராமலிங்க அடிகளார்,பாரதியார் பாரதிதாசன் போன்றவர்களின்பாடல்கள்,தமிழரின் இசைஎனும் பாரம்பரியத்திற்கு வலிமையும் பெருமையும் சேர்த்த பாடல்கள் என்பதில் ஐயமில்லை.

ஆப்ரஹாம்பண்டிதர் சேக்கிழாருக்குப்பின் தமிழர் இசைக்கு ஆக்கம் தந்தவர்’

இவரது அரியமுயற்சியால் ’கருணாமிர்தசாகரம்’ என்னும் இசைத்தமிழ்நூல்நமக்குக்கிடைககப்பெற்றது.


முதன்முதலாகத்தமிழில் கீதங்களையும் வர்ணங்களையும் இயற்றியதுமட்டுமில்லாமல் எல்லாவற்றையும்
மாணவமாணவிகளுக்கும் கற்பிக்க வேண்டுமென்றார்.


விபுலானந்த அடிகள் பல ஆண்டுகாலம் இடைவிடாது ஆராய்ந்து ’யாழ்நூல்’என்ற அரிய நூலை இயற்றினார்.
பண்டைத்தமிழர் கண்டுணர்ந்த யாழினை மீண்டும் தமிழ்கத்துக்கு வழங்கிய பெருமை அடிகளாரையே சேரும் . எஸ்.ராமனாதனின் ;சிலப்பதிகார ’இசை நுணுக்க விளக்கம்’ சாம்பமூர்த்தி அய்யர் அவர்களின் ’தென்னிந்திய இசை’

,’ தமிழிசை வளம், தமிழிசை இயல், தமிழ் இசைக்களஞ்சியம்’ என்று வி.ப.க. சுந்தரம் அவர்கள் எழுதிய மூன்று நூல்கள் டாக்டர் சேலம் ஜெயலட்சுமி எழுதி உள்ள’சிலப்பதிகாரத்தில் இசைச்செய்திகள்’ இப்படிப்பல நூல்கள் தமிழர் இசை பற்றிய பல தகவல்களை நமக்கு அளிக்கிறது.

லட்சுமணப்பிள்ளை பொன்னையா பிள்ளை போன்றோர் தமிழர் இசைக்கு பெரும் சேவைபுரிநது மறைந்தனர்.

முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை போன்றோரின் பாடல்கள் தமிழரின் இசையில் பெரும் பங்குவகித்தது. இன்னும் பலரது பங்களிப்பு உள்ளது ..இங்கு இட்ட பட்டியல் குறைவே.

தமிழர் இசையானது, தமிழ்போலவே சிறப்பாக இன்றும் திகழ்கிறது.!


!
மேலும் படிக்க... "தமிழர் இசை!"

Saturday, January 30, 2010

தாமரைக்கன்னங்கள்!




பூக்களிலே பெண்கள் தலையில் சூட முடியாத மலர் தாமரை. அதன் வடிவம் மகா அழகு.
சின்ன வயதிலிருந்தே நம்மில் பலருக்கு தாமரைப்பூவினை வரைவது பிடிக்கும். இதழ் விரிந்து மலர்ந்த தாமரைக்கோலங்கள் கண்ணைக் கவர்ந்து விடும்.



தேவ மலர் என்று தாமரையை சொல்கிறார்கள். அதன் இளம் சிவப்பு நிறம் மென்மையான ஆனால் இதயத்தை ஊடுருவும் நறுமணம் அடுக்கடுக்கான அதன் இதழ்கள்
நீர்நிலையில்மட்டுமே காணும் அதன் தன்மை நீரில்வாழ்ந்தாலும் தனது இலைகளின் மீது அதனை பரவ அனுமதிக்காத ஆளுமை ...இதெல்லாம் தாமரையின் சிறப்புகள்.

