Social Icons

Pages

Sunday, December 21, 2008

பாரதிக்குப் பல்லக்கு!

தேசியமும் தெய்வீகமும் தனது கண்களாக பாவித்து விடுதலைக் கனல்மூட்டி தமிழ் அன்னையின் அருந்தவப்புதல்வனாக வாழ்ந்தவர் மகாகவி பாரதியார்.

கவிராஜன் கதையில் பாரதியின் இறுதி ஊர்வலத்தைப்பற்றி கவிஞர் வைரமுத்து எழுதும்போது பாரதியின் உடலில் ஒட்டியிருந்த ஈக்களைவிட அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு என்று வேதனையுடன் குறிப்பிட்டிருப்பார்.


அதற்குப் பிராயச்சித்தம் தேடுவதுபோல கடந்த 12 ஆண்டுகளாக பாரதி பிறந்த நாள் விழாவை 4நாட்கள் திருவிழாபோலக்கொண்டாடி வருகிறது சென்னையில் உள்ள வானவில்பண்பாட்டு மையம்.


இந்த விழாவின் சிறப்பு அம்சம் ஜதிபல்லக்கில் பாரதியின் சிலையை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விழாவையொட்டி சிறந்த கவிஞர் ஒருவருக்குப் பொற்கிழி வழங்கி சால்வை போர்த்துவார்கள்.

இந்த‌ ஆண்டு திருவ‌ல்லிக்கேணி பார்த்த‌சார‌தி கோவில் வ‌ளாக‌த்தில் இந்த‌நிக‌ழ்ச்சி ந‌ட‌ந்த‌து. முன்ன‌தாக‌ பார‌தியின் உருவ‌ச்சிலையினை ப‌ல்ல‌க்கில் அம‌ர்த்தி பார‌தீய‌ ஜ‌ன‌தாக‌க்க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ திரு இலக‌ணேச‌ன் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ந‌டிக‌ர் எஸ்விசேக‌ர் க‌விஞ‌ர் திருவைபாபு ம‌ற்றும்க‌விஞ‌ர்பூவைவாகீச‌ன் ஆகியோர் சும‌ந்தார்க‌ள்.

ஜ‌திப்ப‌ல்ல‌க்கு பார்த்த‌சார‌தி கோயில் வ‌ரை ஊர்வ‌ல‌ம் வ‌ந்த‌து.
கோவில் முக‌ப்பில் விழா தொட‌ங்கிய‌து.


பார‌திகுல‌த்தோன்ற‌ல் திரும‌தி ல‌லிதாபார‌தி க‌விஞ‌ர் வாலிக்கு பார‌திவிருதை வ‌ழ‌ங்கினார்
நிறைய‌ க‌விஞ‌ர்க‌ளும் பார‌தி அன்ப‌ர்க‌ளும் இதில்க‌ல‌ந்துகொண்ட‌ன‌ர்.


ஆண்டுதோறும் பார‌தி திருவிழாந‌ட‌த்தும் வான‌வில்ப‌ண்பாட்டு மைய‌த்தின் த‌லைவ‌ராக‌ இருப்ப‌வ‌ர் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ர‌வி.இவ‌ர் செய்திவாசிப்பாள‌ராயிருந்த‌ ஷோப‌னா அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர்.
ஜ‌திப்ப‌ல்ல‌க்கு ஊர்வ‌ல‌ம் ந‌ட‌த்த‌ உங்க‌ளுக்கு எப்ப‌டி எண்ண‌ம் தோன்றீய‌தென‌க்கேட்ட‌போது அவ‌ர் சொன்ன‌து.


:க‌விபார‌தி த‌ன‌து இறுதிக்கால‌த்தில் வ‌றுமையில் வாழ்ந்தார். அவ‌ர‌து ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் எட்ட‌ய‌புர‌ம் ச‌ம‌ஸ்தான‌த்துக்கு உத‌விகோரி க‌டித‌ம் எழுதும்ப‌டி ஆலோச‌னை சொன்னார்க‌ள்.
இத‌ற்கு பார‌தியின் தன்மான‌ம் இட‌ம்த‌ர‌வில்லை. இருந்தாலும் ந‌ண்ப‌ர்க‌ளின் வ‌ற்புறுத்த‌ல் கார‌ண‌மாய் த‌ன‌து புத்தகங்களை பிரான்சிலும் இங்கிலாந்திலும் அச்சிட்டு வெளியிடப் பொருளுத‌வி கேட்டு சீட்டுக்க‌வி எழுதி அனுப்பினார்.

அந்த‌ க‌விதையில் ஜ‌திப்ப‌ல்ல‌க்கு பொற்குவை த்ந்து ம‌ரியாதை த‌ர‌வேன்டும் என்றும் கூறி இருந்தார். பாரதி தனது வாழ்க்கையில் த‌ன‌க்காக‌க் கேட்ட‌து இது ஒன்றுதான் ஆனால் அவ‌ருக்கு எட்ட‌ய‌புர‌ம் ச‌ம‌ஸ்தான‌த்திலிருந்து ப‌திலே வ‌ர‌வில்லை.


என‌வேதான் நாங்க‌ள் பார‌தியின் விருப்ப‌த்தைப்பூர்த்தி செய்ய‌ அவ‌ர‌து பிற‌ந்த‌ நாளில் ஜ‌திப்ப‌ல்ல‌க்கில் அவ‌ர‌து சிலையை வைத்து ஊர்வ‌ல‌ம் செய்கிறோம். அவ‌ருக்கு சால்வையும் பொற்குவையும் வ‌ழ‌ங்கிய‌பின் அத‌னை ஒரு மூத்த‌க‌விஞ‌ருக்கு த‌ருகிறோம்:
மேலும் படிக்க... "பாரதிக்குப் பல்லக்கு!"

Monday, December 15, 2008

பேசுவது கிளியா !

மார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம் என்பது அனைவரும் அறிந்த தகவல் தான்.

திரும்பத் திரும்ப ஆண்டாள் எழுதிய திருப்பாவை நாச்சியார் திருமொழி பற்றி
எழுதுவதிலிருந்து சற்று வித்தியாசமாய் ஏதும் யோசிக்கத் தோன்றிய போது
வழக்கம் போல சந்தேகம் ஒன்று எழுந்தது.

பதிவில் அமர்ந்திருக்கும் பஞ்சவர்ணக் கிளி வேறு பார்வையைக் கவர்ந்தது.

சந்தேகம் என்னவென்றால்...
அதாவது ஆண்டாளின் கரத்தில் கிளி ஏன் அமர்ந்திருக்கிறது என்பது தான் அது.

மீனாட்சி கரத்திலும் உண்டு. அத‌ற்கும் கார‌ண‌ம் ச‌ரி வ‌ர‌த் தேவையாக‌ இருக்கிற‌து.

கிளி நாம் சொல்வ‌தை திரும்ப‌ச் சொல்லும் என்ப‌தால் என்று சில‌ர் சொல்கிறார்க‌ள். கிளி சுக‌ப்ர‌ம்ம‌முனி அதாவ‌து சிவ‌ன் பார்வ‌திக்கு வேத‌ம‌றையை கூறிய‌போது குகையில் ம‌றைந்திருந்து கேட்ட‌து.அதனால் வேத‌ம் அறிந்த‌ப‌ட்சி என்ப‌தாலா அல்ல‌து அர‌ங்க‌விமான‌ம் காவேரி ம‌ண்புதைய‌லில் மூழ்கி காடுகளால் சூழப்பட்டுக்கிட‌ந்த‌போது அங்கிருந்த‌ ம‌ர‌த்தின் மீது அம‌ர்ந்திருந்த‌ கிளி ஒன்று அத‌னைப்ப‌ற்றி அங்கு வேட்டைக்கு வ‌ந்த‌ அர‌ச‌னிட‌ம் தெரிவித்து கோயிலை மீட்ட‌தாலா........

கிளியிட‌ம் ஆண்டாள் தூதுவிட்ட‌பாசுர‌ம் இருக்கிற‌தா என்ன‌ குயில் மேக‌ம் என்று ப‌ல‌வ‌ற்றை அவ‌ள்க‌ண்ண‌னிட‌ம் த‌ன‌க்காக‌ தூது அனுப்பிய‌தாக‌ம‌ட்டுமே ப‌டித்த‌ நினைவு.

ப‌ற‌வைக‌ளில் கிளி சைவ‌ம் என்கிறார்க‌ள் வேறுப‌ற‌வை அப்ப‌டி உண்டா என‌தெரிய‌வில்லையே!

சொல்ல‌வ‌ல்லாயோ கிளியே என்று பார‌தி பாடுகிறார்! கிளியையே கேட்டுவிட வேண்டியதுதானா:)

என் ச‌ந்தேக‌த்தை தீர்க்க‌வ‌ல்ல‌ அறிஞ‌ர் பெரும‌க்கள் யாரோ, வாருங்க‌ள் , வ‌ந்து ச‌ற்றே விள‌க்குங்க‌ள் ந‌ன்றி!
மேலும் படிக்க... "பேசுவது கிளியா !"

கொடுப்பதும் கிடைப்பதும்!

ஒருதந்தையும் மகனும் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஒரு மலைமீது ஏறி அதன் உச்சியை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். திடிரென மகன் கல் ஒன்றுதடுக்கி கீழே தடுமாறிவிழுந்துவிட்டான் , \ஆ\ என்று கத்தினான்.

\ஆ\ என்று எதிரொலி வந்தது.


என்ன இது என்றான்

என்ன இது என்று மறுபடி எதிரொலிகேட்டது.

என்ன நடக்கிறதெனப்புரியாமல் சிறுவன் தந்தையை குழப்பமாய் பார்த்தான்.

புன்னகைபுரிந்தபடியே அந்தத்தந்தை மலையை நோக்கிக்கூவினார்.

நான் உன்னைப்பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என்றார்.

நன் உன்னைப்பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என பதில்வந்தது.

நீ ஒரு வீரன் என்றார் அதே பதிலாக வந்தது.

வியப்புடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மகனிடம் அவர் சொன்னார்.

:இதனை எதிரொலி என்பர்கள். ஆனால் ,மகனே! உண்மையில் இதுதான் வாழ்க்கை !

வாழ்க்கை என்பது நமது செயல்களின் பிரதிபலிப்பே.

இந்த உலகத்தில் உனக்கு நிறைய அன்பு வேண்டுமானால் நீ நிறைய அன்பு செலுத்தவேண்டும் .உன் இதயத்தில் அன்பு சுரக்கவேண்டும்.

நட்பு பெருகவேண்டுமானால் நீ பிறரோடு நட்பாய் இரு.

வாழ்க்கை , இந்த உலகிற்கு நீ எதைக்கொடுக்கிறாயோ அதனையே திருப்பிக்கொடுக்கும்!:



(பின்குறிப்பு..வாசித்ததில் பிடித்ததால் பகிர்ந்துகொண்டபதிவு இது!)
மேலும் படிக்க... "கொடுப்பதும் கிடைப்பதும்!"

Sunday, November 30, 2008

ஏ, தீவிரவாதியே!

தீவிரவாதிக்கு ஒரு கவிதை.
****************************
மனிதகுலத்தில் பேதமுண்டா
மனத்தில் முள்தான் வளர்ந்திடுமா
இனிய உறவுகள்பல இருக்க
இதயம் நஞ்சாய்ப்போனதென்ன?

சண்டை வளர்க்கவிடலாமா
சதிகள் தீட்டப்படலாமா
மண்ணில்பல்லுயிர்மடிந்துவிழ
மனிதன்காரணமாகலாமா?

உலகம்பகைவர்கள்போர்க்களமா
உன்னையும் அதிலே பார்ப்பாயா
இளமை வலிமை இருப்பதனால்
இத்தனைப்பேரைக்கொல்வாயா?

எண்ணம் உயர்வாய் மாறாதா
எங்கும் அமைதி நிலவாதா
பண்ணும் பழிகள் மாறாதா
பாரில்தீவிரவாதம் தொலையாதா?

இன்னமும் இருளில் அழியாதே
இன்னல்புயலை அழையாதே
உன்னை உணரதயங்காதே
உலகில்தர்மம் அழவே நடக்காதே.
மேலும் படிக்க... "ஏ, தீவிரவாதியே!"

Friday, November 28, 2008

புது வெள்ளம்(சிறுகதை)

ஹேமாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

திருச்சி டவுனுக்குப் போய்விட்டு மதியமே திரும்பிவருவதாக சொன்ன பெரியப்பாவையும் பெரியம்மாவையும் இன்னும்காணோம்.மணி நாலாகப்போகிறது.

வெளியே ஹோ என்று மழை! அதன் ஆரம்பகட்டத்திலேயே மின்சாரம் பறிபோய்விட்டது. நேற்று நள்ளிரவுலேசாய் அடித்தகாற்றுக்கு டெலிபோன் இணைப்புகள் எல்லாம் அறுந்துவிட்டன.செல்போன்கள் அதிகம் ஆக்கிரமிக்காத சிறுக்஢ராமம் அது.

மழையின் இரைச்சலைக் கேட்க பயந்து வீட்டு ஜன்னல்களை எல்லாம் அடைத்து இருந்தாள் ஹேமா. இப்போது அவள் பார்வைக்கு தப்பமுடியாதபடி ஜன்னலைப் பிளந்துகொண்டு வீட்டிற்குள் வெள்ளம் வர ஆரம்பித்துவிட்டது. செக்கசேவேலென்று நொப்பும் நுரையுமாய்- அடியம்மா என்னவெள்ளம் . என்ன வெள்ளம்!

இனி கீழே இருந்தால் ஆபத்து .
ஹேமா மாடிக்கு ஓடினாள். அங்கிருந்துபார்த்தபோது கிராமத்தின் எல்லா வீடுகளுமே தண்ணீரில் மிதப்பது தெரிந்தது.

எதிர்வீடு அதற்கு அடுத்தவீடு என்று தெருமுழுதுமே ஏற்கனவே காலியாகிவிட்டிருந்தது. எல்லோரும் மழைவலுத்ததுமே ஊரைவிட்டுப்போய்விட்டார்கள்போலிருக்கிறது. ஜன்னல்களைமூடிவிட்டு தனியேவிட்டில் இருந்ததால் ஹேமாவை யாருக்குமே தெரியவில்லை .

இப்படியுமா மனிதர்கள் ?ஆபத்துவரும்போது 'அடிஹேமா வயசுப்பெண்ணாச்சேடிம்மா, தனியாஇருக்காதே வெளியே வா தப்பித்துக்
கொள்ளலாம்?' எனஒருகுரல்கொடுக்கமாட்டார்களோ ?

அவர்களைகுற்றம் சொல்லி என்ன ?யாருக்குமே அப்போதைய நிலையில் எதுவும் தோன்றாதுதான்.

மனதை சமாதனப்படுத்திக்கொண்டு மாடியில் நின்று பார்வையை வீசிப் பார்த்தாள் ஹேமா.

ஒரு ஈ காக்கையைக்காணோம்! அதோ வடக்கே தென்னந்தோப்பில் மரங்களெல்லாம்கூட பாதிக்குமேல் மூழ்கிவிட்டன. அக்ரஹாரத்தில் மேலக்கோடியில் உள்ள கோவில்கோபுரம்தெரிகிறது.கோவிலுகுள்ளும் நீர் புகுந்துவிட்டதா என்ன?

ஹேமா கையெடுத்துக் கும்பிட்டாள்.அந்தக்கோவிலுக்கு பெரியம்மாவுடன் வெள்ளிக்கிழமை தவாறாமல் போவாள்.

'தாயில்லாப்பொண்ணுடி...வேண்டிக்கோ நெய்விளக்குபோட்றேன் தாயே நிறைவான புருஷன்
கிடைக்கணும்னு" என்பாள் பெரியம்மா மீனாட்சி

ப்ளஸ்டூவரைபடிக்கவைத்துவிட்டு பிறகு ஹேமாவை கிராமத்துப்பள்ளிக்கூடத்துகுழந்தைகளுக்கு ட்யூஷன் எடுக்க வைத்துவிட்டாள்மீனாட்சி.

வீட்டில் பெரியம்மா வைத்ததுதான் சட்டம்.பெரியப்பா மகாதேவன்,ஓய்வுபெற்ற வங்கிக் கணக்காளர்.
விபத்தில் இறந்துபோன தன் தம்பியின் ஒரேமகள் என்பதால் ஹேமாவிடம் தாராளமாய் பாசத்தைப் பொழிபவர். உயர்ந்த எண்ணங்கள் இருந்தாலும் அதை செயல் படுத்த தயக்கம் காட்டுபவர்...வீட்டில் மனைவியிடம் ஏற்பட்ட பயம் அவருக்கு வெளியிலும் தொடர்ந்ததோ என்னவோ தானாக வலிய யாருக்கும் உதவிசெய்ய முன்வரமாட்டார்,மனைவியின் அனுமதி கிடைத்துவிட்டால் வாரிச்சுருட்டிக்கொண்டு ஓடுவார் .

குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும்போதே குழந்தைகளிடம் வாழ்க்கைப்பாடம் கற்றுக்கொண்டாள் ஹேமா. கள்ளம்கபடம் வேற்றுமை பாராட்ட தெரியாதகுழந்தைமனது என்றும் மனிதர்களிடம் நிரந்தரமாயிருக்கக் கூடாதா? வளர வளர மனவயலில்தான் எத்தனை களைகள்!

பெருமூச்சு விட்டபடி ஹேமா இப்போது சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தாள்.

கல்லணை உடைந்துவிட்டதா என்ன ?எதனால் இப்படிஒருவெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது?

வீடே மெல்லமெல்ல அமிழ்வதுபோலபிரமையானது.

தாத்தா கட்டியவீடு. அதைக்கட்டிய கதையை பாட்டி சொல்லக் கேட்கணுமே! அந்த நாளில் சுண்ணாம்பும் வெல்லப்பாகும் கோழிமுட்டையும் அரைத்துஅரைத்துக் கட்டினார்களாம். கல்லணையே
உடையுமானால் தாத்தா கட்டிய வீடு எம்மாத்திரம்?

ஹேமா அச்சத்துடன் தெருவையே பார்த்தாள்.
தெருவா அது? நதி ஒன்று சுழித்துசுழித்து ஓடிக்கொண்டிருப்பதுபோலவெள்ளப்பிரவாகம் எங்கும்!

கோயில் தர்மகர்த்தா மாதவாச்சாரியின் வீட்டுக்கல்யாணத்துக்கு இன்னும் ஒருவாரம்தான் இருக்கிறது. மாப்பிள்ளை பம்பாயாம்.
கல்யாணத்துக்கு முதல்நாள் மாப்பிள்ளைக்கு ஏதோ முக்கிய மீட்டிங்காம் அதைமுடித்துக்கொண்டுவருவதாய் சொன்னதாக தர்மகர்த்தா நேர்றுகோயில்போனபோது பெருமையாய் கூறிக்கொண்டார்.கிராமத்துக்காரர்களுக்கு பம்பாய் டில்லியெல்லாம் இன்னமும்அமெரிக்காவுக்கு சமம்!

ஹேமாவின் பெரியம்மாவும்பெரியப்பாவும்கூட ஹேமாவின் கல்யாண விஷயமாகத்தான் டவுனுக்குப் போயிருக்கிறார்கள்.பையனுக்கு தில்லைநகரில் பாங்க் வேலையாம். ஜாதகம் பொருத்தம்பார்த்து பிள்ளைவீட்டிலும் பேசிப்பார்த்து வருவதாக காலையிலேயேகிளம்பிப்போனார்கள்.அப்போதே தூறலாக இருந்தது. அப்புறம்தான் மழை சீறிஅடிக்க ஆரம்பித்தது.புயலாய் காற்று பேசியது.