வள்ளுவர் கூறுவாரே "வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்தனையது உயர்வு" என்று. தாமரைமலரை மனதில் நினைத்தே அவர் இப்படிக்கூறி இருக்க வேண்டும். உள்ளத்தைப்பொறுத்தே உயர்வு என்பதை விளக்க உள்ளத்துக்கே உவமையான தாமரையைக் கையில் எடுத்தார் போலும்! தாமரையின் உயரத்தை தண்ணீரே நிர்ணயிக்கிறது. எனவே தண்ணீரின் உயரம் தாமரையின் உயரம், அதுபோல நம் எண்ணத்தின் உயரமே நம் உயரம் என்கிறார் குறளில்.

பெண்கள் மலர் போன்றவர்கள் என்பதால் தாமரை மலரை உவமைக்கு சொல்வார்கள். தாமரை என்ற பெயர் பெண்ணுக்கு உண்டு.அதன் சம்ஸ்க்ருத வடிவச் சொல் பத்மா நளினி சரோஜா பங்கஜம் எனப் பல,...தாமரைமலர்மீது திருமகள் அமர்ந்திருப்பதால் தாமரை தெய்வமலராகிறது. தாமரைக்கு மருத்துவ குணமும் உண்டு.


கம்பராமாயணத்தில் பெண்கள் ராமனை ,’தாமரைக் கண்ணினால் நோக்கினார்கள் ’என்ற இடம் வருவதை ஒருவர் சொற்பொழிவில் சொல்லும்போது ரசிகர் ஒருவர் குறுக்கிட்டாராம்.

"அந்நிய ஆடவனை பெண் விழி திறந்து பார்க்கமுடியுமா என்ன? நாணம் தடுக்காதோ? பாதி திறந்தும் பாதி மூடியும்தானே பார்க்க இயலும்?" என்று கேட்டாராம்.

சொற்பொழிவாளரும் சட்டென தயங்காமல்,"அதைத்தான்
நானும் சொல்ல வந்தேன்...அதற்குள் நீங்கள் அவசரப்பட்டுவிட்டீர்களே! பெண்கள் தாம்+அரைக்கண்ணால்நோக்கினார்கள்" என்று சமாளித்தாராம்!! தாமரை பாதி மலர்ந்தாலும் அதுவும் வசீகரமானது தானே?

தாமரைக்கன்னங்கள் என்று ஆரம்பிக்கும் பழைய சினிமா பாடல் உண்டு. (தாமரை இடம் பெறும் வேறு திரைப்பாடல்கள் ஏராளமாய் இருக்கும் இல்லையா?)அதன் இளம் சிவப்பு நிறம் பெண்களின் கன்னத்தில் இருந்தால் அது ஒரு தனி கவர்ச்சிதான்!!
மேலும் படிக்க... "தாமரைக்கன்னங்கள்!"

Thursday, January 14, 2010

மணத்துடன் மலருமே!(உரையாடல் கவிதைப்போட்டி)

வீமனப்போல் மிகுந்த பலம் பெற்றாலும்

காமனைப்போலக் கவினுடலம் உற்றாலும்

வில்விசயன் போலவே வெற்றியினைக்கொண்டாலும்

கல்விச்சிறப்பினில் கம்பனைப்போலானாலும்

குற்றமிலாச்செல்வம் குபேரன்போல் சேர்த்தாலும்

எற்றைக்கும் இந்திரன்போல் ஏற்றமுற வாழ்ந்தாலும்

நெஞ்சில் சிறிதும் செருக்கடைந்து நில்லாமல்

அஞ்சிக்கடல்போல் அடக்கமாய் வாழ்ந்திடுக.

கற்றுயர்ந்த சான்றோரைக்கண்டு வணங்கிடுக

ம்ற்றன்னார் சொல்லை மதித்து நட்ந்திடுக

அன்புற்றடியவரை ஆண்டவனாய் எண்ணிடுக

பின்புற்றவர்க்குப் பெருந்தொண்டு செய்திடுக

எல்லோரும் இன்புறவே என்றென்றும் எண்ணிடுக

நல்லோரை எந்நாளும் நண்பராய்க் கொண்டிடுக

பாரோருக் கெல்லாம் பலனும் அளிக்கின்ற

சீரார் திருவரங்கத் தெய்வத்தை சிந்தித்து

நாவார நாளெல்லாம் போற்றிடுக நல்லமணப்

பூவாலே என்றென்றும் பூசிக்க பூவுலகீர்

இங்கிந் நெறியில் இன்புறு வீர்க்குச்

செங்கண் திருமால் அருளால்

மங்கல வாழ்க்கை மணத்துடன் மலருமே!