மணி ஆறுஆகிவிட்டது,இன்னமும் டவுன் போனவர்கள்வரவில்லை. தகவல் சொல்ல போன் வீட்டில் வேலை செய்யவில்லை.

கீழே என்ன ஆயிற்றோ ?

நல்லவேளை, ஓடிவந்து எல்லா முக்கிய சாமான்களையும் ஒருத்தியாகவே மாடிக்குகொண்டுவந்துவைத்துவிட்டாள்.

அதுவரைபுத்திசாலித்தனம்தான்.

தெருவில்-கண்ணுக்கு எட்டியதொலைவில் -விளக்கு ஏதும் இல்லை. இருட்ட ஆரம்பித்துவிட்டது.
நீச்சலடித்து ஓடிவிடலாம் என்றால் நீச்சலேதெரியாது. ஏதேதோ பாடம் கற்கிறோம் வாழ்க்கையின்
போராட்ட காலங்களில் நம்மை தற்காத்துக்கொள்ளும் கலைகளை அதிகம்பேர் கற்றுக்கொள்ளத்
தவறுகிறோம்.

அழுவதைதவிர வேறுவழிதெரியாமல் அழத் தொடங்கியது அந்த இருபத்திமூன்றுவயதுகுழந்தை.

பயத்திலும்கவலையிலும் கண் அயர்ந்துவிட தூங்கியேவிட்டாள்.

யாரோ நிரில் நீந்திவரும் சத்தம் சளக் சளக் என்ற நீரசைவின் ஒலியில் கேட்கவும், திடுக்கிட்டுவிழித்தாள்.
மாடிப்படிகளில் காலடி ஓசை, தீனமாய் கேட்டது.

"ஏமா?"

அவள் நிமிர்ந்தாள்.



"ஏமா...இங்கனயா இருக்குற ?வெள்ளம் வந்து ஊரே காலியாயிப் போச்சே உனக்குத்தெரியாதா, ஏமா?'

ஹேமா திகைப்புடன் அவனையே பார்த்தாள்.

உதயனா? ஆமாம் அவனே தான்.

அவனைக் கண்டதும் அழுகைபீறிட்டது.

"அளுவாத ஏமா...வா ,வா! படகு இருக்குது ...நான் கொண்டந்தேன் ...தப்பிச்சிபோயிடலாம் வா"

வாரிசுருட்டிக்கொண்டு எழுந்தாள் .மாடிப்படிகளில் இறங்கி கீழே வந்ததும் தான் பரவிநிற்கும் நீரின் ஆகிருதி மனதுக்கு பிரமையைகொடுத்தது.

"உதயா வீடுபூரா தண்ணி சூழ்ந்திருக்கே வெளிலஎப்படிபோகிறது?"

"சும்மா வா ஏமா...வாசலுக்கு கஷ்டப்பட்டு போயிட்டா அங்கன படகு வச்சிருக்கேன் படகிலே ஏறிட்டுபோயிடலாம்..ஊர்கோடி சத்திரம் கொஞ்சம் உயரமான இடத்துல இருக்குறதுனால அங்க வெள்ளம் புகுந்துக்கல..எங்க சனம் எல்லாம் அங்கன போயிட்டாங்க.. நான் தான் இன்னும் யாரெல்லாம் வெள்ளத்துல தவிக்கிறாஙக்ளோன்னு தேடி வந்தேன்"

" இந்த தண்ணீயப் பாத்தாலே பயமா இருக்கு எனக்கு"

"அப்படி பயந்துகிட்டு வூட்ல ஏன் உக்காந்துட்டு இருந்தே ஏமா?"

"நான் உட்காரலே ..என்னை விட்டுட்டு அவங்கபோயிட்டாங்க.. தனியா நான் எங்க போவேன் சொல்லு?"

"சரி வா நேரமாவுது"

அவன் முன்னே தண்ணீரில் இறங்கி நடந்தான் .ஹேமா தொடர்ந்து இறங்கினாள். மார்பளவு தண்ணீரைப் பிளந்துகொண்டு வாசலுக்கு வருவதற்குள் இரண்டுஇடங்களில் கால்தடுக்கி விழுந்துவிட்டாள்.

"பாத்து வா ஏமா"

மறுபடி அவள்விழுமுன் கைகொடுத்து அவளைப்பிடித்துக் கொண்டான் உதயன்.

படகில் உட்கார்ந்ததும் கொஞ்சம் பயம் விலகினமதிரி இருந்தது. கொஞ்சம்தான் படகு கவிழாமல் நிலைகுலையாமல் இருக்கணுமே எனநினத்தது மறுபடி முகம் வெளுத்துப்போனது .

உதயன் அதை கவனித்தவன் போல"ஏமா! பட்டணத்துப்பொண்ணுங்க எல்லாம் எவ்ளோ தைரியமா இருக்காங்க .,நம்ம ஊர்லயும் பொண்ணுங்க தேறிட்டாங்க..,நீதான் இந்த காலத்துல இப்படி பயந்தபொண்னா இருக்கற?' என்றான்.

அவன் படகை செலுத்தும்போது வெள்ளத்தோடு போராடுவதையும் அவனுடைய இரும்புக்கரங்கள் அப்படியும் இப்படியும் துடுப்புகளை வலிப்பதும் தெரிந்தன.

'ஊர் பூரா மூழ்கிடுத்தா உதயா?"

"ஆமா ஏமா...நானும் நீயும் சேர்ந்து ஒண்ணாங்கிளாஸ்படிச்ச பள்ளிக்கூடமும் முழ்கிடிச்சி... ரொம்ப சேதம்....டிவிக்காரங்க வந்திட்டே இருக்காங்களாம்"

"கல்லணைஉடைஞ்சிபோயிடுத்தா என்ன?'

உதயன் சிரித்தான். பிறகு "கல்லணைஉடையுமா ? அது உடைஞ்சா உலகமே அழிஞ்சிடுமில்ல?" என்றான்.

"ஆமா...நான் வீட்ல தனியா இருக்கறது எப்படி தெரிஞ்சுது உனக்கு?"

"ஜோசியம் பாத்து வந்தேன் ஏமா"

"விளையாடாம சொல்லேன் உதயன்?"


"ஒருயூகம்தான் ஏமா..காலைல உங்க பெரியம்மா பெரியப்பா டவுன் பஸ் ஏறினத பொட்டிக்கடைல நின்னுட்டு இருந்தப்போ பாத்தேன். அவங்க திரும்பி வரலைனு தெரியும் எனக்கு ஏன்னா டவுனு பஸ் எதுவும் மதியமிருந்து ஊருக்குள்ள வரல.காவிரிஆறு சிந்தாமணிக்கரைல முதல்ல உடைஞ்சிடுமே! அங்கனயும் மழைவெள்ளம்னு பொட்டிக்கடை ரேடியோ செய்தி சொல்லிச்சி. அப்பத்தான் நீ என்ன ஆனியோன்னு
யோசிச்சேன் ..சரின்னு ஓடியாந்தேன்.."

"நீமட்டும் வரலேன்னா என்கதி என்ன ஆறது உதயா?"

"நான் வராட்டி என்ன ஏமா? வேற யாராச்சும் வந்து காப்பாத்துவாங்க ஏன்னா கடவுள் நல்லவரு"

"கடவுள் நல்லவரா? எனக்கு அப்படிதோணல உதயா !கடவுள் நல்லவர்னா என் அம்மாஅப்பாவை என்
சின்னவயசுலேயே ஏன் பறிக்கணும் ? உன்னை ஏன் இப்படி ஏழ்மைகுடும்பத்துல பொறக்கவச்சி படிக்கவிடாமல் ஊர்லகூலிவேலை செய்யவைக்கணும்?"

"அதுக்கெல்லம் காரணம் இருக்கும் ஏமா. எல்லாம் ஒரு நிலைல இருந்திட்டா மனுஷன் தலைகால் புரியாமபோயிடும் பாரு! அதுக்குதான்!"


உதயன் ,ஹேமாவின் பெரியப்பாமகாதேவனின் வயலில் வேலைபார்க்கும் இளைஞன். சாதாரணமாக அவன் ஊருக்குள் யார் வீட்டுக்குள்ளும் வரமாட்டான் .இடுப்புத் துண்டை கையில் ஏந்திக்கொண்டு தலைகுனிந்தபடி வாசலோடு நின்றுபேசிபோய்விடுவான்.

மாடுகன்றுகளைக் குளிப்பாட்டி வீட்டுத் தொழுவத்தில் கட்ட வரும்போது திண்ணையில் ஹேமா,பள்ளிக்குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதை நின்று கவனிப்பான். பரஸ்பரம் சின்ன புன்னகைகளோடுதான் அவர்களின் நட்பு.

இன்று தான் அவனிடம் அதிகம்பேசி இருக்கிறாள்.

படகுநின்றது.

"இறங்கு ஏமா. சத்திரம் வந்திடிச்சி..'"என்றான்.

பதட்டத்துடன் அவசரமாய் இறங்கியதில் கால்வழுக்கிவிட அப்படியே உதயனின்மீது சாய்ந்து விட்டாள் ஹேமா.
கைத்தாங்கலாய் அவளைப்பிடித்துக்கொண்டு நிதானமாய் மண்டபம் நோக்கிநடந்தான் .அவனுக்கு முன்பே அங்கே சிலர்இருந்தார்கள்.

"ஏமா இப்படி உக்காரு" என மேடான திண்ணைபோலிருந்த ஒரு இடத்தைக்காட்டினான்.

ஹேமா களைத்துப் போய் உட்கார்ந்தாள்.மழையின் சாரலில் உடம்பு நடுங்கியது.
கண்ணைஇருட்டுக்கொண்டுவர அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள்.

"ஏமா! ஏமா!: அழைத்தான் உதயன்.

"உம்ம் "
"என்ன செய்யுது? ஏன் முகமெல்லாம் இப்படி சிவந்திருக்குது?" என்றுகேட்டபடி அவன் ஹேமாவின்நெற்றியில் தயக்கமுடன் கைவிரல்வைத்துப்பார்த்தான்.

அனலாய் கொதித்தது.

"காச்சலடிக்குதே ஏமா?"

"ஹ்ம்ம்"

"இங்க வென்னிதண்ணிக்குக்கூட வளி இல்லயே?"

உதயன் சுற்றுமுற்றும்பார்தான். எதிரேஒருமூலையில் தர்மகர்த்தாவின்குடும்பம் அமர்ந்திருக்கவும் அவர்களிடம் ஓடிச்சென்றவன்
"ஐயா !ஏமாக்கு காச்சலடிக்குது "என்றான் கலங்கியவிழிகளுடன்.

"அதுக்கு என்ன செய்யணும் இப்போ? வெள்ளம் வடியட்டும் முதல்ல... நானே தைமாசத்துல வைக்காம பொண்ணுக்குக் கார்த்திகைல கல்யாணம் வச்சிட்டு நெல்லும் பருப்பும் வெள்ளத்துல போறத பாத்து அவஸ்தப்படறேன் நீவேற இப்போ வந்து காச்சல் மண்ணாங்கட்டின்னு புலம்பாத போடா.." மாதவாச்சாரி சீறிவிழுந்தார். அவர் மனைவி உதட்டை சுழித்தாள். பக்கத்தில் கண்ணில்கனவுகளுடன்அந்த கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட பெண்.

உதயன் திரும்ப ஹேமாவின் அருகில் வந்தான்," ஏமா ,நீ ஏதும் சாப்டியா?' என்றான் கவலையாக.

"எனக்கு எதுவும் வேணாம்"

"கேட்டதுக்கு பதில் சொல்லு ஏமா.ஏதும் சாப்புட்டியா இல்லியா?"

"கார்த்தால சாப்டேன், இப்போ பசீ இல்ல உதயா"

"சுருண்டு படுத்ருக்கியே ஏமா! பசிதானே? நாலு நாளு ஆனாலும் சாப்பிடாம எனக்கெல்லாம் பழக்கமுண்டு .உனக்கு அப்படிகிடையாது இரு .எங்காச்சும் யாராச்சும் பொட்டலம் தராங்களான்னு பாக்றேன்..":

"ஒண்ணும் வேணாம் .. நீ இங்கேயே இரு.. எதுன்னாலும் இங்க இருக்கற எல்லாரும் சேர்ந்துபோவோம்.."

உதயன் சிரித்தான். " பாத்தியா ஏமா.. தண்ணீ வேறுபாடு பாக்காம எல்லாத்தியும் அடிச்சிட்டுப்போகும். .வெள்ளம் வந்திச்சின்னா எல்லாரும் ஒண்ணாயிடறோம். இந்தவெள்ளம் வராட்டி அந்த தர்மகர்த்தா ஐயா இங்கவந்து எங்க சாதிசனங்களுக்கான இந்த சத்திரத்துல வந்து உக்காருவாரா? "

"தர்மகர்த்தா பற்றி எனக்கு அக்கறை இல்லை, ஆனா எனக்கு அதெல்லாம்கிடையாது .அப்புறம் பாரதிகவிதைகளைப்படிச்சபெண் அப்படீன்னு என்னை
சொல்லிக்கவே முடியாது..ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றவர் பாரதி தெரியுமா?"

" நானும் நாலுக்ளாஸ் படிச்சேனே..கொஞ்சம் இதெல்லாம் விளங்கும் ஆனா ஊரு கட்டுப்பாடு இருக்குல்ல..இப்படி நான் உன்பக்கத்துல உக்காந்திட்டு இருக்கறதே பாவம்.அதர்மம்"

"பாவமாவது புண்ணீயமாவது? மனசு சுத்தமா இருந்தா அதுவே போதும். அதுக்குமேல தர்மம் எதுவும் இல்லை"

"இதெல்லாம் வெறும்பேச்சு ஏமா. எதிரே உக்காந்திட்டு நம்மையே பாத்திட்டு இருக்கற இந்த தர்மகர்த்தா ஐயா நாளைக்கே ஏதும் நம்மைப்பத்தி கதை கட்டிவிடுவாரு ..."

ஹேமா அவனையேபார்த்தாள். அவன் சொல்வது உண்மைதான். காலம் எவ்வளவுமாறினாலும் சிலமனிதர்கள் மாறுவதேஇல்லைதான்.

தர்மகர்த்தா லேசுப்பட்டவரில்லை. அவருடையமனவியும் முன்பு ஒருசமயம் பள்ளி ஆசிரியை பத்மாவிற்கு சூட்டியபட்டத்தை ஹேமாவினால் மறக்கமுடியவில்லை. வம்புமடத்தலைவி அந்த பெண்மணீ.

ஆபத்து சமயத்தில் உதவுவது தான் மனிதத்தன்மை., அதைத்தான் உதயன் செய்தான் ,இதுதவறாகிவிடுமா?

உதயன் தன் சட்டைபாக்கெட்டிலிருந்து ஒரு பிஸ்கட் பொட்டலம் எடுத்தான். பிரித்து ஹேமாவிடம் நீட்டினான்.

"இந்தா ஏமா சாப்பிடு"

"வேணாம்"

"ஏன் எமா அவரு பாத்துடுவாருன்னு தானே வேணாம்கிறே?"

"அதெல்லாம் இல்ல எனக்குப்பசி இல்ல.."

உதயன் மௌனமாய் கீழே உட்கார்ந்தான் மழை விட்டுவிட்டு பெய்தபடியே இருந்தது.

அந்த சத்திரம் பழையகாலக்கட்டிடம். நாட்டு ஓடுகளால் வேய்ந்த கூரை .தண்ணீர்மெல்லமெல்ல சத்திரத்திற்குள்ளும் நுழைய ஆரம்பித்தது, அதைக்கண்டதும் அலறிபுடைத்துக்கொண்டு உள்ளே இருந்த மக்கள் வெளியே வந்தனர்.நீரில் நீந்தியும் போராடி எதிர்நீச்சல்போட்டபடியும் கடந்தனர். தர்மகர்த்தா குடும்பமும் ஹேமாவும் உதயனும்மட்டுமே அங்கிருந்தனர். ஹேமாவுக்கு நினைவே போகும் அளவுகாய்ச்சல் அடித்தது. அந்த நிலையில் அவளை அங்கே விட்டுவிடவோ வேறிடம் கொண்டுசெல்லவோ வகையற்று திகைத்து அமர்ந்துவிட்டான் உதயன்.

தர்மகர்த்தாவைப் பார்த்து ,"வெண்ணாத்திலே உடப்பு எடுத்திடிச்சாமே?" என்று கேட்டான் உதயன்.

"உம்" என்று உறுமினார் அவர். அவனோடு பேசவும் பிடிக்காத வெறுப்பு முகத்திலும் குரலிலும் தெரிந்தது.
அப்போது சத்திர சுவரை கவனித்த உதயன் உரத்த குரலில்,

"சாமி !இப்படி நாங்க உக்காந்திருக்கிற பக்கம்வந்திடுங்க ... அங்க ஆபத்துவரப்போகுது" என்றான் .

அவரும் அவரது குடும்பமும் அவசர அவசரமாய் இந்தப்பக்கம் வரவும் சுவர் சரிந்து விழவும் சரியாக இருந்தது. நீர் அரிப்பினைத்தாங்காமல்பயங்கர ஒலியுடன் சாய்ந்த சுவர் வெள்ளத்தில் கரைந்து ஓடியது.

சத்திரம் இப்போது அந்தரத்தில் நிற்கும் சர்க்கஸ்காரனைப்போல தள்ளாடியது.

"உதயா! உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னெ தெரியல ,, கடவுள்மாதிரி எங்கள காப்பாத்திட்டேப்பா.."
நெகிழ்ந்தார் மாதவாச்சாரி.

"தெய்வம் மனித ரூபத்தில் வரும்னு சொல்வா.. அது இப்போ உண்மையா போச்சு" என்று கைகுவித்தாள் அவரது,மனைவி. மகள் கல்யாணக்கனவுகளில் இருந்தாளோ என்னவோ புன்னகையுடன் காணப்பட்டாள்.

ஹேமாவுக்குஇதுஒன்றும் தெரியவில்லை. காய்ச்சல்வேகத்தில் அனத்திக்கொண்டு கிடந்தாள்.

உதயன் சிரித்தபடி," எல்லாத்துக்கும் மேல சாமீ இருக்காரு ..அவருக்கு தெரியாத கணக்குவழக்குங்களா நமக்குதெரியபோகுது?
சரி இனிமே இங்க இருக்க லாயக்கில்லங்க.. வாங்க வேற இடம்போயிடுவோம்.."

"ஆமா உதயா! உன்படகில எங்களையும் கூட்டிண்டுபோ. அடுத்தவரம் ஜனனிக்குகல்யாணம் தெரியுமோல்லியோ? இப்போ எங்களைகரைசேர்த்துடுப்பா மகராஜனா இருப்பே" கெஞ்சினார் மாதவாச்சாரி.




"என்னைக் கும்பிடாதீங்க சாமி ..நான் ரொம்ப சின்னவன் எல்லாத்திலியும்"

"இல்லடாப்பாநீ ரொம்பபெரியவன்"

உதயன் படகைப்பார்த்தான் .அவர்களைப்பார்த்தான் .படகில் நால்வர்மட்டுமே செல்லலாம் .தர்மகர்த்தா குடும்பத்திலேயே மூவர்
இருக்கிறார்கள்,ஹேமாவோடு நால்வர். அவர்களைப்படகில் ஏற்றி தான் கீழேயிருந்து கையினால் வலித்துக்கொண்டு செல்ல தீர்மானித்தான்.

"ஏமா ஏமா எந்திரி" என்று ஹேமாவை அழைத்தான்.

"நேரமாச்சு உதயா..ரொம்ப இருட்டறதுக்குள்ள போயிடலாம் .. எங்கள காப்பாத்துப்பா!"

"ஏமா?'
அவள் எழுந்திருக்கவே இல்லை.

"சரி சாமி .. நிங்கள்ளாம் படகுல ஏறுங்க" என்றுகூறி ஹேமாவை தூக்கிதோளில் சாய்த்து ஏற்றிக்கொண்டான் உதயன். படகுக்கு அவர்கள்வரவும் சத்திரத்தின் எஞ்சியபகுதியும் சரிந்து விழுந்தது.

"ஐயோ! பிழைச்சோம் " வீறிட்டார் மாதவாச்சாரி.


ஐவரையும் ஏற்றிக்கொண்டு தான் நடந்தபடியே படகினை தள்ளிக்கொண்டுவந்தான் உதயன்
படகு,நீரைப்பிளந்து செல்ல அதற்கு ஈடுகொடுத்து தள்ளுவது எளிதாக இல்லை. உயிரைக்கையில்பிடித்து வேகமாய்தள்ளினான் . மேல்மூச்சு
வாங்கியது. கழுத்துவரை நீரில் இருந்துகொண்டு கைகளினால் எப்படிதான் தள்ளினானோ ?

ஹேமா மயக்கம் தெளிந்தவள் விழித்துப்பார்த்து," எங்க இருக்கோம்?' என்றாள்

"சத்திரம் முழுக்க இடிஞ்சிபோச்சு.. உதயந்தான் நம்ம காப்பத்தினான்" என்றார் மாதவாச்சாரி.

எங்கோ தொலைவில் குரல்கேட்டது .

"ஹேமா ஹேமா!"

யாரு பெரியப்பவா?

ஆமாம் அவர்தான்.

"ஐயா! கவலைப்படாதீங்க.. ஏமாவை நான் அங்கிட்டு கரைபக்கம்கொண்டாந்து சேர்த்திடறேன்" என்று பதில்குரல் கொடுக்க வாய்திறந்தான் உதயன் வார்த்தையே வரவில்லை உடம்புசோர்ந்து நா வறண்டுபோனது.

படகுமெல்ல நகர்ந்தது. சுற்றிசுற்றிவந்தது ஆடிகவிழ்ந்துவிடும் போலிருந்தது, அப்போதெல்லாம் தோள்கொடுத்து தாங்கிப்பிடித்தான் உதயன்.

ஒருவழியாக வெள்ளம் வடிந்த கரையை அடைந்தது படகு .
அங்கே கையில் டார்ச்லைட்டுகளுடன் பலர் நின்றுகொண்டிருந்தார்கள்.

" இன்னும் சிலநிமிஷம்தாமதிச்சிருந்தா எல்லாரும் செத்துப்போயிருப்போம்" என்றபடி படகினின்றும் இறங்கினார் மாதவாச்சாரி.

தொடர்ந்து இறங்கின அவர்மனைவி,"புனர் ஜென்மம் தான் போங்கோ" என்றாள் பெருமூச்சுவிட்டு.

"என்னாச்சு..நாங்க டவுன்ல மாட்டிண்டோ ம்..வெள்ளம் கொஞ்சம் வடிஞ்சதும் புறப்பட்டு வந்தோம்...ஹேமா உனக்கு ஒண்ணுமில்லையே?" மகாதேவன் குழப்பமாய் கேட்டார்.

"ஆமா இந்த உதயன் லூஸ்மாதிரி நின்னுண்டு இருந்தான். நாந்தன் படகை எடுடா ஊர்வெளில வெள்ளம் வடிஞ்ச திசைல போடான்னேன்"
என்றார் ,மாதவாச்சாரி.


"அப்படியா? ஹேமாவை தெய்வம்போல நீங்கதான் காப்பாத்தி கரை சேர்த்தேளா? நன்றி மாதவாச்சாரி"

" என் ஆயுசுல இப்டி ஒருமழைவெள்ளம் வந்து பார்த்ததே இல்லை சுவாமி.பாழாப்போன வெள்ளம் எல்லா ஜாதிக்காராளையும் சிலமணிநேரம் ஒண்ணாசேர்த்து தொலைச்சிடுத்து ..நீர் என்னடான்னா தப்பிச்சி டவுனுக்குப் போயிட்டீர்? நாங்க எங்க சொந்த புத்தியை உபயொகிச்சி எப்டியோ வந்து சேர்ந்தோமாக்கும்"


உதயன் படகை தள்ளிக்கொண்டுநகர்ந்தான் . பாலத்தடியில் சுழித்துசீறும் வெள்ளத்தின் பேரொலிகூட அவன்காதில் விழவில்லை சற்றுமுன் மாதவாச்சாரி பேசிய பேச்சில் உடல் இற்றுவிழுந்துவிட்டான்.

சுதாரித்து கொஞ்சம்தொலைவு செல்வதற்குள் கண்ணை இருட்டிகொண்டுவந்தது, நெஞ்சில் தாங்கமுடியாத வலி .கரையைவிட்டு மறுபடி வெள்ள சுழலில் அவன் உடல் சாய்ந்தது.

"உதயாஆஆஆ" ஹேமா அலறினாள்.

அவள்பெரியப்பா சட்டென உதயனைக்காப்பாற்ற வெள்ளத்திலிறங்க காலை எடுத்துவைத்தவர் உடனே தயங்கி இழுத்துக்கொண்டார் .
மினாட்சி," புது வெள்ளம் எப்படி இருக்குமோ? நீங்க போகவேண்டாம்" என்று தடுத்தாள்.

"சுவாமி உமக்கு நீச்சல் தெரியும்தான் அதுக்காக இப்படியா புது வெள்ளத்துல காலை வைக்கிறது? கடவுள் இருக்கார் அவருக்கு தெரியாத கணக்குவழக்கா?' சொல்லிவிட்டு மாதவாச்சாரி நகர்ந்தார்.


ஹேமாவுக்கு மறுபடி கண்ணை இருட்டிகொண்டுவந்தது." உதயா! ஐயோ உதயனை வெள்ளம் அடிச்சிட்டே போறதே, அவனைக்காப்பாத்த யாருமில்லையா?..." என்று வீறிட்டாள்.மயக்கமாகி அப்படியே சரிய இருந்தவளை தரதரவென இழுத்துக்கொண்டு பெரியம்மா நடந்தாள்.

மேடுபள்ளம் பாராது புகுந்து வளையவரும் வெள்ளம் !அதற்குத் தப்பிய மனிதன் மேட்டில் நின்று பள்ளத்தைப் பார்த்துக் கடவுளை நோக்கி கை எடுக்கிறான். அவனுடைய செய்கை மேட்டையும் பள்ளமாக்குவதை அவன் உணரவில்லை.

பிரளயத்தின் போதுகூட இதை அவன் உணரப்போவதில்லை.
*********************************************************************************************************
மேலும் படிக்க... "புது வெள்ளம்(சிறுகதை)"

Monday, November 17, 2008

யாரும் ரசிக்கவில்லையே!

காதல் கதை
பேசிக்கொண்டு
காதலர்கள்

கையில் நாளிதழோடு
களைத்து அமரும்
பெரியவர்

சோப்பும் நாப்கின்னும்
விற்றகணக்குஎழுதும்
விற்பனைப்பெண்

உபரி சதையைக்
குறைக்கஓடும்
உல்லாச இளைஞன்


கவிதைக்கு கருதேடி
கண்ணில் கனவுகளுடன்
கவிஞன்

விளையாட
பந்தோடு
வீதிச்சிறுவர்கள்

தன்னை யாரும்
ரசிக்கவராத சோகத்தில்
பூங்கா.
மேலும் படிக்க... "யாரும் ரசிக்கவில்லையே!"

Friday, November 14, 2008

கருவின் கதறல்.

அழிக்காதே அம்மா
விழுங்கிப்பின் உமிழ்கின்றாய் என்னை
வாழ்வில்லை உனக்கென்று

என்னைக்களைந்திடவும்
கரைத்துத்தள்ளிடவும்
ஏனிந்த வேகம் அம்மா?

விதை போடாமலேயே
விளைந்த களை அல்ல நான்
மழைநீரில்விளைந்த
மண்முத்து
வருங்கால
மனிதமுத்து

அழையாத விருந்தாளியல்ல
வாயில்லைஎனக்கென்றால்
வலியுமா இருக்காது?

உன் இதயம்போல
கல் அல்ல அம்மா நான்
முழு உயிர் இல்லையெனினும்
அரும் உயிர் உண்டு கருவுக்கு

கவனமாய் நீ இருந்திருந்தால்
காற்றிலேயே நான் மறைந்திருப்பேன்
காதலின் போதையில்
காவலை மீறினாய்
காலம் கடந்த ஞானத்தில்
கருக்கலைப்பு முடிவெடுத்தாய்

வந்தவழி நான் போனால்
வாழ்வில்லை எனக்கும்

அபயமென வந்தவரை
அடித்துவிரட்டும் உன்போன்ற
அம்மாக்கள் பெருகிவிட்டால்
இனி..
குழந்தைகள் தினமென்று
கொண்டாடுவதற்கு
குழந்தைகளே இல்லாமல்
போகவும் கூடும்.
மேலும் படிக்க... "கருவின் கதறல்."

Sunday, November 09, 2008

இங்கிவர்களை யான் பெறவே.......

நான் நன்றி சொல்வேன் தமிழ்மணத்திற்கு
என்னை ஒருவாரத்திற்கு
இத்தனைபதிவு எழுதவைத்ததற்கு!

பலநாள் வலைமனையைப்பூட்டி வைத்தபோது முன்பு டாக்டர் சங்கர்குமார்தான் வந்து தூசிதட்டி விளக்கேத்த அன்புக்கட்டளையிட்டார்.அப்புறம் மறுபடி மௌனமாகிட்டேன்...காரணம் ரெகார்டிங் பத்திரிகைக்கு கதை எழுதுணும்னு சொல்வேனே தவிர அங்கயும் ஒண்ணும் பிரமாதமா சாதிக்கவில்லை.
பலர் வற்புறுத்தவும் அவ்வப்போது வந்து எழுதுவேனேதவிர இப்படி நட்சத்திரமாகி சுனாமியாய் தாக்கினதில்லை!! திரியைத்தூண்டினால்தான் தீபம் பிரகாசிக்குமோ?:)(சந்தடி சாக்குல என்னை ஒரு தீபம்னு நானே சொல்லிக்கொண்டுவிட்டேன்:))

ஒருவாரமும் என்பதிவுகளுக்கு படங்கள் இடுவதற்கு உதவிகள்புரிந்த உடன்பிறவா உடன்பிறப்புகள் கே ஆர் எஸ் ரிஷான் ஆயில்யன் ராகவ் ---நால்வருக்கும் மிக்க நன்றியை இங்கே தெரிவிச்சிக்கிறேன்.


எங்கிருந்தோவந்தேன்
இணைய ஜோதியில்கலந்தேன்
இங்கிவர்களை யான் பெறவே
என்ன தவம் செய்துவிட்டேன்
என்று நான் மகிழும் நேச நெஞ்சங்கள்
இணையத்தில் எனக்குக்கிடைத்த
ஈடில்லாபுதையல்கள்

அப்துல்ஜப்பார் ஐயாஅண்ணாகண்ணன்
ஆசிஃப்மீரான் ஆல்பர்ட்அவர்கள்
ஆசாத்ஜீயுடன் சிவசங்கர்விழியன்
ஐயப்பன்(ஜீவஸ்) சுப்பையாஸார் கேவி ராஜா

குமரன் என் சுரேஷ் புகழன் ஜீவா
வேந்தன் சார்லஸ்கோபிநாத்
தணிகை ரசிகவ்ஞானியார்
இலக்குவன் ஷாஜகான்
சர்வேசன் ஜிரா கார்த்திக் ரஞ்சன்

அம்பி மௌலி
அம்பியின்தம்பி
நிலாரசிகன்மஞ்சூர்ராசா

அருமைத்தம்பி ரிஷான் ஷெரீஃப்
செல்லத்தம்பி கே ஆர் எஸ்
வெல்லத்தம்பி மௌலி
அன்புத்தம்பி ராகவ்
கனிவான தம்பி காமேஷ்


சங்கர்குமார் சிவிஆர் கோவி கண்ணன்
பிகேஎஸ், நா.கண்ணன் முகுந்தராஜ்
நாமக்கல்சிபி பாஸ்கர் புலிகேசி420
சிறில்அலெக்ஸ் இளா சிவசிவா (சுப்ரமண்யன்)

மங்களூர் சிவா எல் ஏ ராம்
தேசிகன் ரிஷிரவி செல்வாசுரேஷ்
தியாகு ராமா மரவண்டுகணேஷ்
லதானந்த் கபீரன்பன் தமிழ்ப்ரியன்

பச்சபுள்ள ப்ரசன்னா ஹரிக்ருஷ்ணன்
கென் ஜேகே ப்ரேம் பாஸ்கரன் தேகி
நம்பிக்கைபாண்டியன் ஓசைசெல்லா செந்தழல்ரவி
கமல்ராஜ் ஜீவன் ஜான்பெனக்டிக்ட்

பாலராஜன்கிதா, ஹரன்ப்ரசன்னா,ஓகை
ஆயிலயன் இளவஞ்சி, ஜீ,இராம்
எம்கேகுமார் ஸ்ரீபதி கல்யாண்குமார்
பாரதிதமிழன் க்ருபாசங்கர் தஞ்சைமீரான்

லலிதாராம் மீரான் அன்வர்
ஹலோதமிழா காழியூரான்ஜீ, ரமணன்
ரசீம் சாபு தமிழ்த்தேனி நலம்பெறுக ஆகிரா
கேஆர்குமார் வெட்டிப்பயல் திருமால்

விபாகைமலைநாடான் செல்வன் ரமேஷ்
ஜிவாவெங்கட்ராமன், நவீன் ,தமிழண்ணா
ஜோசஃப் கணேஷ்சந்திரா ஆரெஸ்மணிஜி,
அபிஅப்பா, இப்னு,சுடர்மணி டி ஆர் சி,

குட்டிப்பிசாசு, இசக்கிமுத்து, தமிழன்(கருப்பி)
டிவிராதாக்ருஷ்ணன், விஜய்பாலாஜி நினாகண்ணன்
உதய்குமார் ரிஷிரவி சிவாதமிழ்ப்பயணி, கானாப்ரபா
ரமேஷ், தமிழ்த்தேனி,இறக்குவான் நிர்ஷா, சூர்யா(ஜிஜி)

சீனா,கோகுலன்,புதுகைத்தென்றல்,தமிழ் உதயன்
இலவசக்கொத்தனார் வெட்டிப்பயல்பாலாஜீ எழிலரசு


துளசிவிசாலம் வல்லிமா உஷா மதுமிதா
நிர்மலா ஜெய்ஸ்ரீகோவிந்தராஜன் ஷக்தி,ஷக்திபரபா சாந்தி
சுவாதி நட்சத்திரா சஹாரா பரம்ஸ் விஜி

கீதாசாம்பசிவம், சீதாம்மா ருக்குக்கா ஜெயந்தி ,மீனாமுத்து கவிநயா
முத்துலட்சுமி ராமலட்சுமி லாவண்யா பத்மா அரவிந்த்
சேதுக்கரசி கௌசல்யா மிதிலாராஜன் ஜெசிலா லாவண்யா திகழ்மிளிர்
சின்னம்மிணி
ஷாலினி எழிலன்பு கல்பகம்,ஹேமா வித்யா.....


இன்னும் பலரது பெயர்களை நான் இங்கு மறந்தாலும் இதயத்தில் இருத்தி வைத்திருக்கிறேன்
அனைவருக்கும் நட்சத்திரநன்றி.

(கிளிக்கு ரெக்கை முளைச்சி அது பறந்து போகிறது!!!! )

மேலும் படிக்க... "இங்கிவர்களை யான் பெறவே......."

ஞாயிறின் ஒளிமழையில்.....

ஞாயிறின்றி உலகில்லை. ஞாயிறைப்போற்றி பாரதி பாடியதை இங்கு இன்றுகாண்போம்!


ஞாயிறே, நின்முகத்தைபார்த்த பொருளெல்லாம் ஒளிபெறுகின்றது.

பூமி சந்திரன் செவ்வாய் புதன் சனி வெள்ளி வியாழன் யுரேனஸ் நெப்டியூன் முதலிய பல நூறு வீடுகள்-இவை எல்லாம் நின் கதிர்கள்பட்ட மாத்திரத்திலேயே ஒளியுற நகை செய்கின்றன.

தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவதுபோல இவையெல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன என்பர்.

இவற்றைக்காலம் என்னும் கள்வன் மருவினான்.

இவை ஒளிகுன்றிப்போயின, ஒளி இழந்தனவல்ல.குறைந்த ஒளியுடையவை.

ஒளியற்ற பொருள் சகத்தினிலே இல்லை.

இருள் என்பது குறைந்த ஒளி.

ஞாயிறு மிகச்சிறந்த தேவன்.
அவன் கைப்பட்ட இடமெல்லாம் உயிருண்டாகும்.

அவனையே மலர் விரும்புகின்றது

இலைகள் அவனுடைய அழகிலே யோகமெய்தி இருக்கின்றன.
அவனை நீரும் காற்றும் நிலமும் உகந்து களியுரும்

அவனை வான் கவ்விக்கொள்ளும்.

அவனுக்கு மற்றெல்லாத்தேவரும் பணி செய்வர்.

அவன் புகழைப்பாடுவோம்!
அவன் புகழ் இனிது!
மேலும் படிக்க... "ஞாயிறின் ஒளிமழையில்....."

கடுகு சிறுத்தாலும்.......

கடுகு சாம்பாரில்,கூட்டில்,பொறியலில் என்று தாளிக்கிறோம்
முதல்மரியாதை தாளிதம் செய்வதில் கடுகாருக்கே உண்டு.

சரி இது எதுக்குன்னு தெரியுமா? எனக்கும் போனமாசம்வரைதெரியாது. இதுபோல பலவிஷயங்கள் தெரியாது ஆனா ஏதோ பழக்கம்போல செய்துட்டு வரோம்!

சமீபத்துல எழுத்தாளர்ராஜேஷ்குமார்கிட்ட பேசிட்டு இருந்தப்போ அவர் கடுகுபற்றி சொன்ன விஷயம் ஆச்சரியமா இருந்தது.
கடுகு சிறுத்தாலும் காரம்குறையாது என்பதற்கான உண்மையும் புரிஞ்சது!

உங்களில் பலருக்கு தெரிஞ்சிருக்கலாம்...அவங்க அப்படி நகர்ந்துடுங்க..
இது என்னைமாதிரி தெரியாதங்களுக்கு மட்டும்!
கடுகில ஒருசங்கதி நம் உடலுக்கு தேவைப்படுதாம், அது என்னனு கேட்டேன் .

அவர் சொன்னார்.

கால்ஷியம் புரோட்டின் கார்போஹைட்ரேட் மங்னிஷியம் எல்லாம் நாம் சாப்பிட்ற உணவுலகிடைக்குது ,ஆனா எந்த ஒரு உணவுப்பொருளிலும் கிடைக்காத ஒருதாதுப்பொருள் கடுகுல கிடைக்குதுன்னார்.

அவரே தொடர்ந்து,"கடுகில இருப்பது சல்ஃப்ர். அதாவது கந்தகம்.
இந்த சல்பர் நம் உடலின் ஆரோக்கியத்துக்கு சிறிதளவே தேவைப்படுது...கடுகை கொதிக்கிற எண்ணைல போட்டதும் வெடிப்பதுக்கு அதான காரணம்." என்றுமுடித்தார்.

(பட்டாசு வெடிக்கறதுக்கு துணணசெய்வது கந்தகம்தான்னு நமக்கு தெரியும்.)