********************************************

(மரபுக்கவிதை---மருட்பா வியனிலை வகையைச்சேர்ந்தது)
மேலும் படிக்க... "மணத்துடன் மலருமே!(உரையாடல் கவிதைப்போட்டி)"

Thursday, January 07, 2010

நானும் , சங்கரா தொலைக்காட்சியும்!

ஒருவாரமாய் ஆனந்தவிகடன் கல்கி குமுதம் இன்னபிற பத்திரிகைகள் என்று எதுவுமே படிக்காமல், இணையக்குழுக்களில் கவிதை எழுதி துன்புறுத்தாமல், சாட்டில் யாருடனும் அதிகம் அரட்டை அடிக்காமல் ஆழ்வார்களைத்தேடினேன் ...அரங்கநகர்ப்பெருமை மிகும் கதைளைப்படித்து பரணிலிருந்த பழையஆன்மீகபுத்தகங்களை ஹச் என்றுதும்மிக்கொண்டே தூசிதட்டிப்பிரிச்சிக் குறிப்பெடுத்து ஊர் உலகத்துகெல்லாம் போன் ,மெயில் என்று தகவல் சொல்லி ஆர்வமாய் காத்திருந்தேன்.

”என்னது! சங்கரா டிவில் ஸ்ரீரங்கத்திலிருந்து வரும் ராப்பத்து உற்சவ நேரிடை ஒளிபரப்புக்கு நீ மூணுமணிநேரம் வர்ணணை செய்யப்போறியா? பாவம் அரங்கன்!” என்று கிண்டல் செய்தாள் ஆத்ம சிநேகிதி!

”வாவ் க்ரேட்! பட் பாத்துகவனமா பேசு , செல்போனை ஆஃப் பண்ணி வச்சிட்டு மைக்கிலிருந்து கொஞ்சம் எட்டவே இரு ..சில டைம் லைவ் ல பேசறவங்க மூச்சுக் காத்தெல்லாம் காதுல விழும் அதை தவிர்க்கணும் அப்றோம்குறிப்பு நோட்டை தவறவிட்டுடாதே, ” என்றார் முன் ஜாக்கிரதை முத்தண்ணா(என் பதி).


”சங்கரா டிவியா அதெல்லாம் இங்க எங்களுக்கு வராதே அப்பாடி தப்பிச்சேன்!”...உடன்பிறப்பு!



கோடிவீட்டு தாத்தா என் நாவல்களைப்படித்துபலமுறை கண்கலங்கி(எதுக்கோ?:) வாழ்த்துவார் அவரிடம் விஷயம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கப்போனேன்.

பிடி அட்சதையைக் கையிலெடுத்துதலையில் போட்டவர் அப்படியே குனிந்த என் சிரசை நிமிர்ந்தவிடாமல் கையைஅழுத்தி வைத்து தன் கண்களை மூடிக்கொண்டு ஏதோ வாழ்த்து சுலோகம் சொல்ல ஆரம்பித்தார் ...இதோமுடிச்சிடுவார் அதோமுடிச்சிடுவார்னு க‌ஷ்டப்பட்டு குனிஞ்சிட்டே இருந்தேன் அப்படிஇப்படி 6நிமிஷம் கழிச்சி 'தீஈஈர்ர்க்கசுமங்கலிபவ' ன்னு முடிச்சி கண்ணைத்திறந்தார் அப்பாடி இந்த் ஒருவார்தையோட சொல்லி முதல் அரை வினாடில என்னை அனுப்பி இருக்கலாமேன்னு நினச்சாலும்” சுலோகம் திவ்யமா இருக்கு”ன்னு சொல்லி வந்தேன்.