கந்தகம் மனிதனின் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறிய அளவில்தேவைப்படுவதால் அதனை சின்னகடுகில் ஒளித்துவைத்த கடவுள் பெரியவர் தான் இல்லையா?
மேலும் படிக்க... "கடுகு சிறுத்தாலும்......."

Saturday, November 08, 2008

ஆசிஃப்மீரான் சாந்தி ப்ரியா..கலக்கறாங்க.. கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!

இன்றைய சிறப்பு வெள்ளிமணிஒசைக்கு வலைஉலகப்புகழ் கவிஞரும் எழுத்தாளரும் பலரின் அன்பு நண்பரும் அண்ணாச்சி என அழைக்கபடுபவருமான திரு ஆசிஃப்மீரான் அவர்களின் வளமான குரலில் ஒருபாடலும் தாய்லாந்துதாரகை என்ப்படும் கவிஞர் வலைப்பதிவர் எழுத்தாளர் கலகலப்பான பெண்ணுமான என் அன்புத்தோழியும் உடன்பிறவா தங்கையுமான சாந்தியின் பாடலும், என் மகளின் பாடலும் இங்கே உங்கள் செவிகளை நிறைக்க வருகின்றன.
இவைகளை அளித்த அவர்களுக்கு மிக்க நன்றி

இரக்கம் வராத காரணம்... ப்ரியா



ரம்ஜானே வருக.. ஆசிஃப்மீரான்


தேவன் பாடல்..சாந்தி

மேலும் படிக்க... "ஆசிஃப்மீரான் சாந்தி ப்ரியா..கலக்கறாங்க.. கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!"

Friday, November 07, 2008

நிலா எழுத, நட்சத்திரம் பாட...!!!

வளர்ந்து வரும் கவிஞர் நிலாரசிகன் சுட்டும்விழிச்சுடரே பாடல் மெட்டி எழுதிய பாடல் இது
இதனை ஓரளவு சுமாரா பாடினது இந்தவார நட்சத்திரம்.! எல்லாரும் மாட்டிக்கிட்டீங்க கேட்டுத்தான் ஆகணும் என்பாட்டை! அழகான பாடல்வரிகளுக்கு உயிரூட்டிப்பாட முயன்றேன். நாமக்கல் சிபியோ ராகவ்வோ ரிஷானோ மௌலியோ கே ஆர் எஸ்ஸோ கோபிநாத்தோ...யார் சினிமா எடுத்தாலும் இந்தப்பாடலை உபயோகிச்சிக்கலாம் அனுமதில்லாம் கேக்கவெண்டாம் என்ன?:சரி பாடலைப்படிங்க கேளுங்க !!

********************************************************************************


பல வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியம் அடைகிறாள் ஒரு பெண்.


அந்த தாய்மை தந்த மகிழ்ச்சியில் தன் பிஞ்சுக்குழந்தையை கண்டு

அவள் பாடும் பாடலாக ஒரு பாடல்.

(கஜினி படத்தில் இடம்பெற்ற "சுட்டும் விழிச்சுடரே" பாடலின் மெட்டில்
என் வரிகள்....)

சின்னஞ்சிறு தளிரே
சின்னஞ்சிறு தளிரே
என் உயிரில் உன்னைப்பெற்றேனே

உள்ளங்கையில் உன் முகம்
பட்டுப் பட்டு உரச
என் தாய்மை பூரிக்கின்றதே...

உன் சிரிப்பில் மலர்ந்தேன்
பத்துமாதம் சுகமென்றேன்

பெண்ணாய் பிறத்தல் தவமென்பேன்
உன்னாலே
பெண்ணாய் பிறத்தல் தவமென்பேன்.(சின்னஞ்சிறு தளிரே)

பூவினம் உன் தேகம் என்பேன்.
தேனினம் உன் புன்னகை என்பேன்.
புல்லினம் உன் விரல்கள் என்றேன்...

துக்கத்தில் தவித்து நின்றேன்
உன் வருகையால் வளர்ந்து நின்றேன்
துன்பம் வந்தால் உன் பொன்முகம்காண்பேன்....

நெருப்பு இல்லா சுடர் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன்....
உன் கண்கள் என் வாழ்க்கை ஏற்றும் சுடர் என்பேன்
உன் கண்கள்
என் வாழ்க்கை ஏற்றும் சுடர் என்பேன்.(சின்னஞ்சிறு தளிரே)

மலடிபட்டம் ஒன்று
உயிர் கொத்திப்போனதன்று
உள்ளம்முதல் உயிர்வரை வெந்தேன்

நீயும் என்னுயிரில் வந்து
பூத்து நின்றாயே இன்று
இன்றுதானே தலைநிமிர்ந்து நின்றேன்

பெண்மை அழகா?
தாய்மை அழகா?
துணைவன் கொஞ்சும் போது பெண்மை அழகு
கண்ணே நீ அம்மா என்றால் தாய்மை அழகு..
கண்ணே நீ அம்மா என்றால் தாய்மை அழகு..(சின்னஞ்சிறு தளிரே)
--------------
-நிலாரசிகன்


மேலும் படிக்க... "நிலா எழுத, நட்சத்திரம் பாட...!!!"

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!

திருப்பாவை அளிக்க இதென்ன மார்கழிமாதமான்னு யாரோ கேக்கறீங்க!!
முதலில் வரும் திருப்பாவை பின்னே வரும் இப்பெண்பாவையின் படைப்புகள்!

வெள்ளிமணி ஓசையாய் குரல்பதிவுகளை இன்று அளிக்கதிட்டம்.
சொல்ப வெயிட்மாட்ரீ!

தலைப்பில் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என இருக்கிறதே இதற்கு என்ன பொருள் யாருக்காவது தெரியுமா? இதற்கெல்லாம் பரிசு ....கரெக்ட் அதேதான்!!

*************************************************************

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
மேலும் படிக்க... "வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!"

Thursday, November 06, 2008

வெள்ளிமணி ஓசையிலே!

வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வலைஉலகவரலாற்றில் முதன்முதலாக இதுவரை வலைத்தளங்களிலேயே வந்திராத புத்தம்புதியமுறையில் பாடிய
மகாகவிபாரதியாரின் எத்தனைகோடி இன்பம் வைத்தாய் எனும் பாடலை ஒரு தாயும் மகளும் சேர்ந்து பாடுவதைக் கேட்கத்தவறாதீர்கள்! (தாய் -மகள் யாரார் என்பதை சரியாக சொல்பவர்களுக்கு.................பரிசு என்று சொல்லப்போறதில்ல...:):) )

eththanai kodi inbam vaithaay iRaivaa!.wav -

eththanai kodi
மேலும் படிக்க... "வெள்ளிமணி ஓசையிலே!"

விழிமையில் ஈமெயில்!

மதிகெட்டுப்போகும்
பதினெட்டுவயது
உதிக்கும் இளமையில்
தவிக்கும் மனது
பழரச இதழ்களில்
பரவசத்துடிப்பு
இழக்கும் நெஞ்சில்
இழைவிடும் உயிர்ப்பு
சாலைஎங்கிலும்
தெரியும் சோலை
மாலைவந்தால்
மயக்கக்காதல்வேளை
பகலிலும் கூட
பௌர்ணமி தெரியும்
அகத்தில் அவன் நினைவு
நெருப்பாய் தகிக்கும்
காலத்திற் செய்யும்
காதல்பருவம்
கண்டபேர்க்குதெரிவதில்லை
மற்றவர் உருவம்

பார்க்கும் விழிகள்
பலப்பல நூறு
ஈர்க்கும் ஈரிருவிழி
இங்கே பாரு
இனிமையாய் அனுப்பும்
விழிமையில் ஈமெயில்
ஒருமை(மெய்)யில் காக்கும்
ஓர் அழகிய இளமயில்!
மேலும் படிக்க... "விழிமையில் ஈமெயில்!"

தாகூரின் பெருமை!

தேசியகீதத்தை இயற்றிய இரவீந்தரநாத் தாகூரும் புகழ்பெற்ற வங்காள நாவலாசிரியர் சரத் சந்திர சட்டர்ஜியும் உரையாடிக்கொண்டிருந்தனர்.

சற்றுநேரம் கழித்து சரத்சந்திரரை தனியே சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர்,"பத்தாயிரம் பிரதிகள் விற்பனையாகும் புகழ்பெற்ற எழுத்தாளரான நீங்கள், வெறும் ஆயிரம்பிரதிகள் விற்பனை ஆகும் தாகூரிடம்போய் பேசிக்கொண்டிருக்கிறீர்களே ?"என்றாராம்.

அதற்கு சரத்சந்திரர்,"என் நூல்களை உம்மைப்போன்ற சாமானியர்கள்தான் படிக்கிறார்கள் ஆனால் தாகூரின் எழுத்துக்களையோ என்னைப்போன்ற பெரிய எழுத்தாளர்களே படிக்கிறார்கள்" என்று சொல்லி, தாகூரை பெருமைப்படுத்தினாராம்!
மேலும் படிக்க... "தாகூரின் பெருமை!"

காக்க காக்க காலணி காக்க!!

அரசபதவியில் அரியணை ஏறி பாதுகை அமர்ந்தது அந்தக்காலத்தில்.

பாதுகையைப் பாதுகாக்கத் தவறியதால் பதவியே பறிபோக இருந்தது இந்தக்காலத்தில்!

சிலவருடங்கள்முன்பு என் தோழி ராதிகாவிற்கு அவள் பணி புரிந்த இடத்தில் பாதுகையினால் பதவியே பறிபோய்விடுமோ என்னும் அச்சம் ஏற்பட ஒரு நிகழ்ச்சி நடந்தது.


அன்று டில்லி தலைமை அலுவலகத்திலிருந்து அதன் மேலதிகாரி, ராதிகா பணிபுரியும் அலுவலகத்திற்கு போன் செய்தார்.

அண்மையில் அமெரிக்கா விசிட் முடித்து வந்திருக்கும் தனது மனைவி பெங்களூர் கிளை ஆபீசை நோட்டமிட வருவதாயும் இரண்டுநாட்கள் ஹோட்டலில் தங்கிச் செல்லப்போவதாயும், அதில் ஒருநாள் அவர்கள் குடும்பத்துக் குலதெய்வம் குடிகொண்டுள்ள ஒரு மலைக் கோயிலுக்கு அவரது மனைவியை அழைத்துபோகவேண்டுமென்றும்,அந்தப் பொறுப்பை ராதிகாதான் ஏற்கவேண்டுமென்றும் ராதிகாவிற்கு உத்தரவு வந்தது.

(தவிர்க்கமுடியாத காரணத்தால் நீ.......ண்ட வாக்கியம் கொண்ட இதுபோன்ற பாரா இனி வாரா!)

ஆமாம் உத்தரவுதான். ஆர்டர்!

அந்த அதிகாரிக்கு ஆபீசில் ஹிட்லர் என்ற பெயர். பேச்சிலேயே சிம்மகர்ஜனைதானாம்

டில்லி அலுவலகத்தை வெயில் காலத்திலும் நடுநடுங்க வைப்பவர் என்று அங்கு பணிபுரிபவர்கள் வம்பு டாட் காமில் பெங்களூர்பிராணிகளுக்கு எச்சரித்து வைத்திருந்தனர்.

அதிகாரி தான் அப்படி என்றால் அதிகாரிணி எப்படி என ரஹசியமாய் துப்பு துலக்கியதில் அம்மணியும் பெண்சிங்கமெனத் தெரிய வந்தது.

ராதிகாவை ஆபிசில் பலர் பரிதாபமாய்ப் அதிகாரிணி பேரு வசுதாரிணியாம் ...90வயதும் 50கிலோ எடையும்.. ஸாரி, 50வயதும் 90கிலோ எடையுமாய் முழியாலெயே எல்லாரையும் அதட்டுவார்கள், நடை உடை எல்லாம் மிடுக்கு அதிகம். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்ப்பவர்.

அப்படீ இப்படி என வம்பு டாட்காமில் தினசரி தகவல் வந்தவண்ணமாயிருந்தது ராதிகாவிற்கு. தன்னால் முடியாது என்று மறுக்கவும் இயலாத நிலமை. அந்த அலுவலகத்தில் தனது பதவிஉயர்வுக்கான தேர்வு எழுதி ரிசல்ட்டுக்குக் காத்திருந்தாள். இந்த நேரத்தில் ஏதும் மறுப்பு கூறினால் அதிகாரி தனது கோபத்தை ப்ரமோஷன் ·பைலில் காட்டிவிடுவாரோ என்ற அசட்டு பயம் வேறு.

ராதிகா மஞ்சள்துணியில் ஒருரூபாயை முடிந்துவைத்து விட்டு ஏழுமலையானுக்கு வேண்டிக்கொண்டாள் கூடவே துணைக்கு என்னையும் அழைத்தாள்.

அந்த நவம்பர்மாதக் குளிரில் காலை 8 மணிக்குக் காரில் எங்கள் பயணம் துவங்கியது.

வசுதாரிணி கொஞ்சம் 'பணமாபாசமா' வரலஷ்மியை நினைவுபடுத்தினாள். அதே கம்பீரம் ! குரலில் நடையில் டிட்டோ.

ஆயிரம் ரூபாய்க்கு மேலிருக்கும் போலிருந்த அந்த குதிகால் செருப்பு, நடக்கும்போது டக் டக் என ஒலித்து பயமுறுத்தியது.

என்னை ராதிகா அறிமுகப்படுத்தியதும்,' ஓ, எழுத்தாளரா நீ? ஹ்ம்ம்? நாம் போகப்போகும் இந்தக் கோயில் பற்றி பத்திரிகையில் எழுதி இருக்கிறாயா இல்லையென்றால் போய்வந்ததும் உடனே எழுது..இதுபோல அதிகம் தெரியாத ஆனால் சக்திவாய்ந்த கோயில்களைப் பற்றி யாரும் பார்த்துவந்து எழுதுவதில்லை. ஏதாவது உப்பு பெறாத விஷயங்களை எழுத எல்லாரும் ரெடி" என்று நறுக் என்று சொன்னாள் வசுதாரிணிஅம்மணி

"மேடம்....இந்த 'உப்பு பெறாத' என்றதும் உப்பிலியப்பன் கோயில் நினைவு வருகிறது அங்கே தரும் பிரசாதங்களில் உப்பே இருக்காதாம் தெரியுமா? ஆனாலும் சுவையாய் இருக்குமாம்" என்றேன் நானும் குறும்பாய் சிரித்தபடி, வசுதாரிணி ரசித்தமாதிரி தெரியவில்லை

ராதிகாவிற்கு ஏற்கனவே பால்பாயிண்ட்பேனாவின் ரீஃபில் உடம்பு. அது இன்னமும் குறுகிப்போக,"வேண்டாம்டி உன் நகைச்சுவையை இவங்ககிட்ட வச்சிக்காதடி 'என்று கிலியுடன் கிசுகிசுத்தாள்

காரில் பின் இருக்கையில் நானும் அந்த பெண்சிங்கமும் அமர முன் இருக்கையில் ஓட்டுனர் அருகே ராதிகா அமர்ந்து கொண்டாள் வசுதாரிணி என்னிடம்," அந்தக்கோயில் போயி பலவருஷம் ஆச்சு. ரொம்ப சக்திவாய்ந்த தெய்வம். அது சின்ன ஊர்.பட்டிக்காடுதான்.. இப்போ எப்படி இருக்கோ?" எனவும் ஓட்டுநர் நாக்கில் சனி விளையாட ஆரம்பித்தது.

"சக்தி வாய்ந்த தெய்வம் எல்லா இடத்திலும் இருக்குதும்மா...திருப்பதி சபரிமல மதுர சீரங்கம் பளனி ..." உற்சாகமாய் ஆரம்பித்தவர் சொல்லிமுடிப்பதற்குள்..

"யார் இல்லைன்னாங்க இப்போ? இது எங்க குடும்பத்து குல தெய்வம் வடக்கே போயி ஆறுவருஷம் கழிச்சி இப்போதான் வர சந்தர்ப்பம் கிடைச்சி வரேன். எங்ககோயில் பத்தி நீ எதுவும் சரிவரத் தெரியாம பேசவேணாம். கீப் கொய்ட்" என்று (அ)சிங்கம் சீறியது.

வழியில் பெங்களுரின் பிரபலமான ட்ரா·பிக்ஜாமில் கார் சில நிமிடங்கள் மாட்டிக்கொண்டு அங்கங்கே நின்றபோது கர்னாடகா கவர்மெண்டைத் தாக்கினாள். சகஜமான சாலைக்குழிகளில், தார் சிராய்ப்புகளில் கார் விழுந்து எழுந்தபோது, "நான்சென்ஸ்... அமெரிக்கால ரோடெல்லாம் எப்படி இருக்கு தெரியுமா? கார்ல தினம் ஆயிரம் மைல் போனாலும் அலுப்பேதெரியாது இங்க கேவலம் இந்த சின்ன தொலைவு போயிட்டுவரதுக்குள்ள இடுப்பும் முதுகும் உடையும் போல் இருக்கு..இங்க யாருக்கும் பொறுப்பே கிடையாது அவனவன் காசை வாங்கி முழுங்கறான். யூஸ்லெஸ் பீபிள்"

முணுமுணுத்தவள் சட்டென வந்த தும்மலை அடக்க கைகுட்டையைத்தேடினாள் தனது கைப்பைக்குள். அங்கு அதைக் காணவில்லை.

உடனே செல்போனிலிருந்து தலைநகருக்குத் தீப்பொறி பறந்தது. தனது வேலைக்காரியை அழைத்து ஹிந்தியில் பத்து நிமிடம் திட்டித்தீர்த்தாள்.

கடைசி வாக்கியமாய் ஹிந்தியில் வசுதாரிணி வாரிவழங்கியதாவது... 'ஊருக்குப் புறப்படும்முன்பாக கவனமாய் எனது கைப்பையில் ஒருகர்சீப் வைக்கும் பொறுப்பில்லாத உனக்கு சீட்டு கிழிக்கறேன் இரு நான் வந்ததும்?' (ஜூனூன் பாதிப்பு!)

மணி பத்து. மலைவளைவுகளைக்கடந்து கோயில் வாசலில் கார் வந்து நின்றது.

காரை நாலைந்து சிறுவர்கள் சூழ்ந்து கொண்டுவேடிக்கை பார்த்தனர். பக்கத்துப்பெட்டிக்கடையில்
பெரிய கல்லின்மீது ரொட்டிமாவினை அடிஅடியென அடித்துக்கொண்டிருந்தார் ஒருவர்!

ரொட்டிஒலி!?

சிறு ஊர் என்பதால் இரண்டு மொபைல் பெட்டிக்கடைகள் ,மரத்தடி நிழலில் ஒரு மர பெஞ்சைபோட்டு அதன்மீது பூதேங்காய்பழம் கற்பூரம் என்று அடுக்கிய மூங்கில் தட்டுகள் கொண்ட கடை போல ஒன்று தவிர வேறு எதுவும் இல்லை.

வசுதாரிணி காரைவிட்டுக் கீழே இறங்கும்போது," செருப்பை கார்லேயே விடலாமா?" எனக்கேட்டவள் உடனேயே,"வேணாம் இந்த ட்ரைவரையெல்லாம் நம்பவே முடியாது.. இவங்க காரை எடுத்துட்டு ஒரு ரவுண்ட் டீ குடிக்கப்போறேன்னுபோவாங்க. நாம் திரும்பிவரப்போ காணாமபோயிடுவாங்க...மதிய வெய்யில்ல ஒரு நிமிஷம் என்னால செருப்பு இல்லாம இருக்கமுடியாது, அதனால ட்ரைவரை நம்புவதைவிட கோயில்வாசல்லேயே விட்டுப்போகலாம்" என்று தீர்மானமாய் சொன்னாள்

ராதிகா நாக்கில் இப்போது சனி உட்கார்ந்துகொள்ள அவள், "மேடம்.. கற்பூரக்கடையில விட்டுடலாமே? கோயில் வாசல்ல யாருமே செருப்பை விட்டமாதிரி தெரியலையே?அங்கே செருப்புபாத்துக்க ஆளும் இல்லை.. பேசாம கடைலயே விடலாம் மேடம்?" என்று சொல்லவும் , "ஓஹோ அப்படீங்கறியா, அதுவும் சரிதான்...'"என்று
ஆச்சரியப்படத்தகும் வகையில் உடனேயே ஆமோதித்தாள் வசுதாரிணி.

எங்களது இருநூற்றித்தொண்ணூற்றி ஒன்பது ரூபாய் தொண்ணூறு பைசா (நாங்கள்'பேட்டா'வில் தான் வாங்கினதென்று கண்டுபிடித்தவர்களுக்கு தொடர்ந்து இங்கும் மைபா பரிசு உண்டு:)) செருப்புகளை, ஆயிரங்களை அனாயாசமாய் முழுங்கிய வசுதாரிணியின் அழகிய பாதுகைக்குப் பக்கத்தில் வைத்தோம்.

'நோட்கொள்ளப்பா சொல்ப' (பாத்துக்கப்பா கொஞ்சம்)'என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினோம்.

கோயிலில் அதிகக் கூட்டம் இல்லை என்பதைவிட ஈ காக்கா இல்லை எனலாம். ஆனால் அப்படி வசுதாரிணியிடம் சொல்லி யார் மாட்டிக்கொள்வது? ஆகவே,'புராதனக்கோயில் இதை ரசிக்க கலை உள்ளம் வேண்டும்' என உளறிவைத்தேன். சிரித்தது சிங்கம்!

உள்ளே கோயிலில் சந்நிதிகளில் வசுதாரிணி மெய்மறந்து சேவித்துக் கொண்டிருக்கையில் ராதிகா கை கடிகாரத்தை பார்த்தாள் மணி 11.30.
உடனே என்னிடம்,' ரொம்ப நேரமாச்சே, நாம கோயில் உள்ள வந்து.? கடைல விட்ட செருப்பெல்லாம் பத்திரமா இருக்குமா ஷைலஜா?" என்று காதோரமாய் கவலைப்பட்டாள்.

'என்ன இப்போ உனக்கு? மேடம் செருப்பு பத்திரமா இருக்கான்னு பாக்ணும் அதானே?'

நான் அபயமென கை காட்டிவிட்டு வசுதாரிணியுடன் அவளை ஓரங்கட்டிவிட்டு நைசாக வெளியே வந்தேன்.

ஆ! இதென்ன மாயம்?

பத்துமணிக்குக் கற்பூரம் காட்டிவிற்ற கடைகள், ரொட்டி ஒலியிட்ட கடை எல்லாம் காலியாகி விட்டிருந்தன. மரத்தடியிலும் பெஞ்சைக்காணோம். இலைமேய்ந்த நாலைந்து ஆட்டுக்குட்டிகள்,வாலைக்குழைத்துவந்த நாய் தவிர வேறு மனித நடமாட்டமே இல்லை.

நல்லவேளை, செருப்புகள் விட்ட இடத்திலேயே கிடப்பதை தூரத்திலிருந்து பார்த்து பெருமூச்சுவிட்டேன். ஆனால் நடந்து அருகில் போனதும் கொதிக்கும் வெய்யிலில் காலை உதறாமல் கையைத்தான் உதறினேன் .

காரணம் அங்கே.....

காணாமல் போயிருந்தது சிங்கத்தின் செருப்பு. பொருளின் விலைமதிப்பு தெரிந்த திருடன் அதைமட்டும் சுட்டுக்கொண்டு போக எங்களது பாதரட்சைகள் பரிதாபமாய் வெய்யிலில் கிடந்தன.

'சொன்னேனே கோயில் வாசல்ல செருப்பை விடலாம்னு கேட்டியா ராதிகா. உன்னால எனது, ஆயிரத்து டாஷ் டாஷ் மதிப்புள்ள செருப்பு தொலைந்து நான் வெறும்காலுடன் நடந்து வந்து காரில் ஏறவேண்டி இருந்தது? ஆகவே உன் மேலதிகாரியும் எனது பிரிய பர்த்தாவுமானவரிடம், பொறுப்பற்ற உனக்கான ப்ரமோஷனை கேன்சல் செய்யச் சொல்லப்போகிறேன் ஆமாம்?'

வசுதாரிணி கற்பனையில் மிரட்டினாள் ராதிகாவிடம்.

ஐயோ!

தேடினேன் தேடினேன் அந்த ஊர் வாய்க்கால் கரைவரைப் போய்த்தேடினேன். எங்கும் தேடி செருப்பைக் காணா மனமும் வாடினேன்.

அப்போதுதான் என்னை துக்கம் விசாரித்தார் கார் ட்ரைவர்.

நேரமின்மைகாரணமாய், கண்டேன் சீதை பாணியில் செய்தியை சுருக்கினேன்.

"தொலைந்தது அம்மாவின் செருப்புமட்டும்"

'பேசாம கார்ல விட்டுப் போயிருக்கலாமில்ல?' பார்வையிலேயே அதட்டினார்

"12மணிக்கு கோயில் நடை சாத்திடுவாங்க ...அந்தம்மா வந்துடுவாங்க. வந்தால் செருப்பு இல்லேன்னா கூச்சல் போடுவாங்கப்பா.."

எனது படபடப்பான பேச்சில் ட்ரைவர் கரைந்துபோய்,'கார்ல ஏறுங்கம்மா. எதும் செருப்புகடை தேடிப்போயி அதேபோல செருப்பு வாங்கிடலாம்.' என்று காரைக்கிளப்பினான்.

அரை நிமிஷம் கவனத்தைக்கவர்ந்த அந்த செருப்பின் அனாடமியை நினைவு வைத்து அதே மாதிரி வாங்கிவிடத் தீர்மானித்தேன்.

ஆனால் அந்த சிற்றூரில் அலைந்ததுதான் மிச்சம். கடைவீதியே இல்லை. இருந்த நாலு கடைகளும் பிளாஸ்டிக்குடம், இரும்புசாமான்கள், வாடிப்போன கத்திரிக்காய் எனபரத்தி வைத்திருந்தனர்.

ஒரு செருப்புக்கடை கூட எனது கண்ணில் படவில்லை. விசாரித்ததில் என்னை வினோதமாய் பார்த்தார் ஒரு உள்ளூர்வாசி. பிறகு கன்னடத்தில் "செருப்புக்கெல்லாம் டவுனுக்குத்தான் போகணும்" என்றார்.


பேரைக் கேட்டறிந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்த அந்த டவுனுக்குப் புறப்பட்டோம். அன்று வாரவிடுமுறை தினம். போற்றுதற்குரிய ஞாயிறு! சுத்தம்.!

எல்லா கடைகளுக்கும் வாயில் பூட்டு.

அலைந்து திரிந்ததில் பேட்டா என்று ஆங்கிலத்தில் பெரிய போர்டு மாட்டிக்கொண்ட சின்னக் கடையைப் பார்த்து 'பேக்கு பேக்கு' (வேணும்வேணும்...) என்று கஸ்தூரி கன்னடத்தில் கூவினேன்.

கடைக்குள் நுழையுமுன் தலை குனிந்தேன் (வெட்கத்தால் அல்ல.. கடையின்நிலைவாசல் உயரம் ஐந்தடி இரண்டு அங்குலம்தான். நானோ உயர்ந்த ஜாதி! (அஞ்சடி ஆறங்குலமாக்கும்)

பழையநாள் வீட்டை அப்படியே வைத்து நிலைவாசல்மட்டும் மாற்றாமல் அதையே கடையாய் கன்வர்ட் பண்ணி இருப்பார்கள் போலும்! வீட்டின் உள்ளிருந்து பிசிபேளாபாத்தின் மசாலா வாசனை பசியின் வேதனையைத்தூண்ட ஆரம்பித்தது.

கடைக்குள் அல்லது அந்த வீட்டின் கூடத்தில்,வவழவென்ற ப்ளாஸ்டிக் ஷீட்டில் உறை அணிந்தமேஜை, கருப்புபோன் ,சம்பங்கிமாலையணிந்த ராகவேந்திரசுவாமியின் படம், ஊதுபத்தி கல்லாபெட்டி. (கற்ற பெட்டி என்று எதுவும் உண்டோ?:))

'நானிருவது நிமகாகி' (நான் இருப்பது உங்களுக்காக) என்று டேப்பில் ராஜ்குமார் வரவேற்றார்.

தமிழ்க்களை முகத்திலேயே சொட்டியதோ என்னவோ என்னைக்கண்டதும்," வாங்கம்மா வாங்க.!" என்று வரவேற்றார் கடை உரிமையாளர் தமிழில்.

ஹிளித்தபடி காலணி அணிவரிசைகளை நோட்டமிட்டேன்

மொத்தமாய் முப்பது ஜோடி செருப்புகள்தான் அங்கிருந்தன. இதென்ன கடையா அல்லது குடி இருக்கும் வீட்டில் செருப்புகளைக் கழற்றிவைக்கும் அலமாரியா?

"என்னங்க இவ்வளவுதானா செருப்புகள்? விலை அதிகமான குதிகால் உயர்ந்த செருப்பு இல்லயா?"

சந்தேகமாய் நான் கேட்க கடைக்காரர், "இந்தசின்ன டவுனில் பெண்கள் அதெல்லாம் போடமாட்டாங்கம்மா.. வியாபாரமாகாது..' என்றார் வருத்தமுடன்.

வேறு கடை தேடி இனி வேறு இடம் போய்வருவதற்குள் கோயில் வாசலில் சிங்கம் வந்து நின்று கர்ஜிக்குமே?

ட்ரைவர் பரிதாபமாய் '"மணி ஆச்சும்மா" என்றான்.

ஆமாம் மணி 11.50

ஊப்ஸ்!

12 மணிக்கு கோயில் நடை சாத்திவிட்டால் உள்ளே யாரும் தங்கவும் மாட்டார்கள்.

ஆனது ஆகட்டும் என்று காரில் அடித்துபிடித்து கோயில் வாசலுக்கு வந்து சேர்ந்தால் நினைத்தபடி சிங்கம் சிடுசிடுப்பாய் நின்றிருந்தது.

"எங்கே கோயிலை முழுவதும் சுத்திப்பாக்காம நடுல கழண்டுகிட்டே? " வசுதாரிணி அதட்டலாகவே கேட்டாள்.பக்கத்தில் பால்பாயிண்ட்பேனாவின் ரீஃபில், பயத்தில் பல் டைப் அடித்தபடி ஊசியாகிப்போனது.

நான் உண்மையைச் சொல்லி ராதிகா சார்பில் மன்னிப்பு கேட்டுவைத்தேன், வேறுவழி?

ராதிகா முகம் போன போக்கைச் சொல்லவே வேண்டாம்...

"ஓஹோ? என் செருப்பு மட்டும் தொலைந்துபோச்சாக்கும்?" வசுதாரிணியின் எகத்தாளக் கேள்வியில் ராதிகா வழக்கம்போல் ஏகமாய் பயந்துபோனாள். கொஞ்சமாய் நானும்.

"ஸாரி மேடம் என்னால்தான் உங்களுக்கு இப்படி ஆனது..நா..நா.. நான் நல்லது நினச்சி அப்படிச் சொன்னது இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல..பாவம் ஷைலஜாவும் இத்தனை நேரம் அலைந்துதிரிந்து வந்திருக்கா..என்னை மன்னிச்சிடுங்க மேடம்" எனக் கண்கலங்கினாள்.காலில் விழ அவள் ஆயத்தமானபோது சட்டென...

வசுதாரிணி ஒருக்கணம் மௌனமாய் எங்கோ பார்த்தாள். பிறகு."கோயிலுக்கு வந்த இடத்தில் செருப்பு தொலைந்தால் அது நல்ல சகுனம்தான்ன்னு சொல்வாங்க...பரவால்ல, அமெரிக்காவில் கல்யாணமாகி போயிருக்கிற என் பெண் சீக்கிரமா நல்ல செய்தி கொடுக்கப் போறான்னு என் குலதெய்வம் இதன் மூலமா சேதி சொல்லுது.. ஓ! தாங்க் காட்!"என்று குதூகலக்குரலில் கூறிவிட்டு கோயில்பக்கம் திரும்பி மெய்மறந்து கைகூப்பினாள்

"தாங்க்காட்!"

நாங்களும் சொல்லிக்கொண்டோம்

எதற்கென்று உங்களுக்குத் தெரியாதா என்ன?


(மீள்பதிவு)
மேலும் படிக்க... "காக்க காக்க காலணி காக்க!!"

வெள்ளைப்புறா ஒன்று வியாழனில் சொல்லும் சேதி இது!

ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கோபுரங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

கோபுரங்களில் தங்கி இருந்த வெள்ளைப்புறாக்கள் எல்லாம் அருகிலிருந்த ஒருமரத்தில் .
போய்தங்கிக்கொண்டன.

கும்பாபிஷேகம் முடிந்ததும் எல்லாம் மீண்டும் கோபுரத்திற்கு வந்துவிட்டன.

அன்று ஒரு நாள் பிரதான சாலையில் கலவரம் ஏற்பட்டு மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர்.

இதைப்பார்த்தகுஞ்சுப்புறா,"கீழே என்ன நடக்கிறது?' என்று தன் தாயிடம்கேட்டது.


அதற்கு தாய்ப்புறா," மதக்கலவரம் நடக்கிறது" என்றது.

"கலவரம்னா என்ன?"

"அதாவது இப்போ நாம் தங்கி இருக்கோமே இது இந்துக்களின்கோயில். சிலநாள்முன்புதங்கி இருந்தது இஸ்லாமியர்க்ளின் தொழுகைமசூதி .அதற்குமுன் நாம் இருந்தது கிறிஸ்துவர்களின் வழிபாட்டுதலமான சர்ச்.அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்களுக்குள்ளே கருத்துவேற்றுமை வந்து அடித்துககொள்கிறார்கள் அதுதான் கலவரமாகி-சண்டையாகி- இருக்கிறது"

"அப்படியா நாம் ஏன் மூன்று இடங்களில் தங்கினாலும் அடித்துக்கொள்வதில்லை?
சண்டைபோட்டுக்கொள்வதில்லை?"


"அதனால்தான் நாம் உயரத்தில் இருக்கிறோம் மனிதர்கள்கீழே இருக்கிறார்கள் " என்றது தாய்ப்புறா.
மேலும் படிக்க... "வெள்ளைப்புறா ஒன்று வியாழனில் சொல்லும் சேதி இது!"

Wednesday, November 05, 2008

அந்தக்கரங்கள்! அந்தக்கால்கள்!!

திருப்புகழ் கந்தரலங்காரம் கந்தரனுபூதி ஆகிய மூன்று நூல்களைஒன்று திரட்டி புதிய நூலாக வெளியிட்டார் செங்கல்வராயப்பிள்ளை. நூலின்பிரதியை உ.வே. சாவிடம் கொடுத்தார்.

நூலை ஆழ்ந்துபடித்த உவெ சா, திடிரென செங்கல்வராயப்பிள்ளையின் கைகளை எடுத்து தம் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

பதறிப்போன செங்கல்வராயப்பிள்ளை" என்ன்னகாரியம் செய்தீர்கள் ஐயா?" என்றார்.

உவேசா நிதானமாக சொன்னார்." முருகனுடைய பெருமைகளை ஆராய்ந்த கரம் ஆயிற்றே அதனால்தான அந்தக் கரங்களை ஒற்றிக்கொண்டேன் "என்றார்.

நெகிழ்ந்துப்பொன செங்கல்வராயர் விடைபெற்றார்.

நாலடிமுன்னே சென்றவர் திடீரெனத்திரும்பவும் உவேசாஅருகில்வந்து சட்டென அவர்காலில் விழுந்தார்.


இம்முறைபதறியது உவேசா அவர்கள்.

"என்னகாரியம் செய்கிறீர்கள்?"

"சங்ககால இலக்கியங்களைத் தேடித்தேடி அலைந்த கால்களாயிற்றே!"
கண்ணீர் மல்கக்கூறினார் செங்கல்வராயப்பிள்ளை.
*************************************************************************************
மேலும் படிக்க... "அந்தக்கரங்கள்! அந்தக்கால்கள்!!"

புதன் கிடைத்தாலும் பொன்மொழிகள் கிடைக்குமா?!

கடவுள் அடிக்கடி நம்வீட்டிற்குவருகிறார், ஆனால் நாம்தான் அவர்வரும்போது வீட்டில் இருப்பதில்லை

-பிரான்ஸ்

கடுமையான கஞ்சத்தனம் தகுதியற்ற தற்பெருமை எல்லையற்ற பேராசை இந்தமூன்றும் -மனிதனை நாசமாக்கிவிடும்

-முகமதுநபி


கரைந்துப்போன வாழ்க்கையை நினைப்பதால் மனிதன் விசித்திரமான ஓர் இனிமையை உணர்கிறான்
-காண்டேகர்


வாழ்க்கையின் பிற்பகுதியில் உங்களுக்குப்பிடித்தமான அன்பான நண்பர்களை நீங்கள் அடையலாம் ஆனால் உங்கள் தாயின் மூலமாக உங்களுக்குக் கிடைத்த அளவில்லாத அன்பை பாசத்தை கண்னியத்தை வேறியார்மூலமாகவும் உங்களால் பெறமுடியாது.

சொன்னவர்..மெக்காலே
******************
மேலும் படிக்க... "புதன் கிடைத்தாலும் பொன்மொழிகள் கிடைக்குமா?!"

Tuesday, November 04, 2008

கோதை-செவ்வாய்-FRENCH KISS!

மானிடவர் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! என்று துணிந்து பாடிய ஆண்டாள் அந்த நாளிலேயே தோன்றிய ஒரு பெண் நவீனகவிஞர்!

இறைவனுக்குச் சூட்டவேண்டிய மாலையை எந்தப் பெண்ணாவது தன் தலையில் சூடி அழகு பார்த்திருக்க முடியுமா? சூடிப் பார்த்துவிட்டு,"நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே? நான் முதலில் சூடிப் பார்த்து விட்டு அவருக்குச் சூட்டினால் என்ன குடி முழுகிப் போய் விடும்? "என்று தந்தையிடம் கேட்டிருக்கத் தான் முடியுமா?

ஆண்டாள் இறைவனுக்குக்காக தந்தை கட்டி வைக்கும் மாலைகளை முதலில் தான் சூடி ஒரு கிணற்றின் நீரில் அழகு பார்த்துவிட்டு தான் அதைக்கொண்டு போய் அப்பாவிடம் கொடுத்து வருவாள்.

பிள்ளைப் பருவத்தில் அரங்கன் மீது பித்தான அன்பு பின்பு காதலாகியது பருவ வயதில்
அரங்கன் மீது ஆண்டாளுக்கு அத்தனைக்காதல்!

காதல் என்று வந்து விட்டால் கடவுளாவது, புனிதமாவது! காதல் தானே பெரிய புனிதம்!
கதைகள் எப்போதும் சுவாரசியமானவைதான்.
ஆனால் ஆண்டாள் விஷயத்தில் கதையைவிட அவளது பாடல்கள் ரொம்ப சுவாரசியமானது,சுவையானது!

அந்தக் காலத்துக்குச் சற்றும் ஒத்துவராத அதி நவீன சங்கதிகளை மட்டும் தான் அவள் தன் பாடல்களுக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.
அதற்கு சாட்சி இந்தப்பாடல்.