ராப்பத்துவிழாவின் கடைசி நாளில் பேசவேண்டியதில் பிரதானமாய் சொல்லவேண்டியது நம்மாழ்வாரின் கீர்த்திகள் அவரது மோட்சப்பெருமை வரலாறு முதலியன.


நம்மாழ்வார் மோட்சம் என்பது ஸ்ரீரங்கத்தில் நடுஇரவுக்குபிறகு ஆரம்பமாகும் நிகழ்ச்சி .அதனால் ஒலிப்பதிவு. இப்படி நடு நிசியில் செய்யவேண்டியதாகிப்போனது.

மாலை 6மணிவரை ஒழுங்காக இருந்த என் திருவாய்க்கு என்ன ஆச்சொ சட்டென நாக்கெல்லாம் குடிகுட்டிக்கொப்பளங்கள். சின்ன சிவப்பு மாதுளைமுத்துக்களாய் வந்து ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் ஆகும்போல ஆகிவிட்டது. வீடல் எல்லார்கிட்டயும் ஜாடைலபேச ஆரம்பிச்சேன்.(அப்பாடா என்று என் கணவர் உள்ளூற மகிழ்ந்திருக்கலாம் யார் கண்டா?!)

. ஐய்யோ எப்படிஅங்கே போய் சொற்பொழிவாற்றுவது? இதுக்குத்தான் அதிகமா ஆசைப்படக்கூடாதுஙக்றது ஒழுங்கா அப்பப்போ ஏதோ அஞ்சுபத்துநிமிஷம் கால்மணி என்று விளம்பரப்படத்தோடு இருந்திருக்கலாம் குறும்படமும் அதிகபட்சம் நாப்பது நிமிஷம்தான் இப்படி ரெண்டரைமணிநேர நிகழ்ச்சிக்கு வந்து சொல்றீங்களான்னு கேட்டதும் பறந்திட்டு மகிழ்ச்சியாய் தலையை ஆட்டிவிட்டு இந்த அரங்கப்ரியாக்கு வந்த சோதனையைப்பாருங்க!

ரங்கா உனக்கு சொல் அலங்காரம் செய்யகூட நான் லாயக்கில்லைன்னு என்னை இப்படிசெய்துட்டியா என்று மனம் வருந்தினேன்

ஆனாலும்இடையில் மின் தமிழ் நம்பிக்கைகுழும உறுப்பினரும் குடும்ப நண்பருமானமோகனரங்கனிடமும் பிரபல ஆன்மீகப்பதிவர் கேஆரெஸிடமும் அன்புத்தம்பிராகவ்விடமும் நம்மாழ்வார்பற்றிய அதிகப்படி தகவல்களை வாய் சரி இல்லைன்னா என்ன காது நன்றாக இருக்கென்று போனில் பேசி அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.

வாய்ப்புண் வலி அதிகரித்தது.

ஆன்லைனில் சாட்டில் வந்த முத்தமிழ் உறுப்பினரும் குடும்ப நண்பருமானடாக்டர் சங்கர்குமாரிடம், இந்தப்பெண்லைன்(ச்சும்மா ஒருபேச்சுக்கு பெண்சிங்கம்!) ”டாக்டர் டாக்டர்!வெளிலபோக அவகாசமில்லைசீக்கிரம இதுக்கு ஒருவழி சொல்லுங்கனேன் ” என்று கேட்டேன்.

அவர் வென்னீரில் உப்புபோட்டு வாயைக்கொப்பளிக்கச்சொன்னார் பிறகு டிஸ்ப்ரின் மாத்திரை வைத்தியம் சொன்னார். அது என் ஏராள வாய்ப்புண்ணின் நிலைமையை 5% காப்பாற்றியது.

அக்கம்பக்கம் மாமிகள் சொன்னார்கள் இப்படி...