ஆண்டாளுக்கு, அவளது காதலனான மாலவன் உதட்டில் முத்தமிட வேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில்.

'செய்ய வாய் ஐயோ என்னைசிந்தை கவர்ந்ததுவே' என்று அமலனாதிபிரானே அலறி இருக்கும்போது ஆண்டாள் எம்மாத்திரம்?
யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது. அட,என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே!
அதை வைத்து தானே எப்போதும் வாயில் வைத்து ஊதுகிறான்!அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவை தெரிந்திருக்குமே!(புல்லாங்குழலும் தான் அவன் திருவாயில் படுகிறது கையிலேயே இருக்கிறது ஆனால் கோதை அதனை ஏன் கேட்கவில்லை? இதற்கு யாராவது பதில் சொன்னால் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உங்களுக்கு என் மைசூர்பாக் இலவசம்!!!)

{சரி பெரியபிராட்டியிடம் கேட்கலாமா என நினைக்கிறாள். திருப்பாவையிலேயே "மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய் காண்" என்று விரட்டியவள் ஆண்டாள்.இப்போதும் அவளிடம்போய்"என் பிரியக்காதலனின்உன் அருமைக்கணவனின் சிவந்த அதரசுவை எப்ப்டியம்மா இருக்கும்?" எனக்கேட்டால் சக்களத்தி சண்டைக்கு வரமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?}

அதனால் சங்கிடம் கேட்டுவிடுவதே நல்லது எதுக்கு வம்பு என நினைக்கிறாள்.

இந்த யுக்தி உதயமானதுமே கவிதை பீறிட்டுக் கொண்டு புறப்பட்டு விடுகிறது.
*கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?**
திருப்பவளச் "செவ்வாய்" தான் தித்தித்திருக்குமோ?**
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்**
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே**!

கருப்பூரம் என்றால் மாலவனுக்கு உகந்த பச்சை கற்பூரம்.
கமலப்பூ என்றால் கமலப்பூ தாமரை
பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம் சந்தேகம் கேட்கிறாள்.
மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்!

இதைவிட சுவையான ஒரு காதல் பாட்டை எந்தக் கவிஞர் தரமுடியும்?
ஆண்டாள் அதிகம் பாடவில்லை தான்.
மொத்தம் 143 பாடல்தான்.
ஆனால்,நாச்சியார் திருமொழியின் அந்தப் பாசுரங்களுக்குள் ஒரு நட்சத்திர அஸ்தஸ்து இதற்கு மட்டுமே உண்டு.
*** இது நட்சத்திரப் பாசுரம் ***
எளிமையும் இனிமையுமான காதல் பாடல்தான் எல்லாமே, ஆனாலும் காதலின் வேகம் இந்தப் பாடலில் வெளிப்படுகிறது நளினமாகவும்.
பக்தியில் பல வகைகள் உண்டு.
இறைவனை தாயாய், தந்தையாய், தோழனாய், தலைவனாய், சேவகனாய் இன்னும் பலப்பல வடிவங்களில் கண்டு,பாடி பக்தி செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் காதலனாக வரித்துக்கொண்டு கவிதை மழை பொழிந்தவள் ஆண்டாள் தான்! வடதேசத்துக்கு ஒரு மீரா என்றால் நம்மூருக்கு ஆண்டாள்!

ஆண்டாள் காதலே சரணம்!
அவனே அதற்கு வரணும்!
வந்தே முத்தம் தரணும்!
மேலும் படிக்க... "கோதை-செவ்வாய்-FRENCH KISS!"

Monday, November 03, 2008

நானேநானா நட்சத்திரமாய் மாறினேனா?!

துளசிமேடம் ஜிரா கேஆரெஸ் சுப்பையா மதுமிதா மங்களூர்சிவா இலவசகொத்தனார் ஆசிஃப்மீரான் சிறில் அலெக்ஸ் செல்வநாயகி மங்கை குமரன் என பிரபலபதிவர்கள் ஏறிய மேடையில் இன்று நானா? நானே நானா யாரோதானா நட்சத்திரமாய் மாறினேனா?

ஆச்சர்யமா இருக்குங்க!

தமிழ்மணத்துக்கு முதல் நன்றி.

இந்த நட்சத்திரங்களைப்பற்றி சிறுகுறிப்பு(நிறையபேர் நிறைய நிறைவா சொல்லிட்டாங்க நான் சொல்ல எதுவுமில்லேன்னாலும் ஏதாவதாவது சொல்லலேன்னா எப்படிங்க?:)

மறந்துட்டேனே மறக்காம நீங்க எல்லாரும் பின்குறிப்பு பாக்கணும் என்ன?

அன்று ஒருநாள் அம்மிமிதித்து அருந்ததி பார்க்கச்சொனார்கள் பட்டப்பகலில் நட்சத்திரமானது எப்படித்தெரியுமென கல்யாணங்களில் எந்தப்பெண்ணும் எந்தமாப்பிள்ளையும் கேட்பதே இல்லை!!!

வசிஷ்டர் மனைவி அருந்ததி உத்தமபத்தினி .அதனால் நட்சத்திரமாய் வானில் ஜொலிக்கிறார் என்கிறதுபுராணக்கதை.

சிறுவன் துருவனுக்கும் வானில் சிறப்பான இடம் உண்டு.

நட்சத்திரங்கள் நிரந்தரமானவை அதனாலதான் அதற்கு அந்தஸ்து.

உண்மையில் சூரியனே ஒரு நட்சத்திரம்தா அதனால்தான் கேஆரெஸ் எனும் ரவி(சூரியன்) ஆன்மீக சூப்பர்ஸ்டாரா இருக்காரோ?!

இந்த பூமியின் சுற்றளவை விட 110 மடங்கு பெரிய சுற்றளவும், 10 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கி விடக் கூடிய அளவு இருக்கும் சூரியனை ஏனைய நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் சமயம் அது ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்கிறது வானியல் ஆராய்ச்சிக்குறிப்பு


நம் அண்டவெளியில் மட்டும் 1000 லட்சம் நட்சத்திரங்கள் இருப்பதாக கணித்திருக்கிறார்கள். நம் அண்டவெளியில் மட்டும் இவ்வளவு என்றால் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு இருக்குமோ?

மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களும் பிறக்கின்றன.மரணிக்கின்றன.

இந்த அற்புதம் நாள்தோறும் இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

எல்லையில்லாத இறை ஆற்றலின் படைப்புகள்தான் எத்தனை அற்புதமானவை!

அறிவியல்ரீதியா சிந்திக்க இங்கபலபேருக்குதெரியும் என்பதாலும் எனக்கு இதுக்குமேல சிந்திக்கதெரியாது எனப்தாலும் இந்தவிஷயம் இங்கு நிறைவுபெறுகிறது!

நட்சத்திரங்களின் ஆளுமை பலவிதம்.

நம்ம வீடுகளில்ஜாதகம் எடுத்தா போதும் முதல்ல நட்சத்திரம் என்னன்னுதான் கேட்பாங்க

கோயிலில் அர்ச்சனைக்ளுக்கும் நட்சத்திரம் தேவை.

ஒருவரின் பிறந்த நாளைய நட்சத்திரத்தை வைத்து அவரின் குணாதிசயங்களை சொல்லலாமாம்! சுப்பையாஸாருக்கு இதுபற்றி நன்கு தெரிந்திருக்கும்.

மகம் ஜகம் ஆளுமாம்
ஆண்மூலம் அரசாளுமாம்
பெண்மூலம் நிர்மூலமாம்
பரணி தரணி ஆளுமாம்
கேட்டை ஜேஷ்டனுக்காகாது
உத்திரத்தில் ஒருபிள்ளையும் ஊர்கோடியிலொருகாணிநிலமும் இருக்கணுமாம்
பூராடம் நூலாடாது....

இன்னும் இருக்கலாம்....


இதுல நட்சத்திரப்பலன்கள் வழக்கம்போல பெண்களுக்குபாதகமாத்தான் இருக்கு. பாசிடிவ் எல்லாம் ஆணுக்கு நெகடிவ் எல்லாம் பெண்ணுக்கு!(மகம் மட்டும் விதிவிலக்கு!

சமீபத்துல தெரிந்த குடும்பம் ஒன்றில் காதலர்கள் இருவருக்கும் நட்சத்திரப்பொருத்தமே சரி இல்லையென்று பையனின் அப்பாவிலிருந்து அனைவரும் கல்யாணத்தைத்தடுக்கப்பார்த்தார்கள்.

காதலித்த அந்தப்பொண்ணு வந்து பையனின் அம்மாகிட்ட கெஞ்சிக்கேட்டுக்கொண்டது.

'மனப்பொருத்தம் இருந்தா போதும் மற்ற எதுவும் தேவைஇல்லை'ன்னு அந்தப்பெண்மணி முடிவெடுத்து மகனின் கல்யாணத்தை பல எதிர்ப்புகள் நடுவே செய்து வைச்சாங்க.

பெண்ணுக்குப்பெண்ணே எதிரியா யார் சொன்னது, பல இடங்களில் தோழி தான்!



பின்குறிப்பு. நட்சத்திரப்பதிவுகளில் நான் இடப்போகும் எல்லாபதிவுகளையும் இதேபோல வந்து பார்த்து படிச்சி கருத்து சொல்லப்போறதுக்கு உங்களுக்கெல்லாம் முன்கூட்டியே நன்றி!
மேலும் படிக்க... "நானேநானா நட்சத்திரமாய் மாறினேனா?!"

மகிழ்ச்சிக்கு என்ன வழி?


ஒருவீட்டில் கதவு தட்டப்பட்டது.

இல்லத்தரசி வேகமா வந்து கதவைத்திறந்தாங்க. வெளியே மூணு பெரியவங்க நின்றுகொண்டு இருந்தாங்க.

"நீங்கள்ளாம் யாரு என்ன வேணும் உங்களுக்கு?"ன்னு அந்தம்மா கேட்டாங்க.

"அம்மா! என்பேரு செல்வம் இவர் பேரு ஆரோக்கியம் அடுத்தவர் பேரு அன்பு. நாங்க மூணு பேருமே உங்க குடும்பத்துக்கு வேண்டப்பட்டவங்க"

"ஓ அப்படியா உள்ளே வாங்க"

"அதுமுடியாத காரியம் எங்களில் யாராவது ஒருவரைத்தான் நீங்கள் விருந்தினராய் அழைக்கமுடியும். யாரை அழைக்கிறீர்கள்? சொல்லுங்கள்?"

அந்தம்மா யோசிச்சாங்க அப்புறம்,"கொஞ்சம் இருங்க வரேன்" என்று உள்ளேபோனாங்க.
கணவரிடமும் மகளிடமும் விவரம் சொன்னாங்க.

கணவர்,"ஆரோக்கியத்தைக்கூப்பிடேன்" என்றார்.

"இல்லங்க எனக்கு செல்வத்தை அழைக்கலாம்னு தோணுது"

அப்பாவும் அம்மாவும் இப்படிச்சொல்லவும் மகள்" அம்மா! அன்பைஅழைங்க" என்கிறாள்
வாசலுக்கு வந்தவங்க அன்பை உள்ளேவரச்சொல்றாங்க.

அன்பு மகிழ்ச்சியாய் உள்ளேகாலடி எடுத்துவைத்து வரவும் தொடர்ந்து மற்ற இருவரும் கூடவே வந்துட்டாங்க.

"என்ன இது இப்போது மூணுபேரும் வரீங்களே?' இல்லத்தரசி வியப்பாய் கேட்டாங்க.

"ஆமாம். செல்வத்தையோ ஆரோக்கியத்தையோ அழைச்சிருந்தா மற்ற இருவரும் வெளியேதான் நின்றிருப்போம் நீங்க அழைச்சது அன்பை.அன்பிருக்கும் இடத்தில்தான் செல்வமும் ஆரோக்கியமும் இருக்கணும் அதான் நாங்களும் உடன் வருகிறோம்"


மகிழ்ச்சிக்கு வழி வேறெதுமில்லைங்க அது,அன்புவழி! ஆமாங்க அன்பின்வழிதான்னு இந்தக்கதை சொல்லாம நமக்கு சொல்லுது இல்லையா?


அதுசரி இந்தக்கதைக்கும் பாவ்னா படத்துக்கும் என்ன சம்பந்தம்னு யாரோ கேட்கறீங்க!
அந்தமுகத்தைப்பார்த்தாலே பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக்கு(முதல்வர், நியுயார்க்நாயகன், ஆன்மீக சூப்பர் ஸ்டார்! இரண்டாமவர் இணையத்தின் இளையதளபதி.கத்தார் காளை,இலங்கையின் இனியபுதையல்:))etc etc...):))
மகிழ்ச்சி என்பதாலும் அவங்க மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சி என்பதாலும்தான்!:):)
மேலும் படிக்க... "மகிழ்ச்சிக்கு என்ன வழி?"

திங்'கள்'தகவல்!


கவிஞர் கண்ணதாசனுக்கு தேர்தலில் நிற்க ஆசை ஏற்பட்டது.

கலைஞருக்கு போன் செய்து," என்னை ஒருவேட்பாளராக நியமிக்கவேண்டும்" என்றபோது
" சரி எந்ததொகுதியில் நிற்க விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார் கலைஞர்.

"பாண்டிச்சேரி சின்னதொகுதி.. அங்குதான் நிற்கவிரும்புகிறேன்" என்றார் கண்ணதாசன்.

"பாண்டிச்சேரியில் உங்களால் 'நிற்க'முடியுமா ?"என்று சிலேடையாய் கலைஞர் கேட்க, கண்ணதாசன் அதைப்பெரிதும் ரசிததாராம்!
மேலும் படிக்க... "திங்'கள்'தகவல்!"

Sunday, November 02, 2008

இணையத்தின் இளைய தளபதிக்கு இன்று பிறந்த நாள்!

இணையத்தின் இளையதளபதி , ஈடில்லா தமிழ்க்கவிதைகளை, கதைகளை
அள்ளித்தந்துகொண்டிருக்கும் பலரின் அன்புத்தம்பி, இலங்கைஇளவரசு,
கத்தார் காளைக்கு இன்றுநவம்பர் 3ம்தேதி பிறந்தநாள்! நட்சத்திரவாரத்தில் ரிஷான் ஷெரீஃப்
நூறாண்டுகாலம் நோய்நொடியில்லாமல்
பேரும்புகழும் பெற்று பெருமையோடு திகழவும்
அமைதியை அவரதுநாட்டிற்குத்தந்து
அனைவரும் அங்கு சுகமாய் இருக்கவேண்டும் எனவும்
அன்போடு மனநிறைவோடு வாழ்த்துவோம்!

இனிய இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரிஷான் ஷெரீஃப்!
மேலும் படிக்க... "இணையத்தின் இளைய தளபதிக்கு இன்று பிறந்த நாள்!"

சனிக்கிழமைன்னாலே சாப்பாடுதான்!

Noveber8th saturday 2008....

//முன்குறிப்பு..உப்புமா பதிவென்று இதை ஒதுக்கிடாதீங்க!!!//

நம்ம தங்கத்தமிழ் நாட்டுல பல சிற்றுண்டிகள் இருந்தாலும் உப்புமா என்ற சங்ககால(எந்த சங்கம்னு கேட்டால் எங்க மாதர்சங்கம்னு சொல்லி சமாளிச்சிடுவேன்:))) சிற்றுண்டியின் மறுபெயர் ஆபத்பாந்தவன். இன்னொரு செல்லப்பெயர் நிலையவித்வான்(வானொலில வேறபாடகர்நிகழ்ச்சி ஏதுமில்லைன்னஅவசரத்துக்கு டக்குனு நிலையத்துக்காரங்க பாடினது வாசிச்சதை வச்சி சரிக்கட்டுவாங்க.அதனால யாராவது திடிர்னு வீட்டுக்குவந்தாசட்டுனு செய்யக்கூடிய டிபன் என்பதால் இந்தப்பேரு:)


பெங்களூர்ல இதற்கு காராபாத் என்றுபெயர். ஹோட்டலில் அழகாய் கப்பில் கொட்டி அதையே தட்டில் சின்னக்குன்றுமாதிரி கவிழ்த்து உச்சியில் தக்காளியைவட்டமாய் கட் செய்து கண்ணைக்கவரும் விதமாய் கொடுப்பாங்க..வடக்கில் கிச்சடின்னு பேரோ?

அவசரத்துக்கு சட்டுனு செய்யலாம்னு இதைப்புகழ்ந்துகிட்டே கொஞ்சம் அலட்சியமா செய்தோம்னு வைங்க அவ்வளவுதான் நம்மை ஏமாத்திடும.

உப்புமாக்கு எதுக்கு இந்தப்பேர்வந்திருக்கும்னு யோசிச்சிபாத்தா எவ்வளவோ கவனமாபார்த்துப்பார்த்துபோட்டாலும் இதுல உப்பு இருக்கே அது ஒண்ணு கம்மியாகும் ,இல்ல அதிகமாகும். அதனால் இந்த சிற்றுண்டிக்கு உப்பு போடறப்போ,
" உப்பு.... மா கவனமாபாத்துப்போடுமா"ன்னு யாரோ எச்சரிச்சிருப்பாங்க... காலப்போக்கில் அதுவே உப்புமா ஆகி இருக்கலாம். சிலர் உப்மா என்கிறார்கள்

உப்புமாக்குவிடும் தண்ணீர் அதிகமானால் அது உப்புபோட்ட, ரவாபாயசமாய் ஆகிடும்,ஸ்பூன்போட்டு கொடுத்துடவேண்டியதுதான்....அப்படியே சாப்பிடுங்கன்னும் சொல்லலாம்!
நீர்கம்மியாச்சுன்னு வைங்க உப்புமா, கல்லு உருண்டைதான்.
!

இந்தமாதிரி கல்லான உப்புமாவை ஆடுமாடுகள்,தோட்டத்தில் மேய்ந்தால்' சூ போபோன்'னு விரட்ட உபயோகிக்கலாம்!

தபாலை ஒட்டவீட்ல பசைஇல்லென்னா காதலாகிக் கசிந்துகுழைந்த உப்புமா உதவலாம்!

ஒருமுறை கல்யாணமான புதிதில்நான் செய்த ரவா உப்புமா எப்படி வந்தது தெரியுமா?:)

உப்புமாவாகவுமில்லாமல்,பாயசமாகவும் இல்லாமல் இருந்தது.
சாப்பிட விருந்தினர் ஒருவர் அதை சாப்பிட்டு,பின் வாயைத்திறக்கமுடியமால்,மூடவும்முடியாமல் கம்முனு இருந்தார்.
அப்புறம்தான் தெரிந்தது, அன்றைய உப்புமா கம்(gum) அதாவது பசைபோலாகி அவரை வாயடைக்க வைத்துவிட்டதென!!.அப்புறம் அவர் வீடுபக்கம்வருவதேஇல்லை.

உப்புமாக்கள்பலரகம்.!

அவுல், அரிசி .ஜவ்வரிசி .ரவை .சேமியா, ப்ரெட் என்று விதவிதமா இருக்கு!
அரிசிஉப்புமாவும் சுட்டகத்திரிக்காய்ய்புளிகொத்சும்.,
ரவா உப்புமாவும் தேங்காசட்னியும்,

சேமியாஉப்புமாவும் தக்காளிசட்னியும்...

நல்லகாம்பினேஷன்ஸ்.

மற்ற உப்புமாக்கள் இதற்குப்பின்னே க்யூவில் நிற்கின்றன.