“நல்லெண்னை விட்டுக்கோ தேங்காண்ணை விட்டுக்கோ வாய்ல”

அதையும் செய்தேன் எண்ணைதான் வேஸ்ட் ஆனது

:”நெய் அல்லது தேன் தடவிக்கோ”

தடவினதை ருசித்து சாப்பிட்டுவிட்டேன்!

”தேங்காயை மசிய அரைச்சி பாலெடுத்து வாய்ல விட்டு சுழட்டினாப்ல வச்சிக்கோ”

அது சரி .....தேங்கா உடச்சி அரைச்சி பாலெடுத்து..எங்க நேரம்னு அட்வைஸ் பண்ணினவஙக்ளுக்கு மொழி படத்து ஜோதிகாவா மாறி ஜாடைல நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிட்டேன்!

“ ழையோ ழெப்படி பேயபோயேனோ?’என்று வாய்குளறினதை நானே சகிக்கமுடியாமல்கேட்டேன்.

மணி 8 45

வாசலில் சங்கரா டிவி என்றுமூணுபக்கமும் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு ஜென் கார் ஜம் என்று வந்துவிட்டது அக்கம்பக்கம் எல்லாரும் வேடிக்கைப்பார்க்க ஏறினேன்.


ரெகார்டிங் ரூமில் பாதிபேர் கன்னடக்காரர்கள்.” ராப்பத்து ஏனு பகல்பத்து ஏனு?” என்று ஏற்கனவே பேசத்தவித்த என் வாயைக்கிண்டினார்கள். “அப்றோமா சொல்றேன்” என்று மட்டும் சொல்லவும் அவர்கள்”ஆமா இப்பவே நீஙக் ரொம்ப பேசினா அப்றோம் வாய்ஸ் கட் ஆகிடும் .நோ ப்ராப்ளம்” என்றார்கள் பாவம் அவர்களுக்கு நான் வாய்ஸ்லெஸ் உமன் என்று தெரிய வாய்ப்பில்லைதான்!

மணி 12வரை ஸ்ரீரங்கமிருந்து நேரடி ஒளிபரப்பு கனெக்‌ஷன் சங்கராடிவிக்காரர்களுக்குவரவே இல்லைஏதோ சிக்கல் என்றார்கள்.


. ஒருமணிக்குஎனக்கு தூக்கம் கண்களை இறுக மூடவைக்க, அப்படியே நர்ற்காலியில்சாய்ந்து விட்டேன் !திடீரென ”மேடம் வந்தாச்சு வந்தாச்சு லைவ் டெலிகாஸ்ட்! சக்ஸஸ் சக்ஸஸ்!”என்றது ஒரு குரல்!

அப்பாடி மணி என்ன என்றுபார்த்தால் இரண்டே கால்..சரிதான் இன்னிக்குத்தான வைகுண்ட ஏகாதசிபோல் இருக்குனு சிரித்துக்கொண்டே ஆரம்பித்தேன் எனது வர்ணணையை. என்ன அதிசியம்! தூங்கி எழுந்ததும் கொஞ்சம் வாய்ப்புண் சரியாகி நாக்கு புரண்டு கொடுக்க ஆரம்பித்தது!

எல்லாம் ரெடிபண்ணி குறிப்பு எடுத்து வைச்சதையும் கொஞ்சம் சொந்த சரக்கும் சேர்த்து அந்த சிற்றஞ்சிறுகாலைல நான் அந்த லைவ் ரிலேயில் சொன்னதை யாரும் பார்த்திருக்கலேன்னாலும் கேட்லைனாலும்அரங்கன் கண்டிருப்பார்! கேட்டிருப்பார்!

இரண்டரைமணிநேரம் முடித்ததும் அந்த ஒலிப்பதிவு அறையில் எல்லாரும்” அருமை! ”எனப் புன்னகைத்தார்கள் ,நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன்! ஆனால் அது ’புண்’னகை’ என யார் அறிவார்கள்?!
மேலும் படிக்க... "நானும் , சங்கரா தொலைக்காட்சியும்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.