உப்புமா கொழுக்கட்டை தெரியுமா?மிஞ்சின உப்புமாலயும் நைசா தேங்கா திருவிப்போட்டு
கொழூக்கட்டை வடிவத்துல பிடிச்சி ஆவிலவச்சி எடுக்கலாம்.புளி உப்புமா என அரிசிமாவில் வண்டி எண்ணைவிட்டு செய்யலாம்.



உப்புமா டிப்ஸ் ...
ரவாஉப்புமா செய்யறப்போ நெய்விட்டு வறுக்கணும், ஓவரா சிவப்பா வறுத்தா அப்றோம் அது தான் வறுபட்டதைக்காட்டிக்கொடுத்து நம்காலைவாரிடும். நல்ல பொன்மகள்நிறத்துல வறுக்கணும் அப்போதான் பொலபொலன்னு உதிர்ந்து வரும்.

பாதிஅளவுக்கு நீருக்குபதில்மோர் சேர்த்து கடசில கொத்தமல்லி இலை கேரட் துருவல் ஓரமம தூவி, ட்ரெஸ் பண்ணிங்கன்னா அவ்ளோதான் ஒன்ஸ்மோர் கேட்பாங்க!

அரிசிஉப்புமாக்கு லேசாலேசாதேங்கா எண்ணை விட்டா கேரளாவரைக்கும் மணக்கும்.

சேமியாஉப்புமாக்கு சேமியாவைவறுத்து வச்சதும் பச்சதண்ணீலகழுவணுமாம் அப்போதான் ஒவ்வொருசேமியாகுச்சியும் மாமியார்மருமகளா இருக்குமாம்!

காய்கறிகள் நிறைய உப்புமால சேர்த்தாலே தனி ருசிதான். என்னங்க,
உப்புமா விவரம் உப்பு சப்பில்லாம இலையே!?:) அடுத்து வருது இணையப்புகழ் மைபா!!!

உப்புமா, மா மா மா மா மா, மா மா மா மா மா?

மேலும் படிக்க... "சனிக்கிழமைன்னாலே சாப்பாடுதான்!"

Saturday, November 01, 2008

இயற்கை என்னும் இனியகன்னி ஏங்குகிறாள் தன் நிலையை எண்ணி..

எத்தனை மலர்கள் எத்தனை இலைகள்!
எத்தனைபறவைகள் எத்தனை உயிர்கள்!
மரங்கள் இருந்தால்..?



சுற்றுச்சூழல்பற்றி ஒரு சிறுமி எழுதியகவிதை இது.

மரங்கள் இருந்தால் என்றுமுடிக்கிற போது அந்தச்சிறுமியின் கவலை நமக்குப்புரிகிறது.

"மரம் செடிகொடி சுத்தமான நீர் காற்று என்று
வருங்காலக்குழந்தைகளுக்கு நாம் அனுபவித்த இயற்கைசெல்வத்தை அப்படியே விட்டுப்போகப்போகிறோமா இல்லையா நாம்?" என்னும் விடைதெரியாத கேள்வியும் எழுகிறது.

காற்று நீர் நிலம் நெருப்பு ஆகாயம் என்னும் பஞ்சபூதங்கள் அடங்கிய இயற்கை, மனிதன் இல்லாமல் வாழ்ந்துவிடும். ஆனால் மனிதனால்தான் இயற்கை இல்லாமல் வாழமுடியாது.

தண்ணீரும் காற்றும் உணவுமின்றி மனிதன் வாழ்வது சாத்தியமே இல்லையே.

ஒருபக்கம் மரங்களைவெட்டுகிறோம்.
இன்னொருபக்கம் மலைகளை இடிக்கிறோம்
காற்றை மாசுபடுத்தி பிராணவாயுவை அழித்துவருகிறோம்.

'க்லூரோஃப்ளூரோ கார்பன்' என்னும் ரசாயனபுகையை நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் ஏசி, ஃப்ரிட்ஜ் புகையூட்டும்கருவிகள் இன்னபிற சாதனங்கள் வெளிவிடுவதால் இது விண்வெளியை அடைந்து ஓசோனைப்பெரிதும் அழித்துக்கொண்டிருக்கிறது.

பிளாஸ்டிக் பொருட்களை ஓரளவு உபயோகத்திலிருந்து குறைத்துக்கொண்டுவிட்டாலும் முற்றிலும் நாம் அதை அழித்துவிரட்டவில்லை.

மெல்லமெல்ல நாம் இழக்கும் பொகிஷங்கள்தான் எத்தனை?

கார்ல்மார்க்சின்
எதை நீ இழந்தாலும் அதன் மதிப்பு இரண்டாகிவிடுகிறது என்பதை எப்போது உணரப்போகிறோம்?

' இதற்கு நான் மட்டும்என்ன செய்வது இது நாட்டின் பிரச்சினையல்லவா?' என்று நாம் ஒவ்வொருவரும் நினைத்து செயல்படுத்த மட்டுமல்ல செயலுக்கான எண்ணங்களுக்கே இடம்கொடுக்க தவறுகிறோம்.

ஒருகதை உண்டு, இது பலருக்குத் தெரிந்தகதைதான் ஆனாலும் இங்கே கொஞ்சம் நினைத்துப்பார்க்கலாம்.

வானத்தில் மேகம் ஒன்று உலா போய்க்கொண்டிருந்தது.மேலிருந்தபடியே கீழே பூமியை
பார்த்துக்கொண்டே வந்த மேகம் அங்கே வயலக்ளில் பயிர்கள் எல்லாம் பரிதாபமாய் வாடி இருப்பதை கவனித்து கவலைகொண்டது.

இன்னும் உற்றுப்பார்த்தபோது செடிகொடிகள் எல்லாம் 'தாகம்!தாகம்! தண்ணீர்! தண்ணீர் 'என கூக்குரலிடுவதுபோல உணர்ந்தது.

உடனே பயிர் செடிகொடிகளுக்கு உதவ நினைத்த மேகம் நகர்ந்துபோய்க்கொண்டிருந்த தென்றலை அழைத்து,'எப்படியாவது இவைகளின் உயிரைக்காப்பாற்றேன்' எனக்கேட்டுக்கொண்டது.


தென்றல் அலட்சியமாய்' ஆகட்டும்பார்க்கலாம்' எனசொல்லிப்போனது.

சற்றுதூரத்தில் நகர்ந்துகொண்டிருந்த நதியினைக்கேட்டது.

அதுவும் ,'நிற்க நேரமில்லை எனக்கு நானே ஓடிக்கொண்டிருக்கிறேனே' எனப் போனது.

மலையிடம் கெஞ்சவும் அது,' நான் இங்கிருந்தபடியேதான் பார்க்கமுடியும்' என்றது.

பயிர்களின் பரிதாபக்குரல் மேகத்தின்காதுகளில் விழுந்து அது துடித்தது.

"ஐயோ நீர் வேண்டித்தவிக்கிறதே எல்லாம்,யாருமே உதவத்தயாராய் இல்லையே?" என்று மனம் வாடியது.

பிறகு அதுவே," உதவநினைகக்ணும் என்றால் நாமேதான்அந்தச்செயலை செய்யத்தயாராக்ணும் "என்றுதீர்மானிக்கிறது.

உடனே அது மேலே உயர்ந்தது.

குளிர்ச்சி அடைந்தது.

தன் அழகான் பஞ்சுப்பொதி உடல்கரைவதைப்பற்றி கவலைப்படாமல் பல உயிர்களைக்காப்பாற்றுகிறோம் என்னும் மகிழ்ச்சிநிறைவில் தான் கரைந்துமரணத்தை தழுவிக்கொண்டு மழையைபூமிக்குஅளித்து மறைந்தது.


நாம் மேகமாய் மாறமுடியாவிட்டாலும் மனிதனாய் நம் எண்ணங்களை உயர்த்தி சின்னசின்ன செயல்களில் நமது அக்கறைகளை ஆரம்பித்து இயற்கைவளத்தைக்காபபற்றலாமே?

மரங்கள் வெட்டுவதை தடுப்போம்
மணல்கொள்ளையை தடுப்போம்

எரிசக்தியை சேமிப்போம்

வீட்டில் அவசியமின்றி எரியும் மின்விளக்கை
வீணாக்கும்குழாய்நீரை கவனிப்போம்
பிளாஸ்டிக்கின் உயோகத்தைநிறுத்துவோம்.


ஆடம்பரவிழாக்களில் அதிகம் மின் சக்திவீணாவதைக்குறைப்போம்
மழைநீரை சேமிக்கப்பழகுவோம்
மூலப்பொருட்களைபாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பரப்புவோம்




ஓசோனில் விழுந்திருக்கும் ஓட்டையை தனது இதயத்தில் விழுந்த ஓட்டையாக நாம் நினைத்துக்கொண்டால் இயற்கையை எப்படியாவது பாதுகாத்துவிடுவோம்.


பசுமையும் வளமும் கொண்ட சுற்றுப்புற சூழ்நிலைதான் நாம் நமது வருங்காலசந்ததியினருக்கு சேர்த்துவைக்கப்போகும் அரும்பெரும் சொத்து ஆகும்.
*********************************************
மேலும் படிக்க... "இயற்கை என்னும் இனியகன்னி ஏங்குகிறாள் தன் நிலையை எண்ணி.."

Wednesday, October 29, 2008

காதல்(கவிதை)

 
Posted by Picasa





(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)
மேலும் படிக்க... "காதல்(கவிதை)"

Tuesday, October 28, 2008

நானே நானா நட்சத்திரமாய் மாறினேனா?:)


துளசிமேடம் ஜிரா கேஆரெஸ் சுப்பையா மதுமிதா மங்களூர்சிவா இலவசகொத்தனார் ஆசிஃப்மீரான் சிறில் அலெக்ஸ் செல்வநாயகி மங்கை குமரன் என பிரபலபதிவர்கள் ஏறிய மேடையில் இன்று நானா? நானே நானா யாரோதானா நட்சத்திரமாய் மாறினேனா?

ஆச்சர்யமா இருக்குங்க!

தமிழ்மணத்துக்கு முதல் நன்றி.

இந்த நட்சத்திரங்களைப்பற்றி சிறுகுறிப்பு(நிறையபேர் நிறைய நிறைவா சொல்லிட்டாங்க நான் சொல்ல எதுவுமில்லேன்னாலும் ஏதாவதாவது சொல்லலேன்னா எப்படிங்க?:)

மறந்துட்டேனே மறக்காம நீங்க எல்லாரும் பின்குறிப்பு பாக்கணும் என்ன?

அன்று ஒருநாள் அம்மிமிதித்து அருந்ததி பார்க்கச்சொனார்கள் பட்டப்பகலில் நட்சத்திரமானது எப்படித்தெரியுமென கல்யாணங்களில் எந்தப்பெண்ணும் எந்தமாப்பிள்ளையும் கேட்பதே இல்லை!!!

வசிஷ்டர் மனைவி அருந்ததி உத்தமபத்தினி .அதனால் நட்சத்திரமாய் வானில் ஜொலிக்கிறார் என்கிறதுபுராணக்கதை.

சிறுவன் துருவனுக்கும் வானில் சிறப்பான இடம் உண்டு.

நட்சத்திரங்கள் நிரந்தரமானவை அதனாலதான் அதற்கு அந்தஸ்து.

உண்மையில் சூரியனே ஒரு நட்சத்திரம்தா அதனால்தான் கேஆரெஸ் எனும் ரவி(சூரியன்) ஆன்மீக சூப்பர்ஸ்டாரா இருக்காரோ?!

இந்த பூமியின் சுற்றளவை விட 110 மடங்கு பெரிய சுற்றளவும், 10 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கி விடக் கூடிய அளவு இருக்கும் சூரியனை ஏனைய நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் சமயம் அது ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்கிறது வானியல் ஆராய்ச்சிக்குறிப்பு


நம் அண்டவெளியில் மட்டும் 1000 லட்சம் நட்சத்திரங்கள் இருப்பதாக கணித்திருக்கிறார்கள். நம் அண்டவெளியில் மட்டும் இவ்வளவு என்றால் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு இருக்குமோ?

மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களும் பிறக்கின்றன.மரணிக்கின்றன.

இந்த அற்புதம் நாள்தோறும் இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

எல்லையில்லாத இறை ஆற்றலின் படைப்புகள்தான் எத்தனை அற்புதமானவை!

அறிவியல்ரீதியா சிந்திக்க இங்கபலபேருக்குதெரியும் என்பதாலும் எனக்கு இதுக்குமேல சிந்திக்கதெரியாது எனப்தாலும் இந்தவிஷயம் இங்கு நிறைவுபெறுகிறது!

நட்சத்திரங்களின் ஆளுமை பலவிதம்.

நம்ம வீடுகளில்ஜாதகம் எடுத்தா போதும் முதல்ல நட்சத்திரம் என்னன்னுதான் கேட்பாங்க

கோயிலில் அர்ச்சனைக்ளுக்கும் நட்சத்திரம் தேவை.

ஒருவரின் பிறந்த நாளைய நட்சத்திரத்தை வைத்து அவரின் குணாதிசயங்களை சொல்லலாமாம்! சுப்பையாஸாருக்கு இதுபற்றி நன்கு தெரிந்திருக்கும்.

மகம் ஜகம் ஆளுமாம்
ஆண்மூலம் அரசாளுமாம்
பெண்மூலம் நிர்மூலமாம்
பரணி தரணி ஆளுமாம்
கேட்டை ஜேஷ்டனுக்காகாது
உத்திரத்தில் ஒருபிள்ளையும் ஊர்கோடியிலொருகாணிநிலமும் இருக்கணுமாம்
பூராடம் நூலாடாது....

இன்னும் இருக்கலாம்....


இதுல நட்சத்திரப்பலன்கள் வழக்கம்போல பெண்களுக்குபாதகமாத்தான் இருக்கு. பாசிடிவ் எல்லாம் ஆணுக்கு நெகடிவ் எல்லாம் பெண்ணுக்கு!(மகம் மட்டும் விதிவிலக்கு):)

சமீபத்துல தெரிந்த குடும்பம் ஒன்றில் காதலர்கள் இருவருக்கும் நட்சத்திரப்பொருத்தமே சரி இல்லையென்று பையனின் அப்பாவிலிருந்து அனைவரும் கல்யாணத்தைத்தடுக்கப்பார்த்தார்கள்.

காதலித்த அந்தப்பொண்ணு வந்து பையனின் அம்மாகிட்ட கெஞ்சிக்கேட்டுக்கொண்டது.

'மனப்பொருத்தம் இருந்தா போதும் மற்ற எதுவும் தேவைஇல்லை'ன்னு அந்தப்பெண்மணி முடிவெடுத்து மகனின் கல்யாணத்தை பல எதிர்ப்புகள் நடுவே செய்து வைச்சாங்க.

பெண்ணுக்குப்பெண்ணே எதிரியா யார் சொன்னது, பல இடங்களில் தோழி தான்!



பின்குறிப்பு. நட்சத்திரப்பதிவுகளில் நான் இடப்போகும் எல்லாபதிவுகளையும் இதேபோல வந்து பார்த்து படிச்சி கருத்து சொல்லப்போறதுக்கு உங்களுக்கெல்லாம் முன்கூட்டியே நன்றி!





மேலும் படிக்க... "நானே நானா நட்சத்திரமாய் மாறினேனா?:)"

Monday, October 27, 2008

தீபாவளிக்கவிதைகள்.

வருவாய் ஒளியே, தீபாவளியே!
************************************************


சுதந்திரக்காற்றையெல்லாம்,நீர்
சூழ்ந்த அந்தத்தீவில்
எந்தச்சுனாமி
அள்ளிக் கொண்டுபோனதோ?

நெருப்பு சுவாலைக்கு மத்தியிலும்
உருகாத பனிக்கட்டியாய்
பாலைவனவெப்பத்திலும்
தோகை விரித்தாடும் மயில்களாய்
உப்புக்கடலில் உதித்த
செப்புத்தாமரைகளாய்
அதர்மக்கூடாரத்தில்
தர்மவான்களாய் வாழும்
தமிழினத்தின் உயிரினம்
அழிந்துகாண்பதுசுடுவனம்

விடியலைவேண்டும் அந்த
வெள்ளைமனங்களின்
இருளடர்ந்த வாழ்வில்
படியளக்க வரவேண்டும்
நம்பிக்கை தீபம்!

சமமாக எங்குமேபரவி
அமைதியை இலங்கைக்குத்தந்து
எல்லோரும் நன்றாக
எல்லாரும்ஒன்றாகவாழ
எங்கெங்கும் ஒளிதந்து
எல்லையில்லா ஆனந்தம்
எம் இனத்தமிழர்க்கு இன்று
ஏற்றமுடன் தந்திடவே
வருவாய்ஒளியே! தீபாவளியே!
************************************************



மத்தாப்பூவாய்.....



மத்தாப்பூவாய் மலர்ந்த காதல் உன்
அப்பாவின் அணுகுண்டு கோபத்தில்
புஸ்வாணமாகிப்போனது
தரைச்சக்கரமாய் சுழல்கிறது என்மனது
சாட்டையடியாய் திரும்பிப் பேசி
தவுசண்ட் வாலாவாய் வெடிக்கத்
தெரியும் எனக்கும் .
ஓலைக்குள் சுருண்டிருக்கும்
பட்டாசாய்மௌனம்காக்கிறேன்
நேரம் வரும் எனக்கும்
வேலைஒன்றுகிடைக்கும் பின்பு
வானம்அதிரவெடிவைப்பேன்
மாலையும் சூட்டுவேன் உன்கழுத்தில்!


(இரண்டு கவிதைகளும் விகடன் மின்னிதழ் தீபாவளி மலரில் வந்துள்ளன)
மேலும் படிக்க... "தீபாவளிக்கவிதைகள்."

Saturday, October 25, 2008

தொட்டிச்செடி

கொட்டும் மழையில்
ஒருநாள் கிடப்பேன்
கொளுத்தும் வெய்யிலில்
மறுநாள் கிடப்பேன்.

கூண்டுக் கிளிக்காவது
சீட்டு எடுக்கும்போது
சில நிமிட விடுதலை.
தொட்டிச் செடிக்கு
அப்படி எதுவுமில்லை.

வேர்க் கால்களை
வீசி நடக்க
வேறு பாதை ஏதுமில்லை.

வேடிக்கை காண வரும்
விந்தை மனிதர்களைப்
பார்த்தபடியும்
மேய்ந்துவரும் மாடுகளிடம்
என்னில் பாதியை
இழப்பதுவுமே
வாடிக்கையாகிவிட்டது.

அலையும் மனதிற்கு
ஆதரவாய் அருகில்
கிளைக்கரம் தொட்டு
ஆறுதல் சாமரம் வீச
மரம் செடி எதுவுமில்லை.

தொட்டிக்குள் அடங்கிவிட்டது,
என் உடல் மட்டுமல்ல
விடுதலை கிடைக்குமென்ற
வாழ்க்கைக் கனவுகளும்தான்
மேலும் படிக்க... "தொட்டிச்செடி"

Tuesday, September 30, 2008

பரமஹம்சர் கண்ட பராசக்தி!

காளிதேவியைப் பற்றி விவேகானந்தர் சொல்வதைக்கேளுங்கள்..

"சுடர்கள் அவிந்தன; கருமேகத்திரள்கள் கவிந்தன. இருள் எங்கும் அடர்ந்தது, சுழற்காற்று.
கோடிக்கணக்கான பைத்தியங்கள் சிறையிலிருந்து தப்பி ஓடுவதுப்பொல இரைச்சலிட்டது. வேரொடு மரங்களைதிருகி வழிநெடுக எறிந்தது, மை இருள் கக்கிய மின்னல் ஒளி.
கோரக்காட்சியையும் பயங்கர சாவையும் ஆயிரமாயிரமாகப் புலப்படுத்தி வருவாய்! இப்படி ஆடுவாய் காளி! காளித்தாயே! வருக! வருக!"

இந்தக்காளியை தரிசிக்க யாரால் இயலும்?

இன்னலை அன்புடன் ஏற்கத் துணிந்தவன், சாவின் உருவை தழுவத்துணிபவன் ,அழிவின் ஆட்டம்
ஆடிக்களிப்பவன் யாரோ அவ்வீரன் முன்னே அன்னை வருவாள் என்கிறார்.

விவேகானந்தரின் இந்த புரட்சிகரமான வாக்கும், ஸ்ரீராமக்ருஷ்ணர் ஏற்றிய காளிதேவியின் ஒரு
கோரதாண்டவத்தைக் குறிப்பதுதான்.


"பல்வேறு வழிகளில் நாம்கடவுளை உபாசித்து அவர் அருளை பெறலாம் ஆற்றங்கரையில் பலபடித்துறைகள் உள்ளன அல்லவா, ஆனந்த வெள்ளமாகிய பரம்பொருளுக்கும் பலபடித்துறைகள் உண்டு.
எந்த படித்துறையிலும் இறங்கி தண்ணீர் மொண்டுகொள்ளலாம் என்றுஇவ்விதமாக பலசமயங்களும்
பலவழிகளைக் காட்டுகின்றன "என்கிறார் பரமஹம்சர்.

சக்திசமயத்திலும் பலபடித்துறைகள் உண்டு.

தேவியை சுந்தரியாக தரிசிப்பதுப்போல பயங்கரியாகவும் வழிபடவேண்டும்.


பாரதியாரின் ஊழிக்கூத்து பாட்டை பலரும் கேட்டிருப்பார்கள்.பாடி ரசித்தும் இருப்பார்கள்.
ஆகாயம் கறுத்து வச்சிராயுதம்பாய்ந்து இடியும்மின்னலும் கக்கும் மேகத்தில் பராசக்தி இருக்கிறாள் .அந்தமேகம் மழையாகப்பெய்து அது நதியாக ஓடும்போது அதிலும்பராசக்தி இருக்கிறாள்!

மாயையிலிருந்துமீள்வதற்குவழிதான் என்ன என்று பரமஹம்சரிடம் ஒருவன் கேட்டான்.

மீளவேண்டும் என்று உண்மையான மனம் இருந்தால் தாயாகிய பராசக்தியே வழிகாட்டுவாள் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

விரும்புவது என்றால் வெறும் வாய்ப்பேச்சில்மட்டுமல்ல. விடுபடவேண்டும் என்ற ஆசைமேலிட்டு உள்ளம்கரையவேண்டும் என மேலும் சொல்கிறார்.

தேவி நல்லமங்களமான காட்சியைக் கண்டுமட்டும் உவக்கிறாள் என்பதுமட்டும் அல்ல

பேயைக்கொலையை
பிணக்குவையைக் கண்டு உவப்பாள்

என்கிறார் பாரதியார்.

அன்னை அன்னை ஆடுங்கூத்தை
நாடச்செய்தாய் என்னை...

சக்திப்பேய்தான் தலையொடுதலைஅக்ள்முட்டிச்- சட்டச்
சட சடசட்டென்றுடைபடு தாளங்கொட்டி அங்கே
நின் விழியனல்போய் எட்டித்-தானே
எரியுங்கோலம் கண்டே சாகும்காலம்

ஊழிக்கூத்தில் பாரதி இப்படியும் சொல்கிறார்.

பைரவி பகற்காலங்கலில் பரமஹம்சரின் இருப்பிடமாகிய தட்சணேஸ்வரத்திலிருந்து வெகுதூரம் போய் அவர் வேண்டும் பொருட்களக்கொண்டுதருவாள்.

காளிதேவியின் பூஜைகளைமுடிதபிறகு ஆழ்ந்ததியானத்தில் ஆழ்ந்துவிடுவார் பரமஹம்சர்.
அச்சம்யங்களில் நான் கண்டகாட்சிகளைபப்ற்றி என்னால் இப்போது எடுத்துரைக்க முடிகிறதில்லை என்றும் பரமஹம்சர் கூறுகிறார்.

தனது மார்க்கம் இறையைத் தாயாய் நினைத்துவழிபடுவது என்கிறார்.

அன்னைபராசக்தியை தாதியாகவோ வீரனாகவோ அல்லது குழந்தையாகவோ பாவித்துவணங்கலாம் என்னும்
பரமஹம்சர்" நான் என்னைக் என்னைகுழந்தையாகபாவித்துக்கொண்டேன் "என்கிறார்.

மனம் உள்முகமாகத் திரும்பினால் அதுவாசற்கதவை சாத்திக்கொண்டு உள் அறைக்கு நோக்கிப்
போவதற்கு சமம், அந்த நிலையில் மனமானது பரம்பொருளில் லயமாகிவிடும் என்பது அவர் வாக்கு.

நம்பிக்கையில்குழந்தையைப் போலானாலொழிய ஈஸ்வரனைக்காண்பது துர்லபம் எனபமதங்கள்கூறுவதை ராமக்ருஷ்ணரும் வற்புறுத்தினார்.

பரமஹம்சர் பராசக்தியை நேரில்கண்டவர்.

அவர் உபதேங்களைஇயன்றவரையில் பயன்படுத்திக்கொண்டு அவரவர் நிலைக்கு ஏற்றவாறு ஆன்மீக
நிலையில் உயரலாம்.

யாதுமாகிநின்றாய் காளி !எங்கும் நீ நிறைந்தாய்!
தீது நன்மை எல்லாம் -காளி!-தெய்வலீலை யன்றோ?
மேலும் படிக்க... "பரமஹம்சர் கண்ட பராசக்தி!"

Monday, September 29, 2008

வாஷிங்டனில் நவராத்திரி!


வாஷிங்டனில் திருமணம் என்று பலவருடங்கள் முன்பு விகடனில் சாவி என்னும் எழுத்தாளர்
நகைச்சுவைகதை எழுதிஇருந்தார்.

வாஷிங்டனில் நவராத்திரி கேள்விப்பட்டிருக்கீங்களா?

இருங்க அதைத்தான் இப்போ சொல்லப்போறேன்.
2வருடம் முன்பு நவராத்திரி நேரம் நான் என் சித்தப்பாவின் வீட்டில் வாஷிங்டனில் இருந்தபோது நவராத்திரிகொலு வைக்கும் ஆசைவந்தது.

நம்ம ஊர் மாதிரி அங்க வீடுகளில் எல்லா இடங்களிலும் தரையே தெரிவதில்லை(சிலவீடுகளில் சமையற்கட்டுமட்டும்) அங்கே பெரும்பாலும் கார்பெட் போர்த்தியதரைகளே. மாடிப்படிகள், சுவர்
எல்லாம் மரத்தில்தான் .. சகலமும் விருட்ச ராஜ்ஜியம்,அபார்ட்மெண்ட் வீடுகளில் நாலாவது மாடியில் குடி இருப்பவர்கள் ராத்திரியில் நடந்துபோனால் சரக்சரக் என சில நேரம் சத்தம் கீழ்வீட்டுக்காரங்களுக்குக் கேட்கிறது. போனபுதிதில் நான் கொஞ்சம் அரண்டுபோனது நிஜம்.


ஆனால் இந்தமரசுவர்களில் ஒரு பெரியவசதி என்னவென்றால் சுவரில் ஒரு காலண்டர் அடிக்கவேண்டுமானால் டக் என்று ஆணி அடித்த உடன் சமத்தாய் ஆணி இறங்கிப் போகிறது. ஆனால் வாடகைவிட்டில்
அபார்ட்மெண்ட்டில் எல்லாம் இப்படி டக்டக் என்றுஆணி அதிகம் அடிக்கக் கூடாதாம்
வாடகைவீடுகளில் மாவிலைதோரணம் வாசலில்கோலம் என்று பல நம்மூர் வழக்கங்கள் நாட் அலவ்ட்!

வாஷிங்டனில் அக்டோ பர் குளிர் நாளில் நான் போனபோதுதான் தசரா வந்தது.

இந்தியாவில் ஸ்ரீரங்கத்தில் இருந்தநாட்களில் கொலுபொம்மைகள் வைக்க ஒருவாரம்முன்பே
கோயில் வளாகத்தின் ரங்கவிலாசில் படை எடுத்து புதுப்புதுபொம்மைகளாய் சேர்த்துவிடுவோம். அப்போதெல்லாம் கள்ளி(அல்லது கல்லுவா அர்த்தமே சரியா இல்லயே:))பெட்டிகள் கண்டாமுண்டாசாமான்கள் கனம்நிறைந்த பழைய தீபாவளிமலர்கள் டால்டாடப்பாக்கள் என்று கொலுபடிக்கு ஆதார வேர்களாய்பல பொருட்கள் வீட்டில் சுலபமாய் கிடைக்கும்.. பார்க் ஜூ அருவி என்று கற்பனைக்கு வந்தபடி
கைவரிசையைக்காட்டுவோம்..அப்புறம் ஸ்லாட்டட் ஆங்கிள்வந்தது சாதாரணநாட்களில் அது எங்களுக்குபுத்தக அலமாரி கொலுநாட்களில் அதுவே படிக்கட்டுகளாய் அவதாரம் எடுக்கும்.(பெங்களூரில் நைசாய் ஷோகேசிலேயே பொம்மைகளை வைத்து ஒப்பேற்றிக்கொண்டுவருகிறோம் என்னும்
உண்மையை இங்கே சொல்லிவிடவேண்டும்:))

வாஷிங்டனில் விஸ்தாரமாய் கொலுவைக்க ஆசைப்பட்டு தயாராகத்தான் ஊரிலிருந்துவந்திருந்தேன்.

ஆறேழுமாதம் சுற்றிபார்க்கவந்த இடத்தில் சித்தப்பாவிடம் அதைவாங்குங்க இதைவாங்குங்க என்று ஆர்டர் போடமுடியுமா? ஆனாலும் கொலு என்றால் படிகள் அமைத்து அதில்பொம்மைவைத்தால் அதன் அழகே தனிதான்.

ஆனால் சித்தப்பாவும (அமெரிக்க) சித்திக்கும் என்கவலைபுரிந்தது போலும்

". டோ ண்ட் ஒர்ரி இங்க மரக்கடைகளுக்குபோனால் விதம்விதமாய் சைஸ் வாரியாய் மரப்பலகைகள்கிடைக்கும் வாங்கிவரலாம்" என்றனர்.

மரக்கடை என்றதும் நான் கூட திருச்சிபாலக்கரை பஸ் நிறுத்தம் அருகே இருக்கும் மரக்கடைகளைவிட சற்றுப்பெரிதாய் கற்பனை செய்துகொண்டேன். ஆனால் அங்கே போனதும்தான் தெரிந்தது அது ஒரு
கிரிக்கட் மைதானம் அளவில் இருக்கிறதென்று !அமெரிக்காவில் எல்லாமே பெருசு தான்!

விதம்விதமான அளவில் மரப்பலகைகள் வாங்கினதும் அதை அறுப்பதற்கு என்ன செய்வதென்று விழித்தோம்.

என் கணவர்," நீதான் இருக்கிறாயே ?"என்று தன் பங்குக்கு அறுத்தார்! மறுபடி,அறம் ரம்பம் இழைப்புளி இன்ன பிறஆயுதங்களை சித்தப்பா வாங்கினார்.


எல்லாம் கார்டில் தேய்த்து வாங்கிவிட்டதால் அப்போது விலை தெரியாத எனக்கு பிறகு டாலரில்
விலை கேட்டுதெரிந்து அதை என் இந்தியமூளை ரூபாயில் பெருக்கிப்பார்த்து மொத்தம் பத்தாயிரம்
ரூபாய்க்குமேல அகிவிட்டது எனப்புரிந்ததும் திகைப்பானது.

"இட்ஸ் ஆல்ரைட்" என்றார் சித்தப்பா பெருந்தன்மையாக.


வீட்டிற்குவந்து மரப்பலகைகளை மெதுவாய் இறக்கி வீட்டிற்குள்கொண்டுவந்து சேர்த்தோம்
சித்தப்பாவும் என்கணவரும் இஞ்ச் டேப்பால் அளவு எடுத்து குறித்து அளந்து ஒருவழியாய் அறுத்து எடுத்த போது பலமணிநேரங்கள் ஓடிவிட்டன.

இந்தியாவிலிருந்த் புறப்படும்போதே ஒரு அட்டைப்பெட்டியில் தசாவதார(சினிமா அல்ல):) செட், சீதாராம பரத சத்ருகுண ஆஞ்சநேய செட் இன்னும் பலபொம்மைகளை தெர்மாகொலில் பதுக்கிக்கொண்டுவந்திருந்தேன்
தஞ்சாவூர் தலையாட்டி செட்டியார்பொம்மை எந்த ஏர்போர்ட் ஸ்டாண்டார்ட் பெட்டிகளிலும் அடங்காமல் உடைந்த பல் வெளியே தெரிய செட்டியார் மானத்தை வாங்கிவிட்டார்!

செட்டியாரை அமுக்கி கைப்பையில் பெரியதுண்டில் சுற்றிப்போட்டுகொண்டு திருட்டுமுழி முழித்தபோது லுஃப்தான்சா விமானப்பணிப்பெண் என்னை ஒரு சந்தேகப்பார்வை பார்த்துப்பின் பையைத்திறந்து பார்த்து சமாதானமானாள்.

எல்லாவற்றையும் இப்போது ஆர்வமாய் வெளியே எடுத்தேன்.

மீராபாயின் தம்புராவில் இரண்டு இழை விலகி இருக்க காந்தீஜீ நூற்றுக்கொண்டிருந்த தக்ளிகாணாமல்போயிருக்க ராமலட்சுமண செட்டில் அனுமாரின் கன்னத்தில் காயம்பட்டமாதிரி லேசாய் பொம்மை உடைந்துவிட்டிருந்தது.

தசாவதார செட்டில் வாமன அவதாரம் இந்தியாவிலேயே மறந்து விட்டுவந்திருப்பதை உணர்ந்தேன்.

"ஐயோ இப்ப என்ன செய்யறது? தசாவதாரம் நவாவதாராமாயிடுமே??" என்றேன் என்
வாழ்க்கைத்துணைவரிடம்.

என்கணவர்,"உன் ஒன்றுவிட்டதம்பி குட்டையாய் இருப்பானே அவனைக்கொண்டுவந்து கொலுப்படியில்வை" என்று ஜோக் அடித்தார், நான் முறைப்பதை ரசித்தபடி!

சித்தப்பா ஈமெயில் முலம் நவராத்திரிக்கு தமிழ்க்குடும்பங்களை அழைத்து அழைப்பு விடுத்திருந்தார்.

சித்தி அரைகுறைதமிழில் நவராத்திரி மகாத்மியத்தை என்னிடம் கேட்டுத்தெரிந்துகொண்டார். நான்
வாங்கிவந்திருந்த மைசூர் சில்க் சேலையைக்கட்டிக்கொண்டு சுண்டல் செய்ய உதவி புரிந்தார்.

ஏழெட்டுமாமிகள்முதல்நாளே பி எம் டபில்யூ காரில்வந்துஇறங்கினர்.

ஒருமாமி கொலுவைக்கண்டதும் தானாகவே
'சரஜிஜநாபசோதரி ' என்று உணர்ச்சிவசப்பட்டுப்பாடதொடங்கிவிட்டார்.

இன்னொரு மாமியிடம் நான் தான் சும்மா இல்லாமல் "ஸ்ரீசக்ரராஜ." :பாடச்சொல்லி வேண்டுகோள் விடுக்க அவங்க, 'பலவிதமாயுன்னைப்பாடவும் ஆடவும்' என்ற வரியைமட்டும் பலவிதமாய்ப்பாடி அபிநயித்து
நீணட்டிமுழக்கி பாடிக்கொண்டே இருந்தார்! அப்புறம் சுண்டல் விநியோகித்துப் படுக்கப்
போகும்போது நள்ளிரவாகிவிட்டது!நித்திரைபறிபோனதில் நொந்து போய் என்கணவர்"இனிமே மாமிகளை பாடச்சொல்லி வற்புறுத்தாதே ப்ளீஸ்" என்று என்னிடம் கைகுவித்தார்.

இன்னொருநாள் நாலைந்து சிறுமிகள்பட்டுப்பாவாடை காதில் ஜிமிக்கி கழுத்தில் காசுமாலை என்று அசல் கிராமத்துச்சிறுமிகள்போல டொயோட்டா காரில் வந்து இறங்கினர்.

ஆங்கிலமும்தமிழும்கலந்து பேசியபடி அவர்கள் தங்கள் அம்மாக்களோடும் தாத்தா பாட்டிகளோடும்வந்து அமர்ந்ததும்" யாராவதுபாடுங்களேன்" என்றேன்.

"வர்ஷா நன்னா திவ்யமா பாடுவா" என்றார் குழந்தையின் தாத்தா பெருமையாக.
அந்த ஏழுவயது வர்ஷாவைபாடச்சொன்னேன்.

அதுபலமாய்த் தலையாட்டியது.

"எனக்குதமிழ் சாங் தெரியுமே?" என்றது குஷியானகுரலில்.

"ஆஹா இந்த அமெரிக்கால இருந்துண்டு தமிழ் பேசறியே அதே பெருமையா இருக்கு..எங்க
ஒருபாட்டுபாடு,,கேக்கலாம்?"

"ஸ்ருதிப்பெட்டி கொண்டுவரலையே அச்சச்சோ" தவித்தது குழந்தை.

அமெரிக்க சித்தி,"நான் வச்ருக்கேன் கோண்ட்டு த்ரேன்.." என்று ஆர்வமாய் இந்தியாபோனபோது வாங்கிய எலெக்ட் ரானிக் ஸ்ருதிப்பெட்டியயை எடுத்துவந்து கொடுக்கவும் குழந்தையின் அம்மா அதனில் ஸ்ருதி சேர்த்து அதை, குழந்தை அங்கீகரிக்க அரைமணி ஆகியது.


வர்ஷா கைவளையல்களைபின்னுக்குத் தள்ளிக்கொண்டு சம்மணம்போட்டுகொண்டு அமர்ந்தாள்
"வலதுகைலதான் தாளம்போடணும் வர்ஷு" குழந்தையின் அம்மா எச்சரித்தாள்.

'ஒகேமாம்மீ"

தொண்டையைக்கனைத்துக்கொண்டதுகுழந்தை

சூடா பால் குடிக்கறியா வேணா?

வேணாம்...

பாத்து ஸ்ருதிபிசகாம பாடு என்ன?

இடக்கரத்தால் தலைப்பின்னலை எடுத்து முன்னேதள்ளிக்கொண்டபடி," ஆரம்பிக்கட்டுமா?" என்றுகேட்டது

அட! ஆரம்பமே அமர்க்களமா இருக்கே! --- தாத்தா பூரித்துப்போனார்.

"பாடு குழந்தே.. கேக்க காத்துக்கொண்டிருக்கோம்"

"சுட்டும்விழிச்சுடரே சுட்டும்விழிச்சுடரே என்னுலகம் உன்னைச்சுற்றுதே, சட்டப்பையில் உன்படம் பற்றிக்கொண்டு உரச ..." வர்ஷா உரத்தகுரலில் குதூகலமாய்ப்பாட

தாத்தா தலைஆட்டி ரசிக்க, கூட்டம் கைத்தட்டி உடன்பாட, நான் ஙே என்று விழிக்க......

இப்படி ஏக அமர்க்களத்துடன் வாஷிங்டனில் நவராத்திரி நடந்து முடிந்தது.
**********************************************************************
மேலும் படிக்க... "வாஷிங்டனில் நவராத்திரி!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.